என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 10,795 
 

உறுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா?

இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே… சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு!

அந்த ரெண்டிலே இது எந்த ரகம்னு புரியலே!

படவா, அவனைச் செருப்பைக் கழட்டி அடிக்கணும் போல ஆத்திரம் ஆத்திரமா வருது! அவனும் அவன் கொள்ளிக் கண்ணும்!

ஒரே வார்த்தை… ‘அவர் வெளியிலே போயிருக்கார். எப்ப வருவார்னு தெரியாது. நீங்க அப்புறம் வேணா போன் பண்ணிக் கேட்டுட்டு வாங்க’னு பட்டுக் கத்தரிச்சாப்ல சொல்லியிருக்கலாம்.

ஏறக்குறைய அதுமாதிரிதான் நான் சொன்னேன்.

ஆனால், அவன் மனசிலே கள்ளத்தனம்! சில பேருடைய விஷமம் மூஞ்சியிலே தெரியறதில்லை. பரம சாது மாதிரி இருப்பார்கள். ஆனால், உடம்பெல்லாம் வக்கிரம்!

அவன் கேட்டான்… ‘‘மொபைல் இல்லை. உள்ளே வந்து போன் பண்ணிக்கட்டுமா?’’

‘அவர் மறதியா மொபைலை இங்கேயே வெச்சுட்டுப் போயிட்டார்’னு எதையாவது சொல்லிச் சமாளிச்சிருக்கலாம். எனக்குத்தான் மூளையே கிடையாதே! ‘ஆஹா, தாராளமா வந்து பண்ணிக்குங்க’ன்னு வழி விட்டுட்டேன்.

வீட்டில் தனியாக இருக்கிற ஒரு பொம்பளை ஜாக்கிரதையா இருக் கத் தெரிஞ்சு வெச்சிருக்கணும் இந்தக் காலத்திலே! அதுவும் சென்னை மாதிரி சிட்டியில் நிறையவே சோதனைகள் வரும். தனியா ஒருத்தி & கல்யாணம் ஆகாதவளோ, ஹவுஸ் வொய்ஃபோ & எப்போ… எங்கே தனியா இருப்பாள்னு சில நாய் களுக்கு நல்லாவே மோப்பம் பிடிக்கத் தெரியும்.

ஊதுவத்தி வியாபாரம், சில்ட்ரன்ஸ் என்சைக்ளோபீடியா, கூரியர் சர்வீஸ், ரெகுலர் போஸ்ட், டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் டோர் டெலிவரி, கோயில் நன்கொடை, எம்இஎஸ், டெலிபோன் இலாகா, கம்ப்யூட்டர் & டி.வி. சர்வீஸ் காரர்கள், பிளம்பர்… ஹப்பா! எத்தனை எத்தனை! வீடுன்னா லேசா? அதுவும் ஒரு ஆபீஸ் மாதிரி காலையிலேர்ந்து பரபரப்பா இருக்கே! எந்தப் புத்துல எந்தப் பாம்போ? என்ன வேஷத்துல எவன் வருவானோ?

கதவு தட்டற சத்தம் கேட்டதும், லேசா திறந்து யார்னு கேட்டேன். ‘‘கோபால்ராம் ஃப்ரம் கொல்கட்டா! ரகு இருக்கானா? நான் அவனோட பெஸ்ட் ஃப்ரெண்ட்! நீல்கிரி நெஸ்ட்ல தங்கியிருக்கேன்!’’

‘‘அடடா! அவர் இல்லையே! டென்னிஸ§க்குப் போயிருக்கார்!’’

அப்பத்தான் அவன் உள்ளே வந்து போன் பண்ண அனுமதி கேட்டான். மொபைல் இல்லையாம். நம்பற மாதிரி இருக்கா? எங்க வீட்டு வேலைக்கார முனியம்மா கூட செல் வெச்சிருக்கா. டிப்டாப்பா பேன்ட் சட்டை போட்டிருக்கிற இவன்கிட்டே இல்லியாம். எல்லாம் ஏமாத்து. எப்படி யாவது உள்ளே வரணும். அதுக்கு வழி! நானும் அசடு. கதவைத் திறந்து வழி விட்டுட்டேன்.

அவன் சுவாதீனமாக வந்து ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, அவரோட செல்லுக்கு டயல் செய்து பேசிவிட்டு வைத்தான்.

‘‘ரகு வெயிட் பண்ணச் சொல்றான். டென் மினிட்ஸ்ல வந்துடுவா னாம்!’’

சோபாவில் அழுத்தமா உட்கார்ந்துட்டான்.

வீட்டைச் சுத்து முத்தும் பார்த்துப் பிரமாதம்னு புகழ்ந்தான். போன தடவை இவர் கொல்கத்தா போனப்போ இவன் வீட்லதான் ரெண்டு நாள் தங்கினாராம்… சொன் னான். அப்போ இவன் வொய்ஃப் டெலிவரிக்காக டெல்லி போயிருந் தாளாம். ‘டெல்லிவரி’ன்னு ஜோக் அடிச்சு அவனே சிரிசிரின்னு சிரிச்சான்.

இத்தனைக்கப்புறம் ‘காபி சாப்பிடறீங்களா?’ என்று எப்படி விசாரிக்காமல் இருக்க முடியும்?

காபி கொண்டு போய்க் கொடுத்தபோது, ‘‘காஃபி வித் அனு!’’ன்னு சொல்லிப் பெரிசாகச் சிரிச்சான். கஷ்டம், அதுவும் ஜோக் காம்! என் பேர் அனு என்பது இவனுக்குத் தெரிஞ்சிருக்கு. இவர் சொல்லியிருப்பார். ஆனால், ‘காஃபி வித் அனு’ன்னு சொல்ற அளவுக்குச் சட்டுனு ஒரு நெருக்கத்துக்கு அவன் வந்த வேகம் சரியில் லைன்னு மனசுக்குப் பட்டுது. அதுவாவது பரவாயில்லை, முகத்துக்கு நேரே சொல்றான். ஆனா, அவன் பார்வை பதிஞ்ச இடம்… ஐயோ! அதுதான் பெரிய உறுத்தலா இருக்கு எனக்கு.

நான் அசப்புல சிம்ரன் மாதிரி இருக்கிறதா இவர் அடிக்கடி சொல்வார். உடம்பு அந்த மாதிரி ஸ்லிம்மா இருக் கும் எனக்கு. காபி கொண்டு வரும்போது தூரத்திலேர்ந்தே கவனிச் சேன்… இந்த ராஸ்கல் என் இடுப் பையே வெச்ச கண் வாங்காம பார்த் துட்டிருந்தான். படுபாவி! அவன் பார்வை என் இடுப்புல ஒரு கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரி இருந்துது எனக்கு.

வந்தவன், காபியை வாங்கி ஒரு உறிஞ்சு உறிஞ்சுட்டுச் சொல்றான்… ‘‘அற்புதமா இருக்கு. காபி மட்டுமில்ல, உங்க ஸ்ட்ரெக்சரும்தான்! ரொம்ப சார்மிங்கா இருக்கீங்க அனு! பர்ட்டி குலர்லி யுவர் ஸ்மைல் இஸ் வெரி நைஸ்!’’

கடுப்பை மறைச்சுக்கிட்டு, ஜோக் என்ற பேரில் அவன் உளறிக்கொட்டி னதுக்கு ஒப்புக்கு லேசா சிரிச்சு வெச்சேனே, அது மகா தப்பு!

டெலிபோன் அடிச்சுது. எடுத்தேன். என் வீட்டுக்காரர்தான் பேசினார்.

‘‘நான் வர்றதுக்கு ஒரு மணி நேரம் கூட ஆகலாம். அந்தக் கொல்கத்தா வாலாகிட்டே, அவனை நான் ஓட்டல்ல வந்து பார்க்கறேன்னு சொல்லிடு. பக்கத்துல இருந்தா கொடு, நானே சொல்லிடறேன்’’ என்றார்.

ரிசீவரை அவனிடம் கொடுத்தேன். பேசிவிட்டு, ‘‘சே!’’ என்றபடி ரிசீவரை வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.

அவன் ‘சே!’ சொன்ன விதம் அவன் ஒரு முழு அயோக்கியன்கிறதை எனக்குத் தெளிவாக்கிடுச்சு.

அவன் போய்த் தொலைஞ்சான். ஆனாலும், அவன் என் ஸ்ட்ரக்சர் நல்லா இருக்குன்னு சொன்னது, என் சிரிப்பை நைஸ்னு புகழ்ந்தது, எல்லாத்துக்கும் மேலா என் இடுப்புல அவன் கொள்ளிக்கண் பட்டது… ஒரு நாள் பூரா, மறுநாளும்… அதற்கடுத்த நாளும் இவர் அவனைப் போய் ஓட்டல்லே பார்த்து ஏதோ ஷேர் விக்கிறதைப் பத்திப் பேசிட்டு வந்தப்புறமும் அந்த உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்தது. காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊத்தற மாதிரி அவனோட குரல்…

இவர்கிட்டே அந்த ராஸ்கலைப் பத்தி சொல்லாட்டா என் தலையே வெடிச்சுடும் போல இருந்தது. இல்லேன்னா, இந்த உறுத்தல் காலம் பூரா என்னைச் சித்ரவதை பண் ணிட்டே இருக்கும்னு தோணிச்சு.

நாலாவது நாள் தாங்கலை. அவர்கிட்டே சொல்லிடற துன்னு தீர்மானிச்சுட்டேன். ‘‘உங்ககிட்ட சொல்ல ணும்னு நினைச்சுட்டிருந்தேன். நாலு நாளா ஒரே உறுத்தல்…’’னு சொல்ல ஆரம்பிச்சேன்.

அதற்குள் அவர் செல் ஒலிக்க, எடுத்துப் பேசினார். ‘‘ஐயையோ! எப்போ? அடடா! த்சொ, த்சொ… நாலு நாளைக்கு முன்னே இங்க வந்திருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசிட்டிருந் தானே என்கூட’’ என்றெல் லாம் பேசிவிட்டு வைத் தார்.

‘‘யாருக்கு என்னாச்சு?’’ என்றேன்.

‘‘கோபால்ராம் போயிட்டானாம்டி! இங்கேகூட என்னைத் தேடி வந்திருந் தானே, அவன்! ஹார்ட் அட்டாக்காம். சின்ன வயசு… டிரிங்க், சிகரெட்னு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது… நல்ல பையன். பாவம், ஹ¨ம்!’’ என்று பலவாறாகப் புலம்பியவர், ஆசுவாசமான பிறகு…

‘‘ஆமா… உறுத்தலா இருக்குன்னு சொன்னியே! மெட்ராஸ் ஐ வரப்போகுதோ என்னவோ, ட்யூப் மருந்து போட்டுக்கறதுதானே!’’ என்றார்.

‘‘வேணாம். உறுத்தல் போயிருச்சு!’’ என்றேன்.

– 10th ஜனவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *