நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 2,858 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

இரவு படுக்கையில் சரிந்த சாந்திக்கு, இமைகள் சரிய முடியாமல் தவித்தன. மனம் இனம் புரியாத வெறுமை உணர்வில் மூழ்கியிருந்தது. ராம் வரும்வரை உள்ளத்திலிருந்த எண்ணங்களும் உவகை நிறைந்த கற்பனைகளும் ராம் வந்தபின் ஏனோ தடுமாறிப் போயின! அவன், வீட்டிற்கு வரும்போது நன்றாக வரவேற்க வேண்டுமென்றிருந்த எண்ணமும் மரத்துப் போனதில், உழுந்துப் பேணியிலிருந்த கவனமும் கழன்று நீண்டநேரமாகிவிட்டிருந்தது. 

‘அவர் என்னைப்பற்றி நினைப்பாரா? நினைத்திருந்தால் பின்னேரம் அங்கை அம்மா போனபோது என்னைப்பற்றி விசாரித்திருப்பாரே? விசாரிக்கவில்லை! அப்போ… அவர் என்னை நினைத்துப் பார்க்கவேயில்லை!’ அவளுக்கு வேதனையாக இருந்தது. 

‘கனடாவிலை… எத்தினை வடிவான கேள்ஸ்சைப் பார்த்திருப்பார்; பழகியிருப்பார். ஆரையும் ‘லவ்’ பண்ணியுமிருப்பார். இவருக்குப்போய் என்னைக் கட்டிவைக்க அம்மாவும் அப்பாவும் ஆசைப்படுகினம். வேற வேலையில்லையே! நான் “மாட்டன்” எண்டு சொன்னால் என்ன செய்வினம்?’ சாந்தி தனக்குத் தானே கேள்விகளைப் போட்டுக் கொண்டிருந்தாள். 

சுவர்க் கடிகாரம் பதினொரு தடவைகள் அடித்து ஓய்ந்த பொழுது, சுகந்தி அறைக்குள் நுழைந்து, தாழ்ப்பாளைப் போட்டுவிட்டுப் பாயை விரித்தாள். 

“என்னக்கா? பத்து மணிக்கு முன்னமே படுக்கைக்கு வந்தனிங்கள்!… இன்னும் நித்திரை கொள்ளயில்லையே?” ஆச்சரியமாகக் கேட்டவாறே படுக்கையில் சரிந்த சுகந்தி, 

“ஓஹோ… இண்டைக்கு நித்திரை வராதுதானே! மனம் விட்டுக் கதைக்கவேண்டிய ஆளோடை இன்னமும் கதைக்கிறதுக்குச் சந்தர்ப்பம் வரயில்லை…அந்தக் கவலையிலை நித்திரை வராதுதானே” சிரித்தவாறே மறுபக்கம் புரண்டு படுத்தாள். 

“ஏய்… ;சும்மாயிரு” சாந்திக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. 

“கண்டறியாத… மனம்விட்டுக் கதைக்கிற கதை, அவரோட எனக்கென்ன கதை வேண்டிக்கிடக்கு” தனக்குள் முணு முணுத்த சாந்தி, 

”சுகந்தி லைற்றை ஓஃப் பண்ணிவிடு, கண்கூசுது” என்றதும் சட்டென்று எதுவோ ஞாபகம் வந்தவளாகத் துள்ளி யெழுந்த சுகந்தி, அறைக்குள் இருந்த அலுமாரியைத் திறந்து எதையோ தேடினாள். 

“என்ன தேடுறாய்…?” சாந்திதான் கேட்டாள். 

“நான் பின்னேரம் மாமா வீட்டடியாலை ராகினி வீட்டுக்குப் போகேக்கை, ராமத்தான் என்னைக் கண்டிட்டுக் கூப்பிட்டவர்…” அவள் கூறவந்ததைக் கூறிமுடிக்காமல் அலுமாரியிலுள்ள பொருட்களைக் கிளறிக்கொண்டிருந்ததும், ஆர்வத்தோடு படுக்கையை விட்டெழுந்த சாந்தி, 

“என்ன, என்ன கேட்டவர்? சொல்லி முடிச்சிட்டுத் தேடன்” என்று சுகந்தியை அவசரப்படுத்தினாள். 

“நான் நல்லாய் வளர்ந்திட்டனாம். முந்திச் சின்னப் பெட்டையாய் இருந்தநான், இப்ப… பெரிய மனுசி மாதிரி தன்னைக் கண்டும் காணத மாதிரிப் போறன் எண்டு குற்றஞ் சொன்னார். பிறகு… உங்களை எங்கையெண்டு கேட்டுப் போட்டு ஒரு கசற்பீஸ் தந்து ஒருத்தருக்கும் காட்டாமல் அதிலையுள்ள பாட்டுக்களை… உங்களைப் போட்டுக் கேக்கச் சொல்லிப் பகிடியாய்ச் சொன்னார். நான்… அதைக்கொண்டு வந்து அவசரத்திலை இதுக்குள்ளை தான் செருகினனான், இப்ப காணயில்லையே!” சுகந்தி கூறியவாறே யோசனையோடு தேடினாள். 

சாந்திக்குத் திடீரென்று தோன்றிய சந்தோசமான அதிர்ச்சியில் கையும் காலும் உதறல் எடுக்க, இனம் புரியாத பரவசத்தில் மனம் தத்தளித்தது. 

“என்னைப் போட்டுக் கேக்கச் சொல்லித் தந்துவிட்டவரோ…?” ஆச்சரியமாக வாய்விட்டுக் கேட்டவள் ஆவலோடு தானும் சேர்ந்து தேடத்தொடங்கினாள். 

“வெள்ளன… அப்பா இதுக்குள்ளை ஏதோ கிண்டிக் கிளறிக் கொண்டு நிண்டவர்; ஒருவேளை எடுத்திட்டாரோ?” சுகந்தி யோசனையோடு கூறினாள் 

“அடிமக்கு! நீ அப்பவே கொண்டுவந்து என்னட்டைத் தந்திருக்கக் கூடாதே?” கசற் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் சாந்தி தங்கையைத் திட்டினாள். 

“நான் அதைக் கொண்டு வரேக்கை .. அம்மாவும் அப்பாவும் உங்களுக்குப் பக்கத்திலை நிண்டவையெல்லே! அவர் ஒருத்தருக்கும் காட்ட வேண்டாமெண்டவர் அப்ப நான் எப்படி உங்களட்டைத் தாறது?” சுகந்தி குரலைத் தாழ்த்தி அழுது விடுபவள் போல் கூறினாள் 

“சரி… வடிவாய்த் தேடு” சாந்தி கூறியவாறே அலுமாரியை ஒரு அலசு அலசினாள். அடியிலிருந்து கையில் தட்டுப்பட்ட கசற்பீஸ் ஐக் கண்டதும் அவளுக்கு மகிழ்ச்சி கரை புரண்டுகொண்டு வந்தது. 

“சுகந்தி என்ன கனநேரமாய் அறைக்குள்ளை லைற் எரியுது? உங்கை என்ன செய்யிறியள்?” சிவகாமி அடுத்த அறையிலிருந்து குரல் கொடுத்ததும், 

“அது… என்ரை புதுக்கொப்பியொண்டு அந்த அலுமாரிக்குள்ளை வைச்சனான்; காணயில்லை ; அதுதான் தேடுறன்” சுகந்தி நாசுக்காகக் கூறிவிட்டு நாக்கைக் கடித்தவாறே அலுமாரியைச் சரிப்படுத்தி விட்டாள், 

சாந்தி கசற்றை கசற் பிளேயரில் போட்டு வொல்யூமை மெதுவாகத் திருப்பிவிட்டு ஆவலோடு அருகில் காதைக் கொடுத்தாள். முதற் பாடல், ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா… உந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா…’ யேசுதாசின் குரலில் கணீரென்று ஒலித்தது. சுகந்தி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். சாந்திக்குக் கோபம் வரவில்லை; மாறாக வியப்பும் சிரிப்புமே ஏற்பட்டது. 

“அக்கா… பாத்தீங்களே கசற்றிலேயே உங்களை நல்லாய் கழற்றியிருக்கிறார். இதுக்கு நீங்கள் விடக்கூடாது, என்ன மாதிரியாவது நீங்களும் அவரைக் கழற்ற வேணும்” சுகந்தி சிரித்தவாறே அபிப்பிராயம் கூறினாள். 

“சும்மாயிரன்; அடுத்த பாட்டைக் கேட்பம்…” சாந்தி கூறி வாய் மூடமுன். 

“என்னது…? இந்த நேரம் பாட்டுக் கேக்கிறீங்களோ? உங்கை… வெளியிலை ‘அவங்கள்’ கூட்டமாய் வந்து நிற்பாங்கள். இப்ப பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க உள்ளையும் வந்திடுவாங்கள்’ சிவகாமி மீண்டும் குரல் கொடுத்தாள். 

“என்னம்மா…? மெதுவாத்தானே போட்டுக் கேக்கிறம். நீங்கள்தான் சத்தம் போட்டு, இப்ப, அப்பாவையும் எழுப்பப் போறியள்” சாந்தி கெஞ்சலாக வேண்டுதலோடு கூறியதும், சிவகாமி ஒய்ந்துகொண்டாள். 

அடுத்த பாடல் ‘நினைவிலே… மனைவியென்று அணைக்கிறேன் அவளை இன்று…’ பாலசுப்பிரமணியத்தின் குரலில் ஒலித்த அந்தப்பாடலைக் கேட்டதும், 

“அக்கா, நான் படுக்கப்போறன் பாட்டு நீங்கள் மட்டும் கேட்க வேண்டியது” பகிடியாகக் கூறிய சுகந்தி, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுக்கையில் சரிந்தாள்: 

“ஏய்! எழும்பியிரு ; நான் தனியாய் இருந்து கேட்க என்னவோ ஒரு மாதிரி இருக்குது” சாந்திக்கு ஒரே வெட்கமாகவும் சிலிர்ப்பாகவும் இருந்தது. 

“என்னக்கா நீங்கள் … சரி அடுத்த பாட்டை மட்டும் இருந்து கேட்டிட்டு நான் படுத்திடுவன் எனக்கு நித்திரை வருது. மிச்சப்பாட்டுகளை நீங்கள் ராமத்தான் வீட்டிலை போய்ப் போட்டுக் கேளுங்கோ” சுகந்தி நித்திரைக் கண்களுடன் பகிடியாகக் கூறினாள். 

அடுத்த பாடல் ‘காதல் மயக்கம்; அழகிய கண்கள் துடிக்கும்; ஆலிங்கனங்கள் பரவசம்…’ பாரதிராஜாவின் புதுமைப் பெண்ணும், பாண்டியனும் மனக்கண்ணில் ஓடிவர சட்டென்று பாடலை நிறுத்திவிட்டுப் படுக்கைக்கு வந்த சாந்தியை ஆச்சரியமாகப் பார்த்த சுகந்தி, 

“ஏன் நிப்பாட்டிப் போட்டியள்? நல்ல பாட்டெல்லே” அவசரமாகக் கேட்டாள். 

“எனக்கும் நித்திரை வருகுது” சாந்தி கூறியவாறே லைற்றை அணைத்துவிட்டுப் படுக்கையில் சரிந்தாள். உண்மையில் அவளுக்கு நித்திரை வந்துவிட்டதா? இல்லை; அதை மறைக்கத்தான் லைற்றை அணைத்துவிட்டாளே. அவளுக்கு அந்தப் பாடல்கள் மனதை மட்டுமல்ல, உடலையும் தாக்குவது போன்ற விசித்திரமான உணர்வுகளை ஏற்படுத்தின அவளுக்குத் தூக்கம் வரவில்லை. ஜன்னலினூடாக வந்த அரை நிலவின் வெளிச்சத்தில் கண்களுக்குத் தெரியும் அத்தனை பொருட்களும் அலங்காரத் தோரணங்களாக அசைந்து கொண்டிருப்பது போன்ற பிரமை! 

‘ஏன்… என்னைப் போட்டுக் கேட்கும்படி அந்தக் கசற்றைக் கொடுத்தார்? முதல் பாட்டுக்குக் காரணமிருக்குது. முந்தியிருந்த குறும்புத் தனத்திற்கு அந்தப்பாடல் சாட்சி! மற்றப் பாடல்கள்… வேண்டுமென்றே எனக்காக…’ கரை காண முடியாத நாணம் அவளைப் பிய்த்தெடுத்தது. 

‘பாட்டுக்களைக் கேட்டு சுகந்தி என்ன நினைத்தாளோ?’ அவள் சுகந்தியின் படுக்கையை உற்றுப் பார்த்தாள். சுகந்தி நீண்டநேரமாக நித்திரையில் லயித்திருப்பது போல் அசைவற்றுக் கிடந்தாள். 

சாந்தியின் கண்கள் மூடிக்கொண்டாலும் சிந்தனைகள் மூடிக் கொள்ள மறுத்தன. நீண்டநேரம் உறக்கமின்றிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். எழுந்திருந்து கவிதை எழுதவேண்டும் போலவும், மகிழ்ச்சியாகப் பாடவேண்டும் போலவும், உல்லாசமான எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. சுவர்க்கடிகாரம் ஒரு மணியை அடித்த பொழுது திடுக்குற்றவள், வற்புறுத்தலாக நித்திரையை வர வழைத்துக் கொண்டாள். 

பொழுது விடிந்த பொழுது, ஒருபடி அதிகமாகக் கொழுத்து விட்டது போன்ற உணர்வு அவளுள் ஏற்பட்டது. காலை வேலைகளை முடித்துக்கொண்டு, தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்த சாந்தி, நேரத்தைப் பார்த்தாள் கடிகாரம் 8.30 ஐக் காட்டிக் கொண்டிருந்தது 

”சுகந்தி’ எங்கை? இண்டைக்கு ஊரடங்குச் சட்ட மெல்லே; ஸ்கூலும் இல்லை; ராகினி வீட்டை படிக்கப் போயிட்டாளோ?” கேட்டவாறே சுகந்தியைத் தேடினாள். முதல் நாள் இரவு நடந்த சம்பவம் பற்றி சுகந்தி ஏதாவது கூறுவாளென எதிர்பார்த்தவளுக்கு சுகந்தியின் அமைதி ஆச்சரியமாக இருந்தது. 

‘அவளுக்கு… நாளையிண்டைக்கு வகுப்பிலை ஏதே ரெஸ்ற் எண்டு சொன்னவள், அதுதான் விடிய எழும்பிப் படிச்சுக் கொண்டிருந்தவளாக்கும். அவளுக்குப் படிப்பு என்றால் படிப்பு; விளையாட்டென்றால் விளையாட்டு, இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளமாட்டாள் மனதினுள் நினைத்த சாந்தி தங்கையை எண்ணிப் பெருமைப் பட்டுக்கொண்டாள். 

“சாந்தி .. அங்கை உன்ரை மாமிக்கு ஏதோ… நாரிக்குள்ளை பிடிச்சுப் போட்டுதெண்டு நேற்றிரவு சொன்னவ பாவம்! ராமும் வந்து நிக்கிறான் ..மனுசியால ஒண்டும் செய்ய ஏலாமலிருக்கும்… சுகந்தியும் ராகினி வீட்டில படிக்கவெண்டு போயிட்டாள். நானும் ஒழுங்கைகளுக்குள்ளாலையாவது கடைக்குப்போய் சாமன்கள் வாங்கிவர வேணும்… கொப்பரும் இண்டைக்கு ஓபீஸ் இல்லைத்தானே எண்டிட்டு, தென்னங் காணியைப் பார்க்கப் போயிட்டார்; மத்தியானம் வர நேரத்துக்குச் சாப்பாடு குடுக்கவேணும்; ஆனபடியாலை ….. நீதான் போய் மாமிக்குக் கொஞ்சம் உதவி செய்து கொடுத்திட்டு வரவேணும். சரியில்லை… பக்கத்திலையிருக்கிறனாங்கள் பார்க்காமல் இருக்கக்கூடாது.” சிவகாமி வேண்டுதலோடு கூறிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்துகொண்டாள். சாந்திக்குச் சந்தோசம் கரைபுரண்டது. அதனை வெளிக்காட்டாமல் மீண்டுமொரு தடவை தலையை வாரிப் பின்னிக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான நீலநிற அரைப் பாவாடையையும் சட்டையையும் அணிந்துகொண்டு கண்ணாடிக்குள் முகத்தைப்பார்த்தாள். முகத்தை இன்னுமொரு தடவை கழுவலாம் போலிருந்தது. கிணற்றடிக்கு ஓடியவள் மூன்றாந் தடவையாக முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டாள். 

‘என்ன? இப்பதானே முகம் கழுவினாய் போலை கிடந்தது…?” சிவகாமி நெற்றியைச் சுழித்தவாறே கேட்ட போது திடுக்குற்றவள், 

“அ… அது… இந்தப் பொட்டு நல்லாய் வழிஞ்சு போட்டுது” மனதினுள் தடுமாறியதை வெளிக்காட்டாமல் காரியத்தைத் தொடர்ந்தாள் முகத்தைத் துடைத்து, சுகந்திக்குத் தெரியாமல் தன் பெட்டிக்குள் எப்பொழுதோ ஒளித்து வைத்திருந்த பொண்ஸ் பவுடரை அளவாகப் பூசி பொட்டை வைத்துக்கொண்டு கண்ணாடியில் பார்த்த பொழுது அவளுக்குத் திருப்தியாக இருந்தது. 

“அம்மா நான் போயிட்டு வரட்டே?”சாந்தி வாசலுக்கு வந்தவாறே குரல் கொடுத்தபோழுது, 

“கொஞ்சம் இங்கை வந்திட்டுப் போவன்; கிணற்றடியில இருக்கிற வாளிகளுக்கை தண்ணி நிரப்பி வச்சிட்டுப் போணை. பிறகு… நீயும்போக, என்னாலை தனியா ஒண்டும் செய்ய ஏலாது, நல்ல தண்ணியும் அள்ள வேணும்… ” சிவகாமி கெஞ்சலாகக் கேட்டுவிட்டு தனக்குள் மெல்ல முணு முணுத்துக் கொண்டாள். சாந்திக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. 

“நான் நல்ல சட்டை போட்டிருக்கிறன்; இப்ப தண்ணி அள்ள ஸ்கேட் எல்லாம் நனைஞ்சு போயிடும்” தனக்குள் எரிச்சலோடு முணுமுணுத்த சாந்தி, நிதானமாகத் தண்ணீரை அள்ளி ஊற்றி, வாளிகளை நிரப்பி விட்டு, சிவகாமியிடம் விடைபெற்றுக் கொண்டு மாமன் – செல்லநாதர் வீட்டை நோக்கி ஒருவித ஆர்வத்தோடு நடக்கத் தொடங்கினாள். 

அத்தியாயம்-4

காலைவெயில் சுளீரென அடித்துக்கொண்டிருந்தது.தெரு, ஓரு வித அசாதாரண அமைதியில் வெறித்துக்கிடந்தது! 

செல்லநாதரின் வீட்டை அண்மித்தபொழுது, சாந்திக்குத் தயக்கம் பிறந்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. தன்னை ஒருதடவை பார்த்து, உடைகளைச் சீர்ப்படுத்திக் கொண்டாள். கேற்றைத் திறக்கும்பொழுது ஒருவித அச்சம் கலந்த நாணம் அவளைப் பற்றிக்கொண்டது. 

“சாந்தியே…வாமேனை” எதிரில் வந்து கொண்டிருந்த மாமி-ருக்மணி வரவேற்றபோது இவள் புன்னகை சிந்தினாள். 

“எனக்கு இருந்தாப்போலை நாரிக்குள்ளை பிடிச்சுப் போட்டுதணை ; குனிய நிமிர ஏலேல்லை…” ருக்மணி இயலாமையுடன் அனுங்கியவாறே கூறிமுடிக்கமுன், 

“ஓம் மாமி….அம்மாவும் அப்பிடித்தான் சொன்னவ; உங்களாலை வேலையொண்டும் செய்ய ஏலாமலிருக்குமெண்டு, என்னைப்போய் உதவிசெய்து குடுத்திட்டு வரச் சொன்னவ… அதுதான்… வந்தனான்” மாமி மீதுள்ள அக்கறை மாமிக்குத் தெரியவேண்டுமென்ற எண்ணத்தில் சாந்தி அவசரமாகக் கூறினாள், 

“அப்பிடியோ! பின்னைப் பேந்தென்ன… நல்லதாய்ப் போச்சு; நான் இப்ப .. இந்த நாரிப்பிடிப்புக்காகத்தான் சின்னத்துரைப் பரியாரியாரட்டை ஒருக்கால் போயிட்டு வருவமெண்டு வெளிக்கிட்டனான். அப்ப நல்ல பிள்ளை மாதிரி இந்த வீட்டு விருந்தைகளை ஒருக்கால் கூட்டி விட்டிட்டு, மத்தியானச் சமையலுக்கு மேசையில் வைச்சிருக்கிற தேங்காயையும் அடிச்சுத் திருவி விடணை. நான் அதுக்கிடையில, போறதும் வாறதுமாய் வந்திடுவன்” ருக்மணி றாட்டமாகக் கூறிவிட்டு, கேற்றைத் திறந்துகொண்டு வெளியில் இறங்கினாள். 

“மாமி, போகேக்கை குச்சு ஒழுங்கைகளுக்காலை போங்கோ; இண்டைக்கும் நாளைக்கும் ஊரடங்குச் சட்டம் எண்டபடியால் வழிவழியே ‘அவங்கள்’ நிப்பாங்கள்… கவனம்” சாந்தி கூறிவிட்டு, ருக்மணி மறையும்வரை கேற் வாயிலிலேயே பார்த்தவாறு நின்றிருந்தாள். 

‘மாமிக்கும் அம்பத்தைஞ்சு வயசுக்கு மேலை ஆயிட்டுது தானே ; அதுதான் திடீரென்று நாரிக்குள்ளையும் பிடிக்சுப் போட்டுது போலை; பாவம்!’ மனதிற்குள் நினைத்துக்கொண்ட சாந்தி கேற்றை மூடிவிட்டு முன்விறாந்தாவில் ஏறியபொழுது உறுமிக்கொண்டு வந்த நாய் அவளருகில் வந்ததும் பழக்கதோஷத்தில் வாலை ஆட்டி, அவள் கால்களை நாக்கினால் நக்கிவிட்டு அப்பால் நகர்ந்தது.விறாந்தாவின் ஒரு மூலையில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே செல்லநாதர் நித்திரையாகிக் கிடந்தார். அவர் கைகளில் சிக்கியிருந்த ஒரு ஆங்கிலப் பத்திரிகை நழுவிய நிலையில் சரிந்து கிடந்தது. கண்களில் கண்ணாடி சற்றுக் கீழிறங்கி சரிந்திருந்தது. சாந்தி உற்றுப் பார்த்தாள் அவர் மெல்லிய குறட்டை ஒலியோடு தூக்கத்தில் கிடந்தார். 

‘மாமாவுக்கென்ன… கொடுத்து வைத்தவர். முந்த நாள் சேவையர் பென்சனும் எடுத்திட்டார். நேற்று அவரின்ரை உத்தம புத்திரனும் வந்திட்டார். சந்தோசத்திற்குக் குறைவிருக்காது; நிம்மதியாய் நித்திரை கொள்ளுறார்’. ஒரு நிமிடம் அவரைப் பார்த்தவாறு நின்றிருந்தவள் மனதிற்குள் பெருமூச்சு விட்டவாரே ஹோலுக்குள் நுழைந்தாள். 

ஹோலுக்குள் என்றுமில்லாதவாறு ஒரு புதிய நெடி வீசியது. வெளி நாட்டு சென்ற் நாசியைத் தழுவியது. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். 

‘ராமத்தான் எங்கை?’ அவள் கண்கள் சுற்றிச் சுழன்று. அந்த உருவத்தையே தேடின – அவனைக் காணவில்லை. அவளுக்கு ஒருவித ஏமாற்றமாக இருந்தது. 

‘வெளியாலை எங்கேயும் போயிட்டாரோ?… இண்டைக்கு கேவ்யூ! றோட்டு வழியே ஒரு பெடியங்களும் நிக்கமாட்டாங்கள். அப்ப… இவர் எங்கை போனவர்?’

அவள் அங்குமிங்குமாகத் தேடிய பொழுதும், ஹோலுக்குள் நிறைந்திருந்த ஏராளமான வெளிநாட்டுப் பொருட்களே மாறி மாறி அவள் கண்களில் தட்டுப்பட்டன. ஏற்கனவே அங்கிருந்த ரி.வி., றேடியோ கசற் செற்,ரேபிள் ஃபான் என்பனவற்றோடு இன்னும் புதிதாகப் பல பொருட்கள் சேர்ந்து ஹோலை நிறைத்திருந்தன. 

‘ராமத்தான் என்னதான் குழப்படி என்றாலும் வீட்டுக் கென்று நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்திருக் கிறார்’ சாந்தி மனதிற்குள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தாள். 

சமையலறையை அடைந்தவள், சமையலறைக்கு நேரே இருக்கும் அறையைத் திரும்பிப் பார்த்தபொழுது திடுக்குற்றாள். அறைக்கட்டிலில் ராம் குப்புறப்படுத்தபடி நித்திரையாகிக் கிடப்பது தெரிந்தது அவளுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. வெற்று மேனியுடன் சாரம் மட்டும் அணிந்த நிலையில், முகத்தை மறுபக்கம் திருப்பி, தலையணையைக் கைகளால் அணைத்தவாறு அவன் தூங்கிக் கிடந்தான்- அருகில் சென்று பார்க்கவேண்டுமென மனம் குறுகுறுத்தது கால்கள் பரபரத்தன. அறையை நோக்கி சற்று நகர்ந்தவள் வாசலில் நின்றவாறே அந்த உருவத்தை உற்றுப்பார்த்தாள். 

‘நல்லாய் சிவந்து, நல்லாய்க் கொழுத்து, கொஞ்சம் உயர்ந்த மாதிரியும் இருக்கிறார்.’ 

பளிச்சென்று தெரியும் அவனது செந்நிற முதுகிலே அவள் கண்கள் ஓடி அலைந்தன. தோள்களில் மெலிதாய்ப் புரளும் சுருள் முடியின் இடையாகக் கழுத்திலே மின்னும் தங்கச் சங்கிலி அவள் கண்களுக்கு எடுப்பாகவே தெரிந்தது. 

‘இந்த நேரம் பார்த்து நித்திரையாக இருக்கிறாரே? எழும்ப மாட்டாரா?’ அவளிற்கு மனதிற்குள் ஏக்கமாகவும் ஒருவித கோபமாகவும் இருந்தது. 

‘ஒருவேளை… உடம்புக்கு ஏதும் சுகமில்லையோ? பாவம் பயணக் களைப்பாய் இருக்கும்’ அவள் தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். சமையலறைக்குள் நுழைந்தவள் மேசையில் கிடந்த தேங்காயை எடுத்து, பலங்கொண்டமட்டும் சத்தமாக அடித்து உடைத்தாள். அந்தச் சத்தத்திற்குக்கூட அவன் அசையாமல் படுத்துக் கிடப்பது அவளுக்கு எரிச்சலையே ஊட்டியது ‘மளமள’ வென்று தேங்காயைத் துருவத் தொடங்கியவள், இடையிடையே அவன் படுத்திருக்கும் அறையையும் கவனிக்கத் தவறவில்லை. தேங்காய் துருவி முடிந்ததும் அதனை மூடிவைத்துவிட்டு வெளியில் வந்தாள். மாமி விறாந்தாவைக் கூட்டிவிடச் சொன்னது அப்போதுதான் அவள் ஞாபகத்திற்கு வந்தது. தும்புத்தடியைத் தேடியெடுத்து வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள். ஒழுங்கற்றுக் கிடந்த பொருட்களை அழகாக அடுக்கி மேசைகளைத் துப்பரவாக்கி கூட்டி முடித்தபொழுது ருக்மணி வருவது தெரிந்தது. 

“மாமி என்ன நேரத்தோட வந்திட்டியள் ? பரியா ரியார் இண்டைக்கு நல்ல ஓய்வாய் இருக்கிறார் போலை…” சாந்தி கேட்டதும், 

“ஓம் மேனை ஊரடங்குச் சட்டம் போட்டபடியாலை அங்கை சனமே இல்லை; எனக்கது நல்ல வசதியாய்ப் போட்டுது. ஒரு எண்ணெய் தந்துவிட்டவர். ஒவ்வொரு நாளும் பூசட்டுமாம்” ருக்மணி கூறியவாறே வந்து சமையலறை வாசலுக்கு அண்மையாக அலுப்போடு அமர்ந்து கொண்டாள். 

“அம்மாடி கொஞ்சத் தூரம் போய் வாறதுக் கிடையில ஒரே களைப்பாய் இருக்குது சாந்தி, எனக்கொரு தேத் தண்ணி போட்டுத் தா மேனை” ருக்மணி உரிமையோடு கேட்டுவிட்டு முந்தானையை விரித்து, அதிலே சரிந்து, களைப்பினால் கண்களை மூடிக்கொண்டாள். 

“மாமி அப்ப வழியில் நீங்கள் ‘அவங்க’ளிட்டை அம்பிடேல்லையே?” 

“அங்காலை… ஆலடிச்சந்தியிலை நிக்கிறாங்களாம். இங்காலுக்கு இன்னும் வரேல்லைப்போலை கிடக்குது; நான் அவங்களைக் காணேல்லை” என்றவள் சட்டென்று ஞாபகம் வந்தவளாக, 

“அதுசரிஇவன் ராம் எங்கை?… தலையிடிக்குது எண்டு சொல்லி, என்னட்டை தேத்தண்ணி வாங்கிக் குடிச்சுப் போட்டுப் படுத்தவன். காலமை சாப்பிடவுமில்லை….பசிக் கேல்லை எண்டிட்டான்” என்றவாறே ராம் படுத்திருக்கும் அறையை ஒரு தடவை எட்டிப்பார்த்துவிட்டு, 

”அவன்… நேற்று வந்தநேரம் தொடக்கம் வெளியில் உலாத்திறத்துக்குத்தான் அந்தரப்பட்டுக்கொண்டு நிண்டவன்; நான் விடேல்லை. இந்த நாளிலை றோட்டாலை போற பொடியங்களுக்கு என்ன கதி ஏற்படுகுது எண்டு அவனுக்குத் தெரிஞ்சால்தானே!’* தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவள், ஒரு நீண்ட பெருமுச்சை விட்டவாறே மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். 

‘ராமத்தானுக்குத் தலையிடியோ? பாவம்! இந்த நேரம் பார்த்து மாமிக்கும் நாரிக்கை பிடிச்சுப்போட்டுது; அவ்வாலை அவரைச் சீராகக் கவனிக்கவும் ஏலாமலிருக்கும்’ மனதிற்குள் அவஸ்தைப்பட்ட சாந்தி, 

‘ஏன் மாமி அவருக்குத் தலையிடிக்கு என்ன குடுத்தனீங்கள்?’ என்று கேட்க நினைத்து, மாமி என்ன நினைப்பாவோ என்ற எண்ணத்தில் எதையுமே கேட்காமல் அமைதியாக தேனீரை ஊற்றத் தொடங்கினாள். 

“மாமி ; எழும்புங்கோ; இந்தத் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு நீங்கள் ஆறுதலாய்ப் படுத்திருங்கோ. நா வந்தனான் மத்தியானச் சமையலைச் செய்து விட்டிட்டுப் போறன்.”சாந்தி தேனீரை நீட்டியவாறே கூறியதும், ருக்மணி மகிழ்ச்சியோடு எழுந்து தேனீரை வாங்கிக் குடிக்கத் தொடங்கினாள். 

“நல்ல வேளை நீ வந்தது! நான்… என்னெண்டு குனிஞ்சு நிமிர்ந்து அலுவல் செய்யப் போறன் எண்டு யோசித்துக் கொண்டிருந்தனான்.. அங்கை வீட்டில ஆர் கொம்மாவே சமைக்கிறாள்.?” 

“ஓம் மாமி; அதுக்கென்ன? அப்பாவுக் கிண்டைக்கு ஓஃபிஸ் உம் இல்லைத்தானே; அம்மா ‘மளமள’ வெண்டு சமைச்சுப்போடுவா” 

சாந்தி அடுக்களை வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். 

“சாந்தி. உதிலை பேணிக்குள்ளை மைசூர் பருப்பு இருக்குது அங்காலை உருளைக்கிழங்கு இருக்குது; ப்ரிஜ்ஜுக்குள்ளை கொஞ்சம் அகத்திப்பூவும் இருக்குது. அதுகளைக் கறியாக்கி பூவையும் சுண்டிப்போட்டு மாமாவுக்கும் கொத்தானுக்குமாகச் சேர்த்து ரெண்டு முட்டையும் பொரிச்சு விடணை அவனுக்கு மீன் இறைச்சி எண்டெல்லாம் வேணுமாக்கும், கடைகளெல்லாம் பூட்டு .. அதுகளுக்கு நானிப்ப எங்கை போறது?”. ருக்மணி கூறியவாறே மீண்டும் சரிந்து அநாயாசமாகக் கண்களை மூடிக்கொண்டாள். 

சாந்தி சோற்றைக் காய்ச்சி, கஞ்சியை வடியவிட்டுக் கறிகளைச் சமைக்க ஆயத்தமாகியபோது சுவர் மணிக்கூடு ‘டங்’ என்ற ஒலியை எழுப்பிவிட்டு அமைதியானது. எட்டிப்பார்த்தாள். மணி 10.30 ஐக் காட்டிக்கொண்டிருந்தது. 

கொட்டாவி விட்டவாறே எழுந்த செல்லநாதர், 

“அடி சக்கையெண்டானாம்… இண்டைந்குச் சாந்திதான் சமையல் போலை கிடக்குது” என்றவாறே வெற்றிலை சாப்பிட ஆயத்தமானார், 

“ஓம் மாமா இடைக்கிடை எனக்கும் ரான்ஸ்வர் வருகுது பாத்தியளே?” சாந்தி பகிடியாகக் கூறியதும், வாய்விட்டுச் சிரித்த செல்லநாதர். 

“சாந்தி, மாமி என்னை எங்கை எண்டு கேட்டால் நான் உங்காலை பரஞ்சோதி வாத்தியார் வீட்டில கரம் விளையாடப் போயிட்டன் எண்டு சொல்லிவிடணை” என்றவாறே கேற்றைத் திறந்துகொண்டு வெளியேறினார். 

சாந்தி சோற்றுப்பானையை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு கறிகளைக் கூட்ட ஆயத்தமானாள். ராம் படுத்திருந்த அறைக்கதவு சாத்தப்படும் ஓசையைக்கேட்டபோது திரும்பிப்பார்த்தாள். ராம் துவாயைச் சுற்றிக்கொண்டு வெளியே வருவது தெரிந்தது. 

‘ஐயையோ எழும்பீட்டார் குளிக்கப்போறார் போலை கிடக்குது’ அவளுக்குக் கைகள் மெலிதாக நடுங்கின. இதயம் பழையபடி படபடவென அடித்துக் கொண்டது. ராம் சமையலறையை நோக்கி வருவது தெரிந்தது. அவளுக்கு வியர்த்துக் கொட்டிவிடும் போலிருந்தது. மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். 

‘முகமே மாறீட்டுது! நிறைய மீசை வைத்திருக்கிறார் அதுதான் இவ்வளவு வித்தியாசமாய் இருக்குதாக்கும்’ இருவர் கண்களும். சந்தித்தன.நாணத்தோடு தலைகுனிந்த அவளை ஆச்சரியமாகப் பார்த்த அவன், சட்டென்று முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு வேகமாகக் கிணற்றடியை நோக்கி நடக்கவாரம்பித்தான். அவளுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எச்சிலை மென்று விழுங்கிக்கொண்டாள். 

‘ஏன். எதுவுமே பேசாமல் போறார்?… என்னை அவருக்குப் பிடிக்கேல்லையோ..? அப்ப.. ஏன் சுகந்தியிட்டை அந்தப் பாட்டுக்கசற்றைக் குடுத்துவிட்டவர்? அப்ப… கற்பனையில் என்னைப் பிடிச்சுதாக்கும்; இப்ப என்னை நேரில் பார்த்த உடனை பிடிக்கவில்லையாக்கும்’ அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. 

‘ஆம்பிளைகளை… நம்பவே கூடாது. அதுவும் வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்த உடனை அவையளுக்கு. அவையளுக்கு… தாங்கள் ஏதோ பெரிய ‘கொப்பு’ எண்ட நினைப்பு பச்சைக் கள்ளர்; வம்புகள்!’ வந்த அழுகை அவளுக்குள் கோபமாக மாறியது. 

‘வீட்டுக்கு வந்திருக்கிறாளே என்று கதைப்பமெண்டில்லை… பெரிய லெவலியை பேசாமல் போறார். நான் மட்டும் வலியப்போய்க் கதைப்பன் எண்ட நினைப்பாக்கும், வேற வேலையில்லை’ சொடக் சொடக் என்று கைவிரல்களை நெட்டி முறித்துக்கொண்டாள். 

உருளைக்கிழங்கை அவிப்பதற்கு தண்ணீரைத் தேடினாள். வாளி வெறுமையாகி இருந்தது. அவளுக்கிருந்த கோபத்தில் வாளியைப் போட்டுடைக்கலாம் போலிருந்தது. 

‘இப்ப… தண்ணிக்கு என்ன செய்யிறது? ‘அந்த ‘லெவல் காரன்’ அங்கை குளிக்கப் போயிட்டான். நான் போய் எப்பிடித் தண்ணீர் அள்ளுறது..?’ யோசித்து யோசித்து மூளை குழம்பியது. 

‘கறி ஆக்க நேரம் போகுது ; இன்னும் சமைச்சு முடியேல்லையோ எண்டு மாமி கேட்கப் போறா!’ 

“மாமி மாமி தண்ணி முடிஞ்சுது மாமி, என்ன செய்யிறது?” அவள் ருக்மணியைத் தட்டியெழுப்பி, தண்ணீர் அள்ளுமிடம் தெரியாததுபோல் கேட்டாள். 

“உங்கை எங்கட கிணற்றிலை தானே மேனை அள்ளிறனாங்கள்; இது நல்லதண்ணிதானே. முந்தித்தான் கொஞ்சம் உப்பாய் இருந்தது. இப்ப அது நல்ல சோக்கான தண்ணி” ருக்மணி சாதாரணமாகக் கூறிவிட்டு, மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். சாந்திக்கு எரிச்சல் எரிச்சல்லாக வந்தது. பற்களால் உதடுகளை அடக்கிக்கொண்டாள்.

‘இப்ப என்ன செய்வது?’ 

– தொடரும்…

(1984/85 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டியில் 2ம் பரிசு பெற்றது.)

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *