காகம் எப்படிக் கருப்பானது?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 16,257 
 

ஆதிகாலத்தில் காகங்கள் சற்று நீண்ட தோகை போன்ற இறக்கைகளுடன் வெண்மை நிறத்தில்தான் இருந்தனவாம்! அப்படிப்பட்ட காக்கை இனத்தில் ஒரு காக்கைக் குஞ்சு தன் பெற்றோருடன் ஒரு மரத்தில் வசித்து வந்தது. அது ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். “அது என்ன?’
“இது ஏன் இப்படி?’, “இதைச் செய்தது யார்?’ என்று தன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டே இருந்தது.

அது ஒருநாள் மரத்தை விட்டுக் கீழே இறங்கி வந்ததும், அதை ஒரு பூனை தாவிப் பிடிக்க முயன்றது. இதனால் அஞ்சி நடுங்கிய காக்கைக் குஞ்சு மீண்டும் தன் கூட்டிற்கே சென்று, அமர்ந்து கொண்டது. அதன் தாய் அதனிடம், “”அவை விலங்குகள்! நம்மை விட வலிமை மிகுந்தவை! நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!” என்றது.
உடனே காக்கைக் குஞ்சு, “”வலிமை என்றால் என்ன அம்மா?” என்றது.
“”எப்படிப்பட்ட சூழலையும் சமாளித்து உயிர் வாழும் திறனே வலிமை எனப்படும்…” என்றது.

இப்பொழுது அந்த காக்கைக் குஞ்சிற்கு உலகிலேயே வலிமை மிகுந்த உயிரினத்தைக் காண ஆவல் பிறந்தது. அதைப் பூனையிடமே கேட்டுவிடுவோம்… என்று நினைத்துக் கொண்டது.
மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த காக்கைக் குஞ்சு பூனையிடம் சென்று, “”அண்ணே! உன்னைவிட வலிமை மிகுந்தவர் யார்?” என்று கேட்டது.
அதற்குப் பூனை, “”என்னைவிட வலிமை மிகுந்தவன் நாய்” என்றது.

காக்கைக் குஞ்சு உடனே நாயிடம் சென்று, “”உன்னைவிட வலிமை மிகுந்தவர் யார்?” என்றது.
நாயோ தன்னைவிட வலிமை மிகுந்தது காளை மாடு என்றது.

காளை மாட்டிடம் சென்று கேட்க அது “யானை’ என்றது. யானையிடம் சென்று கேட்டால் அது சிங்கமும் புலியும் தன்னைவிட வலிமை மிகுந்தவை என்று கூறின.

எனவே அவற்றைப் பார்க்க உடனடியாகக் காட்டுக்குச் சென்றது அந்த காக்கைக் குஞ்சு. அங்கு சிங்கத்தின் குகை வாயிலில் ஒரு சிங்கம் அம்பு பாய்ந்து இறந்துகிடந்தது. அதைச் சுற்றிலும் சில சிங்கங்கள் நின்று கொண்டிருந்தன. சற்றுத் தொலைவில் புலி ஒன்று வலையில் மாட்டித் தவித்துக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு புலியின் அருகில் சென்ற காக்கை குஞ்சு, “”அண்ணே, வலிமை மிகுந்த உங்களை வலையில் மாட்டிவிட்டவர், உங்களைவிட வலிமை மிகுந்தவராகத்தான் இருக்கவேண்டும். தயவுசெய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள்?” என்று கேட்டது.

கோபத்தில் உறுமிய புலி, “”இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் உடைய மனிதன்தான் அவன்!” என்றது.
“”மனிதனின் வலிமை அவன் உடலில் இல்லை! அவன் அறிவில்தான் உள்ளது! தன்னால் செல்லமுடியாத இடங்களில் இருக்கும் பகைவர்களை வெல்ல ஆயுதங்களைப் பயன்படுத்துவான். எமது விலங்கினத்தையே “வீட்டு விலங்குகள்’ “காட்டு விலங்குகள்’ என இரு பிரிவாகப் பிரித்துவிட்டான். மனிதனின் அறிவாலும் ஆற்றலாலும் செய்யமுடியாத காரியம் என்று எதுவும் இல்லை. தன் அறிவைப் பயன்படுத்தியே அங்கிருக்கும் சிங்கத்தை வீழ்த்தியுள்ளான். என்னையும் சிறை பிடித்துவிட்டான்..” என்று கூறியது.

உடனே அந்த காக்கைக் குஞ்சிற்குத் தானும் மனிதன் போல் அறிவு பெற வேண்டும் என்ற ஆசை பிறந்தது. சற்று நேரத்தில் அங்கு ஒரு நரி வந்து சேர்ந்தது. காக்கைக் குஞ்சு அதனிடம் சென்று, “”அண்ணே! மனிதன் தன் அறிவை எங்கு வைத்திருப்பான் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டது.
அதற்கு நரி, “”அதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய்?” என்றது.
“”அவனிடம் உள்ள அறிவை நான் எடுத்துக் கொள்வேன். இதனால் நான் உலகிலேயே மிகவும் வலிமை மிகுந்த உயிரினமாவேன்! என் இனத்தைக் காப்பேன்!” என்றது.
“”நீ அளவுக்கு மீறி ஆசைப்படுகிறாய். இதனால் உனக்குத் துன்பமே நேரும்!”
என்றது. இதை சற்றும் பொருட்படுத்தாத காக்கைக் குஞ்சு, “”அண்ணே! என்னை எப்படியாவது மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்!” என்று கெஞ்சியது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நரி, “”மனிதர்கள் என்னைக் கண்டால் கொன்றுவிடுவர். உன்னை மிக எளிதாக விரட்டிவிடுவர்…” என்றது.
“”அப்படியென்றால் மனிதனின் அறிவை நான் எப்படிப் பார்ப்பது? அது எப்படி இருக்கும்?” என்றது.
“”எனக்குத் தெரிந்த வரையில் பகலில் மனிதன் தன் அறிவைத் தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுவான். ஆனால் இரவில் தூங்கும் பொழுது அதை எங்கோ ஓரிடத்தில் யாரும் எடுக்கமுடியாதபடி ஒளித்துவைத்துவிடுவான். வேண்டுமென்றால் உன்னை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு இன்று இரவு அழைத்துச் செல்கிறேன். நாம் இருவரும் ஒளிந்து நின்றுகொண்டு அங்கு காவலிருக்கும் மனிதர்களைக் கண்காணிப்போம்!” என்று கூறியது நரி.

அதன்படியே அங்கு ஒளிந்து சென்று இருவரும் கண்காணிக்கத் தொடங்கினர். அங்கு காவலில் இருந்த மனிதர்கள் இரவு கடும் குளிராக இருந்ததால் ஓரிடத்தில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்வதற்காக காய்ந்த சருகுகளையும் சுள்ளிகளையும் குவித்துவைத்தனர். ஒரு மனிதன் இரு கட்டைகளை உரச அதிலிருந்து தீப்பொறி தோன்றவே காய்ந்த சருகுகள் உடனே பற்றி எரியத் தொடங்கின.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நரி, “”அதோ வெளிச்சமாகத் தெரியும் அந்த ஒளியே மனிதனின் அறிவாகும்!” என்றது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த காக்கைக் குஞ்சு எப்படியாவது அந்த அறிவைத் தன் கூட்டத்தாரிடம் கொடுக்க எண்ணியது. பறந்து சென்று எரியும் நெருப்பில் வீழ்ந்தது. திடீரென்று காக்கைக் குஞ்சு ஒன்று பறந்து வந்து நெருப்பில் விழுந்ததைக் கண்ட மனிதர்கள், அதை நெருப்பிலிருந்து எடுத்து தண்ணீரில் போட்டனர்.

இதற்குள் அதன் நீண்ட தோகை போன்ற இறகுகள் முழுவதுமாக எரிந்துவிட்டிருந்தன. உடலெங்கும் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. வெண்மை நிறத்தில் இருந்த காக்கைக் குஞ்சு கருஞ்சாம்பல் நிறத்தில் மாறி இருந்தது. காக்கைக் குஞ்சு நெருப்பில் விழுந்த அடுத்த நொடியே நரி தப்பித்து ஓடிவிட்டது.

தாய்க் காகத்தால் தன் குஞ்சை அடையாளம் காணமுடியவில்லை. காலங்கள் உருண்டோடின. குஞ்சாக இருந்த அது, பெட்டைக் காகமாக வளர்ந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. அதன் குஞ்சுகள் சாம்பல் நிறத்தில் இருந்தன. அதற்குப் பிறந்த குஞ்சுகள் கருஞ்சாம்பல் நிறத்திலும் நாளடைவில் அதற்குப் பிறகு பிறந்த குஞ்சுகள் முழுமையாக கருமை நிறத்திலும் மாறின.

இன்று கூட சில காக்கைகளின் கழுத்துப் பகுதி சாம்பல் நிறத்தில் இருப்பதைக் காணலாம். தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதால், காகம் கருப்பான கதை இதுதான்!

– ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *