மச்சக்காளையின் மரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 3,727 
 

(இதற்கு முந்தைய ‘இறுதி உரை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

மச்சக்காளை சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.

எங்கே ரயில் ஏறி என்ன செய்ய, கர்மம் தொலையாது காசிக்குப் போனாலும் என்கிற மாதிரி சென்னை சென்றாலும் புற்றுநோய் அவரைவிட்டு விலகுவேனா என்றது.

விரட்டப்பட விரட்டப்பட மற்றொரு இடத்தில் உருவாகும் கரையான் புற்று போல், சுவாசப் பைகளில் மையம் கொண்டிருந்த அவருடைய புற்று கணையம், கல்லீரல் என அதன் ஆதிக்கத்தை விரிவு படுத்தியது.

சென்னைக்கு கிளம்பிப் போன வேகத்தில் திரும்பி வந்து விட்டார் மச்சக்காளை. எந்த நடவடிக்கையும் இல்லாமல் முற்றிலுமாக முடங்கிவிட்டார். பேச்சு சுத்தமாக நின்றுபோனது. மரணத்தைப் பார்ப்பது போலவே எல்லோரையும் பார்த்தார்.

அவராக எதையும் செய்கிற முறைகள் எல்லாம் அறவே அற்றுப் போய்விட்டன. படுத்தே கிடந்தவர் வலி தாங்க முடியாமல் போகிற நேரங்களில் எழுந்து உட்கார்ந்துகொண்டு துடியாய் துடித்தார். வலி அதையும் மீறி அதிகமானபோது மச்சக்காளை அந்தப் புற்று நோயையே கெட்ட கெட்ட வார்த்தைகளால் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்த்தார்.

சில நேரங்களில் வசவுகள் அவரைப் படைத்த கடவுள்களின் பக்கமாகத் திருப்பி விடப்பட்டன. மச்சக்காளையால் வலி தாங்க முடியவில்ல்லை என்ற செய்தி வந்ததுமே, அவரின் டாக்டர் வலி தெரியாமல் இருக்கச் செய்கின்ற ஊசியைப் போடுவதற்காக உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடித்தான் வருவார். ஆனால் மச்சக்காளைக்கு அதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும்.

“உயிர் போறதுக்கு ஏதாவது ஊசி இருந்தால் போடுங்க டாக்டர்…” என்று டாக்டரிடம் அரற்றுவார். டாக்டருக்கு தெரியாதா அது? எந்த ஊசி போட்டால் உயிர் உடனே போகும்; எந்த ஊசி போட்டால் உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போகும் என்கிற விஷயங்கள் எல்லாமே டாக்டருக்கு அத்துப்படிதான். ஆனால் அந்த மாதிரி ஊசி எதையும் யாருக்கும் போட்டு விடுகிற ஏது ஒரு டாக்டருக்கு? வலி தெரியாமல் இருப்பதற்கான ஊசி எதுவோ, அதை மட்டும் போட்டுவிட்டு, ஓடிவந்த மாதரியே டாக்டர் திரும்பி ஓடியும் விடுவார்.

ஊசி மருந்து வேலை செய்ய ஆரம்பித்ததும் மச்சக்காளைக்கு வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். கிறக்கமாக ஒரு மாதிரியான தூக்கமும் வந்துவிடும். சில நேரங்களில் தூக்கம் கலையும்போதே வலியும் தூங்கி எழுந்த மாதிரி வலிக்க ஆரம்பித்துவிடும். திடீரென்று சில நாட்களுக்கு வலி ஒரு பொட்டுக்கூட இருக்காது. அது அவருக்கே ஆச்சரியமாக இருக்கும். நம்ப முடியாமலும் இருக்கும். தானாகவே புற்றுநோய் சரியாகி விட்டதோ என்றுகூட அவரை சிறுதுநேரம் சந்தோஷப்பட வைத்துவிடும். அந்தக் கொஞ்ச நாட்கள் மச்சக்காளை புதிதாகப் பிறந்தவர் போல இருப்பார்,

அப்போதெல்லாம் சிறிது நேரம் ஊஞ்சலில் உட்கார்ந்து கழுத்தை குனிந்தபடி லேசாக ஆடிக்கொண்டிருப்பார். அவரின் ‘வட்டிக் கடை’க்குள் நுழைந்து கொஞ்சநேரம் ஆசையாக உட்கார்ந்திருப்பார். புற்றுநோயின் தாக்குதல் அதிகமான பின் பேப்பர் படிப்பதை முழுவதுமாகவே நிறுத்தி வைத்திருந்தவர்; நோயின் வலி இல்லாத அந்தக் கொஞ்ச நாட்களில் அவரின் பல வருடப் பழக்கப்படி பக்கத்து ஐயர் வீட்டிலிருந்து பேப்பர் வாங்கி வரச்சொல்லி ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்.

ஐயர் வீட்டுக்காரர்களுக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். மச்சக்காளை இன்று போய்விடுவார் நாளை போய்விடுவார் என்று எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு திடீரென்று அவருக்குப் படிக்க பேப்பர் கேட்டு அவரின் இரண்டாவது மகன் முருகேசன் வந்து நின்றால் எப்படி இருக்கும்?

ஆனால் இதெல்லாம் வெறும் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குத்தான். மறுபடியும் மச்சக்காளைக்கு வட்டியும் முதலுமாக வலி கடுமையாகத் தொடங்கிவிடும். அவ்வளவுதான். அவரின் அறைக்குள் கட்டிலில் முடங்கி விடுவார். திருப்பியும் ஊரில் இருக்கும் எல்லா கடவுள்களுக்கும் அவரிடமிருந்து ஊரில் இல்லாத கெட்ட வார்த்தைகளில் வசவுகள் அது பாட்டுக்கு போகும்! இப்படியாக அவரின் கடைசி தினங்களில் அவர் மிகவும் தவித்துக் கொண்டிருந்தார்.

மச்சக்காளை எப்போதும் வெள்ளிக் கிழமைகளில் யாரிடம் இருந்தும் என்ன அவசரமாக இருந்தாலும் சரி, அடமானமாக நகைகளையோ, சொத்துப் பத்திரங்களையோ வாங்கிக் கொள்ளவே மாட்டார். யாருக்கும் எந்தக் கடனும் கொடுக்க மாட்டார். இதை ஒரு கோட்பாடாகவே வைத்திருந்தார். அந்தக் கோட்பாடு அவரின் சாவுக்குக் கிடையாது போலும்.

மச்சக்காளை ஒரு வெள்ளிக்கிழமைதான் விடிகாலையில் காலமானார்.

வலி தெரியாமல் இருப்பதற்காக போடப்பட்டிருந்த ஊசி மருந்தின் உதவியினால் தன்னை மறந்து அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிர் அவரின் உடம்பை விட்டுப் பிரிந்தது. அதனாலேயோ என்னவோ இறந்துபோன பிறகும் அவரைப் பார்க்கின்றவர்களுக்கு மச்சக்காளை தூங்கிக் கொண்டிருப்பவர் மாதிரியே தெரிந்தார்.

வீட்டில் கதிரேசன் ஒருத்தன்தான் அழவில்லை. மற்ற எல்லோரும் கதறி அழுது தரையில் புரண்டு ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் கதிரேசன் சிறிதும் உணர்ச்சி வசப்படாமல் அப்பாவின் இறுதிக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தான். அதற்காக அப்பாவின் மரணத்திற்காக அவன் துக்கப் படவில்லை என்றோ; மனதிற்குள் சந்தோஷப் பட்டான் என்றோ சொல்லிவிட முடியாது. அப்பாவுக்காக கதிரேசன் பரிதாபப் பட்டான். அதேநேரம், தன் வாழ்க்கையின் ரொம்பப் பக்கத்தில் இருந்த ஒரு கிரண நிழல் நீங்கிவிட்ட களைப்பும் அவனிடம் இருந்தது. ஒரு சின்னப் பெருமூச்சு அவனுடைய நெஞ்சில் இருந்து வெளிப் பட்டதையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது!

காரியங்கள் எல்லாம் முடிந்தன. மரணப் படுக்கையில் இருந்த நேரத்தில் அப்பா அவனிடம் சொல்லியிருந்த சிலவற்றை கதிரேசன் மனப் பூர்வமாகவே செய்தான். அம்மாவை ரொம்ப நன்றாக வைத்துக்கொண்டான். வீட்டையும் பிற சொத்துக்களையும் சீராக நன்கு மேற்பார்வை பார்த்துக்கொண்டான். தம்பி தங்கச்சிகளைப் பொறுப்புடன் அன்பாக வைத்துக்கொண்டான்.

ஆனால் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலை கண்ணும் கருத்துமாய் தொடர்ந்து செய்து வரும்படி அப்பா சொன்னதை மட்டும் கதிரேசன் ஏற்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டான். அவனின் அம்மாகூட ‘அப்பாவின் கடைசி ஆசை’ என்று கொஞ்சம் எடுத்துச் சொல்லிப் பார்த்தாள். ஆனால் கதிரேசன் சற்றும் தாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிட்டான். வாழ்க்கையில் ஒருநாளும் அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்வதாக இல்லை. அவனைப் பொறுத்தவரை வட்டி வியாபாரம் என்பது அப்பாவின் சாம்பலோடு சேர்ந்து சாம்பலாகிவிட்டது.

அப்பா இறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன…

பாளை தெற்கு பஜாரில் விலைக்கு வந்த பெரிய கடை ஒன்றை கதிரேசன் வாங்கினான். நிறைய செலவுகள் பண்ணி பழுதுகள் பார்த்து, ஏகப்பட்ட மராமத்து வேலைகள் செய்து நவீன மாற்றங்கள் செய்தான். தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருந்த அவன், தான் வாங்கிய புதிய கடையில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தான். அதற்கு என்ன பெயர் வைத்தான் தெரியுமா? ‘மச்சக்காளை கம்ப்யூட்டர் மையம்’.

இந்தப் பெயரை கதிரேசனாக விருப்பபட்டு வைக்கவில்லை. அப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என்கிற ஆர்வமும் அவனுக்குக் கிடையாது. வைக்கக் கூடாது என்ற கோபமும் அவனுக்கு அவரிடத்தில் கிடையாது. அவனைப் பொறுத்தவரை மச்சக்காளை தனது தந்தை என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிற மாதிரி அவர் வாழ்ந்துவிட்டுப் போகவில்லை. அவ்வளவுதான்!

கதிரேசனின் அம்மா கோமதிதான் மகன் ஆரம்பித்த கம்ப்யூட்டர் மையத்திற்கு தன் புருஷனின் பெயரை வைக்கும்படி ரொம்ப ஆசைப்பட்டு சொல்லிக்கொண்டே இருந்தாள். கதிரேசனும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அம்மாவின் ஆசையை நிறைவேற்றினான்.

அவனின் கம்ப்யூட்டர் மையத்திற்கு பெயர் எதுவாக இருந்தால் என்ன… நிச்சயமாக அது கதிரேசனின் பெயர் சொல்லும் விதமாகத்தான் இருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *