கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 7,515 
 
 

அய்யோ, இது என்ன கொடுமை? நான் இறந்து விட்டேன். படுக்கையின் மீது அசைவற்று கிடக்கிறேன்.

என் மனைவி காயத்ரி கையில் மொபைலை வைத்துக்கொண்டு யார் யாருக்கோ போன் செய்து அழுது கொண்டிருக்கிறாள். என் ஆறு வயது மகன் கார்த்தியும், நான்கு வயது மகள் ஹரிணியும் விவரம் புரியாது அம்மா அழுவதால் அவள் காலைக் கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தெருவிலுள்ள அனைவரும் என்னைப் பார்க்க கூடி விட்டனர். இவர்கள் கூடி அழுவது எனக்கு நன்றாகக் கேட்கிறது. ஆனால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஓ…நான் ஆவியாகி விட்டேன்.

உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி, என் குழந்தைகளை வருத்தத்துடன் தடவிக் கொடுக்கிறார்கள்.

என் நண்பர்கள் பலர் வந்து விட்டனர். பலர் என்னுடன் தீர்த்தம் சாப்பிடுபவர்கள். நான் அடிக்கடி குடிப்பதாலும், சிகரெட் பிடிப்பதாலும் டாக்டர்கள் பலமுறை என்னை எச்சரிக்கை செய்தனர். ஆனால் நான் திமிர் பிடித்தவன். எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. இப்ப திடீர்னு ஹார்ட் அட்டாக்கில் தூக்கத்தில் இறந்து விட்டேன்.

அட அது யார் சிவகுமாரா…? என் பழைய நண்பன். ஒரு பெரிய ரோஜா மாலையுடன் வந்து என் காலில் சார்த்திவிட்டு விசித்து அழுகிறான். பரவாயில்லை….பகையை மறந்துகூட என் இறப்புக்கு வந்து விட்டான். அவன் மிக நல்லவன். நான்தான் அடாவடித்தனமாக அவனிடம் சண்டைபோட்டு பிரிந்தேன். அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனி எப்படி முடியும்?

அட பக்கத்தாத்து மாமி சுகன்யாவும் வந்து காயத்ரியை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறாள். எனக்கு சுகன்யா மாமின்னா ரொம்பப் பிடிக்கும். செக்கச் செவேல்னு, தள தளன்னு வளப்பமா ஒரு ஸிந்திப்பசு மாதிரி இருப்பா. அவ காயத்திரியைப் பார்க்க வரும்போது நான் ஆசையுடன் அவளை ஓரக் கண்ணால் பார்ப்பேன். ஆனா அவ என்னை கண்டுக்கவே மாட்டா. உதாசீனப் படுத்துவாள். மாமி இப்ப என் இறப்பிற்காக அழல…. காயத்ரியின் இழப்பிற்காக அழுகிறாள்.

காயத்ரி என்னிடம் படிச்சு படிச்சு சொன்னாள். இந்தக் குடி, சிகரெட்லாம் வேண்டவே வேண்டாம் குட்டிப்பா…ப்ளீஸ். நம்ம கார்த்தி, ஹரிணிய நன்றாக படிக்க வச்சு, ஒரு பொறுப்புள்ள அப்பாவா இருங்களேன்… தயவுசெய்து மாறுங்க என்று கெஞ்சுவாள். எனக்கு இப்ப மனசு ஏங்குகிறது…. அருமை மனைவியையும் அன்பான குழந்தைகளையும் விட்டு விட்டுப் போகிறோமே என்று…இப்ப வருந்தி என்ன பிரயோஜனம்? எல்லாம் முடிந்துவிட்டது.

‘அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது’ என்று ஒளவையார் அன்றே சொன்னாள். அப்பேற்பட்ட அரிதான மானிடப்பிறவியை என்னுடைய கெட்ட பழக்கத்தினால் இழந்து விட்டேனே…! என் அருமை காயத்ரியை நான் இனி தொடக்கூட முடியாது….என் இரண்டு கண்மணிகளையும் இனிமேல் தழுவி கொஞ்ச முடியாது. நான் ஒரு மஹாபாவி.

ஐயோ இது என்ன..? வெள்ளையாக ஒரு புகைக் குவியல் வந்து என்னருகே நிற்கிறது. ஓ என்னைப் போன்ற ஒரு ஆவி. யாருடைய ஆவி? தெரியவில்லை.

என்னை உற்றுப் பார்த்துவிட்டு தன் நீண்ட பற்களைக் காட்டி இளித்தது. பின்பு வலது கையை நீட்டி ஹரிணியின் கழுத்தைப் பிடிக்கிறது. அதன் கை சாதாரண மனிதர்களைவிட பல மடங்கு நீளமாக இருக்கிறது. அந்தக் கை ஹரிணியின் கழுத்தைப் பிடித்து நெரிக்க, அவள் மூச்சுவிட முடியாமல் திணறுகிறாள்.

“ஐயோ அப்பா” என்று அலறுகிறாள். அவள் மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் ரத்தம் கொப்புளித்து வெளியேறுகிறது.

நான் உடனே அவளைக் காப்பாற்ற வேண்டும். என் சக்தி அனைத்தையும் திரட்டி “ஹ ஹ…ஹரிணீஈஈ…” என்று கத்த, அருகில் படுத்திருந்த என் மனைவி காயத்ரி “குட்டிப்பா, குட்டிப்பா…என்ன ஆச்சு?” என்று என்னை உலுக்கினாள்.

“சே…கனவு…ஆனால் ஒரு பயங்கரமான கனவு” குரலில் நடுக்கத்துடன் சொன்னேன். என் குரல் எனக்கு அன்னியமாகப் பட்டது.

தொப்பலாக வியர்த்திருந்தேன். காயத்ரி லைட்டைப் போட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தாள்.
சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவள் கொடுத்த தண்ணீரைக் குடித்தேன்.

கார்த்தியும், ஹரிணியும் வித்தியாசமான திசைகளில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஹரிணி வாயில் விரல் போட்டுக் கொண்டிருந்தாள்.

மணி பார்த்தால் காலை ஐந்து….

நல்ல வேளை நான் இறக்கவில்லை.

ஆனால் இது எனக்கு அடுத்த பிறவி. என் அருமை மனைவியும் செல்லக் குழந்தைகளும் எனக்கு மறுபடியும் கிடைத்து விட்டனர். நான் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவர்களுக்காக இனி வாழ வேண்டும். நான் உடனே மாற வேண்டும். உடனே.

வாக்கிங் போய் வரவேண்டும் என்று தோன்றியது. உடை மாற்றிக்கொண்டு கிளம்பினேன்.

போகும்போது என் ஷெல்பில் மறைத்து வைத்திருந்த ஒரு பாக்கெட் சிகரெட், ஒரு பாட்டில் அப்சல்யூட் வோட்கா, ஒரு பாட்டில் சிக்னச்சர் விஸ்கியை எடுத்து ஒரு பழைய துணிப்பையில் திணித்து என்னுடன் எடுத்துக் கொண்டேன்.

நீண்ட தூரம் எனக்கு நானே பேசிக்கொண்டு நடந்தேன். வழியில் என்னுடன் எடுத்துச் சென்ற துணிப்பையை கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தேன்.

வீடு வந்ததும் காயத்ரியிடம், “இன்னிக்கி நீ எதுவும் சமைக்க வேண்டாம்…குழந்தைகளுடன் வெளியே சென்று சாப்பிடலாம், நாலு இடங்களுக்குச் சென்று சுத்திவிட்டு வரலாம்” என்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *