விடியலைத் தேடும் உறவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 24,035 
 

விடியலை தேடும் நள்ளிரவு நேரம். தட தடவென கதவு தட்டுவது என்னை தட்டி எழுப்புவது போல இருந்தது. விழித்துக் கொண்ட நான், இந்த நேரத்தில் கதவை தட்டுவது யாராக இருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்தேன். படுத்திருந்த படியே இரவு விளொக்கொளியில் தலையை தூக்கி திரும்பி பார்த்தேன். முற்றத்தின் அடுத்தப் பக்கத்து தாழ்வாரத்தில் அப்பாவும், அம்மாவும் ஜோடி புறாக்களாய் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே யாரது இந்த வேளையில் என்று கேட்டு புரண்டு எழுந்து உட்கார்ந்தார் அப்பா. நீங்க படுங்கப்பா நான் போய் பார்க்கிறேன், என்று சொல்லி தூக்கக் கலக்கத்தில் வாசலுக்கு சென்று வெளிப்பக்கம் லைட்டைப் போட்டேன். வெள்ளை பாவாடை தாவணியில் கையில் ஒரு சூட்கேஸ்சுடன் ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஆச்சரியத்தில் கண்கள் விரிய சுமதி.,?.,! என்று விளித்தேன்.

ம்ம்… சுமதி தான் என்றாள்.

ஆனந்ததில், என் கண்கள் அவளையும் அவளுக்கு பின்னேயும் பாவியது.

நான் தனியாகத்தான் வந்திருக்கிறேன். என் கூட யாரும் வரலை என்று என் பார்வையில் தொக்கி இருந்த கேள்விக்கு சத்தமில்லாமல் பதில் சொன்னாள்.

நட்ட நடு நிசியில தன்னந்தனியா நீ.. இங்கே வந்திருக்கிறதைப் பார்த்தால் எனக்கென்னவோ பயமா இருக்கு..

ஏன் இருட்டிலே, வெள்ளை டிரெஸ்சில வந்ததாலே பேயோ.. பிசாசோ..என்று பயந்திடீங்களா.,? திரு..! நான் தையரியாமாத்தேன் வந்திருக்கேன். பார்வையில் திடமான ஒளியும், சொற்களில் நம்பிக்கை, ஒலியும் பளிச்சிட்டது. ஆனால் உதட்டில் எப்போதும் சிரித்திருக்கும் மெல்லிய புன்னகை மட்டும் காணவில்லை.

ஒன்றும் சொல்ல தோன்றாதவனாய், ஒன்றும் செய்ய தோன்றாதவனாய், சிறிது நேரம் மௌனமாய் நின்றேன், வேறு வழி இல்லாத நிலையில் உள்ளே வா. . என்று அழைத்து, உள்ளே வந்ததும் கதவை சாத்தி தாழிட்டேன்.

அதற்குள் அம்மாவும் விழித்து எழுந்து உட்கார்ந்திருந்தாள். நான் தாழ்வாரத்தின் லைட்டைப் போட்டேன். என் பின்னால் வந்த சுமதியை பார்த்த அப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவளை அவர்களுக்குத் தெரியாது, ஒரு வேளை அம்மாவுக்கு, சுமதியை தெரிந்திருக்கலாம்.

யாருப்பா இந்த பொண்ணு.,? இந்த ராத்திரி வேளையில் துணை யாரும் இல்லாமல் தனியா இங்க எதுக்கு வந்திருக்கு.? என்று அப்பா கேட்கவும், என் பதிலுக்காக அம்மாவும் சந்தேக கண்களுடன் காத்திருந்தாள்.

அப்பா.. இ..வ…இவ(ள்)., நம்ம சுந்தரத்தோட.. மச்சினிச்சி, கற்பகத்தோட தங்கச்சி…சு..சும… சுமதி. என் உச்சரிப்பு தெளிவில்லாமல் திக்கி திணறி, குளிரில்லா நடுக்கத்துடன் வெளி வந்தது. ஏன் இந்த தடுமாற்றம் என்ற கேள்வியும் எனக்குள் கொக்கி(?) போட்டது.

சரிப்பா.. இந்த நேரத்தில் இங்க எதுக்காக வரனும்.? சுந்தரமும் அவன் மனைவியும் ஊர்ல இல்லையா என்ன.?

தெரியலை.. ப்பா., நான் இப்ப கொஞ்ச நாளா அவன் வீட்டுக்கு போறதில்லை. கற்பகம் பிரசவத்துக்கு பாபநாசம் போயிருந்தாள். பெண் குழந்தை பிறந்ததாக கேள்வி.. அதனால வீட்டில யார் இருக்காங்க. . யார் இல்லை என்று எனக்கு தெரியாது.

அக்கா மாமாவெல்லாம் இங்கத்தான் இருக்காங்க.. நானாகத்தான் இங்கே வரனும்மின்னு வந்தேன் திரு.., நான் இந்த ஊருக்கு வந்தது அவர்களுக்குத் தெரியாது. பட்டவர்த்தனமாக பேசினாள்.

எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. குழப்பம் உருவாகி கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. நிறைய கேள்விக் கனைகள் என் நெஞ்சை துளைத்து எடுத்தன. தூக்கம் சுத்தமாக என்னை விட்டு போயிருந்தது.

சுமதி என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. கண்களின் நீர் திவலை என் நெஞ்சை ஏனோ வாட்டி வதைத்தது. இவள் எதற்காக இங்கே வந்தாள்.? எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. அப்பா என் எண்ணங்களை அனுமானித்திருக்க வேண்டும்.

சரி.. ஏதோ குடும்ப பிரச்சினையாக இருக்கலாம், காலையில் சாகவசமாக பேசிக்கலாம், சிவகாமி அந்த பொண்ணுக்கு படுத்துக்க பாய் தலகாணி எடுத்துக் கொடு, படுத்துக் கொள்ளட்டும்.. அப்பா என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னபோது, அவரின் பார்வை சரியாகப் படலை. பார்வையின் கூர்மை இதயத்தை கீறியது. என் மீதான அவரது நம்பிக்கை தளர்வடைந்ததுப் போல் தோன்றியது.

நீங்க. . இருங்க..ம்மா நான் எடுத்து தாரேன் என்று சொல்லவும், அம்மா, அவளிடம் ஏதாவது சாப்பிடுரியா.? என்று கேட்டாள். அம்மா எப்போதும் ராத்திரியில் ஒருத்தர் சாப்பிடும் அளவுக்கு சாதம் தண்ணீர் விட்டு வைத்திருப்பாள். பால் காய்ச்சி உறைமோர் விடாமல் தனியாக எடுத்து வைக்கும் பழக்கம் எப்போதும் உண்டு.

சுமதி தயங்கினாள்…

தண்ணி விட்ட சாதம் இருக்கு, பால் இருக்கு, என்ன சாப்பிடுறே.? அம்மாவின் கரிசனை எனக்கு வியப்பூட்டியது. அவளுக்கு பசியாய் இருந்திருக்க வேண்டும், அப்பாவையும் என்னையும் பார்த்துவிட்டு, நான் சாதம் சாப்பிடுறேன் என்றாள் மெதுவாக.

அம்மா அவளை அழைத்துக் கொண்டு அடுக்களைக்குள் சென்றாள். சுமதி கீழே வைத்துவிட்டு சென்ற அவளது பெட்டியை எடுத்து பட்டாசாலையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அங்கேயே அவளுக்கு படுக்க பாய், தலகாணி, போர்வை எடுத்து வைத்தேன். அப்போது அப்பா கேட்டார்…

உனக்குத் தெரியுமா அந்தப் பொண்ணு இங்கே வருவாள் என்று..?

இல்ல..ப்பா., சத்தியமா இது பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது. அவரது நம்பிக்கைக்கு உறுதி சான்று கொடுத்தேன்.

சரி.. நீ போய் படு என்று உத்திரவு போடவும், அடுக்களைப் பக்கம் நோட்டம் விட்டுக் கொண்டே படுக்கையில் விழுந்தேன்.

நெஞ்சில் நிறைந்தவள் தான் ஆயினும் நினைத்து பார்க்காத போது, கிட்டத்தட்ட அவளின் தாமரை முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து (அ) மறைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அவள் முழுமையாக,பவுர்ணமி நிலவாக கண்ணெதிரில் வந்து நிற்கிறாள். இதை நான் கனவிலும் எதிர்ப்பார்த்த தில்லை. இவள் ஏன் இங்கு வந்தாள்.? அப்பா சொல்வது போல குடும்ப பிரச்சினையாக இருக்குமேயானால், சொந்த அக்கா வீட்டுக்குப் போகாமல் இங்கே வரவேண்டிய அவசியமென்ன.? அவளுக்கும் அவள் அக்காவுக்கும் ஏதேனும் பிரச்சினையாக இருக்குமோ.? அப்படியே இருந்தாலும் இங்கே வர வேண்டிய காரணம் என்ன.? வீட்டை விட்டு ஓடி வந்திருப்பாளோ.? கையில் பெட்டியுடன் வந்திருப்பதைப் பார்த்தாள் அப்படித்தான் இருக்கிறது.! அதுக்கு எதற்காக என் வீட்டுக்கு வரவேண்டும்.? எனக்கும் அவளுக்கும் இடையே எந்த பேச்சு வார்த்தையும் இல்லாத போது எந்த முகாந்திரத்தோடு வந்திருக்கிறாள்.? ஒரு வேளை அவ(ளும்) என்னை காதலிக்கிறாளோ.?

கேள்விகளுக்கு பதில் கிடைக்காத நிலையில், அமைதியையும் தூக்கத்தையும் தேடினேன். ராத்திரி நேரத்தில் அவைகள் தொலைந்து போயிருந்தன. இருட்டின் அமைதி நெஞ்சுக்குள் கடல் அலைகளாய் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. எண்ணச்சிறகுகள் குழப்பதை உண்டு பண்ணியது.

நான் சிவப்பாக இருக்க மாட்டேன், கருப்பும் இல்லாமல் சிகப்பும் இல்லாமல் இருக்கும் நிறத்தை மாநிறம் என்று கருப்புக்கு பொய்நிறம் சூட்டுவார்களே அந்த நிறத்தில் இருப்பேன். முகம் அவலட்சனம் கிடையாது. ஹீரோ என்று ஏற்றுக்கொள்ளலாம். மற்ற வர்ணனைகள் பார்க்கும் பெண்களுக்கே வெளிச்சம்.

என் உயிர் நண்பன் சுந்தரம் என்னை விட கொஞ்சம் சிவப்பாக இருப்பான். ஆண்களில் பெரும்பாலோர் நல்ல சிவப்பாக இருப்பது அரிது. நண்பன் அரிதானவன் இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியில் போனால் பார்க்கும் பெண்கள் அவனைத்தான் பார்ப்பார்கள் அல்லது ரசிப்பார்கள். இதற்காகவே அவன் என்னை உடன் கூட்டிப்போவானோ என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. அது பொறாமையாகவோ அல்லது தாழ்வு மனப்பான்மையாகக் கூட இருக்கலாம். இருக்க வேண்டிய வயசு அப்படி.

நடுநிலைப் பள்ளியிலிருந்து மேநிலைப் பள்ளியில் ஒன்பதாவது சேரும் போது தான் சுந்தரம் எனக்கு நண்பனானான். அன்றிலிருந்து சமீப காலம் வரையில் நண்பர்களாகவே இருந்து வந்தோம். கடந்த ஒரு வருடமாக நட்பின் பலம் குறைந்து விட்டிருந்தது. இப்போது நட்பின் ஆழம்.. ஹாய்.. ஹாய்.. அவ்வளவுதான்.

அவனது குடும்பமும் நடுத்தர குடும்பம் தான். என் வீடு போல அவன் வீடும் திண்ணை, வராந்தா, வீட்டுன் நடுவில் முற்றம், அதைச் சுற்றி தாழ்வாரம், அருகில் பட்டாசாலை, உள்நடை, அடுக்களை என்று கொஞ்சம் விஸ்தாரமாக இருக்கும். சிறிய நகரத்தில் இருக்கும் அவனது குடும்பம் வருமானத்துக்காக வீட்டின் வராந்தா, தாழ்வாரம், பட்டாசாலைகளை போர்ஷன் போர்ஷனாக பிரித்து வாடகைக்கு விட்டிருந்தார்கள். வீட்டின் பெரிய திண்ணையை பாச்சிலர் ரூமாக்கி அதுவும் வருமானம் ஈட்டும். நான்கு வாடகை தாரர்கள் இருந்தார்கள். சுந்தரத்துக்கு கல்யானம் ஆனதும் ஒரு குடித்தனத்தை காலி பண்ணச் செய்து அவனுக்கு இடம் ஒதுக்கி விட்டிருந்தனர். அவன் இருந்த வசதிக்கு பெண் வீட்டார்கள் செய்த சீர் செனத்தி ஜாஸ்தி. அதிர்ஷ்டக்காரன் என்று அம்மா பூடகமாக சொன்னதுண்டு.

நட்புச் சூழலில் அரங்கமும் அந்தரங்கமும் சேர்ந்தே வியாபித்திருந்தது. அரங்க சம்பவங்கள் பட்டவர்த்தனமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். அந்தரங்க சம்பவங்கள் திருட்டுத் தனமும், அச்சமும் சேர்ந்து பிறர் அறியா ரகசியமாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் தம் அடிப்பது, ஸ்கூல் கட்டடித்து சினிமா பார்ப்பது, சைட் அடிப்பது ஒரிருதடவை தண்ணி அடிப்பதும் உண்டு.

விடலைப் பருவத்தில் வரும் பாலினக் கவர்ச்சி ஒரு சாபக்கேடு என்று சொல்லலாம். பிஞ்சில் பழுப்பது எதுவும் ருசிக்காது. ருசிக்கும் என்று சூழ்நிலை சொல்லும்; கசக்கும் என்று அனுபவம் உணர்த்தும். நடந்த சம்பவங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் அவைகள் யாவும் கேலிக்கூத்தாகவும், கேவலமாகவும் தெரியும். மனம் பக்குவ படுகிறவரையில் அனைவரும் மிருகம்தாம்.

குடும்ப விசேஷங்கள் எதுவாயினும் தவறாமல் கலந்துக் கொண்டு முன்னின்று காரியங்களை கவனிப்பான். என் அக்காவின் கல்யாணத்தின் போது பத்திரிக்கை வைப்பது முதல், பந்தக்கால் ஊன்றும் வரை தொடங்கி பந்தி பரிமாறும் வரையில் மிகவும் நேர்த்தியாக அக்கரையுடன் செய்தான். அது போலவே நானும் முழு ஈடுபாட்டுடன் அவன் வீட்டு விசேஷத்தில் கலந்துக் கொண்டு திட்டமிடல், கையாளுதலில் கலந்துப் பேசி ஒருவருக்கொருவர் சளைக்காமல் செய்வதுண்டு. எனது தாய் வழி தந்தை வழி உறவினர்கள் பற்றிய விவரங்கள் யாவும் அவனுக்கு அத்துப்படி.

கடைத்தெரு, காய்கறி மார்கெட் என்று எங்களில் யார் சென்றாலும் செல்லும் போது காய், மளிகை ஏதாவது வேணுமா.? எதையேனும் வாங்கி வரவா என்று இருவரும் கேட்டுக் கொள்வது உண்டு. மறந்து போயிருந்தாலும் நான் இன்ன இடத்தில் இருக்கிறேன், என்ன வேணுமென்று கேட்டு, வாங்கி வந்து, தருவதுண்டு. நான் அவன் வீட்டுக்கு அடுக்களை வரையில் சுதந்திரமாக சென்று, கேட்காமலயே எதுவும் எடுத்து சாப்பிடுவது போல அவனும் எனது வீட்டில் உரிமை எடுத்துக் கொள்வான். சமயத்தில் அதிகப் பிரசங்கியாக யார் பேசினாலும், நடந்துக் கொண்டாலும் இருவீட்டார்கள் இடத்திலும் மன்னிக்கும் மனோபாவமும், பொறுத்தருளும் தன்மையும் இருந்தன.

சில சடங்குகள், சில சம்பிரதாயங்கள் அவரவர்களின் குல வழக்கப்படி நடக்கும். அவன் வீட்டு விசேஷம் என்று சின்னவாண்டு அபிராமிக்கு மஞ்சள் நீர் சடங்கின் போது புட்டு செய்யும் விஷயத்தில் நான் அதிகபடியாக. மூக்கை நுழைக்க அது பெரிய களேபரத்திற்கு இழுத்து விட்டது. சுந்தரத்தின் அப்பா சரி விடுங்கள் அபிராமி பேர்ல இருக்கிற அபிமானத்தில், திருஞானம் அப்படி சொல்லிட்டான், இதுக்குப் போய் விரோதம் பண்ணிக்கிறதா.? என்று கேட்டு பூதாகரமானதை சகஜநிலைக்கு மாற்றினார். இந்த விஷயம் தெரிந்த அம்மா நீ ஏண்டா அதிகப் பிரசங்கியாக நடந்துக்கிறே என்று கேட்டு என்னை சண்டைப் போட்டது உண்டு.

எங்களில் சுந்தரத்துக்குத் தான் முதலில் கல்யாணம் நிச்சயமாயிற்று. கும்பகோணத்துக்கு பக்கத்தில் உள்ள பாபநாசம் தாம் பொண்ணு ஊரு. அவனுக்கு பெண் பார்க்க போன போது என்னையும் கட்டாயப் படுத்தி அழைத்து சென்றான்.

அங்கு, உள்ளுக்குள் அடங்கி மறைவாக நின்று ‘அவள்’ பார்த்தது, ரசிக்கக்கூடியதாக இருந்தது. ரசித்தேன். அவளின் நடை, உடை, பாவனை, சிரிப்பு, பேச்சு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அனுபவித்து ரசித்தேன். பார்வைகள் சங்கமிக்கும் போது, எனது பார்வை அவளை மருளச் செய்திருக்க வேண்டும். கள்ளத்தனம் அவளது கண்களில் தெரிந்தது. விடை பெறும் போது பிரிவின் தாக்கத்தோடு தலையசைத்தமைக்கு, அவளும் பிரியா விடையுடன் தலையாட்டியது இன்றும் நீங்காத நினைவாக. நீரு பூத்த நெருப்பாய் நெஞ்சில் கனிந்து கொண்டு இருக்கிறது.

அவள் யார்.? அவளின் பெயர் என்னவாக இருக்கும் என்று அறிய மனம் பரபரத்தது. நாகரீகம் கருதி கேட்காமல் இருந்துவிட்டேன். மூன்று வாரம் கழித்து நிச்சயதார்த்தம். ‘அவளை’ சந்திக்க உண்டான இரண்டாவது சந்தர்ப்பம். நிச்சயதார்த்தத்தின் போது தான் அவள் மணப்பெண்ணின் தங்கச்சி என்றும், பெயர் சுமதி என்றும் தெரிந்துக் கொண்டேன். அன்று பிங்க் கலர் பாவாடை தாவணியில் சுற்றி சுற்றி வளைய வந்து மனதை சுண்டி இழுத்தாள். பார்வை பரிமாற்றத்தை அடுத்து ரகசிய பேச்சு வார்த்தை பரிச்சயத்தை அதிகமாக்கியது. அவளை மனைவியாக அடைய மனது ஆசைப்பட்டது.

ஆடி குறுக்கிட்டதால் நாற்பத்தைந்தாம் நாளில் கல்யாணம். இந்த இடைப்பட்ட நாளில் ஆசையும் ஏக்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு என் மனதில் போராட்டத்தை உண்டு பண்ணியது. கல்யாணத்தின் போது நான், நண்பனுக்கு துணை மாப்பிள்ளை.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு. சுமதியை பிரிந்து தவித்த மனசு உற்சாகம் கொண்டது. முதல் பார்வையில் சிரித்த போது வாடிய பயிருக்கு மழைத் துளிப்போல உள்ளமெல்லாம் குளிர்ந்தது. இதழ் திறந்து மெல்லியதாக சிரித்து தலையசைத்து, அழைத்தப் போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா… என்றது என் வாலிபம். மாம்பழ கலரில் சுர்ரிதாரும், ஆரஞ்சு கலரில் பேண்ட்டும், ஷாலும் அணிந்திருந்தது அட்டகாசமாக இருந்தது.

மாப்பிள்ளை அழைப்பு, மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்குமான நலுங்கு என சம்பிராதயங்கள், ஒவ்வொன்றும் தனித்தனியாக நடக்கும் போது அவளை தொடவும், அவளிடம் பேசவும் ஆர்வம் மேலோங்கியது. மேளச் சத்தம், கூடி சந்தித்த உறவுகளின் கலந்துரையாடல் இரைச்சல், சிறார்களின் கும்மாளங்களுக்கிடையே எங்களின் சாரி.. சாரி… என்னின் சரசங்களும் இடையிடையே அரங்கேறியது.

அரங்கேற்றத்தின் முதல் படியாக, நான் மாப்பிள்ளை அறையில் துழாவிக் கொண்டிருக்கும் போது, சுமதி திடீரென பிரவேசித்தாள். நான் எதிர்ப்பார்க்க வில்லை. என்ன ‘சார்..’ எப்படி இருக்கீங்க.,?

‘சாரில்’ இனிப்புடன் உவர்ப்பும் கலந்திருந்தது. ம்ம்.. நல்லாயிருக்கேன் என்று சொல்லி, வாசலைப் பார்த்தேன்.. யாராவது வந்து விட்டால்.. பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டால்.. தப்பாக நினைப்பார்களே.. நண்பனின் கல்யாணமாயிற்றே..எந்த குந்தகமும் ஏற்படாமல் இருக்கணுமே .. என்ற பயம் நெஞ்சை கவ்விக் கொண்டிருந்தது.

‘எதையும்’ நான் தான் ஆரம்பிக்கனுமா..? என்று கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவள் என்ன கேட்கிறாள்.,?.,! எதை ஆரம்பிக்கச் சொல்கிறாள்..!.,? குழப்பத்துடன் நான் புருவத்தை நெளித்து.. எ..என்…என்ன..? புரியலை..! என்றேன்.

இல்லை நீங்க வந்தவுடன் ‘என்னை எப்படி இருக்கிறாய்’ என்று விசாரிப்பீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன். அதான் நானே.. எதையோ சொல்ல நினைத்து, எதையோ சொல்வது போல என் மனசுக்குப் பட்டது.

அவள் முடிக்காத வார்த்தையில் தொக்கியிருந்த ஆதங்கத்தை உணர்ந்து

ஓஒ.. சாரி.. சந்தோஷத்தில் என்ன பேசுவது என்று புரியாமல் இருந்து விட்டேன். சாரி…

என்ன சந்தோஷம்..? உதட்டை சுழித்து புருவத்தை உயர்த்தி அவள் பார்த்த பார்வையில் நான் விழுந்து விட்டேன்.

தயங்கி.. உன்னைப் பார்த்த சந்தோஷம் தான் டீ .. என்று சொல்ல நினைத்து நண்பனின் கல்யாணம் தாம்… என்றேன்.

பொய்…நம்பமாட்டேன்… உண்மையை உரைத்தவள், நான் எப்படி இருக்கேன்.? உங்களுக்கு பிடிச்சிருக்கா.,? என்று கேட்டாள்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்னைப் போலவே இவளும் ஒரு எதிர்ப்பார்ப்போடு இருக்கிறாளா.,? இல்லை என்னை சீண்டிப் பார்க்கிறாளா..? இல்லை சித்தம் கலங்கி இருக்கிறாளா..? குழப்பத்துடன்

நான் அவளை ஏறிட்டுப் பார்க்க…

ஐ..மீன்… இந்த டிரெஸ் எப்படி இருக்கு.,?.,! சமாளித்து கேட்டாள். நான் தூண்டில் புழுவானேன்.

அவளுடைய குறு குறு பார்வையும், குறும்பு பேச்சும் என்னை உசுப்பி விட. உண்மையை சொல்லணுமா..? இல்லை பொய் சொல்லவா..?

எதுவாயினும் ஓ..கே..

வாடீ. . ஏங்… கப்பக் கிழங்கே.. நான் சந்தோஷித்து, சீரியஸ்சா எடுத்துக்கக் கூடாது என்றேன்.

இல்லே.. ஆனா உண்மையா இருக்கனும்.

பொடி வைத்துப் பேசி பொறி கலக்குறாளே.. டிரெஸ் கலர்ஸ் ஓ.கே. எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா…

ம்ம்… சொல்லுங்கள்.

. . . நெஞ்சுக்கு போட வேண்டிய ஷாலை கழுத்துக்கு போட்டிருப்பது கண்ணுக்கு உறுத்தலாக இருக்கு… பிடிக்கலை.

சுர்ரிதார் டிசைன் தெரியனுமின்னு தான் இப்படி…பேச்சை முடிக்காமல் இழுத்தாள்.

போடலாம்… இருந்தாலும்…ஒரு ஆணின் பார்வை பெரும்பாலும் முதலில் முகம், பிறகு மார்பு, அதன் பிறகு தான் உடை என்று வரிசை கிரமமாக இருக்கும். முதலில் கண்ணை உறுத்தும் மார்பு.., மறுபடி டிசைனை பார்க்க வைக்காது. உண்மையை சொல்லனும் என்பதற்காக சொல்றேன். மற்ற பெண்களிடம் ரசித்திருக்கிறேன். பட்.. நீங்க இப்படி இருப்பதில் மனம் ஏனோ ஒப்பவில்லை.

அவள் பார்வை குற்றவாளியை பார்ப்பது போல இருந்தது. அவள் பேச ஆரம்பிக்கும் போது சின்னவாண்டு உள்ளே பிரவேசித்தாள்.

சுதாகரித்த சுமதி விருட்டென்று என் பின்னால் சென்று ஒரு தட்டில் இருந்த பழங்களை கீழே கொட்டி விட்டு, இதோ இந்த தாம்பாளம் தாம் என்று சொல்லி எடுத்துச் சென்றாள். போகும் போது தன் முழங்கையால் என் மேல் கையை, வேண்டுமென்று இடித்து விட்டு சென்றாள். அவளின் சமயோகித புத்தியும், சமாளிப்பும் எனக்கு உச்சி குளிர்ந்தது அடீ.. சாகஸக்காரீ…

சின்னவாண்டு அபி.., அவள் சென்ற வாசலையும், என்னையும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்த்து.. என்ன..? லவ்வ்வா…என்று கேட்டாள்.

ச்சே…ச்சே.. அவள் யாருன்னே எனக்குத் தெரியாது. அவளைப் போய் லவ் பண்றதாவது.

நான் நம்பிட்டேன்.. என்று நையாண்டி பேசிவிட்டு திரும்பி சென்றாள்.

சிறிது நேரம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் அழகில் மயங்கி, கவர்ச்சி போதையில் நான் ஏதேனும் தத்து பித்துன்னு உளறி விட்டேனா..? “மற்ற பெண்களிடம் ரசித்திருக்கிறேன்..” ச்சே.. இதை அவளிடம் சொல்லியிருக்கக் கூடாது. என்னைப் பற்றி என்ன நினைப்பாள்..? ஏன் இப்படி புத்தி பேதலிச்சு போச்சு..? இந்த பேச்சுக்காகத்தான் என்னை இடித்து விட்டுச் சென்றாளா..? கோபமாக இருக்கும்..! போச்சு.. போச்சு.. காப்பாற்றப் படாத கன்னியத்தால் என் காதல் காற்றோடு போச்சு. மனம் கிடந்து அடித்துக் கொள்ள…

நான் அறையை விட்டு, திருடனை போல மெல்ல வெளியே வந்தேன். சுந்தரத்துக்கு மாமன்காரர்களும் அத்தை வழி சொந்தங்களும் நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர். பெண்ணோ பெண் வீட்டார்கள் யாரும் மணமேடையில் இல்லை.

நான் சுமதியை தேடினேன். கண்ணுக்கு தென்பட வில்லை. வெளியே வந்தேன். வரவேற்பு இடத்தில் நின்று அழகாக சிரித்துக் கொண்டு தலையை ஆட்டி, ஆட்டி வருபவர்களை அழைத்துக் கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும் போது கூடவே அவள் ஜிமிக்கியும் சேர்ந்து சிரித்தது. சுர்ரிதார் துப்பட்டாவை பரவாலாக்கி மார்பை மூடி, மேலும் சரியாமலிருக்க தோளில் இரண்டு பக்கமும் பின் போட்டிருந்தாள். என் மனம் றெக்கைக்கட்டி பறந்தது. மானம் கப்பலேற வில்லை.. திருப்தியுடன் நான் அவள் அருகில் நெருங்கிய போது…

என்னப்பா.. திருஞானம் எங்கே போயிட்டே.. நீ.. மாப்பிள்ளை வீட்டு சார்பா நீ இங்கேயே நின்னு வர்றவங்களை கூப்பிட்டு சந்தனம் கொடு என்று, சுந்தரத்தின் தாய் சொல்லவும், எனக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது. சுமதி சற்று தள்ளி நின்று எனக்கு இடம் கொடுத்தாள்.

கீழேப் பார்த்து ஓ.கே..வா என்று கேட்கவும், தாங்க்ஸ் என்றேன். அது மற்றவர்களின் பார்வைக்கு இடம் தந்தமைக்கு. எங்களுக்கு அது துப்பட்டா சம்பந்தப்பட்ட விஷயமாயிருந்தது. அவள் அருகில் நிற்பது தேவலோக சுகத்தை கொடுத்தது. சந்தனபெலா, பன்னீர் செம்பு எடுக்கும் போதல்லாம் போட்டியும் உரசலும் உண்டாகி, சிறிது நேரம் இன்ப சாகரத்தில் திளைத்தேன். மனசுக்குள் ஓராயிரம் கவிதைகள் தோன்றி மறைந்தன.

அதை பொறுக்க மாட்டாதவளாய் அபி.. ஓடிவந்து நானும் ரிசப்ஷனில் நிற்பேன் என்று சொல்லவும், நான் ஆற்றமையால் மறுத்து, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ.. போ..என்று விரட்டவும், அவள் எங்கள் இருவரையும் மற்றும் அறையையும் விரலால் சுட்டிக்காட்டி, சொல்லி விடுவேன் என்று சைலண்ட்டாக மிரட்டினாள். நான் பீதியாகி வந்து தொலை என்று எரிச்சலடையவும், அந்த பயம் இருக்கட்டும் என்று குதித்து ஓடி வந்து எங்கள் இருவருக்குமிடையே ஜம்பமாக வந்து நின்று கொண்டாள். சுமதியோ கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு ரம்மியமாக சிரித்தாள். எனக்கு ஜாலியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

இரவு மற்ற நண்பர்களுடன் வெளியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிக்கு செல்ல புறப்பட்டபோது, சற்று தள்ளி நின்ற சுமதி கையசைத்து கூப்பிடவும், இஞ்சி தின்ன குரங்காய் அருகில் சென்றேன்.

என்ன.. பாச்சிலர் பார்ட்டியா..? என்று கேட்கவும் அதிர்ந்து விட்டேன்.

இல்ல.. சும்மா.. நான் தயங்கி தயங்கி த..ய…ங்…கி…னே…ன்.

சும்மாவோ. . சுகத்துக்காகவோ. . குடிக்கிறவங்களை கண்டால் பெண்களுக்குப் பிடிக்காது என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பாராமல் சென்று விட்டாள். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். அடீ.. கிராதகி.,?.,!

இருந்தாலும் ‘சந்தோஷம்’ என்னை லேசாக குடிக்க வைத்தது. மறு நாள் காலை முகூர்த்த வேளை. வான்நீல வண்ணத்தில் சுமதி பட்டுப்புடவை கட்டியிருந்தாள். அழகாக தேவதைப் போல ஜொலித்தாள். அவள் புடவையும் அவள் மேனியும் காட்டிய வழவழப்பில் என் மனம் சறுக்கியது. ஓடிச்சென்று அவளைத் தூக்கி சுற்றி விளையாட வேண்டும் போலிருந்தது.

என்னைப் பார்த்து மெல்லியதாக சிரித்து குடிச்சிங்களா என்று கட்டை விரலை உதட்டருகே காட்டி கேட்கவே, நான் சுமால் பெக் என்ற பாணியில் ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் காட்டி அபிநயம் செய்தேன். விருட்டென்று சென்று விட்டாள். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ச்சே.. மறுபடியும் மறுபடியும் புத்தி மழுங்குது. இல்லை என்று பொய் சொல்லியிருக்கலாம். மலர்ந்த முகம் வாடிப்போனால் பார்க்க சகிக்காதே.. என்ன பேசி சமாளிக்கலாம் .. நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

மணமேடையில் அவள் இல்லாதது அந்த மண்டபமே வெறிச்சோடி கிடந்தது போல ஒரு மாயை தோற்றம். ஏமாற்றத்தை எச்சிலாக்கி விழுங்கிக் கொண்டேன். பத்து நிமிடம் கழித்து பின்னாலிருந்து என் தோளைத் தொட்டு யாரோ அழைக்கவும், நான் திரும்பி பார்த்தேன். சுமதி சூடான காபியுடன் நின்றிருந்தாள்.

நான் குழப்பத்துடன், மாப்பிள்ளைக்கா என்று கேட்கவும், எரிச்சலுடன் த்தொச்..கொட்டினாள். விழிகளை உயர்த்தி இடது கையின் ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் சுருக்கி, பின் உயர்த்திக் காட்டி கொஞ்சம் இல்லை நிறையவே குடியுங்கள் என்றாள்.

எனக்கு சுரீர் என்று உரைத்தது. சற்று நேரத்துக்கு முன்பு அவள் காபியை பற்றிக் கேட்டிருக்கிறாள். நான் ‘தண்ணியை ‘ நினைத்து ஊமை ஜாடை காட்டியிருக்கிறேன். என்ன ஒரு மடத்தனம். என்னையே நான் நொந்து கொண்டேன். இப்படி புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும், தெரிந்தது பாதி, தெரியாதது பாதி என, பல சில்மிஷங்கள் நடந்தமையால் கல்யாணம் முடிந்ததும் ஊர் திரும்ப மனசு வரலை.

மாப்பிள்ளைக் காரில் இடமில்லாததால், நண்பன் ஏற்பாடு செய்திருந்த தனி பஸ்சில், அம்மாவை அழைத்துக் கொண்டு சிதம்பரம் புறப்பட்டேன். அப்போது அங்கு வந்த சுமதி, என் அக்கா உங்க ஊருக்குத்தான் வாக்கப்பட்டு வர்றா, நீங்க கூட இருந்து அனுசரனையா பார்த்துக்குங்க, நீங்களும் உங்க உடம்பை பார்த்துக்குங்க என்றாள். அம்மாவிடம் சொன்னாளா இல்லை என்னிடம் சொன்னாளா புரியவில்லை. சுமதி சொன்னதை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட. அம்மா சரி என தலையாட்டவும், நான் நீங்களும் சிதம்பரம் வந்தால் எங்க வீட்டுக்கு வரனும் என்றேன்.

கண்டிப்பாக வர்றேன் என்றாள். அப்படி சொன்னவள் இப்போ இப்படி வந்து நிற்கிறாள். யாருக்கும் தெரியாமல் வந்திருக்கிறாள். இவளை என்ன செய்வது.,? எதிர் நிற்க்கும் பிரச்சினையை எப்படி சமாளிப்பது.

கல்யாணம் ஆனபிறகு பெரும்பாலும் ஆணும் சரி பெண்ணும் சரி இரண்டு பேர்களும் நிலை மாறி விடுகிறார்கள். பழைய உறவுக்கு குறிப்பாக நட்புக்கு ஒதுக்கும் நேரம் வெகுவாக குறைந்து விடுகிறது. அந்த நேரத்தை கரம் பிடித்தவர்கள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். நட்பின் நெருக்கம் குறைந்து, சம்பாஷணைகள் குறைந்து ஒரு சிறிய இடைவெளி ஏற்படுகிற போது மனதுக்குள் நெருடல் ஏற்படத்தான் செய்கிறது.

சுந்தரம் முன்னைப் போல இல்லை. நிறைய மாறிட்டான். தன் மனைவியை ரொம்பவும் நேசிக்கிறான். கற்பகத்தின் மீது அளவில்லா அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறான். தன் குடும்பம், தன் துணை, தன் முன்னேற்றம் என்ற புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்தப் பிறகு மாற்றங்களை யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.

மனைவியானவள் உடலை அர்ப்பணித்து உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள். கணவன் மனைவி இடையே அன்பின் பரிமாணம் ஆழமாக அமைவதற்கு தாம்பத்திய உறவே காரணம். அதை முன்னிலைப் படுத்தியே புரிதல், அனுசரித்தல், விட்டுக் கொடுத்தல் எல்லாம் உருவாகின்றன. பிள்ளையின் உடல் சுகத்துக்காக பெற்றவளும் எதிரியாகிறாள்.

அவன் மனைவி கற்பகம், நண்பனை மிகவும் நேசித்தாள். அவனையும் அவனது குடும்பத்தினர்களையும் விட்டுக் கொடுக்காமல் அனுசரனையாகவும் ஆதரவாகவும் பேசி அனைவரின் அன்புக்கும் பாத்தியதையானாள்.

இல்லறமும் ஒரு நல்லறமே.. கஷ்டங்கள், கவலைகள், இன்ப துன்பங்கள், விட்டுக் கொடுத்தல், வாரி அணைத்தல், ஊடல், கூடல்கள் நிறைந்த வாழ்க்கையும் ஒரு சுகமான சுமைகள் தாம். கல்யாணம் குடும்பம் குழந்தைகள் எல்லாம் இம்சைகள் என்று அறிந்தும், இருகரம் நீட்டி ஆரத்தியுடன் வரவேற்று கழுத்தை நீட்டுவதிலும் ஒரு சூட்சமம் இருக்கத்தானே செய்கிறது. அனுபவஸ்தர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சும்மவா சொல்லி வைக்கிறார்கள்.

அன்று, யுனிவெர்சிடி அலுவலகத்தில் மதிய இடைவேளை முடிந்து மேலதிகாரி எக்சாம் கண்ட்ரோலரை சந்தித்து என் சீட்டுக்கு திரும்பி வந்தேன். அந்த நாற்காலி என் வேலைக்காக ஏழு லட்சத்தை விழுங்கி இருந்தது. பி.காம்., முடித்து வேலைக்காக அலைந்த போது அப்பா தான் நான் சொல்ல சொல்ல கேட்காமல் கிராமத்தில் நிலத்தை விற்று இந்த வேலையை வாங்கினார். வேண்டாம்..ப்பா, இப்பத்தான் அக்கா கல்யாணத்துக்காக நிலத்தை வித்தீங்க.. மேலும் மேலும் விற்கிறது நல்லதாகப் படாது. வேலை இல்லன்னாலும் நிலத்தை வச்சு பிழைச்சுக்கலாம், என்று ஆட்சேபிக்கவும்,

விவசாயம் பார்த்து முன்னுக்கு வர்ற காலமெல்லாம் மலையேறிடுச்சு, சோத்துக்கு விளையறதே பெரும்பாடா இருக்கு. விவசாயமின்னா பெரியா பண்ணையா இருக்கணும், இல்லே விவசாய கூலியா இருக்கனும்… இரண்டுமே சரிப்படலை என்ற போது விக்கிறதில் தப்பில்லை. ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடியும். எங்க போனாலும் செலவில்லாமல் வேலை வாங்க முடியாது. உள்ளூர் வேலை. கைநிறைய சம்பளம். பின்னால பொண்ணு கொடுப்பவர்களுக்கும் சௌகரியமாக இருக்கும் எனறு தொலை நோக்கு பார்வையோடு பூர்வீக சொத்தை இழக்க மனசில்லாமல் விற்றார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமென்றால், அப்பா அமைவதெல்லாம் பூர்வ ஜென்மபலன்.

என் சீட்டின் எதிரில் சுமதியைப் பார்த்ததும் அசந்து விட்டேன். கிட்டதிட்ட பத்து மாதம் கழித்து திரும்ப பார்த்த போது சந்தோஷத்தை விட சங்கடங்கள் தாம் முளைத்தது. ஏற்பட்ட அவமானத்தை ஜீரணிக்க எச்சிலை கூட்டி விழுங்கினேன். வாங்க…சுமதி, எங்கே இவ்வளவு தூரம்.,?

இப்போ கூட நீ.. நல்லாயிருக்கியா என்று கேட்கலை பார்த்தியா.,? ஏன்.. திரு.. இப்படி மாறிட்டீங்க.?

பெயர் சொல்லி பேசுவது இது தான் முதல் தடவை. நாயகி தொடரில் ஆனந்தி, தன் காதலனை, கணவனை திரு.. திரு..ன்று தான் அழைப்பாள். அது போலவே ‘என் நாயகி’ என்னை அழைப்பது எனக்கு பிடித்திருந்தது. அவளின் செவ்விதழ் வழியே தேன் மொழியில் ஏன்டா. . ,? என்று செல்லமாக கோபித்திருந்தால் கூட மனதுக்கு சுவையாக இருந்திருக்கும்.

நான் என்ன பேசுவது எப்படி சொல்லி இவளுக்கு புரிய வைப்பது என்ற சிந்தனையில் அவளைப் பார்த்தேன். அழகிய சுர்ரிதாரில், பரப்பிய ஷாலால் மார்பை மூடியிருந்தாள். பிரிவு பிரியத்தை அதிகரிக்கச் செய்தது. துவண்டு விழுந்த மனம் துள்ளி எழுந்தது.

எதுவுமே பேசாமல் மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம்.? அவள் கேட்டத் தொணியில் ஏமாற்றமும், எரிச்சலும் இழைந்தோடி இருந்தது.

இங்கே வேண்டாம், வெயிட்டிங்க் ஹாலுக்கு போகலாம் என்று சொல்லி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். பின் தொடர்ந்து வந்தவள் சற்றும், தாமதிக்காமல் ம்…இப்போ சொல்லுங்கள். உங்களுக்கு(ள்) என்ன ஆச்சு..? நீங்க ஏன் அக்கா வளைகாப்புக்கு வரலை.?

வளைகாப்பா.? எப்போ ..? எனக்குத் தெரியாது.

இன்னிக்கு காலையில் தான் ஆச்சு. அப்போ அக்காவும் மாமாவும் என்கிட்ட பொய் சொல்லி இருக்காங்க. ஏன்..?

ஏன்னு நீ .. நீங்..க் நீங்க..தான் அவங்கக்கிட்ட கேட்கனும்.

மரியாதை எல்லாம் நான் எதிர்ப்பார்க்கலை, சும்மா என்னை நீ..ன்னே கூப்பிடுங்க.

. . . . .? . . . .!

நான் மாமாகிட்ட கேட்டேன். செய்தி சொல்லுச்சு, ஏனோ வரலைன்னார். திக்கஸ்ட்டா இருந்தீங்க..? எப்படி விரிசல் வந்துச்சு..?

தெரியலை…

பொய் சொல்லாதீங்க திரு.. நான் தானே காரணம்.,?

நான் அவளை ஏறிட்டு கூர்ந்துப் பார்த்தேன்.. பின் கற்பகம் உன்கிட்ட ஏதாவது கேட்டுச்சா…? ஐ. . மீன். . நம்மை சம்பந்தப் படுத்தி.. என்று கேட்டேன்.

இல்லை. அக்காவுக்கு ‘எதுவும்’ தெரியாது. ஆனா உங்களை வெறுத்துப் பேசினாள். எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு., நான் உங்கக்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்.?

என்ன விஷயம்..?..!

விஜயலெட்சுமியும், மகேஸ்வரியும் யாரு..?

இந்த விஷயத்தை ஏன் கற்பகம் பெரிசுப்படுத்துகிறாள்..? இவகிட்டேயும் சொல்லி மன வலியை உண்டு பண்ணியிருக்கிறாளே…

கோயிலுக்குப் போனால் அரைமணி நேரம், பீச்சுக்குப் போனால் ஒருமணி நேரம், சினிமாவுக்குப் போனால் மூன்று மணி நேரம், கல்யாணம் என்றால் முதல் நாள் பிற்பகல் முதல் மறுநாள் முற்பகல் வரை ஒரு நாள். காலம் வரையறுத்திருக்கும் மணித்துளிகளில் பொழுது போக்குகள், சந்தோஷங்கள் அவ்வளவே. அதனுள் முளைத்த கனவுகள் கற்பனைகள் எல்லாம் சிதைந்து விடுகிறது. பழைய கதையைப் பற்றிப் பேசி பிரயோஜனமில்லை சுமதி. நீ கிளம்பு.

இல்லை.. நான் தெரிந்துக் கொள்ளனும். தீர்மானமாக சொன்னாள்.

இந்த பெண்கள் விஷயத்தில் ஒரு உண்மை இருக்கு., ஒரு புரட்டு இருக்கு., எதைச் சொல்ல..?

முதலில் உண்மையை சொல்லுங்கள், பின்னால் பொய்யை புரட்டுங்கள்..

ம்.. நல்லாத்தான் பேசுறா.. நான் நீண்ட பெருமூச்சினிடையே ஆரம்பித்தேன். நீ இதை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், நீ என்னைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது நான் சொல்லித்தான் ஆகனும். இதனால் பிரச்சினைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்வது உம் பொறுப்பு. கேட்டு விட்டு அமைதியா போய் விடுவது எல்லோருக்கும் நல்லது.

பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?

விஷயம் அப்படி.. விஜயலெட்சுமி நான் விரும்பிய பெண். மகேஷ்வரி உன் மாமா காதலிச்ச பெண். விருப்பத்துக்கும், காதலிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. விரும்புகிறேன் என்பது ஒரு மனம் சார்ந்த விஷயம். அது நிறைவேறலாம் அல்லாமலும் ஆகலாம். காதலிக்கிறேன் என்பது இருமனங்கள் கலந்த விஷயம். இது தீர்மானிக்கப் பட்ட விஷயம்.

பரவாயில்லையே… நல்லா விவரமாத்தான் பேசறீங்க.. மேல…

கல்யாண புதுசில் கற்பகம் என்னிடம் நன்றாகத் தான் பேசி பழகி இருந்தாள், கணவனின் இன்ப துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு ஜீவன் என்பதால் என்னை மரியாதையாக நடத்தினாள். எனக்கு மதிப்புக் கொடுத்து பேசினாள். அவள் காட்டும் அன்புக்கும் கௌரவத்திற்கும் நான் நெகிழ்ந்து போனேன். பொதுவாக குடும்பத்தில் மூன்றாம் நபர் தலையிடுவதை எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள். ஆனால் கற்பகம் அப்படி இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எப்போதும் போல சகஜமாக போக வர இருந்தேன். ஒரு நாள் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் போது . . .உன் அக்கா கேட்டாள்…

விஜயலெட்சுமி எப்படி இருப்பாள் .? அழகா அம்சமாக இருப்பாளா .?

நான் சுந்தரத்தை பார்த்துக் கொண்டே உனக்கு எப்படி தெரியும் ..என்று கேட்க, உன் மாமன் சிரிக்க, எல்லாம் எனக்குத் தெரியும் இவர் சொல்லி இருக்கிறார் என்றாள்.

எல்லாவற்றையுமா..?

ஆமாம் எல்லாத்தையும் சொல்லி விட்டார் இனி தப்பிக்க முடியாது.

அப்போ மகேஷ்வரியை பற்றியும் சொல்லி இருக்கானா என்று நான் கேட்டதும், பதறிய சுந்தரம், உஷ் என்று சத்தம் எழுப்பி, தன் உதட்டில் வாய் வைத்து சொல்லிடாதே.. என்று சைகை காட்டி கெஞ்ச, நான் எச்சரிக்கையாயிட்டேன்.

மகேஸ்வரியா அது யாரு…? என்று கற்பகம் கேட்க, நான் என்ன சொல்வது என்ற குழப்பத்தில் இருக்க, அந்த நேரத்தில் சுந்தரம், விஜயலெட்சுமி இல்லை என்று ஆனதும், இரண்டாவதாக காதலித்த பெண் என்று சொல்லி மேட்டரை திசை திருப்பி விட்டுட்டான்.

இது வினையா..? இல்லை விபத்தா..? எனக்கு என்ன சொல்வது என்று புரியாமல், தத்தளித்தேன். தூண்டிலில் மாட்டிய மீனாய் துடித்தேன். அவன் ஏன் இப்படி மாறினான். அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் எதுவும் ஏற்படக் கூடாது என்று அவன் காதலை கற்பகத்திடம் மறைத்து விட்டேன்.

பிளஸ் ஒன் படிக்கிற போது, டென்த் படிக்கிற விஜயலெட்சுமியின் நட்பு எனக்கு ஏற்பட்டது. அவள் பேசிய விதம் பழகிய விதத்தை வைத்து, நான் ஒரு நாள் அவளுக்கு லவ் லெட்டர் கொடுத்தேன். அவள் கத்தி கலாட்டா செய்து செருப்பை கழட்டவும், பயந்து போய் பின் வாங்கிக் கொண்டேன். அதன் பிறகு அவள் அப்பாவுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவே டென்த் முடித்ததும் வெளியூர் சென்று விட்டாள். ருசி கண்ட பூனை தான் சும்மா இருக்காது ஆனால் சூடுபட்ட பூனை எப்பவும் பயந்து தான் இருக்கும். அந்த அனுபவத்தாலே காலேஜ் படிக்கிற போது ஒரு யோக்கியனாகவே இருந்து படித்து முடித்தேன்.

எனக்கும் வாழ்க்கையில் கனவுகள் கற்பனைகள் இருக்குமல்லவா..? இருந்துச்சு. ஆசைகள் அலை மோத, எண்ணங்கள், எதிர்ப்பார்ப்புகள், எனக்குள்ளும் இருந்தது. உன்னை பார்க்கும் போது நம்பிக்கை ஒளி பிறந்தது. காதல் வந்தால் லைட் எரியுமாமே.. எனக்கு எரிந்தது. . நண்பன் தோள் கொடுப்பான், துணை இருப்பான் என்ற நப்பாசையும் என் உள்ளத்தில் இருந்தது. என் ஆசையை ஜாதி தீயால் எரித்து விட்டான்…

போகட்டும். சரி. . மாமாவின் மகேஸ்வரி என்ன ஆனாள்.?

சுந்தரம் மகேஸ்வரியை உயிருக்கு உயிராக காதலிச்சான். அந்த பொண்ணும் அவனை விரும்பி காதலிச்சது. இரண்டு பேரும் சினிமா, பிச்சாவரம், பூம்புகார் என்று சுற்றி இருக்கிறார்கள். ஏய்.. பார்த்துடா.. பல்ப் வாங்கிடப் போறே.. என்று நான் தமாஷ் பண்ணும் போது, உன் ஆளு மாதிரி செருப்பை எல்லாம் தூக்கிக் காட்ட மாட்டாள் என்று நக்கலடித்தான். இதற்காகவே நான் அவனின் காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. என்ன ஆச்சு.,? ஏன் பிரேக்கப் ஆச்சுன்னு எனக்கு தெரியலை. அவனாக சொல்லுவான் என்று எதிர்ப் பார்த்தேன். இன்று வரையில் ஒண்ணும் சொன்னதில்லை.

நீங்க என்ன நினைக்கிறீங்க.?

ஒரு கல்யாணத்தில் மலர்ந்த காதல், ஒரு சுயநலத்தில் கசங்கி விட்டது. வேறென்ன நினைக்க..?..!

ஒரு முடிவில் இன்னொன்றின் தொடக்கம் இருக்கும். முற்றுப்புள்ளி வரும் வரையில் எடுத்த முயற்சிகளை கைவிடக்கூடாது. பிறந்தது முதல் சாகிற வரையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொண்டு சமாளித்து வாழறது தான் புத்திசாலித் தனம். பயந்து ஒதுங்குவது தீர்வாகாது. அப்புறம் எப்போ என்னை பெண் கேட்டீங்க..?

அந்த விஷயம் உனக்குத் தெரியுமா..?

அக்கா தங்கச்சிக்குள் பேசிக்காமல் இருக்க முடியுமா..? ராத்திரி தான் சொன்னாள். சரி மேலே சொல்லுங்கள்..

காதல் சம்பந்தப் பட்ட விஷயங்கள் வெறும் பொழுது போக்குக்காக பேசப்பட்ட விஷயமாகிப் போக நான் என் இயல்பை மாற்றிக் கொண்டேன். அடிக்கடி போவதை குறைத்து வீக் என்ட்டில் ஒரு நாள் நட்புக்காக போக வர இருந்தேன். என் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த விஷயத்தை உன் அக்காளிடமும் உன் மாமாவிடமும் சொல்லி, எனக்கு சுமதியை பிடித்திருக்கிறது. கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறேன். எனக்காக நீங்க இரண்டுபேரும் பேசுங்கள் என்றேன். அப்போ உன் அக்கா மூணு மாசம் முழுகாமல் இருந்தாள்.

உங்களை ரொம்ப நல்லவர் என்று எண்ணியிருந்தேன், நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் என்று நினைத்திருந்தேன் என்று பொறுமையா பேச. ஆரம்பித்தவள் திடீரென்று கோபத்தில் பொங்க ஆரம்பித்து விட்டாள். விரலை ஆட்டி ஆட்டி ஒருமையில் பேசினாள். எப்போ உன்னைப் பற்றித் தெரிந்து, நீ ஒரு பொம்பளை பொறுக்கி என்று ஆனதோ அப்போதே நீ என் தங்கச்சிக்கு பொருத்தமானவன் கிடையாது. எங்கள் வீட்டில் பெண் எடுக்க உனக்கு எந்த தகுதியும் கிடையாது. இது கௌரவமானவங்க குடித்தனம் இருக்கிற வீடு, என்றவள் அபியை மனதில் நிறுத்தி, இங்கேயும் வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கு, இனிமே நீ இங்க வர்றதை கூட அனுமதிக்க முடியாது. வெளியே போய் விடு என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக சொன்னாள். அந்த வீட்டில் குடியிருக்கும் குடித்தனக்காரர்கள் மத்தியில் காட்டு கத்தலாக கத்தி என்னை அவமானப் படுத்தி பேசியதும் எனக்கு எல்லாமே வெறுத்துப் போச்சு. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவளை பருந்து கோழிக்குஞ்சை தூக்குராற் போல தூக்கிச் சென்று வெடித்துச் சிதறும் எரிமலைக்குள் வீசனும் போலிருந்தது.

இதற்கெல்லாம் மாமா ஒன்றும் பேசாமல் கம்முன்னு தான் இருந்தாரா..?

ஆமாம், எதுவும் பேசாமல் கம்முன்னுதான் இருந்தான். எனக்கு இன்னும் அசிங்கமா போயிடுச்சு. என்ன சுந்தரம்.. நீயும் கேட்டுக்கிட்டு பேசாமல் உட்கார்ந்திருக்கே, உண்மை நிலவரம் உனக்கு நல்லாத் தெரியும் தானே.. நீயே புரியும்படி எடுத்துச் சொல்லு என்றதற்கு,..

இல்லே, இதுல நான் பேசவோ கருத்து சொல்லவோ ஒன்றுமில்லை, இது அவள் வீட்டு விஷயம். சுமதி விஷயத்தில் நான் ஈடுபட முடியாது. என் மாமனார் இன்னும் வசதியான இடத்தில் தாம் மாப்பிள்ளை பார்ப்பார், நாங்கள் வற்புறுத்திச் சொன்னாலும் கேட்க மாட்டார். அது மட்டுமில்லை குலம் கோத்திரம் எல்லாம் பார்க்கிறவரு, உன் ஜாதியை பார்த்து வேண்டாம் என்று சொல்லிட்டாருன்னா அது உனக்கு கஷ்டமா போயிடும் என்று என்றைக்கும் இல்லாமல் திடீரென்று ஜாதியைப் பத்தி பேசவும் எனக்கு பொறியில் அறைந்தாற் போலாயிற்று.

அப்புறம் ஒரு தடவை வெளியில் சந்தித்த போது வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டான். அப்போது கூட, இனிமேல் சுமதியை பற்றிப் பேசாதே, அது எனக்கே பிடிக்கலை என்றான். அப்புறம் எங்கேயாவது பார்த்தால் ஹாய்… சொல்லுவான், சமயத்தில் பார்த்தும் பார்க்காதது போல போய்விடுவான். அவ்வளவுதான் ஃபிரண்ட் ஷிப். எல்லாம் முடிந்து விட்டது. அதிலிருந்து நான் அவன் வீட்டுக்கு போறதில்லை,

கண்களில் பனித்த கண்ணீரை நாசுக்காக துடைத்துக் கொண்டு என்னை ஏறிட்டுப் பார்த்தாள். வலிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சரி நான் போறேன் என்றவள் பதிலுக்காக காத்திருந்தாள்.

சாரி.. நீ எப்படி இருக்கே. பி.எஸ்சியை முடிச்சுட்டே.. மேல என்ன பண்ணப்போறே. .

விரக்தியாக சிரித்தாள். கேட்டதற்கு பதில் சொல்லாமல், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு எல்லாம் நான் தான் காரணம். தரக்குறைவாக பேசி அவமானப்படுத்திய அக்கா சார்பாகவும், பேசாமல் இருந்து உங்களை அசிங்கப் படுத்திய, மாமா சார்பாகவும், நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன், அப்பா அம்மா எல்லோரும் வந்திருக்காங்க, சாயுங்காலம் அக்காவை அழைச்சுட்டு ஊருக்கு போறோம். எங்களை மன்னிச்சிடுங்க. . எல்லாவற்றையும் மறந்து கவலை கொள்ளாமல் இருங்கள். . .

சொன்னவள் என் முகத்தைக் கூட பார்க்காமல் போய் விட்டாள். என் இருப்பிடம் வந்த நான் என் மேஜையில் இருந்த போட்டோவை பார்த்ததும் மலைத்து விட்டேன். அது நானும் அவளும் சேர்ந்து இருவரும் கும்பிட்டு நின்று சிரிக்கும் போட்டோ. சுந்தரத்தின் கல்யாணத்தின் போது வருபவர்களை வரவேற்கும் காட்சி. இதுநாள் வரையில் ரகசியமாக வைத்திருந்து ரசித்துக் கொண்டிருந்தவள் சொல்கிறாள் எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று.

அன்று சொல்லி மறைந்தவள், ஏழெட்டு மாசம் கழித்து இன்று தனிமரமாய் வந்திருக்கிறாள். இவளைப் பற்றிய சிந்தனையால் விடியும் வரையில் தூங்க வில்லை.

விடிந்ததும் அவளைப் பார்த்தேன். சோகமே உருவானவளாய் இருந்தாள். கண்கள் அழுது கொண்டிருந்தமையால் தூங்காத முகம் சுரந்து இருந்தது. காபி குடித்து விட்டு பேப்பரில் மூழ்கி இருந்த அப்பா, என்னைக் கண்டதும் திருஞானம், இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு சுந்தரத்தின் வீட்டில் விட்டுட்டு வந்திடு என்றார்.

என்னை நிமிர்ந்துப் பார்த்த சுமதி வேண்டாமென்று தலையசைக்கவும், இல்லப்பா நான் அவனிடம் பேசறதில்லை, அவன் வீட்டுக்குப் போறதாயில்லை, நீங்க வேணுமின்னா அவனுக்கு போன் பண்ணிச் சொல்லி இங்கே வந்து அழைத்துக் கொண்டு போகச் சொல்லுங்கள் என்றேன்.

திரு. . . நான் அக்கா வீட்டுக்குப் போக மாட்டேன். உங்களுக்குப் பிடிக்கலையின்னா சொல்லி விடுங்கள் நான் எங்கேயாவது போய் விடுகிறேன் என்றாள் சுமதி.

நீ. . அவனிடம் பேசுவதில்லை, இந்த பெண்ணோ அங்கே போக விரும்பலை, அதோடல்லாமல் நீ இருக்கும் தையரியத்தில், நீ இவளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில், உன்னை நம்பி வந்திருப்பதாகத் தோன்றுகிறது. சுந்தரத்திடம் உனக்கு என்ன விரோதம்.,? நகமும் சதையுமாக இருந்த உங்க இருவருக்கும் என்ன பிரச்சினை..? உனக்கும் இந்த பொண்ணுக்கும் என்ன தொடர்பு..? நீ. .உங்களுக்குள் நடந்த விஷயங்களை சொன்னால் நடக்க இருப்பதை பற்றி பேசி முடிவுக்கு வரலாம்.

அப்பா கோபப்படாமல் பொறுமையாக நிதானமாக கேட்பார் என்று கிஞ்சித்தும் நான் எதிர்ப்பார்க்க வில்லை. ஆதி முதல் அந்தம் வரையில் ஒன்று விடாமல் சொன்னேன்.

ஆவேசம் கொண்ட அம்மா.. அடி செருப்பால.. எம்புள்ளையை குறை சொல்ல அவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு. மரியாதை தெரியாத மானங்கெட்ட கழுதை என்று கற்பகத்தை திட்டினாள்

சுமதியின் முகம் மாறி அருவெறுப்பை கூட்டியது.

அம்மா.. அப்படி எல்லாம் பேசதே. தப்பு என் பேர்லேயும் இருக்கு. நீங்க இருக்கிற போது, நானாக சுமதியை பேசி முடிக்க கேட்டது எம் தப்பு. நீ அவளை குத்தம் சொல்லாதே..

போடா.. போக்கத்தவனே..அவளைப் பற்றி முழுசா உனக்குத் தெரியாது. கண்ணாலம் கட்டிக்கிட்டவனை காதலிச்சு வூட்டுக்குத் தெரியாமல் ஓடி போனவள் தானே அவள். அப்படிப்பட்ட நாதாரி எம் புள்ளையை கரிச்சு கொட்டுனா எனக்கு ஆத்திரம் வரதா..?..!

அதிர்ச்சியாகி சுமதியைப் பார்த்தேன். அவள் சங்கடமாக நெளிந்து தவித்தாள்.

அப்படியானால் உண்மையா..? ஜீரணிக்க முடியாத தாக்கத்துடன் என்னம்மா சொல்றே நீ. . . என்னால நம்பமுடியலை.

உண்மைதான்டா. தோ.. இருக்காளே இவளையே கேட்டுப் பாரு மெய்யா.. பொய்யா.. ன்னு தெரியும். ஏற்கனவே கல்யாணம் ஆனவனை உருகி உருகி காதலிச்சிருக்கா. கோயில்ல திருட்டு கல்யாணமும் நடந்திருக்கும், விஷயம் தெரிஞ்ச மொததாரத்து குடும்பத்தார்கள் மொத்தமாக வந்து அந்த பயலை அடிச்சு உதைச்சு இழுத்து கிட்டு போனாங்க. ஆண்டவன் தான் அவளை காப்பாத்திருக்கான். அவள் உள்ளத்தால மட்டும் தான் கெட்டுப் போனாளா இல்ல உடம்பாலும் கெட்டுப் போனாளா என்று யாருக்குத் தெரியும்.?

அப்படியே கண்ணால பார்த்த மாதிரி சொல்றே…

இவ. அக்கா கல்யாணத்துல பொம்பளைங்க குசு குசுன்னு பேசிகிட்டாங்க. அள்ளாமல் குறையாது. இல்லாமல் புகையாது. இந்த விஷயத்தை மூடி மறைக்கத்தான் தகுதியே இல்லாத மாப்பிள்ளைக்கு சீர் செனத்தியெல்லாம் ஒண்ணுக்கு நாலா செய்ஞ்சாங்கலாம்.

நான் சுமதியைப் பார்த்தேன் நெஞ்சு பொறுக்க முடியாமல் வேதனையுடன் ஆம் என்று தலையசைத்தாள்.

அவளுக்குத்தான் உன்னைப் பற்றித் தெரியாது. இவனுக்கு எங்க போச்சு புத்தி. சூடு சொரணை அத்துப்போச்சா..? வெள்ளை தோலுக்காரியை கட்டிக்கிட்ட மமதையா. வரட்டும் அந்த பயல், நிக்கவச்சு நறுக்குன்னு நாலு கேள்வி கேட்குறேன்.

ஆற்றாமையாள் அம்மா புலம்பிக்கிட்டு இருக்க சுமதி பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

சுமதி நீ எங்க கிளம்பிட்ட..? நான் கேட்டதும்…

உங்க காதலை என் அக்கா வீட்டுக்காரர் கெடுத்துட்டார். என் காதலை என் அக்கா கெடுத்துட்டாள். இந்த வீட்டில் இருக்கிற யோக்கியதை எனக்கில்லை.. நான் போறேன்.

இங்க பாருங்க எப்போ நம்ம புள்ளையை நம்பி இவ இந்த வீட்டுக்குள்ள வந்தாளோ அப்பவே அவ இந்த வீட்டு மருமகளாயிட்டா. இவ பேர்ல எந்த குத்தம் குறையும் கிடையாது. அக்காவை வச்சு நான் இவளை கொடுமை படுத்த மாட்டேன். நல்ல விதமா பேசி ஒரு முடிவை சொல்லுங்கள்.

நான் யார்கிட்டேயும் போன் பண்ணி இவளை அழைச்சிட்டு போகச் சொல்லப் போறதில்லை. பாபநாசம் போய் இவளை பெத்தவங்க கிட்ட பேசுறேன். ஒத்து வந்தால் பார்க்கிறேன். இல்லேன்னா பத்திரிக்கை அடிச்சு, ஊரை கூட்டி ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வச்சுடலாம். மொத பத்திரிக்கையே சுந்தரத்துக்குத்தான். நீ என்னடா சொல்றே..?

நான் பெருமிதமடைந்து அப்பாவை கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டேன்.

காத்திருந்த சுமதி என்னை கட்டிப்பிடித்து ஐ.. லவ்.. யூ.. திரு. என்று முத்தமிட்டாள்.

(சுபம்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *