நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2024
பார்வையிட்டோர்: 3,052 
 
 

(1988ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

ராமைச் சந்திக்கும்வரை அவள் மனதிலிருந்த உல்லாசமான எண்ணங்கள் சற்று முன்னர் பொசுக்கென்று சிதைந்து போனதில், அவள் மனத்தளவில் மிகவும் தளர்ந்து போயிருந்தாலும் அதைத் தாங்க முடியாத நிலையில் கோபக் கனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தாள். 

நாய்க்குப் பசியெடுத்ததாலோ என்னவோ, அது அடிக்கடி அடுக்களை வாசல்வரை வந்து வாலை ஆட்டி, நாக்கை நீட்டி மெலிதாக ஒலி எழுப்பிவிட்டுச் சென்றது. 

ருக்மணி இருமியவாறே புரண்டு படுத்துக் கொண்டாள். சாந்திக்கு என்ன செய்வதென்றே தெரியாமலிருந்தது. மெல்ல எட்டி ஜன்னலினூடாகக் கிணற்றடியை அவதானித்தாள். ராம் குளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 

‘இப்ப ..எப்பிடி அங்கை போய் தண்ணி அள்ளுறது?’ அவள் யோசனையோடும் சினத்தோடும் தலையைச் சொறிந்து கொண்டாள். நேரம் போய்க் கொண்டிருந்தது! மேலும் தாமதிக்காமல் வாளியை எடுத்துக்கொண்டு கிணற்றடியை நோக்கி நடந்தாள். ராம் தன் உடல் பூரா வெளிநாட்டுச் சவர்க்காரத்தைப் பூசிவிட்டுக் கழுவிக் கொண்டிருந்தான். அவனை அருகில் கண்டவுடன் மீண்டும் அவள் இதயம் பட பட வென அடித்துக்கொண்டது கால்கள் பின்னிக்கொண்டன. சில வினாடிகள் தயங்கிய அவள், கிணற்றடிப் படியிலே பொத்தென்று வாளியைச் சத்தமாக வைத்தாள். சட்டென்று நிமிர்ந்து பார்த்த ராம், அவசரமாக விலகி நின்று கொண்டு, முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். 

இந்தத் தடவையாவது அவன் ஏதாவது கதைப்பான் எனத் தன்னையறியாமலே எதிர்பார்த்திருந்த அவளுக்கு மீண்டும் தாங்கமுடியாத ஏமாற்றமாக இருந்தது. ஒருவித ஆதங்கத்தோடு அவனை நோக்கினாள். அவனது முகம் மறுபக்கம் திரும்பியிருந்ததால் அதில் தோன்றும் உணர்ச்சிகளை அவளால் ஊகிக்க முடியாமலிருந்தது. தளர்ந்துபோன அவள் தன் முகமாற்றங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள, பற்களால் உதடுகளை அழுத்திக்கொண்டு ‘மளமள’ வென்று தண்ணீரை அள்ளி வாளிக்குள் நிரப்பிவிட்டு, வாளியைத் தூக்கிக்கொண்டு நடக்கவாரம்பித்தாள். வாளித்தண்ணீர் கைக்குக் கனமாக இருந்தது. ராமின் அலட்சியம் மனதிற்குக் கனமாக இருந்தது. ஒரு கையால் பாவாடையை விலத்திப் பிடித்தவாறே நடந்துகொண்டிருந்தவள், தண்ணீர் வாய்க்காலைக் கடக்கும்பொழுது தடுமாறிச் சரிந்தாள். தண்ணீர் வாளி படீர் என்ற ஓசையுடன் சரிந்து, தண்ணீரை அப்பகுதி முழுவதும் பரப்பி விட்டது. நிலத்தோடு அடிபட்ட அவளின் முழங்கைப்பகுதி வலியைக் கொடுத்தது! அவள் எழ முடியாமல் முழங்கையைத் திருப்பிப் பார்த்தாள். இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. சறுக்கிப்போன கால்களை இழுத்துக்கொண்டு எழும்ப எத்தனித்தவளை இரு கரங்கள் பற்றித் தூக்கிவிட்டன! அவள் கலங்கிய கண்களோடு திரும்பிப்பார்த்தாள். எதிரில் ராம் ஈரத்தோடு நின்றிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாக, மகிழ்ச்சியாக, வெட்கமாக…! சட்டென்று தலையைக் குனிந்துகொண்டாள். 

சரிந்து கிடந்த வாளியைத் தூக்கிய ராம், தண்ணீரை நிரப்பிவிட்டான். மீண்டும் தண்ணீர்வாளியைத் தூக்கப் போனவளைத் தடுத்த ராம், 

“இன்னொரு தடவை விழுந்தெழும்பப் போறியா?”- சாதாரணமாகக் கேட்டான். 

முதல் தடவையாக, அவன் வாய் திறந்து அவளோடு பேசியது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் புன்னகைக்க மறந்து, அவனையே புதுமையாகப் பார்த்தவாறு நின்றிருந்தாள். 

“தண்ணி வாளியை நான் தூக்கிக்கொண்டு வாறன்; நீ போ” என்றவன் துவாயினால் உடலைத் துவட்டத் தொடங்கினான். அவளுக்கு எதுவுமே பேசுவதற்கு நா எழ வில்லை. அவள் மெளனமாகச் சமையலறைக்குத் திரும்பினாள். 

‘ராமத்தான் நல்லாவே மாறீட்டார்! எவ்வளவு மென்மையாய்……அமைதியாய்க் கதைக்கிறார். ஆனால் .. எனக்கிருக்கிற ஏக்கமும் ஆவலும் அவருக்கிருக்கிற மாதிரித் தெரியேல்லையே? கசற் குடுத்தனுப்பினவர் என்னை முதன் முதலாய்ப் பார்த்தபோதும் ஏன் எதுவுமே பேசாமலிருந்தார்? இப்ப… கொஞ்சமும் சலனப்படாமல் என்னைத் தொட்டுத் தூக்கிவிட்டு… மிகவும் சாதாரணமாக…! அவளால் ராமைப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. 

இடையிலே துவாயைச் சுற்றியபடி ஒரு கையில் சவர்க்காரப் பெட்டியும் மறுகையில் தண்ணீர் வாளியுமாக வந்த ராம், தண்ணீர் வாளியைச் சமையலறைக்குள் வைத்து விட்டு, மெளனமாக வெளியேறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டான். சாந்திக்குக் குழப்பமாக இருந்தது. 

‘சுகந்தியைத் தானாகவே கூப்பிட்டுக் கதைத்தவர் ஏன் எனக்கு முன்னால மட்டும் இவ்வளவு அமைதியாய்…? முந்தியெல்லாம் எந்த நேரமும் என்னோடை சண்டை போட்டுக்கொண்டிருந்த இவர், இப்பமட்டும் ஏனிப்படி…?’ 

அவள் கறிகளைச் சமைத்து முடித்துவிட்டு, வியர்வை வழியும் முகத்தோடு வெளியில் வந்தாள். ருக்மணி அடித்துப் போட்டது மாதிரி நித்திரையாகக் கிடந்தாள். 

“மாமி…” மெதுவாகத் தட்டியெழுப்பினாள். 

“நான் சமைச்சுப்போட்டன்; எழும்புங்கோ மாமி… ராமத்தான் காலமையும் சாப்பிடயில்லையெண்டு சொன்னியள் .. அவருக்கும் சாப்பாட்டைக் குடுத்து, நீங்களும் சாப்பிடுங்கோ. மாமா அங்காலை….. பரஞ்சோதி வாத்தியார் வீட்டை போறனெண்டு சொல்லிப்போட்டுப் போட்டார்”. 

சாந்தி புறப்பட ஆயத்தமானாள். வழுகிய முந்தானையை இழுத்து மூடிக்கொண்டு எழுந்த ருக்மணி, 

“நல்ல பிள்ளை! இவ்வளவு சுறுக்காய் சமைத்துப் போட்டாய்… இன்னும் பன்னிரண்டு மணிகூட ஆகேல்லைப் போல கிடக்குது… நானும் இதிலையே நல்ல நித்திரையாகிப் போனன் சமையலுக்குக் கொஞ்சநஞ்ச உதவி கூடச் செய்து தரேல்லை…” ருக்மணி தன்னைத்தானே நொந்துகொண்டாள். 

“அதுக்கென்ன மாமி…? உங்களுக்கு ஏலாத நேரத்தில் இந்த உதவியைக்கூட செய்யா விட்டால். பிறகென்ன?” சாந்தி மாமியைத் தேற்றிவிட்டு, 

“மாமி…அப்ப நான் போயிட்டு வரட்டே?” என்றவாறு திரும்பினாள். 

“ஏன் ஏன் என்ன அவசரம்?  நிண்டு…மத்தியானம் சாப்பிட்டிட்டுப் போவன். இவ்வளவு நேரமும். அலுவல் செய்துபோட்டு பசியோடை போகப் போறியே மேனை?” ருக்மணி அவசரமாகத் தடுத்தாள். 

“இல்லை மாமி.. நான் வீட்டைபோய் ஆறுதலாய்ச் சாப்பிடுறன்” அவள் ‘விறு விறு’ என்று கேற் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவளுக்குத் தொடர்ந்தும் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. காலையில் அங்கு வந்த பொழுதிருந்த ஆவலும் எதிர்பார்ப்பும், ஒருவித ஏமாற்றத்தினால் தானாகவே அவளுள் அடங்கிப் போயிருந்தன. மனம் வெறுமையாக இருந்தது! அவள் முன் வாசலைக் கடந்த பொழுது எதிரில் ராம் நின்றிருந்தான். திடுக்குற்ற சாந்தி சலனங்களற்று நிமிர்ந்து நோக்கினாள். 

‘அவன் அறையின் பின்புறமாக வெளியேறி, வீட்டின் முன்பகுதிக்கு வந்திருக்க வேண்டும்’ அவள் தனக்குள் ஊகித்தவாறே சற்று விலகினாள். 

“சாந்தி சாப்பிட்டிட்டுப் போவன் ” அவன் அமைதியாகக் கெஞ்சலாகக் கேட்டான். அவள் புதிராக மீண்டும் நோக்கினாள். 

”உனக்கு…. என்னில் கோபம் போலை…” 

அவள் தலையைக் குனிந்துகொண்டாள். அவளுக்கு இப்பொழுது அவனுடன் கதைக்க வேண்டுமென்ற ஆவலும் துடிப்பும் மீண்டும் கிளர்ந்தது. இருந்தாலும், இவனது இந்த நடவடிக்கைகள் இவனது வெறும் மரியாதைக்காக மட்டும் இருக்கலாம் என்ற எண்ணத்தில் தனது உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள். 

“என்ன யோசிக்கிறாய்?… நீ சாப்பிடாமல் போக நான் விடமாட்டன்” ராம் சட்டென்று அவளின் கைகளைப் பற்றி மெதுவாக உள்ளே திருப்பி விட்டான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் அதை எதிர்பார்க்கவில்லை. அவள் கரங்கள் நடுங்கின. 

“ரா… மத்தான்…!” அவள் அதிசயமாக அவனைப் பார்த்தாள். 

“என்னை உனக்குப் பிடிக்கயில்லை எண்டால் சொல்லு, நான் உன்னைச் சாப்பிடச்சொல்லிக் கஷ்டப்படுத்த யில்லை…” ராம் அமைதியாக, அதே வேளை அழுத்தமாகவும் கூறினான். அவளுக்கு அவனது அந்த வேண்டுதல் பிடித்தது. 

“சாப்பிட்டுட்டுப் போறன் ..” அவள் ஒருவித நாணத்தோடு உதடுகளை விரல்களால் அழுத்திக்கொண்டாள். 

”போய்… முகத்தைக் கழுவிக்கொண்டு வா..” அவன் அன்போடு கூறினான். அவள் ஆச்சரியம் மாறாமலே புன்னகையோடு கிணற்றடியை நோக்கி விரைந்தாள். 

“அம்மா…சாந்தி சாப்பிடாமல் போக, பேசாமல் விட்டிட்டு இருக்கிறியள்? நான் அவளைப் போகவிடேல்லை” ராம் தன் தாயாரிடம் கூறுவது சாந்தியின் காதுகளில் விழுந்தபோது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

சாந்தி முகத்தைத் துடைத்து பவுடரைப் பூசிக்கொண்டு வந்ததும் “அம்மா ரெண்டு பேருக்கும் சாப்பாட்டைப் போடுங்கோவன்” என்று ராம் கத்தினான் 

“வேண்டாம் மாமி… நீங்களும் வந்திருங்கோ நானே சாப்பாட்டைப் போடுறன்” சாந்தி அவசரமாகக் கூறினாள். 

”ஐயோ மேனை… எனக்குப் பசியே இல்லை நீங்கள் சாப்பிடுங்கோ! நான்.. இந்த எண்ணையைப் பூசிப்போட்டு தோய்த்துப்போட்ட உடுப்புகளை மடிச்சு வைச்சிட்டு வாறன்.” ருக்மணி கூறியவாறே நாரியைப் பிடித்துக்கொண்டு மெல்ல அறைக்குள் நுழைந்துகொண்டாள். 

சாந்தி ராமிற்கும் தனக்குமாகச் சாப்பாட்டைப் பரிமாறிவிட்டு, கதிரையில் அமர்ந்தாள். ராம் சாப்பிடத் தொடங்கியிருந்தான். ராம் அமர்ந்திருக்கும் கதிரைக்கு மிக அருகாக இவளுடைய கதிரையும் இருந்ததால், மெல்ல எழுந்து கதிரையைச் சற்றே நகர்த்தி, அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள். ராம் மெலிதாகப் புன்னகை சிந்திக்கொண்டான். சில நிமிடங்கள் மௌனமாகவே கரைந்தன. 

“சாந்தி… நீ நல்லா மாறீட்டாய்…” ராம் தான் கூறினான். 

“நீங்களும் தான்…” சாந்தி புன்னகையோடு கூறினாள்.

“ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?”

“இவ்வளவு நேரமாய் என்னைப்பார்த்தும் பார்க்காத மாதிரி… பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு…” அவள் வேதனையோடு கூறினாள். 

“அது உனக்குக் கோபமா…..” 

”கோபம் இல்லாமல்…” 

“அப்ப… ஏன் நீயாக ஆவது என்னோட கதைக்காமல் இருந்தாய்?” 

“நீங்கள் பேசாமல் இருக்க… நானெப்படி…?”

“அதுதான் சொல்லுறன்! நீ நல்லாவே மாறீட்டாய்”

“நானும் அதைத்தான் சொல்லுறன்… நீங்களும் நல்லாகவே மாறீட்டீங்கள்” 

அவன் சட்டென்று வாய்விட்டுச் சிரித்தான். அவளும் தொடர்ந்து சிரித்தாள். அவனுக்குப் புரைக்கேறியது. சட்டென்று இருக்கையை விட்டெழுந்த அவள், 

“இந்தாங்கோ… தண்ணியைக் குடியுங்கோ” அவசரமாகத் தண்ணீர்க் கிளாசை நீட்டினாள். தண்ணீரை வாங்கிக் குடித்தவன், கனிவோடு அவளைப் பார்த்தான். வினாடிகள் சில கரைய, பார்வையின் வீரியம் தாங்காமல் தலை குனிந்த அவள் தொடர்ந்து சாப்பிடத் தொடங்கினாள். 

“சாந்தி, நான் இவ்வளவு நேரமும் அந்தமாதிரி நடந்துகொண்டது எனக்கே சிரிப்பாய் இருக்குது. எல்லாம் வேணுமெண்டு தான்” 

அவள் சட்டென்று ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள். 

“நீயாகவே என்னோடை கதைக்கிறதுக்கு ஆசைப்படுகிறியா எண்டு ரெஸ்ற் பண்ணத்தான்! கிணற்றடியில் நின்ற போது என்ரை முகத்தைப் பாத்தியா?” 

“முகத்தை… தீக்கோழி மாதிரி திருப்பி வைத்திருந்தால் நானெப்பிடிப் பார்க்கிறது”. 

“எனக்கு ஒரே சிரிப்பாகவும், அந்தரமாகவும், இருந்தது. அது தான் அப்பிடி முகத்தைத் திருப்பினான் – இப்ப என்ன சொல்லுறாய்?” 

“நீங்கள்… இன்னும் மாறவேயில்லை” அவள் சிரித்தாள்.

“நீ… மாறீட்டாய்”

“எப்படி?” 

“அழகிலை… நிறத்திலை… சுபாவத்திலை!…”

“அதெப்பிடி?’ 

“நல்லாய் வளர்ந்து நல்லவடிவாய் வந்திட்டாய். கறுப்பிலையும் ஜொலிக்கிறாய் ! முந்தியிருந்த வாயெல்லாம் குறைஞ்சு அமைதியாய் மாறீட்டாய்” ராம் கூறியபொழுது அவளுக்குச் சிரிப்பு வந்தது. அப்படியே நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருக்கவேண்டும் போலிருந்தது. 

“நேற்று… கசற் கிடைச்சுதா?” அவன் தான் கேட்டான். 

“கிடைச்சுது” அவள் நாணத்தால் முகம் சிவந்தாள்.

“நீ… இப்பவெல்லாம் அடிக்கடி வெட்கப்படுகிறாய்…” ராம் புன்னகையோடு கூறியபொழுது அவளுக்கும் சிரிப்பு வந்தது. 

“சாந்தி, நான் உனக்கெண்டு நிறைய சாறி துணிகள் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறன் பார்க்கப் போறியா?” 

“ஏன்… எனக்கு மட்டும்…?”

“என்ன? கதைவிடுறியா? நான் இங்கை வாறதுக்கு ஒரு கிழமைக்கு முதல் அம்மா கடிதம் போட்டிருந்தவ. அதிலை எல்லாம் விபரமாய் எழுதியிருந்தா” என்றவன் தண்ணீரைக் குடித்துவிட்டு “உனக்கு… இதில சம்மதமா?” என ஆவலாகக் கேட்டான். அவளுக்கு வெட்கமாக இருந்தது. 

“உங்களுக்கு….” 

“எனக்குச் சம்மதமில்லாட்டி உனக்கெண்டு சாறிஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு வருவனே?”

சாந்தி மகிழ்ச்சி பொங்க அவனை நோக்கினாள், 

“எனக்குச் சம்மதமில்லாட்டில்…இவ்வளவு ஆவலோடை இங்கை வந்து இண்டைக்குச் சமைத்திருப்பனே?” இருவரும் அடக்கமுடியாமல் சிரித்தபொழுது வாசலில் காலரவம் கேட்டது. சட்டென்று அவர்கள் அமைதியானார்கள். ருக்மணி தான் வந்து நின்றாள். 

“சாந்தி, வடிவாய்ப் போட்டுச் சாப்பிடணை; ராம், நீயும் வடிவாய் சாப்பிடு; உனக்கு மச்சமொண்டும் இல்லையெண்டு சாப்பாடு இறங்குதோ தெரியேல்லை. நாளைக்கும் ஊரடங்காம் ; இனிமேல் நாளையிண்டைக்குத்தான் ஏதும் இறைச்சியோ மீனோ உன்ரை விருப்பத்துக்கு காய்ச்சலாம்” ருக்மணி. மனவருத்தத்தோடு கூறியதும், 

“இல்லையம்மா… அங்கை நித்தமும் மச்சம்தானே. எனக்கு இங்கை மரக்கறி சாப்பிடத்தான் விருப்பமாயிருக்கு. சாந்தியின்ரை சமையல் என்னை எழும்பவே விடாதாம்” ராம் கண்களைச் சிமிட்டியபொழுது, ருக்மணி சிரித்தவாறே, 

“ஓ… அவள் எப்பிடிச் சமைத்தாலும் நீ சாப்பிட்டுத் தான் ஆகவேணுமடா” பகிடியாகக் கூறிவிட்டு, மெல்ல வெளியே சென்று தன் வேலைகளில் மூழ்கிக் கொண்டாள். 

“ச்… சும்மாயிருங்கோ மாமிக்கு முன்னால இப்பிடிச் சொல்லுறதே?” சாந்தி வெட்கத்தோடு கண்டித்தாள். 

“என்னது… மாமிக்கு முன்னால நான் கட்டியும் அணைப்பன் தெரியுமே?”

“சீ…! என்ன கதைக்கிறீங்கள் ; ஆம்பிளைப் புத்தியைக் காட்டுறீங்கள் பாத்தீங்களே…” சாந்தி நாணத்தோடு சிரித்தவாறே எழுந்து கொண்டாள். 

அத்தியாயம்-6

செல்லநாதர் கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே வருவது தெரிந்தது. 

“நான் போகப் போறன்…” சாந்தி புறப்பட ஆயத்தமானாள். 

“ஏய்… அந்த சாறிஸ், துணிகள்… ஒண்டையுமே பார்க்காமல் போகப்போறியே? கொஞ்சம் நில்லன்” ராம் அவசரமாகக் கேட்டவாறே, அறைக்குள் ஓடிச்சென்று எடுத்து வந்த சொக்லேற் பக்கற்றை அவளின் கைகளில் மெதுவாகத் திணித்தான். 

“அங்கை.. மாமா வந்திட்டார், இப்ப… துணிகளெல்லாம் பார்த்துக்கொண்டு நிக்கிறது கஷ்டமாயிருக்கும். பின்னேரம் எங்கட வீட்டை வாங்கோவன். வாறபோது அதுகளையும் கொண்டு வந்தீங்களெண்டால் அம்மா அப்பாவுக்கும் சந்தோசமாயிருக்கும்” சாந்தி செல்லநாதரின் காதில் விழாதவாறு மெதுவாகக் கூறினாள். 

“ம்… அதுவும் நல்ல ஐடியாதான். பின்னேரம் வீட்டில் நிப்பாய்தானே?” 

“பின்னை. நிக்காமல்…”

சாந்தி அவசரமாக விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள். 

“என்ன சாந்தி.. சாப்பிடாமல் போறாய் போலை?” செல்லநாதர் உள்ளே நுழைந்தவாறே திரும்பிக் கேட்ட போது, 

“இல்லை. மாமா; வடிவாய் சாப்பிட்டிட்டுத்தான் போறன். மாமி… பின் வளவுக்கை நிக்கிறா; மாமியிட்டையும் சொல்லிவிடுங்கோ மாமா, நான் போட்டு வாறன்” என்றவாறே சாந்தி கேற்றைத் திறந்துகொண்டு வெளியில் இறங்கினாள். அவளது வீட்டுக் கேற் வாயிலில் சுகந்தி நின்று பார்ப்பது தெரிந்தது. அவள் வீட்டை அண்மித்ததும், 

“என்னக்கா?… காலையில் வேளையோட வெளிக்கிட்ட னீங்களாம்; இன்னும் காணயில்லை எண்டு… அம்மா என்னைப் போய் ஒருக்கால் பார்த்து வரச்சொல்லி கரைச்சல் பிடிச்சுக்கொண்டு நிக்கிறா. நானும் கேற்றடிக்கு வர, நீங்களும் வாறியள்…” சுகந்தி தன் கால்களிற்கு வேலையில்லை யென்ற மகிழ்ச்சியோடு கூறியதும், 

“ஏன்… மாமா வீடு தானே; நானென்ன… அதுக்கிடையில துலைஞ்சு போடுவனே?”சாந்தி ஒருவித அதிருப்தியோடு நெற்றியைச் சுளித்தவாறே கூறிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள். 

“அப்பிடித்தான் நானும் சொல்ல.. அதுக்கு அம்மா சொல்றா… முன்னையெண்டால் எவ்வளவு நேரமும் அங்கை நிக்கலாமாம்; ஆனால் இப்பவெண்டால், ராமத்தான் வந்து நிக்கிற படியாலை … கல்யாணத்துக்கு முதல் அங்கை போய் கனநேரம் நிக்கிறது வடிவில்லையாம்” சுகந்தி கூறிமுடிக்க முன், 

“ராமத்தான் நிண்டால் எனக்கென்ன? நான் மத்தியானச் சமையல் வேலையெல்லாம் செய்து குடுத்திட்டு வாறன். மாமி பாவம்! அவவாலை ஒண்டுமே ஏலாது!”சாந்தி சிவகாமிக்கும் கேட்கும் வகையில் சற்று உரக்கக் கூறிய வாறே அறைக்குள் நுழைந்துகொண்டாள். வெளியில் சிவராசரும் சிவகாமியும் ஏதோ முணுமுணுப்பது கேட்டது. அவள் கையிலிருந்த சொக்லேற்றை சாப்பிட மனம் வராமல் ஆசையோடு பார்த்துக் கொண்டாள். பிறகு, சுகந்திக்கும் கொடுத்துச் சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் மேசை லாச்சியினுள் கவனமாக வைத்து மூடிக்கொண்டாள். 

“சாந்தி… மாமிக்கு இப்ப நாரிப் பிடிப்பு எப்பிடியாம்?” விறாந்தாவில் சுவரோடு சாய்ந்தமர்ந்தவாறே வெற்றிலையைக் குதப்பிக்கொண்டிருந்த சிவகாமி சத்தமாக வினாவினாள்.

“அவ… பரியாரியாரட்டைப் போய் எண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து போட்டிருக்கிறா; அதோட ஏதோ பத்திய மருந்தும் சாப்பிடுறா” சாந்தி அறைக்குள் நின்றவாறே பதில் கொடுத்தாள். 

“ராம்… வீட்டில்தான் நிக்கிறானோ?” சிவகாமி மீண்டும் கேள்விக்கணை தொடுத்தாள். 

“ஓம்…” 

“என்னவாம்… என்ன கதைச்சவன்?” 

“ஒண்டும் கதைக்கயில்லை” 

“அப்பிடியோ ?” சிவகாமி ஒருவித ஏமாற்றத்தோடு ஆச்சரியப்படுவது தெரிந்தது. சாந்திக்குச் சிரிப்பு வந்தது. அவள் வெளியே வந்தபோது நல்ல வெய்யில் எறித்துக் கொண்டிருந்தது. அவளுக்குக் குளிக்க வேண்டும் போல் இருந்ததால் உடைகளுடன் கிணற்றடிக்குப் புறப்பட்டாள். ஒரு வாளி தண்ணீரை அள்ளி வார்த்த பொழுது உடலுக்குச் சுகமாக இருந்தது. ராம் பின்னேரம் வருவான் என்ற நினைப்பு அவளையுமறியாமல் அவளுள் குதூகலத்தை ஏற்படுத்தியிருந்தது. ஐந்து வருடங்களிற்கு முன்னர், ராம் வீட்டிற்கு வரும்பொழுது இல்லாத உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் இப்போது அவளுள் ஏற்படுவதை எண்ணிப்பார்க்கும் போது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

‘அவர்… நான் பயப்பட்டதிற்கு எதிராகவே இருக்கிறார். என்னை அவருக்கு நல்லாய் பிடிச்சுது போலை…’ 

சற்று முன்னர் சாப்பிடும் பொழுது அவன் கதைத்தவையும் அவள் ஞாபகத்தில் வந்தபொழுது வெட்கமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. 

“என்னக்கா? உங்கட பாட்டிலை சிரிக்கிறியள்!” கிணற்றடிக்கு வந்த சுகந்தி சந்தேகத்துடன் கேட்டபோது அவள் திடுக்குற்றாள். சுகந்தி கிணற்றுக் கட்டில் அமர்ந்து கொண்டாள். 

“அக்கா, உண்மையாகவே ராமத்தான் உங்களோட ஒண்டுமே கதைக்கயில்லையே?” சுகந்தி மிகவும் மெதுவாக ஆதங்கத்துடன் கேட்டாள். சாந்தி கண்களைச் சிமிட்டினாள். அவளுக்குச் சிரிப்பு வந்தது. 

“நான் சும்மா வேணுமெண்டெல்லோ அம்மாவுக்கு அப்பிடிச் சொன்னனான். அவர்… வடிவாய் கதைச்சவர். முதலில… வேணுமெண்டு என்னோட கதைக்காமல், என்னை நல்லாய் வெருட்டிப்போட்டார். பிறகு நல்…லாய்க் கதைச்சவர்; பின்னேரம் இங்கை வருவார்” புன்னகையோடு கூறியவள், 

“சுகந்தி, அவருக்கு உழுந்து வடை எண்டால் நல்ல விருப்பம். அவர் வந்தால் குடுக்கிறதுக்கு… ” சாந்தி சற்றுக் கவலையோடு கூறி முடிக்கமுன், 

“யோசிக்காதேங்கோ; வடை ரெடியாய் இருக்குது” சுகந்தி கூறியதும், சாந்தி ஆச்சரியமாக அவளை நோக்கினாள். 

”அக்கா, நீங்கள் மறந்தாலும்… அம்மா தன்ரை மருமகனை மறக்கவேயில்லை! அவ, நேற்றே ஓடக்கரையடிக்குப் போய், ஒரு வீட்டில தட்டை வடைக்குச் சொல்லிவைச்சு இண்டைக்குக் காலையில நீங்கள் மாமா வீட்டுக்குப் போன பிறகு, வடையையும் வாங்கிக்கொண்டு வந்திட்டா. எல்லாம்… ராமத்தானுக்காகத்தான். எனக்குக் கூட, ராகினி வீட்டாலை வந்தபிறகு தான் தெரியும்” சுகந்தியும் ஆச்சரியத்துடன் கூறியபொழுது, சாந்திக்கு ஏனோ தாய் மீது அன்பும் பாசமும் பொங்கியது 

‘என்னதான் பிரச்சினை எண்டாலும், அம்மா அவர அவரவர்க்குச் செய்ய வேண்டியதுகளை கால நேரம் பார்த்து, செய்துபோடுவா’ அவள் தாயை எண்ணி மனதிற்குள் பெருமைப்பட்டாள். 

“அக்கா, இண்டைக்கு ராமத்தான் இங்கை வர ஒரு விளையாட்டு விடுவமே?”

“என்ன விளையாட்டு. ? அவர் எல்லாரையும் விட மேலாலை விளையாடிப்போடுவார்!” 

“இல்லையக்கா; நீங்கள் அங்கை போனபோது முதலில் உங்களை நல்லாய் வெருட்டினவர்தானே? அதுமாதிரி நாங்களும் ஒரு சின்ன வெருட்டல் விடவேணும். அவரின்ரை குறும்பை நாங்களும் கொஞ்சம் சோதிக்க வேணும்” 

“என்ன மாதிரிச் சோதிக்கிறது?” 

“அவர் வந்த உடனே நீங்கள் அறைக்குள்ளை போய்ப் பேசாமல் இருந்திடவேணும். கொஞ்ச நேரத்துக்கு நீங்கள் வெளியில் வரவே கூடாது. வடை, ரீ எல்லாம் நான் குடுக்கிறன்; பயப்படாதேங்கோ, அவர் கொஞ்ச நேரத்திலை.. உங்களைக் காணயில்லையெண்டு தேடுவார்தானே. நான் உங்களை நித்திரையாய் இருக்கிறியள் எண்டு சொல்லுறன். அதுக்குப்பிறகு என்ன செய்யிறாரெண்டு பாப்பமன்” சுகந்தி வேடிக்கையாக ஆர்வத்தோடு கூறினாள். 

“ஐயையோ, அவர் வாறநேரம் நான் வீட்டில் நிற்பன் எண்டு சொன்னனான். பிறகு… நான் இல்லையெண்டால் கோபமெல்லே வந்திடும்” சாந்தி அவசரமாகக் குறுக்கிட்டாள், 

“அதுக்கென்ன? பேறெங்கையும் போகாமல், நித்திரை தானே கொள்ளப்போறீங்கள். இதுவும் பிழையே? அவருக்கும் கொஞ்சம் கோபத்தையும் ஏமாற்றத்தையும் குடுக்க வேணும்’ சுகந்தி விடாமல் வற்புறுத்தியதில் சாந்தியும் ஒப்புக்கொண்டாள். 

மளமளவென்று குளித்து முடித்த சாந்தி, அரைப்பாவாடையையும் சட்டையையும் அணிந்து, தன்னை அழகு படுத்திக் கொண்டாள். தேனீர் தயாரித்துக் குடித்துவிட்டு, வீட்டைக் கூட்டி ஒழுங்கு படுத்திய பின்னர், வானொலியை முடுக்கிவிட்டாள். கொழும்பு ஸ்ரேசன் கரகரத்தது. அவள் முதல்நாள் ராம் கொடுத்தனுப்பிய கசற்றை எடுத்துச் சுழல விட்டாள். 

‘அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…’ பாடல் ஒலிக்க ஆரம்பித்தபோது, 

“அக்கா, ராமத்தான் ரேப் பண்ணியிருக்கிற பாட்டுக்கள் எண்டால்…” வசனத்தை முடிக்காமலே சுகந்தி, புதிதாக நாட்டியிருந்த பூமரங்களுக்குத் தண்ணீர் தெளித்த வாறே கண்களைச்சிமிட்டி, உதடுகளைச் சுருக்கிக் குறும்பாகச் சிரித்தாள். சாந்திக்கு அவளது கிண்டல் வெட்கத்தை ஏற்படுத்தியது. அந்தப் பாடல்கள் உண்மையிலேயே வழக்கத்திற்கும் மாறான புதியதொரு ரசனையை அவளுள் ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொரு பாடலையும் திரும்பத் திரும்ப ரசித்துக் கேட்க வேண்டும்போல் அவள் மனம் ஆவப்பட்டாலும் சுகந்தி கிண்டல் செய்வாளென்ற நினைப்பில் அக்கறையில்லாததுபோல் காட்டிக்கொண்டாள். கசற் பிளேயர் ஓய்ந்துகொண்டபொழுது வெளியில் கேற் திறபடும் ஓசை கேட்டது. 

ராம் ஒரு பெரிய பையுடன் உள்ளே வருவது தெரிந்த போது அவளது இதயம் ஒரு கணம் படபடத்து, சாதாரணமானது. ராம் அவளுக்குப் பிடித்தமான நீலநிறத்தில் சாரம் அணிந்திருந்தது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மார்பு வரை திறந்திருந்த ஷேட்டின் வழியாகத் தெரியும் மைனர் செயினுடன் அவன் வந்த தோற்றம் அவளுக்குப் பெருமையாக இருந்தது. அக்கம்பக்கத்தார் அவனை அவதானித்திருக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவளையறியாமலே அவளுள் கிளர்ந்திருந்தது. பக்கத்துவீட்டு மச்சாள், முதல்நாள் அவளுடன் கதைத்தபொழுது ‘ராம் மன்மதன் மாதிரி இருக்கிறானடி. நீ குடுத்துவைச்சவள் தான்…’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்ட சம்பவம் சட்டென்று அவள் ஞாபகத்தில் வந்தபோது உடல் புல்லரித்தது! 

“அக்கா!-என்ன ஜன்னலடியிலையே நிக்கிறீங்கள்? நான் சொன்னதெல்லாம் மறந்துபோட்டியளே?” சுகந்தி அவசரமாக ஓடிவந்து ஞாபகப்படுத்தியதும், திடுக்குற்ற அவள் நாக்கைக் கடித்துக்கொண்டு அறைக்குள் ஓடிச்சென்று கட்டிலில் மெதுவாகச் சாய்ந்துகொண்டாள்.

– தொடரும்…

(1984/85 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் 2ம் பரிசு பெற்றது.)

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *