நிமிட காதல்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 19,428 
 

வழக்கம்போல் அன்று மாலையும் மின்சாரமில்லை. கொஞ்சம் புழுக்கம் அதிகப்படியானதால் மொட்டைமாடிக்கு செல்லலாமென முடிவெடுத்து மாடிக்குச் சென்றேன்.

காற்று உடலை வருடும்போது தென்றலின் அருமை புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். எங்கிருந்தோ சிரிப்பு சத்தம் கேட்டது. சிரிப்பு வந்த திசையை நோக்கினேன்.. ஒரு அழகான அல்லது அம்சமான பெண்ணொருத்தி நின்றிருந்தாள். அவளருகில் அவளைவிட சுமாரான பெண்ணொருத்தி நின்றிருந்தாள். முன்னவளும் பின்னவளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் என்னைப் பார்த்துதான் சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் மேலோங்க என் வெற்றுடலை மறைக்க எண்ணி மறுபடியும் வீட்டுக்குள் வந்து சட்டையை அணிந்துகொண்டு மாடிக்குச் சென்றேன். மறுபடியும் சிரித்தாள். சிரித்துக்கொண்டே நின்றிருந்தாள். அவள் சிரித்துக்கொண்டே என்னை பார்ப்பது போலிருந்தது. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் சொக்கித்தான் போனேன்.

அப்போதுதான் அந்த கன்னியை (எனக்கு அப்படித்தான் தெரிந்தாள்.) நோக்கினேன். அடடா அடடா இப்படியொரு பேரழகியை எதிர்வீட்டிலேயே வைத்துக்கொண்டா நான் அமைதியாய் இருக்கிறேன். என் மீதே எனக்கு கோபம் கொப்பளித்தது. சிகையை சரிபடுத்திக் கொண்டு எதிர்வீட்டு ரோஜா மீது பார்வையை வீசினேன். கண்கள் நயனங்களை அள்ளிவீசியது. இதழ்கள் இனிப்பை நினைவூட்டியது. நைட்டி அணிந்த நிலா பிரகாசமாக நின்றிருந்தது. தற்செயலாக அவளது என்மீது விழுந்தது. பார்த்தாள். சிரித்தேன். மறுபடியும் பார்த்தாள். மறுபடியும் சிரித்தேன். சிரித்தாள். கண்கள் வழியாக காதல் பரிமாறப்பட்டது. சைகை வழியாக ஏதோ சொல்ல முயற்சித்தாள். பேசலாமென வாய் திறந்தேன். ஏதோ ஒன்று உறுத்தியது.. அப்போது வீட்டிற்குள் இருந்து ஒரு குரல் “என்னங்க டீ ரெடி கீழ வாங்க.. கரண்ட் வந்துடுச்சு..” அந்த குரல் என்னையும் தாண்டி எதிர்வீட்டு மைனாவையும் சென்றடைந்திருக்கும் போல..என்னை ஒருமுறை முறைத்துவிட்டு மறைந்தாள். என் இதயக்கோவிலில் நான் எழுப்பிவைத்த கோபுரம் மொத்தமாக இடிந்துவிழுந்தது.

என் பத்து நிமிட காதல் படுதோல்வியைச் சந்தித்தது.

சோகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தேன். அந்த குரலுக்குச் சொந்தக்காரி கையில் தேனீர் கோப்பையோடு நின்றிருந்தாள். தேனீரை ருசித்தேன். என் மனைவியை ரசித்தேன்.. எதிர்வீட்டு மோகினியை மறந்தேன். கணவன்கள் திசைமாறாமல் வாழ்வதில் மனைவியின் பங்கு மகத்தானது..

– இந்த கதை பாக்யா வார இதழில் ஆகஸ்ட் 8-14 வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *