ஒரு துரோகியின் விசுவாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,486 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அக்காலத்தில், மயானமாகவும், இக்காலத்தில் மண்டிக்கிடக்கும் குடிசைகளாகவும் காட்சியளிக்கும் அந்த பகுதியில், எலி வளையம்போல் அமைந்த சந்து பொந்துகளில் நடந்து, தேங்கிக்கிடக்கும் நீர்ப் பகுதிகளுக்குள் தேனிலவு நடத்தும் கொசுக்கள் கண்களில் மொய்க்காமல் இருக்க, கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டு, ஆங்காங்கே கோலி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை, செல்லமாக காதுகளைப் பிடித்து திருகிக்கொண்டும், குடித்து விட்டுப் புரளும் ஒருவனை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டும், செல்லம்மா வெளிப்பட்டாள்.

மெயின் ரோட்டிற்கு வந்தபோது, ரோட்டின் முனையில் இருந்த எரியாத மின்சார விளக்குக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு, லேசாக முதுகைச் சாத்திக்கொண்டிருந்த அந்தக் கிழவியைப் பார்த்ததும், செல்லம்மா, கோபம்மாவானாள். அன்பாக, இயல்பாக வந்த ஏதோ ஒரு வார்த்தையை உருக்குலைத்துவிட்டு, உருக்குலைந்து நின்ற அந்தக் கிழவியை முறைத்துக்கொண்டு நின்றாள்.

லேசாக முதுகை வளைத்துக்கொண்டும், வலது கையை மார்போடு சேர்த்து கூம்பு மாதிரி மேல் நோக்கி வளைத்துக் கொண்டும், உள்ளங்கையை கிண்ணம்போல் குவித்துக் கொண்டும், அதில் அம்மைத் தழும்புகள் கொடுத்த அழுத்தமான முகத்தை அழுந்திக்கொண்டும் நின்ற கிழவி செல்லம்மாவின் போர்க்கண்கள் தொடுத்த கோப அம்புகளைத் தாங்கமாட்டாதவள்போல் உடம்பைத் திருப்பிக் கொண்டு புறமுதுகு காட்டிக்கொண்டு நின்றாள். ஆயாவுக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது என்பதை, அவள் உடம்பை விட்டுத் தாண்டப் போவது போல், லூலாக இருந்த அவள் கைகளும், கால்களும் காட்டாமல் காட்டின. அவள் ஒரு காலத்தில் இளம் பெண்ணாக இருந்தபோது, மேனி மதமதப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதற்கு நினைவுக்கல்போல், அவள் மார்பும், வயிறும், கல்மாதிரி கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தன. கால்களையும் கைகளையும், முகத்தையும் விலக்கிவிட்டுப் பார்த்தால், அவளை இப்போதும் நடுத்தரவயதுப் பெண் என்று கண்மங்கலானவர்கள் சொல்லலாம்.

செல்லம்மாவிற்கு அவளைப் பார்க்கப் பார்க்கப் பற்றிக் கொண்டுவந்தது. கிருஷ்ணாயில் வாங்குவதற்காக வலது கையில் வைத்திருந்த கண்ணாடி சீசாவை இடது கைக்கு மாற்றிக்கொண்டு, கொஞ்சம் சத்தம் போட்டே கிழவியை அதட்டினாள்.

‘ஒன்கு எத்தன வாட்டிமே சொல்றது? ஏம்மே வந்தே? எதுக்காவமே வந்தே? நீ உயிரோடயே செத்துப் பூட்டான்னு தலைமுழுவிட்டேன்னு சொன்னதக்கப்புறமும் வந்து நிக்றியே. ஒனக்கு வெட்கமா இல்லமே? கொஞ்சமாவது சூடுசொரண தேவுண்டாவது இருந்தா வர்வியா? உம். ஒன்கு சூடு இருக்குமுன்னு, நானு நினைக்கதே தப்பு. சூடு இருந்தாக்கா இப்டி பூடுவியா போம்மே. இன்னொருவாட்டி, இந்தண்ட பார்த்தமுன்னா மவளே மாயானத்துக்குப் பூடுவே.”

செல்லம்மா நகரப் போனாள். கூனிக்குறுகி நின்ற கிழவி, அவளை லேசாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, பிறகு மீண்டும் திரும்பி நின்றுகொண்டே பேசினாள்.

“ஒன்கு கல்யாணமுன்னு சொன்னாங்கோ. பிள்ளையாண்டான் எப்டிக்கிறான்னு பார்க்கணும்போல தோணிச்சு.”

“கல்யாணம் என்கிற வார்த்தய பேச ஒனக்கு இன்னாம்மே யோக்யத கீது? பத்னிங்க பேசவேண்டிய வார்த்தய பலவட்ற முண்ட பேசினா என்னாம்மே அர்த்தம்? சரிதான் போம்மே.”

கிழவி, போகாமல் அங்கே நின்றாள். அவளை அனுப்பி விட்டுப் போகலாமா என்று சிறிது யோசித்துக் கொண்டிருந்த செல்லம்மா, காறித் துப்பிவிட்டு, மளிகைக் கடையை நோக்கி நடந்தாள். அவள் போகிறாள் என்பதை உணர்ந்த கிழவி, மீண்டும் உடம்பைத் திருப்பி போகிறவளையே பார்த்துக் கொண்டு நின்றாள். இருபத்தொரு வயதில் வயதுக்கேற்ற வாளிப்போடும், வாளிப்பிற்கேற்ற கம்பீரத்தோடும், கம்பீரத்திற்கேற்ற குரலோடும், குரலுக்கேற்ற முகத்தோடும், முகத்துக்கேற்ற முழுச் ஜ்வாலைக் கண்களோடும் விளங்கும் செல்லம்மாவை பார்த்துக் கொண்டு நின்ற கிழவி, முந்தானிச் சேலையின் முனையை எடுத்து, கண்களை ஒற்றிக்கொண்டாள். பூடுவோமோ என்று நினைத்து பின்னர் ‘இன்னொரு வாட்டி பார்த்துட்டுப் பூடலாம் என்று சிந்தனையை பரிசீலித்துக் கொண்டே, கிழவி மின்சாரக் கம்பத்தில் முழுமையாகச் சாய்ந்து கொண்டு நின்றாள்.

பத்துப் பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும்.

செல்லம்மா இப்போது ஒரு வாலிபனுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அவள் இடுப்பை தற்செயலாகத் தொடுவதுபோல் தொட்ட அவனை “இன்னாய்யா. ஒன் மனசில… நெனப்பு” என்று சீரியஸாகச் சொல்லாமல், சிணுங்கியவண்ணம் சொல்லிக்கொண்டு வந்த செல்லம்மாவையும், கவர்ச்சியான கறுப்பு நிற மேனியில், கட்டம் போட்ட லுங்கியும் பொம்மை போட்ட சொக்காவும் அலங்கரிக்க, அலங்காரமாக வந்த அந்த வாலிபனையும் பார்த்து, கிழவி திருப்திப் பட்டுக்கொண்டாள். அவன் கண்களை அங்குமிங்கும் படரவிடாமல், நேராகப் பார்த்துக்கொண்டு வந்ததில், கிழவிக்கு படுதிருப்தி. அவர்கள் நெருங்க நெருங்க, கிழவி இருப்புக்கொள்ளாமல், மின்சாரக் கம்பத்தில் முதுகைத் தேய்த்துக்கொண்டு நின்றாள். அவர்கள் கிட்ட வந்ததும், மீண்டும் உடம்பைத் திருப்பிக் கொண்டாள். செல்லம்மாவுக்கு இன்னும் கோபம் தீரவில்லை போலும், சடன் பிரேக் போட்ட பல்லவனைப்போல், முன்னால் குவிந்து, பின்னால் வளைந்து உடம்பை குலுக்கி விட்டுக் கொண்டு நின்றாள். போஸ்ட்ல நிக்காதேமே, ஷாக் அடிச்சிடும்” என்று சொல்லப் போனவள், அப்படிச் சொல்ல நினைத்ததற்காக தன்மீதே கோபப்பட்டுக் கொண்டு, பின்பு அந்தக் கோபத்தை, கிழவியின்மேல் திசை திருப்பிவிட்டாள்.

“ஏம்மே. இன்னும் நிக்கறே? படா. பேஜாரா பூட்டே… நானுந்தான் கேக்குறேன். நீல்லாம் எதுக்காவேமே. புடவகட்டுற? தேவுண்டாவது ஈனமானம் வாண்டாம்?”

கிழவி, தன் புடவையை இழுத்துவிட்டுக் கொண்டே, அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள். செல்லம்மா இப்போதைக்கு நகரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டவன் போல், அந்த வாலிபன் சிறிது நடந்து சென்று, ஒரு பக்கமாக கேட்கும் தூரத்தில் நின்றுகொண்டு, தம் பிடிப்பவன் போல், தம்மடித்துக்கொண்டு நின்றான். அவன் பிரிவாற்றாமையை தாங்க முடியாதவள்போல், செல்லம்மா, அவசர அவசரமாக, மடமடவென்று கொட்டினாள்.

“நானு இங்கே. ரீஸண்டாகீறது ஒன்கு உறுத்துதாமே? ஒன்னால. அப்பதான் சொகமில்ல.. இப்பவும் சொகத்த கெடுக்க நெனச்சா… இன்னா அர்த்தம்: தயவு செஞ்சி. போயிடுமே. அடவுன்னதான். நீயா பூடுறியா – நானா. கழுத்தப் பிடிச்சி தள்ளணுமா?”

கிழவி, தன் கழுத்தில் இரண்டு கைகளையும் கேடயம் போல் வைத்துக்கொண்டாள். இப்போது அவளாலும், பேசாமல் இருக்க முடியவில்லை.

“என்னம்மோ… என் போறாத காலம். இப்டி ஆயிட்டேன் நீயாவது மகராசியா இருக்கணும்… மரியாத்தாவ டெய்லி நெனச்சிக்கிறேன். ஒன்கு ஒரு கல்யாணம் ஆயி, வாயில வவுத்துல. ஒரு பூச்சிப்புழுவ பாத்துட்டமுன்னா சந்தோஷமா… கட்டய பூடலாம்.” கிழவி எதிர்பார்த்ததுபோல் ஒன்றும் நடக்கவில்லை. செல்லம்மா எரிந்து விழவில்லை. எரிந்து அணைந்துபோன தீபம் போல், கிழவியை சூன்யமாகப் பார்த்தாள். அதுவே, கிழவிக்குப் போதுமான தைரியத்தைக் கொடுத்தது. சற்று உரிமையோடு கேட்டாள்:

“ஆமாம். பிள்ளையாண்டான் இன்னா வேல பாக்குறான்? ஒப்பன மாதிரி பட்ட பூடுவானா? உன்னோட வந்தானே… அவன்தான. மாப்ளபுள்ள? எப்ப கல்யாணம்? எதுக்கும் நல்லாத் தெரியு முன்னால ஒண்ணுக்கிடக்க… ஒண்ணு. பண்ணிக்காதே… ஆணப்புறம். அவனுக்கு விஸ்வாசமா நடந்துக்கணும். புரியதா செல்லம்…”

இப்போதும், கிழவி எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. செல்லம்மா நிதானமாக, அழுத்தந் திருத்தமாக, மரணப் பெட்டியில் ஆணி அடிப்பதுபோல், எக்காளமாகவும், இளக்காரமாகவும் பேசினாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் கெய்வி ஒவ்வொரு விதமாக நைந்துகொண்டே போனாள்.

“நாயினாவ பத்திப் பேச ஒன்கு இன்னாம்மே ரைட்கீது? நான். எப்போ.. பண்ணினா ஒனக்கென்னமே? நானு தாலியமாத்தி. புச்சா தாலி பூட்டாலும் பூடுவேன். ஆனா ஒன்ன மாதுரி நாயினா பூட்ட தாலிய மாத்திக் காமலே புருஷன மாத்திக்கிட்டதுபோல மாத்திக்கமாட்டேன். என்கு போயும் போயும் நீ புத்தி சொல்றீயா? கஸ்மாலம், போம்மே ஒன் வீட்டுக்கு. கல்யான நோட்டிஸ் எடுத்துக்கினு வெத்துல பாக்கோட வாரேன். நீயும் ஒன் கள்ள ஆம்புடையானும் இங்க வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போவலாம். துப்புக் கெட்ட துத்தேரி புத்தி சொல்ல வந்துட்டா பெரிய புத்தி.”

கிழவியம்மா, முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். பிறகு விரல்களைச் சற்று விலக்கிக் கொண்டே பெத்த மனம் பித்து, பிள்ள மனம் கல்லுன்னு சொல்றது சரிதான் காட்டி” என்று லேசாக முனங்கினாள். இது செல்லம்மாவின் சினத்துக்கு கிருஷ்ணாயிலாகியது.”

“ஏம்மே பித்துப் பிடிச்சுப் பேசுற மனசில்லாம பெத்தவ மனம் எப்டிம்மே பித்தா கீதும்? ஏழு வயசுல எல்லா பிள்ளிங்கள மாதுரி, நானும் ஆத்தா மடியில் புரள்ற வயசுல, குயந்தய விட்டுட்டு கள்ள புருஷன் மடில புரள்றதுக்கு பூட்டியே ஒன்கா பித்து மனசு? மெள்ளப் பேசுமே. யாராவது கேட்டா சிரிப்பாங்க. தான் போட்ட குட்டிய முட்டித் தள்ளிட்டு, இன்னொரு கிடாவோட போவுற ஆட்டுக்கும், ஒனக்கும் இன்னாம்மே வித்தியாசம்? நாய்னா தான் ஒனக்குப் பிடிக்கல. ரத்தபந்தம் இல்லாத மன்ஷன். ஒன் ரத்தத்திலே பொறந்த என்னயே ரத்தத் திமிரில விட்டுட்டுப் பூட்டே. இப்ப ரத்தம் கெட்ட பின்னே வந்தாக்கா என்னாம்மே நாயம்? ஏம்மே பேச மாட்டக்க? பத்தினி மவராசியே பதில் சொல்லு.”

கிழவி பதில் சொன்னாள். தட்டுத் தடுமாறி, நாக்கை வாயோடு முட்டி மோதி, வார்த்தைகளை வேதனையோடு பிரசவித்தாள்.

“நான் தட்டுக்கெட்ட கஸ்மாலந்தான், இல்லன்னு சொல்லல. ஒன் நய்னாவும் அதுக்கு ஜவாப்புன்னாலும் நானு செய்தது மாரியாத்தா தாங்க முடியாத கஸ்மால புத்திதான். அவரு அடிச்ச அடியுலயும் குடிச்ச குடியுலயும் புத்தி கெட்டுப்பூட்டேன். ஆனால் அவரு சாவையில நானே செத்தது மாதிரி தோணிச்சு. ஒன்ன நானு எப்பவும் மறக்க முடியல. ஒரு வருவடித்துல ஒன்னோட நய்னா கிட்ட வந்து. மன்னாப்பு கேட்டேன்… சேத்துக்கோன்னு. கெஞ்சு கெஞ்சுன்னு… கெஞ்சினேன்… அது பிச்சுவா. தூக்கிக்கினு. வந்தது. அதுக்குத் தெரியாம… ஒன்ன எத்தனையோ வாட்டி சாடமாடயா பாத்துட்டுப் பூடுவேன்… ஒன்கு… ஒரு. பிள்ள பொறந்தாத்தான் என்னோட மனசு படுற பாடு அப்ப புரியும். என்னாதான் நடந்தாலும். நீ எனக்கி பிள்ளங்கறத மறக்க முடியல…”

“ஏம்மே. தெரியாமத்தான் கேக்குறேன். பதினைஞ்சி வருஷமா… கள்ள ஆம்புடையானோடே குடித்தனம் பண்றியே, ஒரு பிள்ளய… பெக்காம ஏம்மே… போன? அப்படி… பெத்துத் தொலைஞ்சிருந்தா… என்னயும் பாக்கத் தோணாது. இதுனாலே ஒன்கும் பேஜாரு இல்ல. எனக்கும் பேஜாரு இல்ல. ஏதாவது பிள்ள கிள்ள பொறந்துதா… பொறந்து செத்துதா… சொல்லும்மே.”

“செல்லம்மா. ஆத்தாள இப்டி பேசாதம்மா… நான் என்ன இருந்தாலும் உன்னோட தாயிடி…”

“தாயின்னு இன்னொருவாட்டி சொன்னியோ.. மவளே அப்பறம் தெரியுஞ் சேதி. நாயிகூட. குட்டிய விட்டுட்டு பூடாது. நீ நீ… என் வாயால சொல்லாண்டாம் ஆனா… ஒண்ணு. தாயப்போல பிள்ள… நூலப்போல சேலன்னு எவனோ ஒரு சோமாறி சொல்லிட்டுப் பூட்டான். நானு தாயி மாதுரி இல்லாத பத்தினின்னு நிரூபிக்கத்தான் போறேன். நீ அபசகுனம் பிடிச்சாப்போல.. இன்னொரு வாட்டி வராத… இத்தோட சரி…”

செல்லம்மா, வேகமாக நடந்தாள். கிழவி, வெறித்துப் பார்த்துக்கொண்டே, மின்சாரக் கம்பத்தில் சாய்ந்ததால் ஷாக் அடித்தவள் போல் குனிந்த தலை நிமிராமல், நிமிர்ந்த முதுகு குனியாமல், கேட்டுப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

செல்லம்மா, அந்த வாலிபனோடு சேர்ந்துகொண்டு, குடிசையைப் பார்த்து நடந்தாள். அம்மாவைத் திரும்பிப் பார்க்காமல் நடந்த அவளுக்கும் சேர்த்து, அவன் பல தடவை திரும் பிப் பார்த்துக்கொண்டே நடந்தான். சமாதி ஒன்றை ஒரு பக்கத்துச் சுவராகக் கொண்ட குடிசைக்குள் இருவரும் வந்தார்கள். செல்லம்மா, லாந்தர் விளக்கில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். நெடிய, கொடிய மெளனத்தை, அவள் தோழன் துகிலுரிந்தான்.

“செல்லம். இன்னாதான் இருந்தாலும். நீ இப்படி பேசப்படாது. அதப் பாத்தா. பாவமா கீது. தள்ளாத வயசு வேற. ஒன்னிவிட்டா… அதுக்கு யாரு கீறா?”

“இன்னாய்யா நீயும் அதோடு சேந்துக்கிற?… என்னோட… மன்சு ஒன்கு தெரிஞ்சா. இப்டி பினாத்த மாட்டே… ஒடிப்பூட்ட ஆத்தாவோட மவளுக்கு. மனசு… இன்னா பாடுபடுமுன்னு ஒன்கு தெரிய நாயமில்ல நீயே என்னிக்காவது என்ன ஓடிப்போன முண்டையோட மவளே னணு கேக்காமலா பூடுவே. நான் ஆத்தாக்காரி இருந்தும் அனாதயப் பூட்ட பாவியா…” t

செல்லம் மா வால் தன்னை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை. குலுங்கக் குலுங்க கேவிக் கேவி அழுதாள். தலையில்கூட ஒரு தடவை அடித்துக் கொண்டாள். லாந்தர் விளக்கை அப்படியே போட்டுவிட்டு, அவன் தன்னை விட்டு விடக் கூடாது என்று நினைத்தவள்போல், அவன் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முகத்தை அதில் தேய்த்துக் கொண்டு அழுதாள். இதுவரை, அவள் சிரிப்பதை மட்டும் பார்த்த அவன், ஆச்சரியத்தோடும் அதிர்ச்சியோடும் அவளைப் பார்த்தான். பிறகு அவள் தலைமுடியை கோதிவிட்டுக்கொண்டே ‘அழாதம்மே. ஊருவுலகத்துல ஆயிரம் கீது.. அதுல. ஒண்னு உன் ஆத்தா பண் ணுனது. அதுவே இப்போ… அல்லாடுது… ஏதோ… வாலிபமிடுக்குல பூட்டு. சரி விடு. அழாதம்மே. அட” என்றான்.

“நீ ஆயிரம் சொன்னாலும் என் மனசு ஆறாதுய்யா. அப்டி இன்னாய்யா… தன்ன மீறின கொழுப்பு? நீ கூடத் தான் என்ன லேசா தொடுற… நான் இடங் குடுக்கிறனா? நீ தொட்டா ஷாக் அடிக்கத்தான் செய்யுது… அதுக்காக நானு… எப்பவாவது… கொயுப்பா… நடந்துக்கனேன்னு சொல்லு பாக்கலாம்? ஒரு வாட்டி நீ ஒவராபோனப்போ… ஒன்ன என்ன பேச்சி பேசினேன். தாலிய பூடு முன்னால தாரமா நெனக்காதன்னு அட்சி பேசினனா… இல்லியா? சொல்லுய்யா… நாயம். பேசுறிய… நாயம்…”

“செல்லம். வுலகம். நீ நெனக்கதுமாதுரி. இல்ல. அர்த்தம் காண முடியாம ஆயிரம் விஷயம் கீது.. இப்ப ஒன்னோட வயசுல கீற பல பொண்ணுங்க… பல கையிமாறிக்கலே. ஆனால், நீ கண்ணராவியாய் கீற. இதுக்கு காரணம் தெரியுமா? சொல்லும்மே.”

“என்கு ஒண்ணும் ஒடல. நீயே சொல்லு.” “ஒருவேள ஆத்தாவோட நீ இருந்தா, இந்த பொண்ணுங்களோட பழகுன ஜோர்ல ரெண்டு கையி மாறி போயிருப்பே.”

யோல்.: “அட ஒரு பேச்சிக்குச் சொன்னேன். ஒன்னோட ஆத்தால நினைச்சி நினைச்சி அதுமாதிரி ஆவக்கூடாதுன்னு சுத்தமா இருந்துட்டே. ஒன் ஆத்தா உன்கிட்டே அடிக்கடி வந்து என்ன மாதுரி மாறிடா தடின்னு சொல்லாம சொல்லிட்டுப் பூடுது. அதனால நீ ஒயுங்கா கீறதுக்கு ஒன்னோட ஆத்தா கைமாறினதும் ஒரு காரணம். ஆத்தாவுக்கு ஒரு வகையில நீயி நன்றி சொல்லணும். பாவம் அத இப்டி குத்திக் குத்திப் பேசினதுக்கு பிரத்தியா, நீ ஒரு கத்தியாலயே குத்திப்பூட்டிருக்கலாம்…”

செல்லம்மா கண்களைத் துடைத்துக்கொண்டே யோசித்தாள். அம்மாவை பேசியதை அநியாயம் என்று ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், அவ்வளவு தூரம் பேச வேண்டியது அவளுக்கு நியாயமாகவும் படவில்லை. ஆத்தாக்காரி மனசு எப்படியிருக்கும்? அவள் இப்போது எப்படி போய்க் கொண்டிருப்பாள் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தாள். மீண்டும் அழப் போனாள். அதற்குள் ஒரு திடீர் யோசனை, அவள் அழுகையைத் தடுத்தது. ஒரு ஈயப் போணிக்குள் இருந்த ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து, எதிர்கால கணவனிடம் நீட்டினாள்.

‘’எதுக்குமே?” “இத ஆத்தாவண்ட குடு. நீ சொன்னது நாயந்தான். பாவமா கீது குய்க்கா போய்யா.”

“பொண்ணுங்க மனச புரியறது கஷ்டங்றது சர்தான் போல.” “சீக்ரமா போய்யா. ஆத்தா பூடும்.”

அவன் சீக்கிரமாய் எழுந்தான். நடந்து போனவனை அவள் பேச்சால் இழுத்தாள்.

“நான் குடுத்தேன்னு சொல்லிடாத. அதுக்கு குளிரு விட்டுடும். நீயே பரிதாபப்பட்டு குடுக்கதா சொல்லு. ஒன்ன பாக்கிறதுக்கும் அதுக்கு சான்ஸ். நீ எவ்வளவு நல்லபிள்ளன்னு ஆத்தாவுக்கு தெரியட்டும். போய்யா, குயிக்கா போய்யா. இந்நேரம் அது தங்கச்சால அண்ட போயிருக்கும்.”

அப்படியும் இப்படியுமாக ஒரு மாதம் ஒடியது.

செல்லம்மாவுக்கும், அந்த வாலிபனுக்கும் வடசென்னையில் உள்ள அந்த குடிசைப் பகுதியில் மேளதாளத்துடன் ஒரு வஸ்தாது வாத்தியார் தலைமையில் கல்யாணம் நல்லபடியாக நடந்தேறியது. திருமண நாளில் ஆத்தாக்காரி வந்திருக்கிறாளா என்று செல்லம்மா, அங்குமிங்குமாக கண்ணைச் சுழற்றினாள். ஆத்தா அகப்படவில்லை. அந்த இன்ப நேரத்திலும், அவள் கண்கள் துன்பநீரைக் கொட்டின. தாலி கட்டப்பட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு, செல்லம்மா ரோட்டுப் பக்கம் வந்தாள். ஆத்தாக்காரி கிட்டவில்லை. மின்சாரக் கம்பத்தையே வெறித்துப் பார்த்துவிட்டுப் போனாள் செல்லம்மா. ஆத்தாவைக் கண்டுபிடிக்க முடியாமல், திரும்பி வந்த அவளுக்கு, காசை நீட்டிய நேரத்திலிருந்து மனசில் ஒரு பள்ளம் விழுந்தது. அதை நிரப்ப, ஆத்தாவும் அதற்குப் பின் வரவில்லை.

ஓராண்டு காலம் ஓடியது.

இரண்டு குடிசைகள் ஒன்றாவது போல், இன்னொன்றும் உருவாகியது. செல்லம்மா பிரசவ ஆஸ்பத்திரியில் ஏதோ ஒரு வார்டில் தரையில் உள்ள பாயில் புரண்டாள். சுகப் பிரசவம், ஆயாவையே உறித்து வைத்தது போன்ற அழகான பெண் குழந்தை.

யாரும் வராத சமயம். செல்லம்மா, குழந்தையின் கன்னத்தை நீவிவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு தாயின் மனம் எப்படியிருக்கும் என்பதை அனுபவரீதியாக பார்த்த அவளுக்கு ஆத்தாக்காரி மீது, பாசம் ஏற்பட்டது. அதே சமயம், இப்படிப்பட்ட பாசத்தையும், காமவெறியால் எப்படி உடைக்க முடியும் என்று அவள் யோசிக்க யோசிக்க, ஆத்தாமீது கோபமும் ஏற்பட்டது.

கோபமான அனுதாபத்துடனும், அனுதாபமான கோபத்துடனும் அவள் தலையணையில் தலையை வைத்து, அதை அங்குமிங்குமாக ஆட்டிக்கொண்டிருந்த சமயத்தில்

ஆஸ்பத்திரி ஆயா, நமது ஆயாவை இழுத்துக்கொண்டு உள்ளே வந்தாள்.

“என்ன இது வேடிக்கையா இருக்கு? பிரசவத்துல இவள் துடிக்கயில… என் பொண்ணுக்கு எப்படி இருக்குன்னு துடியா துடிச்சே. இவ மயக்கமா கிடக்கையில தலையைக் கோதிவிட்டு குழந்தைய எடுத்து கொஞ்சின. மூணு நாளா இங்கயே பழிகிடந்தே. இப்போ இந்த சங்கிலிய என்கிட்ட நீட்டி குழந்தை கழுத்துல போடச்சொன்னா எப்டி? சும்மா பிகு பண்ணாம வா பாட்டி..”

ஆஸ்பத்திரி ஆயாவுக்கு முழு விஷயமும் தெரியாது என்றாலும் ஆத்தாவுக்கும் மகளுக்கும். ஏதோ தகராறு என்பது மட்டும் தெரியும். அம்மாவும், மகளும் விவகாரத்தை தனிமையில் தீர்த்துக் கொள்ளட்டும் என்று நினைத்தவள் போல், ஆஸ்பத்திரி சிடுமூஞ்சிகளுக்கு விதிவிலக்கான அந்த புன்னகை புத்ரி போய்விட்டாள். – –

கிழவி ஒடுங்கிப்போய் நின்றாள்.மகள் திட்டுவது வெளியே கேட்க வேண்டாம் என்பதுபோல் வார்டு கதவை, லேசாக தள்ளிவிட்டுக் கொண்டாள். மகளையும் பேத்தியையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு நின்றாள். இப்போதும் அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை.

செல்லம்மா அவளைப் பார்த்து லேசாக புன்னகை செய்தது மட்டுமில்லாமல் குயந்த ஒன்னாட்டம் கீதுல்லா என்று ஒரு கேள்வியையும் போட்டாள்.

அதுவே பாட்டிக்காரிக்கு போதுமானதாக இருந்தது. மகளின் அருகே போய், கால்களைப் பிடித்துவிட்டாள். பிறகு சிறிது தைரியப்பட்டு கன்னத்தைத் தடவிவிட்டாள். திடீரென்று எழுந்து பொங்கிவந்த அழுகையை வார்டு கதவு வழியாக வெளியேற்றிவிட்டு மீண்டும் மகளிடம் வந்து அவள் தலையைக் கோதிவிட்டாள். பேத்தியை எடுத்து உச்சி மோந்தாள். பின்பு கைகளிரண்டையும் நெறித்துக் கொண்டு மகளையே பார்த்தாள்.

குழந்தை பெற்ற செல்லம்மாவும் இப்போது ஒரு குழந்தையாகிக் கொண்டிருந்தாள். அழுது தீர்ந்ததும், ஆத்தாவைப் பார்த்து “என்னோடயே இருந்துடு. அது ஒண்ணுஞ் சொல்லாது. எப்டியோ நடந்ததை மாத்த முடியாதுதான். அதனால நீ என்கு ஆத்தா இல்லேன்னோ. நான் ஒன்கு பொண்ணுல்லேன்னோ பூடாது. கட்சி காலத்திலயாவது ஒண்ணாயிட்டோம். மாரியாத்தா மனம் வச்சிட்டா…” என்றாள். –

கிழவி, சிறிது நேரம் பேசவில்லை. மகளையே பார்த்துக் கொண்டும், தன்னையே கேட்டுக் கொண்டும் சிறிது நேரம் இமை கொட்டாது நின்றாள். பிறகு அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டப் போனவள், நீர் நிறைந்த முழுப் பானையை தலைகீழாகக் கவிழ்ப்பதுபோல், தலையை கவிழ்த்துக் கொண்டே பேசினாள்.

“நீ சொல்றத கேட்கிறதுக்கு என்னோட காது புண்ணியம் செய்திருக்கு. ஆனால், ஒன்கு பேஜாரா இருக்றது தப்பு. எப்டியோ அந்த ஆள நம்பி பூட்டேன். இப்போ அது கண்ணுங்கெட்டு காலுங்கெட்டு வாதத்துல கிடக்குது. அத விட்டுட்டு உன்னோட வந்தா மாரியாத்தா மன்னாப்பு காட்டமாட்டா. மாரியாத்தா பூட்டும். ஒருவன நம்பி போனப்போ அவன் கெட்டு இப்போ என்ன நம்பி இருக்கப்போ நான் துரோவம் பண்றது பாவம். ஒருவாட்டிதான் துரோவம் பண்ணிவிட்டேன். ரெண்டாவது வாட்டியும் துரோவம் பண்ணப்படாது. கட்டாத புருஷனை விடுறதுல தப்புல்லன்னு ஊருகூட சொல்லும். எனக்கி ஒன்கூடயே இருக்கணுங்கறதுதான். ‘அத பாக்கும்போதுல்லாம், எனக்கி வெறுப்பாகீது. ஒருவாட்டி துடப்பத்த எடுத்துக்கூட சாத்திட்டேன். ஆனால் அது நாதியில்லாம கெடக்கு. நாதான் இடியாப்பம் சுட்டு கஞ்சி ஊத்றேன். அதயும் சேத்துக்கோன்னு ஒன்கிட்ட கேட்கணும்போல தோணுது. ஆனால், அப்டி கேக்றது. பால் குடுக்கிற மாட்ட பல்லப் புடுங்ற சமாசாரமுன்னு நெனக்கத் தோணுது.”

“எப்டியோ கெட்டுப்பூட்டேன். தாயா இருக்காம தட்டுக்கெட்ட முண்டயா ஆயிட்டாலும் முண்டமா கெடக்கிற ‘அத அம்போன்னு விட்றது நாயமில்ல. ஒன் நயினா காட்டியும் குடிக்காம, அதயும்’ குடிசைக்குள்ள கூட்டிவந்து குடிக்க குடுக்காம இருந்தா, நானு குடி கெடுத்தவளா மாறாம பத்தினியா இருந்திருப்பேன். என்ன பண்றது போறாத காலம். கஸ்மால புத்தில கண்ணராவியா பூட்டேன். இந்தா சங்கிலி. ஒன் நய்னா பூட்ட தாலியில தவோண்டு தங்கத்த சேத்து புச்சா செஞ்சேன். இத குழந்த கயுத்துல பூடுற ரைட் எனக்கில்ல். என் கையி பட்டா பாவம். நீயே பூட்டுடு.”

“நான் செஞ்சுவிட்ட பாவத்த நானுதான் திங்கணும். ஒன்கு எந்த சொத்தயோ, சொகத்தயோ கொடுக்காதப்போ என்னோட பாவத்த கொடுக்றது நாயமா? ஆனால் ஒண்ணு. என்னோட பொண்ணு, நான் பெத்த மவா என்ன ஆத்தான்னு ஒரு வாட்டி கூப்பிட்டா நானு சாவையிலகூட சந்தோஷமா சாவேன்.”

கிழவி பேச்சை மட்டுமில்லாமல், மூச்சையும் நிறுத்தப் போனவள்போல் அதை இழுத்துப் பிடித்துவிட்டாள்.

செல்லம்மா ஆத்தா என்று கூப்பிடவில்லை. ஆனால் அவளின் அழுகை ஒலி, ஆயிரம் தடவை ஆத்தா ஆத்தா என்று சொல்லாமல் சொல்வதுபோல் ஒலித்தது.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *