கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2015
பார்வையிட்டோர்: 14,205 
 

அன்று காலை தனது கணவன் அப்துல்லாவிற்கு, இஞ்சி தட்டிப்போட்டு சாயா தயாரிக்கும் பொழுதோ, அதற்கடுத்து காலை டிபனாக இடியாப்பமும், ஆட்டுக்கால் பாயாவும் தயார் செய்யும் போதோ, அன்று மாலை செய்திகளில் தான் தலைப்பு செய்தியாக மாறப்போவது தெரியாது தேவிக்கு.

அப்துல்லாவிற்கு அரசாங்க வேலை. பத்து மணிக்கு அலுவலகம் போனால் போதும். அவர்கள் செல்வங்களான காவியன், இலக்கியா இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்ததால் காலை எட்டு மணிக்கே கிளம்பி விடுவார்கள். அலுவலக கேண்டினிலே மதியம் சாப்பாடு சாப்பிட்டு விடுவதால், காலையில் டிபன் மட்டும் பண்ணினால் போதும். முதலில் அவர்களுக்கு டிபனை ரெடி பண்ணி அனுப்பி விட்டு, அப்துல்லாவிற்கு இடியாப்பத்தை பிழிந்து கொண்டிருந்தாள்.

யாத்திரை

அப்துல்லா குளித்து விட்டு வரவும், இடியாப்பம் ஆவி பறக்க ரெடியாக இருந்தது. அவனுக்கு தட்டில் இடியாப்பத்தை பரிமாறிக் கொண்டிருந்தாள்.

“”இங்கப்பாரு தேவி… இன்னைக்கு இடியாப்பம் ரொம்ப சூப்பரா இருக்கு… அப்படியே சாப்டா இன்னும் ரெண்டு போட்டுக்கோங்கிற மாதிரி இருக்கு… அதுவும் இந்த ஆட்டுக்கால் பாயா வைக்கிறதுல உன்னை அடிச்சிக்க ஆளே கிடையாது. எந்த பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போனாக் கூட இவ்வளவு ருசியாக இடியாப்பம் கிடைக்குமாங்கிறது சந்தேகம்தான்… இன்னும் ரெண்டு வை” என்று ரசித்தபடி தலையை ஆட்டியப்படி இடியாப்பைத்தை பிச்சு பாயாவில் புரட்டி வாயில் துணித்துக் கொண்டபடியே அப்துல்லா சொல்ல,

“”போதுமே உங்க பொண்டாட்டி புராணம்… சும்மாவா சொல்லியிருக்காங்க, காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுன்னு… ஏதோ எனக்கு தெரிஞ்ச வரையில செஞ்சு வச்சிருக்கேன்… அதுக்காக இப்படியா ஐஸ் வைக்கிறது… ஆனா ஒண்ணு இப்ப அடிக்கிற கத்திரி வெயிலுக்கு நீங்க வைக்கிற ஐஸ் இதமாத்தான் இருக்கு” என்று அவனை பதிலுக்கு கிண்டல் பண்ணியபடியே இரண்டு இடியாப்பத்தை தட்டில் போட்டு, இரண்டு கரண்டி பாயாவை ஊற்றினாள்.

அதை சாப்பிட்டுவிட்டு, இன்னும் வேண்டும் என்பது போல பார்க்க,

“என்னாச்சு இந்த மனுசனுக்கு வழக்கமாக நாலு இடியாப்பத்துக்கு மேல சாப்பிட மாட்டார். ஆனா இன்னைக்கு இதுவரைக்கும் ஆறு இடியாப்பம் வச்சாச்சி…. இன்னும் வேண்டும் என்பது போல பார்க்கிறாரே… சரி… சரி… அவர் சொன்னதுப்போல இன்னைக்கு இடியாப்பம் ரொம்ப ருசியாருக்கு போலிருக்கு’ என்று நினைத்தவாறு தான் சாப்பிட வைத்திருந்த இடியாப்பத்தையும் அவனுக்கே பரிமாறி விட்டாள்.

சாப்பிட்டு விட்டு அலுவலகத்திற்கு கிளம்பியவன்,

“”தேவி போயிட்டு வர்றேன்…. ஆனா என்னவோ இன்னைக்கு எனக்கு ஆபிசுக்கு போகவே மனசில்லை… உன்னை பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு… நீ இன்னைக்கு எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா?” என்று கண்களில் ஏதோ ஓர் ஏக்கம் பொங்க அவளைப் பார்த்தான்,

“”அய்யோ இன்னைக்கு என்ன காலையிலே இருந்தே இப்படி வழிஞ்சுக்கிட்டு இருக்கீங்க… நம்ப பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய வயசு நமக்கு…. என்னமோ… இப்பதான் கல்யாணம் ஆன புது ஜோடி மாதிரி இப்படி வழியுறீங்க… ஆபிஸிற்கு போங் க… சாயங்காலம் வந்து நிதானாமா எம்மூஞ்சை பாத்து ரசிக்கலாம்” என்று அவனை அலுவலகத்திற்கு விரட்டி விட்டாள்.

அவள் சாப்பிட்டு விட்டு, வீட்டு வேலைகளை முடித்து விட்டு மதியம் என்ன சமைக்கலாம் என பிரிட்ஜில் உள்ள காய்கறிகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அப்துல்லாவிற்கு அலுவலகம் பக்கத்தில் என்பதால், மதியம் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்து விடுவான்.

பிரிட்ஜில் காலி ஃபிளவர், பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு இருந்தது. கத்திரிக்காய், வெண்டக்காய் இருந்தது.

“கத்திரிக்கா சாம்பார் வச்சி, வெண்டக்கா பொறிக்கலாமா?’ என்று நினைக்கும் பொழுதே,

“வேண்டாம்… காலிஃபிளவர், பச்சை பட்டாணி, உருளை கிழங்கு போட்டு குருமா வைச்சி… தக்காளி ரசம் வைத்தால் சொட்டை விட்டுக் கொண்டு சாப்பிடுவான். அதனால் அதையே வைத்து விடலாம்’ என முடிவெடுத்து காலிஃபிளவரில் உள்ள புழுக்களை கொல்வதற்காக, உப்பு கலந்த வெந்நீரில் காலிஃபிளவரை இதழ் இதழாக பிரித்து போட்டுக் கொண்டிருந்தாள்.

தேவியின் மனம் தனக்கும் அப்துல்லாவிற்கும் இடையேயான இன்ப வாழ்வை அசை போட ஆரம்பித்தது.

அப்துல்லாவின் தங்கை ஹசின்பானுவும், தேவியும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் இருந்தே ஒன்றாக படித்ததால் தோழிகள். ஹசின்பானுவை பார்க்க தேவி அடிக்கடி வந்ததால், அவளது அண்ணன் அப்துல்லாவும் அறிமுகமானான். முதலில் சாதாரணமாக தொடங்கிய பழக்கம் நாளைடைவில் தீவிரமான காதலாக மாறியது.

இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. தேவிக்கு ஒரு தலைவலி என்றால் கூட துடிக்கும் ஹசின்பானு, தேவியை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ அவ்வளவு திட்டினாள். அவளது வார்த்தைகள் தேவியின் மனதைச் சுட்டது. ஆனால் அவளது நிலையில் தான் இருந்தாலும் இப்படித்தான் திட்டுவோம் என நினைத்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

அப்துல்லாவின் குடும்பத்திலாவது தேவி மதம் மாறினால் அவர்களது காதலை ஏற்றுக் கொள்வதாக சொன்னார்கள். ஆனால் அப்துல்லா அதை விரும்பவில்லை. மதம் மாறுவது என்பது மனமாற்றமாக இருக்க வேண்டும். ஒருவரை கட்டாயப்படுத்தி மதம் மாறச் சொல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. தேவியை கண்டிப்பாக மதம் மாறச் சொன்னால், இவன் மீதுக் கொண்ட காதலின் காரணமாக மாறியிருப்பாள். ஆனால் அதை தனது காதலுக்கு கேட்கும் விலையாக நினைத்ததால் அவளை கட்டாயப்படுத்த விரும்பவில்லை.

ஆனால் தேவியின் குடும்பத்திலோ இவர்களது காதலை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள வில்லை.

இருவர் குடும்பத்திலும் சம்மதம் இல்லாத போதும், சிறப்பு திருமணப் பதிவுச் சட்டத்தின்படி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்துவிட்டு, சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். அப்துல்லாவிற்கு அரசாங்க வேலை என்பதால், அவர்களது வாழ்க்கைக்குப் பணமும் தடையாக இருக்கவில்லை.

குடும்பத்தைப் பிரிந்திருக்கும் ஏக்கம் இருவர் மனதிலும் இருந்தாலும், அதை ஈடுகட்ட ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் காட்டினார்கள்.

வீட்டில் ஒரு ஷெல்பில் ஒரு பக்கத்தில் மெக்கா, மெதினா படத்தை வைத்திருக்கும் தேவி, இன்னொரு பக்கம் பிள்ளையார், முருகர், அம்மன் படத்தை வைத்து இரண்டையும் சேர்த்தே வணங்குவாள்.

வெள்ளிக்கிழமை ராகுகால பூஜைக்கு தேவி கிளம்பி விடுவாள். ராகுகால பூஜை முடிஞ்சு வெளியே வரும்பொழுது வாசலில் அப்துல்லா வண்டியோடு வெளியே நிற்பான்.

“”வா தேவி… உன்னை வீட்டில் கொண்டு விட்டு விட்டு, நான் ஜூம்மா தொழுகைக்கு போக வேண்டும்” என்பான்.

திருமணமாகி முதன்முறையாக ரமலான் மாதம் வந்தது. முதல் நோன்பு வைக்க வேண்டிய நாள். இதுநாள் வரை தனது வீட்டில் இருந்ததால் ஒரு நோன்பு கூட விடாமல் முப்பது நோன்பையும் அப்துல்லா வைத்து விடுவான். விடியற்காலையிலேயே அவனது அம்மா எழுந்து சமையல் பண்ணி நான்கு மணிக்கு முன்பே சாப்பிட வைத்து விடுவாள். அதன்பிறகு நோன்பு தொடங்குவதற்கான நியத்தை சொல்லி நோன்பு வைத்து விடுவான். பிறகு சாயங்காலம் நோன்பு திறக்கும் பொழுது, பள்ளிவாசலில் நியத் சொல்லி, அங்கே கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு கலந்து மசாலா வாசனையுடன் தரும் நோன்புக் கஞ்சியை, பருப்பு வடையோடு சேர்த்து சாப்பிட்டு, நோன்பு திறந்து, தொழுகை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் பொழுது அம்மா மணக்க, மணக்க சமைத்து வைத்திருப்பாள். அதை சுடச்சுட சாப்பிடுவான்.

ஆனால் திருமணம் முடிந்த பிறகு வரும் முதல் ரம்ஜான் நோன்பு. தேவி மாதமாக வேறு இருக்கிறாள். இப்பொழுது எப்படி நோன்பு வைக்க… என்று மனதில் கவலையுடன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான். பிறகு அவனையும் அறியாமல் தூங்கி விட்டான்.

அதிகாலை மூன்று மணியளவில், தேவி அவனை எழுப்பினாள்.

“” என்னங்க எந்திரிங்க… இன்னைக்கு மொத நோன்பு வைக்கிற நாளு. நோன்பு வைக்க வேண்டாமா… என்னைக் கல்யாணம் பண்ணிட்டு வந்திட்டு நீங்க நோன்பு வைக்காம இருந்தா அந்த பாவம் என்னை வந்து சேராதா?” என்று அவனை எழுப்பி விடவும்,

எழுந்து பார்த்து அசந்து போயிட்டான், சூடாக ஆப்பம், அதற்குத் தொட்டுக் கொள்ள மட்டன் குழம்பு, இடியாப்பம், தேங்காய் பால் என எல்லாம் அவனுக்குப் பிடித்த அயிட்டம்.

“”ஏய் நீதான் சுத்த சைவமாச்சே…. எப்படி மட்டன் குழம்பு வைச்சே?”

“”மட்டன் குழம்பு வைக்கிறது என்ன பெரிய கம்ப சூத்திரமா குருமா கொழம்பு வைக்கிற மாதிரி வைக்கணும். காய்கறிக்கு பதில் மட்டன். அவ்வளவுதான்” என்று சொல்லி விட்டு கலகலவென சிரித்தாள்.

அன்று இரவு நோன்பு திறந்துவிட்டு வீட்டிற்கு வந்தப்பொழுது, அதே மாதிரி சுடச்சுட சமையல் பண்ணி வைத்திருந்தாள். அவன் சாப்பிட்டப்பிறகு அவள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்ததும்தான் தெரிந்தது தேவியும் பகல் முழுவதும் சாப்பிடவில்லை என்பது.

“”ஏன் தேவியும் பகல் முழுக்க சாப்பிடலையா?”

“”ஏங்க நீங்க சாப்பிடாம, இருக்கிறப்ப, எனக்கு மட்டும் எப்படிங்க சாப்பாடு இறங்கும் உங்களுக்காக இந்த முப்பது நாளும் நானும் நோன்பு வைக்கணும்ங்கிற முடிவோடதான் இருக்கேன்”.

“”நீ பட்டினியா இருக்கலாம்… வயித்துல இருக்குதே நம்ம பிள்ளை… அத பட்டினி போடுறது முறையா?”

“”அம்மா… அப்பா பட்டினியா இருக்கிறப்ப… நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன் அதனாலே நானும் பட்டினியா இருந்துக்கிடுதேன்னு நம்ம பிள்ளையும் என்கிட்ட சொல்லிடுச்சுங்க” என்று அவள் சொல்லவும், இவள் நமக்கு மனைவியாக கிடைக்க நாம என்ன புண்ணியம் பண்ணினோமோ… என நினைத்துக் கொண்டான்.

ரம்ஜான் முடியவும், தீபாவளி வந்தது. தீபாவளிக்கு புதுத்துணி எடுத்துக் கொடுத்தான். பலகாரங்கள், இனிப்பு செய்து கொண்டாடினார்கள். ஆனால் அடுத்து பொங்கல் பண்டிகை நெருங்கவும், தேவிக்கு பொங்கல் பண்டிகையை தனது வீட்டில் கொண்டாடுவது போல கொண்டாட வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது.

தேவியின் வீட்டில் தீபாவளியை விட பொங்கலைத்தான் நன்கு கொண்டாடுவார்கள். வீட்டை வெள்ளையடித்து, அனைத்துப் பொருட்களையும், விளக்கி, கழுவி வைத்து, பொங்கல் அன்று காலையிலே எழுந்து வாசலில் பெரிய கோலம் போட்டு, வண்ண வண்ண கோலப்பொடியினால் அதை அலங்கரித்து, அதில் பொங்கக் கட்டி வைத்து, புதுப்பானையில் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் வைக்கும் போது பானையில் பால் பொங்கி வழியும் திசையை வைத்தே அந்த வருடம் எப்படியிருக்கும் என்று தெரிந்துக் கொள்வார்கள். கிழக்குத் திசையில் பால் பொங்கினால் சுபகாரியம், நடக்கும், வடக்கில் பொங்கினால் செல்வம் பெருகும், தெற்கு திசையில் பால் பொங்கினால், சாதாரண வருடம், மேற்குத்திசையில் பொங்குவது நல்லது இல்லை என அவள் அம்மா வடக்குத் திசையில் பால் பொங்குமாறு வடக்குப் பாகம் சற்று இறங்கியிருக்கும்படி பானையை வைப்பாள்.

பொங்கல் பொங்கி, பிறகு வகை வகையா காய்கறிகள் சமைத்து, சாப்பிட்டு விட்டு அக்கம் பக்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, “”பால் பொங்கிச்சா… வயிறு வீங்கிச்சா” என்று சந்தோஷமாக கேட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த வருஷ பொங்கலை எப்படி கொண்டாட என்று தெரியாமல் கணவனிடம் கேட்க யோசித்துக் கொண்டே இருந்தாள் தேவி.

பொங்கலுக்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது வீட்டை மட்டும் வெள்ளையடிக்க வேண்டும் என்று கேட்டாள். அவனும் ஆள் வைத்து வெள்ளையடிக்க ஏற்பாடு பண்ணி விட்டான். புதிதாக குடித்தனம் ஆரம்பித்திருந்ததால் கழுவி வைக்க வேண்டிய பாத்திரங்களும் அதிக அளவில் இல்லை.

மார்கழி மாத கடைசி இரவு. அப்துல்லாவிடம் வாசலில் வைத்து பொங்கல் வைக்க அனுமதி கேட்கத் தயக்கமாக இருந்தது. சரியென்று சொல்லிவிட்டால் பரவாயில்லை. ஒருவேளை மறுத்துவிட்டால், மனசு சங்கடப்படுமே… இதுவரை அவள் கோயிலுக்குப் போவதற்கோ, அல்லது வீட்டில் சாமி கும்பிடவோ தடை சொன்னதில்லை. ஆனால் அது தான் மட்டும் சம்மந்தப்பட்ட விசயம். ஆனால் பொங்கல் அவளது அப்பா, அம்மா இரண்டு பேரும் சேர்ந்துதான் வைப்பார்கள். அம்மா பொங்கலை அடிப்பிடிக்காமல் பதமாக கிளறி, வெல்லம், நெய், முந்திரிபருப்பு என ஒவ்வொன்னறையும் சரியான நேரத்தில் போட்டு, பதமாக வேக வைத்துக் கொண்டிருக்கும் போது, அவளது அப்பா பனை ஓலையின் உதவியால், தீயை எரிய வைத்துக் கொண்டிருப்பார். விறகு வைத்தால் அது பாட்டுக்கு நின்று நிதானமாக எரியும். ஆனால் பனை ஓலை உடனே எரிந்து விடும். எனவே எரிய எரிய பனை ஓலையை, அடுப்பில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் பொங்கலுக்கு பனை ஓலையில் அடுப்பு எரிப்பது அவர்கள் ஊரில் பின்பற்றப்பட்டு வரும் மரபு.

அப்துல்லாவை தன்னுடன் பொங்கல் வைக்க கூப்பிடமுடியுமா என்று நினைத்தவள், சரி நாளைக்கு வாசலில் வைத்து பொங்கல் வைக்க முடியாட்டி என்ன வாசலில் வைத்துதான் பொங்கல் வைக்க வேண்டுமா… என்ன… வீட்டின் உள்ளே அடுப்பில் வைத்து பொங்கல் வைத்துக் கொள்ளலாம் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு தூங்கி விட்டாள். இவள் எழுப்பியதைப் போலவே அதிகாலையில் அப்துல்லா தேவியை எழுப்பினான்.

“”தேவி சீக்கீரம் போய் குளித்து விட்டு, உனக்காக எடுத்து வைச்சிருக்கிற இந்த பட்டுச்சேலையை கட்டிட்டு வா…” என்று அவசரப்படுத்தினான். குளித்து வரவும், அப்படியே வாசலுக்கு வந்துப் பார் என்றான்.

வாசலுக்கு வந்த தேவி திகைத்து விட்டாள். வாசல் சுவர் வெள்ளையடித்து, அதில் காவியில் பட்டையடிக்கப்பட்டு இருந்தது. வாசலில் பெரிய கோலம் போடப்பட்டு, அதில் பொங்கல் வைப்பதற்கு தயாராக பொங்கல் கட்டி, பொங்கல் விடும் பொழுது தீயிடுவதற்கு பனை ஓலையெல்லாம் ரெடியாக இருந்தது. அதைத் தவிர பெரிய வாழையிலையில் படைப்பதற்கு தேவையான காய்கறிகள், சாணிப் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார், அதைத்தவிர பளபளவென தேய்க்ப்பட்டு, எண்ணெய் ஊற்றி திரியிடப்பட்ட குத்துவிளக்கு என எல்லாம் தயார் நிலையில் இருந்தது.

“”ஏங்க இதெல்லாம் எப்போ ரெடி பண்ணீங்க… கோலம் கூட போட்டிருக்கு. உங்களுக்கு கோலமெல்லாம் போடத் தெரியுமா?” என்று கன்னத்தில் கைவைத்தப்படி அதிசயமாய் பார்க்க,

“”கோலம் மட்டும் பக்கத்து வீட்டு அக்காவை ஐஸ் வைச்சி போட வைச்சேன். மீதியெல்லாம் அய்யாவோட ஏற்பாடுதான். எப்படி…?” என்று அவன் கேட்க,

தேவியின் கண்ணீல் கண்ணீர் வந்து விட்டது.

“”ஏய் அசடு… நல்ல நாளும் அதுவுமா, எதுக்கு கண்கலங்குற… இப்ப அய்யா குளிச்சிட்டு வர்றேன்… நாம ரெண்டு பேருமா சேர்ந்து பொங்கல் வைக்கலாம்” என்று குளித்து விட்டு வேட்டி, சட்டையில் அக்மார்க் தமிழனாக வந்தான். அந்த வருடம் பொங்கல் அவள் வாழ்நாளிலே மறக்க முடியாததாக இருந்தது. அதன் பிறகு தேவி நோன்பு வைப்பதும், அப்துல்லா பொங்கல் வைப்பதும் தொடர்ந்தது.

குழந்தைகள் பிறந்த பொழுதும், மதம் சார்பில்லாமல், பையனுக்கு காவியன் என்றும், பெண்ணிற்கு இலக்கியா என்றும் பெயர் வைத்தார்கள். நாம நம்ம மதத்தை பிள்ளைகள் பேரில் திணிக்க வேண்டாம். அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் சரி, அல்லது கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருந்தாலும் சரி, மனித நேயமுள்ளவர்ளாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்து மதத்ததை அவர்களிடம் திணிக்காமல், மனிதத்தை மட்டும் அவர்களிடம் வளர்த்தார்கள். விலகிப் போன சொந்த பந்தமும் கொஞ்சம் ஒட்ட ஆரம்பித்தார்கள்.

காலிங்பெல்லை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டது.

யாராக இருக்கும்… என்று யோசித்தபடியே கதவைத் திறந்தால் அங்கு, அப்துல்லா ஆபிஸ் பியூன் நின்று கொண்டிருந்தான்.

“”என்னப்பா… என்ன விஷயம் அய்யா ஏதாவது விட்டுட்டுப் போயிட்டாரா உன்னை எடுத்துட்டு வரச்சொன்னாரா?” என்று கேட்கும் பொழுது, அவனது முகம் மாறிய விதம், அவன் ஏதோ அதிர்ச்சியான செய்தியை சொல்லப் போகிறான் என்பதை தேவிக்கு விளக்கியது.

“”அது வந்தும்மா… ஆபிஸில் திடீரென்று அய்யா தலை வலிக்குதுன்னு சொன்னாங்க… சொல்லிட்டு இருக்கிறப்ப.. அப்படியே மயங்கி விழுந்துட்டாங்க… உடனே ஆபிஸ் கார்லயே ஏத்தி பக்கத்திலே இருக்கிற ஆஸ்பத்திரிக்கு கொண்டுப் போய் சேத்திருக்கோம்… உங்களையும் கையோடு கூட்டிட்டுப் போலாம்னுதான் வந்தேன். வாசல்லேயே ஆட்டோ ரெடியா இருக்கு… உடனே கிளம்பி வாங்கம்மா…” என்று சொல்லவும், அவளது வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.

“தாயே… ஆதிபராசக்தி… என்வீட்டுக்காரருக்கு ஏதுவும் ஆகியிருக்கக்கூடாது… அவருக்கு ஏதாவது ஒண்ணுன்னா எம்மனசு தாங்காது… அவரு நல்லப்படியா திரும்ப வந்தா உனக்கு இந்த வருஷ திருவிழாவில் மொட்டைப்போட்டு, பூக்குழி எறங்குறேன் தாயே…’ என்று வேண்டியபடி ஆட்டோவில் ஓடிப்போய் ஏறினாள்.

“”கே.எம்.சி ஆஸ்பத்திரிக்கு போப்பா…” என்று சொல்லிவிட்டு பியூனும் ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்தான். ஆட்டோ போய்க் கொண்டு இருந்தது.

“”அம்மா ஆஸ்பத்திரி வந்துவிட்டது. இறங்குங்கம்மா…” என்று பியூன் சொல்லவும், இறங்கி ஆஸ்பத்திரிக்குள் நுழையும் பொழுதே, எதிரே ஸ்டெச்சரில் முகத்தை மூடியபடி கொண்டு வரப்பட்ட அப்துல்லாவின் உடல் அவன் இவ்வலுவலத்தில் இருந்து விடைப்பெற்றதை மற்றவர்களுக்கு சொல்லியது.

திரும்பிவரும்பொழுது, அப்துல்லாவை தனது மடியில் கிடத்தி அவரது முகத்தையே குனிந்து பார்த்துக் கொண்டு வந்தாள் தேவி. வீட்டுக்கு வந்து அப்துல்லாவை இறக்கி வைக்கும் போதுதான், அவரது முகத்தைப் பார்த்தவாறு தேவியும் தனது உயிரை விட்டிருந்தது தெரிய வந்தது.

அன்று மாலை அனைத்து தினசரிகளிலும் அவர்களைப்பற்றிய செய்தி வந்திருந்தது. சாவிலும் இணைப்பிரியாத தம்பதிகள் என்று இரண்டு பேரின் போட்டோவோடு செய்தி வந்திருந்தது.

மரணத்தாலும் பிரிக்க முடியாத அவர்கள் உடல் அருகருகே கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.

அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வந்த இருவருக்கும், அப்பா அம்மா இருவரும் ஓரே நேரத்தில் இறந்தது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் தனது அப்பாவும், அம்மாவும் எவ்வளவு அந்நியோன்யமாக வாழ்ந்தார்கள் என்பது அவர்களுக்கு நன்குத் தெரியுமாததால், இருவரில் ஒருவரை விட்டு ஒருவர் இருக்க விரும்பமாட்டார்கள் என்பதால் ஒன்றாகவே உயிர் பிரிந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை என்பது போல இருந்தார்கள்.

அக்கப்பக்கத்தில் உள்ளவர்கள்தான், காவியனிடம் கேட்டு யார் யாருக்கு தகவல் சொல்ல வேண்டுமென்று கேட்டு தகவல் சொல்ல ஆரம்பித்தார்கள்.

சொந்த பந்தங்கள் எல்லாரும் வர ஆரம்பித்துவிட்டார்கள். அப்துல்லா ஓர் உண்மையான முஸ்லிமாக இருந்ததால் அவனது இறுதிசடங்கு இஸ்லாமிய முறைப்படிதான் நடக்கவேண்டும். ஆனால் தேவி தங்களது மார்க்கத்தைப் பின்பற்றததால், அப்துல்லாவோடு அவளை அடக்கம் பண்ண அப்துல்லாவின் உறவினர்கள் விரும்பவில்லை.

தேவியின் உறவினர்களும், தேவி இந்துப் பெண். இந்துமுறைப்படி அவளை எரிக்கத்தான் செய்ய வேண்டும். அப்துல்லாவை மணந்தாலும் கடைசி வரை அவள் இந்துவாகத்தான் இருந்தாள். எனவே அப்துல்லாவை வேண்டுமானால் அடக்கம் பண்ணுங்கள். ஆனால் தேவியை எங்கள் முறைப்படி எரிக்கத்தான் செய்ய வேண்டும் என்றார்கள்.

அதன் பிறகு அனைவரும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அப்துல்லாவை முஸ்லிம் முறைப்படி அடக்க செய்ய வேண்டும். தேவியை இந்து முறைப்படி எரிக்க வேண்டும் என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

காவியனுக்கும், இலக்கியாவிற்கும் இந்த முடிவில் சம்மதமில்லை. இருவரும் ஒருநாள் கூட பிரிந்து பார்த்தில்லை. வாழும் போது அவர்களுக்கு இடையில் மதம் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. இறந்த பிறகு அவர்களை மதம் பிரிக்க வேண்டுமா எரித்தால் இருவரையும் ஒன்றாக எரிக்க வேண்டும், புதைத்தால் இருவரையும் ஒன்றாக புதைக்க வேண்டும். வாழ்வில் இணைபிரியாமல் இருந்த அவர்களை சாவில் பிரிக்க வேண்டாம் என நினைத்தார்கள். ஆனால் உறவினர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

“”இதப்பாருங்கப்பா… ஒவ்வொருவருக்கும் ஆயிரம் வேலை இருக்கு… நேரம் போயிக்கிட்டே இருக்கு… சீக்கிரம் ஒரு முடிவெடுங்க… என்ன பண்ணலாம்” என்று காவியனையும், இலக்கியாவையும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இவர்களுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. இனியும் நம்மை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள். ஏதாவது ஒரு முடிவு எடுத்தே தீரவேண்டும். என்ன பண்ணலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே, வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதில் இருந்து சிலபேர் இறங்கினார்கள்.

“”இது அப்துல்லா வீடுதானே…?”

“”ஆமா சார் என்ன விஷயம்?”

“”நாங்க மருத்துவ கல்லூரியில் இருந்து வர்றோம். இவங்க கண் ஆஸ்பத்திரில் இருந்து வர்றாங்க… அப்துல்லாவும், அவங்க மனைவியும், அவங்க இறந்த பிறகு அவங்க கண்களைத் தானம் பண்ணவும், உடல் தானம் பண்ணவும் எழுதி வைச்சிருக்காங்க… அவங்க இறந்து போனதா இப்பதான் அவங்க நண்பர் எங்களுக்கு போன் பண்ணினார்… அதனால் அவங்க உடம்பை எடுத்துட்டுப் போலாம்னு வந்தோம்” என்று சொல்லவும், காவியனுக்கும், இலக்கியாவிற்கும் நிம்மதியா மூச்சு விட முடிந்தது.

இனி எந்தமுறைப்படி இறுதி சடங்கு பண்ணவேண்டும் என்ற குழப்பமில்லை. தாங்கள் இறந்த பிறகு இந்த மாதிரி பிரச்னைகள் வரும் என பார்த்துதான் அவர்கள் புத்திசாலித்தனமாக, அதேசமயம் மற்றவர்களுக்கும் உபயோகப்படும்படி ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட இருவரின் உடலும் அருகருகே கிடத்தப்பட்டது. இனி மெடிக்கல் காலேஜியிலும், ஒன்றாகத்தான் இருக்கப்போகிறார்கள். ஆம்புலன்ஸ் கிளம்பி விட்டது. வாழும் போது மட்டுமல்ல இறந்த பிறகும் மதம் தங்களைப் பிரிக்காமல் ஒற்றுமையுடன் தங்கள் இறுதியாத்திரையை தொடங்கிய அப்துல்லாவையும், தேவியையும், காவியன், இலக்கியா மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் கண்ணீல் நீர்மல்க பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

– எஸ்.செல்வசுந்தரி (நவம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *