இசக்கியின் கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 5,551 
 
 

(இதற்கு முந்தைய ‘மச்சு வீடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

ரயில் பிற்பகல் ஒரு மணிக்கு மேல்தான் கொல்லம் போய்ச் சேர்ந்தது. ஆவுடையப்பனுக்கு சோலி கொல்லத்தில் மட்டும் இல்லை. திருச்சூர், கோட்டயம் வரைக்கும் போனார். செங்கனாச்சேரி போன்ற சின்னச் சின்ன ஊர்களுக்கும் போனார்.

இசக்கி மலையாளம் இருந்த அழகைப் பார்த்து பொங்கிவிட்டான். எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் உயரம் உயரமாய் வளர்ந்து காற்றில் ரொம்ப அழகாக ஆடிக்கொண்டிருந்தன. பாளையில் மருந்துக்குக்கூட தென்னைமரம் கிடையாது. இன்னொரு விஷயம் தண்ணீர்…! குதித்து நீச்சல் அடிக்கணும் போல இருந்தது இசக்கிக்கு.

போகிற கடைகளில் எல்லாம் ஆவுடையப்பன் மலையாளத்தில் சமமாகப் பேசி இசக்கியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போதெல்லாம் நட்புடன் இசக்கியின் தோள்மேல் கை போட்டுக்கொண்டார்.

ஆச்சு, வந்த சோலி பூராவும் முடிஞ்சுது. ராத்திரி ஒரு பாசஞ்சர் கொல்லத்தில் கிளம்பியது. குற்றாலத்துக்கு டிக்கெட் எடுத்தார். இருவரும் அருவியில் கண்கள் சிவக்க சிவக்க ஏகாந்தமாக குளித்தனர்.

மலையாளத்துக்கு வியாபார சோலியா போகிற பாளையங்கோட்டை புள்ளிகள், தாங்கள் போன சோலி எல்லாம் முடிஞ்சதும் திரும்பி வரும்போது தென்காசியில் இறங்கி குற்றால அருவியில் குளித்துவிட்டு ஊர் திரும்புவது வழக்கம். அதெல்லாம் கூட்டமே இல்லாத காலம். மனுஷன் தலையிடாத அழகுடன் ரொம்பத் தனியாக குற்றாலம் கிடந்த காலம். அருவிக்கு ஒருவித வாசனை இருந்ததை இசக்கியால் உணர முடிந்தது.

அருவியில் குளித்தவுடன் பயங்கரப் பசி. இசக்கிக்கு சைவச் சாப்பாடு போதுமானதாக இல்லை. சுடச்சுட கோழிக்கறி ஊத்திச் சாப்பிட்டா எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான். ஆவுடையப்பன் சுத்த சைவப் பிள்ளை. சாப்பிட்டு முடிந்ததும், “ம்.. கெளம்பு, தென்காசி போய் ரயிலைப் பிடிக்கலாம்” என்றார்.

இசக்கிக்கு குற்றாலத்தை விட்டுக் கிளம்பப் பிரியமே இல்லை. “அதேன் இனிமே வாராவாரம் இந்தப் பக்கம்தானே வரப்போற, வாரப்பல்லாம் குளி.”

அம்மாவிற்கு மூன்று மங்குஸ்தான் பழங்களை இசக்கி வாங்கிக்கொண்டான். இருவரும் ரயிலைப் பிடித்து ராத்திரியில் பாளை போய்ச் சேர்ந்தார்கள்.

அன்னிக்கி ராத்திரி விடிய விடிய உறக்கம் வரவில்லை அம்மாவுக்கும் மகனுக்கும். தான் பார்த்துவிட்டு வந்த மலையாளத்தையும், குற்றாலத்தையும் பற்றி இசக்கி வாய் வலிக்காமல் சொல்லி மாய்ந்து கொண்டிருந்தான். பூரணியோ வியாபார சோலியா தன ஒரேமகன் மூணு நாள் மலையாள நாட்டுக்குப் போயிட்டு வந்திருக்கிறான் என்ற பூரிப்பில் மிதந்து கொண்டிருந்தாள். தினமும் அம்மாவுக்கும் மகனுக்கும் இந்தப் பேச்சேதான் என்றால் அது நியாயம்…

ஆனால் இவர்களுக்குச் சமமாக பாளை சனங்களும் இதையே வேலை வெட்டி இல்லாம பேசிக் கொண்டிருந்தால் அது நியாயமா கொஞ்சமாவது? ஆனா பாளை சனங்களைச் சொல்லியும் பிரயோஜனமில்லை. இதெல்லாம் இன்னிக்கி நேத்து வந்த பழக்கமா அவர்களுக்கு? பரம்பரை பரம்பரையா அவுகளோட ரத்தத்தில் ஊறின விசயம்ல இது? சின்ன ஓலை வேட்டுப் போட்டாலே அதையே பேசறவுக அவுக…!

மறுவாரம் இசக்கி மலையாளத்துக்கு கிளம்புவதற்கு முந்தி பூரணி ஞாபகமா மகனுக்கு திருஷ்டி சுத்திப் போட்டுத்தான் அனுப்பினா. நாலே மாதம்தான், இசக்கி தனியாகவே போய்வர ஆரம்பித்துவிட்டான். பள்ளிக் கூடத்துப் படிப்புதான் அவனுக்கு அரிச்சுவடிகூட புரிபடலை. ஆனா வியாபாரம் நன்றாகப் பிடிபட்டு விட்டது. சரக்கு வாங்கிப் போடுகிற தொழிலில் நல்லா தேறிட்டான். அதே சமயம் நாணயமாகவும் நடந்துகொண்டான். வசூலாகிற பணத்தில் தம்படித் துட்டுக்கூட தனக்காக வைத்துக்கொள்ளாமல் அப்படியே கொண்டுபோய் மொத்த வியாபாரிகளிடம் ஒப்படைத்து விடுவான். ஆகையால் அவனை நம்பி எத்தனை ஆயிரம் சரக்கையும் தூக்கிவிட பாளை வியாபாரிகள் தயாராக இருந்தார்கள். இதனால் இசக்கிக்கும் ‘டேர்ன்ஓவர்’ கூடி கமிஷன் நிறைய கிடைத்தது, கையிலும் துட்டு ஏராளமாக புரண்டது.

பாளை சனம் பேசவேண்டும் என்பதற்காகவே இசக்கி வீட்டுக் காரையில் இன்னொரு மச்சி கட்டினான். வீம்புதான்… ஆனால் அவனும் மனுசன்தானே!

‘இசக்கி அண்ணாச்சிக்கு இருக்கிற துட்டுல குத்தாலத்ல பங்களாவே கட்டிப்புடலாம்’ என்று ஒரு தெருவில் இருந்த நீண்ட சுவரில் பெரிதாய் எழுதிப் போடப் பட்டிருந்ததை கூட்டம் கூட்டமாய் நின்று சனங்கள் வாசித்துப் பார்த்தபடி நின்றார்கள்.

“குத்தாலத்ல என்ன,,, கொடைக்கானல்லேயே இசக்கி அண்ணாச்சி பங்களா கட்டலாம். என்னமோ எழுத வந்துட்டான் பெரிய இவன் மாதிரி…”

பூரணிகூட ஆசைப்பட்டு வேறு சோலியா அந்தப்பக்கம் போனதுபோல போய் மகனைப்பற்றி எழுதியதைப் பார்த்தாள். தன் மகனைப் பற்றி ஊரெல்லாம் இப்படி எழுதிப போடுகிறார்களே என்பதில் அவளுக்குப் பரம திருப்தி. ஆனால் இந்த விசயத்தில் பூரணிக்குக்கூடத் தெரியாத பயங்கர ரகசியம்… யாருக்கும் தெரியாமல் அதை எழுதியது இசக்கி என்பதுதான்…!

பாளையைப் பொறுத்த வரையில் இந்தச் சம்பவம் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எதோ கொஞ்சம் துட்டு சம்பாரித்திருக்கிறான் என்று சிறிது அலட்சியமாய் இருந்த சில பெரும் பணக்காரர்கள், இப்படி எழுதிப் போட்டிருந்ததைப் பார்த்து அரண்டு விட்டார்கள்.

இந்தச் சமயத்தில் பாளையங்கோட்டை முனிசிபாலிட்டிக்கு எலக்ஷன் வந்தது. கேக்கணுமா? ஊர் ரெண்டு பட்டது. அந்த ஊரில் முக்கால் வாசிப் பயல்கள் வெள்ளைக்காரனுக்குக் கொடி பிடிக்கிற துரோகிகள். அந்தத் துரோகிகள் கும்பலில் சேர்ந்துகொள்ள அழைப்பு விடுத்து இசக்கியின் வீட்டிற்கு ஆள் மேல் ஆள் வந்தார்கள். அனால் இசக்கி ஒரேயடியாக மறுத்துவிட்டான். எலக்ஷன் அன்னிக்குப் போய் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு வந்தான். எலக்ஷனில் நின்றால் துட்டுக்குப் பிடிச்ச கேடு என்பதை இசக்கி தெரிந்து வைத்திருந்தான். “சரியான கஞ்சப் பிரபு இசக்கி அண்ணாச்சி…” வாய்க்குள் பலர் முணங்கினார்கள். “இப்படி இருந்தாத்தான் இன்னொரு மச்சி கட்டலாம்” என்றுகூட கிசுகிசுத்தார்கள்.

இசக்கியின் ஒரே கவனம், நல்லா நாணயமா தொழில் செய்வது; சம்பாரித்து வைக்கும் பணத்தை பத்திரமாய் பாதுகாப்பது. அதனால் பணம் எக்கச்சக்கமாக இசக்கியிடம் குவிந்தது. ஆச்சு.. அடுத்ததாக இசக்கிக்கு ஜோரா ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணத்தைப் பண்ணனுமே…!

பூரணி, ஆவுடையப்பன் அண்ணாச்சியை அந்த விஷயமாய்ப் போய் பார்த்து பேசிட்டு வரலாம்னு நினைத்தாள். அப்போது அண்ணாச்சியே அதே விசயமாய் அவளைத் தேடி வந்துவிட்டார்.

“சொந்தத்ல நா பொண்ணு எடுக்கறதா இல்லை அண்ணாச்சி.”

“அப்ப இங்கேயே பார்ப்போமே நல்ல பொண்ணா.”

“இந்த ஊரு பொண்ணே வேண்டாங்க அண்ணாச்சி… பாளையங்கோட்டைகாரங்க வீட்ல நா சம்பந்தம் பண்ணிக்க பிரியப்படலை.”

“சரி, அசலூர் பொண்ணாவே பாப்பம். நம்ம இசக்கிக்கு பொண்ணா குடுக்க ஆளில்லை?”

“நீங்கதேன் அண்ணாச்சி அவனுடைய கல்யாணத்தை நல்லபடியா முடிச்சித் தரணும். பள்ளிக்கூடத்ல என்னமோ படு மக்கா கெடந்ததுக்கு, இப்போ நல்லா வெவரமா வியாபாரம் பண்றான்…”

“எங்கேயும் இது நடக்கறதுதேன் பாப்பா. பள்ளியூடத்ல எல்லாத்திலும் நூத்துக்கு நூறு வாங்குவான். ஆனா வெளில வந்து வியாவாரம் செஞ்சா கூமுட்டையா இருப்பான். பள்ளியில ஒழுங்காப் படிக்காதவன் வியாவாரத்ல கில்லாடியா இருப்பான்… அதெல்லாம் இந்தக் காலத்ல எதுவும் சொல்லமுடியாது… நீ போய் மலையாளத்தான்கள்கிட்ட கேளு, வியாவாரத்துல இசக்கி அண்ணாச்சி மாதிரி நாணயமான ஆள் இந்தப் பக்கமே கிடையாதுன்னு அடிச்சிச் சொல்லுவானுங்க..”

“எல்லாம் நீங்க செஞ்ச உதவிதேன் அண்ணாச்சி.”

“சரி ஒனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணும்?”

“பணம் காசு வேண்டாம். நல்ல குடும்பத்துல பெறந்த பொண்ணா இருந்தாப் போதும் அண்ணாச்சி.”

“அப்ப நகை?”

“பொண்ணைப் பெத்தவங்க அவுக பொண்ணுக்குப் பிரியப்பட்டு என்ன செய்யறாகளோ அதைச் செஞ்சா போதும். நகையா பெரிசு அண்ணாச்சி?”

“சில மூதேவிங்களுக்கு அதான் பாப்பா பெரிசா இருக்கு. இன்னிக்கு பவுன் இருபது ரூபாய்க்கு விக்குது. அப்ப எத்தனை பவுன் நகை போடணுங்கறதை நீயே கணக்கு போட்டுப் பாத்துக்க… சரி, பொண்ணுக்கு நீ என்ன செய்வே? கேக்கிறவங்களுக்குச் சொல்லணுமே…”

“ஒம்பது பவுன்ல தாலிக்கொடி, மூணு ஜோடி வளையல் போடறேன். அதுக்கு மேல பெரிய்ய பட்டுச் சேலை…கல்யாணச் செலவுவேற இருக்கு. இருக்கிறது ஒரு மவன். மாரியாத்தாவும் ஏதோ நாலு துட்டு கொடுத்திருக்கா… பேர் சொல்லிக்கிற மாதிரி நாமளும் செய்ய வேண்டியதுதானே அண்ணாச்சி…”

“ஒனக்கு எப்படியெல்லாம் செய்யணும்னு பிரியம் இருக்கோ அப்படியெல்லாம் செய் பாப்பா..”

“நீங்க இசக்கியையும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க, எந்தமாதிரி பொண்ணு அவனுக்கு வேணும்னு.”

“நான் கேட்டுக்கறேன் அதையெல்லாம்… அப்ப நான் வரட்டுமா பாப்பா.?

“சித்திரை வைகாசில எப்படியும் முடிச்சிப்புடணும் அண்ணாச்சி.”

“பதினஞ்சே நாள்ல பூ வச்சி நிச்ச்சயதர்த்தம் பண்ற மாதிரி கொண்டாந்து காட்றேன் பாரு…”

ஆவுடையப்பன் சொன்னதைச் செஞ்சு காட்டிட்டார். ஆனா அது பெரிய விசயமில்லை. இசக்கியோட சமாச்சாரம் எதுவா இருந்தாலும், பாளை மனுசங்களுக்குப் பேசறதுக்கு அதில் ஏதாவது பெரிய விசயம் இருந்துவிடும். இசக்கியோட இந்தக் கல்யாண விசயத்தில் என்னப் பெரிய விசயம்னு கேட்டா – அவனுக்குப் பொண்ணு கொடுக்கப்போற மாமியார்காரிக்கு அப்ப வயித்ல நாலு மாச கர்ப்பமாம்.!

ஒரு பொம்பளை நாலு மாச கர்ப்பமா இருக்கிறது பெரிய விசயமில்லை. ஆனா, இது ஏன் பெரிய விசயம்னா, அந்த அம்மாளுக்கு ஏற்கனவே எட்டுப் பிள்ளைங்க.! அஞ்சு ஆம்பளை, மூணு பொம்பளை – ஒன்பதாவது என்ன பிள்ளை பிறக்கப் போவுதோ…!

“கடைசியில பாத்தியா பாப்பா, நம்ம இசக்கிக்கு பொண்ணு எங்க பெறந்திருக்கான்னு. அவனுக்கு ரொம்பப் பிடிச்ச குத்தாலத்துக்குப் பக்கத்து ஊரான இலஞ்சில ரொம்ப நல்ல பொண்ணு.. ரொம்ப நல்லக் குடும்பம்.”

“மொதல்ல அவுகளை வந்து நம்ம இசக்கியை பாத்துட்டுப் போகச்சொல்லுங்க அண்ணாச்சி.”

“அதெல்லாம் பொண்ணுக்கு அய்யாவும், அண்ணன்காரனும் வந்து நாலு நாளைக்கி முந்தி நம்ம இசக்கியை கடைக்கு வந்தே பாத்திட்டுப் போயிட்டாக.”

“இல்லையே அண்ணாச்சி, கடைக்கு வந்து யாரும் என்னைப் பாக்கலியே..” இசக்கி அவசரமாகச் சொன்னான்.

“ஒன்னை மாப்ளை பாக்க வந்திருக்கோம்னு சொல்லிக்கிட்டா வருவாக.? கடைக்கு சாமான் வாங்குற மாதிரி வந்திருப்பாக…”

இசக்கிக்கு ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் இருந்தது. அவனுக்கே தெரியாமல் அவனை மாப்பிள்ளை பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள்…

“மொதல்ல போய் பொண்ணைப் பாத்திட்டு வருவோம். பொண்ணைப் பிடிச்சா மத்ததைப் பேசுவோம்.”

“பொண்ணை ஒனக்குக் கண்டிப்பா பிடிக்கும்,”

ஆவுடையப்பன் சொன்னது மாதிரி பூரணிக்கும் இசக்கிக்கும் பொண்ணைப் பார்த்த நிமிசமே பிடித்துப் போய்விட்டது. பெறகென்ன?

சித்திரை மாசம் இருபதாம் தேதி குற்றாலத்தில் கல்யாணத்தை வைத்துக் கொள்வதாய்ப் பேசி வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டார்கள். பாளை காரர்களுக்குப் பொறாமை பிடித்து ஆட்டியது. அஞ்சாம் க்ளாஸ் படித்த பயலுக்கு ஏழாம் க்ளாஸ் படித்த பெண்..! அதுவும் நாப்பத்தியொரு பவுன் நகை போட்டு…

பூரணி மருமகளுக்கான தாலிக் கொடியையும் வளையல்களையும், மதுரைக்குப் போய் பெரிய ஆசாரியாகப் பார்த்து செய்து வாங்கிவந்தாள். பெரிய பட்டுக்கு காஞ்சிவரமே கிளம்பிப் போய்விட்டாள். இசக்கியும் சந்தனக் கலரில் அவனுக்கு ஒரு நல்ல சில்க் சட்டை தைத்து பட்டு வேட்டி வாங்கிக் கொண்டான். செலவோடு செலவாக புது ஹெஎம்டி கைக் கடிகாரம் ஒன்றும் வாங்கிக்கொண்டான். ரெண்டு மூணு சென்ட் பாட்டில் வேறு வாங்கினான்.

சித்திரை இருபதும் வந்தது. பாளை சனமும் வீட்டுக்கு ஒரு ஆள் என்ற கணக்கில் இசக்கியின் கல்யாணத்திற்கு குற்றாலம் கிளம்பிவிட்டார்கள். ரொம்பப் பெரிய இடத்துக் கல்யாணம். போகாட்டி நல்லா இருக்காதே..! இருக்கவே இருக்கிறது டீட்டியார் டிக்கெட். டீட்டியாரும் இசக்கியின் கல்யாணத்திற்காக தென்காசியிலேயே இறங்கிவிட்டார். ரோஸ் நிறத்தில் கல்யாண வாழ்த்துமடல் அச்சடித்து சட்டம் போட்டு அவருடைய பரிசாகக் இசக்கிக்குக் கொடுத்தார்.

எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இசக்கியோட கல்யாணம் குற்றாலத்தில் நல்லபடியாக நடந்து முடிந்தது. கல்யாணத்துக்கு வந்திருந்த பாளை சனங்களின் கண் பூராவும் புதுப்பெண் போட்டிருந்த நகைகளின் மேலேயே இருந்தது. “யப்பா எவ்வளவு நகை போட்டிருக்காக… அம்பது பவுனுக்குக் கொறையாம இருக்கும் போலிருக்கே..!”

அலுக்கு; குருத்தட்டு; வெத்தலைச் சுருட்டு; நெத்திச்சுட்டி; படைதாங்கி; பீலி; பில்லணை… இப்படி ஒரேயடியாக அடுக்கியிருந்தார்கள். இசக்கியின் கல்யாணத்தைப் பத்தி பேச பாளை சனங்களின் ஜென்மத்துக்கு இந்த நகைகளின் விசயம் ஒண்ணு போதும்.

ஆச்சு.. கல்யாணம் முடிந்த கையோட தம்பதிகள் இலஞ்சிக்குப் போயாச்சி. அடுத்து வீட்டு மாப்பிள்ளைக்கு மாப்பிள்ளைச் சோறு..! அவுக அவுக பிரியப்படியோ வசதிப்படியோ மூணு மாசமோ அஞ்சு மாசமோ மாப்பிள்ளைச் சோறு ஆக்குவார்கள். அதைச் சாப்பிட்டு மாப்பிள்ளைகாரன்கள் தங்களுடைய வீட்டுக்கு போய்ச் சேரும்போது நெறைய பேருக்கு அவன்களை அடையாளம்கூடத் தெரியாமல் போய்விடும்… அப்படி தடித்துப் போய்விடுவான்கள். அவன்களால் கல்யாணத்துக்கு முந்தி தைத்த சட்டை ஒண்ணையும் போடமுடியாது. அப்பிடி போட்டுகிட்டு நின்றால் தலைகாணிக்கு உறை தைத்துப் போட்ட மாதிரி இருக்கும்னா பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.. எப்படிச் சாப்பிட்டுருப்பான்களென்று…!

சாப்பிடுகிற நேரத்தில் மாமனாரே விசிறியை கையில் வைத்துக்கொண்டு பக்கத்தில் நின்றபடி விசிறி விடுவார். ஆனால் சும்மா இருக்க மாட்டார்.

மகளைப் பார்த்து, “நீ போடும்மா” என்பார். இதையே பல தடவைகள் திருப்பி திருப்பிச் சொல்வார். எந்த மாப்பிள்ளைக்காரன் தடிக்காமே இருப்பான்? அதுவும் நல்ல பணக்காரவீட்டு மாப்பிள்ளையாகி விட்டால் கேட்கவே வேண்டாம். கேட்கணுமா இசக்கிக்கு கிடைத்த சாப்பாடைப் பத்தி…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *