சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப் போன தீபம் போல அந்தப் பகல் பொழுது மேகங்கள் சூழ்ந்ததால் இருண்டிருந்தது. அவள் வீட்டு வேலைக்காக இந்த ஊருக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
“”நான் வந்து இருபது நாளாச்சு.. ஒரு மாசமாயிடுச்சு.. ஊரு பண்டிகைக்கு மூணு மாசமிருக்கு..”- வந்த புதிதில் தேவி இப்படிக் கணக்குப் போட்டுக் கொண்டு இருந்தாள். இப்போது அப்படி நினைப்பதை நிறுத்திவிட்டாள். நாட்கள் நில்லாமல் போய்க் கொண்டிருந்த போது கடந்த காலத்தைக் கணக்குப் பார்க்காமல் நாட்களோடு ஒன்றிப் போவதற்கும் பழகிக் கொண்டாள்.
சாலையில் போகும் வண்டிகளின் மத்தியில் வழி ஏற்படுத்திக் கொண்டு போய் வருவதற்குள் அவளுக்குப் பாதி உயிர் போவது போலிருந்தது. இப்போது அந்த ஊரின் விஷயங்கள் அத்துப்படியாகிவிட்டன. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது. சற்று தூரத்திலுள்ள மீன்கடைக்குப் போய் மீன் வாங்குவது என அவளே செய்து கொண்டு இருந்தாள். சாப்பிட்டுவிட்டு பாயில் படுத்துக் கொண்டு இருக்கிற மங்களா பாட்டிக்கு மருந்து வாங்கிக் கொண்டு வர வேண்டி இருந்தது. எதை எதையோ மனதில் போட்டுக் கொண்டு இருந்த பாட்டிக்கு இரவு முழுவதும் தூக்கமே இல்ல. அடிக்கடி இரத்தக் கொதிப்பு ஏறிக் கொண்டிருந்தது. பாட்டி படுத்துக் கொண்டு இருக்கிற இந்த சமயத்துலேயே மாத்திரை வாங்கிகொண்டு வந்து விடலாம் என்று புறப்பட்டிருந்தாள்.
தெங்கணகேரி என்னுமிடத்தில் இருந்தவள் ரத்னா அக்கா. தேவியோட அம்மாகாரியான சாவித்ரியிடம் ஒப்பந்தம் போட்டு வீட்டு வேலைக்கென அனுப்பி இருந்தாள்.
“”நான் எங்கும் போவ மாட்டேன். இங்கேயே இருப்பேன்…” என்று கறாராகச் சொல்லிய தேவியை அவளோட அம்மா ஒரே பேச்சில் வாயடைக்க வைத்துவிட்டாள். ரத்னா அக்காவிடம் பணம் வாங்கிக் கொண்டு முந்தானையில் முடிச்சு போட்டுகொண்டு வந்திருந்த சாவித்ரி, “”வாய் திறக்காதே, ஒன்னோட கல்யாணத்த யாரு செஞ்சு வைப்பா? உன்னோட பாட்டன் சொத்து ஏதாச்சும் இருக்குதா? இங்கேயே இருந்துக் கொண்டு உன் அக்காகாரி ஓடிப் போனது போல போயிடலாம்னு பார்க்கிறியா? நான் சொல்லுறத கேட்டுகொண்டு சும்மா இரு.. ” எனச்சொல்லிக்கொண்டே தலையைக் கீழே போட்டுக் கொண்டு இரை சாப்பிட்டுக் கொண்டிருந்த கோழிகளைப் பிடித்து அவற்றை விற்பதற்காக அங்கோலே பேட்டை பக்கம் நடந்தாள்.
தேவியின் கண் எதிரில் எந்தப் பாதையுமே தெரியவில்லை. இவளைப் போலவே பாதியில் படிப்பை விட்டிருந்த மாலா, உருக்குமணி, குலாபி ஆகியோர் பூ, தேங்காய், முந்திரி, புளிச்சை கீரை, கொத்தவரங்காய் ஆகியவற்றை விற்று பிழைத்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு நாள் திடுதிப்பென்று இங்கே செய்து கொண்டிருந்த தொழில்களை அவரவர் தங்கச்சிமார்களிடம் ஒப்படைத்துவிட்டு, பஸ் ஏறினார்கள். மும்பை, ஹூப்ளி, ஹைதராபாத் என்றெல்லாம் வீட்டு வேலைகளுக்கு போனார்கள். ஊர்ப் பண்டிகைக்கு வந்த சமயத்தில் வண்ண வண்ணச் சேலைகளில் தங்களை அலங்கரித்துக் கொண்டு தேவிக்குப் புரியாத அந்தந்த ஊர்களோட பாஷையில பேசி அவளை அசத்தி விட்டார்கள். அவர்கள் பேசிய பேச்சுக்களில் தேவி கிளர்ச்சி கொண்டாள். அவர்கள் வர்ணித்த ஊர்கள் தேவியை கனவு உலகத்துக்கு அழைத்துக் கொண்டு போகாமலில்லை. அப்படி இப்படி சேர்த்து வைத்து ஊருக்குப் பணம் அனுப்பிக் கொண்டு இருந்தார்கள். இதனால் ஊரார் கண்களுக்கு குண்டுமணி எடை அளவுக்கு ஒசத்தியாக தெரிந்ததென்னவோ உண்மைதான் என்பது சின்னவளான இவளுக்கும் தெரிந்தே இருந்தது.
வீட்டில் உப்பிருந்தால் கஞ்சியில்ல, கஞ்சி இருந்தால் உப்பில்ல என்கிற நிலைமை. “அக்கா மாதிரி எவனையாவது இழுத்துகொண்டு ஓடிடுவே..’ என அம்மா சொன்னது ஒருபுறம். “என்னதான் ஆகிவிடப் போவுது பார்த்துவிடலாம்..’ என மனத்தைத் திடப்படுத்திக் கொண்டாள். அக்காள் நீலா யாருடனோ ஓடிப் போனது ஒருபுறம் இருக்கட்டும். ஊர் சனங்க “சாவித்திரிக்கு ஓசியில ஒரு மருமகன் அமைஞ்சிவிட்டான்’ எனக் கேலி பேசினார்கள். யாரோடோ ஓடிப் போய்விட்டாள், அவன் எந்த ஊர்க்காரனென இதுவரையில் தெரியாத மர்மமாக இருந்தது. யார் வீட்டுக்காவது கடுதாசி போடுவாள். தந்தி அனுப்புவாள். கணவனோடு வீட்டுக்கு வருவாள் எனச் சாவித்திரியும் மகளான தேவியும் நினைத்துக் கொண்டு இருந்தது பொய்யானது. அக்காவைப் போல் தான் ஆகிவிடக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டு, கொட்டும் மழையில் இரத்தினக்காவின் தங்கையான பத்மாவதி இருந்த ஊருக்கு வண்டியேறினாள்.
மாத்திரை வாங்கிக் கொண்டு தேவி திரும்புகிற போது அவள் கையில் இருந்த மொபைல் சிணுங்கியது. “ஓ.. மாஸ்டரா இருக்கும்’ என்றெண்ணி கையிலிருந்த பையை அக்குளில் வைத்துக் கொண்டு பேச்சை செவிமடுத்தாள். பத்மாவதி அக்காவின் கணவரை “மாஸ்டர்’ என்றுதான் தேவி அழைப்பாள். அவர் என்ன வேலையில் இருக்கிறார் எனச் சொல்லத் தெரியவில்லை தேவிக்கு. பகல் உணவானதும் ஒரு தடவை அவர் ஆபிஸிலிருந்து தேவியை போனில் அழைப்பார். “யாராவது வீட்டுக்கு வந்தாங்களா? யாராவது போனில பேசினாங்களா? அம்மா சாப்பிட்டாங்களா? மாத்திரை விழுங்கினாங்களா?’ இவைதான் அவர் கேட்டுத் தெரிந்துக் கொள்வது. நீ சாப்பிட்டியா என்று ஒருதடவை கூட அவர் கேட்டதாக தேவிக்கு நினைவில்லை.
அம்மா கூப்பிடுகிற சமயத்துல, மாஸ்டர் கூப்பிடுகிற சமயத்தில் அவள் பெரும்பாலும் வெளியில்தான் இருப்பாள். “வூட்டுலதான் இருக்குறேன்..’ எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். இப்படி யாருடைய தடையுமில்லாத உரிமைக்கு, பொய் பேசினாலும் மறுபுறம் இருக்கிறவர்கள் நம்பும்படியாகச் செய்கிற இந்தச் சின்ன கருவி அவளை மெய்சிலிர்க்க வைத்தது. அதுவொரு பேசுகிற மந்திரக்கோல் என்பதில் அவளுக்கு எந்தச் சந்தேகமுமில்லை. இதனால் அவளுக்குத் தைரியம். வீட்டுக்கு அருகில் இருக்கிற பூங்கா, கடை வீதியென பொழுது சாயும் சமயங்களில், மங்களா பாட்டியை படுக்க வைத்துவிட்டு தனியாகவே சுற்றிக் கொண்டிருந்தாள்.
தேவி வேலைக்குச் சேர்ந்த புதிதில், “பில் அதிகமாயிடுச்சி’ என்ற காரணத்தினால் வீட்டுப் போனை பத்மாவதியம்மா எடுத்துவிட்டிருந்தாள். போன் எடுத்துவிட்டதுக்கு வேறு காரணம் சொல்லிய மங்களா பாட்டி, தேவி எதிரில் கண்ணீர்விட்டாள். வீட்டுச் சொத்துக்களை விற்றுத் தாயாரை வீட்டோடு வைத்துக் கொண்டிருந்தான் மகன். சொத்துகளுக்கு உரிமை இருந்த மகளான சுலோச்சனா தன் தாயாரிடம் பேசிவிடுவாளோ என்பதால் போனை எடுத்துவிட்டாள். “எதுக்கும் இருக்கட்டும் என்று’ மொபைல் வாங்கி வந்து எப்படிப் பயன்படுத்துவதென தேவிக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். பாட்டி மேல் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக வாங்கிக் கொடுத்தது எனப் பலமுறை யோசித்துப் பார்த்திருந்தாள் தேவி. வீட்டு எசமானி எசமானர் ரெண்டு பேரு தவிர வேறு யாரும் அந்த மொபைலுக்குப் பேசியது கிடையாது. ஆனாலும் சில சமயங்களில் லைன் தவறிய அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் தேவிக்கு ரொம்ப சந்தோஷமாகிவிடும்.
அப்படிப்பட்ட ஓர் அழைப்பு “தேவ் ஆனந்த் இருக்கிறாரா?’ என விசாரித்த போது, “ஆமாம், இருக்கிறார்’ எனச் சொல்லி இருந்தாள்.
“”நீங்க யாரு? தெரியலியே..”
“”நான் அவரோட மனைவி…”
“”அவர்கிட்ட கொஞ்சம் போனைக் குடுக்கிறீங்களா?”
அதுக்கு தேவி, “”இப்ப அவரு துணிகள துவைச்சிகொண்டு இருக்கிறாரு…” எனச் சொல்லி போனை “ஸ்விட்ச் ஆஃப்’ செய்தாள். இதுபோன்ற விளையாட்டுகளில் அவள் ரொம்ப சமர்த்து. அப்போது மங்களா பாட்டி, “”மகளே! இப்படியெல்லாம் யாருக்கும் எடம் குடுக்கக் கூடாது. இப்படி வா. கண்ணுல பூச்சி பறக்குற மாதிரி இருக்குது. நெத்தி மேல கொஞ்சமா எண்ணெய் தடவு..” எனத் திட்டுவதைப் போல் பேசினாள்.
வீட்டுச் சனங்கள் வேலைகளுக்குப் போனதும் தேவியின் தினசரி வேலைகள் சீக்கிரமே முடிந்துவிடும். மங்களா பாட்டிக்கு பேச்சு துணை தேவியே. வீட்டு வேலைகளோடு பாட்டியிடம் பேசுவதும் ஒன்று என சில வேளைகளில் யோசித்தாள் தேவி.
நான் சின்னவளாக இருந்தபோது காலம் எப்படி இருந்துச்சு? திருமணமான போது எப்படி இருந்துச்சு? பையனும் பொண்ணும் பொறந்தது – மங்களா பாட்டியின் சுய சரித்திரத்துல தேவிக்கு சிரத்தை கிடையாது. பாட்டியின் பேச்சுக்கு “உம்’ கொட்டியபடியே மொபைலில் யாராவது பேசுவார்களா? என எதிர்பார்த்துக் கொண்டு, சன்னல் வழியாக சாலையில் வருவோர் போவோரை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பாள் அவள்.
என்ன இருந்தாலும் ஊரைப் பற்றிப் பேசுவதற்கு பாட்டி மட்டுமே இருந்தாள். பாட்டியின் சுயபுராணம் முடிஞ்சதும் ரொம்ப சரளமாக வீடு, ஊர் பற்றிய பேச்சை எடுப்பாள். கொல்லைப்புறமிருந்து எடுத்துவரும் தேங்காய்களில் ஒன்றை தேவிக்குக் கொடுப்பாள் பாட்டி. அதை செட்டியார் கடையில் விற்று பஜ்ஜி வாங்கி சாப்பிடுவாள். இப்போது அதனை நினைவுப்படுத்தினால், “”அந்த நாளில எங்க கையில பொட்டுக் காசு இருந்ததில்ல..” என்பாள் பாட்டி. அது பொய் என்பதும் தேவிக்குத் தெரியாமல் இல்லை.
தேவியின் தந்தையான பரமேஸ்வரனைப் பற்றி பாட்டிக்கு ரொம்ப கரிசனை. ஊரில் எப்படியான மரியாதை அவருக்கு இருந்தது என்பதைப் பாட்டி சொல்லும் போது திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பாள் தேவி. விறகு எடுத்துவர மலைக்குப் போன சமயத்துல புலி வாய்க்கு இரையானதைச் சொன்ன போது தேவியின் கண்கள் குளமானதுண்டு. கண்ணில் பார்த்திராத அப்பா பாட்டியின் பேச்சில் உயிர் பெற்று வந்தார்.
பாட்டியின் செயல்பாடுகள் மேலே கண் இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லி இருக்கவில்லை. ஆனால் எசமானியம்மாவின் விசாரணைகள் அப்படி இருந்தன. அப்படிப்பட்ட சமயங்களில் பாட்டியைப் பற்றிய இரகசியங்கள் எதையும் தேவி வெளியில் சொன்னது கிடையாது. அதுமட்டுமல்ல. தன்னோட மகளிடம் பேச வேண்டும் என்று பாட்டி சொல்வாள். அப்போது வீட்டு எதிரில் இருக்கிற டெலிபோன் பூத்துக்கு கையைப் பிடித்துக் கொண்டு அழைத்துப் போவாள். “”என்னை எப்படியாவது அழைச்சிக் கொண்டு போயி ஊருல விட்டுடு”என்று மகளிடம் பாட்டி சொல்வாள். இதைக் கேட்டு தேவி ரொம்பவும் வேதனைப்பட்டாள்.
“”பாட்டி! நாம இரண்டு பேரும் யாருக்கும் தெரியாம எங்க வூருக்குப் பஸ்ஸýல போயிடலாம்..” எனச் சொல்லி பாட்டியைச் சிரிக்க வைத்திருந்தாள்.
“”தேவி! உன்னோட அக்கா ஊரை விட்டு ஓடிப் போயிருக்கக் கூடாது. கல்யாணம் செஞ்சிகொண்டு ஊருலயே இருந்திருக்கணும். அது பெருமையா இருந்திருக்கும்..” – பாட்டி திடீர் என்று தேவியின் அக்காவைப் பற்றி இப்படிப் பேசினாள். அக்காவைப் பற்றி தெரிந்துக் கொள்ள இதுதான் தக்க சமயம் என்று எவ்வளவு கேட்டுப் பார்த்தும் பாட்டியிடமிருந்து பதில் வரவில்லை.
“”அதெல்லாம் பழைய சங்கதி. இனி நடக்கப் போறத பத்தி ஏதாச்சும் பேசு…” எனச் சொல்லி எழுந்து போனாள் பாட்டி.
அக்கா ஓடிப்போன சமயத்தில் அதைப் புரிந்து கொள்கிற வயதில் இல்லை. அக்கா ரொம்ப அழகாகச் சேலை உடுத்துவாள். புடவையைப் பல்லில் கடித்தபடி தொப்புளுக்குக் கீழே கட்டிக் கொண்டிருந்தது தேவிக்கு நினைவிருந்தது. பவுடர் வாசனை கமகமவென்று மணக்கும். முற்றத்தில் இருந்த வாழை மரத்தின் மேலே முதல் நாளிரவு போட்டிருந்த கனகாம்பர மாலையைச் சூடியபடி தன்னையும் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போவாள். அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறபோது மாய உலகத்தில் மிதப்பது போலிருக்கும். மற்றவர்களிடம் இல்லாத அழகும் வசீகரமும் அவளிடம் இருந்ததால்தான் ஓடிப் போய்விட்டாளோ எனத் தனக்குள் கேட்டுக் கொண்டிருந்ததுண்டு.
“அவளைத் தேடிக் கொண்டு இந்த ஊருக்கு வந்திருக்கிறேனா?’ என்றும் சில சமயங்களில் தேவி நினைத்துக் கொண்டதுண்டு.
“”இரவு வீடு திரும்ப நேரமாகும். சாப்பாடு மேசை மேல வெச்சி தூங்கிடு…” மாஸ்டர். அல்லது எசமானியம்மா இப்படி சொல்வதுண்டு. பாட்டியும் தேவியும் டி.வி. பார்த்துக்கொண்டு சாப்பிடுவார்கள். அனந்த்நாக் நடித்த சினிமா பார்ப்பதில் இரண்டு பேருக்கும் தகராறு என்பது கிடையாது. எந்தப் பெண்ணை அனந்த்நாக் காதலித்தாலும் தேவிக்கு ரொம்பப் பிடிக்கும். காதலித்தா இவனை மாதிரி காதலிக்கணும் என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொள்வாள்.
“”அவன் நம்ம பக்கத்துக்காரன். ஹொன்னாவரம் ஊரு. நடிக்கறதுக்குப் போயிட்டான்..” – மங்களா பாட்டி சொன்னதும் அனந்த்நாக், தேவிக்கு ரொம்ப நெருக்கமாகிவிட்டான். தேவி, அக்காவோடு சேர்ந்துகொண்டு அவன் நடித்த சினிமா பார்த்ததும் அல்லாமல் பேட்டையில அவனோட போஸ்டர்களையும் பார்த்திருந்தாள். அக்காவுடன் சினிமா பார்த்த எல்லா சமயத்திலேயும் அனந்தநாக் போல கிராப் வைத்துக் கொண்டு இருந்த ஒருத்தன் அக்காவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான்.
“”வேணாம்.. வேணாம்… ஷ்… ஷ்….” என அக்கா சொன்னது எதுக்கென தேவிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அக்காவின் தோள் மேல் கையைப் போடுவது எது போல சினேகிதமாக இருக்கும்? வெள்ளித் திரையில் அனந்த்நாக் நாயகியான இலட்சுமியை காதலிப்பது கூட பொய்யான தோற்றமாக காட்சியளித்தது.
தொடக்கக் காலத்திலிருந்தே தேவியின் அபிமான நடிகன் அனந்த்நாக்.
“”இந்த வயசுலகூட எவ்வளவு அழகா தெரியுறான்…” எனப் பாட்டியிடம் சொல்லும் அளவுக்கு அவன் மீது மோகம். இரண்டு நாள்களுக்கு முன்னால் பேக்ரியில் அறிமுகமானவள் மேல் வீட்டு வசந்தி. அவளிடம் அனந்த்நாக்கின் போன் நெம்பர் வாங்கித் தருமாறு கேட்க வேண்டும். அது கிடைத்தால் அவனிடம் பேசலாம். இதுபோன்ற விஷயத்துல வசந்தி ரொம்ப கெட்டிக்காரி.
“”ஆகாயத்துல இருந்து தரை இறங்கிய ரம்பை…” சினிமாவில் அவன் பாடிய பாட்டை முணுமுணுத்தபடி பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தவள், அவனோடு பேசுவது பற்றிய யோசனையில் இருந்தாள்.
ஒருவேளை அவனுடைய நெம்பர் கிடைத்தால், அவனிடம் என்ன பேசுவது என்கிற போதையில் மிதந்து கொண்டிருந்தாள். “உன்னோட ரசிகை’ எனச் சொன்னால் சிரிப்பான். “நானும் உன்னோட ஊர்க்காரி’ என்றாலும் அவர் தன்னிடம் பேசுவாரோ இல்லையோ என்பதில் தேவிக்குச் சந்தேகமாய் இருந்தது. அனந்த்நாக் உடன் பேசுவதாக, கனவு கண்டபடியே தேவி தூங்கினாள்.
“”சிவனே! காப்பாத்துயா” என்று கனவில் உளறிய பாட்டியின் பேச்சால் தூக்கம் களைந்த தேவி, நீரில் விழுந்த கதாநாயகியை காப்பாற்றும் நாயகனின் நினைவு வர மீண்டும் கண்களை மூடித் தூங்குவதற்கு முயற்சி செய்தாள்.
“”தேவி! உன்னோட அம்மாகிட்ட நீ போன்ல பேசலாமே..” என்றாள் பத்மாவதி அம்மா ஒரு நாள். இதுதான் சந்தர்ப்பமெனக் கருதிய தேவி, “பக்கத்து வீட்டு மாஸ்டருக்குப் போன் செய்தாள். என்னமோ எதுவோ என அலறியடித்து ஓடி வந்த சாவித்திரியிடம், “”என்னோட போன்ல பேசுறேன்..” என்றாள் ரொம்ப ஜம்பமாக. அவளுடைய தாயார், “”நீ இதுபோல செலவு செய்யக்கூடாது. பணம் பின்னால தேவைப்படும்..” என மறுமுனையில் பேசினாள். தேவியின் மனம் கைதவறி விழுந்த கண்ணாடி பாத்திரமானது.
“”இந்த முண்டச்சிகிட்ட பேசவே கூடாது…” எனத் தனக்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டாள். அடுத்த நிமிஷமே அம்மா மேலே ஐயோ.. பாவம் என்று பட்டது. கோழிகள விற்பதுக்காக ஊரெல்லாம் அலைவாள். உச்சி வெயில் தலையை சுட்டாலும் ரொம்ப கறாராகப் பேசி சொன்ன விலைக்கு கோழிகள விற்காமல் திரும்பமாட்டாள். அவள் சொன்னதில எந்தத் தப்புமில்லை.
யாரிடமிருந்து போன் வந்தது. யாருக்குப் போன் போனது என்பதை பத்மாவதி ஆரம்ப நாள்களில் சோதனை செய்ததுண்டு. இப்போது அதுபோல இல்லை, இதனால ரத்னா அக்காவுக்குப் போன் போட்டு அம்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். அம்மா கோழி வியாபாரத்துக்குப் போகக் கூடாது என்றும், அம்மாவுக்கு தேவைப்பட்டால் பணம் தரும்படியும் ரத்னா அக்காவிடம் தேவி கேட்டுக் கொண்டாள்.
சில சமயங்களில் யாரிடமிருந்தும் இவளுடைய மொபைலுக்கு போன் வராது. தன்னிடம் பேசுவதற்காகவே எந்தப் பையன் அல்லது ஆம்பளையிடம் இருந்தும் அழைப்பு வந்தபாடில்லை. ராங் நெம்பர் என்று சொல்லி வந்த ஒரு அழைப்பை தவிர, எவ்வளவு வற்புறுத்திய போதும் பேர் முகவரி கொடுக்காமல் குசுகுசுத்ததோடு சரி. அறிமுகம், பேரு, முகவரி இப்படி எதுவுமில்லாம பேச்சு வளர்கிறதே என்கிற வியப்பு அவளுக்கு.
சாலையில் போய் வரும் வண்டிகளை தன் கண்ணாடியில் வாங்கி வழியனுப்பும் பெரிய பெரிய கட்டடங்கள். அதன் நிழல்களைக் கடந்து போய் அம்மாவுக்கெனப் புடவை வாங்கி வந்த நாள் முதல் தேவிக்குள் கொந்தளிப்பு. எதுவோ ஒரு கடையின் எதிரில் இவளுடைய ஊரைச் சேர்ந்த கெüரி, அடையாளம் கண்டுபிடித்து, “”ஓ! நீ இங்கேதான் இருக்குறியா? யார் வூட்டுல வேலை? சாந்தா அக்கா பொண்ணு வூட்டுல நான் வேலை செய்யுறேன்” என்றாள். தேவி, யார் வீட்டில் வேலை பார்க்கிறாள் என்பதையும் தெரிந்துக் கொண்டாள். தேவி, புடவை வாங்க உதவியாகவும் இருந்தாள். பேச்சின் நடுவில் தேவியின் அக்கா நீலா இதே ஊரில் இருப்பதாகவும், சினிமா கொட்டகையில் அவளாகவே வந்து பேசியதாகவும் சொன்னாள். “போன் பண்ணு’ எனச் சொல்லி நம்பரும் கொடுத்தாளாம். அவள் எங்கே இருக்கிறாள்? மறுபடியும் நீ அவளைப் பார்த்தியா? அவ கூட யாரு இருந்தது? போன்ற தேவியின் கேள்விகளுக்கு “தெரியாது’ எனப் பதில் சொல்லி இருந்தாள் கெüரி.
“”ஒனக்கு நம்பர் குடுக்கறேன். வீட்டில எங்கோ வெச்சிருக்கிறேன் கெடச்சதும் உனக்குச் சொல்றேன். ஊர்ப் பண்டிகையில பார்க்கலாம்” – தேவியின் முக வாட்டத்தைப் பார்த்து அவளுடைய கரத்தைப் பற்றி, “”சீக்கிரமே தேடி தர்றேன்..” என மீண்டும் மீண்டும் சொல்லி இவளை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி இருந்தாள்.
தேவியின் முகம் வாடி இருந்ததைப் பார்த்த மங்களா பாட்டி, “”எதுக்குடி இந்த வருத்தம்? மனசுல என்ன பாரம்?” என விசாரித்தாள்.
“”பாட்டி! அக்கா இந்த ஊருலதான் இருக்கிறாளாம்…”
“”பொழப்பு எங்கிருந்து எங்கே சேர்ந்திருக்கு பாரு. அறுந்து போச்சு என விலக்கிவிட்டாலும் தலை எழுத்து இருந்தால் சேர்ந்துவிடும். உனக்கும் ஒன்னோட அக்காவுக்கும் ஏற்பட்டது போல, விசனப்படாதே. அக்கா கிடைப்பதாக இருந்தால் கண்டிப்பா கிடைப்பாள்… ரெண்டு பேருக்கும் தலையெழுத்து சரியா இருக்கணும்… என்னதான் சொல்லு. இந்த தலை எழுத்து மனுஷாளுக்கு தேவைப்படுது….” நாலு வார்த்தை சமாதானமாகப் பேசினாள் பாட்டி.
ஏழுமலையான் பண்டிகையின் போது நெற்றி நடுவில் பச்சைக் குத்தியது இன்னும் இருக்குதா.. அழிஞ்சுப் போயிடுச்சா…
அம்மா ஒனக்கு செஞ்சு போட்ட காதணியும் வளையல்களும் இருக்குதா.. உன்னிடம் பல விஷயங்களப் பேசணும்.. வீட்டுப் பின்புறத்துல நீ வளர்த்த மல்லிகை கனகாம்பரம் செடிங்க அப்படியே இருக்குது.. சுவரின் மேல் நீ கிளி, மயில், குருவி வரைஞ்சிருந்தே…. போன வருஷம் வெள்ளை அடிச்சப்ப அவை மறைஞ்சு போச்சு… பலத்த மழை… காத்துல குடை பறந்து போகாதபடி நீயும் நானும் வயல் வேலையில இருந்த அம்மாவுக்குக் கஞ்சி எடுத்துக் கொண்டு போனது இப்போதும் ஒனக்கு ஞாபகத்துல இருக்குதா..
இப்ப நீ என்ன செஞ்சிகொண்டு இருக்குற? இவ்வளவு வருஷமா எங்களோட நினைவு வரலியா? நீ ஓடிப் போறதுக்கு முதல் நாளு நாம ரெண்டு பேரும் அனந்த்நாக் நடிச்ச படத்துக்குப் போயிருந்தோம் இல்லியா… அன்னிக்கு ராத்திரி அம்மா எதுக்கு உன்னைத் திட்டினாங்க? கேக்கணும்னு நெனச்சேன்… நீ இருக்கல…
நான் உன்னோட தங்கச்சி; தேவி… அம்மா பேரு சாவித்திரி… அப்பா பரமேஸ்வரா… அவங்க ரெண்டு பேரும் என்னைப் போலவே உன்னையும் பெத்தவங்க…..’ அக்காவிடம் இவ்வளவும் பேசணும் என்று தேவி மனசுக்குள்ளே நினைத்துக் கொண்டாள். கெüரி கொடுத்திருந்த எண்களுக்கு பட்டன்களை அழுத்திக் கொண்டிருந்தாள். முயற்சி செய்ய செய்ய, “நீங்க டயல் செய்த நெம்பர் சரியாக இருக்குதா என்று சரி பார்த்துக்கங்க…’ என மீண்டும் மீண்டும் பதில் வந்தபடியே இருந்தது.
மனத்தைத் தளர விடாத தேவி, “ஒம்பது, எட்டு, எட்டு….’ என முயற்சி செய்து கொண்டே இருந்தாள்… புலனுக்கு எட்டாத சப்தமொன்றை செவிமடுக்க வேண்டும் என்கிற வேட்கையில். மாலை இருளில் தேவியின் கண்களில் எண்கள் மட்டுமே நிரந்தர பிம்பங்களாகி காட்சியளித்தன.
– மூலம்: சந்தீப் நாயக், தமிழில்: இறையடியான் (ஆகஸ்ட் 2013)