ஏமாற்றம்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 1,935 
 

விடிந்தாற் புதுவருடப் பண்டிகை. இரவு பன்னி ரண்டு மணிக்கே ஊரெல்லாம் வெடிச் சத்தங்கள் கேட் கத் தொடங்கிவிட்டன. தாயினுடைய அரவணைப்பி லிருந்து நழுவிச் சற்று எட்டத் தூங்கிக்கொண்டிருந்தாள், வாசுகி. பக்கத்து வீட்டிற் ‘படீர்’ என்றொரு வெடி. சிறுமி கண்விழித்துக்கொண்டாள். ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தங்கள் அவள் பிஞ்சு உள்ளத்தை வேதனைக் குள்ளாக்கின. படுக்கைக்குப் போகுமுன்பு நடந்த நிகழ்ச்சி அவள் மனதை விட்டு அகலவில்லை……

“அம்மா, மாமா பட்டாசு தந்தார். நாளைக்குச் சோக் காகச் சுடுவேன்!”

“அந்தப்பட்டாசுக் கட்டை இங்கே கொண்டாடி!” என்று பூங்கோதை அவள் கையிலுள்ள பட்டாசுக் கட் டைப் பறிக்கப்போனாள்.

“போம்மா! மாமா எனக்குத்தானே தந்தார்? நீ பாப்பா இல்லையேம்மா, பட்டாசு சுட?”

“அடி. சனியன்! அந்த மாமாட்ட ஒண்ணும் வாங்கக் கூடாதென்றல்லவா சொன்னேன்:”

“ஏம்மா, றோட்டங்கால இருக்கிற பாப்பா அந்த மாமாட்ட பட்டாசு வாங்கிதே?”

“சீ! உனக்கொண்டும் தெரியாது. கொடு அந்தப் பட்டாசுக் கட்டை! அது றோட்டுக்கங்காலயே போகட்டும்!”

“ஐயோ, அம்மா! பட்டாசு!”

புரண்டு ஒரு தரம் தாயை வெறித்துப் பார்த்தாள், வாசுகி. இரண்டு பிஞ்சு விரல்களாலும் புருவங்களைத் தடவிக் ‘கண்களைக்காட்டி கடுங்கோபம்’ போட்டுக்கொண் டாள். அதுகூட அவளுக்கு ஆறுதலளிக்கவில்லை. வீதி யின் மற்றப்பக்கத்தில் வீசப்பட்ட பட்டாசுக்கட்டு அவள் கண் முன் கிடப்பதுபோலிருந்தது. தாய் அந்தப் பட்டா சுக்கட்டைப் பறித்தெறியவேண்டிய காரணத்தை உணர முடியாத பருவம்.

சோம்பல் முறித்துக்கொண்டாள். பட்டாசு வெடிகள் சிறிது நேரம் ஓய்ந்தன. வாசுகி திரும்பவும் நித்திரையி லாழ்ந்தாள்.

“ஐயோ, அம்மா ! பட்டாசு எறியாதே! மாமா கொண்டாந்த பட்டாசு! ம்ம் …… ம்ம் …….! எனக்குப் பட் டாசு வேணும்! எனக்குப் பட்டாசு வேணும்….!”

பூங்கோதை விழித்துக்கொண்டாள். வாசுகி ஆழ்ந்த நித்திரையிற் பிதற்றும் வார்த்தைகள் அவள் நெஞ்சத் தைத் துளைத்தன. தந்தையில்லாத அந்தப் பிஞ்சுக் குழந் தையின் மனம் கைக்கு வந்த பட்டாசு, வெளியில் வீசப் பட்டதை நினைத்து ஏங்குகின்றதை அவளாற் பொறுக்க முடியா திருந்தது. குழந்தையை அணைத்துக் கொண்டாள். ஆனால் அதற்குக் காரண மான கண்ணனைப்பற்றி அவள் மனம் அலைமோதியது ……..

“கணவனுடைய நண்பனாயிருந்தாலும் அவர் இறந்த பின்பு அடிக்கடி என்னுடைய வீட்டிற்கு இவர் வருவதால் ஊரார் என்னென்னமோ பேசிக்கொள்கிறார்களே?”

“கண்ணன் அடிக்கடி உன் வீட்டிற்கு வருவதால் எவ்வளவு உதவியாயிருக்கின்றது!”

“அப்படியானால் பேச்சு என்னவாகும்?”

“ஊரார் வம்பு பேச இருக்கின்றார்களேயொழிய உனக்கு உதவ முன் வருகிறார்களா? தந்தையை இழந் திருக்கும் சிறுமி வாசுகிக்கு ஆறுதல் அளிக்கிறார்களா?”

“கண்ணன் தினமும் எங்கள் வீட்டில் அதிக நேரமா யிருந்து, கதைத்துவிட்டுப் போகின்றாரே? அவருடைய மனத்தில் ஏதாவது வேறு எண்ணம் இருக்குமோ ..?”

“அந்த எண்ணம் உனக்கு எதற்கு? உன் மனம் சுத்த மாயிருக்கிறதா? அதுவே போதும். அவனுக்குச் சிறுமி வாசுகியுடன் செல்லங்கொட்டுவது மகிழ்ச்சி அளிக்கிற தென்றால் நெடுநேரம் இருந்தாலும் அதிற் பிழையில் லையோ”

“ஆனால் ஊரார் அதைத் தவறாக நினைத்தால் ……? அன்று பக்கத்து வீட்டுக்காரர்கள் வாய்கூசாது ஏதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்ட பின்பும் கண்ணன் கொண்டுவரும் பொருள்களை வாசுகி வாங்கும் படி விடுவேனா?”

“சந்தேகம் நிறைந்த எண்ணமுடைய பெரியவர்க காட் போலவா அந்தச் சிறுமியும்? அவளுக்கு இதைப் பற்றி ஒன்றுந்தெரியாதே? அவள் பிஞ்சுமனம் நொந்துவிடுமல்லவா?”

“அவர் குழந்தைக்குச் சாமான்கள் கொண்டு வரும் சாட்டில் தான் இங்கு வருகிறார். அதை நிறுத்திவிட்டால் நெடுக வரமாட்டார்!”

“அதற்காகக் குழந்தையின் மனம் நோகப் பட்டாசுக் கட்டை வாங்கி வீசியது பிழையல்லவா?”

“நான் செய்தது சரியே!”

“குழந்தை பட்டாசு சுட ஆசைப்படுவானே?”

“நாளைக்கு நான் வாங்கிக் கொடுப்பேன்!’

எறியப்பட்ட பட்டாசுக்கட்டை எண்ணியெண்ணி ஏங்கும் தன் குழந்தையில் ஏற்பட்ட இரக்கம்; கணவன் இறந்த பின்பு அடிக்கடி தன் வீட்டிற்கு வந்து போகும் கண்ணனில் ஏற்பட்ட சந்தேகம்; நரம்பில்லாத நாக்கி னால் எப்பக்கமும் வளைந்து எவ்விதமும் பேசிக்கொள்ளும் ஊரார்களின் வதந்திகளினால் ஏற்பட்ட வெறுப்பு; இம் மூன்று உணர்ச்சிகளும் ஒரே நேரத்தில் அவள் மனதில் எழுந்து அலைமோதின. பூங்கோதை புரண்டு படுத்தாள். – வாசுகியை அணைத்திருந்த கை நழுவியது. ஆழ்ந்து உறங்கி விட்டாள்.

படீர்…. படீர்…

தெருக்கோடியின் மறுமுனையிலும் பட்டாசுச் சத்தங் கள் கேட்டன. உறக்கத்திலிருந்த கண்ணன் விழித்துக் கொண்டான். அடுத்த வீட்டுச் சிறுமி தன் தந்தையுடன் தூக்கத்தைக் கவனியாது வெடிசுடும் ஆரவாரம் அவன் கவனத்தை இழுத்தது. அவள் குதூகலத்திற் பிலிற்றும் மழலைச் சொற்கள் அவனை வாசுகியிடம் இழுத்துச் சென் றன.

“அவளுடைய தந்தை இருந்தால் அவளும் இப்படிக் குதூகலமாயிருப்பாளே? இப்பொழுது அவள் தூக்கத் தில்தான் இருப்பாள்” என்று தனக்குள் கூறிக்கொண் டான். தனக்குத் தந்தை இல்லாதபோது தந்தையாக வும், உற்ற நண்பனாகவும் இளம் வயதிலிருந்தே எவ்வ ளவோ உதவிகளெல்லாம் செய்து, காப்பாற்றிய வாசுகி யின் தந்தைக்குக்கண்ணனால் எந்தவிதப்பிரதியுபகாரமும் செய்ய முடியவில்லை. ஆகவே, அவருக்குச் செலுத்தவேண் டிய அன்பு கலந்த நன்றிகளெல்லாம் அவர் மகள் வாசு கிக்குத்தான் அவனாற் செலுத்தமுடிந்தது. காரியாலயத் திலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் வாசுகி யைக் காணாமல், அவளுடைய கொஞ்சும் மழலைச் சொற் களைக் கேட்காமல், அவனாற் செல்லமுடியாது. வாசுகி யைப் பார்ப்பது என்ற ஒரேயொரு நோக்கத்துடன் தின மும் தவறாமல் அவன் பூங்கோதையின் வீட்டிற்குச் செல்வது ஊரார் கண்களால் வேறுவிதமாக நோக்கப்படுவதை அவன் அறியான். அதனாற் பூங்கோதையின் மனத்திலேற் பட்ட கொந்தளிப்பையும் அவனால் அறிய முடியவில்லை.

வாசுகியைப்பற்றி நினைத்த கண்ணனுக்கு அவள் அன்று கேட்ட மரயானை நினைவு வந்தது: ‘காலையில் நேரத் துடனேயே வாசுகியிடம் போகவேண்டும். அவள் புத் தாடை அணிந்தவுடன் கடைக்குக் கொண்டுபோய் மர யானை வாங்கிக்கொடுக்கவேண்டும்’ என எண்ணிக்கொண் டான், கண்ண ன்.

அடுத்த வீட்டில் திரும்பவும் ‘ படீர் ‘ என்றொரு பெரிய வெடிச்சத்தம். வாசுகி விழித்துக் கொண்டாள். திரும்பவும் பட்டாசுக்கட்டின் எண்ணம் அவள் மனத்தில் உதித்தது. இத்தடவை அவள் பிஞ்சு மனம் வேகமாகவே வேலை செய்திருக்க வேண்டும். திடீரென்று படுக்கையை விட்டெழும்பித் தாயை நித்திரையிலிருந்து விழிப்படை யச் செய்திடாது, மெதுவாகப் பதுங்கிக் கொண்டு கத வண்டை சென்றாள். வழக்கமாகத் தாய் கதவு திறப்ப தைக் கவனித்திருந்தவளுக்கு அது சுலபமாகவே இருந் தது.

வெளிக்கதவையுந் திறந்துகொண்டாள்.

நகரசபை விளக்கு வழக்கம்போல் அணைந்தேயிருந்தது. ஒருநாளும் இருட்டில் தனியாக வெளியே வராத வாசுகி ஒரு கணம் தாமதித்தாள்.

பட்டாசுக் கட்டு வீசப்பட்ட திக்கு நன்றாக அவள் மனத்திற் பதிந்துவிட்டது. தத்துநடைபோட்டு வீதியின் அருகை நெருங்கினாள். வீதியின் மறுபக்கத்திற் பட்டாசுக் கட்டுக் கிடக்கின்றதென்ற அசையாத நம்பிக்கையின் பேரில் வீதியைக் கடக்க நடந்தாள்.

நடு வீதியில் வந்துவிட்டாள்.

“ஐயோ … அம்மா !”

– அ.சண்முகதாஸ் – கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

அ.சண்முகதாஸ்: திருகோணமலையைச் சேர்ந்த, இலக்கிய மோகம் மிக்க இவர், கவிதைகள் இயற்றுவதில் மிகத் திறமை மிக்கவர்; ‘ அழைப்பிதழ்’ இவரைச் சிறுகதை எழுதத் தூண்டியதோடு, தமிழ்ச் சங்கத்தின் சிறுகதைப்போட்டியில் மூன்றாவது பரிசையும் தேடிக் கொடுத்தது; திருகோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்க முதலாண்டு மலரில் இவரது கவிதை இடம் பெற்று ளது. பல்கலைக் கழகச்சஞ்சிகைகள் யாவற்றிலும் கவிதை கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவரது மறு பெயர்-“தாசன”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *