பித்தளை ஒட்டியாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 1,935 
 

தங்கம்மாள் நடுநிசியில் திடுக்கென்று கண் விழித்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசையைப் போல் கேட்டது. படுத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். ஸௌந்தரம் கதவைத் திறந்து கொண்டிருந்தான். வெளியே சென்று மெதுவாய்க் கதவைச் சாத்தினான்.

மாடிப் படிகளில் அவன் இறங்கிச் செல்லும் சத்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் கீழே ஆபீஸ் அறையைத் திறந்தான்; உள்ளே போய் விளக்குப் போட்டுக் கொண்டான்.

தங்கத்துக்கு இருதயம் பதை பதைத்துக் கொண்டிருந்தது. இந்தப் பாதி நிசியில் இவர் எங்கே, எதற்காக இறங்கிப் போகிறார்? ஆபீஸ் அறையில் இப்போது என்ன செய்கிறார்? இவ்வளவு இரகசியம் என்ன? தான் எழுந்திருக்கக்கூடாது என்பதற்காகத் தானே ஓசைப்படாமல் அவ்வளவு ஜாக்கிரதையாய்க் கதவைத் திறந்து கொண்டு நிதானமாய் நடந்து போனார்? இதெல்லாம் எதற்காக? தன்னிடம் என்னத்தை ஒளிப்பதற்கு முயல்கிறார்?

சென்ற ஐந்தாறு நாளாகவே ஸௌந்தரம் ஒரு மாதிரியாயிருப்பது பற்றித் தங்கத்தின் உள்ளம் ரொம்பவும் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. அவர் பழைய மனுஷராகவே இல்லை; அடியோடு மாறிப் போய் விட்டார். எப்போதும் சிரிப்பும் விளையாட்டு மாயிருப்பவருடைய முகத்தில் ஐந்தாறு நாளாய் மலர்ச்சி என்பதையே காணவில்லை. சுய ஞாபகமே கிடையாது. என்ன சாப்பிடுகிறோம், என்ன பேசுகிறோம் என்பது கூட நினைவிருப்பதைல்லை. இராத்திரியில் சரியாக தூங்குவதுமில்லை. புரளுகிறார்; பிதற்றுகிறார். தூங்கும்போது உடம்பு திடீரென்று நடுங்குகிறது. கேட்டால், சொல்ல மாட்டேனென்கிறார். “ஒன்றுமேயில்லை” என்று சாதிக்கிறார். பொய், பொய், பொய்! ஒன்றுமேயில்லாததற்கா இவ்வளவு கவலை, இவ்வளவு குழப்பம், இவ்வளவு மெய்ம்மறதி?

என்னமோ சமாசாரம் இருக்கிறது. சந்தேகமில்லை. அது என்னவாயிருக்கும்? தங்கம் போன மாதத்தில் பார்த்திருந்த ஒரு தமிழ் டாக்கி ஞாபகம் வந்தது. அதில் கதாநாயகன் ஒரு தாஸியின் மோக வலையில் வீழ்ந்து விடுகிறான். அது முதல் அவனுடைய நடை உடை பாவனைகளில் மாறுதல் ஏற்பட்டு விடுகிறது. அடிக்கடி மெய்ம்மறதி உண்டாகிறது. மனைவியிடம் “ஒன்றுமில்லை” என்றுதான் அவனும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

அப்படி ஏதாவது இருக்குமோ என்று தங்கம் ஒரு நிமிஷம் எண்ணியபோது, அவளுக்கு உயிரே போய் விடும் போலிருந்தது. “ச்சீ! ச்சீ! ஒரு நாளு மிராது! பத்து நாளைக்கு முன்புதானே அவர் என்னிடம் வைத்திருக்கும் அளவிலாத அன்பை ருசுப்படுத்தினார்? தங்க ஒட்டியாணம் போட்டுக் கொள்ள எனக்கு என்ன யோக்யதை இருக்கிறது? இத்தனை நாளும் எனக்குத் தெரியாமல் பணம் சேர்த்து வைத்திருந்து, பிறந்த நாள் பரிசாக அளித்தாரே?” என்று எண்ணி, ஒரு நாளும் அவர் தனக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று தீர்மானித்தாள். ஆனால் வேறு என்னதான் இருக்கும்? ஆபீஸ் அறையில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க அவளுக்கு ஆவல் உண்டாயிற்று. எப்படியும் இன்று ராத்திரி உண்மையைத் தெரிந்து கொண்டு விட வேண்டும். மனதில் இந்த பாரத்துடன் இனிமேல் தூங்க முடியாது.

தங்கம் எழுந்திருந்தாள். அடிமேல் அடி வைத்துக் கீழே இறங்கிச் சென்றாள். ஜன்னல் வழியாக ஆபீஸ் அறைக்குள் பார்த்தாள். ஸௌந்தரம் மேஜை மேல் காகிதம் வைத்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். சற்று நேரம் தங்கம் சும்மா நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸௌந்தரம் எழுதி முடித்துவிட்டுத் தலையை நிமிர்ந்தான். அவனுடைய கண்களில் நீர்த் துளிகள் ததும்பின.

தங்கத்துக்குக் கதி கலங்கிற்று. ஒன்றும் செய்யத் தோன்றாமல் பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.

ஸௌந்தரம் ஒரு கவர் எடுத்து அதன் மீது விலாசம் எழுதினான். பிறகு அதை ஒட்டுவதற்காகப் பிசின் கொட்டாங்கச்சியை எடுத்தான். பிசினில் தண்ணீரே விடாமல் காய்ந்து போயிருந்தது. கொட்டாங்கச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு தண்ணீருக்காகச் சமையலறைக்குச் சென்றான். போகும்போது, வெளியில் ஜன்னல் கதவுக்குப் பின்னால் நின்ற தங்கத்தை அவன் பார்க்கவில்லை.

அவன் சமையலறைக்குள் நுழைந்ததும், தங்கம் மின்னல் வேகத்தில் ஆபீஸ் அறைக்குள் சென்றாள். மேஜை மேல் கிடந்த உறையை எடுத்துப் பார்த்தாள். அதன் மேல் இவள் பெயர் தான் எழுதியிருந்தது. பதை பதைப்புடன் கடிதத்தை உறையிலிருந்து எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்

சௌ. தங்கத்துக்கு அநேக ஆசீர்வாதம்,

உனக்கு இந்தக் கடிதம் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கலாம். நீ இதைப் படிக்கும் போது நான் வெகு தூரம் போய்விடுவேன். உன்னை பிரியும்படியான காரணம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு பெரிய விபத்தில் அகப்பட்டுக் கொண்டு விட்டேன். நான் இங்கிருந்தால் உன் மனது ரொம்பவும் கஷ்டமடையும். ஆகையால்தான் போகிறேன். நீ உன் தாயார் வீட்டுக்குச் சென்று சௌக்யமாயிரு. உன் பேரில் எனக்கு ஒரு கோபமும் இல்லை.

கடவுள் கிருபை இருந்தால் மறுபடியும் சந்திப்போம். என்னைப் பற்றி ஏதாவது அபவாதம் கேள்விப்பட்டால் உன் பேரில் நான் வைத்த பிரியத்தினால் தான் செய்தேன் என்று நீயே தெரிந்து கொள்வாய்.

இப்படிக்கு உன்னை ஒரு நாளும் மறவாத ஸௌந்தரராஜன்

மேற்படி கடிதத்தைத தங்கம் ஒரு தரம், இரண்டு தரம் படித்தாள். அவளுடைய தலை சுழன்றது. கீழே விழுந்து விடாமல் மேஜையைப் பிடித்துக் கொண்டாள். இதற்குள் சமையலறைக்குச் சென்றிருந்த ஸௌந்தரம் திரும்பி வந்தான். தங்கம் கையில் கடிதத்துடன் நிற்பதைக் கண்டு அவன் திடுக்கிட்டு நின்றான்.

பிரமை கொண்டவள் போல் நின்ற தங்கத்துக்குப் பளிச்சென்று உயிர் வந்தது. அவள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து, அந்த அறையின் கதவைச் சாத்தினாள். சாத்திய கதவின் மேல் சாய்ந்து கொண்டு, ‘எங்கே நீங்கள் போவதைப் பார்க்கலாம்’ என்று சொல்லும் பாவனையில் நின்றாள்.

அவள் கடிதத்தைப் படித்து விட்டாள் என்பதை ஸௌந்தரம் தெரிந்து கொண்டான். தட்டுத் தடுமாறி, “தங்கம்! நான் சொல்கிறதைக் கேள்…” என்று ஆரம்பித்தான்.

“கேட்க மாட்டேன்; கேட்க மாட்டேன்” என்று அலறினாள் தங்கம். உடனே கோவென்று அழத் தொடங்கினாள். விம்மலுக்கு இடையிடையே, “என்னை நிர்க்கதியாய் விட்டுப் போகப் பார்த்தீர்களே? நீங்கள் போய் நான் ஸௌக்யமாயிருக்க வேணுமா?” என்பது போன்ற ஆத்திரமான சொற்கள் உளறிக் கொண்டு அவள் வாயிலிருந்து வெளிவந்தன. ஸௌந்தரராஜனுக்குக் ‘குபேரா பாங்கி’யில் குமாஸ்தா வேலை. பள்ளிக்கூடத்தில் படித்த காலத்திலிருந்து ரொம்ப யோக்யன் என்று பெயர் வாங்கினவன். அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்த உபாத்தியாயர்கள் எல்லாரும் அவனுடைய கல்வித் திறமையையும், புத்திசாலித்தனத்தையும் விட அவனுடைய நற்குணத்தையே அதிகமாக சிலாகித்திருந்தார்கள். உண்மையிலேயே அவன் தெய்வ நம்பிக்கையுள்ள பிள்ளை. பாப புண்ணியத்துக்கு அஞ்சியவன். அப்படிப்பட்டவன், அவன் வேலை செய்த பாங்கியின் பணத்தில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் திருடினான் என்று சொன்னால், அவனை அறிந்தவர்கள் யாரும் அதை நம்பவே மாட்டார்கள். “ஒரு நாளும் இராது” என்று தான் சொல்வார்கள். ஆனாலும், அத்தகைய நம்பத் தகாத காரியத்தை அவன் செய்துதானிருந்தான். அப்படி அவன் செய்ததற்குக் காரணம், கடிதத்தில் அவன் எழுதியிருந்தது போல் தங்கத்தின் பேரில் அவன் வைத்திருந்த அளவிலாத பிரியமே யாகும்.

தங்கம் டிபுடி கலெக்டர் ஸதாசிவய்யரின் பெண். ஸதாசிவய்யர் உயிரோடு இருந்து, உத்தியோகமும் பார்த்திருந்தாரானால், தங்கத்துக்கும் ஸௌந்தரத்துக்கும் கல்யாணமே ஆகியிராது. அவர் தம்முடைய மூத்த பெண்கள் இருவரையும் பெரிய இடத்தில் கொடுத்தது போல், தங்கத்தையும் கொடுத்திருப்பார். ஒரு ஐ.சி.எஸ்., ஒரு எப்.சி.எஸ்., அல்லது கேவலம் ஒரு எம்.பி.பி.எஸ்.ஸுக்காவது தங்கம் வாழ்க்கைப் பட்டிருப்பாள். ஆனால், தங்கத்துக்கு அவ்வளவு பாக்கியம் கிட்டவில்லை. யமன் திடீரென்று ஒரு நாள் வந்து டிபுடி கலெக்டராச்சே என்று கூடப் பார்க்காமல், ஸதாசிவய்யரைக் கொண்டு போனான். அவர் மாரடைப்பினால் இறந்து போனதாக ஜனங்கள் சொன்னார்கள்.

போனவர், நிறையப் பணமாவது வைத்துவிட்டுப் போனாரா? பெரிய தொகைக்கு இன்ஷியூரன்ஸாவது செய்திருந்தாரா? ஒன்றுமில்லை. இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டுகள், தங்களுடைய பிரசாரத்துக்கு அநுகூலமாக அவருடைய பெயரை உபயோகிக்கும்படியாகக் குடும்பத்தை விட்டு விட்டுப் போனார். “டிபுடி கலெக்டர் ஸதாசிவய்யரைப் பாருங்கள். இப்படித்தான் ‘இன்ஷியூரன்ஸில் எனக்கு நம்பிக்கையில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாளைக்கு கண்ணை மூடினார். இதோ அவருடைய பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடுவார்கள்” என்று இன்ஷியூரன்ஸ் ஏஜெண்டுகள் சொல்வது சர்வ சகஜமாயிற்று.

தங்கத்துக்கும் ஸௌந்தரத்துக்கும் முடிச்சுப் போட்டிருந்த படியால்தான், ஸதாசிவய்யர் அப்படி இறந்து போனாரோ, என்னமோ. அது தான் யாருக்குத் தெரியும்? சில பேர்கள், “பெரிய இடமாக இளையளாய்ப் பார்த்துத் தங்கத்தைக் கொடுத்து விடலாம்” என்று யோசனை சொன்னார்கள். அதற்குத் தங்கத்தின் தாயார் சம்மதிக்கவில்லை. இரண்டு பெண்களைப் பணக்கார இடத்தில் கொடுத்து அநுபவம் பெற்றிருந்த அந்த அம்மாள், “வேண்டவே வேண்டாம் ஏழையாயிருந்தால் இருக்கட்டும். நல்ல பிள்ளையாய், கண்ணுக்கும் சுமாராயிருந்தால் போதும். தங்கத்துக்கு அதிர்ஷ்டம் இருந்தால், பணங் காசெல்லாம் தானே வந்துவிடுகிறது” என்றாள். ஸதாசிவய்யருக்கு தன்னைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகுதான் அதிர்ஷ்டம் அடித்தது, பெரிய உத்தியோகம் ஆயிற்று என்று அந்த நாளில் எல்லாரும் சொன்னதை நினைத்துக் கொண்டு தங்கத்தின் தாயார் அவ்விதம் சொன்னாள்.

தங்கத்தின் தமக்கைமார்களில் ஒருத்தி ஐ.சி.எஸ்.ஸுக்கும், இன்னொருத்தி பெரிய வருமானமுள்ள வக்கீலுக்கும் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கெல்லாம் தங்கத்தை அவ்வளவு சின்ன இடத்தில் கொடுப்பதில் திருப்தியில்லை. தங்களுடைய கௌரவத்துக்கு அது குறைவு என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பணங்கொடுத்து ஒத்தாசை செய்யுவும் தயாராயில்லை. அம்மாவிடம் மட்டும் தங்கைக்குப் பரிந்தவர்கள்போல் பேசினார்கள். தாயாரோ, “நான் என்னடி அம்மா, செய்வேன்? மூன்று பிள்ளைகளைப் படிக்க வைத்தாக வேண்டும். கையில் இருக்கிற அற்ப சொற்பத்தையும் தொலைத்து விட்டால், அப்புறம் என்ன கதியாகிறது? ஏதோ நீங்கள் இரண்டு பேரும் பெரிய இடத்தில் வாழ்க்கைப்பட்டு ஒசத்தியாயிருக்கிறது போதும். அவளுக்கும் அதிர்ஷ்டம் இருந்தால், தானே பணங்காசெல்லாம் வருகிறது” என்று சமாதானம் சொன்னாள்.

கடைசியில், ஸௌந்தரத்துக்கும் தங்கத்துக்கும் நல்ல சுபலக்னத்தில் கல்யாணம் ஆயிற்று.

தாயாரின் வாக்குப் பலிக்கும் போலவேயிருந்தது. பெண் அதிர்ஷ்டசாலியாகக் காணப்பட்டாள். கல்யாணம் ஆனதும், பையனுக்கு பாங்கியில் உத்தியோகம் ஆயிற்று. சம்பளம் இரண்டு வருஷத்தில் உயர்ந்து அறுபது ரூபாய்க்கு வந்தது.

இதுவரையில் ஒண்டுக் குடியிருந்ததில் தங்கத்துக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. “அரை வயிற்றுச் சாப்பாடு கிடைத்தாலும் போதும்; தனி வீட்டில் தானிருக்க வேண்டும்” என்று தீர்மானித்து, “இருபத்தைந்து ரூபாய்க்கு ஒரு சின்ன வீடு எடுத்துக்கொண்டு அதில் குடித்தனம் செய்தார்கள். அவர்களுடன், மைத்துனன் ஒருவனும் இருந்து படித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷ மயமாக இருந்தது. ஒரு குறைவும் இருக்கவில்லை. தங்கத்தின் தாயார் அவர்களை வந்து பார்த்துவிட்டுப் போன போதெல்லாம் “பணக்கார இடத்தில் கொடுத்த பெண்களை விட என் தங்கந்தான் சந்தோஷமாயிருக்கிறாள்” என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இப்படியிருக்கும்போதுதான் ஒரு பித்தளை ஒட்டியாணம் வந்து அவர்களுடைய வாழ்க்கையே குலைந்து போகும்படியான பெரும் விபத்துக்குக் காரணமாயிற்று.

ஒரு நாள் ஸௌந்தரம் ஆபீஸிலிருந்து வீடு திரும்பிய போது, தங்கம் இடுப்பில் பள பளவென்று ஜொலித்த ஒட்டியாணம் தரித்துக் கொண்டிருந்தாள்.

“பலே! ரொம்ப ஜோராயிருக்கிறதே!” என்றான் ஸௌந்தரம்.

“ஆயிரத்திருநூறு ரூபாய்தான் விலை. வாங்கித் தருகிறீர்களா?” என்று தங்கம் கேட்டாள்.

“உன் பிறந்தகத்துக்கு எழுதினால் உடனே தந்தி மணியார்டர் கதறிக் கொண்டு வருகிறது” என்றான் ஸௌந்தரம்.

இம்மாதிரி சிறிது நேரம் வேடிக்கைப் பேச்சு நடந்த பிறகு, அந்தப் பித்தளை ஒட்டியாணத்தின் விலை ஏழு ரூபாய் என்றும், இரண்டு வருஷத்துக்கு மெருகு ‘காரண்டி’ என்றும், அடுத்த வீட்டு அம்மாள் வாங்கியிருந்ததைப் பார்த்துத் தானும் ஒன்று வாங்கிக் கொண்டிருப்பதாகவும் தங்கம் தெரிவித்தாள்.

கொஞ்ச நாளைக்கெல்லாம் தங்கத்தின் மூத்த தமக்கை மிஸஸ் கமலா ராமச்சந்திரனின் வீட்டில், அவளுடைய மூன்றாம் குழந்தைக்கு ஆண்டு நிறைவுக் கல்யாணம் நடந்தது. அதற்குத் தங்கமும் ஸௌந்தரமும் போயிருந்தார்கள். தங்கம் அந்த ஏழு ரூபாய்ப் பித்தளை ஒட்டியாணத்தைப் போட்டுக் கொண்டு கிளம்பியபோது ஸௌந்தரத்துக்கு அவ்வளவு திருப்தியில்லை. “இது என்னத்திற்கு?” என்று கேட்டான். “பித்தளை ஒட்டியாணம் என்று ஜாதியை விட்டுத் தள்ளி விடுவார்களோ? அப்படித் தள்ளினால் தள்ளிக் கொண்டு போகட்டும்” என்றாள் தங்கம்.

“நன்றாயிருக்கிறது. நீயே தான் பத்தரை மாத்துத் தங்கமாயிற்றே. உன்னை உருக்கினால் நூறு ஒட்டியாணம் செய்யலாமே?” என்றான் ஸௌந்தரம்.

“நானே தங்கம். அதிலும் அழகைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கேன்! எனக்கு என்ன குறைச்சல்?” என்றாள் தங்கம்.

இந்தக் குதூகலமெல்லாம் கல்யாண வீட்டிற்குப் போகும் வரையில்தான் இருந்தது. அங்கே சென்று சற்று நேரம் ஆனதும், தங்கம் தன்னுடைய ஒட்டியாணம் மற்றவர்களின் கவனத்தைக் கவர்ந்திருப்பதைக் கண்டாள். ஸ்திரீகள் ஒருவருக்கொருவர் அந்த ஒட்டியாணத்தைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டார்கள். “இதுதான் இப்போது புதிசா வந்திருக்காம். ஒன்பது ரூபாயாம்” என்றாள் ஒருத்தி. “இல்லை, ஏழு ரூபாய்தான்” என்றாள் இன்னொருத்தி. “இவ்வளவு சுலபமாயிருக்கும் போது என்னத்திற்காக ஆயிரமும் ஆயிரத்தைந்நூறும் கொடுத்து வாங்க வேண்டும்?” என்றாள் வேறொரு ஸ்திரீ. “பத்து நாளைக்கெல்லாம் பல்லை இளித்து விடுமே? அப்போது என்ன பண்ணுகிறது?” என்றாள் மற்றொருத்தி.

இந்தப் பேச்செல்லாம் தங்கத்தின் காதில் நாராசமாக விழுந்தன. அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரும் தேகமெல்லாம் ஒரே வைரமாய் வைத்து இழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதற்குப் போதுமான வைரம் அவர்கள் மேல் இருந்தது! பாவம் இவர்களுக்கு மத்தியில், பித்தளை ஒட்டியாணம் போட்டுக் கொண்டு வந்த தங்கம், அவமானத்தினால் மனங்குன்றி நின்றாள். கொஞ்சங்கூட அவளுக்கு உற்சாகம் ஏற்படவில்லை. எப்போது வீட்டுக்குக் கிளம்பப் போகிறோம் என்று தவித்துக் கொண்டிருந்தாள். கடைசியில், வீட்டுக்குக் கிளம்பும் நேரம் வந்தது. வாசலில் குதிரை வண்டியில் அவள் ஏறத் தயாராயிருந்தபோது, கையில் பட்சணப் பொட்டணத்துடன் அவளுடைய தமக்கை வந்தாள். தங்கத்தின் காதோடு இரகசியமாக, “ஏண்டி அசடே! இந்தப் பித்தளை ஒட்டியாணத்தை ஏன் போட்டுக் கொண்டு வந்தாய்? ஆசையாயிருந்தால், என்னைக் கேட்டால், நான் கொஞ்ச நாழி போட்டுக் கொள்ளக் கொடுக்க மாட்டேனா? இந்த மாதிரியெல்லாம் இனிமேல் செய்யாதே. அற்பம் என்று எண்ணிக்கொள்ளப் போகிறார்கள்” என்று சொன்னாள். இதையெல்லாம் இரகசியமாய்ச் சொல்வதாக அவள் எண்ணியிருந்த போதிலும், ஏற்கெனவே வண்டிக்குள் ஏறியிருந்த ஸௌந்தரத்தின் காதில் அவ்வளவும் ஸ்பஷ்டமாக விழுந்தது.

வீடு போய்ச் சேரும் வரையில் தங்கமும் ஸௌந்தரமும் பேசவேயில்லை. தங்கம் பொங்கிக் கொண்டு வந்த அழுகையை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தாள். வண்டியிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போனாளோ இல்லையோ, ஒட்டியாணத்தைக் கழட்டி எறிந்துவிட்டு விசித்து அழ ஆரம்பித்தாள். வண்டிக்காரனுக்குச் சத்தம் கொடுத்து விட்டு உள்ளே வந்த ஸௌந்தரம் அவள் விசிப்பதைப் பார்த்துவிட்டு, “இந்தச் சனியன் பிடித்த ஒட்டியாணம் என்னத்திற்கு, அந்த தரித்திரங்கள் ஏதாவது நினைத்துக் கொள்ளும் என்று அப்போதே சொன்னேனோ இல்லையோ; கேட்காமல் போட்டுக் கொண்டு வந்தாய். இப்போது அழுது என்ன பிரயோஜனம்?” என்றான்.

இதைக் கேட்ட தங்கம், விம்மிக் கொண்டே, “எங்க அப்பா மட்டும் இருந்திருந்தால், இப்படி அவர்களிடம் பேச்சுக் கேட்கும்படி விட்டிருப்பாரா? இவர்களைப்போல் நானும் தங்க ஒட்டியாணம் பூட்டிக்கொண்டிருக்க மாட்டேனா?” என்று சொல்லிவிட்டு, கோவென்று கதறி அழ ஆரம்பித்தாள்.

அவளுடைய சொல்லும், அழுகையும் ஸௌந்தரத்தின் நெஞ்சைப் பிளப்பது போலிருந்தான். ‘நம்மைக் கல்யாணம் செய்து கொண்டதால்தானே இவளுக்கு இந்த கதி நேர்ந்தது? இவளுக்கு ஒரு ஒட்டியாணம் வாங்கிக் கொடுக்க நமக்கு சக்தியில்லையே?’ என்ற எண்ணம் அவனுடைய உள்ளத்தைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியது.

“ஆமாம்; உங்க அப்பா இருந்திருந்தால் உன்னையும் பணக்கார இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருப்பார். இந்த ஏழையைக் கட்டிக் கொண்டு திண்டாடும் கதி உனக்கு நேர்ந்திராது” என்றான்.

இப்படிச் சொன்னானோ, இல்லையோ, தங்கத்தின் அழுகை பளிச்சென்று நின்றது. அவள் ஓடி வந்து, ஸௌந்தரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “உங்களுடைய அன்பு ஒன்றே எனக்குப் போதும். நகையும் வேண்டாம், நட்டும் வேண்டாம்” என்றாள்.

அந்த நிமிஷத்தில், ஸௌந்தரம் தன் மனதிற்குள்ளே, “எப்படியாவது இவளுக்குத் தங்க ஒட்டியாணம் பண்ணிக் கொடுத்து விட்டு மறு காரியம் பார்க்க வேணும்; இல்லாவிட்டால் நான் மனுஷன் இல்லை” என்று தீர்மானம் செய்து கொண்டான்.

கொஞ்ச நாளாகக் ‘குபேரா பாங்கி’யைப் பற்றி ஊரில் வதந்திகள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த பாங்கியில் பணம் போட்டிருந்தவர்கள் அவசர அவசரமாகப் பணத்தை வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த நெருக்கடியில் தினந்தோறும் மானேஜிங் டைரக்டரே பாங்கிக்கு வந்து, காரியங்களை நேரில் நடத்திக் கொண்டு வந்தார். “ஒன்றும் பயம் இல்லை; இம்மாதிரி நெருக்கடி இதற்கு முன்பும் நமது பாங்கிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சமாளித்தது போல் இதையும் சமாளித்துக் கொள்வோம்” என்று அவர் பாங்கியின் சிப்பந்திகளுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டு வந்தார்.

பாங்கியின் மேல் நம்பிக்கையை ஸ்திரப்படுத்துவதற்காக, மானேஜிங் டைரக்டர், பணம் போட்டிருந்தவர்கள் பணத்தைக் கேட்டவுடனே கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ‘பிக்ஸட் டெபாஸிட்டுகளை நியாயப்படி கொடுக்க வேண்டியதில்லை யானாலும், அநேகம் பேருக்கு ‘பிக்ஸட் டெபாஸிட்’களையும் திருப்பிக் கொடுத்து வந்தார். இது மட்டுமல்ல; சிலபேருக்கு ‘ஓவர் டிராப்டு’ தாராளமாய் அனுமதித்து வந்தார். சில பேருக்குப் புதிய கடன்கள் கூட ‘ஸாங்ஷன்’ செய்தார். இப்படி யெல்லாம் செய்தால், பாங்கியைப் பற்றி ஜனங்களின் சந்தேகங்கள் தீர்ந்து, மறுபடியும் அவர்கள் பணம் போட ஆரம்பிப்பார்கள் என்பது அவர் அபிப்பிராயமெனத் தெரிந்தது.

இவ்விதம் குபேரா பாங்கி சம்பந்தமாக ஊரில் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலைமையில்தான், ஒரு நாள் சாயங்காலம் ஸௌந்தரம் வெகு குதூகலமாக வீட்டுக்கு வந்தான். “தங்கம்! இன்றைக்கு உனக்குப் பிறந்த நாள் ஆயிற்றே! கடைத் தெருவுக்குப் போகலாம், வருகிறாயா?” என்று கேட்டான்.

“கடைத் தெருவுக்குப் போய்ப் பிறந்த நாள் பரிசு என்ன வாங்கித் தரப் போகிறீர்கள்? வரைத் தோடும் தங்க ஒட்டியாணமும் வாங்கித் தரப் போகிறீர்களா?” என்று கேட்டாள் தங்கம்.

“ஆமாம்!” என்றான் ஸௌந்தரம்.

“பரிகாசம் பண்ணாதீர்கள்! அப்படி ஒன்றும் நான் நகை ஆசை பிடித்துக் கிடக்கவில்லை” என்றாள் தங்கம்.

“உனக்கு ஆசையில்லாதபடியினால்தான் நான் பண்ணிக் கொடுக்கப் போகிறேன்” என்று ஸௌந்தரம் சொல்லி, சட்டைப் பையிலிருந்து ஒரு கட்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துப் போட்டான். ஒரு நிமிஷம் தங்கம் அப்படியே ஸ்தம்பமாய் நின்று விட்டாள். பிறகு, அந்த நோட்டுக்களைக் கையில் எடுத்துக்கொண்டு எண்ணினாள். பதினைந்து நோட்டு இருந்தது. ஆயிரத்தைந்நூறு ரூபாய்!

“ஏது இந்தப் பணம்? நிஜமாக நகை வாங்கப் போகிறீர்களா?” என்று தங்கம் நாத் தழுதழுக்கக் கேட்டாள்.

“ஆமாண்டி, அசடே! உன்னை ஏமாற்றுவேனா? மாதம் கொஞ்சமாகச் சம்பளத்தில் மீத்து பாங்கியில் போட்டுக் கொண்டு வந்தேன். இரண்டாயிரம் ரூபாய் ஆனதும் உனக்குச் சொல்ல வேணும் என்றிருந்தேன். அது வரையில் பொறுமையில்லை. இன்றைக்கு உன் பிறந்த நாளாயிருக்கிறதே என்று கொண்டு வந்து விட்டேன். கிளம்பு, போகலாம்!” என்றான் ஸௌந்தரம்.

பத்து நாளைக்குள் தங்கம் இரண்டாவது தடவையாக ஸௌந்தரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணீர் பெருக்கினாள். இந்தத் தடவை அவள் கண்ணில் பெருகியது ஆனந்தக் கண்ணீர் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?

இரண்டு பேரும் கடைத் தெருவுக்குப்போய் பல கடைகளில் பார்த்து, தங்க ஒட்டியாணம் ஒன்று ஆயிரத்து நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு, வைரத் தோடு செய்வதற்கும் ஆர்டர் கொடுத்து விட்டு வந்தார்கள்.

அந்த இரண்டு மூன்று தினங்கள் ஸௌந்தரம் சந்தோஷமாயிருந்ததைப் போல் அவனுடைய வாழ்நாளில் வேறெந்த நாளிலும் இருந்ததில்லை. தங்கத்தின் இடுப்பில் தங்க ஒட்டியாணத்தைப் பார்த்துப் பார்த்து அவன் மகிழ்ந்தான். தங்கத்தின் முக மலர்ச்சியைக் கண்டு அவன் உளம் பூரித்தான்.

காரியம் எவ்வளவு சுலபமாக முடிந்து விட்டது என்பதை நினைக்கும் போது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது. நல்ல வேளை, அவ்வளவு மனோ தைரியம் தனக்கு இருந்ததே என்று எண்ணி எண்ணிப் பெருமையடைந்தான். அந்த ஒரு நிமிஷம் தப்ப விட்டிருந்தால், போனதுதான். சம்பளத்தில் பணம் மீத்து எந்தக் காலத்தில் தங்க ஒட்டியாணம் செய்து கொடுத்திருக்க முடியும்? மாதம் பத்து ரூபாய் பல்லைக் கடித்துக் கொண்டு மீத்து வந்தாலும், வருஷத்துக்கு 120 ரூபாய்தான் சேரும். ஆயிரத்தைந்நூறு ரூபாய் சேருவதற்கு 12 வருஷம் – ஒரு மாமாங்கம் ஆகிவிடும்! சிவ சிவா! அதற்குள்ளே எந்த ராஜா எந்தப் பட்டணம் போய் விடுவானோ, யார் கண்டது? அதிலும், இரண்டொரு குழந்தை குட்டிகளும் உண்டாகி விட்டால், அப்புறம் தங்கம் அவளுடைய வாழ்நாளில் பித்தளை ஒட்டியாணத்துடனே திருப்தியடைந்திருக்க வேண்டியதுதான்!

ஒவ்வொரு சமயம் “விஷயம் ஒரு வேளை வெளியாகி விட்டால்?” என்ற நினைவு வந்து அவனைத் திடுக்கிடச் செய்தது. ஆனால் அந்த நினைவுக்கு அவன் அதிகம் இடம் கொடுக்கவில்லை. விஷயம் வெளியாவதற்கு வழியே கிடையாது. அன்று நடந்தது எல்லாவற்றையும் அவன் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தான். பகல் பன்னிரண்டு மணிக்கு, பணம் வாங்க வந்தவர்களின் கூட்டம் பாங்கியில் அசாத்தியமாயிருந்தது. ஸௌந்தரத்தின் பெட்டியில் இருந்த பணமெல்லாம் ஆகி விட்டது. இன்னும் ஐந்து நிமிஷம் போனால், கேட்பவர்களுக்குக் கையை விரிக்க வேண்டியதுதான். இந்த சமயத்தில் மானேஜிங் டைரக்டரின் அறையிலிருந்து, “ரிஸர்வ் பாங்கியிலிருந்து பணம் வந்து விட்டது; ஒவ்வொரு குமாஸ்தாவாக வந்து பணம் வாங்கிக் கொண்டு போக வேண்டியது” என்று தகவல் வந்தது. ஸௌந்தரத்தின் முறை வந்தபோது, அவனும் பணத்துக்காகப் போனான். நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், பத்து, ஐந்து ரூபாய் நோட்டுகளாக ஐயாயிரம் ரூபாய் அவன் எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது, டெலிபோனில் மணி அடிக்கவே மானேஜிங் டைரக்டர், டெலிபோன் குழாயை எடுத்துப் பேசத் தொடங்கினார். யார் என்ன சொன்னார்களோ தெரியாது. மானேஜிங் டைரக்டர் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமத்தின் முகம் கவலையால் வாடியது. அந்த சமயத்தில், அதாவது ஸகஸ்ரநாமம் டெலிபோனில் கவனமாயிருந்தபோது, ஸௌந்தரம் அதிகப்படியாக இரண்டு கட்டுகளை எடுத்துப் போட்டுக் கொண்டான். பிறகு ஐயாயிரம் ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டுவிட்டு, கீழே பணம் வாங்க வந்தவர்கள் காத்துக் கொண்டிருந்தபடியால் அவசரமாக இறங்கிச் சென்றான். மாடிப்படி இறங்கும் போதே, அந்த அதிகப்படி நோட்டுக்கள் அவனுடைய பெரிய கோட்டுப் பைகளில் சென்று விட்டன. கோட்டுப் பை பெரியதாயிருப்பது சில சமயத்தில் எவ்வளவு சௌகரியமாயிருக்கிறது?

அன்று மாலை பாங்கி சாத்தும் நேரம் வரையில் ஸௌந்தரத்துக்கு திக்கு திக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. “யாரிடமாவது அதிகப்படி பணம் இருக்கிறதா?” என்று மானேஜிங் டைரக்டர் கேட்டனுப்பினால், உடனே பையிலிருந்த நோட்டுக்களைப் பெட்டியில் போட்டுவிட்டு, “ஆமாம்; அதிகம் இருக்கிறது” என்று ஒப்புக்கொண்டு விட அவன் தயாராயிருந்தான். சோதனை, கீதனை என்று பேச்சு ஏற்பட்டாலும் அப்படிச் செய்வதற்கு அவன் சித்தமாயிருந்தான். ஆனால் தங்கத்திற்கு அதிர்ஷ்டம் இருக்கும்போது அப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? கேள்வி முறையே ஏற்படவில்லை.

மறுநாளும் அதற்கடுத்த நாளும் பாங்கியில் ஏதாவது ‘கசமுசா’ ஏற்படுகிறதா என்று ஆவலுடன் கவனித்தான். ஒன்றுமே கிடையாது. கிணற்றிலே கல்லைப் போட்டது போலிருந்தது. பணங் கேட்பவர்களின் கூட்டங் கூடக் குறைந்து போயிற்று. கேட்பவர்களுக்கெல்லாம் வட்டியின்றி பணம் கொடுத்து வந்ததிலிருந்து, ஜனங்களுக்கு பாங்கியில் நம்பிக்கை வந்து விட்டதாகத் தோன்றியது. சிலர், வாங்கிய பணத்தைத் திருப்பிப் போடுவதற்குக்கூட வந்தார்கள்.

ஸௌந்தரத்தின் மனம் நிம்மதியடைந்தது. அந்த நிம்மதியின் மத்தியில் ஒரு விநோத குறையும் உண்டாயிற்று. “எடுத்ததுதான் எடுத்தோம்; இன்னும் இரண்டு கட்டு சேர்த்து எடுத்திருக்கக் கூடாதா?” என்று விசாரப்பட்டான். தங்கத்துக்கு ஒட்டியாணமும் வைரத்தோடும் வாங்கிக் கொடுத்த பிறகு, கையிலும் ஒரு ஆயிரம் ரூபாய் மிச்சமிருந்தால், வருங்காலத்தில் ஆபத்து சம்பத்துக்கு உதவுமல்லவா? மறுபடியும் அந்த மாதிரி சந்தர்ப்பம் தன் வாழ்நாளில் எங்கே வரப் போகிறது?

குபேரா பாங்கிக்கு எதிர்ப் புறத்தில் இருந்த பெரிய கட்டிடத்தில் ஒரு பிரசித்தமான ஹோட்டல் இருந்தது. இந்த நவ நாகரிக ஹோட்டலில் சாப்பாடு போட்டதுடன் தங்குவதற்கு இடமும் கொடுத்தார்கள். மேல் மாடியில் இருந்த சிறு சிறு அறைகள், தினசரியிலும் மாதவாரியிலும் வாடகைக்கு விடப்பட்டன. அந்த மேல் மாடி அறைகளையும் தாழ்வாரத்தையும் ஸௌந்தரம் வேலை செய்யும் ‘கவுண்ட’ரிலிருந்து நன்றாய்ப் பார்க்கலாம். பாங்கியில் அதிக கூட்டமில்லாதபோது, ஸௌந்தரம் அந்த ஹோட்டல் அறைகளுக்கு அன்றாடம் புதிது புதிதாக வரும் மனிதர்களைப் பார்த்தும், அவர்களுடைய நடை உடை பாவனைகளைக் கவனித்தும் பொழுது போக்குவது வழக்கம். அருகிலுள்ள மற்ற பாங்கி குமாஸ்தாக்களிடம், “அவனுடைய ஹிட்லர் மீசையைப் பார்!” “இவன் யாழ்பாணத்து மனிதன் போலிருக்கிறது!” “அடே அப்பா! எவ்வளவு உயரம்! நம்முடைய புது கவர்னரை விட உயரமாய் இருப்பான் போலிருக்கிறதே!” என்றெல்லாம் வம்பு பேசி சந்தோஷப்படுவதுண்டு.

தங்க ஒட்டியாணம் வாங்கிக் கொடுத்த நாலாம் நாள், ஸௌந்தரம் வழக்கம் போல் அந்த மாடி அறைகளின் பக்கம் பார்த்தான். அந்த அறைகளில் ஒன்றில் கையில் புத்தகத்துடன் உட்கார்ந்திருந்த ஓர் ஆசாமி தன்னையே கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், ஸௌந்தரத்துக்குத் துணுக்கென்றது. அந்த முகம் எங்கேயோ பார்த்த முகமாய்த் தோன்றியபடியால், அவனுடைய துணுக்கம் அதிகமாயிற்று. அப்புறம் இன்னும் சில தடவை ஸௌந்தரம் அந்தப் பக்கம் நோக்கினான். ஒவ்வொரு சமயம் அந்த ஆசாமி நேரடியாக இவனைப் பார்ப்பது போலவும், இன்னும் சில சமயம் புத்தகத்தில் கவனமாய் இருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு கடைக் கண்ணால் இவனைப் பார்ப்பது போலவும் தோன்றியது.

ஸௌந்தரத்துக்கு இன்னதென்று சொல்வதற்கில்லாத பயம் உண்டாயிற்று. “இவன் யார், இந்த முகத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?” என்று யோசனை செய்தான். பளிச்சென்று ஞாபகம் வந்தது. உடனே அவனுக்குக் கதிகலங்கிற்று.

ஆம்; ஸௌந்தரத்தின் மைத்துனி குழந்தை ஆண்டு நிறைவுக் கல்யாணத்திற்கு இந்த ஆசாமி வந்திருந்தான். அவனைப் பற்றி வேறு இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். “ராமாநுஜம் இப்போது ஸி.ஐ.டி.யில் இருக்கிறான் என்று தெரியுமோ, இல்லையோ? டிபார்ட்மெண்டில் அவனுக்கு ரொம்ப நல்ல பெயர்! சீக்கிரம் பிரமோஷன் ஆகும் என்று சொல்கிறார்கள்” என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார். அது ஸௌந்திரத்தின் காதில் விழவும், அவர்கள் சுட்டிக் காட்டிப் பேசிய ஆசாமியை இவனும் பார்த்தான். அதே ஆசாமிதான் இவன் என்பதில் சந்தேகமில்லை.

ஸௌந்தரத்துக்குப் பெரும் திகில் உண்டாயிற்று. உடம்பெல்லாம் சொட்ட வியர்த்தது. “வெய்யில் சகிக்கவில்லை” என்று முணுமுணுத்துக் கொண்டு, கைக்குட்டையினால் வியர்வையைத் துடைத்துக் கொண்டான். நீண்ட நாள் வழக்கத்தினால் இயந்திரத்தைப் போல் வேலை செய்தானே தவிர, அவனுக்கு வேலையில் கவனமே இருக்கவில்லை.

இந்த ஸி.ஐ.டி. போலீஸ்காரன் இங்கே எதற்காக வந்திருக்கிறான்? இத்தனை நாளும் இல்லாமல் இப்போது வரக் காரணம் என்ன? பணம் குறைந்த விஷயமாகத் தன் பேரில் சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும். வேறெதற்காக அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறான்? எதற்காகத் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்?…

அன்று சாயங்காலம் வீடு சேர்ந்ததும் தங்கம் அவனைப் பார்த்து, “ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்! முகம் வாடியிருக்கிறதே?” என்று கேட்டாள். “வேலை அதிகம்; வேறொன்றுமில்லை” என்று பதில் சொன்னான்.

மறுநாள் ஸௌந்தரம் பாங்கிக்குச் சென்றபோது, “இன்றைக்கு அந்த ஸி.ஐ.டி. காரன் அங்கே இல்லாவிட்டால் ஒரு ஆபத்தும் இல்லை” என்று எண்ணிக் கொண்டு போனான். “இன்றைக்கு அவன் இருக்கமாட்டான்; நம்முடைய பயம் வீண் பயம்” என்று மனதை தைரியப்படுத்திக் கொண்டான். “அங்கே அவன் இருந்தால்தான் என்ன? வேறு காரியமாய் வந்திருக்கக்கூடாதா? பட்டணத்துக்கு வெளியூரிலிருந்து வரும் எத்தனையோ உத்தியோகஸ்தர்கள் அந்த ஹோட்டலில் தங்குகிறார்கள். அந்த மாதிரி இவனும் வந்து தங்கியிருப்பான். நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்?” என்று தேறுதல் சொல்லிக் கொண்டான். “இன்றைக்கு அந்த மாடிப் பக்கம் பார்க்கவே கூடாது. பார்த்தால் நம் பேரில் சந்தேகம் உண்டானாலும் உண்டாகும்” என்று உறுதி செய்துகொண்டான்.

ஆனால், பாங்கியில் அவனுடைய வழக்கமான இடத்தில் போய் உட்கார்ந்ததும், அவனையறியாமலே கண்கள் எதிர்ப்பக்கம் நோக்கின. அங்கே ஸி.ஐ.டி. காரன் இல்லை. அப்பா! பிழைத்தோம்! என்ன வீண் பயம்? என்ன வீண் பீதி? குற்றமுள்ள நெஞ்சு என்பது சரியாய்ப் போய் விட்டதே! இந்த ஒரு தடவையோடு போதும்; இனிமேல் நம் வாழ்நாளில் இம்மாதிரி காரியம் செய்யவே கூடாது!

வாசலில் அப்போது மானேஷிங் டைரக்டரின் கார் வந்து நின்றது. அவர் பாங்கிக்குள்ளே வந்து பத்து நிமிஷத்துக்கெல்லாம், ஸௌந்தரம் தற்செயலாக மறுபடியும் எதிர்மாடிபக்கம் பார்த்தான்.

அங்கே அந்த ஸி.ஐ.டி. கழுகு உட்கார்ந்து தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஸௌந்தரத்தின் உடம்பு ஒரு குலுங்குக் குலுங்கிற்று.

மானேஜிங் டைரக்டரும் இவனும் ஒத்துப் பேசிக் கொண்டு வந்திருக்க வேண்டும். இவன் தன்னுடைய சந்தேகத்தைத் தெரியப்படுத்தியிருப்பான். மானேஜிங் டைரக்டர் என்ன சொன்னாரோ, என்னமோ? ஒருவேளை ‘அரெஸ்டு’ செய்து விடுவதென்று தீர்மானித்திருப்பார்களோ?

போலீஸ்காரர்கள் வந்து தன்னுடைய கையில் விலங்கு மாட்டித் தெரு வீதி வழியாக அழைத்துப் போகும் காட்சியை ஸௌந்தரம் தன் மனதில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். அந்தக் காட்சியை மட்டும் தங்கம் பார்த்துவிட்டால்? அவன் தேகத்திலிருந்த ரோமங்கள் எல்லாம் குத்திட்டு நின்றன.

போலீஸ்காரர்கள் விலங்குடன் வருவதை ஒவ்வொரு நிமிஷமும் ஸௌந்தரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஹோட்டல் மாடிப் பக்கம் பார்க்கக் கூடாதென்று அவன் பல்லைக் கடித்துக் கொண்டு சிரமப்பட்டான். ஆனால், அந்த ஸி.ஐ.டி.காரனின் கண்கள் தன் பேரிலேயே இருப்பதாக அவனுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. கழுகு மூக்கும், வெறித்த கண்களும் உள்ள அந்தக் குரூரமான முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.

சாயங்காலம் பாங்கி சாத்துகிற வரையில் ஒன்றும் நடக்கவில்லை. “நம் பேரில் வெறும் சந்தேகம் மட்டும் தோன்றியிருக்கும்; ருசு ஒன்றும் அகப்பட்டிராது. அதனால்தான் அரெஸ்ட் வாரண்ட் எடுக்கவில்லை” என்று எண்ணிக் கொண்டான். ஆனால், அவர்களுக்கு என்ன ருசு அகப்படக்கூடும்? ருசு என்ன தான் இருக்கிறது? – ஓ! ஒரு வேளை தங்க ஒட்டியாணம் வாங்கிய செய்தி தெரிந்து போய்விட்டால்?

அன்று சாயங்காலம் ஸௌந்தரம் தங்கத்தைப் பார்த்து, சாதாரணமாய்க் கேட்பது போல், “ஆமாம்; ஒட்டியாணம் வாங்கிக் கொண்ட சமாசாரம் அடுத்த வீடு, அண்டை வீடுகளுக்கெல்லாம் இதற்குள் தெரிந்திருக்குமே, அப்படித்தானே?” என்று கேட்டான்.

“நன்றாயிருக்கிறது; வீடு வீடாகப் போய்ச் சொல்லி வருவேன் என்று நினைத்தீர்களா? நேற்றைக்கு அடுத்த வீட்டு அம்மாமி பார்த்துவிட்டு ‘அசல் தங்க ஒட்டியாணம் மாதிரியேயிருக்கிறது’ என்றாள். அப்போது கூட நான் நிஜத்தைச் சொல்லவில்லை. என்ன அவசரம், தானே தெரிகிறது என்று இருந்து விட்டேன். எதற்காக கேட்கிறீர்கள்?” என்றேன்.

“விசேஷம் ஒன்றுமில்லை. ஆனால் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம். இந்தக் காலத்திலேதான் அசூயை அசாத்தியமாயிருக்கிறதே?” என்றான் ஸௌந்தரம்.

அதற்கப்புறம், இன்னும் நாலு தினங்கள் சென்றன. ஸௌந்தரம் வழக்கம் போல் பாங்கிக்குப் போய் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு நாளும், “இன்றைக்கு அந்த ஸி.ஐ.டி. காரன் இருக்கமாட்டான்” என்று எண்ணிக் கொண்டு போவான். அங்கே அந்த கழுகு மூஞ்சியைக் கண்டதும் ஏமாற்றமடைவான். நாளுக்கு நாள் அவனுடைய பீதியும் பதைபதைப்பும் அதிகமாகி கொண்டிருந்தன. இரண்டில் ஒன்று சீக்கிரம் தீர்ந்துவிட்டால் தேவலையென்று தோன்றிற்று. இந்த நாட்களில் இரவில் தூங்கும்போது அவனுடைய உடம்பு தூக்கிப் போடுவதையும், ஏதேதோ பிதற்றுவதையும் கண்டு தங்கத்தின் கவலையும் அதிகமாகிக் கொண்டு வந்தது.

ஒரு நாள் பாங்கியில் இரண்டு குமாஸ்தாக்கள் கூடி இரகசியம் பேசிக் கொண்டிருந்ததை ஸௌந்தரம் பார்த்து விட்டு, அவர்கள் அருகில் தானும் போய், “என்ன சமாசாரம்?” என்று கேட்டான். “உனக்குத் தெரியாதா, என்ன? பாங்கியில் ஏதோ பணம் காணாமற் போயிருக்கிறது. ஏற்கெனவே ஊரில் இருக்கிற காபராவில் அதை வெளியில் விடக்கூடாதென்று மானேஜிங் டைரக்டர் மூடி வைத்திருக்கிறாராம். திருட்டுப் போன தொகை எவ்வளவென்று தெரியவில்லை. அது டைரக்டருக்கும் காஷியருக்கும் தான் தெரியுமாம்” என்று குமாஸ்தாக்களில் ஒருவர் சொன்னார்.

பின்னர், இதற்கு முன்னால் நடந்திருக்கும் பெரிய பாங்கி மோசடி வழக்குகளைப் பற்றியும், அதிலெல்லாம் எப்படி எப்படித் திருடினார்கள், எப்படி எப்படி அகப்பட்டுக் கொண்டார்கள் என்பது பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டார்கள். மேற்படி குற்றவாளிகளுக்குக் கிடைத்த கடுந் தண்டனைகளைக் கேட்ட போது, ஸௌந்தரத்துக்கு ஸப்த நாடியும் ஒடுங்கி விட்டது. ஒரு கேஸில் ‘அப்ரூவர்’ ஆனவன் மன்னிக்கப்பட்டதை அறிந்தபோது “நாமும் ஒருவேளை ஒப்புக் கொண்டு விட்டால் மன்னித்து விடுவார்களோ?” என்று எண்ணினான். ஆனால், அது எப்படி முடியும். குற்றத்தை ஒப்புக் கொள்வதென்றால், தங்கத்தினிடமும் சொல்லியாக வேண்டும்? அவளிடம் எப்படி இந்த வெட்கக் கேட்டைச் சொல்வது? அதைவிடப் பிராணனை மாய்த்துக் கொள்ளலாம்!

தற்கொலை செய்வதற்குரிய வழிகளைப் பற்றி அவனுடைய மனம் சிந்திக்கத் தொடங்கியது. இடையிடையே, “எதற்காக இந்தப் பைத்தியக்கார எண்ணங்கள் எல்லாம்? வெறும் சந்தேகத்தின் பேரில் சிறைக்கு அனுப்ப முடியுமா? தடையம் கிடைத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்? தடையம் என்ன இருக்கிறது? தங்கம் வாயை மூடிக் கொண்டிருக்கிற வரையில் யார் என்ன செய்ய முடியும்” என்றும் எண்ணமிட்டான்.

நகைக் கடையில் ஒட்டியாணம் வாங்கியதும், வைரத் தோட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. ஆர்டர் புத்தகத்தில் இவனுடைய கையெழுத்துக் கூட இருக்கிறது. ஒரு வேளை அங்கே போய் விசாரித்திருப்பார்களோ? – இந்த ஒரு வழியில் தான் விஷயம் வெளியானால் வெளியாக வேண்டும்.

அன்று மாலை பாங்கி மூடிய பிறகு, ஸௌந்தரம் நேரே வீட்டுக்குப் போகாமல் கடைத் தெருவுக்குச் சென்றான். வைரத்தோடு தயாராகி விட்டதா என்று கேட்டுக் கொண்டு, அத்துடன் யாராவது தன்னைப் பற்றி விசாரித்தார்களா என்றும் தெரிந்து கொண்டு வரலாமென்று ஒட்டியாணம் வாங்கிய கடையை நோக்கிப் போனான். கடைக்குக் கொஞ்ச தூரத்தில் அவன் வந்து கொண்டிருந்தபோது, மேற்படி கடை வாசலில் மானேஜிங் டைரக்டர் ஸகஸ்ரநாமத்தின் மோட்டார் வண்டி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான். அங்கேயே ஒரு சந்தில் ஒதுங்கி நின்றான். சற்று நேரத்துக்கெல்லாம் வண்டி சாலையோடு போயிற்று. அதற்குள் ஸகஸ்ரநாமம் இருந்தார். சரி, நம்மைப் பற்றித்தான் விசாரித்திருக்கிறார் என்று அவனுக்கு நிச்சயம் ஆயிற்று. பயத்தினால் அவனுடைய நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. கடைக்குப் போகலாமா, வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தான். போய்த்தான் பார்த்து விடலாம் என்று துணிந்து போனான். கடை வாசலில் போனதும் மறுபடியும் ஒரு கணம் தயங்கி நின்று, உள்ளே நோக்கினான். அவனுடைய நெஞ்சு ஒரு நிமிஷம் அடித்துக் கொள்ளாமல் நின்று விட்டது. ஏனெனில் அங்கே கடை முதலாளிக்கு அருகில் அந்த ஸி.ஐ.டி. கழுகு உட்கார்ந்து அவருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தது!

கடைக்குள் நுழையாமலே ஸௌந்தரம் விரைவாகத் திரும்பினான். வீட்டுக்கு எப்படித்தான் வந்து சேர்ந்தானோ, தெரியாது. தான் செய்த காரியம் தெரிந்து போய்விட்டது என்பதைப் பற்றி அவனுக்கு இப்போது சந்தேகமே இருக்கவில்லை. எப்படியும் நாளைக்குக் கட்டாயம் கைது செய்து விடுவார்கள். அந்த அவமானத்தை சகித்துக் கொண்டிருக்க முடியாது. தங்கம் என்ன நினைப்பாள்? அவளுடைய தமக்கைமார்கள் என்ன நினைப்பார்கள்? ஏழைக்குக் கொடுத்த என்னுடைய கடைசிப் பெண்தான் சந்தோஷமாயிருக்கிறாள்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த மாமியார் என்ன நினைப்பாள்?

உயிரைவிடுவதா, அல்லது ஓடிப் போவதா என்பதுதான் இப்போது கேள்வி, உயிரை விடுவதற்கு வழி என்ன என்று யோசிப்பதற்குக்கூட அவனுக்கு இப்போது சக்தியில்லை. மனது அவ்வளவு கலக்கமாயிருந்தது. கடைசியில், “இப்போதைக்கு எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஓடிப் போகலாம். பிறகு நிலைமைக்குத் தகுந்தாற்போல் பார்த்துக் கொள்ளலாம்” என்று தீர்மானித்தான்.

அன்று இரவு தான் ஸௌந்தரம் தங்கத்துக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு அவளுக்குத் தெரியாமல் வெளியேற முயன்றான்.

தங்கத்தினிடம் ஸௌந்தரம் இலேசில் உண்மையைச் சொல்லி விடவில்லை. கேள்வி கேட்டும், கண்ணீர் விட்டும், ஆணை வைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்படியுங்கூட, ஒரு விஷயம் ஸௌந்தரம் அதிகப்படியாகக் கற்பனை செய்துதான் சொன்னான். ஒரு சிநேகிதன் 2000 ரூபாய் கடன் கொடுப்பதாகச் சொல்லியிருந்தாகவும், அது மறுநாள் வந்து விடுமென்று நம்பி பாங்கி பணத்தைப் போட்டு ஒட்டியாணம் வாங்கியதாகவும், அந்தப் பாவி பிறகு கையை விரித்து விட்டான் என்றும் கூறினான். தன்னுடைய குற்றத்தைக் குறைத்துக் கொள்ளும் எண்ணத்துடனேதான் ஸௌந்தரம் இப்படிக் கற்பனை செய்து சொன்னான். ஆனால் இது தங்கத்துக்குப் பெரிய ஆறுதல் அளித்தது! கவலையினாலும் கண்ணீரினாலும் பயத்தினாலும் வாடி வதங்கிப் போயிருந்த அவளுடைய முகம் ஒரு நிமிஷம் பிரகாசம் அடைந்தது. “அப்படியானால், எடுத்தது தெரியாமல் இப்போது கூடப் பணத்தைப் போட்டு விடலாமோ?” என்று கேட்டாள்.

“இப்போது ரொம்ப நாளாகி விட்டதே!” என்றான் ஸௌந்தரம்.

“அதனால் என்ன மோசம்? நான் பெண் பேதை, ஒன்றும் தெரியாதவள்தான். இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நான் சொல்கிறதைக் கேளுங்கள். இந்த ஒட்டியாணத்தை நாளைக்குக் காலையில் கொண்டுபோய் விற்று விடுங்கள். நல்ல வேளையாகத் தங்க நகையாக வாங்கினோமே? வைரமாயிருந்தால், பாதிப் பணம் கூட வராது. விற்றுவிட்டால், கையில் பாக்கியுள்ளதையும் எடுத்துக் கொண்டு நேரே மேனேஜரிடம் போய் நடந்தது நடந்தபடி சொல்லி விடுங்கள். பகவான் இருக்கிறார். நமக்கு ஒன்றும் கெடுதி வராது” என்றாள் தங்கம்.

ஒரு விதத்தில் அது சரியான யோசனை என்று ஸௌந்தரத்துக்கும் தோன்றியது. இப்போதுள்ள பாங்கி நெருக்கடி காபராவில், மானேஜிங் டைரக்டர் கேஸ் நடத்துவதற்கு விரும்ப மாட்டார். பணம் வந்தால் போதுமென்று விட்டு விடுவார். உண்மையைச் சொல்லி, மன்னிப்பைக் கேட்டுக் கொண்டால், அதற்குப் பலன் இல்லாமலா போகும்? ஆனாலும், எவ்வளவோ ஆசையுடன் தங்கத்துக்கு வாங்கிக் கொடுத்த ஒட்டியாணத்தை உடனே விற்கிறதா? இப்போது அவள் சம்மதித்தாலும், பிறகு வாழ்நாளெல்லாம் சொல்லிக் காட்ட மாட்டாளா?

“என்ன யோசிக்கிறீர்கள்? நான் சொன்னபடி செய்கிறாதாக சத்தியம் செய்து கொடுங்கள். இல்லாவிட்டால் விடமாட்டேன்” என்றாள் தங்கம். அந்தப்படியே அவன் சத்தியம் செய்து கொடுக்கிற வரையில் அவள் விடவில்லை.

அடுத்த நாள் காலையில் ஸௌந்தரம் ஒட்டியாணத்தைக் கடைத் தெருவுக்கு எடுத்துக் கொண்டு போய் வேறொரு நகைக் கடையில் அதை விற்றான். வழக்கம்போல் கூலியைக் குறைத்துக் கொண்டு தங்க விலைக்கு எடுத்துக் கொண்டார்கள். அதிர்ஷ்டவசமாக அந்தப் பத்து நாளில் பவுன் விலை மூன்று ரூபாய்க்கு மேல் உயர்ந்திருந்தது. ஆகையால், ஒட்டியாணத்துக்குக் கொடுத்த பணம் அப்படியே திரும்பி வந்து விட்டது!

மானேஜிங் டைரக்டரிடம் கொண்டு போய் ஆயிரத்தைந்நூறு ரூபாயையும் வைத்து ஸௌந்தரம் விஷயங்களைச் சொன்னபோது, அவர் ஆச்சரியத்தினால் பிரமித்துப் போனார், “நல்ல வேளை; இன்றைக்கே கொண்டு வந்து கொடுத்தாய்; நாளைக்கு ‘டூ லேட்’ ஆகிப் போயிருக்கும்” என்றார். அவனை மன்னித்து விடுவதாகவும், அவன் மேல் வழக்குத் தொடுப்பதில்லையென்றும் வாக்குக் கொடுத்தார்.

இவ்வளவு சுலபமாகக் காரியம் நடந்து விடுமென்று ஸௌந்தரம் எதிர்பார்க்கவேயில்லை. ஆகவே, கொஞ்சம் தைரியமடைந்து, “ஸார்! தயவு செய்து அந்த ஸி.ஐ.டி. காரனை உடனே போகச் சொல்லுவிடுங்கள். அவன் முழித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தால், ஒரு வேலையும் ஓட மாட்டேன்கிறது” என்றான்.

மானேஜிங் டைரக்டரின் புருவங்கள் மறுபடியும் ஆச்சரியத்தினால் நெறிந்தன.

“எந்த ஸி.ஐ.டி. யைச் சொல்கிறாய்?” என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.

“எதிர் ஹோட்டல் மாடியில் இருக்கிறவனைத் தான், ஸார்! அவன் முகத்தை நினைத்துக் கொண்டால் இராத்திரியில் தூக்கம் வரமாட்டேன்கிறது” என்றான் ஸௌந்தரம்.

மானேஜிங் டைரக்டர் மூக்கிலே விரலை வைத்து, தம்முடைய ஆச்சரியத்தைத் தெரியப்படுத்தினார்.

“பலே கெட்டிக்காரன் நீ! ஸி.ஐ.டி. போட்டிருக்கிறதைக் கூட கண்டு பிடித்து விட்டாயே? இன்றைக்கு ஒருநாள் தான் அவன் இருப்பான்; நாளைக்கு வரமாட்டான்” என்றார்.

“ரொம்ப வந்தனம். ‘கவுண்டருக்குப் போகிறேன், ஸார்!” என்றான் ஸௌந்தரம்.

“இவ்வளவு புத்திசாலி இந்தச் சின்ன வேலையில் இருக்கக்கூடாது. கூடிய சீக்கிரம் உன்னை ஒரு கிளை ஆபீஸ் ஏஜெண்டாகப் போடுகிறேன்” என்றார் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம்.

ஸௌந்தரம் மிக்க உற்சாகத்துடன் கீழே சென்றான். அன்று நிம்மதியாக வேலை பார்த்தான். ஸி.ஐ.டி. காரனையோ அவனுடைய கழுகுப் பார்வையையோ கொஞ்சங்கூட இலட்சியமே செய்யவில்லை.

சாயங்காலம் வீட்டுக்குப் போனதும் தங்கத்தினிடம் எல்லா விபரங்களையும் சொன்னான். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக இரண்டு பேரும் ஒரு ஹிந்தி டாக்கிக்குப் போய் விட்டு வந்தார்கள். ஹிந்தி டாக்கியில் ஒரு சௌகரியம் உண்டு. திரையில் பேசுகிறது என்னமோ இவர்களுக்குத் தெரியாது. இவர்கள் பாட்டுக்குத் தங்கள் சமாசாரம் பேசிக் கொண்டிருக்கலாமல்லவா?

இராத்திரி இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தாலும் பிறகு நிம்மதியாக தூங்கினார்கள். மறுதினம் காலையில், அடுத்த வீட்டு அய்யாசாமி ஐயர் கையில் காலை தினசரிப் பத்திரிகையுடன் அவசரமாய் வந்தார். “என்ன மிஸ்டர் ஸௌந்தரம்! கடைசியில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டீர்களே!” என்று கேட்டுக் கொண்டு வந்தார். ஸௌந்தரம் ஒன்றும் புரியாமல் “என்ன? என்ன?” என்று பரபரப்புடன் கேட்டான். “உங்களுக்குத் தெரியாதா, என்ன? ‘குபேரா பாங்கி’ கோவிந்தா ஆகிவிட்டதாமே? ஸகஸ்ரநாமம் எல்லோருக்கும் பெரிய நாமத்தைப் போட்டு விட்டுப் போய் விட்டானாமே?” என்று சொல்லிப் பத்திரிக்கையைக் கொடுத்தார். ஸௌந்தரம் அளவில்லாத திகைப்புடன் பத்திரிகையை வாங்கிப் படித்தான். அதில் பின்வரும் செய்தி, கட்டம் கட்டி, பெரிய எழுத்தில் போட்டிருந்தது.

“குபேரா பாங்கியில் சில நாளைக்கு முன் பரபரப்பு ஏற்பட்டிருந்தது நேயர்களுக்கு தெரியும். அந்தப் பரபரப்பு ஒரு வாரமாக அடங்கியிருந்தது. பாங்கிக்கு நெருக்கடி தீர்ந்து விட்டது என்று எல்லாரும் எண்ணியிருந்த சமயத்தில், திடுக்கிடும்படியான சம்பவங்கள் நேற்று இரவு நடந்திருந்தன. குபேரா பாங்கியின் மானேஜிங் டைரக்டர் ராவ் சாகிப் ஸகஸ்ரநாமம் நேற்று இரவு எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டார். பாங்கியின் கையிருப்பிலிருந்து அவர் ஏராளமான தொகைகளைக் கையாடியிருப்பதாகத் தெரிந்தது. சில நாளாக இரகசியப் போலிஸார் அவரைக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு கைது செய்யப்பட்டபோது அவர் வசம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமான சவரன்களும் தங்க நகைகளும் இருந்தன என்று தெரிகிறது. முந்தைய இரண்டு தினங்களில் அவர் மார்க்கெட்டில் ஏராளமாக சவரன்கள் வாங்கிச் சேகரித்திருந்தாராம். அவர் மதுரைக்கு டிக்கட் வாங்கியிருந்த போதிலும், உண்மையில் புதுச்சேரிக்குப் போக உத்தேசித்திருந்தாரென்று தெரிகிறது. அவரை நல்ல சமயத்தில் கைது செய்த ஸி.ஐ.டி. போலீஸாரின் சாமார்த்தியம் பெரிதும் பாராட்டப்படுகிறது.”

இதைப் படித்ததும் சுமார் கால் மணி நேரம் வரையில் ஸௌந்தரம் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். யோசிக்க யோசிக்க அவனுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாகத் தெரிய வந்தன. ஸி.ஐ.டி. காரன் பாங்கியைக் காவல் புரிந்ததெல்லாம் தனக்காக அல்ல; மானேஜிங் டைரக்டருக்காகத்தான். தான் ஒட்டியாணம் வாங்கிய நகைக் கடையில் மானேஜிங் டைரக்டர் ஸவரன் வாங்கியிருக்க வேண்டும்; அவர் அங்கே என்ன செய்தார் என்றுதான் ஸி.ஐ.டி.காரன் விசாரித்திருக்க வேண்டும்! தனக்கு ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக்கவில்லை; பணம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டியதேயில்லை. வீண் பயம்! வீண் நஷ்டம்!

அவனுடைய மனம் ஒருவாறு தெளிவடைந்ததும், உள்ளே போய், தங்கத்தைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான். அவளும் ரொம்ப ஆச்சரியப்பட்டாள்.

“நாம் பயப்பட்டது எல்லாம் வீண்!” என்று ஸௌந்தரம் சொன்னபோது, அவனுடைய மனதில் இருந்ததைத் தெரிந்து கொண்ட தங்கம், “நல்ல வேளை நேற்றைக்கே ஒட்டியாணத்தை விற்றுப் பணத்தைக் கொடுத்துத் தொலைத்தீர்களே! இல்லாமற் போனால், அது நம் தலையில் எப்போதும் ஒரு பெரிய பாரமாயிருக்கும்” என்றான்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று ஸௌந்தரத்துக்குத் தெரியவில்லை. சற்று நேரம் கழித்து, திடீரென்று, “தங்கம்! இதில் இன்னொரு சங்கடம் இருக்கிறதே! பாங்கியை மூடி விட்ட படியால் எனக்கு வேலை போய் விட்டதே!” என்று கவலையுடன் கூறினான்.

“வேலைதானே போச்சு? போனால் போகட்டும். நீங்கள் போகாமல் இருக்கிறீர்களே. அதுவே எனக்குப் போதும்” என்றாள் தங்கம்.

ஸௌந்தரம் வேறொன்றும் சொல்லத் தோன்றாமல், “என் தங்கமே!” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *