பெரியவன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 16,950 
 

கிரி கை நிறையச் சவூதிக் காசோடு, உலகையே விலைக்கு வாங்கி விட்ட மாதிரி, மிகவும் பணக்காரத்தனம் கொண்ட, பெருமித்தக் களை சொட்ட, மயூரனின் வீட்டுப் படியேறி உள்ளே வரும் போது, அறை வாசலருகே நின்றவாறு தனக்கு இயல்பான புன்னகையோடு மயூரன் அவனை வரவேற்றான். நிழல் கொண்டு, உயிர் மங்கி நிற்பது போல் அவனின் உருவம், கிரியின் கண்களில் பட்டுத் தெறித்தது. வெற்றிகரமான சுக போக வாழ்க்கையின் உச்சி வானில் பறந்தபடி கப்பல் ஓடுகிற தனக்கு முன்னால், மயூரனல்ல, வேறெந்தத் தூசுமே தன் கண்ணில் ஒட்டாது என்று கருதியவனாய், மயூரனைப் பொருட்படுத்தாமல், மிகவும் உரிமையோடு அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் அவன்.

அவன் சவூதி போவதற்கு முன்னால், அவன் அங்கு தங்கி உயிர் வாழ்வதற்காக மயூரனே மிகவும் பெருந்தன்மையுடன் தனது வீட்டின் அந்த அறையை அவனுக்கென்று ஒதுக்கிக் கொடுத்திருந்தான், அது மட்டுமல்ல, தாய் தந்தையற்ற தறுதலையாய் மனம் போன போக்கில் வாழத் தலைப்பட்ட அவனைத் தனது இனிய நட்பு மூலம் மனம் திருந்த வைத்து இப்படியொரு முழு மனிதனாக்கிய பெருமை மயூரனையே சேரும். ஒரு காலத்தில் அவனின் காலடியில் விழுந்து கிடந்தவன் தான் இந்தக் கிரி.அவன் மனம் திருந்த வேண்டுமென்பதற்காகத் தன் சொந்தச் செலவிலேயே மயூரன் அவனைச் சவூதிக்கு அனுப்பி வைத்தான்.அது அந்தக் கிரியின் மாற்றங்கள் இப்படிஊருக்கே ஒரு சாபமாய் வந்து விடியுமென்று அவன் கண்டானா, என்ன? கிரி பெட்டி நிறையக் கொண்டு வந்து சேர்த்த சாமான்கள் ,கட்டிலின் மீத குவிந்து கிடந்தன..அவன் மிகவும் களைத்துப் போய் வந்திருந்தான் ,எனினும் அவன் குரல் உற்சாகத்தோடு ஒலித்தது.

“எப்படியண்ணை சுகமாக இருக்கிறியளே?”

மயூரன் மெளனமாகப் புன்னகை செய்தான் .அவனின் சலனமற்ற பார்வையினூடே கிரியின் பணத்தினாலான, அந்தப் புறம் போக்கு வெளிச்சமும், வேடங்களும் அர்த்தமிழந்த வெறும் நிழற் காட்சிகளாகவே , பட்டுத் தெறித்தன. இவைகளைக் கண்டு அவன் காலடியில், வந்து மயங்கி விழக் கூடிய அறியாமையற்ற அறிவு, அவனுள் சுடர் விட்டு ஒளிவீச, அவன் சொன்னான்.

“கிரி! ரயிலிலே வந்த களைப்பு உனக்கு. இப்ப ஒன்றும் கதைக்க வேண்டாம். கிணற்றடிக்குப் போய்க் குளிச்சிட்டு வா. இரண்டு பேரும் ஒன்றாய்ச் சாப்பிடுவம்.”

அந்தச் சிரஞ்சீவியான பழம் பெரும் வீட்டில் , இப்போது மயூரன் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான். தந்தை ஆறுமுகம் பழைய விதானையாக இருந்தவர். அவரும் அவர் மனைவியும் இறந்து போய் ஏழெட்டு வருடமாகிறது., மயூரனுக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் தான் அவள் கல்யாணமாகிப் புருஷனோடு கொழும்பில் இருக்கிறாள். எப்பொழுதாவது மயூரனைப் பார்க்க அபூர்வமாக அங்கு வந்து போவாள். அவளுடைய சீதன வீடுதான் அது.. சுற்றிலும் பெரிய வளவு மா பலா கமுகு மரங்களென்று ஒரே சோலையாக இருந்தது மயூரன் முப்பது வயது கடந்த பின்னும், கல்யாணத்தின் மீது பிடிப்பின்றி, நித்திய பிரம்மச்சாரி போல் எளிமையான தவ வாழ்க்கை வாழ்கின்றான். அவன் ஒரு பட்டதாரி ஆசிரியன் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தான் ஆசிரியனாக இருக்கிறான் தினமு ரயிலில் தான் பயணம். ஆம்! அது ரயிலோடிய ஒரு புனித பொற் காலம்.

கிளைவிட்டு, வேர் தொட்டு நிற்கிற வாழ்க்கை மண். அது புரையோடாமல் புண் படாமல் காலத்தால் அழிந்து போகாத தலைக் கிரீடம் சுமந்து நிற்பதாய் மயூரனுக்குப் பிரமை தட்டும் அந்தக் கனவுகளுடனேயே தான் தேர் ஓட்டுவதாக இன்னும் அவன் நினைத்து கொண்டிருந்தான். அம்மா இறந்த பிறகு நாக்கு வழி கண்ட சுவை கூட மறந்து போய், இன்னும் ஒடுங்கிய உணர்வுகளுடன் பசியடங்கவே அவன் சாப்பாடெல்லாம் அவனுக்குச் சமையல் கூட ஓரளவு தெரியும். காலையில் ஒரு சோறு கறி ஆக்கினால் அது இரவு வரை கிடக்கும். அவன் ஒரு தீவிர சைவ போஜனகாரன் மாமிசத்தைக் கனவில் கூடத் தீண்டியறியான் கிரி அன்று அவனோடு கூட இருந்து இதையெல்லாம் உண்டு பழகியவன் தான். இன்று அவன் கதையே மாறி விட்டது, அவனுக்கு இது பிடிக்குமா? மயூரன் தட்டை எடுத்து நீட்டியதுமே கிரி முகம் சுழித்தான்.

“வேண்டாமண்ணை இருக்கட்டும் நான் வெளியிலை போய்ச் சாப்பிட்டு வாறன்”

மயூரன் பதில் பேசவில்லை. அவனுக்கு வேடிக்கையாக இருந்தது கிரியின் இந்த மாறுதல்களெல்லாம் சாரம் இழந்து போன வாழ்க்கையின் வெறும் நிழல் வெளிப்பாடுகளாகவே பட்டன .இவைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதாய், குவிகின்ற பெருகி வழிகின்ற , இவ்வகையான உயிர் இழந்த வெறும் நிழல் கற்றைகளின் ஆளுமைப் பெருக்கத்தினால் அழியப் போகிறதே மனித இனமென்று அவனுள் மன வருத்தம் தோன்றியது.. அது கண் முன்னாலேயே, கனவின் வெளிப்பாடாய் , கிரி அதற்கொரு சாட்சி புருஷனாய் வந்து சேர்ந்த பின் தூய்மையிழந்து பங்கமுற்றுப் போன அவனின் காலடிச் சுவடுகளின் தீட்டுக் குளித்து இந்த மண்ணும் இதன் மனிதர்களும் புனிதமிழக்க நேர்ந்து விடுமோ என்று அவனுக்குப் பயம் வந்தது அதை நிஜமாக்கி விடுகிற மாதிரியே காரியங்கள் நடந்தேறின.

கிரி சாப்பிடாமலே காலை பத்து மணி வரைக்கும் வீட்டிலேயே தங்கியிருந்தான். அவனின் ஓயாத அரட்டையைக் கேட்க, மயூரனுக்குப் பெரும் சலிப்புத்தான் மூண்டது. ரயிலில் வரும் போது தான் சந்திக்க நேர்ந்த சுவையான அனுபவங்கள் பற்றி, அவன் மிகவும் சந்தோஷத்தோடு கதை அளந்தான். அதற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல் அவனைத் தரிசனம் காண ஊரே திரண்டு வந்தது அவனோடு நெருக்கம் கொண்டவர்கள் மாத்திரமல்ல அவனின் முகமறியாத பரிச்சயமற்றவர்கள் கூட வந்து போனார்கள். உறவு பேதம் பாராமல் வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்குவதிலேயே அவன் குறியாக இருந்தான். எவ்வளவு விதம் விதமான அன்பளிப்புப் பொருட்கள். எல்லாம் விலையுர்ந்த பகட்டொளியில் பளபளத்து மின்னும் சவூதிப் பொருட்கள் தான் உடுதுணிகள் தவிர கை மணிக்கூடுகள் கால் செருப்பு அணிகலன்கள் இவை தவிரச் சுவை மிக்க சாக்கலேட்டுகளும் கூடக் கொண்டு வந்திருந்தான். அறைக்குள் நாசியைத் துளைக்கும் செண்ட் வாசனை வேறு. அது குப்பென்று மணம் வீச, அறை முழுவதும் அவனின் வியாபகமான அந்தக் கண் கொள்ளாக் காட்சி நிழல்.

அதுவே உறுத்துகின்ற மனச் சஞ்சலத்தோடு, பிரமை கொண்டு வெளியே மயூரன் நிலை குத்தி அமர்ந்திருக்கையில் ,திடீரென்று வாசலில் ஒரு கனதியான பெண் குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த போது, சரசக்காதான் படியேறி வந்து கொண்டிருப்பது தெரிந்தது, அவள் அவனுக்கு நெருங்கிய உறவு மட்டுமல்ல. ஊரில் மிகவும் பிரபலமான வாயாடிப் பெண் அவள். உரத்த குரலில் உலகம் அறிந்தது போல் நிறையப் பேசுவாள்.

அவள் இப்போது நன்றாகக் கிழடு தட்டிப் போயிருந்தாள் பாவம் அவளுக்கும் வாழ்வி நிறையச் சுமைகள் ஆறு பிள்ளைகள். மூத்த பையன் ரகுவும் கூட வந்திருப்பது தெரிந்தது .கிரி அவர்களைக் கண்டதும் வாய் நிறையச் சிரிப்போடு வரவேற்றான்.”

“வாங்கோவக்கா!”

“எங்களுக்கு என்ன கொண்டு வந்தனீ?”

வாங்கோவக்கா, வந்து பாருங்கோ. நிறையச் சீலையெல்லாம் இருக்கு, ரகுவிற்கு ஜீன்ஸ் ரீசேட் கூட இருக்கு. விரும்பியதை எடுத்துக் கொடுத்தால் நான் பையில் போட்டுத் தாறனே”

ரகுவிற்கு இது முற்றிலும், மாறுபட்ட ஒரு புது அனுபவம். அவனின் கண் முன்னால் விரிந்த, அந்தக் களை சொட்டும் காட்சி உலகம் கண்டு, கண் மயங்கி நிலையிழந்து அவன் நின்று கொண்டிருந்தான் கிரி ஒரு கைக் கடிகாரத்தை எடுத்து, அதைத் தானே ரகுவின் கையில் கட்டி விட்டான்..இதனால் ரகு மிகவும் பிரமிப்படைந்திருந்தான்.. திடீரென்று ஏற்பட்ட அந்தப் பரவசப் பெருக்கினால், அவன் தன்னையே மறந்து விட்டவன் போல் பிரமை கொண்டு தோன்றினான். மகிழ்ச்சி தாங்காமல் உணர்ச்சி பரவசப்பட்டுப் புல்லரித்துப் புளகாங்கிதமடைந்து விட்ட, அவனின் இந்த நிலை கண்டு மயூரன் பதறிப் போனான். அவன் இதை எதிர்பார்த்திருக்கவே இல்லை ரகு மீது தனிப்பட்ட அன்பு அவனுக்கு. அவன் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் ரகுவே முதன்மையானவன். நல்ல கெட்டிக்காரப் பையன், வருகிற ஆவணியில் ஏ. ல் சோதனை எடுக்கப் போகிறான். கணிதமே படிப்பதால் வருங்காலத்தில் தானொரு பொறியியலாளர் ஆக வேண்டுமென்பதே அவனின் நெடுநாளைய கனவு.

. இப்போது அந்தக் கனவே மறந்து போனது போல் அவன் கண்கள் மயக்கம் கொண்டு தோன்றின. அதைப் பார்த்து விட்டு, மயூரன் அவசரமாக அவனருகே போய் நின்று கூறினான்.

“ கவனம் ரகு! நீ படிச்சால்தான் பெரிய ஆள்”

“ தூசு! என்னண்ணை விசர்க் கதை கதைக்கிறியள்? காசு வந்தால் படிப்பு எந்த மூலைக்கு? நான் இப்ப பெரியவனாகேலையே அதெப்படி? சொல்லுங்கோ” என்றான் கிரி.

“அது உன்னோடு இருக்கட்டும் நீ ஒன்றும் ஊரைக் கெடுக்க வேண்டாம். இப்படிப் பணமே வாழ்வென்று கருதினால் அது மட்டும் தானென்றால் வாழ்வென்ன? மனிதனே காணாமல் தான் போவான்.” என்றான் மயூரன் ஆவேசமாக. இந்தப் புண்ணிய தேசம் நிலைக்க வேண்டுமானால், அவன் சொல்வதே வேதவாக்காக எடுபடும். .இதற்கு ரகு ஒன்றும் கூறவில்லை திடீரென்று அவன் மிகவும் களையிழந்து விட்ட மாதிரி முகம் வாட்டமுற்றுத் தோன்றினான். அதைப் பொருட்படுத்தாமல் சரசக்கா கை நிறையப் பொருள் கிடைத்த மகிழ்ச்சியோடு, அவனைக் கூட்டிக் கொண்டு போய் விட்டாள்.

இது நடந்து ஒரு கிழமைக்கு மேலிருக்கும் படிப்பே உலகமென்று வாழ்ந்த ரகுவிற்கு என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை ஒரு கிழமையாக அவன் கல்லூரிக்கே வரவில்லை.. என்ன நேர்ந்த விட்டது அவனுக்கு? மயூரன் பயந்தது போல, ஒரு மேதையின் விழுக்காடாகவே அது நேர்ந்து விட்டதா? எங்கே அவனின் படிப்புலகக் கனவெல்லாம்? ஏன் வரவில்லை அவன்?

இதற்கு விடை அறிவதற்காக, நிம்மதியிழந்த மனதோடு , மயூரன் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பும் போது, அன்றைய தினம் நேராக, ரகுவின் வீட்டிற்கே வந்து விட்டான். சரசக்கா மிகவும் மகிழ்ச்சியோடு அவனை வரவேற்றாள்.

“வா தம்பி! தேத்தண்ணி போட்டுத்தாறன்”

“ஒன்றும் வேண்டாம். நான் இப்ப வந்தது ரகுவைப் பார்க்கத்தான் ஆளைக் கூப்பிடுங்கோ! ஏன் பள்ளிக்கூடம் வரேலையென்று கேட்க வேணும்“

“அவனுக்குக் காய்ச்சல்”

“பொய் சொல்லுறியள் சரசக்கா! ஏதோ விபரீதம் நடந்திருக்கு, சொல்லுங்கோவக்கா ஏன் அவன் வரேலை?”

தம்பி! நீ கோபிக்கக் கூடாது அவன் வெளிநாடல்லே போகப் போறான். அவன் போனால் தான் எங்கடை கஷ்டமெல்லாம் தீரும்”

“என்ன சொல்லுறியள்? அவனை எங்கை அனுப்பப் போறியள்? சவூதிக்கே?”

அங்கை போனாலும் காசு காணாது. இப்ப கனடா போனால் தான் நல்ல காசு வருமென்று ஊருக்குள் கதை உலாவுது. ஒரு ஏஜென்ஸிப் பெடியனைப் பிடித்துக் கிரிதான் எல்லா ஒழுங்குகளையும் செய்கிறான். நகை நட்டெல்லாம் வித்துத் தான் இப்ப இதுக்கு ஒரு வழி பிறந்திருக்கு.. கிரியும் கூட ரகுவோடு வெளிக்கிடப் போறான் போல இருக்கு. உன்னோடு இதைப் பற்றி ஒன்றும் அவன் கதைக்கேலையே?”

மயூரன் அவளது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல மனம் வராமல் பொறுமையிழந்து நின்றிருந்தான் ரகுவின் பாரதூரமான, மிகவும் துக்கம் தரக்கூடிய இந்த விபரீதமான நடத்தை மாற்றத்தினால் ஊரே தலை கீழான தடம் புரண்டு போன மாற்றங்களுடன், சித்தம் கலங்கிப் பேதலித்துப் போகும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக, அவன் அதை ஒரு பெரும் அதிர்ச்சியுடன் நினைவு கூர்ந்தான். ரகுவின் நிலையே இவ்வாறானால், படிப்பைப் பொருட்படுத்தாத ஏனைய இளைஞர்களின் நிலை என்ன?

இது ஒரு தொடர்ச்சி வியூகமாய் , ஊரே சுற்றி வளைக்கப்பட்டு இந்தப் பிரளயக் காற்றின் கண்ணுக்குத் தென்படாத, மாயப் பணமென்ற சூறாவளிச் சுழலுக்குள் சிக்கி, அந்தோ பரிதாபம்! நாதியற்ற ஒரு தறுதலைச் சமூகமாய், எங்கள் சமூகம் சீரழிந்து போக நேருமோ என்ற கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டவனாய் , அவன் வீடு திரும்பினான்.

ரகு வீட்டில் நீண்ட நேரம் தாமதிக்க நேர்ந்ததால் நன்றாக இருண்டு விட்டது. அந்த இருட்டைத் தொலைப்பதற்கு, கையில் குப்பி விளக்கை ஏந்தியவாறு கிரி அவனை எதிர்பார்த்து வாசலில் நின்று கொண்டிருந்தான்.. அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே மயூரனுக்கு மனம் கூசியது. அவன் மெளனமாகச் சோகம் கனத்து, வாசலைக் கடந்து விரைவாக உள்ளே போகையில் கிரியின் நிழல் அவனைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்தது

“என்னண்னை! பேசாமல் போறியள்? முகமும் விழுந்து கிடக்கு என்ன சங்கதி?”

“உன்னோடு இனியென்ன கதை எனக்கு? நீ என்ரை பேச்சைக் கேட்கப் போறதில்லை. உனக்கு நான் யார்? உன்னை வழி நடத்தவோ உனக்குப் புத்தி சொல்லவோ எனக்கு ஏது தகுதி? ம்! எல்லாம் கலி காலம். ஊர் என்ரை கண் முன்னாலேயே, பற்றியெரிகையில், எனக்கு மட்டும் இதுக்காகப் போய்த் தீக்குளிக்க வேணுமென்று என்ன சாபம்! சொல்லடா?“ மயூரனின் மிகவும் தர்மாவேசமான, சுடுகின்ற இந்த வார்த்தைகளின் அர்த்தம் பிடிபடாதவனாய், அதைக் கிரகிக்கத் தவறிவிட்ட அறிவு மயக்கம் கொண்ட முழுப் பேதை மனிதனாய் கிரி கைகளைக் கொட்டி ஆர்ப்பரித்துத் தோள் குலுங்கப் பெருங்குரலெடுத்துச் சிரித்து விட்டு உரத்த தொனியில் கூறினான்.

“அண்ணை! உங்களுக்குச் சரியான விசர் தான் பிடிச்சிருக்கு. புளியெண்ணை தான் வைக்க வேணும்.”

உண்மை எடுபடாதென்று இப்படி இன்று நேற்றல்ல எப்பவோ தெளிவாகிப் போனவிடயம். காட்சி உலகமே உயிரென நம்பி எடுபடும் மனிதர்களிடம், இந்த வரட்டு உண்மைகளும், வாழ்க்கை பற்றிய நேர்மையான சத்திய தரிசனங்களும் எடுபடாது, மறை பொருளாகவே போய் மறைந்து விடுமென்று தோன்றினாலும், மயூரன் முழு மனதோடு நம்பினான். நிலத்துக்குக் கீழே, என் காலடியில் புதை குழிக்குள் சரிந்து போகின்ற இந்த மண்ணுக்காக, மறை பொருளாகப் போய் விட்ட நாங்கள் மறந்து போன அல்லது எங்களை மறக்கத் தூண்டிய நேர்மையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய பல உண்மைகளின் ஒட்டு மொத்தச் சாபத்தின் விளைவே இது.

அப்படி வெகு காலம் கழித்து, பாகைவனமாய் எரிந்து சுடுகின்ற நெருப்பு மண் மீது நிலைத்தபடி மயூரன் ஒருவனால் மட்டுமே அப்படி நினைக்க முடிந்தது அது போது மென்று அவனுக்குப் பட்டது.

-மல்லிகை (ஒக்டோபர்,2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *