” அப்பா நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப்போறிகங்க? என் வீட்டுக்கு வந்துடுங்கப்பா ” சதீஷ் சொன்னான்.பதில் சொல்லாமல் பார்க்கலாம் என்பது போல் தலையசைத்தார் சுந்தரேசன்.
கொஞ்ச நேரத்தில் அப்பாவிடம் வந்த நரேன், ” அப்பா நீங்க தனியா இருக்க வேண்டாம் என் கூட வந்திடுங்க ” என்றான்.
தாய் இறந்த துக்கத்திற்கு வந்த மகன்கள்தான் இவ்வாறு அழைத்தனர். இரண்டுபிள்ளைகளுக்கும் மூன்று மாதம் கழித்து பதில் சொல்வதாக கூறி அனுப்பினார்.
மூன்று மாதம் கழித்து அப்பா போனில் சொன்ன தகவலை கேட்டு இரண்டு பிள்ளைகளும் உடனடியாக புறப்பட்டு வந்து கூச்சல் போட்டார்கள்.
” அப்பா இந்த வயசுல நீங்க பண்ணின காரியம் கொஞ்சங்கூட நல்லால்லே… அம்மா போய் மூணு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நிக்கறிங்களே…உங்களுக்கு அசிங்கமா இல்லை…?”
சிறிது நேரம் மௌனமாய் இருந்த சுந்தரேசன் தொண்டையை கணைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.
” உங்கம்மா உங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தா? கடைசி காலத்தில உங்க கூட வந்து இருக்கணும்னு ஆசைப்பட்டா.. ஆனா, அவ படுத்த படுக்கையா இருக்கறதை காரணம் காட்டி , அவளை நீங்க கூட்டிட்டு போய் வைச்சிக்கலை.
கடைசி வரை அவளுக்கு நான் எல்லாம் மனசு கோணாம செஞ்சும் ‘ பிள்ளைங்க பார்த்துக்கலேன்னு மனக்குறையோடதான் போய் சேர்ந்தா…”
அப்ப எங்க மேல இல்லாத பாசம் இப்ப என் மேல ஏன் வந்திருக்கு…?
காரணம் நான் நல்லா திடகாத்திரமா இருக்கேன். உங்க வீட்டுக்கு சம்பளம் இல்லாத காவல்காரனா இருப்பேன்..என் பென்ஷன் 20 ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கலாம்ங்கிற நப்பாசைதானே…?”
உங்க ரெண்டு பேரையும் நான் அப்படியே விடலை.. நல்லா படிக்க
வைச்சிருக்கேன்.. நல்ல வேலையில் இருக்கிங்க.. வீடும் வாங்கி கொடுத்திட்டேன், கல்யாணத்துக்கு செய்ய வேண்டியதையும் செஞ்சிட்டேன். இனி யாருக்காவது நல்லது செய்யனும்னு நினைச்சேன்…
இதோ இந்த வளர்மதியோட அப்பாவும் அம்மாவும் வயசானவங்க.. வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ற அளவுக்கு வசதி இல்ல.. அதனால 40 வயசாகியும் இன்னும் கல்யாணமாகலை. அப்பா , அம்மா காலத்துக்கு பிறகு இவ நிலமை கேள்விக்குறியா இருந்தது. இவளை கல்யாணம் பண்ணிகிட்டதால என் பென்ஷன் பணம் எனக்கு பிறகு இவளுக்கு வரும். இதுக்கு சட்டபடி ஏற்பாடு செய்யத்தான் இந்த கல்யாணம்.மற்றபடி, இவ என்னை பார்த்துக்க வந்த தாய்… என் மனசுல எந்த களங்கமும் இல்ல.. இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலேன்னா யாரும் இங்க வர வேண்டாம்….”
சுந்தரேசனின் வார்த்தைகள் சம்மட்டியாய் தாக்க.. பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தனர் இரு பிள்ளைகளும்.