கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 1,656 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காற்று ‘ஜிலு ஜிலு’ என்று வீசிக்கொண்டிருந்தது.

நேரமோ மாலை ; இடமோ ஆற்றங்கரைத் திடல். கேட்க வேண்டுமா? ‘பாலர் பட்டாளம்’ கூடியிருந்தது, அழகான பட்டங்களுடன்.

“அப்பப்பா ! நான் அழகாகத்தான் இருக்கிறேன். எத்தனை கவர்ச்சி! இத்தனைப் பட்டங்களுக்கும் நானே தான் ராஜா” என்று முணுமுணுத்தது ஒரே ஒரு பட்டம். அழகான கருப்புக் காகிதம் – அதிலே வட்ட வட்ட கருப்புப் புள்ளிகள் – உண்மையிலேயே அழகாகத்தான் இருந்தது, அது. ஆனாலும் கர்வம் இருக்கலாமா? கூடாதல்லவா! ஆகவே மற்ற பட்டங்கள் எல்லாம் அதை வெறுப்புடன் பார்த்தன.

“என்ன இருந்தாலும் இந்த கர்வம் கூடாதப்பா!” என்றது ஒரு பச்சைப் பட்டம்.

“போகட்டும்; நமக்கென்ன வந்தது!” என்றது ஒரு பட்டம். அது வெள்ளைப் பட்டம். அதற்கு சண்டை பிடிக்கவே பிடிக்காது. சமாதான விரும்பி.

அந்தக் கருப்புப் பட்டம் தான் உயர- உயர பறந்து கொண்டு சென்றது. அதைப் பறக்கவிட்டவன் ராஜா. பெயருக் கேற்றபடியே அவன் பணக்கார

வீட்டுத் தம்பி. அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி! பட்டத்திற்கென்று அவன் எவ்வளவு செலவு செய் திருக்கிறான்! எவ்வளவு அதிகம் நூல் வாங்கி இருக்கிறான்! அப்பாவிடம் கேட்பான். மனம் கோணாமல் பணம் கொடுப்பார். அவன் எந்த ‘நூலோ’ வாங்கிப் படிப்பதற்குப் பதிலாக இந்த நூலை வாங்கிக் குவித்திருந்தான்.

ஐயோ பாவம், எவ்வளவு யோசனை இல்லாத செய்கை! இருந்தாலும் அவன் சிரித்தான். அவன் ஏற்றிய பட்டமும் சிரித்தது . சிரித்துக்கொண்டே பறந்தது, பறந்து கொண்டே உயர ஏறியது.

“ஆகா! ராஜாவின் பட்டம்தான் ‘டா வானத்தைத் தொடப் போவுது!” – ஆற்றுமணலில் குதித்துக்கொண்டே கத்தினான் ஒரு பொடியன்.

“ஆமாண்டா ஆமாம்! கருப்பு வர்ணம், சிவப்புப் புள்ளிகள் – எதுவுமே கண்ணுக்குத் தெரியாது போலிருக்கே! ஜோர்; ஜோர்!” -அதை ஆமோதித்தான் மற்றொரு குறும்புக்காரன்.

“பட்டம் கீழே இறங்குமா? அல்லது செயற்கைச் சந்திரன் போல ஆகாயத்திலேயே குடி யேறிவிடுமா?” என்று கேலி செய்தான், ஒரு கிண்டல்காரன்.

ராஜாவுக்கோ தாங்க முடியாத மகிழ்ச்சி ! பிறகு ராஜாவின் பட்டத்துக்குக் கேட்க வேண்டுமா? “நானே ராஜா” என்று கத்திக்கொண்டே பறந்தது. தனக்குக் கீழே – ரொம்ப ரொம்ப அடியில் பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்தது. கிண்டல் செய்தது. கேலியாகச் சிரித்தது. இன்னும் பறந்தது. பறந்து கொண்டே யிருந்தது.

மாலை மங்கியது. இருள் வந்துவிடட்டுமா’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.

எல்லா பையன்களும் தங்கள் பட்டங்களைக் கீழே இறக்கினார்கள். ஆனால் ராஜாவுக்கோ தன் கருப்புப் பட்டத்தை இறக்கவே மனமில்லை. அதைப் போலவே அவனது பட்டத்திற்கும் கீழே இறங்கவே மனமில்லை!

வான மண்டலத்தில் தன்னிச்சையாக – துணை எவருமின்றி ‘ராஜா’வைப் போலவே பறந்து கொண்டிருந்தது அப்பட்டம். திடீரென்று எதையோ கண்டு திகைத்தது . உற்று கவனித்தது. ஏதோ ஒன்று அதை நோக்கிப் பறந்து கொண்டு வந்தது. பட்டமோ என்று பார்த்தது . அல்ல; அல்ல; அது ஒரு ஊர்க்குருவி! கொட்டைப் பாக்கைப் போலிருந்த சின்ன ஞ் சிறிய குருவி!

தான் பறக்கும் உயரத்திற்கு அதுவும் பறப்பதா? இப்படி நினைத்தது பட்டம். அதற்கு பொறாமை பொங்கியது, “யாரப்பா நீ?” என்று சற்று இறுமாப்புடன் கேட்டது.

ஊர்க்குருவிஅந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்படுமா? “நான் யாராயிருந்தால் என்ன? இப்போது உனக்கு புத்தி சொல்லவே வந்தேன். சீக்கிரம் கீழே இறங்கி விடு. காற்று பலமாக வீசும்போல் இருக்கிறது!” என்றது.

பட்டம் உரக்கச் சிரித்தது. “அட முட்டாளே ! என்னையா இறங்கச் சொல்கிறாய்? இவ்வளவு பெரிய எனக்கு, கடுகளவு பறவை நீ புத்தி சொல்வதா? விந்தை; விந்தை! உன் உடலைப் பத்திரமாகக் காப்பாற்றிக்கொண்டு ஓடிவிடு ! காற்றிலே தலை வேறு; இறக்கை வேறாகச் சிதைந்து போய் விடாதே! நான் இன்னும் பறப்பேன், வேண்டுமானால் வந்து பாரேன், என்னுடன் போட்டிக்கு!” என்று சொல்லி மீண்டும் சிரித்தது.

“போட்டிக்கா வருகிறாய், முட்டாள் பட்டமே ! நூலும் காற்றும் இல்லாவிட்டால் நீ பறக்க முடியாது. தெரியுமா? ஆனால் நானோ சுதந்திரப் பறவை. இந்த வானம் தான் என் உலகம்!” என்று ஊர்க் குருவி சொன்னதும் பட்டத்திற்குக் கோபம் வந்து விட்டது.

ஊர்க்குருவி தன்னை அவமானப் படுத்துவதாக எண்ணிவிட்டது. தன்னுடைய அகண்ட உருவத்தை வேகமாக அசைத்தது . ஊர்க்குருவியை நோக்கி நகர்ந்தது. ஓங்கி அடித்தது.”போடா தம்பீ! பொல்லாத அறிவாளி நீ! உன் புத்தியும் யுக்தியும் யாருக்கும் தேவையில்லை! இந்த வான வெளிக்கு நான் ஒருவனேதான் ராஜா!” என்று கத்தியது.

அடியின் வலியைத் தாங்க முடியவில்லை ஊர்க் குருவிக்கு. அதற்கு அழுகையே வந்துவிட்டது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? து ஷ்டரைக் கண்டால் தூர விலகத்தானே வேண்டும்; பேசாமல் கீழே இறங்கியது. பறந்தது.

“புத்தி சொல்ல வந்தாயே பெரிய மனிதனே! ஓடு! தலை தெறிக்க ஓடு!” – பட்டம் சிரித்துக் கத்தியது. மகிழ்ச்சி இன்னும் அதிகரித்தது. மேலும் உயரே ஏறியது.

இருள் பரவிக்கொண்டிருந்தது. காற்றும் வேக மாக வீச ஆரம்பித்தது. ஆற்று மணல் காற்றிலே பறந்தது. கண்களுக்குள் புக முயற்சித்தது.

“ராஜாவுக்கு பயம் தோன்றியது. பட்டத்தை வேகமாக கீழே இறக்க முயற்சித்தான். இரண்டு மணி நேரத்தில் மேலே ஏறிய பட்டமாயிற்றே; அவ்வளவு சுலபத்திலா கீழே இறக்கிவிட முடியும்?

காற்று ‘ஹோ’ என்ற இரைச்சலுடன் வீசியது. பையன்கள் எல்லோரும் பயந்து போனார்கள். வீடுகளுக்கு ஓடி விட்டார்கள். ராஜா மட்டும் தனியாக நின்றான். நூலை சரசர வென்று இழுத்துக்கொண்டிருந்தான்.

வானத்திலோ காற்று பலத்துவிட்டது. பட்டம் தடுமாறியது. அங்கு மிங்கும் ஆடியது. அலைக் கழிந்தது. அதனால் தாங்க முடியவில்லை. “ஐயோ” என்று அலறியது. என்ன பலன்? ராஜாவால் தான் அதைக் கீழே இறக்க முடியவில்லையே!

புழுதி பறந்தது. சருகுகள் மிதந்தன. புயலைப் போல் மாறியது காற்று!

ராஜா பலம் கொண்ட மட்டும் நூலைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். ‘சடா’ரென்று அறுந்து விட்டது நூல்! மறுகணம் பயங்கர அலறலுடன் கவிழ்ந்தது பட்டம். திசை தப்பியது. வானத்திலே ஓடியது; எங்கேயோ ஓடியது. பொல்லாத காற்று அதை எங்கேயோ விரட்டி அடித்தது!

நன்றாக இருட்டி விட்டது. குற்றுயிர் – குறை உடல் – இந்தச் சோகமான தோற்றத்தோடு ஒரு மரக் கிளையில் வந்து சிக்கியது பட்டம். அந்தக் கருப்புப் பட்டமே தான் ! அதற்கு உடலெல்லாம் ஒரே வலி ; “ஐயோ,..அப்பா!” என்று அழுது கொண்டே தொங்கியது.

அதே நேரத்தில் அங்கு ஏதோ சப்தம் எழும்பியது. தனக்கு மறுபடியும் நல்ல வாழ்வு தர ராஜாதான் வந்துவிட்டானோ என்று எண்ணியது கருப்புப் பட்டம். மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்தது . ராஜா இல்லை. அவன் ஏன் அங்கு வரப்போகிறான்? அவனுக்கு என்ன அவ்வளவு அக்கரை? நாளைக்கு கடையிலே பணத்தை நீட்டினால் புதுப் பட்டம் கிடைத்துவிட்டுப் போகிறது. அப்படி யானால் என்ன சப்தம் அது? பட்டம் மறுபடியும் பார்த்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு குருவிக் கூண்டு இருந்தது. அதிலே ஒரு ஊர்க்குருவி – பக்கத்தில் அதன் குஞ்சுகள் ! பட்டம் திடீரென்று அதிர்ச்சி அடைந்தது. ஏன் தெரியுமா? சற்று நேரத் திற்கு முன்பு ஆகாயத்தில் எதனிடம் சவால் விட்டதோ; அதே ஊர்க்குருவிதான் அது!

அதே சமயம், “ஏனம்மா, தம்பி ஒன்று சொல்கிறானே; நீ கேட்டாயா? நம்மால் தான் வானத்தில் அதிக உயரத்தில் பறக்க முடியுமாமே; அது உண்மையா அம்மா?” என்று சந்தேகத்துடன் கேட்டது ஒரு ஊர்க்குருவிக்குஞ்சு!

ஊர்க்குருவி பேசியது ; “அப்படி இல்லை, அந்த கர்வமும் கூடாது மகளே ! இன்னும் எவ்வளவோ பறவைகள் இல்லையா ; கருடன், பருந்து…..” – பேசிக் கொண்டிருக்கும் போதே பரிதவித்துக் கொண்டிருந்த கருப்புப் பட்டத்தைப் பார்த்து விட்டது அது. “அதோ பாருங்கள் அந்தப் பட்டத்தை! அதன் கதை ரொம்ப ரொம்ப சோகமானது; ஆனால் ரொம்ப ரொம்ப உபயோகமானது; நல்ல பாடம்! அது கர்வத்தால் அழிந்த விதத்தை நான் சொல்லட்டுமா?…”

இப்படிக் கேட்டவுடன் குருவிக்குஞ்சுகள் எதுவும் சொல்வதற்கு முன்னால் “வேண்டாம்; வேண்டாம்! என் கதையைச் சொல்லாதே! என்னை அவமானம் செய்யாதே!” என்று வேதனையோடு கத்தியது பட்டம்.

அதன் குரல் கூட வலுவற்றுவிட்டது. உடல் தான் சின்னா பின்னமாகி விட்டதே!

காற்று மீண்டும் வீசியது. பட்டம் மரத்தின் கிளையைவிட்டு விடுபட்டது. கீழே ஓடிக்கொண்டிருந்த ஆற்று வெள்ளத்தை நோக்கி ஓடியது. ஆற்றில் விழுந்தது. குலைந்தே போய்விட்டது!

“ஐயோ, சாகிறேனே!”- பட்டத்தின் இந்த சாவுக்குரல் மட்டும் ஊர்க்குருவி குடும்பத்திற்குத் தெளிவாகக் கேட்டது.

– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *