கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 2,338 
 
 

(2005ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-17

அத்தியாயம்-15

பூவுதிரப் – பிஞ்சுதிரப் 
பொருக்கெனவே மொட்டுதிரக்
காயும் பழமும் 
கலந்துதிர வேணுமின்னு 
தினம் பிறப்பார்
ஆயிரம் பேர் 
தினம் இறப்பார்
ஆயிரம் பேர் 
-நாட்டுப்புறப் பாடல் 

இடியும் மின்னலும் மழையுமாய் அன்றைய இரவு குடிசை முழுவதும் ஒழுகல் தான் இன்னமும். சின்ன உள்ளங்கையளவு சிம்னி விளக்கு மினுக்மினுக்கென்று காற்றுக்கும் அதன் வேகத்துக்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது. ஈர விறகு- கஞ்சி காய்ச்ச முடியாத மாதிரி கண்ணீரைக் காய்ச்சியது. 

“அங்கன யாருமே இல்லயாடி? அவளை அதட்டி உக்கார வைக்க? ம்..? கொளுப்பெடுத்து அலையறாளே.. பன்னிப் பொறப்பு. அவுக பொல்லாப்பு நமக்கெதுக்குன்னு விட்டுத் தொலைக்கவும் மனசு வரல்ல.. விட்ட குறை தொட்ட குறையாத் தட்டிக் கேக்க வேண்டியிருக்கு. அவுக வூட்டு ஆம்பளைகளுக்கு வெவரம் தெரியாதா?”

“ப்ச… பெருசுங்க ரெண்டும் திண்ணைல முடங்கிப் போச்சு…அண்ணங்காரரு..கவுன்ஸிலரு கூடவே போனாவுட்டு இவளுக்குத் துளுத்துடுச்சும்மா… அம்மாக்காரி கையாலாகாதவ.. என்ன பண்ணுவா..?” 

புகைந்தன அடுப்பும் வார்த்தைகளும். 

கோவிந்தம்மாவுக்கு இன்னமும் மனசே ஆறவில்லை. ஒத்தைக் கொத்தைப் பெண் குழந்தை என்று எல்லோரும் செல்லம் கொடுத்து வளர்த்தவள்..இன்று எவனுடனோ சுற்றி மேய்கிறாள். சின்னவளாய் மார்பில் போட்டு வளர்த்த பாசம். கோவிந்தம்மாவுக்கு மனசு அலைபாய்ந்தது. 

ரெண்டு குத்துப் பொட்டுக்கடலை நாலு குச்சி மிளகாய் உப்பு வெள்ளைப் பூண்டு வைத்து அம்மியில் நசுக்கினாள். தனம் தட்டும் போதே வாய் ஊறியது. 

“பசிக்குதுக்கா… காலைலேர்ந்து டீத்தண்ணிக் கூடக் குடிக்கலே. “

….செல்லி பரபரத்தாள். பசி தாங்காது அவளுக்கு. அலுமினிய வட்டிலைத் தட்டிக் கொண்டே ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்று புலம்பினாள். ஒவ்வொரு இடிக்கும் மின்னலுக்கும் காதையும் கண்ணையும் சிவுக்சிவுக்கென்று மூடிக் கொண்டு அரற்றினாள். இவளின் அரற்றலோடு மழையும் அரற்றியது. ரெண்டையும் காதில் வாங்காமல் கோவிந்தம்மா ஆற்றாமையில் புலம்பினாள். 

“இப்படி அலையறாளே.. நாளைக்கே கொண்டாங் குடுத்தான். வீட்டுக்குப் போனா.. என்னத்தப் பண்ணுவா? நாக்குல நரம்பில்லாம ஊரே பொறம் பேசுமே…”

“வயசு அலையச் சொல்ற வயசு… அலையுதா..நம்ம குப்பத்து ஆளுங்களே நாறடிச்சுடுவாங்க…” 

ஈர விறகு. ஈரமில்லாத மழை. ஒரு கேழ்வரகுக் கஞ்சி காய்ச்ச எரியாத அடுப்போடு நாய் படாதபாடு பட்டார்கள் அவர்கள். எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் தான் என்ன? அவர்களை மாதிரி ஏழை பாழைகளுக்கு அன்னாடங்காய்ச்சிப் பிழைப்பு தானே? அவரவர் உழைப்பு அவரவர் கஞ்சி. கடைசி மூச்சுவரை இந்தப்பாடு தானே..? 

“ஆம்பளன்னு உருப்படியா நடமாடறது சம்பத்து மட்டும் தான். அவன் ஏதாச்சும் கேட்டாக் கூட..கிள்ளி வாயிலே போட்டுக்குமே ராணி.. ராங்கிக்காரி ரவுசு புடிச்சுது.. சின்னதுல எம்பின்னால அலையும்… இப்பம். பெரியமனுஷியானாவுட்டு சினிமாக்காரியாட்டம் சிலுப்புதா..”

ஒவ்வொரு வட்டியிலும் ரெண்டு கரண்டி கஞ்சியை ஊற்றினாள் சின்னப் பொண்ணு. 

ஆயிரமாய் நசுங்கின அலுமினிய வட்டியில் மொளுக்கென்று விழுந்த கேவுருக் கஞ்சியைச் சூடாய் நக்கினாள் செல்லி. காரசாரமாய்த் துவையலை நாக்கில் தடவிக் கொண்டாள்… கொட்டும் மழைக்கும் குளிருக்கும் தேவாமிர்தமாய் இருந்தது. 

“சுரேசு..பித்துப் புடிச்சு திண்ணைல மொடங்கிட்டானா?. இனிம சம்பத்து தான் நாலு காசு பாத்து அவளைக் கரையேத்தணும். மூத்தவரு அரசியல்ல போயாச்சு. அது நெரந்தரம் கிடையாதே.. சம்பத்து நல்ல மாதிரி. அடாவடித்தனம் தெரியாது. ரவுசு பண்ணாது. பொறுப்புத் தெரிஞ் புள்ளாண்டான்.. ஹீம்.எல்லாம் நல்லபடியாக் கொண்டு குடுத்து இருக்கமா? . இருந்தாவுட்டு இந்தப் பொம்பளப் புள்ளைங்க யாரையாச்சும் அவனுக்குக் கட்டி வைக்கலாம். இங்கனதான் எல்லாமே ஏறுக்கு மாறால்ல நடக்கு. ஒறவுஞ் செரியில்ல ஒண்ணுஞ்செரியில்ல.”

கஞ்சியை உறிஞ்ச முடியாமல் மனசு கனத்தது சின்னப் பொண்ணுக்கு 

“எங்காலம் இப்படியே ஓடிடும். இதுகளை எப்படிக் கரையேத்தண்ணே புரியல்ல.. அத்தைக்காரி முன்னப் பின்ன சுள்ளுன்னாக்கூட சம்பத்தை கேட்டுப்புடலாம்னு இருக்கேள். ஒத்தைச் சுமையாச்சும் குறையும்.  கொண்டாங் குடுத்தான்னு பொறந்தாச்சு..எப்பவோ நடந்த கதையவே நினைச்சுட்டு… முறைமாப்புள்ளையக் கைதவற விட்டுறலாமா? என்னம்மா சொல்லுத?” 

“எனக்கென்னாடி தெரியுது? உங்கப்பன் ஓடிட்டப்பறம் நீதான் எல்லாத்துக்கும் பஞ்சாயத்து. மக்க மனுசங்களை நீ தான் சமாளிக்கணும். இந்தக் குட்டிங்களைக் கரையேத்தணும். இந்த வயசுல..நா போயி சம்பந்தம் பேசவாங்காட்டியும்? நீயே பார்த்துப் பண்ணு..” 

லோட்டாவில் மிச்சமிருந்த கஞ்சியை வழித்துக் கை வழுக்காய் வாயில் ஊற்றிக் கொண்டாள் கோவிந்தம்மா. கிட்டத்தட்ட அஞ்சு நாள் பட்டினிக்கப்புறம் கிடைத்திருக்கும் கஞ்சி குடித்ததில் உயிரே ரொம்பி விட்டது. 

“ப்ச.வுடுக்க..நம்ம வூட்டுல மட்டும் நல்லது எதுவுமே நடக்கக் கூடாதுன்னு சாபம் போலிருக்கு. கொடுப்பினை சிரிக்கறதுக்கும் வேணுமில்லா? விடிஞ்ச நாளுக்குக் கஞ்சி கெடைச்சாப் போறும்னு இருக்கு. கண்ணாலம் கருமாதில்லாம் வேணாம்க்கா…என்ன தனம்? அதான?” 

“ம். இப்படியே காலத்தை ஓட்டிட்டா நிம்மதி. குப்பை அள்ள ஆளு எடுக்காவளாம்.போயிடலாம். அக்கா மாதிரி பொணம் பொரட்ட வேணாம். இதுவும் நாரத் தொளிலுதான். ஆனா, மழை வெயிலுன்னு காணாம பொணம் எரிக்கற கொடுமை கெடையாதில்ல?”

ஒருவரையொருவர் மிஞ்சும்படி எலும்பும் தோலுமாய் ஒல்லியாயிருந்த செல்லியும் தனமும் பொங்கின அழுகையையும் எரிச்சலையும் முந்தானையால் துடைத்து மூக்கைச் சிந்தினார்கள். கோணியில் உடம்பைச் சுருக்கி ஒண்டிக் கொண்டார்கள். கூனியில் சணல் சுருக்சுருக் கென்று குத்தினால் கூடக் குளிருக்கு இதமாய்ப் பதமாய் இருந்தது. சீமெண்ணைய் தீர்ந்து போய் சிம்னி விளக்கு அணைந்து விட்டது. மின்னலான வெளிச்சம் அவ்வப்போது கூரையில். என்னன்னவோ பாடு பேசினார்கள். இடியும் மழையும் கூடவே பேசியது.


மனிதன் என்னதான் கணக்குப் போட்டாலும் விடையை எழுதுபவன் மேலே இருப்பவன்தானே? அவனின் விருப்பம் அவனின் திட்டம் அவனின் இஷ்டத்துக்குத்தானே விஷயங்களை நடத்தி முடிக்கிறான். காலையில் மழை நின்று விட்டது. ஆனாலும் சாலையெல்லாம் சேற்றுக் குழம்பு. தாழாங்குப்பத்துச் சாலையிலிருந்த ஜல்லியெல்லாம் பிய்த்துக் கொண்டு சேற்றுக் குழம்பானது. சாலையின் மேடு பள்ளம் சாக்கடைக் குழி எல்லாவற்றையும் ஓர் அனுமானத்திலேயே தாவித் தாண்டிக் குதித்து நடந்தாள் சின்னப்பொண்ணு. விடுவிடுவென்று நடையில் வேகம். நேற்று முடிக்காத வேலையை இன்று முடிக்கா விட்டால் அலுவலர் மணிமாறன் நாக்கைப் பிடுங்கிக் கொள்வது மாதிரி கேட்பார். ‘அவர்ட்ட பேச்சு கேக்கறதை த விட நாண்டுக்கிட்டு சாவலாம்.’ 

மற்ற பிணங்களை எரிப்பதை விடவும் அனாதைப் பிணங்களை எரிக்கும் போது தான் அவளுக்குக் கண்ணீர் பெருகும். ‘யாரு பெத்த புள்ளையோ? யாரைப் புள்ளையாப் பெத்தியோ? சாதிசனம் யாருமில்லாம எங்கையால கொள்ளி வாங்கற…போன ஜென்மத்துக் கடன் போலிருக்கு. நல்லபடியாப் போய்ச் சேரு இந்த ஜென்மத்துக்கு.’ 

இப்படியெல்லாம் மனசுக்குள் வேண்டிக் கொள்வாள். புதிதாய்ச் சுடுகாட்டில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டதில் நின்று வேலை செய்ய முடிகிறது.மழை வெயில் பாராமல். 

சுற்றியிருக்கும் மண்ணை வெட்டி எடுத்தாள். ஏற்கனவே மழையில் சாந்தாய்க் குழைந்திருந்த மண்ணைப் பாத்தி மாதிரி பூசினாள். மண் புழுக்களோடு வழிந்தது. நாற்றம் குடலைப் புரட்டிப் போட்டது. வரட்டிகளையும் நெருக்கமாய் அடுக்கி நெருப்பிட்டாள். 

‘ஒரு குண்டு விறகு போறுமான்னு தெரியல. மழை ஈரம் அடுப்பை விட மோசமா எரியுது. சம்பத்து வந்தா பக்கத்துலேயே குழி வெட்டச் சொல்லலாம். பொதைக்க வேண்டியதும் இருக்கு”. 

மனசு பலதும் நினைத்தபடியிருக்க..கைபாட்டுக்கு வேலை செய்தது. மூட்டை அடுக்கி மண்மெத்திப் பரபரவென்று சோலியை முடிக்கப் பார்த்தாள் சின்னப்பொண்ணு. மறுபடியும் மழை வந்து காரியத்தைக் கெடுப்பதற்குள் மிச்ச மீதியெல்லாம் எரித்தாக வேண்டும். துர்நாற்றமும் கெட்ட வாய்வுமாய் மண்ணிலிருந்து கிளம்பியதில் அவளுக்குக் கிறக்கமாய் வந்தது. ஆனாலும் சுணங்கவில்லை. கையிலிருந்த வெட்டிக் கம்பால் தெறித்த உடம்பை ஜாக்கிரதையாக அமுக்கித் திணித்தாள். ஆஸ்பத்திரி சடலங்களுக்குள்ளே உப்பும் பாட்டில்களும் கூட வைத்துத் தைத்து அனுப்பி விடுவார்கள். பிணத்தை எரிக்கும் போது எதிர்பாராமல் பாட்டில் வெடிக்கும் அபாயம் உண்டென்பதால் – ரொம்பவே முன்னெச்செரிக்கையாய் இருப்பாள். தள்ளி நின்றே புரட்டிப் போட்டாலும் கூடத் தீயின் வெப்பம் அவளைத் தகித்தது. உயிரோடு எரித்தது.  

என்னமோ தெரியவில்லை. நினைக்க நினைக்க அழுகையாய்த் தான் வந்தது இன்றைக்கு. 

‘இன்னம் எத்தனை காலத்துக்கு இப்படி நரகலும் அழுகலும் நெருப்பும் பொணமுமாய்ப் பாடுபட? யாராச்சும் மண்டையப் போட மாட்டாகளா? பொணம் வராதா? வூட்டுல அடுப்பெரிக்கலாமே..இப்பிடிக் கேவலமாவா எதிர் பார்க்க? பசியும் பட்டினியுமே என்னைத் தின்னுத் தீர்த்துடுமோ? சோறுல கை நனைக்கப் பொணம் விழணும்னு நினைச்சா மனசுல ஈரமில்லன்னு ஆயிடுமே..மத்தவன் சாவுக்காகக் காத்திருக்கற மிருகப் பொறப்பா நானு? மத்த வெட்டியானுக..நல்ல பொணத்தையெல்லாம் புடுங்கிக்கறானுவ. உறவு ஜனத்துக்கிட்ட.. வாய்க்கரிசின்னு காசு புடுங்கிக்கறாங்க..எனக்கு மட்டும் போலீஸு கேஸுரயில் பாடி ஆக்ஸிடெண்டு கேஸு மார்ச்சுவரி கேஸுன்ன தள்ளி விடறானுங்க. அது கூட நெதமுமா கெடைக்குது? இந்த அனாதைப் பொணங்களை எரிச்சதுக்கு வாய்க்கரிசி யாருகிட்ட கேக்க? சல்லாத் துணி யாரு போடுவா? அனாதைப் பொணத்தால டீக்குக் கூட காசு பெயரமாட்டேங்குது. அவனவன் குடிச்சுப்புட்டுத்தான் பொணம் எரிக்க வரானுவ. சாராய நாத்தத்தை விடச் சவநாத்தம் பரவாயிலேன்னு அதையும் நானு தொடரதில்ல. ஆனாலும் ஒத்தப் பைசா இல்ல கைல. நானு சவக்குழில உக்காந்து எரியற வரைக்கும் இப்பிடித்தான்னா என்ன பண்ண? சின்ராசும் கவுன்ஸிலரு கூட ஒட்டிக்கிட்டு வேற பாதைல போயாச்சு. கைல நாலு காசு பாத்து வெள்ளையும் சள்ளையுமா ஆளுங்களைக் கண்டுட்டா நம்ம நெனப்பெல்லாம் மறந்துடும். இனிமயும் அவுகளை நெனச்சுக் கனாக்காண வேணாம். தங்கச்சிங்களைக் கரையேத்த வழியப் பார்க்கோணும். அம்மாக்காரிக்கு ஒரு வேளை கஞ்சி வருஷத்துக்கொரு புடவ தேத்தப் பாக்கோணும். இனிம சுணக்கமே கூடாது. 

அவ்வளவு தூரம்..மொபெட்டில்- சின்னராசு குப்பம் பக்கம் வந்தும் தன்னை வந்து பார்க்கவில்லையே..என்ற ஏக்கம் இன்னும் மனசுக்குள் குமைந்தது. பலதும் நினைக்கத் தோன்றியது. வெட்டிக் கம்பால் புரட்டிப் புரட்டிப் போட்டாள். கால் ரெண்டும் விண்டு போனது.மணிக்கணக்காய் நின்றதில். மற்ற நாளில் கூடப் பரவாயில்லை. தீட்டு நாளில் தான் வயிற்று வலியும் மூட்டு வலியும் உயிரையே பிசைந்தாலும் கூட வேறு வழியில்லாமல் பிணம் எரிக்க வேண்டியிருக்கும். ஞாயிற்றுக் கிழமை என்றால் போச்சு ராகுகாலம் எமகண்டம் முடிந்து சடலம் வர ராத்திரி ஏழு மணிக்கு மேலாகிவிடும். ‘இப்ப எடுத்தாந்தா என்ன பண்ண? நா வூட்டுக்குப் போக வேணாமா?’ இப்படிக் கேட்க முடியாது, இருந்து சோலியை முடிக்க ராத்திரி ரெண்டு மூணு கூட ஆகிவிடும்…மறுநாள் சாம்பல் எடுக்க வரும் போது, வெந்தும் வேகாமலும் அள்ளித் தர முடியுமா? மனசாட்சிக்கு விரோதமில்லாமல் முழுசும் எரித்த பிறகு தான் வீட்டுக்குப் போவாள் சின்னப்பொண்ணு. 

‘ஆனா..இன்னம் எத்தினி நாளுக்கு? உடம்புல வலு இருக்கற வரைக்கும் இருவது மணி நேரம் நிக்கலாம்? சரி அப்பறம்? ஒடம்பு தேஞ்சுடுமே இன்னம் கொஞ்ச நாள்ல? அதுக்குள்ளாற வேற வேலை பாக்கவா? கெடைக்குமா? இந்த வேலைய ஆபிஸருங்க நெரந்தரமாக்கிட்டாக் கூடப் பரவாயில்ல.மாசா- மாசம் சம்பளம் பாக்கலாம். உடம்பு நோவு பத்திக் கவலைப்படாம வேலை பண்ணலாம்.. பாட்டன்…முப்பாட்டன் காலத்துலேர்ந்து பொணம் விழுந்தாத்தான் வெட்டியானுக்குக் காசு? என்னை மாதிரி நாத்தப் பொறப்புக்குக் கவலைப்பட யாரு இருக்கா? குப்பை அள்ளறவங்களைக் கூட. பொது ஜனம் நெதமும் நெனைக்கும். என்னை மாதிரி வெட்டியானை உசிரோட இருக்கப்ப நினைக்கவே தோணாதே. எங்க பொழைப்பே திரிசங்கு சொர்க்கந்தேன்…’ 

சின்னப்பொண்ணு என்றைக்குமில்லாத அதிசயமாக அதிகாலையிலேயே உற்சாகமிழந்து லேசான முகவாட்டத்துடன் மனசு உலர்வுடன் ‘இனி என்ன?’ என்பதை நினைத்தபடி வேலையாயிருந்தாள். 

அந்தச் சிதை நெருப்பு காலம் காலமாய் யுகம் யுகமாய்ச் செய்வது மாதிரி அதுபாட்டுக்குத் தன் சோலியைச் செய்து கொண்டிருந்தது. வாழ்க்கையைப் புரட்டிப் புரட்டிப் போட்டுத் தகனம் செய்துதானே இத்தனை காலமாய் உலகம் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. 

“என்னடா மணி? என்னத்துக்கு இப்படி ஓடியாற? இன்னிக்கும் முச்சூடும் அனாதைப் பொணம்தான்டா. காக்கா பலகாரம் கெடைக்காது. சல்லாத் துணி பெயராது. வாய்க்கரிசியும் அம்பேல்தான்..” 

நைந்த புடவையால் முகத்தின் வியர்வையை வழித்துப் போட்டாள் சின்னப்பொண்ணு. மழை குறைந்ததில் காற்று வீசாமல் இறுக்கமாகிப் புழுங்கியது. நெருப்பின் சூடும் சேர்ந்து நரம்புகள் கூட வியர்த்தன.

“ப்ச அத்த வுடுக்கா. சோலி முடிஞ்சுதா?” 

“இது எப்ப முடிய? ஊழித் தீ எரியற காலம் வரைக்கும் முடியாத சோலி தான? நேரமாவும், நாக்கு வழவழன்னுது. கொஞ்சம் பாத்துக்கோயேன். ஒரு டீ குடிச்சுட்டு வரேன். கிறுகிறுப்பா வருது மணி…” 

“இதைக் கேளு. இன்னம் கேராயிடுவ. உங்க ஆத்தா. நா பாக்கத்தான் ரோடுல நடந்துச்சு. திடீர்னு பாத்தாக்க ஆளைக் காணம் மாயமா மறைஞ்சுடுச்சு..” 

“என்னடா உளர்ற?” 

“சாக்கடைக் குழி..திறந்தாப்பல இருந்துச்சா..மழைத் தண்ணில தெரிய… தெரியாம அதுல விழுந்து நிமிஷமா வெள்ளத்துல உருட்டி அடிச்சிட்டுப் போயிடுச்சு.. மெல்லிசா இருக்குமில்ல உங்க ஆத்தா?. சாக்கடைத் தண்ணிக்குள்ள நிமிஷமா மூழ்கிடுச்சு..தேடிப் பார்த்தாச்சு. சாக்கடைக்குள்ளாறயும் வெள்ளம் ஓடுதில்ல…எங்கனயும் காங்கல்ல” பதைபதைத்தான் மணி. 

ரெண்டு குண்டு விறகும் தன் தலை மேல் எரிவதாய்த் துடித்துப் போனாள் சின்னப்பொண்ணு. 

அத்தியாயம்-16

செத்த பிணம் சிவலோகம் போக..டும்
மாண்ட பிணம் வைகுந்தம் போக-டும்
காளியே! கதவைத் திற! டும்
அரிச்சந்திரா! வழிவிடு!டும் 
-அரிச்சந்திர புராணம் 

அப்பனும் நிமிஷமாய்க் காணாமல் போனான். ஆத்தாளும் பார்த்த வாக்கிலேயே மந்திரமாய் மறைந்து விட்டாள். உயிரோடு பறி கொடுத்தல் என்பது இதுதானோ? இரும்பு மூடியில்லாமல் திறந்திருந்த சாக்கடைக் குழிக்குள் நுழைந்து கரைந்து விடுமளவுக்கு மெல்லிசானவள்தான் கோவிந்தம்மா. அதனால் ஒப்பாரி வைத்து, கட்டிப் பிடித்து, மாரடித்து அழவும், கண் வீங்கி, மூக்கு சிந்தி, மனசு ரணமாகவும், பிணமென்று எதுவுமில்லாத மரணம். சாவு. காவு. 

மேளதாளத்தோடு உறவினர் கூட்டத்தோடு வந்திறங்கும் பிணங்களைத் தீமூட்டிப் புரட்டிப் போட்டு நெஞ்சுக் குழி வரை வேக வைத்துச் சாம்பல் சேர்த்துக் கொடுப்பவளுக்கு .. அம்மாக்காரியின் சாம்பல். அம்மாக்காரியின் எலும்பு என்றெல்லாம் எடுத்து அழ முடியாமல் போன இழப்பு. கோவிந்தம்மாவை நிமிஷமாய்ப் பறி கொடுத்தாயிற்று. சாக்கடையுள்ளேயும் வெள்ளம் சுழித்து ஓடியதால் சாக்கடை நீரும், கழிவு நீரும், வெள்ளமாய்க் கலந்த நாற்ற நீரில் ஒரு நிமிஷம் முங்கினால் கூடக் குமட்டலிலேயே உயிர் போய் விடும். இதில் வெள்ளத்தின் ஆக்ரோஷமான உருட்டல் வேறு. மழை நீர் அடித்துப் புரட்டி எந்த முகத்துவாரத்தில் அம்மாக்காரியைக் கொண்டு சேர்க்குமோ. வெள்ளம் வடிந்த பின் நீரில் ஊறி அழுகி வீங்கி அனாதைப் பிணமாய் அடையாளம் தெரியாத அளவுக்குப் புழுத்துப் போய் சடல மூட்டையாய் எடுத்து வரப்படுவாளோ? கடல் அலை கொண்டு வந்து கரையில் தள்ளுமோ?

வாய்விட்டுக் கதறி ஒப்பாரி வைத்தாள் சின்னப்பொண்ணு. சாக்கடை நீருக்கு அம்மாக்காரியின் எலும்பும் தோலுமான தேகத்தில் அப்படி என்னதான் பேராசையோ…? 

என்னைப் பெத்த அம்மாவே! 
என்னைப் பெத்த அருமையென்ன ?
பேரிட்ட நேர்த்தி என்ன? 
வளர்த்து விட்ட அருமையென்ன ? 
ஆத்தக் குறுக்கடைச்சி 
அழகுச்சம்பா நெல் வெதைச்சி 
ஆத்துத் தண்ணி வத்தவந்த
அழகுச்சம்பா வாடுறனே
குளத்தைக் குறுக்கடைச்சி
குலவிளக்கு நெல் வெதைச்சி
குளத்துத் தண்ணி வத்தவந்த
பெத்தமக குலவாழை வாடுறனே
தண்டியலு போன இடம் எனக்குத்
தடமே தெரியலியே! உங்க
பல்லக்குப் போன தடம் எனக்குப்
பாதை தெரியலியே! 

மார்பிலடித்துக் கொண்டு பொங்கிப் பொங்கி அழுதாள். தாழாங்குப்பமே சின்னப்பொண்ணுவின் குடிசை முன்னால் குவிந்தது. மழையையும். நினைக்காமல் எல்லோரும் வந்தார்கள். ஒப்பாரி வைக்கவா? சடலத்தைப் பார்த்துப் பார்த்துத் துக்கம் பொங்கவா? ஒண்ணும் புரியவில்லை. 

“என்னாங்கடி அநியாயம் இது? பயாஸ்கோப்பு கணக்கால்ல நடந்துருக்கு” 

இப்படிக் கன்னத்தில் கை வைத்து இடிந்து போனார்கள். 

“காத்து மாதிரி வாரதும் தெரியாது. போறதும் தெரியாது. அவஉண்டு.. சோலி உண்டுன்னு கெடப்பா.அவ பொறப்பாடும் கண்ணுங் காதும் வச்சா மாதிரியா ஆவணும்?” 

இப்படி வருந்தினார்கள். 

“யார்றி பைத்தியக்காரி அவளுக்குப் பொறப்பாடு ஆச்சா இல்லியான்னே தெரிலியே…பொதை மணல் கணக்காக் குழி காவு வாங்கிடுச்சே…” 

“இங்க பார்றா.வெள்ளமாத் தண்ணி அடிச்சுப் பொரண்டு ஓடுதாங்காட்டி அதுக்குள்ளாற விழுந்தவ பூவாட்டம் பொழைச்சு வருவாளங்காட்டியும். ஆலத்தி கரைச்சு வச்சுக்கிட்டு வாசலைப் பார்த்துக் குந்து… அடப் போவியா… அவ வாங்கிட்டு வந்த அரிசி அம்புட்டுத்தேன்..” 

“உசிரோட இருந்தப்ப மட்டும் அம்மாக்கு அரிசிச் சோறு வாய்ச்சுதா என்ன? பாதிக்குப் பாதி நாளு பட்டினிதான்…” 

சின்னப்பொண்ணு… கண்ணு முழி பிதுங்குவது போல் துடித்தாள். 

“இது என்னாடிம்மா அதிசயமாக்கீது? இவ எல்லாருக்கும் வாய்க்கரிசி தர்றா..அப்பன் ஆயி ரெண்டு பேரும் வாய்க்கரிசி கூட வாங்காம வந்திருக்காவோ..?” 

“யம்மாடி சின்னப்பொண்ணு..இப்படி ஆச்சே பொழப்புன்னு நீயும் உசிரை விட்டுடாதே. ஒனக்குக் கீழ ரெண்டு குருத்து நிக்குதுங்க அப்பன் ஆயியா நீதான் காப்பாத்தணும்…” 

மாரியம்மா..ஆற்றாமை தாளாமல் தொண்டை அடைக்கச் சொன்னாள். 

“இருசப்பனுக்கு இன்னுமா கோவம் தீரல? உசிரோட பறிகுடுத்துமா பழி தீரல? இந்தா..இருக்கற வரைக்கும் நெருப்புக் கங்காப் பத்திட்டு இருந்தாக. இப்ப நிமிசமாப் போய்ச் சேர்ந்தாச்சு. இருக்கறப்ப கொண்டு குடுத்து இருந்தாத்தான நிம்மதி? என்னாத்த வாரிக்கினு போவப் போறம்?” 

“சின்ராசு கைல சொல்லி- சாக்கடைக்கு சிமிட்டி மூடி போடச் சொல்லோணும். இல்லேன்னா இன்னம் எத்தனை உசிரைக் காவு வாங்குமோ? எத்தினி தரம் வாரபோற ஐயாமாருகிட்டச் சொல்லியாச்சு? ம்? அல்லாரும் ஓட்டு வாங்கத்தான் வரானுவ. அப்பறம்- ரோடு. மேடு. பள்ளம். சாக்கடைக்குழி, கொசு, சாக்கடை, நாத்தம் அடிக்கற குடிதண்ணி எல்லாக் கண்றாவியும் நம்ம கூடவே தான் இருக்கு. யாரு கவலைப்படுதா நம்மளப்பத்தி.?” 

ஏற்கனவே தாழாங்குப்பத்து மாடுகள் ஆடுகள் தவறி விழுந்து கால் முறிந்த சாக்கடைக் குழி தான் அது. குழந்தைகள் கூட விழுந்திருக்கின்றன. சாக்கடைக்குள் குதித்துக் காப்பாற்றி இருக்கிறார்கள். மழையில்லாத நாளில் குழிக்கு அடையாளமாக செத்தை, முள். குச்சி, கம்பி என்று எதையாவது போட்டு மூடுவார்கள். மழையில் அதெல்லாம் அடித்துக்கொண்டு எங்கே போனதோ? இங்கே மட்டுமில்லை. பக்கத்துக் குப்பங்களில் கூடக் காவு வாங்கும் மூடியில்லாத சாக்கடைக் குழிகள் நிறையவே உண்டு. 

அத்தனை சனமும் பாக்கியில்லாமல் சின்னப்பொண்ணு அருகில் குந்தியிருந்து காது மாற்றிக் காது கதை பேசியது. பாடு பேசியது. துக்கம் விசாரித்தது. சடலம் என்று இல்லாத சாவுக்கு என்னவென்று சொல்லியழ?செத்தவர் உடம்பைப் பார்த்து மாரடித்துக் கலங்காமல் எப்படியழ? ஒன்றுமே புரியாமல் தலையில் கை வைத்து வருத்தம் சொன்னது. வேதனை சொன்னது. 

விரிசல் விட்டிருந்த மண் சுவரில் சரிந்து தலையில் இடிவிழுந்த மாதிரி. நொறுங்கிப் போயிருந்தாள் சின்னப்பொண்ணு. செல்லியும் தனமும் கூட ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாய்க் கைபிடித்துக் குந்தியிருந்தார்கள். உடம்பு சரியில்லாமல்… ஒரு மூலையில் நோக்காடாய்க் கிடந்தாலும் பரவாயில்லை. உசிரோடு இருக்கிறது உறவு என்று நிம்மதியாயிருக்கும். இது மாதிரி முழுசுமாய்க் கைநழுவி, கை கழுவிப் போனால் பதைபதைப்பாயிருக்கிறது. பூமி பிளந்த மாதிரி மனசும் விரிசல் காணுகிறது. ஆட்டம் காணுகிறது.

“முனிம்மாத்த ராங்கிக்காரி. தாவாங்குப்பம் முச்சூடும் இங்கள குந்தியிருக்கு. அவ இன்னம் கூட வந்து பாக்கல பாரேன். பவுசுக்காரி. சாடிக்கு மூடியாட்டமா சின்ராசுக்கு சின்னப்பொண்ணக் கட்டி வைக்கலாம். பெருசுங்களுக்கு அக்கறை இருந்தாத்தான? ம்?” 

மறுபடியும் மாரியம்மா வருத்தமாய்ச் சொன்ன அடுத்த நிமிஷமே பதறிப் போய் வந்தாள் முனியம்மா. 

“கோயிந்து.கோயிந்து. போயிட்டியாடி ராசாத்தி. முகம் பார்க்கக் கூடக்க கொடுத்து வக்கலியே தாயே.ஏண்டிம்மா இந்தப் பாடு உனக்கு..”

மார்பிலறைந்து கொண்டு முனியம்மா ஓடியே வந்தாள் பின்னாலேயே பம்மிப் பம்மி வந்தாள் ராணி.. 

“அத்.அத்தே.அத்தே..அம்மா..அம்மாவுக்கு இப்பிடி ஆயிடுச்சே.. என்னைப் பெத்த அம்மா 

பார்க்க விரும்புறேனே உன்னைப்
பார்த்திருக்க தேடுறேனே 
காண விரும்புறேனே உன்னைக்
கண்டிருக்கத் தேடுறேனே…” 

முனியம்மாவைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்தாள் சின்னப்பொண்ணு. எத்தனை வருஷம் கழித்து அத்தையைத் தொடுகிறாள். கட்டிப் பிடிக்கிறாள். மருமகளாய்ச் செய்ய வேண்டியது போக இழப்புக்குச் செய்வது கொடுமை தானே. 

மொத்தக் கும்பலும் அவர்களைத் திரும்பிப் பார்த்தது. இத்தனை வருஷத்தில் சாவு என்று வந்த பின்னால் தானே இந்த வீட்டு வாசல் மிதித்திருக்கிறாள் முனியம்மா. அத்தனை ஆங்காரம், அத்தனை பிடிவாதம். பரவாயில்லைதான். சாவு ஒன்றாவது அவளை இளக்கிக் கரைக்கக் கூடியதாய் இருக்கிறதே. 

இறுக்கமாயிருந்தாள் ராணி. 

அத்தனை துக்கத்திலும் நேற்று முழுசும் அம்மா இவளைப் பற்றியே கவலைப்பட்டுப் புலம்பினது ஞாபகம் வந்தது. 

“கடைசியா அம்மா பேசினது கூட ராணியப் பத்தி தான். மாமாவோட மானம் கப்பலேறிடாம – எவங்கைலயாச்சும் புடிச்சுக் குடுக்கணும்னு புலம்பிட்டிருந்தா அத்தே..” 

“ம்…இனிம இந்தப் பொட்டக்குட்டி காலு வூடு தாண்டாது. ஒடச்சி மொடமாக்கிடமாட்டேன்? பொலி போட்ருவன்னு சொல்லியிருக்கேன். கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு – நீயே வாய்க்கரிசி போட்டு எரிச்சுடுன்னு உன்கிட்டத் தள்ளிருவேன்…”

“என்னமோம்மா..சாவூட்டிலயாச்சும் ஒண்ணாயிட்டீங்களே சந்தோஷந்தான் இனிமயாச்சும் போக வார இருங்க.” 

கூட்டத்தோடு கூட்டமாய் உட்கார்ந்திருந்த மாரியம்மாவுக்கு மூக்கு முட்டச் சந்தோஷம்…

எத்தனை வருஷமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஆம்பளைத் துணையில்லாத குடும்பம். ரொம்பவும் வீம்பு பிடித்து ஒட்டாமல் உறவாடாமல் இருக்காதே. ஒத்தாசையாய் இரு என்றாலும் கேட்காமல். சிலுப்பினவள் தானே முனியம்மா. ராணியின் சடங்கு அன்றைக்கு வந்த சின்னப்பொண்ணை வீட்டுப்படி ஏற விடாமல் பேயாட்டம் ஆடினவள் தானே. பசங்களும் போக வர இருக்கக் கூடாது. பேசக் கூடாது. சிரிக்கக் கூடாது. இப்படியெல்லாம் உத்தரவு போட்டு முறித்துக் கொண்டவள். இந்த மட்டுக்குமாவது வந்திருக்கிறாளே. 

“சின்ராசுக்குச் சொல்லிவிட்டுருக்கா அத்தே…?” 

“ம் ஆமா மாரி – சம்பத்து போயிருக்கு வெளில போக வரன்னுட்டு, ஒத்தாசையா இருக்கறது அந்த ஒத்தப் புள்ளத்தான்? மத்த ஆம்பளைகளத்தான் திண்ணைக்குக் காவலா எழுதிவச்சாச்சே.” 

“சரித்தே. சாவூடுதான். நெஞ்சு முச்சுடும் துக்கம் இருக்கு. அதை ஓரமா ஒதுக்கி வச்சுட்டு இனி நடக்க வேண்டியதைப் பாப்பம்…” 

அழுகையைத் துடைத்துக் கொண்டாள் மாரி. 

“சின்னப் பொண்ணுதான் உன் மூத்த மருமவ. சட்டுபுட்டுன்னு நாளு பாரு.. சின்ராசுவைத் தாலி கட்டச் சொல்லு. அனாதையா இதுங்களைத் தவிக்க விட்டுடாதே. ஒத்தைக்கொத்தை அத்தையா கைகுடு. கரையேத்து.. சம்பத்தும் சரின்னு சொன்னா அவனுக்கொண்ணு கட்டி வச்சுப்புடலாம்.” 

ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவாய்ப் பேச்சு வார்த்தை நடத்தினாள் மாரியம்மா. கூடியிருந்த கும்பலும் ஒத்துப் பாடியது. 

“அட..எல்லாம் பாத்தியதை உள்ளதுங்கதான? புதுசாவா கல்யாணம் பேசி? ம்? முனிம்மா – நீயாவே கல்யாணத்தை நடத்திப்புடு இல்லாங்காட்டி- உங்க ராணியாட்டாம் சோடி சோடியா அலைய ஆரம்பிச்சுடுங்க…” 

“அட அப்படிச் சொல்லாதீக..நாக்கு மேல பல்லு போட்டு என்னா பேசுதீக? கஞ்சிக்கு வக்கில்லேனாக் கூட மானம் போற பொழைப்பு மாட்டோம் நாங்க. தெருநாயா நாங்கள்ளாம்? ஆம்பள ருசிக்கு அலைய?” 

“அடிஆத்தீ.. நீ என்னாடி.. வக்காலத்து? எம்புள்ளிங்க மட்டும் என்னவாம்? அலையறவனுங்களா..?” 

“அட.அட அட.நிறுத்துங்கடி விட்டா.நிமிஷமாப் பத்திக்கறீங்களே. வேற பேச்சே வேணாம். உங்கப்பன் ஆணை. ஆத்தாக்காரி ஆணை. சீக்கிரமா இந்த வூட்டுல கல்யாணம் நடந்தாவனும் சின்னப்பொண்ணு முனிம்மாவோட மருமளாவணும். அம்புடுதேன்.” 

மாரியம்மா முடித்து வைக்கத் தலையாட்டியது கும்பல். 

“ஆமா ஆமா..சுபச் சாப்பாட்டை விடக் கல்யாணச் சாப்பாடு போடுங்கடி..நாளாச்சு விருந்து சாப்பிட்டு.. “

கிழிந்த ஆடைகளும் கிழிந்த கூரையும் துக்கத்தில் கிழிந்த மனசுமுள்ள அந்தக் குடிசையில் கல்யாணம் ஒன்று பேசப்பட்டது. ஒத்து ஊதப்பட்டது. 


டூர்ரென்று வந்தது மொபெட் .

சிலுசிலுவெனக் கலைந்த தலைமுடியோடு வந்தான் சின்னராசு. பின்னாலேயே சம்பத்து. 

மாரியம்மாதான் கூவினாள். 

“ஐயா…வந்தியா? பாரு கேளு கொடுமையை..உங்கத்தை போன கதையக் கேளு. யாருக்கும் தீங்கு நினைக்காத செம்மம். யார்ட்டயும் அதிந்து பேசாத செம்மம். பேச வுடாத கடைசி முகம் பாக்கவுடாத வெள்ளம் அள்ளிட்டுப் போயிருச்சு. அந்தச் சாக்கடைக்குழி இன்னம் எத்தினி பேருக்குக் கல்லறையாவப் போவுதோ? கடவுளுக்குத் தான் வெளிச்சம் சின்ராசு..” 

மாரியம்மா ..நிஜமாகவே துக்கப்பட்டு முந்தானையில் மூக்கு சிந்தினாள். 

“ஏம்ப்பா..உன்னை மாதிரி ஆளுங்க.. அரசியல்வாதிங்க. தானே அதைச் சீர் பண்ணணும்? கவுன்ஸிலரு கைல சொல்லுப்பா. வயசான கிழம். கண்ணு தெரியாத கேஸுங்க நிறைய இருக்கு நம்ம குப்பத்துல..அதுங்க யாரும் விளுந்து தொலைச்சு மண்டையப் போடாம இருக்கோணும்..” 

ஆளாளுக்குப் புகார் மனு வாசித்தார்கள். 

“அட… இருங்கடி..மொறைப் பொண்ணுகிட்ட அவம் பேசட்டும். ரெண்டு வார்த்தை சொல்லட்டும். நீ போ சின்ராசு…” 

ரெண்டெட்டில் வந்தான். மலர்மாலையோ வளையமோ கூட வைக்கவும்.. கும்பிடவும் வக்கில்லாத சாவு..கோவிந்தம்மாவின் கையகல போட்டோ கூடக் கிடையாது. அதற்கெல்லாம் பவுசு இருந்தால் பிரச்னை இல்லியே..ஏதும் இல்லாத பண்டாரப் பசங்கள் தானே இதுகள்..? 

“என்னா சின்னு இப்பிடி ஆயிடிச்சு.. “

“பத்து முடிஞ்சாவுட்டு… உனக்கும் சின்னப்பொண்ணுக்கும் நிச்சயம் பண்ணிடலாம்னு அம்மாக்காரி ஒத்துக்கிச்சு சின்ராசு… உனக்கும் சம்மதம் தான?” 

“அட எவடிஇவ..கரும்புத் தின்னக் கூலி கேப்பாவளா? எங்க பொண்ணு கட்டிக் கரும்பு.” 

“ப்ச.சும்மா இருங்க எல்லோரும்..இப்ப என்னா அவசரம் கொள்ளை போவது? ம்? கொஞ்ச நாளு போவட்டும் பாக்கலாம்.” 

சிடுசிடுத்தாள் சின்னராசு. 

“அட என்னாடி இது? இப்படிப் பாயறாங்காட்டியும்? மாப்பிள்ளையா லட்சணமா சிரிப்பாண்டியாப் பேசாம கடுப்புக்காட்டறானே.?” 

“பின்ன..?ஆம்பளையாளு எனக்குக் கல்யாணம் கட்டி வையி. பொண்டாட்டி வேணும்னு வாய்வார்த்தையாவா சொல்லும் அம்மாக்காரிதான்… புரிஞ்சுக்கோணும்…” 

எதையுமே காதில் வாங்கவில்லை சின்னராசு. 

“இந்தா சின்னு இதுல ஐறூறு ரூவா இருக்கு. செலவுக்கு வச்சிக்க…அப்பறம் பாப்பம்.” 

இவள் கை நீட்டி வாங்காததால் ரூபாயை தனத்தின் கையில் திணித்துக் கிளம்பினான் – ரெண்டே நிமிஷத்தில். 

சாக்குப் போக்குக் சொல்லி எல்லாரும் கலைந்து போனாலும் கூட சின்னப்பொண்ணுவுக்கு மனசு ஆறவில்லை தான். ஏதோ நெருடல். ஏதோ ஒரு விலகல் தெரிந்தது சின்னராசுவிடம். அம்மாக்காரி…கை விட்டு நழுவிப் போன துக்கத்தை விடவும் அவனின் விட்டேத்தியான பேச்சும், நடவடிக்கையும் அதிக வருத்தமாயிருந்தது அவளுக்கு. 

அத்தியாயம்-17

முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ மூள்க! மூள்கவே! 
-பட்டினத்தார்
 

“என்னா சின்ராசு? முளியே சரியில்ல?”

உடம்பு முழுசும் சர்ரென்று செண்ட் அடித்துக் கொண்டார் அவர். 

அவசரமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தார். வெள்ளையும் சொள்ளையுமாய் ஆளே மாறி விட்டார். கவுன்ஸிலராகி ஒரே வருஷத்திலேயே .. நல்ல செழிப்பு தளதளப்பு. 

பேச வேண்டிய குறிப்புகளையும் கோப்புகளையும் அடுக்கின சின்னராசு ஆச்சரியப்பட்டான். அதெப்படி மனசுக்குள் புகுந்து அவன் நினைப்பைப் படித்த மாதிரி கேட்கிறார்? 

அவன் அவரின் நிழல் மாதிரி ஆகி விட்டான். சின்னராசு இல்லாமல் ஒன்றுமே ஆவதில்லை அவருக்கு, மூச்சுக்கு முன்னூறு தரம் சின்னராசு தான். 

“சின்ராசு எங்கன? சின்ராசுவக் கேளுப்பா. சின்ராசு. ஐயாவுக்கு இதை முடிச்சுடு. சின்ராசு.. தலைவர்கிட்ட இதை கேக்கணும்..நினைப்பூட்டு” – சகலத்துக்கும் அவன் என்று ஆகி விட்டான். வர வேண்டியது.. வரவழைக்க வேண்டியது. கமிஷன், கலெக்ஷன் என்று எல்லாத்துக்குமே அவனைப் பழக்கி விட்டிருந்தார். 

“வண்டி தயாராயிருக்குங்கய்யா பேப்பர்லாம் பின்னாடி வச்சுட்டேன்..”

“அதை வுடப்பா அதான் எப்பவும் இருக்கே.உன் முகம் வாடிருக்கே என்னாத்துக்கு…” 

“ஒ. ஒண்ணுமில்லய்யா. நேத்து ராவுக்கு ஒரு டெத் ஆயிப் போச்சு. அத்தைக்காரியாவணும்… சாக்கடை குழில தவறி விழுந்திடுச்சாம்… வெள்ளத் தண்ணி அடிச்சுட்டுப் போயிருக்கு பாடியக் கண்டு புடிக்க முடியல்லையாங்காட்டியும்..” 

“த்சொ..த்சொ.பாவந்தான். அதான் ஊரெல்லாம் வெள்ளமா ஓடுத…பொட்டச்சி வூட்டோடக் கெடக்க வேண்டியது தானே?”

“நம்ப தொகுதிதான்ண அது… மராமத்து சரியாப் பண்ணலேன்னு பிலுபிலுன்னு புடிச்சிக்கிட்டாளுங்க. நாளைக்கு எலும்புத் துண்டாட்டம் எதையாச்சும் தூக்கிப் போட்டா எவளும் சட்டம் பேசமாட்டாளுக, அடுத்த எலக்சனுல நெஞ்ச நிமித்திட்டுப் போய் நிக்கலாம்…”

“ம்ம்.அதெல்லாம் நீ சரி பண்ணிடுன்னுதான சொல்லியிருக்கேள்… அப்புறம் என்ன அண்ணாவி.?” 

“ஆமாய்யா. அதுக்குத் தான் ரெண்டு பத்திரிகையாளுங்களை வரச் சொல்லியிருக்கேன். நீங்க அந்த தாழாங்குப்பத்துக்கு வரணும். சாக்கடை மூடி போடுற மாதிரி ஒரு போட்டோ. அப்புறம் அந்த சாவு வூட்டுப் பொண்ணுங்களுக்கு ஆறுதல் சொல்லுற மாதிரி ஒரு போட்டோ ரெண்டும் பத்திரிகைல தட்டிவிட்டா அவனவன் அலண்டிருவான். அஸ்தில ஜுரம் கண்டுடும். அதுமில்லாம குப்பமே நமக்குன்னு ஆயிடும்.” 

“நீ தான் பொறுப்பு சின்ராசு, எலக்சன்ல நெத்தியடி அடிக்கணும். அது உன் சாமர்த்தியம்… ஆமா அத்தைக்காரிக்குப் பொண்ணுக…?” 

“…மொறைப் பொண்ணு இருக்கா. அடுத்து இரண்டு தங்கச்சிங்க. நேத்து சாவூட்டிலேயே கூட நிச்சயம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்பன் ஆயி ரெண்டுமேயில்லாம அனாதையா நிக்குதுங்களா…” 

“நீ பிடி குடுக்காத சின்ராசு. அரசியல்ல இறங்கினாவூட்டு உறவெல்லாம் மறந்துடணும். அத்தப் பொண்ணு மாமா பொண்ணு உறவெல்லாம் மறந்துடணும். கல்யாணம் கூடக் கணக்குப் போட்டுத் தான் பண்ணோனும். எதைக் கட்டிக்கிட்டா லாபமாயிருக்கும்னு நாலும் யோசிச்சுப் பார்த்துத்தான் தாலியக் கைல எடுக்கோணும்…? புரியுதா? ஆமா அந்தப் பொண்ணைப் புடிக்குதா?” 

“ம்ஹீம். வெட்டியானா இருக்கா.எனக்கே உதறிப் போடும் அவ தொழிலு பண்றதப் பார்த்தா..” 

“பின்ன..? இருக்காதா.? ஆம்பளை பண்ணாலே பதறித் தூக்கிப் போடற வேலைய பொம்பளை பண்ணுதான்னா – அவ ஆம்பளையே தான். பொஞ்சாதி பொம்பளையா இருக்கணும். ஆம்பளைக் கணக்கா இருந்தா சொகமாவா இருக்கும்? குடும்பம் நடத்தத் தோதுப்பட மாட்டாளுக..” 

அவர் ஏதோ கணக்குப் போட்டுத்தான் பேசுகிறார் என்பது தெளிவாய்த் தெரிந்தது. 

“இப்ப நீயே யோசி சின்ராசு.. சகலத்துலயும் எனக்கு உதவியா இருக்கே. உம் மேல முழு நம்பிக்கை வந்துருச்சு, பெரிய அளவுல வருவ. அவசரப்பட்டுக் கல்யாணத்துல மாட்டிக்காத. இன்னங் கொஞ்ச நாளு பளகிக்க.நம்ம பொண்ணையே கட்டி வச்சிடுறேன்.” 

அவரின் மகளையா? பார்த்திருக்கிறான். தைராய்டு பிரச்சனையால் உடம்பு மதமதவென்று சின்னயானைக் குட்டி மாதிரி பெருத்திருக்கும். அவள் பக்கத்தில் சின்னராசு அவளின் ஒரு கை சைஸுக்குத் தான் வருவான். அவளையா? 

“எஞ் சொத்தெல்லாம் அவளுக்குத்தான்டா. குடிசைக்காரி வேணுமா.? மச்சு வீட்டுக்காரியான்னு முடிவு பண்ணிக்க. ” 

நன்றாக வேப்பிலையடித்தார். 

“சரி.குப்பத்துல அரைமணி நேரத்துக்கு மேலப் போயிடாமப் பாத்துக்க சின்ராசு. நாத்தம் குமட்டிட்டு வரும். நானும் ஒரு காலத்துல தாமரைக் குப்பத்து ஆளு தான். இப்ப ஸெண்டு ஏஸின்னு பளகினாவுட்டு, அந்த நாத்தம் குமட்டுது – அந்த ஜனங்க குமட்டுறாங்க. இனிம, பழைய குடிசை வாள்க்கைய நினைச்சாலும் வாள முடியாது. உனக்குக் கூட கொஞ்ச நாள்ல அப்பிடித்தான் ஆயிடும் பாரு…” 

“ஆனா நாத்தம்.. வோட்டுல இல்லியே..” 

“அதனாலத்தான் எலக்சனுக்கால அந்த நாய்ங்க காலைப் புடிக்றோம். இல்லேன்னா இப்படிக் காரு பங்களா காசு மருவாதின்னு கெடைக்குமா சின்ராசு? ம்? இன்னிக்கு முக்கியமான புராஜக்டு கையெளுத்தாவது. இருவது கோடி புராஜக்டு தலைவரு அன்னிக்கே கண்டிஷனெல்லாம் சொல்லிட்டாரு. கூட்டத்தொடர் முடிக்கற அன்னிக்கு முடிச்சிறலாமனுட்டாரு. அதான் இன்னிக்கு முடிஞ்சிடும் முளுசா ஒரு கோடியாச்சும் நிக்கும்..” 

கண்ணெல்லாம் ஆசை கொளுந்து விட்டு எரிந்தது. 

“அரசியல்ல சட்டுன்னு ஸெட்டிலாயிடணும் சின்ராசு… அப்புறம் நா ஒதுங்கிட்டு உன்னை எறக்கி விடறேன். மருமவனா நீயும் மருவாதியா அரசியல் பண்ணலாம்.. சரியா?” 

மறுப்புச் சொல்லக் கூடியதாக அவர் எங்கே..இவனைப் பேச விடுகிறார்? வாயே திறக்க முடியாமல் மௌனமாய் நின்றவன் கையில் ஒரு கத்தை மனுக்களைத் தந்தார். 

“இந்த மனு குடுத்த வெட்டியானுங்களை மொத ஒளிச்சுக் கட்டணும்.. அதுக்குத் தான். மெஷினால எரிக்கற திட்டம். நம்ம தொகுதிலதான் மொதல்ல அறிமுகம் பண்றோம் சின்ராசு. நாமதான் டெண்டர் எடுத்திருக்கம். பத்து வெட்டியானுங்க இருக்கற இடத்துல ரெண்டு மூணு பேரு இருந்தாப் போறுமில்ல? ராவாப்பகலா எரிக்கறோம். பொதைக்கறோம்னுட்டு மெஷினு வாய் பேசாது. சோலியும் நிமிஷமா முடியும். வேலைய நிரந்தரமாய் ஆக்கு. கவன்மெண்டு சம்பளம் போட்டுக்குடுன்னு மெஷினு கேக்காதில்ல. டீக்கு பேட்டா குடு. டிபனுக்குக் குடு..மருத்துவ வசதி பண்ணிக்குடு அப்பிடி இப்பிடின்னு மனு குடுத்திருக்கானுவ நாத்தம் புடிச்ச நாய்ங்க. இதுங்களை ஒழிச்சுக் கட்டணும். அதுக்குத் தான் இந்த மெஷினு வைக்கப் போறோம்.. சுடுகாட்டுக்குன்னு ஏக்கரா கணக்கா நிலம் ஆர்ஜிதம் பண்ண வேணாம். பொறம்போக்கு எடம்னு கணக்குக் காட்டி ரெண்டு குடிசைய போட்டு வச்சம்னு வையி கொஞ்ச வருஷத்துல எடம் நமக்குன்னு ஆயிடும். சிட்டிக்குள்ள. அவுட்டர்ல எங்கன்னாலும் நிலம் அத்தனையும் பவுனு சின்ராசு..” 

கனவுகள்..கனவுகள்.அரசியல் கனவுகள். வெறும் கையாலேயே முழம் போட்டு மாலை கட்டி விடும் வெற்றுக் கனவுகள். நம் இளைஞர்களை மயக்கி மழுங்கடிக்கும் கோடிக் கனவுகள். கதம்பக் கனவுகள் அந்த சாக்கடையை விட்டு வெளியே வர முடியாதபடிக்கு அதிலேயே உழல வைக்கும் மாயக் கனவுகள். 


சுடலையில் வரட்டியடுக்கி அதனுள் செங்கற்களை அடுக்கி வைத்து கட்டைகளைப் பரப்பி சடலங்களை அடுக்கி வைத்து வரட்டியால் மூடி விட்டாள் செங்கல் சூளை மூட்டு போடுவது மாதிரி போட்டு எரியூட்டினாள்  சின்னப்பொண்ணு. 

மடக்கி வைத்து எரியூட்டப்பட்டிருந்த பிணத்தின் கை கால் முட்டியும் இடுப்புப் பகுதி எலும்பும் உஷ்ணமாகி டப்பென்று வெடித்துச் சிதறின. எழுந்து உட்கார்ந்தன பிணங்கள். சிதறிய பாகங்களைப் பொறுக்கிச் சிதையில் போட்டு முழுமையாக எரித்துக் கொண்டிருந்தார்கள் சின்னப்பொண்ணுவும் சம்பத்தும். 

யாருக்காகவும் காலம் நிற்குமா? சூரியன் சந்திரன் சுற்றுவதும் நிற்குமா? சின்னப்பொண்ணுவின் வீட்டில் துக்கம் என்பதற்காக மற்ற வீட்டில் சாவு நடக்காமல் போகுமா? பிணம் விழாமல் காத்திருக்குமா? ஆள் விட்டு அழைத்து வர இதோ வேலையே குறியாயிருந்தாள் அவள். 

சுடுகாட்டின் அலுவலர் மணிமாறன் ரொம்பவே கடுப்பாகியிருந்தார். ஆஸ்பத்திரி ரயில்வே போலீஸ் சடலங்கள் பாட்டுக்குக் குவிந்த படியிருக்க மற்ற வெட்டியான்கள் ஒவ்வொருவரும் சாக்குப் போக்குச் சொல்லி அனாதைப் பிணங்களை எரிக்காமலோ புதைக்காமலோ நழுவினார்கள். 

“சரியா வேலை பண்ணுங்க..இல்லன்னா உங்களையும் சேர்த்து எரிச்சுடுவேன்.ஜாக்கிரதை..”

“அடப் போங்க ஸார்.பொணம் எரிச்சா வாய்க்கரிசியாவது தேறணும்.. அப்பத்தான் ஒரு வாய் டீயாச்சும் குடிக்க முடியும். விடு ஸார் உங்க வீட்டு பொணமா? என் வீட்டுப் பொணமா? நாறி அழுவட்டும்.” 

“கட்சிக்காரன் அதிகாரிங்க வீட்டுப் பொணம்லாம் வேணாம் சார்.. ஐயாவுக்குத் தெரிஞ்ச டெத்துன்னு காசே குடுக்காம நழுவிடுவானுவ.. மண்ணெண்ணெய் ஊத்தி வறாட்டி அடுக்கி வச்சு ராவாப்பகலா நின்னு பொணத்தை எரிக்கறதுள்ளாற நாங்க உசிரோட எரிஞ்சு போறோம். இவனுங்க குடுக்கற பிச்சைக்காசு பத்துக்கும் இருபதுக்கும் உசிரைக் குடுத்து தொழில் பண்றோம் நாங்க…”

“அஞ்சு லிட்டர் மண்ணெண்ணெய் நூத்தம்பது வரட்டி மூணு குண்டு வெறகுன்னு முன்னுத்தம்பது ரூபாகிட்ட காசு போடறோம். பொணம் பக்கத்துல இருந்து முட்டுக் குடுக்கணும் சாம்பல் சேத்துக் குடுக்கணும். இத்தினி ரோதனைக்கும் உறவுக்காரனுங்க நாலு காசு குடுக்கறானுவளா? கஞ்சப் பசங்க. துக்கத்துல அழறதை விட வெட்டியானுக்குக் காசு குடுக்கத் தான் ஜாஸ்தி அழறானுவ. இந்த அளகுல அனாதைப் பொணம் எரிச்சா அந்த உழைப்பும் தண்டமாயிடுது..” 

“தெனமும் அஞ்சாறு பொணமாவது விளுந்தாத்தான் எங்களுக்கு நல்லது. விழணும்னு வேண்டிட்டுத்தான் கண்ணு முழிக்கோம். கார்ப்பரேசன்லேருந்து நாலு காசு சம்பளத்த- மாசாமாசம் குடுக்கச் சொல்லு சாரு அப்பறம் நாங்க ஏன் வாய்க்கரிசிக்கு அலையறோம்? வேலைக்குச் சுணங்கறோம்..?” 

“ஸார்.. எங் குழந்தைங்க சாட்சியாச் சொல்றேன். இந்த டெட் பாடிங்களைப் பொணம்னு நினைக்கறதில்ல. நிம்மதியாய்ப் போன உசிரை… நாங்க தான் கடைசியா வழியனுப்பறோம். சாக்கடை சுத்தம் பண்றது கூட நல்ல தொழிலு தான். அடுத்தவன் சாவுல உசிரு வாழ்றது கொடுமை. நரகம். சாபம். நாலு காசு கொஞ்சம் அரிசி..ஒரு முழத்துணி கூடத் தேத்த முடியாத அனாதைப் பொணம்லாம் என்னால எரிக்க முடியாது ஸாரு..” 

ஆளாளுக்குத் தாட்சண்யமில்லாமல் மறுத்து விட எரிச்சலானார் மணிமாறன். 

“இப்பிடிச் சட்டம் பேசறீங்க..நாய்ங்க.அதான் உங்க எல்லாருக்கும் பதிலா மெஷினு வரப்போவுது. உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா கதை தான். சாவுங்க பொணந்தின்னிப் பசங்க..” 

மனசாரத் திட்டி விட்டுத்தான் சின்னப்பொண்ணுக்கும் சம்பத்துக்கும் ஆள் அனுப்பினார். 

இதோ சோலி ஜூரூராக நடக்கிறது. 

நடுஜாமம் தாண்டிவிட்டது. சள்ளைப்படாமல் வேலை பண்ணினார்கள். மூணாம் நாளே கொள்ளிக்குச்சியைப் பிடித்து விட்டாள் சின்னப்பொண்ணு. சொந்த சோகமும் துஷ்டியும் அனுசரிக்கக் கூட விடாமல் துரத்தும் சமூகக் கடமை. 

மூணுமூணரை இருக்கும். ராத்திரியின் மயான அமைதி அங்கங்கே மினுக்மினுக்கென்று விளக்கெரிந்தது. சிதை நெருப்பு கொழுந்து விட்டெரிந்தது. அங்கங்கே ஊளையிடும் நரிகள் நாய்கள். காற்றில் பிணவாசனை. சடலம் எரியும் நாற்றம். 

அமைதியான ஊர். அமைதியில்லாத வெட்டியான். 

ஓய்வெடுத்து உறங்கும் ஜனங்கள். ஓய்வைத் துறந்த சிதை நெருப்பின் புகை. ஹோவென்று பந்தாய்க் கிளம்ப மூச்சடைத்து மூச்சு விடாமல் இருமினாள் சின்னப்பொண்ணு. 

“ரொம்ப இருமலா இருக்கு.?” 

“ப்ச… இப்பல்லாம் ஒடம்பு ரொம்ப நோக்காடாச்சு..” 

“மருந்து மாத்திரை?” 

“அதுக்குப் பவுசு இருந்தாத்தான். நாலு நாளுக்குக் கம்மஞ்சோறு ஆக்கித் துன்னலாமே…” 

“எங்கப்பன் தாத்தா மாதிரி ஆயிடாம்…” 

“என்னது?”

“காசம்தான்” 

“ம்..அதானோ என்னவோ… யாரு கண்டா…இந்த நெருப்புக்கு எல்லாந்தான் வரும்.. ப்ச. நாளைக்கே செத்தாக்கூட நஷ்ட ஈடு எதுனா கெடைக்கவா போவுது? அம்பது நூறுன்னு செலவு பண்ணி .. மத்த வெட்டியானுங்கல்லாம் காசு போட்டுத்தான் எரிக்கணும். இல்லாக்காட்டி அனாதைப் பொணமாத்தான் அளுகிப் போய்க் கெடப்பேன்..” 

வறட்டியை அடுக்கி மண்ணெண்ணெய் தெளித்தாள். 

“நீயாச்சும் வேற வேலைக்கு போவக் கூடாதா சம்பத்து?. சாம்பல் அடிச்சுக் கண்ணு போன தாத்தா. ரௌடிங்க அடிச்சுப் போட்ட அப்பன். புத்தி பேதலிச்சு சுரேசு, பைத்தியமாயி ஓடிப் போயிட்ட எங்கப்பன்..இத்தினி பேரையும் காவு வாங்கிருச்சு. ஓங்க வூட்டுல மிச்சமிருக்கிற திண்ணைய நீ ரொப்பணும்னு ஆசையா?” 

“வேற என்னா வேலை கெடைக்கும் ? சின்ராசு அண்ணனாச்சும் கை தூக்கி விடுவாம்னுதான் பாக்கேன்” 

நம்பிக்கையோடு பிணமெரித்தான் சம்பத்து. 

“கொஞ்சம் வெறாட்டி போடு. பருப்பு நெய் டால்டான்னு தின்ற பணக்காரப் பொண்ம்னா புஸ்ஸுன்னு பத்திக்கும். இதுங்கள்லாம் நாதியத்த அனாதைப் பொணங்க எரியக் கூட முரண்டு புடிக்குதுங்க. இந்த அளகுல பொணத்துக்குள்ளாற பாட்டில் வேற வெடிக்குது. தீவாளி டப்பாசாட்டம்” 

வெட்டிக் கம்பால் புரட்டிக் கொடுத்தாள். 

“சரி கொஞ்சம் பாத்துக்க ஓரமாக் குந்திட்டு வாரேன்”

சம்பத்தின் பார்வையிலிருந்து விலகிப் புதரின் பின் பக்கம் நடந்தான் சின்னப்பொண்ணு. குந்தினாள். ரெண்டு நாளாய்ச் சோறு தண்ணியில்லாமல் வெறுமனே டீ குடித்துக் குடித்து, தம் பிடித்து சடலம் எரித்து முடித்ததில் புழுக்களின் நாற்றம் கூடவே தீட்டு நாற்றம். தீட்டுத் துணியின் நாற்றம். குளிக்கவில்லை. வெளிக்குப் போகவில்லை. ரெண்டு துணியைக் கையோடு கொண்டு வந்து இந்தப் புதர்மறைப்பிலேயே மாற்றிக் கொண்டாயிற்று. எழுந்தாள். நிம்மதியாயிருந்தது. வயிற்று வலியும் கால் வலியும் பின்னியது. பின்னாலேயே மோப்பம் பிடித்து ஓடி வந்த நாயை விரட்டினாள். 

“ச்சூ..ஓடிப்போ_பொம்பளைன்னா நாயி கூட பின்னால அலையது…நேரம் பொளுது பாக்கா…த்தூ..” 

வானம் லேசாய் வெளுக்க ஆரம்பித்திருந்தது. 

“நாலரை மணியிருக்கும் போல..சோலி முடிச்சுக் கௌம்பணும்.. டீ குடிக்கோணும்.. சம்பத்து பயலுக்கும் தரணும்..பாவம் சின்னப்பையன். சம்பாத்தியமே இல்லாத குடும்பம். அவுக அண்ணங்காரனும் மறந்துட்டாப்பல தெரியுது..ஒட்டுதல் இல்லாம அறுத்துக்கிட்ட மாதிரியில்லா இருக்கு.. அப்பப்ப நாந்தான் அவுக வூட்டையும் பாத்துக்கணும்…இனிம அத்தைக்காரி ஒத்தாசைக்கு யாருமில்லாத என்ன பண்ணுவா?” தனக்குத் தானே வாய்விட்டுப் பேசியபடியே சுருக்குப் பையை அவிழ்த்துச் சில்லறையை எண்ணினாள். ஒரு டீக்குத்தான் காசு தேறியது…மெதுவாய் நடந்தாள். 

“சரி.பப்பாதி குடிச்சுக்கலாம்.சம்பத்து முடிஞ்சுதா சோலி..?”

முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். 

“ஓ-ஓ ஆ ஆ அம்மா ஓடி..பண்ணுக்கா ஓடியா.ஐயோ எரியுதே. எரியுதே ஓடியாக்கா..ஐயோ கண்ணு.’ 

அவனின் குரல் மயானத்தின் அமைதியைக் குலைத்துப் போட்டது. காற்றை அறுத்தது அந்தக் குரல். 

சம்பத்தா? சம்பத்தா கத்துவது? என்னாச்சு? 

ரெண்டெட்டில் விழுந்தடித்து ஓடினாள் சின்னப்பொண்ணு. சம்பத்து தரையில் விழுந்து புரளுவது சிதை நெருப்பு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. உருண்டு புரண்டு கத்திக் கதறித் தடுமாறிக் கூவினான் அவன். 

“ஐயோ எரியுதே கண்ணு. அவிஞ்சு போச்சே.கண்ணு எளியதுக்கா..உசிர் போவுது…” 

“ஏய் சம்பத்து என்னாச்சு? வெட்டிக் கம்பாலக் குத்திக்கிட்டியா.?”

பாய்ந்து அவனைப் பிடித்தாள். வலி தாங்காமல் துடித்தான்.. துள்ளினான். 

“பாட்டிலு பாட்டிலு வெடிக்சிருச்சுக்கா. கண்ணுல பாய்ஞ்சிருச்சு பாரு வலிக்குது..உசிரு போதுக்க..”

கையெல்லாம் கொளகொளவென்று ரத்தம் வழிந்தது. மூடியிருந்த அவனின் கையை விலக்கினாள். நடுவிரல் அளவுக்கு தடித்த கண்ணாடித்துண்டு கண்ணைக் கிழித்துச் சொருகி நின்றிருந்தது. கண்ணை இமைக்க முடியாமல் கொட்டும் ரத்தத்தை நிறுத்த முடியாமல் துடித்தான் கதறினான். 

ஆஸ்பத்திரி சடலமாயிற்றே. உள்ளே வைத்துத் தைத்திருந்த பாட்டில் வெடித்துக் கண்ணில் பாய்ந்திருக்கிறது. வலது கண்ணின் கருவிழியில் சிதைத்துச் செருகியிருந்தது. 

“இப்ப எண்ண பண்ண? கண்ணாடியைப் புடுங்கிடறேன் இரு.” 

“ஐயோ..தொடாதே..வலிக்குது…வலிக்குது..” 

“வா.. ஆஸ்பத்திரிக்குப் போவலாம்.” மெதுவாய்த் தூக்கினாள் அவனை. 

“போச்சு.இனி நா குருடு தான். ஒத்தக் கண்ணுதான். என்னை விடு. இந்த நெருப்புல நாவுழுந்து சாவறேன்.. வுடு.. என்னை வுடு..” முரண்டு பிடித்தான். 

“ஐயோ சம்பத்து.. அப்படி எதையாச்சும் பண்ணிடாத.. அம்மாக்காரியெல்லாம் உனக்காவ உசிரோட இருக்காக..நினைப்பு வெச்சுக்க”. 

மெதுவாய் நடத்திக் கூட்டி வந்தாள். நாய் துரத்திப் பின்னாலேயே ஓடி வந்தது. ரத்தத்தை மோந்து பார்த்தது. 

“ஒரு நிமிசம் நில்லுக்கா.” தயங்கினான். 

“என்னா சம்பத்து? நாழியாவுது.ரத்தம் கொட்டுது பாரு..” 

“ப்… வலிதான். வுடு. ஒரு குண்டு வெறகு போட்டுட்டு வந்துடுக்கா.. இல்லேன்னா நெஞ்சுக்குழி சரியா வேகாம அரைகுறையாக் கெடக்கும் பொணம்…பாவம்”

“பரவால்ல சம்பத்து. உசிரோட இருக்கற நீ தான் முக்கியம் வா…” 

“இல்லக்கா போட்டு வந்துரு..மனசு கேக்கல்ல..யாரு பெத்த புள்ளையோ… நல்லபடியாய்ப் போயிச் சேரட்டும். நம்மால ஏன் பாதகம்?”

மரத்தில் சாய்ந்து கண் ரத்தம் வழிய நின்றான் சம்பத்து. 

அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துச் சிதை நோக்கி நடந்தாள். சின்னப்பொண்ணு. கொஞ்சம் வரட்டியையும் விறகையும் இறுக்கமாய் அடுக்கினாள். மண்ணெண்ணெய் தெளித்தாள். கூடவே விழுந்தது அவளின் கண்ணீரும். 

யுகயுகமாய்ப் பாரபட்சமில்லாமல் எரிந்த மாதிரி மேலே மேலே மேலே எழும்பியது ஜூவாலை. மனிதனைப் பஸ்பமாக்கியது நெருப்பு. தகித்த சிதைத் தீயின் பின்னால் மேலே எழும்பியது கூடவே சூரியனும்…

நெருப்பு இனிது… தீ இனிது. அக்கினிக்குஞ்சும் அப்படியே..

(முற்றும்)

– தகனம் (நாவல்), முதற் பதிப்பு: 2005, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *