நாய்கள் இல்லாத தெரு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 10,555 
 
 

“”ஏங்க… இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” அலுவலகத்தில் இருந்து திரும்பிய என்னிடம் மலர்விழி பயமுறுத்தும் தோரணையில் கேட்டாள்.

“”என்ன நடந்துச்சும்மா…”

“”மணிக்கு பவுடர் அடிக்கிறேன்னு. உங்க செல்லப் பொண்ணு… ஒரு டப்பா பவுடர காலி பண்ணியிருக்கா…”

நாய்கள் இல்லாத தெருவிளையாண்டு கொண்டிருந்த அஸ்வினி என்னைப் பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பு எட்டு மணி நேர அலுவலக சோர்வை பறந்தோடச் செய்தது.

“”என்னங்க, நான் சொல்றது காதுல விழுதா”

“”ம்ம். விழுந்ததும்மா…” என்ற எனக்கு, ஒரு டப்பா பவுடர் வேஸ்ட்டாகப் போய் விட்டதே என்கிற ஒரு சிறிய உறுத்தல் மட்டுமே ஏற்பட்டது.

தெருநாயாக அறிமுகமாகி சில வாரங்களாக வீட்டு நாயாக மாற்றம் பெற்றிருக்கும் மணிக்கும், எனது ஐந்து வயது மகள் அஸ்வினிக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டிருப்பதையும் அது பலப்பட்டு வருவதையும் மீண்டும் ஒருமுறை நான் புரிந்து கொண்டேன்.

பவுடர் என்பது மலர்விழி கவனித்து என்னிடம் கூறிய தகவல். அவளுக்குத் தெரியாமல் அஸ்வினி, மணிக்கு செய்யும் பணிவிடைகள் பல நான் மட்டுமே அறிந்தவை..

சாய் நகர் ஏரியாவில் நாய்கள் பல உண்டு. சிகப்பு , வெள்ளை, கறுப்பு எனப் பல நிறங்களில், காலநேரவரையின்றி தெருக்களைச் சுற்றிசுற்றி வரும்.

எனது தெருவில் மட்டும் எட்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றால் பயப்படும்படியான தொந்தரவுகள் எதுவும் இல்லையென்றாலும், இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது கோரஸôக குறைக்கும். வீட்டு வாசல் இருட்டில் மறைவாக படுத்திருந்து காலிங் பெல் அடிக்கும்போது குரைத்து திடுக்கிட வைக்கும். இந்த நாய்கள் கூட்டத்தில் புதிதாக அறிமுகமானதுதான் மணி, அஸ்வினி சூட்டிய பெயர். மற்ற நாய்கள் மிச்ச மீதியைத் தின்றுவிட்டு சாதுவாக ஓடி நகரும்போது வெள்ளையும் சிகப்புமான அந்த நாட்டு நாய் மட்டும் வாலை ஆட்டியது. அப்பார்ட்மெண்ட்டின் உள்ளே மெதுவாக நுழைந்து வீடு வரை வந்து வாசலில் நின்று வாலாட்டியது. பசிக்கும் நேரங்களில் ஏக்கமாகப் பார்த்தது.

நிலைவாசலில் உரிமையோடு தலையை வைத்து படுத்துக் கொண்டு சிநேகம் கொண்டாடியது.

அதன் தோற்றமும், நட்பு பாராட்டும் விதமும் அஸ்வினியைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனோடு தோழமை கொண்டாள். க்ரில் வழியே அவளுக்கு வழங்கப்படும் பிஸ்கெட்டுகள் மணிக்குச் சென்றன. நிறைய தின்பண்டங்கள் வாங்கினாள். காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது அம்மாவிடம் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு பிஸ்கெட்டுகள் வாங்கினாள். பள்ளிக்கூட பையில் மறைத்து வைத்திருந்து மலர்விழி அசரும்போது ஜன்னல் வழியே மணிக்கு வழங்கினாள். வேண்டுமென்றே ஊட்டப்படும் சாதத்தில் மிச்சம் வைத்தாள்.

“”மணிக்கும்மா…” என்றாள்.

சில நாட்களில் இந்த நட்பு அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. இரவு மணி பத்து. நல்ல மழை. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு மழை விடுவதற்காக காத்திருந்தபோது அஸ்வினி சத்தமிட்டாள்.

“”அப்பா மணிப்பா…..”

அப்போதுதான் கவனித்தேன். அவளுக்கருகே வாலை ஆட்டியபடி, முகத்தை அவள் கால்களில் உரசியபடி மணி நின்று கொண்டிருந்தது.

இது எப்படி இங்கே வந்தது? கோயம்பேடு எங்கே வடபழனி எங்கே நான் மலர்விழியை பார்க்க…

அவள் அஸ்வினியை பார்த்தாள்.

“”நாம பைக்ல வர்றப்பயே நம்ம பின்னாடியே வந்துச்சுப்பா..”

என்றபடி சிரித்தாள். அதன் நெற்றியைச் செல்லமாக தடவிக் கொடுத்தாள்.

எனக்கு ஆச்சரியம். நாங்கள் இங்கே வந்து நான்கு மணி நேரங்கள் ஆகின்றன.

அதுவரை காத்திருந்து… மழை ஓய்ந்து நான் டூ வீலரை ஸ்டார்ட் செய்ததும் பின்னாலயே ஓடி வந்தது. வெறித்தனமாக அது ஓடிவருவது உணர்ந்து வண்டியின் வேகத்தை குறைத்தேன்.

“”அது எப்படின்னே தெரியலங்க… அத்தினி நாய்ல இது மட்டும் நம்ம மேல அட்டாச்டா இருக்குங்க, குறிப்பா அஸ்வினி மேல… தினம் டான்ஸ் கிளாஸ் போறப்பவும் இப்படிதாங்க… பின்னாடியே வந்து அங்கேயே உட்கார்ந்திருக்கு…”

மலர்விழி வியப்பாகச் சொல்ல… அடுத்த நாள் மாடிப்படியில் அஸ்வினி, மணியின் முகத்தை கைகளில் ஏந்தி கன்னத்தோடு கன்னம் வைத்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு முதன்முதலாக பயம் வந்தது.

என்னதான் பாசம் காட்டினாலும் தெரு நாய். பராமரிப்பு கிடையாது. தடுப்பூசிகள் கிடையாது. பத்திரிகைகளில் எவ்வளவோ செய்திகள்… ஏதாவது ஒரு மூடில் அஸ்வினியை கடித்து வைத்தால்..

“”என் கண்ணுல்ல… அப்பா உன் பர்த்டேக்கு டாபர்மேன் நாய்க்குட்டி வாங்கித்தாரேன்… மணிகிட்ட போகாதடா…அது குளிக்காம கிடக்குதுடா… மேல ஒரே நாத்தம்… உடம்பெல்லாம் பூச்சியா இருக்கு…”

இரவு அஸ்வினியை மடியில் போட்டு கொஞ்சினேன்.

“”போப்பா… எனக்கு மணி போதும். வேற நாய் வேணாம்… என் மேல எவ்வளவு பாசமா இருக்கு…. எனக்கு அதான் புடிச்சிருக்கு… ஞாயித்துக்கிழமை மணிய குளிப்பாட்டப் போறேன்… மணி…” சத்தமாக கத்தினாள்.

ஜன்னலுக்கு வெளியே இருந்து பதில் வந்தது. “லொள்…’

சாய்நகரில் நாய்கள் அதிகம் புழங்குவதை நான் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அஸ்வினி அளவுக்கதிகமாக பாசம் வைத்திருந்தாலும் தெருவாசிகளில் சிலர் ஒருவித அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது எனக்கு இப்போதுதான் புரிந்தது.

தெரு நலச்சங்கத்தின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நாய்கள் தொந்தரவு பற்றிய விவாதம்.

ராத்திரி நேரத்தில் தூங்கவே முடியவில்லை. சமயங்களில் விடிய விடிய குரைத்துக்கொண்டே இருக்கின்றன. அதோடு சில நேரங்களில் இடம் பொருள் ஏவல் மறந்து அவைகள் செய்யும் சேஷ்டைகளால் பெண்கள் சாலைக்கே செல்ல முடியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

எதிர் அப்பார்ட்மெண்ட் பாலுதான், அதிக வேகம் காட்டினார். தாண்டிக் குதித்தார். இன்றைய கூட்டத்தின் நோக்கமே தெருவில் நடமாடும் நாய்களை ஒழிப்பது பற்றித்தான் என்றார்.

போன மீட்டிங்கின்போதே இதுகுறித்துப் பேசியதாகவும் பொறுப்பாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லையென்றும், சிலர் தெருநாய்க்கு செல்லம் கொடுப்பதாகவும், தான் நிம்மதியாக தூங்கி பல நாட்களாகின்றதாகவும், நாய்களால் சாய் நகரே அசிங்கப்பட்டுப் போவதாகவும் ஆவேசப்பட்டார்.

பிரசவத்திற்குப் போயிருக்கும் தனது மனைவி குழந்தையோடு வீடு திரும்பும்போது தெருவில் நாய்களே இருக்கக்கூடாது என்றும் சங்க பொறுப்பாளர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டதால் நானே நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்றும் உணர்ச்சிவசப்பட்டார்.

அஸ்வினி மணியோடு பழகுவதை குறைத்துக் கொள்ளாத சூழ்நிலையில், இப்படி ஏதாவது நடந்து எல்லா நாய்களோடு மணியையும் பிடித்துச்சென்றுவிட்டால் நல்லது என்று நினைத்தேன். அதனால் நாய்களுக்கு நான் ஆதரவு ஏதும் தெரிவிக்கவில்லை.

பாலுவின் ஆவேசத்திற்கு இவ்வளவு வேகமான ரீயாக்ஷன் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

அஸ்வினியைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி அலுவலகம் புறப்பட டூ வீலரை நகர்த்தியபோது கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது.

தடதடவென இறங்கிய ஆட்கள் நாலாபுறமும் வியூகம் அமைத்தார்கள். கையில் நீண்ட குச்சிகள். முனையில் கம்பியால் ஆன சுருக்கு. படுத்திருந்த அவர்களை பார்த்து ஓடிய நாய்களை வளைத்துப் பிடித்து தூக்கி வண்டியில் போட்டார்கள். நாய்களின் அலறல் சத்தத்தில் தெரு களேபரம் ஆகியது.

மணி எங்கே? நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பாலு கத்தினார்.

“”அந்த அப்பார்ட்மெண்ட் மாடில ஒண்ணு பதுங்கி இருக்கு பாருங்க…”

ஆட்கள் என் அப்பார்ட்மெண்ட் மாடி நோக்கி ஓடினார்கள். மணியை பிடிக்கப் போகிறார்களா?

மலர்விழி வெளியே வந்தாள்.

“”என்னங்க… பாவங்க மணி… அடிப்பாங்களா?”

எனக்குத் தெரியவில்லை. யோசித்தபடி நின்றிருந்தேன்.

வண்டியில் வாய் கட்டப்பட்ட நிலையில் படுத்திருந்த நாய்களைப் பார்த்தேன். சில மாத உறவுதான் என்றாலும், அவை கிடந்த விதம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

நாய்கள் ஆபத்து, உண்மை. நோய்கள் வரும், சரிதான். கடித்தால் விபரீதம்…

நிச்சயமாய்…

ஆனால்… அவைகள் ஏதோ ஒரு விதத்தில் உண்மையாய், விசுவாசமாய், பாசமாய்…

நெருங்கிப் பழகின நண்பன் ஒருவனை இழப்பது போல் உணர்ந்தேன்.

யோசித்துக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து மணியை தரதரவென இழுத்து வந்தார்கள். கழுத்தில் கயிறு சுற்றியிருக்க… கத்த முடியாமல் ஒருவித விசித்திர சத்தத்தோடு என்னையும் மலர்விழியையும் பரிதாபமாகப் பார்த்தது. மலர் வீட்டுக்குள் அவசரமாகப் போய் விட்டாள். நான் மணியைப் பார்த்தேன். தூக்கி வண்டிக்குள் போட்டார்கள். விழுந்த வேகத்தில் எழமுயன்று கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் எழ முடியாமல் தடுமாறி விழுந்தது. ஒருமாதிரி ஓலம் எழுப்பியது. அந்த அநாதரவு குரல் எனது அடிவயிற்றை பிசைந்தது.

நான் அவர்களைப் பார்த்தேன். ஒருவனை அழைத்தேன்.

“”இங்க வாப்பா…”

ஒருவன் கையில் குச்சியோடு வந்தான்.

“”அடிக்காதீங்க… பத்திரமா ரெட்கிராஸ்ல ஒப்படைச்சிடுங்க…

கயித்த அவுத்துடுங்க… எல்லாத்துக்கும் பிஸ்கட் வாங்கி போடுங்க…” என்றபடி பர்ஸ் பிரித்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை கொடுத்தேன்.

“”இத நீங்க டீ குடிக்க வச்சுக்குங்க” என்றபடி இன்னொரு நூறு ரூபாய் கொடுத்தேன்.

மகிழ்ச்சியாக தலையாட்டிவிட்டு நகர்ந்தார்கள்.

நாய் வண்டி நகருவதை வீட்டு வாசலில் நின்றபடி பாலு ஒரு குரூர சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வாய்கட்டப்பட்டு வண்டிக்குள் எசகுபிசகான கோணத்தில் கிடந்த நாய்களைப் பார்த்த எனக்கு குபுக்கென்று நெஞ்சுக்குள்ளிருந்து விம்மல் எழுந்தது. கண்கள் கலங்கின. அஸ்வினி பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவுடன் மணியைத் தேடுவாளே… ஏமாந்து போவாளே… இதை அவளிடம் சொல்லலாமா

மாலை வீட்டுக்குத் திரும்பியபோது மலர்விழி கிசுகிசுத்தாள். “”ஏங்க…. அஸ்வினி வந்த உடனே மணிய கேட்டா… ஊசி போட தூக்கிட்டுப் போயிருக்காங்கன்னு சொல்லியிருக்கேன். நம்ப மாட்டேங்கிறா… மதியத்துலேந்து சாப்பிடல…” குரலில் கவலை தெறித்தது.

சோபாவில் சுருண்டு கிடந்த அஸ்வினி என்னைப் பார்த்ததும் கேட்டாள்.

“”அப்பா மணி எப்ப வரும்?”

“”ராத்திரி வந்திடும்டா கண்ணு… அப்பாகூட வெளிய போயிட்டு வரலாம் வா…”

டூ வீலரில் ஏற்றிக் கொண்டு அவளுக்குப் பிடித்த விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொடுத்து… பீஸô வாங்கிக் கொடுத்து… விருகம்பாக்கத்தை ஒரு ரவுண்ட் வந்து நாளைக்குப் பீச்சுக்கு அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்து வீட்டுக்கு கூட்டி வந்தேன்.

“”உள்ளே நுழைந்ததுமே… ஏம்ப்பா… ராத்திரி வந்துடும்னு சொன்னே… ராத்திரியாயிட்டே… மணி எப்பப்பா வரும்..”

இப்போது குரலில் அழுகை கலந்திருந்தது. எனக்கு கவலை வந்தது. ஏக்கத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்படுமோ என்று நினைத்தது நடந்தது.

இரவு ஏதேச்சையாக கண்விழித்தபோது உடம்பில் அனல் காற்று…

பக்கத்தில் படுத்திருந்த அஸ்வினி மேல் கை வைத்தேன்.

நெருப்பாக கொதித்தது.

“”மலர்… எழுந்திரும்மா… பாப்பா உடம்பு கொதிக்குது…”

திடுக்கிட்டு எழுந்தவள் தொட்டுப் பார்த்துவிட்டு…

“”அய்யய்யோ…” என்றபடி குழந்தையை தூக்கி கட்டிக் கொண்டாள்.

அஸ்வினி ஏதோ முணுமுணுத்தாள். ஜுரத்தில் பிதற்றுகிறாள் என்று நினைக்க… உற்று கவனித்தபோதுதான், “”அப்பா.. மணி… மணிப்பா…”

அரைதூக்கத்தில் இருந்த அஸ்வினியின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

எனக்கு சட்டென பாலு, மணியை இழுத்துப் போன கார்ப்பரேஷன் ஆட்கள் அனைவரின் மீதும் கோபம் வந்தது.

வீட்டில் வைத்திருந்த கால்பால் சிரப் ஊற்றி அரைமணிநேரம் காத்திருந்து ஜரம் குறையாமல் போகவே தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் ஓடினோம்.

டாக்டருக்குப் புரிந்தது.

கவலைப்படாதீங்க… குழந்தை அத மறக்கற வரைக்கும் இப்படித்தான் இருக்கும். ஜுரம் தானா இறங்கிடும்… ராத்திரி இங்கேயே இருக்கட்டும்”

மலர்விழிக்கு ஆறுதல் சொல்லி விட்டு, குழந்தைக்கு டவல் ஹார்லிக்ஸ் எடுத்து வர வீட்டுக்குப் புறப்பட்டேன்.

அந்த நேரத்தில் சாய் நகர் அமைதியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் இன்றுதான் நான் குடியிருக்கும் தெருவை பார்க்கிறேன். எப்போதாவது இரவு நேரத்தில் தெரு அடங்கிய பிறகு வீட்டுக்கு வந்தால் அத்தனை நாய்களும் தெருவே அதிர்கிற மாதிரி குரைக்கும். பைக்கை விரட்டிக் கொண்டே வரும். அருகே வந்து அடையாளம் உணர்ந்துவிட்டுத்தான் அடங்கும். இன்றைக்கு அந்த சத்தம் இல்லாதது ஒருவித வெறுமையை ஏற்படுத்திற்று..

தெருவே வெறிச்சோடிப் போன உணர்வு.

வண்டியை நிறுத்திவிட்டு அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்த எனக்கு சாவியை வண்டியிலேயே விட்டு வந்தது நினைவுக்கு வர அந்த நேரத்தில் யார் வண்டியை திருடப்போகிறார்கள் என்கிற எண்ணம் வந்தாலும் ஏதோ எச்சரிக்கை உணர்வு தோன்ற… திரும்ப நடந்தேன்.

அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே வந்தபோது அதைக் கவனித்தேன்.

எதிர் அப்பார்ட்மெண்ட் பாலு வீட்டு கதவைத் திறந்து வெளியே யாரும் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

அடுத்த சில விநாடிகளில் ஒரு பெண் பாலு வீட்டின்உள்ளிருந்து தலையை நீட்டி வெளியே பார்த்தாள், யாரும் பார்க்கிறார்களா? என்று பார்த்துவிட்டு சட்டென்று வெளியே வந்தாள். நான் சட்டென பின்வாங்கி என்னை மறைத்துக் கொண்டேன்.

பனியனோடு பாலுவும் வெளியே வந்தார். பார்வையிலேயே அவள் எப்படிப்பட்ட பெண் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதேநேரம் டைமிங்காக ஒரு கார் தெருமுனை திரும்ப… காரை நோக்கி வேகமாக நடந்த அந்தப் பெண் சட்டென்று காருக்குள் ஏறினாள். அதுவரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார் பாலு.

மனைவியைப் பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு தனிமையில்

இருக்கும் பாலு, நாய்களை ஒழித்துக்கட்ட ஏன் அப்படி தீவிர முயற்சி செய்தார் என்று எனக்குப் புரிந்தது.

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *