கழைக் கூத்தன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 23, 2022
பார்வையிட்டோர்: 4,076 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்ரீ சதாசிவம், காரிலிருந்து இறங்கி, ‘கேட்’டைத் திறந்த சத்தத்தைக் கேட்டு, வேலைக்கார முனிசாமி உள்ளேயிருந்து ஓடி வந்தான்.

அன்று சனிக் கிழமையான தால், சதாசிவம் இரண்டு மணிக்கே ஆபீஸிலிருந்து வந்து விட்டார். நான்கு தடவை ஹாரனை அமுக்கியும், முனிசாமி யைக் காணவில்லை. “நாசமாய்ப் போக! எங்கேயோ பீடி குடிக்கத் தொலைந்து போய்விட்டான் போலிருக்கிறது” என்று மனதுக்குள் அவனை அவர் வைது கொண்டே, காரை உள்ளே கொண்டுபோய் ஷெட்டில் நிறுத்தியபோது, முனிசாமி ஓடிவந்து பல்லை இளித்துக்கொண்டு பக்கத்தில் நின்றான். பாவம்! அவன் பீடி குடிக்கப் போகவில்லை. வேலைக்காரி பொன்னியுடன் கிணற்றடியில் பல மகத்தான விஷயங்களைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததில், அவனுக்கு உலக ஞாபகமே இல்லாமல் போய்விட்டது.

சதாசிவம், அவன் பக்கம் திரும்பிப் பாராமல், உள்ளே சென்றார். ஏற் கனவே அவர் மனதில் அமைதி இல்லை. ஆபீஸில் ஒரு சிறு தவறுக்காக மானேஜர் அவரிடம் காரமாய்ப் பேசிய வார்த்தைகள் இன்னும் அவரது மனதை அறுத்துக்கொண்டே யிருந்தன. அதற்குப் பின் நடந்த ஒவ்வோர் அற்ப விஷயமும், எரி கிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவதுபோல, அவருடைய கோபத்தை அதிகப்படுத்தியது.

இதோ இந்தப் பழிகாரன் முனிசாமிதான் இருக்கிறானே? இவனுக்கு மாதம் பதினைந்து ரூபாய் எதற்காகத் தண்டத் துக்கு அழுகிறது? ஆபீஸிலிருந்து களைப்புடன் வரும்பொழுது, “கேட்’டைக் கூடத் திறக்காமல் பீடி குடித்துக் கொண்டிருப்பதற்கும் வேலைக்காரியுடன் குலாவிக்கொண்டிருக்கவுமா?

‘உஸ்’ என்று பெருமூச் சுடன், சதாசிவம் மாடிப் படி களின்மேல் ஏறினார். கால்கள் வலித்தன. ஒரு ‘ லிப்ட்’ வைத்து குழந்தையைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டு நடக்கிறான் மெய்யாண்டி. விட்டால், எவ்வளவு சௌகரிய மாக இருக்கும் என்று தோன் றிற்று.

அப்பொழுது திடீரென்று தெருவிலிருந்து, ‘டுடும்! டுடும்! – டும்டும்டும்! -‘ என்று வித்தைக் காரன் ஒருவன், மேளம் அடிக்கும் சத்தம் கேட்டது. முனிசாமி, அவசர அவசரமாக, ‘கேட்’டைத் திறந்துகொண்டு வேடிக்கை பார்க்க வெளியே ஓடுவதை, சதாசிவம் கண்டார்.

“சோம்பேறிக் கழுதை! ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை. இந்த மாதத்துடன் நிறுத்திவிட வேண்டியதுதான்” என்று அவர் நினைத்துக் கொண்டபோது, ஒரு விசித்திரமான மனித உருவம் அவரது மனக்கண் முன் தோன்றிவிட்டு மறைந்தது. அதன் காதுகளிலிருந்து பெரிய இரும்பு வளையங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அடர்ந்து சுருள் சுருளாக வளர்ந்திருந்த தலைமயிர், கழுத்து வரையில் தொங்கிக்கொண் டிருந்தது. ஏற் கனவே கறுப்பாய் இருந்த விழி களைச் சுற்றி, மை தீட்டி இருந்தது.

இப்படித்தான் முதல் முதலில் மெய்யாண்டி அவர் முன் காட்சி யளித்தான். தம்மிடம் அவனை வேலைக்கு வைத்துக்கொண்ட பிறகு, சதாசிவம் அவனுடைய காது வளையங்களைக் கழற்றி விட்டு, தலை மயிரையும் ‘கிராப்’ பண்ணிக் கொள்ளச் செய்தார். இந்தப் புதிய கோலத்துடன் ஐந்து மாதகாலம், அவன் இவ ரிடம் இருந்தான். ஒரு தினம், சதாசிவம் கோபித்துக் கொண்ட தற்காகத் திரும்பிப் பாராமல் வீட்டை விட்டு வெளியேறிய மகாராஜன், மறுபடி தலை காட்ட வில்லை .

தெருவில் அந்த வித்தைக்கார் னின் வாத்திய ஓசையும் ஜனங் களின் கைதட்டலும் காதைத் தொளைத்தன. ‘சிவ சிவா!’ என்று முணுமுணுத்துக் கொண்டே, சதாசிவம் நாற்காலி யில் சாய்ந்தார்.

எதிரே இருந்த அறைக்குள் ளிருந்து ஒரு குழந்தை அழும் குர லும், யாரோ தொட்டிலை ஆட் டும் ஓசையும் கேட்டன. சதாசிவத்தின் மனம், யோசனையில் ஆழ்ந்த து.

2

சரியாகப் பத்து மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம். இரவு எட்டரைமணி இருக் கும். நல்ல இருட்டு. மார்கழி மாதமானதால், உடலை ‘ வெட வெட’ என்று நடுங்கச் செய்யும் குளிர். இருட்டோடு இருட் டாய்ப் பனி வேறு பெய்து கொண் டிருந்தது. அந்த முழு ‘பிளாக் – அவுட்’டில் கண்ணுக் கெட்டிய தூரம் வரை விளக்கு வெளிச்சம் என்பதே தெரியவில்லை. இந்தத் திவ்வியமான வேளையில், சென்னைத் தேனாம் பேட்டையில், பஸ் போகும் ரஸ்தாவுக்குப் பக்கத்தில், ஒரு வீட்டில் அவதரிக்க வேண்டும் என்று ஒரு குழந்தையின் தலையில் பகவான் எழுதியிருந்தான்.

அந்த வீட்டின் அழகோ சொல்ல வேண்டிய தில்லை. இரண்டே இரண்டு பனை ஓலைத் தட்டிகள் தான் வீடாகப் பரிண மித்திருந்தன. இரண்டு தட்டி களையும் பிணைத்துக் கூடாரம் போல் மடித்து நடுவில் ஒரு மூங்கில் கழியைக் கொடுத்து, அதைத் தூக்கி நிறுத்தி யிருந்தது. இந்த வீட்டினுள், வெறுந்தரை யில் ஒரு சாக்கின் மேல் படுத்துக் கொண்டு, ஓர் இளம் பெண் பிரசவ வேதனையால் அவஸ்தைப்பட் டுக்கொண் டிருந்தாள். வீட்டுக்கு வெளியே குந்தி உட்கார்ந்து கொண்டு, அவளுடைய புருஷன் ஒரு மண் எண்ணெய் விளக்கை ஏற்ற முயற்சித்துக்கொண் டிருக் கையில், “தண்ணி! தண்ணி!” என்று, பெண்ணின் பலவீனமான குரல் உள்ளே யிருந்து கேட்டது.

அந்த மனிதன் அவசரமாக விளக்கை ஏற்றிக்கொண்டு, உட் கார்ந்தபடியே வீட்டுக்குள் பிர வேசித்தான். அங்கே அவ னுடைய மனைவியின் பக்கத்தில் பல தினுசான துணிகளை ஒட்டுப் போட்டுத் தைத்த அழுக்கேறின பை ஒன்று கிடந்தது. அதற்குள் கையை விட்டு, துருப்பிடித்த ஒரு தகரக் குவளையை எடுத்துக் கொண்டு, அவன் ஓட்டமும் நடையுமாக ரஸ்தாவில் சென்றான்.

இரண்டு பர்லாங்கு தூரத்தில், சாலை ஓரத்தில், ஒரு குழாயும் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு ஒரு தொட்டியும் இருந்தன. குழாயில் தண்ணீ ர் பிடித்துக் கொண்டு, அவசரமாக ரஸ்தா வின் குறுக்கே அவன் சென்ற பொழுது, ‘கிரீச்’ என்ற அலற லுடன் ஒரு கார் அவன் சமீபத் தில் வந்து நின்றது. கார் விளக்கு களின் வெளிச்சம் பளிச் சென்று ஒரு வினாடி கண்ணைப் பறித்துவிட்டு மறைந்தது. மறு படியும் கார் புறப்பட்டுத் தன் வழியே சென்றபோது, அதில் இருந்தவர் இங்கிலீஷில் வைத வார்த்தைகள், அரைகுறையாய் இவன் காதில் விழுந்தன.

தண்ணீர்ப் பாத்திரத்துடன் இருந்தவன், ஒரு நிமிஷம் திகைத்து நின்றான். பிறகு, “நல்ல காலம்! தப்பித்துக்கொண் டோம். நல்ல இருட்டு!” என்று முணுமுணுத்துக் கொண்டே, வீட்டை நோக்கி ஓடினான். வீட் டுக்குப் பத்தடி தூரத்தில் வந் திருப்பான். அப்போது திடீ ரென்று அந்தக் கொடூரமான இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு ‘ குவா குவா!’ என்று ஒரு குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது.

மெய்யாண்டியின் மனைவி பிரசவித்து விட்டாள்.

3

அந்த மை இருட்டிலும், காரில் சென்றவர் சாமர்த்தியமாக வழி தெரிந்து கொண்டு வெகு வேகமாகச் சென்றார். அதுவரை ஸ்ரீ சதாசிவம் எப்பொழுதும் காரை அவ்வளவு வேகமாக ஓட்டியதில்லை. இன்று ‘க்ளப் ‘பில் நண்பர்களுடன் அவர் சீட்டாடிக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டிலிருந்து டெலிபோன் செய்தி ஒன்று வந்தது. அவ ருடைய மனைவிக்குப்பிரசவநோய் கண்டிருந்ததாக, அவர்களின் சமையல்காரன் போன் ‘ செய் தான். மனைவிக்கு மாதம் எட்டுத் தான். அதுவும் தலைச்சன் பிரச வம். சதாசிவம் ஏற்கனவே சுபாவத்தில் பயங்காளி. சொல்ல வேண்டுமா? டாக்டருக்கு உடனே ‘போன்’ செய்துவிட்டு, தாமும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார். நடுவழியில் அவருடைய காரில் தான், அகப்பட்டுக்கொள்ளாமல் மெய்யாண்டி அதிர்ஷ்ட வசமாகத் தப்பித்துக் கொண் டான்.

கேட்பார் அற்ற இடத்தில், பனை ஓலைத் தட்டியின் மறைவில், மெய்யாண்டியின் குழந்தை ஜனித்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சதாசிவத்தின் மனைவிக் கும் ஓர் ஆண் குழந்தை பிறந் தது. திறந்த வெளியில் பனியில் விறைத்துக் கொண்டு கிடந்த மெய்யாண்டியின் மனைவி இன் னும் கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கையில், ஒரு பெரிய டாக்ட ரும் இரண்டு நர்ஸுகளும் ஒத் தாசை செய்தும் சதாசிவத்தின் மனைவியோ தான் பெற்ற குழந் தையை ஒருதரம் கண்ணால் பார்க் கவும் கொடுத்து வைக்கவில்லை ; அரை மணிக்குள் அவளது பிரா ணன் போய் விட்டது!

தாயில்லாக் குழந்தை பாலுக் காக அழுதது. குழந்தைக்கு ஒரு செவிலித் தாயைச் சதாசிவம் தேடியபோது, மெய்யாண்டி யின் மனைவியை யாரோ அழைத்து வந்தார்கள். மனைவி யுடன் கணவனும் வந்தான். அவனைப் பார்த்த தும், சட் டென்று சதாசிவம் அடையாளம் கண்டு கொண்டார். மோட்டார் வெளிச்சத்தில் ஒரே ஒரு கண நேரம் பார்த்த அந்த முகத்தை அவர் மறக்கவில்லை. மெய் யாண்டியின் பாட்டைத் தலையை யும், காதுகளில் தொங்கிய இரும்பு வளையங்களையும் மறக்க முடியுமா?

“ஏண்டாப்பா; நீ என்ன வேலை செய்கிறவன்?” என்று கேட்டார்.

“ஒண்ணும் இல்லீங்க! நானு தொம்பங் கூத்தாடிங்க” என் றான் அவன்.

“அதென்ன?” என்றார். புரியாமல். “அதாங்க. வித்தை செய் வேங்க!”

சதாசிவம் மேலே விசாரிக்க வில்லை. அவனுக்கு மாதம் பதி னைந்து ரூபாய் சம்பளம் கொடுத்துத் தம் வீட்டில் வேலைக்காரனாக வைத்துக் கொண்டார். மெய்யாண்டி சரியாகத்தான் வேலை செய்தான். ஆனால், எது செய்தாலும் அதில் அவனது ஞாபகம் இருந்ததாக மட்டும் தெரியவில்லை. அவனுடைய உடல் ஓரிடத்திலும் உள்ளம் வேறு இடத்திலும் இருந்ததாகத் தோன்றியது.

ஒரு நாள் சதாசிவம் வழக்கத் துக்கு மாறாக, வெகு சீக்கிரம் ஆபீஸிலிருந்து வந்தபோது, கேட்டைத் திறக்க மெய்யாண்டி வராமல் போகவே, தாமே திறந்து கொண்டு உள்ளே சென்றார். மாடிப்படி ஏறிச் சுவர் மேலே போனபோது, அங்கே கண்ட காட்சி அப்படியே அவரைப் பயத்தினால் வெலவெலத்து நிற்கச் செய்தது. அவருடைய பத்து மாதக் குழந்தையைத் தன் தலை மேல் தூக்கி உட்கார வைத்துக் கொண்டு, கையினால் அதைப் பிடித்துக் கொள்ளாமலே, அறையைச் சுற்றிச் சுற்றி அலட்சியமாக நடந்து கொண்டிருந்தான் மெய்யாண்டி!

எஜமானைப் பார்த்ததும், அவன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு, தானும் பயந்துபோய் நடுக்கத்தோடு நின்றான். அவரது காலில் விழுந்து, தான் செய்தது தவறு என்று மன்னிப்புக் கேட் டான். சதாசிவம் கோபம் தணி யாமல் அவனை வையத் தொடங் கியதும், மறு பேச்சுப் பேசாமல் வீட்டை விட்டு வெளியே போன வன் போனவன் தான்; மறுபடி திரும்பி வரவில்லை. போன இடம் தெரியாமல் மறைந்துவிட்டான்.

இன்னொரு பெருமூச்சுடன்

சதாசிவம் சிந்தனா லோகத்தி லிருந்து விழித்துக் கொண்டார். தெருவில் வித்தைக்காரனின் ஆர்ப்பாட்டம் இதற்குள் உச்ச நிலையை அடைந்திருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்த சிறுவர்கள் பலமாகக் கை தட்டினார்கள். ‘ஓஹோ ஹோஹோ!-‘ என்று அந்த வித்தைக்காரனும் இரைந்து கூச்சலிட்டான். அதோடு அவ னது மேளச்சத்தமும் சேர்ந்து காதைத் தொளைத்தது.

சதாசிவம், தொட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்த குழந்தையிடம் சென்று அதற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, ‘பால்கனி’க்குப் போய் வெளியே தெருவை நோக்கினார்.

நடுத் தெருவில், உயரமான மூங்கில்கழி ஒன்றை நிறுத்திக் கயிறுகளினால் பிடித்துக் கட்டி யிருந்தான் அந்தக் கழைக் கூத் தன். அவர் பார்த்துக் கொண் டிருக்கையிலேயே, கணப் பொழு தில் அவன் ஒரு பத்து மாதக் குழந் தையின் மார்பில் ஒரு கயிற்றை முடிந்து, அதையும் தன்னுடன் தூக்கிக்கொண்டு, குரங்கைப் போல் விடுவிடென்று அந்த மூங் கில் கழியின் மேல் ஏறி, அதன் உச்சியில் நின்றான்.

சதாசிவம் ஆச்சரியத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த் தார். மெய்யாண்டியையும், அவ னது குழந்தையையும், மேளம் அடித்துக் கொண்டிருந்த அவ னுடைய மனைவியையும் உடனே அவர் தெரிந்து கொண்டார்.

“இவனுக்கு வேறு பிழைப்பு இருக்கிறது. அந்தத் தைரியம் தான் வேலையை விட்டுப் போய் விட்டான்” என்று அவரது மனம் நினைத்தது. மெய்யாண்டி, கயிற்றில் கட்டியிருந்த குழந்தை யைக் கீழே விடத் தொடங்கிய தும், அவன் என்ன பண்ணப் போகிறான் என்பதை ஊகித்துக் கொண்டு, அதைக் காணச் சகி யாதவராய் அவர் உள்ளே போய் விட்டார்.

தெருவிலிருந்து வந்த இரைச் சலைக் கேட்டுப் பயந்து, தொட்டி லில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ‘வீல்’ என்று அல றிற்று. ‘இல்லை, கண்ணு! அழா தேடாப்பா’ என்று ஆர்வம் கனிய அதைச் சமாதானம் செய்தார் சதாசிவம். இதே சமயத்தில், வெளியே, கயிற்று நுனியில் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த குழந்தையை அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்தார்கள். அந்தக் குழந்தையும் இந்த வேடிக் கையை ரஸித்ததுபோலத்தான் தோன்றியது. சின்னஞ் சிறு கைகள் இரண்டையும் சேர்த்து வாய்க்குள் திணித்துக்கொண்டு ‘ஊ! ஊ!’ என்று சொல்லி விட்டு, ஜனங்கள் கைதட்டும் சத்தத்தைக் கேட்டுக் களுக்கென்று சிரித்தது. அது, உள்ளே ஆடும் குழந்தையின் அழுகையைக் கேட்டுக் கேலி செய்வது போல் இருந்தது.

– ‘சக்தி’ இதழில் 1943-இல் வந்த து.ரா.வின் கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *