பிடாரனின் மகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 23,890 
 
 

மழையோடு நனைந்தபடி ரத்தப் பரிசோதனை நிலையத்தினுள் வந்து நின்ற அந்தப் பெண்ணையும் அவளுடைய தகப்பனையும் பார்த்தேன். படி ஏறும்போதே தெரிந்த மனிதர்களைப் போலத் தோன்றியது. நெருங்கி வந்ததும் சட்டெனத் தோன்றியது, அது அவர்களேதான்!

அந்தப் பெண் நனைந்து ஈரம் சொட்டும் கேசத்தை ஒதுக்கியபடியே என் முன்னால் வந்து நின்று மெல்லிய குரலில், ”எங்க அய்யாவுக்கு ரத்தம் பரிசோதிக்கணும். டாக்டர் சீட்டுக் குடுத்திருக்காரு…” என்றாள்.

பிடாரனின் மகள்

அந்தக் குரல் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே மாறாமல் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது. அந்த ஆள் பாம்புப் பிடாரன். அவள், அவனுடைய மகள் செல்லி. எனது பத்துப் பன்னிரண்டு வயதுகளில் கோபால செட்டித் தெருவின் முனையில் இருந்த சாவடி முன்பாக அவர்களைப் பார்த்திருக்கிறேன். அந்த ஆள் பழுப்பான வேட்டியைத் திரைத்துச் சொருகி, குத்துக்காலிட்டு உட்கார்ந்து மகுடி வாசிப்பான். அவனுடைய தலைமயிரின் ஒரு கொத்து முன்னால் வளைந்துகிடக்கும். தலை அசையும்போது அந்த மயிர் முன்னும் பின்னும் சரிவது வேடிக்கையாக இருக்கும். அப்போது அவனுக்குத் திடகாத்திரமான உடல். எவ்வளவு நேரமானாலும் குத்துக்காலிட்ட நிலையை மாற்ற மாட்டான். மகுடி வாசிக்கும்போது கண்களை மூடிக்கொள்வான். அப்போது அவன் முகத்துக்குச் சிலைகளின் பாவம் வந்துவிடும். மகுடி ஓசையின் முன்னால் ஒரு நல்லப் பாம்பு, மினுங்கும் செதில்களுடன் தனது உடலை நெளித்தபடி வளைந்துகிடக்கும். மகுடியின் நாதம் ஏற்படுத்திய கிளர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிப்பதைப் போல அந்தப் பாம்பு கிறங்கிக்கிடப்பதும் பின்பு, தலை தூக்கி அசைவதுமாக இருக்கும்.

உண்மையில் அது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. பாம்பு எப்போது தலை தூக்கும் எனப் பிடாரனுக்குத் தெரியும். பிடாரன் எப்போது ஊதும் வேகத்தை அதிகமாக்குவான் எனப் பாம்புக்கும் தெரியும். எதற்காக இவர்கள் இப்படி ஒரு மாய விளையாட்டை இத்தனை பேர் பார்க்க நடத்துகிறார்கள் என்று அந்த நாட்களில் எனக்குப் புரியாது. மகுடியின் நாதம் பார்க்கிறவர் களைக் கிளர்ச்சி அடையச் செய்யும். நரம்புகளை யாரோ சுண்டி இழுப்பதைப் போல விவரிக்க முடியாத மயக்கம் தரும் இசை அது.

கூட்டம் எப்போதும் பாம்பின் மீதே கண் வைக்கும்போது நான் பிடாரனை மட்டுமே பார்ப்பேன். பிடாரனாக இருப்பது பெரிய சூரத்தனம். ஒருவேளை பிடாரனும் முன்காலத்தில் பாம்பாக இருந்திருப்பானோ? இப்படி பாம்பின் ஆட்டத்தைப் பார்க்கப் பார்க்க… மனதில் ஆசைகள் கொப்பளிக்கும்.

பிடாரனின் மகுடி பார்வையாளர்களைக் கட்டிப்போட்டதும், வட்ட மான பாம்புப் பெட்டியைக் கையில் வைத்துக்கொண்டு, நீலநிறப் பாவாடையும் வெளிர் மஞ்சள் மேல்சட்டையும் அணிந்த பிடாரனின் மகள் செல்லி கீச்சிடும் குரலில் கத்து வாள், ”அய்யாமாரே… அண்ணமாரே, இது கண்கட்டி வித்தை இல்லை. சூது இல்லை. பொய் பித்தலாட்டம் இல்லை. பாம்பை அடக்கி ஆளுற சூட்சுமம். அய்யாமாரே… நல்லாப் பாருங்க, இது தாழக்காட்டுல பிடிச்ச நல்ல பாம்பு. பேருதான் நல்ல பாம்பு. ஆனா, பல்லுல இருக்கு பயங்கர விஷம். சந்தேகம் இருந்தா உங்க கையைப் பாம்பு முன்னாடி நீட்டுங்க. ஒரே கொத்து, நுரைத் தள்ளி இந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்துப்போயி ருவீங்க. ஆனா, இதே பாம்பு நான் கையை நீட்டினா, என்னைக் கொத்தாது. நீங்களே பாருங்க…” எனப் பாம்பின் முன்னால் தன் கையை நீட்டுவாள். அது கொத்துவதைப் போலத் தலையை உயர்த்திவிட்டுத் தானே அடங்கிவிடும். அவள் பாம்பின் தலையை மெதுவாகத் தடவிக்கொடுப்பாள். கூட்டம் கை தட்டும்.

என்னைவிட அவளுக்கு ஒன்றிரண்டு வயது தான் அதிகம் இருக்கும். அவள் சொல்வதைக் கேட்டு, பாம்பு எப்படி அடங்கிப்போகிறது என ஆச்சர்யமாக இருக்கும் எனக்கு. ஊதுவாயில் எச்சில் ஒழுக, பிடாரன் மகுடி வாசித்துப் பாம்பைக் கிறங்க ஆடவைத்து, இசையின் உச்சத்தில் சட்டென நிறுத்திவிடுவான். மயங்கிக்கிடந்த பாம்பு விருட்டென எழுந்து அவன் கையைக் கொத்த சீறிப் பாயும். அதன் கழுத்தைப்பிடித்துச் சுருட்டி, தன்னுடைய பெட்டியில் போட்டு மூடிவிட்டு, எழுந்து அனைவரையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவான். அவன் கும்பிடு போடுவதில் பணிவு இருக்காது. தன் வேலை முடிந்துவிட்டது… இனி, செய்ய வேண்டியது நீங்கள்தான் என்பதைப் போலவே இருக்கும்.

கூட்டத்தில் கிடைத்த காசுகளை எண்ணி, தன்னுடைய சுருக்குப் பையில் போட்டுக்கொண்டிருப்பாள் செல்லி. அவளிடமிருந்து இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை மட்டும் பிடாரன் கை நீட்டி வாங்கிக்கொள்வான். பிறகு, வேட்டியில் சுருட்டிவைத்திருந்த பீடியை எடுத்துப் பற்றவைத்து இழுக்கத் தொடங்குவான். செல்லி பாம்புப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, தனி ஆளாகக் கீழத் தெரு வழியாக நடந்துபோக ஆரம்பிப்பாள். பிடாரன் தீயணைக்கும் படை சந்து வழியாக மெதுவாக நடந்து போகும் வரை நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்.

ஒரு நாள் அப்சரா தியேட்டர் முன்பாகப் பிடாரன் மகுடி வாசிப்பதைக் கண்டு பள்ளிக்குப் போகாமல், அவன் முன்னாடி உட்கார்ந்துகொண்டேன். அன்றைக்குத்தான் பாம்பு காற்றில் பறப்பதை முதன்முறையாகப் பார்த்தேன். உச்சி வெயிலில் மகுடி நாதம் ஏற்றிய வெறியில் பாம்பு சீறி அலைந்துகொண்டிருந்தது. பிடாரனின் கண்கள் பாம்பின் மீதே நிலைகுத்தி இருந்தன. பாம்பின் நாக்கு அவ்வளவு வேகமாகத் துடித்து நான் பார்த்ததே இல்லை. நெருப்பின் ஜுவாலைபோல அலைந்தது. இன்றைக்குப் பிடாரனைக் கொல்லாமல் விடாது என்பதுபோலவே பாம்பு அவனைக் கொத்தத் துடித்தது.

அன்றைக்குப் பிடாரனின் மகள் அவனுடன் இல்லை. பிடாரனின் கண்கள் பாம்பின் நிலைகொள்ளாமையை ரசித்துக்கொண்டிருந்தன. தூண்டிலில் மாட்டிய மீனை உடனே சுண்டி இழுக்காமல் ரசிக்கும் மீனவனைப் போல அவன் பாம்பை ஆட விட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனதில் வேறு ஏதோ யோசனைகள் வந்து போவதுபோல முகம் கலக்கமாக மாறியது. பிறகு, என்ன நினைத்தானோ, தனது இடது கையைச் சாய்த்து பாம்புப் பெட்டியின் மூடியை அருகில் இழுத்துக் கையில் எடுத்தான். பாம்பு அவன் ஏதோ செய்யப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்டதைப் போலத் தரையில் ஆவேசமாகக் கொத்தியது. பாம்பு தலை நிமிர்வதற்குள் அவன் பெட்டி மூடியால் பாம்பை அமுக்கிப் பிடித்து உள்ளே அடைத்தான். அது அடைபடாமல் திமிறியது. அவன் எழுந்து கூட்டத்தின் முன்னால் மன்னிப்புக் கேட்பதுபோலச் சொன்னான்…

”ஒரு தப்பு நடந்துபோச்சு. இன்னைக்கு என்னால வாசிக்க முடியாது. வாசிச்சாலும் இந்தப் பாம்பு அடங்காது. சாமிமாருங்க என்னை மன்னிச்சிருங்க” என பாம்புக் கூடையைக் கையில் எடுத்து இடுக்கிக்கொண்டு, மேற்காக நடந்துபோகத் துவங்கினான்.

ஏமாற்றத்துடன் கூட்டம் அவனைத் திட்டிக்கொண்டுபோனது. எனக்கு மட்டும் ‘அவன் என்ன தப்பு செய்தான்? எதற்காகப் பாம்பு அன்று மட்டும் அடங்காது?’ என்ற கேள்விகள் எழுந்தன. ஏனோ, அந்த ஆளைத் தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அவனிடம் நானும் மகுடி வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆசையாக இருந்தது.

பிடாரன் வழக்கமாகத் தென்படும் இடங்களில் போய் அவனது பெயரைக் கேட்டபோது, யாருக்கும் அவன் பெயர் தெரியவில்லை. வீட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருமுறை செல்லி கையில் பிளாஸ்டிக் வாளியோடு கோதுமை மாவு அரைக்கப் போவதைப் பார்த்த ஞாபகம் இருந்தது. மாவு மில்லுக்குப் போய் விசாரித்தேன். பிடாரன் வீடு ரயில்வே குட்ஷெட் பின்னால் எங்கோ இருப்பதாகச் சொன்னார்கள். எங்கள் ஊரின் ரயில்வே குட்ஷெட் மிகப் பெரியது. அதன் பின்னால் நிறையப் பூவரச மரங்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். முன் எப்போதோ ஒரு முறை பொங்கலுக்கு வீட்டுக் கூரையில் சொருகுவதற்கான கண்ணுப்பிள்ளைப் பறிப்பதற்காக அங்கே சென்றிருக்கிறேன்.

அந்தப் பகுதியைக் கின்னாரக்குடி என்பார்கள். சாக்கடை வழிந்தோடும் அந்தப் பகுதிக்குள், கல் ஒட்டர்களும், லாடம் கட்டுபவர்களும், துப்புரவுத் தொழிலாளர்களும் வசித்தார்கள். பிடாரனின் வீடு சிறிய மண்குடிசையாக இருந்தது. அந்த வீட்டின் வாசலை ஒட்டி ஒரு சினைப் பன்றி படுத்துக்கிடந்தது. செல்லி வீட்டு வாசலில் உட்கார்ந்து தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தேன். அவளுக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பதுபோல லேசான புன்னகையுடன், ”யாரைப் பார்க்கணும்?” என்று கேட்டாள்.

”உங்க அய்யாவைத்தான்” என்று சொன்னேன். அவள் பசையைத் தடவி வேகமாகத் தீப்பெட்டியின் மேல்பெட்டியை ஒட்டியபடியே ”அவரு குடிச்சிப்பிட்டுத் தூங்குறாரு. அவரை எதுக்குப் பாக்கணும்?” என்றாள்.

”நானும் உன்னை மாதிரி பாம்போட பழகணும்” என்றேன்.

”நாங்களே இந்தப் பாம்பைவெச்சுப் பிழைக்க முடியாம வம்பாடு பட்டுக்கிட்டு இருக்கோம். நீ இதைப் பழகி என்ன செய்யப்போறே?” என்று மீண்டும் சிரித்தாள்.

”நீ பள்ளிக்கூடத்துல போய்ப் படிக்கலையா?” எனக் கேட்டேன்.

”படிச்சிக்கிட்டுதான் இருந்தேன். எங்க அம்மா செத்துப்போனதும் அய்யா நிறுத்திட்டாரு. அதான் அவருகூட தொழிலுக்கு வந்துட்டேன்” என்றாள்.

”உனக்குப் பாம்பைக் கண்டா பயமாக இருக்காதா?” எனக் கேட்டேன்.

”பாம்பு என்ன செய்யப்போகுது. அப்பிராணி. வகுத்துப் பிழைப்புக்கு வழி இல்லாம இதைவெச்சி வாழ வேண்டி இருக்கு” என்றாள். அவள் பேச்சு வயதுக்கு மீறி இருந்தது.

”நீயும் மகுடி வாசிப்பியா?” எனக் கேட்டேன்.

”பொம்பளைப் பிள்ளைக மகுடி வாசிக்கக் கூடாதுனு அய்யா சொல்லியிருக்காரு. எப்போமாச்சி அவருக்குத் தெரியாம எடுத்து வாசிப்பேன். ஆனா, அய்யா மாதிரி வாசிக்க வராது” என்றாள்.

”எனக்கு மகுடி வாசிக்கக் கத்துக்குடுப்பீங்களா?” எனக் கேட்டேன்.

”அதெல்லாம் வேணா. நீ மகுடி வாசிச்சா, பாம்பு உன் வீடு தேடி வந்துரும். அப்புறம் உன்னைவிட்டுப் போகவே போகாது… பரவாயில்லையா?”

”நிஜமாவா?” எனக் குழப்பத்துடன் கேட்டேன்.

”ஆமா, நீ மகுடி வாசிக்கிறதை நிறுத்திட்டா, பாம்பு உன்னைக் கொன்னுபோட்டுரும். பாம்பைப் பழக்குறது லேசு. ஆனா, அதை நம்ம கட்டுக்குள்ளயே வெச்சிக்கிட்டு இருக்க முடியாது. ஒரு நாள் மூர்க்கமாயிரும். அப்போ எந்த மகுடியாலும் அதை வசப்படுத்த முடியாது” என்றாள்.

”உனக்கு இதை எல்லாம் யாரு சொல்லிக்குடுத்தது?” எனக் கேட்டேன்.

”நாங்க எல்லாம் மூப்பமாருங்க. எங்க பாட்டன் பூட்டன் காலத்துல இருந்தே பாம்பு பிடிக்கப் பழகியிருக்கோம்” என்றாள்.

வீட்டுக்குள் பிடாரன் எழுந்துகொண்டதுபோலச் செருமல் சத்தம் கேட்டது. செல்லி தலையைத் திருப்பி உள்ளே பார்த்தாள்.

”யார்கிட்டம்மா பேசிட்டு இருக்கே?” எனக் கரகரப்பான குரல் உள்ளிருந்து கேட்டது.

”யாரோ ஒரு பையன் உங்களைப் பாக்க வந்திருக்காப்ல” என்றாள் செல்லி.

உடனே, நான் என் டவுசர் பையில் இருந்த ஐந்து ரூபாயை வெளியே எடுத்து நீட்டியபடியே சொன்னேன், ”என் பேரு ஸ்ரீகுமார். நான் காசுவெச்சிருக்கேன்.”

பிடாரன் போதை கலைந்த முகத்துடன் வெளியே எழுந்து வந்து பார்த்தான். பிரகாசமான பகல் வெளிச்சம் பட்டு அவனுக்குக் கண் கூசியிருக்க வேண்டும். கண்ணைப் பாதி மறைத்தபடியே கேட்டான், ”யார்றா நீ… எதுக்கு வந்திருக்கே?”

”நானும் மகுடி வாசிச்சி பாம்பை அடக்கணும். எனக்குக் கத்துக்குடுங்க” என ஐந்து ரூபாயை நீட்டினேன்.

பிடாரன் முறைப்புடன் என்னைப் பார்த்துச் சொன்னான், ”அதெல்லாம் ஒரு மசிரும் முடியாது. உன் ஜோலியப் பாத்துட்டுக் கிளம்பு.”

என்ன செய்வதெனத் தெரியாமல் ஏக்கத்துடன் அவனைப் பார்த்தபடியே நின்றேன். பிடாரன் தன் வீட்டின் வாசலில் இருந்த சிமென்ட் தொட்டியில் இருந்த தண்ணீரை அலுமினியக் குவளையில் மோந்து முகத்தில் ஊற்றிக் கழுவினான். பிறகு, வேட்டியால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, ஒரு பீடியைப் பற்றவைத்தான். செல்லி வேகவேகமாகத் தீப் பெட்டி ஒட்டிக்கொண்டிருந்தாள். பிடாரன் பீடியை வேகமாக இழுத்தபடியே, ”உன் வீடு எங்க இருக்கு. உங்க அப்பா என்ன செய்றாரு?” எனக் கேட்டான்.

”எங்க அப்பா டீச்சரு. வீடு தந்திமரத் தெருவுல இருக்கு” என்றேன்.

”பாம்புகூட எல்லாம் பழகக் கூடாது புரியுதா… என்னோட தரித்திரம் அதுகளோட வாழ்ந்துட்டு இருக்கேன். நீ படிக்கிற பய, ஒழுங்கா படிச்சி வேலைக்குப் போயி வீட்டுக்கு உதவப்பாரு.”

நான் அமைதியாக நின்றிருந்தேன். பிடாரனின் தொண்டை கமறியது. எச்சிலைக் காறித் துப்பியபடியே சொன்னான், ”பாம்பு விளையாட்டுப் பொருள் இல்லே. அது ஒரு உசிரு. அந்த உசிரு நமக்கு அடங்கியும் இருக்கும். மீறினா, காவும் வாங்கிரும். பாம்பாட்டுறது ஒரு போதை. நாம ஊதுறதுக்குப் பாம்பு கிறங்கி ஆடுதேனு ஒரு மிதப்பு வரத்தான் செய்யும். நாள்பட அந்தக் கிறுக்கு மண்டையில கிர்னு ஏறிடும். அப்படி நாசமாப்போனவன்தான் நானு.”

நான் பிடாரன் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்காமல் அவன் மகள் தீப்பெட்டி ஒட்டுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறுமியின் கைகள் பசையை வேகமாகத் தொடுவதும் நீலக் காகிதத்தில் தடவி ஒட்டுவதுமாக இருந்தன. பீடியை இழுத்து அணைத்துவிட்டு பிடாரன் என்னிடம் கேட்டான், ”டேய் தம்பி! நீ பாம்பைக் கையில பிடிச்சிருக்கியா?”

‘இல்லை’ எனத் தலையாட்டியதும் வீட்டுக்குப் போய் பாம்புப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். உள்ளே பாம்பு ஒரு துணியில் சுருண்டுகிடந்தது. அதன் தலையைப் பிடித்துத் தூக்கித் தொங்கவிட்டான். நான் பயத்துடன் பிடாரனின் கையில் ஊசலாடும் பாம்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

”கையை நீட்டு” என்றான் பிடாரன்.

பாம்பை எனது கைகளில் வாங்கியபோது உள்ளூர நடுக்கமாக இருந்தது. நெளுநெளுவென ஈரக் களிமண்ணைப் பிசைவதைப் போல இருந்தது. பாம்பு என் கையைவிட்டு நழுவி விழுந்துவிடுவதுபோல் இருந்தது. பிடாரன் பாம்பின் தலையைப் பிடித்துக்கொண்டு சிரித்தபடியே ”பயம் போயிருச்சா?” எனக் கேட்டான். நானும் பதிலுக்குச் சிரித்தேன்.

”அன்னைக்கு எதுக்கு மகுடி வாசிக்கும்போது பாதியில் நிறுத்திட்டுப் போயிட்டீங்க?” என்று கேட்டேன்.

”மகுடி வாசிக்கும்போது வீட்டு நினைப்பு வரக் கூடாது. வந்துட்டா, மனசுல பயம் வந்துரும். அன்னைக்கு செத்துப்போன என் பெண்டாட்டியைப் பத்தி திடீர்னு நினைப்பு வந்துருச்சி. அதுல மனசு சரியில்லை” என்றவன் சட்டென எழுந்து வெளியே போய்விட்டான். நான் செல்லியைப் பார்த்தேன். சிரித்தாள்.

அன்று இரவு எனது தூக்கத்தில் ஒரு பாம்பு என்னை எழும்பி மகுடி வாசிக்கச் சொல்லியது. பயந்துபோய்க் கத்தினேன். அம்மா குடிக்கத் தண்ணீர் கொடுத்து, திருநீறு பூசிக்கொண்டு படுக்கும்படி சொன்னாள். பிடாரனைப் போய்ப் பார்த்து பாம்பைக் கையில் பிடித்ததை வீட்டில் யாரிடமும் சொல்லவேயில்லை. அன்று முதல் மனதில் பாம்பின் மீதான ஆசை ஒரு பக்கமும், ‘பாம்போடு பழகக் கூடாது’ என்ற பிடாரனின் எச்சரிக்கை மறுபுறமுமாக என்னை அலைக்கழிக்கத் துவங்கியது.

அதன் பிறகு, ஒன்றிரண்டு முறை பிடாரன் வீடு தேடிப் போய் செல்லியைப் பார்க்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் அவள் கோபத்துடன், ”இங்கே வரக் கூடாதுன்னா எதுக்குத் திரும்பத் திரும்ப வர்றே” என்று திட்டினாள். பின்பு, அவளாகச் சமாதானமாகிப்போனாள். அவளுக்குப் பள்ளிக்கூடம் போய்ப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ”நிறையப் படிச்சி டீச்சர் ஆகணும்னு ஆசை. ஆனா, அய்யா விட மாட்டேங்குறார்” என்று ஆதங்கத்துடன் ஒருநாள் சொன்னாள். அவள் படிப்பதற்காகச் சில கதைப் புத்தகங்களை ரகசியமாகக் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

ஒரு முறை அவள் அய்யா வீட்டில் இல்லாத நேரம் அவரது மகுடியை எடுத்துவந்து என்னிடம் தந்து ‘ஊதிப் பாரு’ என்றாள். வாயில்வைத்து ஊதியபோது சத்தம் கீச்சென்றுதான் வந்தது. ‘நல்லா மூச்சை அடக்கி ஊது’ என்றாள். என்னால் அவளது அய்யாபோல ஊத முடியவில்லை. அவள் வெறும் வாயால் ‘பீபிபீபீ…’ என வாசித்துக் காட்டிக் கேலிசெய்யும் குரலில், ”நீ ஊதுறதைக் கேட்டா பாம்பு செத்துப்போயிடும்” என்று சொல்லி கைத்தட்டிச் சிரிக்க ஆரம்பித்தாள். செல்லியின் பரிகாசம் என்னைக் கோபப்படுத்தவில்லை. அவளது நட்பு எனக்கு மிகவும் பிடித்தது.

அம்மாவின் ஹேர்பின்களில் ஒன்றிரண்டைத் திருடிக் கொண்டுபோய் அவளுக்குத் தந்திருக்கிறேன். ஒருமுறை சாமி உண்டியலில் இருந்து காசை எடுத்துப்போய் அவளுக்காக நெயில்பாலீஷ் வாங்கித் தந்தேன். அவள் அதை முகர்ந்து பார்த்துவிட்டு, ”நல்லா, மணமா இருக்குல்ல” என்றாள். அவள் கால் விரல்களுக்கு நான் நகப்பாலீஷ் போடும்போது பிடாரன் வீடு வந்து சேர்ந்தான். என் தலைமயிரைப் பிடித்து இழுத்துச் செவுளோடு ஓங்கி ஒரு அறை கொடுத்தான்.

”இனிமே உன்னை இங்கிட்டுப் பார்த்தேன், கொன்னு புதைச்சிருவேன்… ஓடுறா” என்றான்.

அவன் அடித்ததைவிட, செல்லியைத் திரும்பப் பார்க்க முடியாது என்பது மனதில் மிகுதியான வலியைத் தந்தது.

பின்பு, சாவடி அருகில் ஒன்றிரண்டு முறை பிடாரன் மகுடி வாசிக்கும்போது செல்லியைப் பார்த்திருக்கிறேன். அவள் என்னை அடையாளம் கண்டதுபோலக் காட்டிக்கொள்ளவே இல்லை. நாங்கள் புது வீடு கட்டி பாண்டியன் நகர் போன பிறகு, சாவடி வழியாகப் பள்ளிக்குப் போய் வர வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

சில வருஷங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மகுடி சத்தம் கேட்டுப் போய்ப் பார்த்தபோது வேறு ஒரு பிடாரன் வாசித்துக்கொண்டிருந்தான். செல்லியின் அய்யாவைக் காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்… எங்கே போனார்கள் என்று அதன் பிறகு தெரிந்துகொள்ள இயலவில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, ஒடுங்கிய நோயாளியாக அதே பிடாரனைக் காண்பது என்னவோபோல இருந்தது. அதைவிடவும் வசீகரமான முகமும் அடர்ந்த கூந்தலும் கொண்டிருந்த அந்தச் சிறுமி செல்லி, இப்படி உருச்சிதைந்துபோன சிற்பம்போல அடையாளம் தெரியாமல் வாடி நிற்பது மனதைப் பிசைந்தது.

அவள் தந்த பரிசோதனைச் சீட்டினைப் பதிவேட்டில் குறிக்கத் துவங்கினேன். அது டாக்டர் ராமநாதன் கொடுத்த பரிசோதனைச் சீட்டு. அவர் மருத்துவமனைக்கு வருகிற அத்தனை நோயாளிகளுக்கும் இதுபோல ரத்தப் பரிசோதனை எழுதித் தந்துவிடுவார். அதில் அவருக்குக் கிடைக்கிற கமிஷன் தொகை மிகப் பெரியது.

இது டாக்டரின் முதல் தந்திரம். பிளட் ரிசல்ட்டை எடுத்துக்கொண்டுபோனால், அதைப் பார்த்துவிட்டு உடனடியாக ஸ்கேன் செய்யச் சொல்வார். அதுவும் அவரது மச்சினன் ஜெயச் சந்திரன் ஸ்கேன் சென்டரில் மட்டுமே எடுக்க வேண்டும். அதில் மட்டும் மாதம் மூன்று லட்சம் வருமானம் வருகிறது என்று சொல்லிக்கொண் டார்கள். ஒரு டாக்டர் இப்படி அநியாயமாக நோயாளிகளை ஏமாற்றிக் காசு பறிக்கிறாரே என்று எனக்கு ஆத்திரம்வரும். இதுபோன்ற நேரங்களில் எதற்காக இந்த லேப்டெக்னீஷியன் படித்தேன் என்று என் மீதும் ஆத்திரமாகவரும். என் எண்ண ஓட்டத்தைக் கலைப்பவளைப் போல செல்லி கேட்டாள்,

”ரத்தம் பரிசோதிக்க எவ்வளவு ரூவா ஆகும்?”

”எல்லாத்துக்கும் சேர்த்து ஆயிரத்து நானூறு ரூவா ஆகும்” என்றேன்.

”அம்புட்டு ஆகுமா? மாத்திரை வேற வாங்கணும்” என மெதுவான குரலில் சொன்னாள்.

”உங்க அய்யாவுக்கு இப்போ என்ன செய்யுது?” எனக் கேட்டேன்.

”அவரு, ராத்திரி ஒரு சொட்டுகூடத் தூங்கவே மாட்டேங்குறாரு. தனக்குத் தானே பேசிட்டே இருக்காரு. ஒரு டம்ளர் கிழே விழந்தாக்கூடப் பயந்துடுறாரு. சாப்பாடு இறங்கலை. இருமல் நிக்க மாட்டேங்குது. பெரியாஸ்பத்திரியில காட்டினேன்… சரியாகலை. அதான் ராமநாதன் டாக்டர்கிட்ட காட்டலாம்னு போனேன்” என் றாள்.

கடந்த காலத்தை நினைவுபடுத்தி அவளிடம் பேசுவதா, வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது. பிடாரன் மழையை வெறித்தபடி நின்றான். அந்தப் பெண் தனது ஆரஞ்சு வண்ண பர்ஸில் இருந்த பணத்தைக் கவனமாக எண்ணினாள். மழையோடு காற்று சேர்ந்துகொண்டது. படிகளில் ஏறி கடையை எட்டிப்பார்த்தது மழை.

”காசு குறைச்சலா இருக்கு… நான் ரெண்டு நாள்ல கொண்டுவந்து காசைக் கட்டிருறேன். நீங்கதான் பெரிய மனசு பண்ணி உதவிசெய்யணும்” எனக் கலக்கத்துடன் சொன்னாள். அந்தக் குரலின் வருத்தம் என்னை அழுத்தியது.

”என்னை ஞாபகம் இருக்கா? சின்ன வயசுல உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்” என்றேன். அவள் ‘இல்லை’ எனத் தலையாட்டினாள்.

”உன் பேரு செல்லி. உங்க அய்யா பாம்புப் பிடாரன்தானே?” எனக் கேட்டேன்.

”ஆமாம்!” என்றபடியே, ”அவரு மகுடி வாசிக் கிறதை விட்டுப் பல வருசமாச்சி” என்றாள்.

”முன்னாடி உங்க வீடு கின்னாரக்குடில இருந்துச்சி. அங்கே நான் வந்திருக்கேன்” என்றேன்.

”பழசு எதுவும் இப்போ நினைப்பில்லே. பழசை நினைச்சா, அழுகை வந்துருது” என்றாள்.

பிடாரனின் மகள்2

”ராமநாதன் டாக்டர்கிட்ட போனா இப்படிக் கண்ட டெஸ்ட் எழுதிச் செலவு இழுத்துவெச்சிருவாரு. ஆஞ்சநேயர் கோயில்கிட்ட ஸ்ரீதரன்னு புது டாக்டர் வந்திருக்காரு. அவரைப் போய்ப் பாக்கலாம்ல” என்றேன்.

”அது எங்கே இருக்குனு எனக்குத் தெரியாது.”

”நான் வேணும்னா கூட வர் றேன்… இருங்க” என்றபோது பிடாரன் தளர்ந்த கண்களுடன் என்னையே பார்த்துக்கொண் டிருந்தார்.

”இருங்க ஒரு ஆட்டோவைப் பிடிக்கிறேன்” என்றேன். ”கொஞ்சம் மழை வெறிச்சதும் போங்க. இப்பம் போய் நனைய வேண்டாம்!” என்றாள் செல்லி.

நான் பெஞ்சில் அமர்ந்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். செல்லி தன் அய்யாவின் வாயில் இருந்து ஒழுகும் எச்சிலை சேலை முனையால் துடைத்தபடியே ”காபி குடிக்கிறீங்களா?” என்றாள். தலையாட்டினார். அவள் காபி வாங்கி வர, மழைக்குள்ளாக வெளியேறினாள்.

பிடாரன் இடுக்கிய கண்களுடன் என்னைப் பார்த்துக் கேட்டார், ”நீ என்கிட்ட மகுடி கத்துக்கிட வந்த பையன் தானே?”

தலையாட்டினேன்.

”பாத்தேயில்ல. மகுடி வாசிச்சவன் பிழைச்ச ஈனப் பிழைப்பை. பாம்பை எல்லாம் தூக்கிக் குடுத்துட்டு, பஞ்சு குடோன்ல மூட்டை தூக்குற வேலை பாக்கப்போயிட்டேன். மிஞ்சினது இந்த சயரோகம் மட்டும்தான்” என்றபடியே இருமத் துவங்கினார்.

”தண்ணி குடிக்கீங்களா?” எனக் கேட்டேன்.

”தண்ணியைக் குடிச்சி எரியுற மனசை அணைக்க முடியாது. மகுடி வித்தையை வெச் சிப் பாம்பைத்தான் அடக்க முடியும். மனுசங் களை ஒண்ணும் செய்ய முடி யாது. தம்பி, நான் மட்டுமில்ல. ஒவ்வொரு மனுசனும் ஒரு பிடாரன்தான். ஆளுக்கு ஒரு பாம்பை ஆடவிட்டு மகுடியை ஊதிக்கிட்டே இருக்கோம். சில நேரம் இவன் பாம்பை ஜெயிக்கிறான். பல நேரம் பாம்பு இவனை தோற்கடிச்சிக் காவு வாங்கிருது. நான் அப்படிக் கடிபட்டவன்.

ஒத்த பொம்பளைப் பிள் ளையைப் பெத்து, அதை ஒழுங்காப் படிக்கவைக்கலை. உருப்படியான இடத்துல கட்டிக்குடுக்க முடியலை. பணம் காசு சேக்குற நினைப்பே வரலை. எல்லாம் பாம்பு கொடுத்த போதை. மகுடி வாசிச்சு பாம்பை அடக்குறோம். அப்போ நாம பெரிய ஆளுன்னு ஒரு உருப்படாத நினைப்பு. நானும் நிம்மதியா வாழல, என் பிள்ளையையும் வாழவிடல. இப்போ கழுத்து வரைக்கும் கடன் வந்து நெரிக்குது” என்றபோது, அவரை அறியாமல் கண்களில் நீர் ததும்பியது.

சில நிமிடங்கள் பேசாமல் தலை குனிந்து உட்கார்ந்துகொண்டார். பிறகு, மூச்சை உள் இழுத்துவிட்டு மெதுவான குரலில் சொன்னார், ”சித்தாள் வேலைக்குப் போற ஒரு பயலுக்கு என் மகளைக் கட்டிக்குடுத்தேன். அவன் பெருங் குடிகாரப் பய. என் மகளைப் போட்டு அடியா அடிச்சி, உருக்கொலைச்சிட்டான். இதுல அவளுக்கு மூணு பொம்பளைப் பிள்ளைக. அவ பாவம், வீட்டைக் காப்பாத்த ஓடியாடி கட்டட வேலை பாத்து உருத்தெரியாமப் போயிட்டா. அந்தக் குடிகார நாயி செத்தும் தொலைஞ்சிருச்சி. மிஞ்சி நிற்கிறது இவளும் மக்களும்தான். குடியிருக்க வீடு இல்லை. கையில காசு பணமில்ல. வாழ்ந்ததுக்கு மிச்சமா இருக் கிறது இத்துப்போன இந்த உடம்பு மட்டும் தான்.”

அவருக்கு ஆறுதல் சொல்லத் தெரியவில்லை. அவரையே பார்த்துக்கொண்டி ருந்தேன். அவர் உடைந்த குரலில் தொடர்ந்தார், ”பாம்பைத் தூக்கிக் குடுத்துட்டாலும், அந்த நினைப்பு மனசைவிட்டுப் போக மாட்டேங்குது. மகுடிச் சத்தம் எனக்குள்ளே கேட்டுக்கிட்டே இருக்கு. சில சமயம் எனக்கே பயமா இருக்கு. கண்ணை மூடிப் படுத்தா நூறு பாம்புங்க ஒண்ணுசேர்ந்து வந்து, ‘வாசிடா… வாசிடா…’னு என்னைப் பாடாப் படுத்தி எடுக்குதுங்க. வயித்துக்குள்ள ஒரு பாம்பு சுருண்டு படுத்துக்கிட்டு நெளியுற மாதிரி இருக்கு. எவ்வளவு பெரிய நாகப் பாம்புக்கும் பயப்படாத ஆளா இருந்த என்னை, சாமானிய மனுசனைக்கூடப் பாத்துப் பயப்படுற ஆளா ஆக்கிருச்சி உலகம்.

நான் கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ளே செத்துக்கிட்டு இருக்கேன். பாம்புகதான் இப் படிச் சாகும். ஏதாவது பாம்பு தானா செத்து நீ பாத்திருக்கியா? பாம்பு சாகுறது லேசான விஷயமில்ல. அது புரியாம, என் மக கோட்டிக்காரி மாதிரி என் னைக் காப்பாத்த அலைஞ்சிட்டுக் கிடக்கா.

ஒரு காலத்துல, என்னைச் சுத்தி ஊரையே உட்காரவெச்சி வேடிக்கை காட்டிக்கிட்டு இருந்தேன். இப்போ, நான் செல்லாக் காசு. நான் செத்தாக்கூட யாரு என்னை நினைச்சிட்டு இருக்கப்போறாங்க” எனச் சொல்லும்போதே அவர் குரல் உடைந்து, அடைத்துக்கொண்டது. தனது கண்களைப் புறங்கையால் துடைத்தபடியே சொன்னார், ”தம்பி, உங்களால முடிஞ்சா எனக்கொரு வேலை வாங்கிக்குடுங்க. பூமிக்குப் பாரமா எத்தனை நாள் மக வீட்ல உட்கார்ந்து சாப்பிடு றது? என்ன வேலை பாக்குறதுனு எனக்கும் தெரியலை. எந்த வேலைக்கும் எனக்குத் தகுதியும் இல்ல. வாழ்நாள் பூரா உருப்படாமலே இருந்துட்டேன். இப்போ அதை நினைச்சி வருத்தப்படுறேன்.”

பதிலற்று அமைதியாக அவரையே பார்த்தேன். தன் சட்டைப் பையில் பீடியைத் தேடியவர் பீடி இல்லை என்பதை உணர்ந்தவராக என்னிடம் கேட்டார். ”ஒரு பீடி வேணும்… கிடைக்குமா?”

நான் பீடி வாங்கி வருவதற்காக வெளியே எழுந்து நடந்தபோது, மழை குறைந்திருந்தது. பெட்டிக் கடையின் முன்வந்து நின்றபோது மனது கனமாக இருந்தது.

இவ்வளவுதான் வாழ்க்கையா? பிடாரன்கள் இல்லாமல் போய்விட்டதற்காக இந்த உலகில் ஒரு வர்கூடக் கவலைப்பட மாட்டார்களா என்ன?

பீடியை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தபோது பிடாரனைக் காணவில்லை. சக லேப் டெக்னீஷி யன் மணிமேகலை சொன்னாள், ”அந்த வயசான ஆளும் பொம்பளையும் திடீர்னு கிளம்பிப்போயிட்டாங்க!”

எங்கே போனார்கள் எனப் புரியாமல், சாலையை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந் தேன். மழை வெறித்து சாலையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஈரம் வழிந்த சாலையில் நடக்கத் தொடங்கியபோது மனதில் வருத்தமாக இருந்தது. ஏனோ தோன்றியது, பாம்புகளின் விசித்திரம் அதோடு பழகிய பிடாரனுக்கும் இருக்கும்தானா?! அப்போது விஷமுள்ள பாம்பின் முன்னால், அது தன்னைக் கொத்தாது என நம்பி கையை நீட்டிய சிறுமி செல்லியின் வசீகர முகம் நினைவில் வந்துபோனது.

– ஜூன் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *