கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 140 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நித்தியாவுக்குக் கல்யாணம். அறையில் அமர்ந்திருந்தாள். அவளருகே ஏழெட்டுப் பெண்கள். குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது, ஒரு சாளரம் இருந்தது, மலர் மணத்தது. சந்தனம் கமகமத்தது. மாப்பிள்ளை இராமச்சந்திரன் தையல்காரர். மருத்துவர் நித்யா அழகி இராமச்சந்திரன் கால் சற்று ஊனமானவன்.

நித்யாவைப் பார்த்தார் கோவிந்தசாமி. நகை மின்ன மகிழ்ச்சியுடன் காட்சி தந்தாள். சுற்றியிருந்த பெண்கள் அனுதாபத்துடன் நித்யாவைப் பார்த்தனர் இரகசியமாக. அவர்களது இரகசியப் பார்வையைப் புரிந்துகொண்ட நித்யா,

“எனக்குத் திருப்தியான மணமகன். எனக்கு முழுச் சம்மதம். நான்தான் அவரை மணக்க ஒற்றைக்காலில் நிற்கிறேன்” என்று அழுத்தமாகச் சொன்னாள். கோவிந்தசாமிக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. இன்னொருபுறம் கண்கள் பொங்கின. “அழாதீங்க மாமா!” நித்யாதான் சொன்னாள்.

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி பிள்ளைபெற வேதனையில் துடித்தபோது, அவரது இதயம் படபட என்று அடித்துக்கொண்டிருந்தது.

அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையான பிள்ளைப் பேறு ஆனால், அவர் அந்த ஆண் குழந்தையைப் பார்த்தபோது மூர்ச்சையானார். மருத்துவரின் பணிவிடைக்குப் பிறகு மயக்கம் தெளிந்தாலும் கண்களில் நீர் கசிந்தது.

“ஐயா, குழந்தை ஆண். கால் சிறிது ஊனம்தான். இருந்தாலும் கவலைப்படாதீர்கள். அவ்வளவு பாதிப்பு இருக்காது” என்று செவிலி தேற்றினாள்.

அவரது மனைவி ஆண்டாள், அழகான ஆண் குழந்தையை எதிர்பார்த்தாள். கால் ஊனம் தவிர, அந்தக் குழந்தையின் அழகில்

குன்றிமணிகூடக் குறைச்சல் இல்லை.

இடக்காலின் பாதம் மட்டும் சிறிது சிறுத்திருந்தது. மகிழ்ச்சி இல்லாமல் ஆண்டாள் கணவனைப் பார்த்தாள்.

பேறு முடிந்த ஏழாவது நாள் குழந்தையுடன் வீட்டுக்கு வந்தாள் ஆண்டாள். பார்க்க வந்தவர்களில் பலர் ஊனத்தைப் பெரிதுபடுத்தினர். சிலர் இரக்கப்பட்டனர். மகிழ்ச்சியில்லாமலிருந்தது அந்தக் குடும்பம்.

கோவிந்தசாமி பெரிய பணக்காரர் இல்லை. மூன்று ஏக்கர் தோட்ட நிலம்தான். இயந்திரக் குழாய் இணைக்கப்பட்ட கிணற்றில் நான்கில் ஒரு பங்குதான், ஓட்டு வீடு இருந்தது. கணவனும், மனைவியும், குழந்தையை வளர்க்க ஆசைப்படவில்லை. ஏதோ வேண்டா வெறுப்பாகக் குழந்தையைப் பார்த்தார்கள். தீவிரமாகக் குழந்தையின் மீது அக்கறை செலுத்தவில்லை.

அலட்சியமாக அதைப் பார்த்தார்கள். புட்டிப்பால் கூட அதற்குத் தேவைப்படவில்லை. தாய்ப்பாலே போதுமானதாக இருந்தது. எந்தத் தாய்க்கும் பாசத்தில் குறை இருக்காது. ஆனால், ஆண்டாளுக்கு மகன் மீது பாசம் முழுமையாக இல்லை. “ஊனமில்லாமல் பிறந்திருந்தால் எப்படி இருக்கும்” என்று எண்ணி ஏங்கினாள்.

கோவிந்தசாமிக்கு மனம் குழம்பியது. “ஊனக்குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ. இதைத் தொட்டியில் அமுக்கிக் கொன்றுவிட்டால் ? அரளி விதையை அரைத்து ஊட்டிவிட்டால்? சிறிது நாட்கள் வேதனையாக இருக்கும். காலமெல்லாம் வேதனைப்படுவதைவிட இது குற்றம் இல்லை” என்று கூட எண்ணினார்.

மனைவியிடம் சொன்னார். “என்னதான் அன்பு சிறிது பற்றாக்குறையாக இருந்தாலும் பத்து மாதம் சுமந்து பெற்ற உடம்பு குலுங்கியது’ கணவனது சொற்களைக் கேட்டதும், “நாம் இருக்கிறவரைக்கும் குழந்தையைப் பார்த்துப்போம். நம்ம கண்ணுக்குப் பிறகு எப்படியாவது ஆகட்டும்” என்று சொல்லித் தானும் ஒரு தாய் என்று நிரூபித்தாள்.

குழந்தையைக் கொல்லுகின்ற எண்ணம் கைவிடப்பட்டது.

குழந்தை தவழ்ந்தது. இராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை கால் ஊனம் கொண்டிருந்ததே தவிர, நிறம் சிவப்பு. மற்ற அங்கங்கள் அழகாக இருந்தன. இருந்தாலும் பெற்றோரின் மனத்தில் ஓர் எண்ணம் சுற்றிக்கொண்டே இருந்தது. “இந்தக் குழந்தை தேவைதானா?” என்று பெற்றோர் மனத்தில் அரித்துக்கொண்டே இருந்தது. ஆண்டாளுக்குக், குழந்தை ஊனம் இல்லாமல் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? என்ற ஏக்கம் மனத்தில் பொங்கிக்கொண்டே இருந்தது.

அடுத்து அடுத்துக் கோவிந்தசாமி ஆண்டாள் இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தார்கள், நரசிம்மன், கோதை என்று. “இதுக்கு மேல் வேண்டாம்” என்று பக்கத்துப் பெரிய ஊரில் இருந்த ஆரம்ப உடல் நல மையம் சென்று குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாள் ஆண்டாள். சில ஆண்டுகள் ஊரில் வறட்சி வந்தது. விவசாயம் குறைந்தது. ஊரில் மக்கள் வறுமையின் தாக்குதலை அனுபவித்தனர். இந்த நிலையில் இராமச்சந்திரன் எட்டாவது படித்துக்கொண்டிருந்த போது ஒரு திருப்பம் ஏற்பட்டது.

‘கண்காணாத இடத்தில் இராமச்சந்திரன் இருந்தால் மனத்திற்கு நிம்மதியாக இருக்கும்” என்று கருதினர் பெற்றோர். அதற்கும் ஒரு வாய்ப்பு வந்தது. பக்கத்து நகரத்தில் புகழ்பெற்ற தையல்காரர் ஒருவர் கோவிந்தசாமிக்கு அறிமுகம் ஆனவர். ஒரு நாள் மாலை அவர் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தார். சேமநலங்கள் விசாரிப்பு முடிந்தபின் இரவுச் சாப்பாடும் ஆனபின், கோவிந்தசாமி இணை, இராமச்சந்திரனைப் பற்றிக் கூறி வேதனைப்பட்டனர்.

தையல்காரர் சபாநாயகம், இந்த ஊனமுள்ள பையனை இவர்கள் இவ்வளவு கடுமையாக “ஒதுக்க வேண்டுமா” என்று எண்ணி வேதனைப்பட்டார். உலகிலேயே மாதா, பிதா, குருதான் அதிகக் கனிவு கொண்டவர்கள் என்று யாரோ ஒருவர் சொல்லக்கேட்டிருக்கிறார். அந்த வாக்கியம் அர்த்தம் உள்ளதுதான் என்று சபாநாயகம் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தார். இப்போது அந்தக் கூற்றுக்கு விதிவிலக்காகச் சில பெற்றோர்கள் இருக்கக்கூடும் என்று உணர்ந்தார்.

பதின்மூன்றரை வயது இராமச்சந்திரனுக்குத் தான் ஒதுக்கப்படுகின்றதை உணர்கின்ற மனநிலை இருந்தது. கால் அவ்வளவு மோசமான ஊனமாக இல்லை. விந்தி விந்தி நடக்கின்ற அளவில் இருந்தது, ஓடக்கூட அவனால் முடியும். பாதம் மட்டும் சூம்பிப்போயிருந்தது.

கைத்தறித்துணியில் சட்டையும். நீல நிறக் கால்சட்டையும் அணிந்திருந்த அவனைப் பார்த்தார் சபாநாயகம்.

“கோவிந்து,இராமச்சந்திரனைப்பற்றிக் கவலைப்படுகிறீர்கள்…அப்படித்தானே”.

பொய் சொல்லவில்லை கோவிந்தசாமி இணை.

“இராமச்சந்திரனை என்னுடன் அழைத்துப் போகிறேன். சாப்பாடு போட்டுப் பார்த்துக் கொள்கிறேன். இப்போது அவன் என் தையல் கடையில் பித்தான் தைக்கட்டும். ஓர் ஆளுக்குக் கடுமையா வேலை இருக்கும்..”

பெரிய சுமை இறக்கி வைக்கப்பட்ட உணர்வு. தலையாட்டினார்கள் சம்மதம் தெரிவித்து.

ஐம்பது வயதான சபாநாயகம் நகரில் முக்கிய சாலையில் ஒரு கிளைச் சந்தில் பத்துக்கு இருபது இடப்பரப்புள்ள, கல்நார் வேய்ந்த அறையில் தையல் கடை வைத்திருந்தார். மூன்று தையல் இயந்திரங்கள் சுறுசுறுப்பாக இயங்கின. சபாநாயகம் துணி வெட்டுவதில் திறமைசாலி. காலை ஒன்பது மணிக்குக் கடை திறந்தால் இரவு ஒன்பது மணிவரை செயல்படும். துண்டுத் துணிகள் சிதறியிருக்கின்றதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு மின்விசிறி அறையின் நடுவில் மேலே பொருத்தப்பட்டிருந்தது. கீழே பாய் விரிப்பு. சபாநாயகத்துக்குமுன் பெரிய மனைப்பலகை. வெயிலின்போது கல்நார்க் கூரையின் வெப்பம் தாக்காமலிருக்கக் கல்நார் தகடுகளுக்குக் கீழே மூங்கில் பாய்களாலான தட்டி பொருத்தப்பட்டிருந்தது. இரண்டு குழாய் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்த. சிறிய அறை ஆனால், பளிச்சென்று “சபாநாயகம் தையல் விற்பன்னர்” என்ற பெயர்ப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது.

இரண்டு சாளரங்கள் இருந்தன. அங்கு மூன்று, நான்கு அறைகளில் இருந்தோர்க்கும் சேர்த்துக் கழிப்பறை, குளியல் அறை இவை இருந்தன. அவற்றை உபயோகித்தவர்களே மிகவும் சுத்தமாகப் பராமரித்தனர். இராமச்சந்திரன் பித்தான் தைக்கின்ற ஊழியனாகச் சேர்ந்தான். சாப்பாடு சபாநாயகத்தின் வீட்டில். கடையிலேயே தங்கிக்கொள்ளலாம்

இதற்குமுன் பலர் பித்தான் தைக்கின்ற வேலைக்கு வந்தாலும் நீண்ட நாள் நீடித்து வேலை பார்க்கவில்லை. ஓர் ஆண்டு, கூடினால் இரண்டு ஆண்டுகள் என்றுதான் இருந்தனர். இந்த நிலையில் வயிறாரச் சாப்பாடு கிடைக்கின்ற வாய்ப்பு அமைந்ததால் இராமச்சந்திரன் வேலையைச் சுறுசுறுப்புடன் செய்தான். தன் ஊதியத்தில் சாப்பிடுகின்ற உணர்வு அவனுக்கு அதிகத் தென்பைத் தந்தது,மனம் சலிக்காமல் அவன் காஜா தைத்துக் கொண்டிருந்தான்.

சபாநாயகத்திடம் ஒரு சிறப்பு இருந்தது. தொழிலாளர்களின் உழைப்பை மதித்தார். குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைத்தாலும் அவர் நிறைவான சம்பளமே கொடுத்தார். அவரிடம் மூன்று தையல்காரர்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்குத் துணிக்கு இவ்வளவு என்று கூலி நிர்ணயம் செய்து கொடுத்தார். அதனால், அவர்கள் ஏமாற்றுகின்ற பண்பினைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தரத்தில் என்றும் கவனம் செலுத்தினார் சபாநாயகம். பதினோரு மணிக்கும், மூன்று மணிக்கும், ஏழு மணிக்கும் காபி, அல்லது, தேநீர் கொடுத்தார் சபாநாயகம் உணவுவிடுதியில் இருந்து இன்றி, வீட்டில் தயார் செய்துகொண்டுவந்து கொடுக்கப்பட்டது.

நகரத்தில் புகழ்பெற்ற தையலகங்களில் முதல் இடத்தை வகித்தது சபாநாயகத்தின் தையலகம். இராமச்சந்திரன் அவரது வீட்டு வேலைகளையும் செய்தான். வேலை சொன்னால் முகம் சுளிக்காமல் செய்தான். இது – சபாநாயகத்துக்கும், அவரது மனைவிக்கும் பிடித்துவிட்டது. அவரது மகன் மருத்துவர். மகள் நிதி நிலையத்தில் பணி செய்கிறாள்.

அவரது தையல் தொழிலை ஏற்று நடத்த, வாரிசு இல்லை. மகனை மருத்துவம் படிக்கச் செய்தார். மகளையும் எம்.காம். வரை படிக்கச் செய்தார். சொந்தமாக வீடு கட்டினார். அவரது தொழில் பற்று அவரைச் சாகவிடவில்லை.

அவ்வப்போது இராமச்சந்திரனின் பெற்றோர் அவனைப் பார்க்க வந்தனர். தாங்களும் ஒரு பெற்றோரே என்று அவர்களது கண்ணோர நீர் சான்று காட்டும். “இவனை மனிதாபிமானம் இல்லாமல் ஒதுக்கிவிட்டோமே”” என்ற ஊசி மனத்தில் குத்தும். பெற்றோர் அவனைப் பார்க்க வந்துவிட்டால் அவனுக்கு உற்சாகம் பொங்கும்.

சபாநாயகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு உணவு விடுதிக்குச் சென்று அல்வா, பரோட்டா, மிக்சர், தோசை, காபி என்று வாங்கி வந்து கொடுப்பான் சாப்பிட, ஊரில் விவசாயத்தில் உழல்கின்ற, கீழ்நிலையிருக்கின்ற அவர்களுக்கு இந்தப் பலகாரம் அமிர்தமாக இருக்கும். தன் தம்பிக்கும், தங்கைக்கும் பலகாரம் வாங்கிக்கொடுத்து அனுப்புவான். அதைக் கவனிக்கின்ற சபாநாயத்தின் மனம் நெகிழும். பெற்றோரின் மனம் கலங்கும்.

ஐந்தாண்டுகள் முடிந்தன, இராமச்சந்திரன் பித்தான் தைக்கின்ற வேலையில் சேர்ந்து. அந்த ஐந்தாண்டுகள் அவன் உழைக்கச் சலித்ததில்லை. ஒரு சமயம் பொதுக்கழிப்பறை, குளியலறை இரண்டும் மிக அசிங்கமாக இருந்தன. பலரும் உபயோகித்ததால், அவை சரியாகக் கவனிக்கப்படவில்லை. முன்பு அப்படி ஒரு நிலைக்கு அது வந்நதில்லை. அசிங்கமாக, அசுத்தமாக இருந்த கழிப்பறையைக் கழுவினான். குளியல் அறையைச் சுத்தம் செய்தான். அது அவனது கடமைகளில் ஒன்றானது. அந்தக் கட்டிடத்தின் சொந்தக்காரருக்கு அந்தச் செய்கை பிடித்துப்போனது. அதை ஒரு தவமாகச் செய்தான் இராமச்சந்திரன்.

அவன் சம்பளம் என்று கேட்டதில்லை. கட்டிடத்தின் சொந்தக்காரர், அவன் கழிப்பறை, குளியல் அறை எல்லாவற்றையும் சுத்தம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து கூர்ந்து கவனித்தார். சுத்தம் அங்கு என்றும் கோலோச்சியது. கட்டிடச் சொந்தக்காரர் அவனுக்கு ஆண்டுதோறும் இருநூறு ரூபாயும், இரண்டு இணை துணிகளும் வாங்கிக் கொடுத்தார்.

அவன் கடையில் சேர்ந்து ஐந்தாண்டுகள் ஆன சமயத்தில் கோவிந்தசாமி விவசாயம் பாதிக்கப்பட்டு வறுமையில் அகப்பட்டார். அதைக் கடக்கச் சிறிது பணம் தேவைப்பட்டது. “எப்படிச் சமாளிப்பது” என்று குழம்பினார்.

“சபாநாயத்திடம் கடன் கேட்டால் என்ன” என்று யோசனை தோன்றி, அவரைச் சந்தித்துச் சொன்னார். அவர் கோவிந்தசாமியைப் பார்த்துப் புன்னகை செய்தார், பித்தான் தைத்துக்கொண்டிருந்த இராமச்சந்திரனைப் பார்த்தார்.

“இராமச்சந்திரா… உனக்கு நான் மாதம் மாதம் சம்பளம் ஒதுக்கியிருக்கிறேன். நீ என் வீட்டில் சாப்பிட்டு வந்ததால் சலவைச் செலவுக்கும், இன்னும் சில அத்தியாவசிய மருத்துவச் செலவுக்கும் மட்டும் சிறிது பணம் வாங்கியிருக்கே. மிச்சப் பணம் என்கிட்டே இருக்கு. அதை உங்க அப்பாவுக்குக் கொடுக்கட்டுமா? என்று கேட்டார்.

“கொடுத்துடுங்க, ஐயா… அப்பாவும், அம்மாவும், தம்பியும், தங்கையும் துன்பப்படக் கூடாது…” என்றான். கண்கள் கசிந்தன கோவிந்தசாமிக்கு. ஆரம்பத்தில் சாப்பாடு போக நூறு ரூபாய் கணக்குப் போட்டார். பிறகு, நூற்றைம்பது, இருநூறு என்று உயர்த்தினார் சம்பளத்தை. ஐந்தாண்டுகளில் எட்டாயிரத்துக்கு மேல் அவன் பணம் சேர்ந்து இருந்தது. அதில் பாதிப் பணத்தைக் கோவிந்தசாமிக்குக் கொடுத்தார்.

கோவிந்தசாமியின் வறுமை நீங்கியது. இருந்தாலும் ஓர் ஆண்டு மழை பெய்தால், இரண்டு ஆண்டுகள் மழை காணாமல் போகின்ற நிலை தொடர்ந்தால் கோவிந்தசாமி தொழிலில் நலமாக இல்லை. நரசிம்மனையும், கோதையையும் அதிக அளவு படிக்கப் போடவில்லை. எட்டாம் வகுப்போடு சரி. பிறகு, காட்டு வேலைக்கும் பழக்கினார். அவர்கள் மாடு மேய்த்தார்கள். ஆடு மேய்த்தார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இராமச்சந்திரனுக்குத் துணி வெட்ட சொல்லிக்கொடுத்தார். மூன்று, நான்கு ஆண்டுகளில் அதில் அவன் தேர்ந்தான். திறமை கொடிகட்டிப் பறந்தது,சபாநாயத்தின் வேலையைக் குறைத்தான் அடுத்த சில நாட்களில்.

அடுத்த சில ஆண்டுகளில் சபாநாயகம் நோய்வாய்ப்பட்டார். தையல் கடையை இராமச்சந்திரனே கவனிக்கின்ற அளவுக்கு வளர்ந்துவிட்டான். ஒரு துணியின் ஆடை நேர்த்தி தையலைவிட அது வெட்டப்படுகின்ற விதத்தில்தான் இருக்கிறது என்பது பலர் அறிந்ததே. இன்னும் சொல்லப்போனால் சபாநாயகத்தின் வெட்டைவிட அவனது வெட்டுச் சிறப்பாக இருந்தது.

தையல்காரர்கள் சிலர் மாறினாலும், புதுத் தையல்காரர்கள் கூலிக்குத் தைக்க வந்தார்கள். அவர்களுக்குத் துணிகளை வெட்டி அளித்தது இராமச்சந்திரன் மட்டுமே. தொழில் இழப்பு இல்லாமல் இலாபமாகவே நடந்தது.

அவன் கடையில் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆனபோது அவனது சம்பளம் கணிசமாக உயர்ந்தது. சபாநாயகம் இனித் தையல் கடையை நிர்வகிக்கின்ற தென்பை இழந்தார். அவரது மகனும், மகளும் அப்பாவை முழு ஓய்விலிருக்கச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் இருவரும் ஆளுக்குச் சிறிது பணம் கொடுத்துச் சபாநாயகத்துக்குப் பணப்பிரச்சினை இல்லாமல் செய்தார்கள்.

இராமச்சந்திரன் திறமையாகக் கடையை நடத்தினான். அவன்தான் இப்போது கடையின் முதலாளி. அவன் வெட்டுதல் திறமை தொழிலைச் சுறுசுறுப்பாக இருக்க உதவியது. துணிகளை வெட்டுவதுடன், அவன் தைக்கவும் கற்றுக்கொண்டான். கடைக்கு என வாடகை கொடுத்தான். சபாநாயகத்துக்கும் மாதம், மாதம் முந்நூறு ரூபாய் கொடுத்தான்

முதியோர் ஊதியம் மாதிரி. “இதுகூட வேண்டாம்” என்றார் அவர். “குரு காணிக்கையாகக் கொடுக்கிறேன். இதை நான் உங்க பிள்ளைபோலச் செய்கிறேன்!’ என்றான். அவர் வீட்டில்தான் சாப்பிட்டான். அதற்குத் தனியாகத் தொகை கொடுத்து விட்டான். அவனது தொழில் ஓகோ என்று நடந்தது. எச்செலவும் போக மாதம் நாலாயிரம், ஐயாயிரம் என்று மிச்சம் இருந்தது.

கோவிந்தசாமி விவசாயத்தில் புரண்டு எழுந்து கொண்டிருந்தார், நரசிம்மனுக்குப் படிப்பு ஏறவில்லை. உடம்பு உறுதியாக இருந்தது, விவசாய வேலை செய்தான். இராமச்சந்திரன் இரண்டு ஆண்டுச் சேமிப்பைக் கோவிந்தசாமிக்குக் கொடுத்தான். அந்த ஓர் இலட்சம் ரூபாய்க்கு நான்கு ஏக்கர் தோட்ட நிலம் வாங்கினார். கிணற்றை ஆழப்படுத்தப் பணம் தந்தான். அவர் விவசாயத்தில் பட்ட கடனை அடைத்தான்.

“அப்பா, நீங்களும், தம்பியும் மழை செழிப்பாகப் பெய்கின்ற போது முழுவீச்சில் விவசாயம் செய்யுங்கள். மழை பெய்யாத போது துன்பப்படவேண்டாம்” என்றான். அதன்படி அவர்கள் விவசாயம் செய்தார்கள்.ஓரளவு பலன் கிடைத்தது. மேலும், இரண்டு ஆண்டுகளில் கோதைக்கு நகை செய்தான். ஓர் ஆண்டு ஊதியத்தில் கல்யாணம் செய்ய உதவினான். அவனது வருமானம் மாதம் ஏழு, எட்டு ஆயிரம் என்று உயர்ந்தது.

தன்னிடம் பணி புரிந்த தையல்காரர்களுக்கு நிறைவான சம்பளம் கொடுத்ததுடன் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் ஒவ்வொரு மாதச் சம்பளம் அளவு பணத்தை நன்கொடையாகக் கொடுத்தான். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஏழைக் குடும்பங்களிலும் படிப்பில் கெட்டிக்காரக்

குழந்தைகள் பிறப்பதுண்டு. அதற்கு நித்யா உதாரணம். அவள் படிப்பில் முதன்மை. அவளுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு அமைந்தபோது, அவளது அப்பாவால் படிக்கப் போடமுடியவில்லை.

விவசாயக் கூலியான அவரால் உணவும், தங்கும் விடுதிக்குக் கட்டணமும், மருத்துவக் கல்லூரிக் கட்டணமும் கட்ட முடியவில்லை. பலரிடமும் பண உதவி கேட்டுப் பார்த்தார், பணம் கொடுக்க முன்வந்தவர்கள் அவரைப் பெண் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார்கள். பொருளாதாரம் அந்தக் குடும்பத்தைக் கொடூரமாகத் தாக்கியது. அது இராமச்சந்திரனுக்குத் தெரிந்தது. அவன் அவர்களுக்குத் தூரத்து உறவும் கூட, அவள் முறைப் பெண்ணும் ஆனாள்.

“நித்யாவின் படிப்புச் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். அவள் படித்துச் சம்பாதித்த பிறகு வட்டியில்லாமல் திருப்பிக் கொடுக்கட்டும்” என்றான். படித்தாள் நித்யா. எம்.பி.பி.எஸ் படிப்பிலும் அதிக மதிப்பெண் எடுத்தாள்.எம்.டி. படிக்க ஆசைப்பட்டாள். பணம் கொடுத்தான் அவன் தையல்கடை வைத்திருந்த நகரிலேயே மருத்துவமனை ஆரம்பித்தாள். படித்த, பணக்கார மாப்பிள்ளைகள், அழகான தோற்றம் உள்ளவர்கள் பெண் கேட்டு வந்தபோது அவள் இராமச்சந்திரனையே மணக்க ஆசைப்பட்டாள்.

”நித்யா. நான் கால் ஊனமானவன். நீ படித்தவள். அழகாக இருக்கிறாய். சம்பாதிக்கிறாய். என்னைவிட உயர்ந்த நிலையில் உள்ள மாப்பிள்ளையை மணந்துகொள்” என்றான்.

“மாமா! உங்க மனம் நிரம்ப அழகு. உங்க தொழில் நேர்த்தியும், பெருந்தன்மையும் எனக்குப் பிடித்துவிட்டன. நான் உங்களை மணக்கவே உறுதியாக இருக்கிறேன்.”

கோவிந்தசாமியின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “மாமா, எனக்கு இராமச்சந்திரனை விடச் சிறந்த மாப்பிள்ளை இருக்க முடியாது. தன் வாழ்கையைத் தவம் போல் நடத்திப் பிறருக்கு உதவினார். அவருக்குக் கடமைப்பட்டவள்” நான். என்றாள் நித்யா.

– கோவிந்தவாசன், சென்னை.

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *