மாலை 6 மணி அசோசியேஷன் சந்திப்பு துவங்கியது. அனைவரும் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தனர். இந்த தீடீர் சந்திப்புக்கான காரணம் பலருக்கும் தெரியாது.
பெரியசாமி தான் அசோசியேஷனின் தலைவர். மேலதிகார வர்க்கத்தின் பெரும்புள்ளி. மூக்கிற்கு கீழே காகம் பறப்பது போல பெரிய மீசை. பார்ப்பதற்கே படுபயங்கரமான கறார் ஆசாமி போல இருப்பார். ரமணியை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். அவள் மறுகணம் அவள் மூன்று வயது மகனை இடுப்பில் இறுக பற்றிக் கொண்டாள். “ராமசாமி.. நீங்க மட்டும் தான் இன்னும் ஒத்துழைப்பு தரவில்லை.. என்ன பிரச்சனை உங்களுக்கு?”
கப்புரேட் அசோசியேஷன் சில சட்டதிட்டங்களோடு இயங்குகிறது. அதிகார வர்க்கம் எதை சொன்னாலும் “பூம்பூம்” மாடு போல தலையாட்ட வேண்டும். எதிர்த்து பேச கூடாது. தன் கருத்தை பொது வெளியில் கூறக்கூடாது. மேலதிகாரிக்கு ‘ஒத்து’ ஊத வேண்டும். அவர் சொல்வது தவறாகவே இருந்தாலும் ஆமோதிக்க வேண்டும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற மனநிலையோடு எந்த வித அந்நியாயத்தையும் அணுக வேண்டும். எந்த வேலையும் இல்லாவிட்டாலும் கூட பிஸியாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ள வேண்டும். இது போல இன்னும் பல.
இதில் அடிப்படை அம்சமான ‘பூம்பூம்’ மாடு தலையாட்டுதல் ரமணி ராமசாமியின் மகனுக்கு வரவில்லை. முரணாக ‘இல்லை இல்லை’ என்பதாகவே தலையசைத்து வந்தான். அசோசியேஷன் இதனை ஒரு வியாதியாகவே கருதி வந்தது. இந்த முக்கிய அமசத்திற்கு குழந்தை பிறந்த ஆறாவது மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அக்குழந்தைக்கு மட்டும் பயிற்சி வெற்றியடையவில்லை.
இதற்காக தான் அன்றைய அசோசியேஷன் சந்திப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. “ஐயா.. நாங்க ஊருக்கு புதிது. இன்னும் ஆறு மாதம் அவகாசம் கொடுத்தால் மகனை தயார் செய்து விடுவோம்.. ” கெஞ்சினாள் ரமணி.
“ஏற்கனவே எட்டு மாதம் அவகாசம் கொடுத்தாயிற்று. இதற்கு மேல கொடுத்தால் டாப் மேனேஜ்மெண்ட் ஏற்றுக் கொள்ளாது. நீங்கள் கிளம்பலாம்” என்ற பெரியசாமி மெமோவை நீட்டினார். ரமணி அதை வாங்க முற்படுகையில் அவளை தடுத்த ராமசாமி, “நீங்கள் என்ன மெமோ தருவது. நாங்களே கிளம்பி விடுகிறோம். ஊரில் விவசாயம் பார்த்து பிழைத்துக் கொள்கிறோம். உங்களையோ உங்கள் பிள்ளைகளையோ அசோசியேஷன் துரத்தியடித்தால். எங்கள் ஊருக்கு வாருங்கள். வரவேற்க தயாராக இருப்போம்” ரமணியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டான்.
“இது ஒன்னு தூக்கத்துல பேணாத்திக்கிட்டு.. கைய எடுய்யா.. யோவ்..” ரமணி ராமசாமியின் கையை தள்ளிவிட்டாள். திடுக்கிட்டு எழுந்த ராமசாமி கனவு கலைந்து எழுந்தான். சொம்பு நிறைய பானை தண்ணீரை குடித்தான். திண்ணையில் அமர்ந்து தானியத்தினை தேடி கொத்தித் தின்று கொண்டிருக்கும் கோழிகளையும் அதன் குட்டிகளையும் ரசித்துப் பார்த்தான். மாட்டுத் தொழுவத்தில் புதிய கன்று கழுத்தில் மணி ஒலித்தது. அன்றைய கனவுடன் அவனது நகர வாழ்க்கை ஆசை அவனை விட்டுச் சென்றது.