தாயும் ஆன நான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 1,855 
 

ஸ்டெதஸ்கோப்பை மேஜை மீது கழற்றி வீசி கோட்டைக் கூடக் கழற்றாது இருக்கையில் சரிகிறேன்; எனக்கான ஓய்வறையில். ஏ.சி. குளிரிலும் துளிர்க்கும் வியர்வை. தலை விண்… விண் எனத் தெறித்தது. நகரின் பிரபல மருத்துவமனையில் வயிற்றுப் பகுதி சிறப்பு நிபுணன் நான். கல்லீரல், பித்தப்பை மருத்துவத்தில் சிறந்த கைராசிக்காரன் என்று பெயர். நோயாளிகளுடன் ஒன்றிப் பேசிப் பாதி நோயை பேசியே குறைப்பவன் என்று பாராட்டப் படுபவன். எந்த சீரியஸ் கேசிலும் நிலைகுலையாது செயல்படுபவன்.  என்று புகழப்படுபவன். அப்படிப் பட்ட எனக்கு ஏன் இந்த தடுமாற்றம்?

நோயாளி என் அப்பா என்பதாலா? வருங்கால மனைவியான டாக்டர் ஜெயந்தியிடம் கூட எரிந்து விழ வைத்தது எது? ரத்த பாசமா? கிழித்த நாராகக் கிடந்த அப்பாவைக் கண்ட ஆற்றாமையா?

அப்பா… அப்பப்பா!

அவருக்கு மகனாகப் பிறக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். நல்ல பொறுப்பான பதவி வகித்து ஓய்வு பெற்றவர். கை நிறைய பென்ஷன் ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு. ஆறடி உயரம். உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு. வயது 65. ஆனாலும் 50க்குள் மதிக்கத் தோன்றும் கம்பீரம். வகிடு எடுக்காமல் மேல் நோக்கி வாரப்பட்ட முடி. நரைமுடியிலும் கம்பீர மிடுக்கு. அகன்ற நெற்றியில் பட்டையாகக் குழைத்துப் பூசப்பட்ட விபூதி, நடுவே சந்தனமும் குங்குமமும், தீட்சண்யமான கண்களின் மீது கருப்பு ப்ரேமிட்ட கண்ணாடி, கதர் ஜிப்பா, வேட்டி, உட்கழுத்தில் ஒற்றை ருத்திராட்சம். ஓம் என்ற டாலருடன் கூடிய ஸ்படிகமணி மாலை என்று யாரையும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தோற்றம். அவர் பூசி இருக்கும் அத்தரும் ஜவ்வாதும் கலந்த தெய்வீக மணம். அவர் இருக்கும் இடத்தையே தெய்வ சன்னதியாய் நினைக்கத் தோன்றும் தெய்வீக அலை அவரைச் சுற்றிலும் பரவும் அதிசயம்.

நல்ல ஆன்மீகப் பேச்சாளர். கணீரென்ற குரல், அவர் பேச்சை வீடியோவில் பார்த்து ரசிக்கும்போது எனக்குள் ஒரு பரவசம். முதல் நாள் பேச்சு பற்றி மறுநாள் காலை டிபன் நேரத்தில் அலசும் பாங்கு.

ஆனால் இது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாத அம்மா. மௌனமாகப் பரிமாறி ஒதுங்கி நிற்கும் அம்மா. அம்மாவுக்கென்றே தனி கைமணம். அவள் வைத்த சிதம்பரம் கொத்சுவில் இட்லியைத் தோய்த்து விழுங்கியபடியே, அப்பாவின் ‘சிதம்பர ரகசியம்’ சொற்பொழிவு பற்றி அலசும்போது ஏற்படும் பரவசம். அதற்கு ஈடு இணை ஏது? அது ஒரு சுவையான ஜீகல்பந்தி.

நேற்றுகூட எங்கோ சொற்பொழிவு என்று சென்றவர்தான். நள்ளிரவு வரை வீடு வரவில்லை. எனக்கு நைட் டூட்டி. காலையில் வீடு திரும்பும்போது வலியில் துடிக்கும் அப்பா, சென்ற வாரம்தான் எல்லா டெஸ்ட்டும் எடுத்தேன். எல்லாமே நார்மல். இந்த வலி வந்தது எப்படி? உடனே மருத்துவமனையில் சேர்த்து மீண்டும் ஸ்கேன் எக்ஸ்ரே என அனைத்தும் செய்தாகிவிட்டது. ஒன்றும் பிடிபடவில்லை. வலி மட்டும் நிற்காமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தது. ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு இருந்தாள் ஜெயந்தி. தூக்க மருந்தின் உபயத்தில் கண்மூடிக் கிடந்த அப்பா.

‘மோகன், எதற்கும் ப்ளட் டெஸ்ட் செய்து விடவா?’ என்று கேட்ட ஜெயந்தியிடம் எரிந்து விழுந்தேன். ‘போனவாரம் தானே டெஸ்ட் செஞ்சோம். மறந்துட்டியா?’ என்றூ உறுமி விட்டு வந்து விழுந்தவன் தான். என்ன ஆயிற்று எனக்கு?

காபி குடித்தால் தேவலாம் போல இருந்தது. அம்மா அனுப்பி இருந்த காபியை பிளாஸ்கில் இருந்து கப்பில் சரித்தேன். மெல்ல உறிஞ்சியபடியே கிறங்கினேன். ‘பீபர்க்’ காப்பிக் கொட்டையைத் தானே வறுத்துக் கை மிஷினில் அவ்வப்போது அரைத்து விட்டுப் பாலில் அம்மா தரும் பில்டர் காபிக்கு நிகர் ஏது? அம்மாவின் இந்தக் காபிக்காகவே மொய்க்கும் என் நண்பர்கள். காபி குடித்ததும் தலைவலி போயே போச்சு!

ஏன் அம்மா ஒரு போன் கூடப் பண்ணல. அப்பா எப்படி இருக்கார்னு கேட்கல இருந்தாலும் அம்மாவுக்கு அழுத்தம் ஜாஸ்த்தி. காலையில் டாக்டரான எனக்கே பதற்றம் அப்பா போடும் சத்தத்தைக் கேட்டு. அம்மா மட்டும் அலட்டிக் கொள்ளாமல் பழம், பிஸ்கட், ஹார்லிக்ஸ், வெந்நீர், டவர் என்று பேக் செய்து கொண்டு இருந்தாள் மௌனமாக. பாவம் அம்மா தனிமா இருப்பா. ஏற்கெனவே ‘பிரஷர்’ அதிகம். பயப்படாதேன்னு தைரியம் சொல்லணும். மாருதியில் ஏறி விரைகிறேன். கார் வழுக்கிக் கொண்டு முன்னே விரைய கூடவே அம்மா பற்றிய நினைவுகளும்.

அதிகம் படிக்காத அம்மா. அதனால்தான் அப்பாவின் அருமை பெருமை தெரியவிலையோ? பொக்கிஷமா அமைஞ்ச புருஷனை போற்றனும் தெரியலியோ? அப்படி ஓன்றும் ரசனையற்றவளும் இல்லை. பசுவுக்கு கூட கங்கா, காவேரின்னு பெயர் சூட்டி மகிழும் அம்மா. பெரும்பொழுதை மாடு, கன்று தோட்டம் என்று கழிக்கும் அம்மா, விதவிதமாய்க் காய்கறி, பூச்செடி என்று பிசியாய் உழைக்கும் அம்மா, அந்தக்கால புமைப் பித்தன் முதல் இந்தக்கால மேலாண்மை பொன்னுசாமி வரை அலசும் அம்மா. இசை பற்றித் தெரியாத போதும், மைசூர் சௌடய்யா, மாண்டலின் சீனிவாஸ், புல்லாங்குழல் மாலி, பிச்சுணி வீணை கதிரி கோபால்நாத் சாக்ஸபோன், திருவெண்காடு சுப்பிரமணியப்பிள்ளையின் மகுடி என்று தேடிப்பிடித்து ரசிக்கும் அம்மா, சுப்பிரமணியப் பிள்ளையின் நாதஸ்வத்தை மகுடியில் கேட்டு கேட்டு உருகும் அம்மா, அப்பாவை விட்டு மட்டும் சற்றே விலகி… வயதுக்கு வந்த பிள்ளை இருப்பதாலா? பத்தாம் வகுப்பில் இருந்தே ஹாஸ்டல் வாசம். இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வீட்டு வாசம். என்ன ஆச்சு இந்த அம்மாவுக்கு இனிமேல் கவனமாய் இருக்க வேண்டும். வீடு வந்து விட்டது. கதிரி கோபால்நாத் மென்மையாக உள்ளிருந்து இழைத்து வேளியே வழிந்து கொண்டு இருந்தார். அதைக் கேட்டபடியே சோபாவில் சரிந்து கிடந்த அம்மா, காலடிச் சத்தம் கேட்டு சட்டென்று எழுகிறாள். என் பார்வையைத் தவிர்க்க நினைத்த அவள் கண்ணில் ஈரமா? அனுமானிக்க முடியவிலை. இருப்பா ஜீஸ் கொண்டு வரேன். விரைகிறாள்.

செல்போன் கிணுகிணுக்கிறது. ஜெயந்திதான். ‘சாரிப்பா… உன்னை கேட்காமலே அப்பாவுக்கு ப்ளட் டெஸ்ட் செஞ்சுட்டேன். வந்து, வந்து… ‘சொல்லித் தொலை’ உறுமுகிறேன்.

‘ப்ளட்டில் அதிக ஆல்கஹால். அதனால்தான் கல்லீரல் பாதிப்பு வலி. அதோட பால்வினைத் தொற்றும் இருக்கு. போனவார டெஸ்ட்டில் இல்லை…

நாள் விக்கித்தேன். இது நிஜமா? அப்பாவா இப்படி? முகத்தை மூடிக் கேவுகிறேன். மெத்தென என் தோளில் பதிந்த அம்மாவின் கைகள்.

‘என் மருமக சமத்து டாக்டர். என் புள்ளதான் மக்கு டாக்டர்’ என்று சிரித்தபடியே என் தலையில் செல்லமாகக் குட்டிய அம்மா. எப்படி அம்மாவால் ஈஸியாக எடுத்துக் கொள்ள முடிகிறது? முன்னமே தெரியுமா எல்லாம்? அதனாலதான் விலகி நின்றாளா? இல்லை விலக்கி வைக்கப்பட்டாளா? அம்மா யூ ஆர் கிரேட்

‘அம்மா.. அம்மா’ என்று அரற்றுகிறேன்.

‘ஆமாம், நான்தான் உன் அம்மா. இதுல என்ன சந்தேக’ சிரிக்க முயன்று தோற்ற அம்மா. சட்டென பத்து வயது கூடியது போல தளர்வு.

நீ என் அம்மா இல்லை!

உதடு துடித்த அதிர்கிறாள். மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன். ‘இனிமே நீ எனக்கு அம்மா இல்ல! நான்தான் இனிமே உனக்கு அம்மா!’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *