உறவுக்கு மரியாதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 13,903 
 

காதல் என்பது ஆணும் பெண்ணும் பிறக்கும் போதே மூன்றாவது அனுக்களாய் ரத்தத்தில் உருவாயிடுது. வெளிப்படுத்தும் வயசும் விதமும் ஒவ்வொருத்தர் வாழ்கையில் வெவ்வேறாக அமைகிறது. ஒரு சிலரின் வாழ்க்கையில் காதல் ஊனமடைந்து சலனமின்றி ஊமையாகி விடுகிறது. உற்சாக மிதப்பில் உரக்கச் சொல்ல வைக்கும் காதல் வாலிப வயதினர்களை பாடாய் படுத்துகிறது. காதல் படுத்தும் பாடு சொல்லி வைக்க மாளாது.

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட இந்துவை ஒரு நாற்காலியோடு நாற்காலியாக கைக்கால்களை கட்டிப் போட்டுருந்தனர். மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக பயணித்ததால் மெல்ல மெல்ல மூர்ச்சை தெளிந்த இந்து சோர்வாக இருந்தாள். சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்டாள். அந்த இடம் ஒரு மெக்கானிக் ஒர்க்‌ஷாப்பாக இருந்தது. கொஞ்சம் தள்ளி வாயிற்பக்கம் கடத்தி வந்த இருவரும் உட்கார்ந்திருந்தனர். கவனித்த இந்து, டேய்.. தடியன்களா, கட்டை அவிழ்த்து விடுங்கடா என்றாள்.

பொறு.. பொறு.. அவசரப்படாதே. கட்டி வைக்கத்தான் உத்திரவு அவிழ்த்து விட இல்லே என்றான் ஒருவன்.

மீதமுள்ள இரவை இந்து உட்கார்ந்தபடியே தூங்கி கழித்தாள். விடியற்காலை நேரத்தில் கண்விழித்தாள் கட்டின் இறுக்கம் கைகளுக்கு வலியை கொடுத்தது.

சிறிது நேரத்தில் புன்னகைத்தபடி அருகில் வந்த ஸ்ரீதர் என்ன இந்து என் கூட்டாளிங்க உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டானுங்களா, ஐ.. சோ.. சாரி.., இந்து என்றவன் கத்தியால் கயிற்றை அறுத்து விடுவித்தான்.

மாமா.. நீ.. நீயா.. நீ என்னை கடத்திட்டு வந்தே.. வியப்பு மேலிட கேட்டாள் இந்து.

ஸ்ரீதரின் கூடப்பிறந்த அக்கா மகள் இந்து. ஒன்றரை ஆண்டு பெரியவன். விதியின் விபரீதத்தால் சியாமளாவுக்கு கல்யாணம் பேசும்போது தாய்க்கு ஐந்து மாதம் கர்ப்பம். பேரனை கொஞ்சும் வயதில் மகனைப் பெறவேண்டியதிருந்தது. ஸ்ரீதருக்கு சிறுவயசிலிருந்து இந்துவின் பேரில் கொள்ளை ஆசை. கல்யாணம் என்று ஒன்று பண்ணிக்கொண்டால் இந்துவைத்தான் பண்ணிக்க வேண்டும் என்றிருந்தான்.

ஸ்ரீதரின் அண்ணன் ஸ்ரீரங்கனும், அக்கா சியாமளாவும் ஸ்ரீராமுக்குத்தான் கல்யாணம் முடிக்கனும் என்று பேசி வைத்திருந்தனர். ஸ்ரீதர் ஸ்ரீராமுக்கு குட்டி சித்தப்பா. அதாவது ஸ்ரீராம் இந்துக்கு தாய்மாமா பையன். ஸ்ரீதர் தாய்மாமன். இரண்டுபேருமே முறை மாப்பிளைகள். இருந்தும் இந்து கபிலனை காதலித்து வருகிறாள்.

நீ கபிலனை கல்யாணம் பண்ணிக்க வேண்டி உன்னை நீயே கடத்தச் சொன்னே, அதை தெரிஞ்சு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க உன்னை கடத்திட்டு வந்துட்டேன் என்றான் ஸ்ரீதர்.

சொந்த அக்கா பொண்ணையே கடத்திட்டு வந்திருக்கியே.. உனக்கு தப்புன்னு தோனலையா மாமா? நல்ல புள்ளையா இருந்த நீ எப்படி இப்படி கெட்டப்புள்ளையா மாறின.,!

சமயமும் சந்தர்ப்பமும் கிடைக்காத வரையில் எல்லோருமே யோக்கியர்கள் தாம். கேட்டால் கிடைக்காது என்பது தெரிந்து தான் எடுக்க வேண்டியதாகிறது. அது திருட்டோ அல்லது தப்பானா காரியமோ எதுவும் கிடையாது. என் அண்ணனுக்கு உன்மீது எந்த அளவில் உரிமையும் அதிகாரமும் இருக்கோ அதே அளவுக்கு எனக்கு உன்னிடம் இருக்கு. எனக்காகப் பிறந்தவள் நீ, நான் உன் கூட சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். உன்னை ஸ்ரீராமுக்கோ, அரவிந்தனுக்கோ இல்ல கபிலனுக்கோ விட்டுக் கொடுக்க நான் சொம்பையன் இல்லை.

அரவிந்தன் இந்துவுக்கு அத்தை பையன். அவனுக்கு தம் மகளை மணமுடித்து வைக்க அப்பா செல்வராசுக்கு ஆசை. இருந்தாலும் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியாமல் அக்காவை பகைத்துக் கொண்டு மச்சான் ஸ்ரீரங்கன் மகனுக்கு முடித்து வைக்க சம்மதித்து திருமணத்துக்கான நிச்சயதாம்பூலம் நடத்தும் வேளையில் ஸ்ரீதர் கடத்திட்டு வந்துட்டான்.

இல்லைன்னாலும் நீ செய்தது ரொம்ப தப்பு மாமா.

நீ கபிலன்னு ஒருவனை காதலிச்சு, அவனை கல்யாணம் பண்ணிக்க நீ ரௌடியிஸம் பண்ணிக்கிட்டு இருக்கியே அது தப்பில்லையா.? அது ரைட்டுன்னா இதுவும் ரைட்தான். காதல் பெயரால நீ லூட்டி அடிச்சின்னா நான் விடுவேனா., இல்ல நான் தான் விட்டு வைப்பேனா.. அதான் தூக்கிட்டேன்.

நீ என்னை தூக்கலாம். ஆனால் என் மனசிலிருந்து கபிலனையோ இல்ல அவன் மனசிலிருந்து என்னையோ உன்னால தூக்க முடியாது மாமா, என் இஷ்டமெல்லாம் கபிலன்தான்.

என் இஷ்டமெல்லாம் உன்கிட்ட இருக்கு ஒருத்தருக்காக ஒருத்தர் பிறப்பது என்பது நம்ம விஷயத்தில் ஒத்துப் போகுது. எனக்கு என்ன குறைச்சல்.,? நான் அழகா இல்லையா,? நான் படிக்கலையா.,? அடுத்தவன் கிட்ட கைக்கட்டி வேலைப்பார்த்து சொற்பமா சம்பாதிப்பதை விட சொந்தமா தொழில் பண்ணி கணிசமா சம்பாதிக்கிறேன். மாமா மகனை விட மாமாவுக்குத்தான் உன் மீது உரிமை ஜாஸ்தி அதைப் புரிஞ்சுக்கு.

ஐய்யோ புரியாமல் பேசாதே, என் காதலை நிறைவேற்றி வையுங்கள் என்று உன் அண்ணங்கிட்ட சொன்ன போது, காதலை மூட்டைக்கட்டி வச்சுட்டு ஸ்ரீராமை கட்டிக்க உண்டான வழியைப்பாரு. அதான் உனக்கு நல்லது என்று கண்டிக்கிறார். நீ உன் பங்குக்கு என்னை கடத்திட்டு வந்து, நீ ஒரு வகையில டார்ச்சர் பண்றே., எனக்குப் பிடித்தவர் என்கிறதை விட என்னைப் பிடித்தவராய் இருக்க வேண்டும். கபிலன் அப்படி இருக்கிறான்.

நானும் அப்படித்தான் இருக்கேன் இந்து.. பாண்டி குளூனி மெட்ரிக்குலேஷன் ஸ்கூலிலிருந்து சென்னை இந்துஸ்தான் யுனிவர்சிட்டி வரையில் உன்னை இஞ்ச் பை இஞ்சா நேசிச்சு என் ஆசையை வளர்த்துகிட்டு இருக்கேன். உன்னோட சின்ன வயசுல நான் சின்ன பையனா இருந்த போது உன்னை பார்த்து காதலிக்க ஆரம்பிச்ச நான் அப்போதிலிருந்து இன்றைக்கும் வரையில் நான் உன்னை காதலிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். உன் பேர்ல எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. நீ கபிலன் கூட பழகுறதைப் பார்க்கும் போது எனக்கு கோவம் தலைக்கேறி கொலை வெறியை உண்டு பண்ணும். இருந்தாலும் நீ எனக்குத்தான் என்று இதயத்தின் ஒரு மூலையில் ஒலியும் ஒளியும் உருவாகி தடுத்து விடும்.

நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசாரக் காதலிக்கிறோம். சோ.. உன் காதல் வேறு என் காதல் வேறு ரெண்டையும் சேர்த்து முடிச்சுப் போட்டு பேசாதே ஒருதலைக் காதல் ஜெயித்ததா சரித்திரம் இல்லை மாமா.

உன் காதல் உசத்தின்னா அப்போ என் காதல் மட்டமா,? எல்லாக் காதலுமே மூன்று முடிச்சுக்கான காதல் தான். அந்த மூணுமுடிச்சு சிலருக்கு கண்ணியத்தின் பேரால் நடக்குது. சிலருக்கு காமத்தின் விளைவால் நடக்குது. உனக்கு எப்படி நடக்குனுமுன்னு சொல்லு, கனக்கச்சிதமா இங்கேயே இப்போதே நடத்திடலாம்.

உண்மையான காதல்ல, உதயமாகும் எண்ணங்களும், சொன்ன சொல்லும், கொண்ட கருத்தும், முடிக்கும் செயல்கள் எல்லாம் ஒருமித்து இருக்க வேண்டும். அதுதான் காதல் கோட்டையில் பறக்கும் வெற்றிகொடி. எங்கள் காதல் நிச்சயம் நிறைவேறும். நீ குந்தகம் ஏதும் பண்ணாமல் ஒரு தாய் மாமாவா நீயே என்னை கபிலனுடன் சேர்த்து வை.

அது முடியாது இந்து. உன் காதலை சுற்றி இருக்கிற பிரச்சினைகளை ஒரு முறை நினைச்சுப்பாரு. தாத்தா, மாமா, யென் அக்காவுக்கு பிடிக்காததை எதையும் உன்னால் நடத்த முடியாது. ஏன்னா உன் சாதி வேறு, அவன் சாதி வேறு. இயற்கையாக வடதுருவமும் தென் துருவமும் ஒன்று சேராது.

அல்லாமல் கபிலனின் அக்கா தங்கச்சிகள் முதிர்கன்னிகளாக இருக்க வேண்டி வரும் என்ற பயத்தில் அவன் உன்னை கட்டிக்க மாட்டான். சாத்தியமிருந்தாலும் நேரம் காலமும் சந்தர்ப்பவாதமும் சேர்ந்து உருவாக்கும் நெருக்கடி அதனை தகர்த்து விடும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியில் ஒன்று தான் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு.! இதற்கு நீ உடன்பட்டுத்தான் தீரவேண்டும்.

சாதி சாதின்னு சொல்லி ஏன்தான் காதலுக்கு எதிரா சதி பண்றீங்களோ தெரியலை. காதல் கல்யாணம் சாதி மறுப்பு கல்யாணம் செய்து கொள்வதால் சாதிகள் ஒழியும் என்று கூடவா சிந்திக்க முடியாது.

சாதி ஒழிப்பு போராட்டத்தில் பெரியார் அம்பேத்கார் போன்ற அறிஞர்கள் ஈடுபட்டும் ஜாதி ஒழிந்த பாடில்லை. சாதி என்னும் நெருப்பில் அரசியல் ஆதாயம் என்கிற குளிர் காயும் வரையில் சாதியை ஒழிக்க முடியாது.

காதலிச்சு கலப்பு திருமணம் புரிவதால் தான் சாதி ஒழியும் என்றிருந்தால் இன்றைக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் சாதி வேற்றுமை குறைந்து இருக்கும். அந்த சாதியில பொண்ணு கட்டிக்கிட்டான் இந்த சாதி பொண்ணு ஓடிப்போச்சுன்னு சமுதாயத்தை சார்ந்தவர்கள் குத்திக்காட்டாமல், சமத்துவம் ஒன்றே ஒற்றுமைக்கு வழி என்று ஆதரவு கரம் கொண்டு ஜாதி தீயை அணைக்கும் வரை சாதி ஒழியாது.

ஒவ்வொரு சாதியிலேயும் பல முரன்பாடு கருத்துக்கள் தொக்கி இருக்கின்றன. ஏற்றத் தாழ்வுகளும் ஈகோ காம்ப்ளக்சும் நிறைய அளவில் போக்கஸ் ஆகுது.

ஒரு ஜாதியில பொண்ணுங்க நிறையப் பேர்கள் இருக்கிறார்கள் மாப்பிள்ளைக்கு தட்டுப்பாடு இருக்கிறது. இன்னொரு ஜாதியில பையன்கள் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள் பொண்ணுக்கு தட்டுப்பாடு இருக்கிறது.

படிச்சப் பொண்ணுங்கள் படிக்காத இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிப்பதில்லை இருந்தும் ஒரு ஜாதியில் படிச்ச பொண்ணுங்களைவிட படிக்காத பையன்கள் தாம் அதிகம் இருக்கிறார்கள். இப்படி படிப்பால் அந்தஸ்த்தால் வயதால் ஜாதியால் பலம் இழந்தவர்கள் வேற வழி இல்லாமல் பொருந்தாத ஜாதியில் இருக்கும் பொருத்தமானவரை தேடி போக வேண்டியதிருக்கு. அந்த தேடல் காதல் கல்யாணமாகவும் பேசிமுடிக்கும் கல்யாணமாகவும் ஆகி விடுகிறது. அதற்கு இந்த சமூகம் வாய் மூடி செவி சாய்க்கிறது. இதை உன்னால் மாற்ற முடியுமா.,? இல்லை என்று மறுக்க முடியுமா.,?

காதலால் சாதி பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு காணமுடியும். உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் இந்த நிலை மாறும். திருடனா பார்த்து திருந்தா விட்டால் எப்படி திருட்டை ஒழிக்க முடியாதோ அப்படி தான் இந்த சாதிப்பிரச்சினையும். சாதி வெறியர்களின் தாகத்தை திராவகம் கொண்டு அழிக்கும் வரையில் சாதியை ஒழிக்க முடியாது.

சமுதாயத்தில நம்ம வாழ்க்கை ஒரு அங்கமா இருக்கனுமே தவிர சமுதாயத்தில் நம்ம வாழ்க்கை அசிங்கப்பட்டு விடக்கூடாது. சமுதாய நலனில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம் தாம். அதே சமயத்தில் நமது சந்தோஷத்துக்கு நாமே எதிரியாய் இருக்கக் கூடாது. அனுபவ முதிர்ச்சியும் பக்குவமான மனதும் அதற்கு தேவை. இந்த வயதில் அது சாத்தியமில்லை.

பொதுநலம் புணைய வேண்டுமென்றாலும் புரிய வைக்க வேண்டுமென்றாலும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். அதை எதிர்க்கொண்டு சாதிக்கனும் என்கிற அவசியம் நமக்கில்லை ஏன்னா நாமெல்லாம் ஆட்சியிலோ, இல்ல அதிகாரத்திலோ இல்லாத சராசரி மனிதர்கள். உன் காதலை நியாயப்படுத்த சாதியை ஒழிப்பை ஒரு கருவியாக்காதே.

உன் சாதியில் உனக்கு ஸ்ரீராமோ நானோ இருக்கிறேன். அதுபோல அவன் சாதியில் ஒரு கவிதாவோ இல்லை கஸ்தூரியோ எவளோ ஒருத்தி இருப்பா.. அப்படி ஒருத்தி இல்லைன்னு அவன் உன் துணையைத் தேடினானா.,? இல்லை நீ தான் வக்கத்து போய் அவனைத் தேடினாயா? இல்லைல்ல. என்னமோ சமூக சீர்திருத்தவாதி போல அடுக்குற..

தாப்புதான் மாமா ஜாதி ஒழிப்பு என்கிற ஆயுதத்தை முன்னிலைப் படுத்தியது தப்பு தான். அந்தஸ்து பார்த்தோ தகுதிப் பார்த்தோ இல்ல ஜாதியைப் பார்த்தோ காதல் வர்றதில்லை. நாங்க ஒருத்தரை ஒருத்தர் மனசாரக் காதலிக்கிறோம். அதை மதிச்சி நீயாவது விரோதம் பாராட்டாமல் எங்களை ஒன்று சேர்த்து வை.

அது முடியாது இந்து. நீ எனக்கானவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள். உன்னை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. எதுவும் நிரந்தரமில்லை இதுவும் கடந்து போகுமின்னு நீ என்னை கல்யாணம் பண்ணிக்கு. நாம சந்தோஷமா இருக்கலாம்.

முடியாது மாமா..

இங்க பாரு இந்து நான் நினச்சிருந்தால் நீ மயங்கிகிடக்கிற போதே உன் கழுத்துல தாலி கட்டியிருக்க முடியும். அதை வச்சு தாலி சென்டிமெண்ட் பேசி உன்னை சமாதானப் படுத்தியிருக்க முடியும் நான் அப்படி செய்யாமல் கன்னியமா நடந்துகிட்டேனல்ல

நீ அப்படி செய்திருந்தால் கட்டின தாலியை கழட்டி உம் மூஞ்சில தூக்கிப் போட்டுட்டு நான் பாட்டுக்கும் போய்கிட்டே இருப்பேன். நீ எதிர்ப்பார்க்குறாற் போல, கண்ணாளா.. நீ தெரிஞ்சோ தெரியாமலோ என் கழுத்துல தாலி கட்டிட்ட, தாலி பொண்ணுக்கு வேலி, கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு சொல்லி உன் கால்ல மட்டும் விழமாட்டேன்.

என் ஃபீலிங்கை புரிஞ்சுக்கு இந்து, நீ வேணுமின்னா காலேஜுக்கு போன பிறகுதான் காதலிச்சுருப்பே, ஆனால் நான் உன்னை உன் ஐந்து வயசிலிருந்து காதலிக்கிறேன். தாய் மாமாதான் முதலில் அப்புறம் தான் மாமா மகனும் அத்தை மகனும் இந்த முறைகூட தெரியாமல் சின்னவயசில் உன்னை ஸ்ரீராமுடன் சம்பந்தப்படுத்தி பேசுற போதும் இந்த வயசில் அவனுக்கு உன்னை நிச்சயப்படுத்துகிற போதும் என் தரப்பு நியாயம் பேச என் பக்கம் யாருமில்லை. அதுக்காக நடக்குறதை எல்லாவற்றையும் பார்த்து கிட்டு என்னால் சும்மா இருக்க முடியாது. நீ எனக்கு வேணும் இந்து.

அண்ணனும் தம்பியும் ஏன் என்னைப் பாடாய் படுத்துறிங்க. நான் பொண்ணா பொறந்தது தப்பு. என்னால் பெத்தவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியலை. சின்ன வயசிலிருந்து ஸ்ரீராம் அத்தானுடன் சம்பந்தப்படுத்தி பேசி ஆசைகள் வளர நான் காரணமா இருந்திருக்கேன். ஆசையை வளர்த்துக்கிட்ட அவர் நிராசையாலே தினம் தினம் நொந்து வேதனைப்பட்டுகிட்டு இருப்பார். அதுக்கு காரணம் நான்.

உரிமை இருக்கு உறவை புதுப்பிச்சுக்கலாம் என்று நம்பிக்கையோடு வந்த அரவிந்தன் அத்தானுக்கு துரோகம் இழைக்க ஒரு பெண்ணா நான் காரணமாயிட்டேன். பொண்ணுகொடு, பொண்ணைக் கட்டிவையுங்கன்னு ஒவ்வொருத்தார் காலில் விழுந்து அத்தை கெஞ்சியது இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. அத்தை தன்மானத்தை இழக்க நான் காரணமா இருந்துருக்கேன்.

காதலின் பேரால் கபிலன் மீது ஆசைப்பட்டு சும்மா கிடந்த அவணை துரத்தி துரத்தி அவன் மனசிலேயும் ஆசையை வளர்த்து விட்டு காதலா குடும்பமா என்ற கேள்விக் குழியில் அவன் நிம்மதியை புதைத்திருக்கேன். என்ன தான் காதல் புனிதமாக இருந்தாலும், அதை விரும்பதகாத செயல்ன்னு அவதூறு பேசி எங்களை சேர்த்து வைக்க ஆதரவில்லாமல் காதல் உடைஞ்சு போக நான் காரணமாயிருக்கிறேன்.

இதோ உங்களுடைய கனவு சாம்ராஜ்ய சிம்மாசனத்தில் என்னை மஹாராணியாக உட்கார வச்சு அழகு பார்க்க ஆசைப்படும் உன் மனசையும் நான் நோகடிச்சுட்டேன். நான் பெண்ணாய் பிறந்ததால் தானே இத்தனை இம்சைகள். என் மீது மாறாத அன்பும் தீராத காதலும் கொண்டிருக்கிற உங்கள் எல்லோருடைய அவஸ்த்தைக்கு நான் காரணமாயிருக்கிறேன். இத்தனைக்கும் மத்தியில் நான் வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போறேன். என் மனசாட்சி என்னை அனு அனுவாய் குத்தி கொன்று விடும் மாமா.

விரக்தியா பேசி நீ தைரியத்தை கைவிடாதே இந்து, யாராலேயும் ஒரே சமயத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது.

ஆமாம் மாமா, முடியாது தான் அது எனக்குத் தெரியும். ஆனால் ஆளாளுக்கு உண்டான ஆசைகள் வேறுவேறா இருந்தால் ஒன்றொன்றாய் நிறைவேத்தலாம். ஆனால் ஆசைப்படும் பொருள் நானாக இருக்கிறேனே நான் என்ன செய்ய முடியும்.? அடுத்தடுத்து ஒவ்வொருத்தர் ஆசையை நான் நிறைவேற்ற வேண்டுமானால் என் மனசையும் உடம்பையும் கூறு போட்டால் தான் செய்யமுடியும். அது நடக்குற காரியமா இருந்தாலும் என்ன பிரயோஜனம் இருக்கு சொல்லு,

நான் பெண்ணாய் பிறந்திருக்கக் கூடாது. பிறந்து கஷ்டத்தையும் சங்கடத்தையும் கொடுக்கும் நான் உயிரோடு இருக்கவே கூடாது என்று ஆவேசத்துடன் பேசிய இந்து அருகில் கிடந்த கத்தியை எடுத்து சரேலென்று கழுத்தை அறுத்துக் கொண்டாள்.

பதறிப்போன ஸ்ரீதர் ஐய்யோ .. இந்து என்ன காரியம் பண்ணிட்டே..என்றபடி துணியால் அவள் கழுத்தை வளைத்து சுற்றினான்.

இல்ல மாமா நான் செய்தது சரி தான். அம்மா, மாமா கொடுக்குற நெருக்கடியால நான் ஸ்ரீராம் மாமாவை கட்டிக்கிட்டா உங்க காதலுக்கு அநியாயம் பண்ணினதாகும். உங்க உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நான் உங்களைக் கட்டிக்கிட்டா ஸ்ரீராம் அத்தானுக்கு பொல்லாப்பாயிடும். மேலும் குடும்பத்துக்குள்ள போட்டி பொறாமைன்னு எந்த நேரமும் சண்டை சச்சரவாகி குழப்பம் தாம் நீடிக்கும்.

மாமா, மாமா பையன்னு, முக்கியத்துவம் கொடுத்து, அப்படி உங்களில் ஒருத்தரை கட்டிக்கிட்டா அத்தைக்கும், அரவிந்த் அத்தானுக்கும் ஆகாமல் போய் அவர்களின் சாபத்துக்கு ஆளாக வேண்டியதிருக்கும். அதனால் நிம்மதியும் சந்தோஷமும் நிர்மூலமாயிடும். தம்பி பொண்ணு கொடுக்கலையே என்ற கோபம் அவர்களையும் நிம்மதியாக வாழ விடாது.

சொந்தம் விட்டுப்போகக் கூடாது, அத்தை மாமா உறவு தான் முக்கியமின்னு மூணுபேரில் ஒருத்தரை நான் கட்டிக்கிட்டால் அது காதலுக்கும் கபிலனுக்கும் துரோகம் செய்யுறதா ஆயிடும். நான் அவனை வஞ்சித்து அவன் வாழ்க்கையை நாசமாக்கியதாகும். காதல் தான் முக்கியமுன்னு சமாதானமாகவோ இல்ல ஓடிப்போயோ நான் கல்யாணம் பண்ணிக்கொன்டால் உங்க மூணுபேரையும் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தையும் குலைத்துவிடும்.

என்னுடைய சுயநலம் தாம் முக்கியம் அடுத்தவர்கள எப்படிப் போனால் என்ன என்று இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் இழந்ததை வைத்து என்னிடம் சுமூக உறவுக்குப் பதில் வன்மத்தைதான் கூட்டுவார்கள். உறவுகள் இருந்தும் இல்லையென்றாகிவிடும். கிடைப்பதற்கரிய பெண் ஜென்மத்தை எடுத்து நம்பிக்கையானவர்களுக்கு நல்லதை செய்யாத போது உயிரோடு இருந்து என்ன செய்யப் போறேன். நான் போறேன் மாமா. மூச்சை கையில் பிடித்துக்கொண்டு அரைகுறை சுவாசாத்தில் திக்கி திணறிப் பேசிய இந்து கண்களைத் திறந்தபடி உயிரை விட்டாள்.

தன் கண் முன்னே தாம் விரும்பியவள் உயிரை விட்ட துர்ப்பாக்கியம் ஸ்ரீதரின் நெஞ்சை பதைப்பதைக்கச் செய்தது. பீறிட்ட கண்ணீரை துடைத்தவன், அடுத்தவர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்ட உனக்கு உயிர் வாழ ஒரு வழி கிடைக்கலையா, அநியாயமா இப்படி உயிரை விட்டிட்டியே.. உன்னுடைய இந்த நிலைக்கு நான் தான் காரணம் நான் மட்டுமே காரணம் நீ இல்லாமல் உனக்கான இந்த உயிரை வச்சுக்கிட்டு நான் வாழ்வதில் அர்த்தமில்லை, நானும் உன் கூடவே வந்துடுறேன். வாழ்வில் இணையாவிட்டாலும் சாவில் சேர்ந்து கொள்கிறேன், என்று சொல்லி அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *