திருப்பம்…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 7, 2022
பார்வையிட்டோர்: 12,881 
 
 

தெருவில் வீடுகள் வரிசையாக இருந்த மய்ய பகுதியில் சின்னதாக ஒரு காலனி, இதை ராவ் காலனி என்பர், இங்கு கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும், நடுவில் சந்தும் எதிர்புறமாக கீழ்தளம், மேல்தளமாக 10 வீடுகளும் இருக்கும்.

இந்த காலனியின் ஒருபக்க மேல் தளத்தில் ஒரு குடும்பம் நம் கதையின் நாயகன் பிரபுடையது.. அம்மா, அப்பா, தங்கை இவன்.–என நாண்கு பேர்.

இங்கிருந்து…

டேய் பிரபு…. இன்னிக்கு கடைசி பரிட்சைன்னு சொன்ன, காலேஜ் கிளம்ப வேண்டாமா? எவ்வளவு நேரம் தூங்கிட்டிருக்க? எழுந்திருடா சீக்கிரம் என அவன் அம்மா சமையல் அறையிலிருந்து அழைக்க.

பாவம் மா அண்ணே… நைட் ரொம்ப நேரம் கண் முழிச்சு படிச்சிட்ருந்தான். அதான் தூங்கிறான் – என்றாள் தங்கை வினோதினி.

அது சரி… பரிட்சை நீ போய் எழுத போறீயா, இல்ல நான் போய் எழுத போறேனா? என அம்மா கேட்டதும்,

“ப் போமா” – என்றபடி இவ்வருடம் 10 வது தேர்வு எழுத போகும் இவளும் புத்தகத்தை எடுத்து படிக்க ஒரு நாற்களியின் மீது அமர்ந்துக்கொண்டாள்.

டேய் பிரபு…

டேய் பிரபு… அம்மா கத்த

த்தோ… எழுந்திட்டேன்மா என படுக்கையிலிருந்து எழுந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு லுங்கியை சரிசெய்தபடி மாடியிலிருந்து தன் அறை ஜன்னல் வழியே ஏதேச்சையாக பார்த்தான். அங்கே அழகான இளம் பெண்ணொருத்தி கையில் சில புத்தகங்களோடு சந்திலிருந்து வெளியே நடந்து செல்வதை கவனித்தான்.

யார் இவள்…. புதுசா இருக்காளே? யார் வீட்டுக்கு வந்திட்டு போறா? – என யோசனையுடன் கடமையை முடித்துக் குளித்து விட்டு ரெடியாகி வந்தான்.

வந்துட்டியா…? டிபன் வைக்கவா – என அம்மா கேட்க

… ம்…

என்ன டிபன்?

இட்லி…. டா – இது அம்மா

இட்லியா..?

“உனக்கு பிடிச்ச புளி சட்னி பண்ணிருக்கேண்டா” -என கெஞ்சினாள்.

பையன் பசியோடு போககூடாது என்பதில் கவலை அவளுக்கு…

ஐயோ…. ஆள விடுங்க

பரிட்சை எழுத போற, பசியோடு எப்படி எழுதுவ,? இரண்டே இரண்டு இட்லியை சாப்பிட்டு கிளம்புடா என்றாள்.

முனைப்போடு, இவனும் பிடிவாதமாக மறுத்து, அம்மா… பரிட்சை 10:30 மணிக்கு தான்., நான் போய் காலேஜ் பக்கதுல இருக்குற மெஸ் ல சாப்பிட்டுக்கிறேன். அங்கே பொங்கல், வடை சூப்பரா இருக்கும். – என சொல்ல

பார்த்து அண்ணா…. பொங்கல் சாப்பிட்டு பரிட்சை எழுதாம தூங்கிடபோற. கிண்டலடித்தாள் தங்கை வினோதினி.

நாங்க எழுதுவோம்…. நீங்க ஒழுங்கா படிச்சி நல்ல மார்க் வாங்குற வழிய பாரு என செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு நகர்ந்தான்

”ஹ்ம்“- இந்த பிடிவாத குணம் என்னிக்கு தான் மாற போகுதோ, என முனுமுனுத்தபடி. நீயாவது சாப்பிட வாயேண்டி, மகளையும், ஏங்க! நீங்களும்… சாப்பிட வாங்க., – என கணவனை அழைத்தபடி சமையல் அறைக்கு நகர்ந்தாள்.

பிரபு தன் தோள்பேக்கை மாட்டிக்கிட்டு” என்ன இன்னும் இந்த குமார் பையன காணோமே “-என முனு முனுத்தபடி அறையை விட்டு ஹால் வழியே வெளியேற முற்பட, ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா திடீரென

ஏண்டா…. சாப்பிடல ?

உன் பிரெண்டு இன்னும் வரல இல்லை? அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு. என கேட்கும்போதே.

இவரு பேப்பர் தானே படிச்சிண்டிருந்தார். நான் சாப்பிடலைங்கிறது எப்படி தெரிஞ்சுது. பேப்பர் படிக்காம நடக்கிறதையெல்லாம் கவனிச்சிட்டு தான் இருந்தாரா?

பசிக்கல… பா

காசு கொடுத்து வெளியே போய் சாப்பிடனும், உனக்கெல்லாம் பணத்தோட அருமை தெரியரதில்ல, அதான் தெரு பொறுக்கிட்டு இருக்குற. என அப்பா திட்டுவதை காதில் வாங்காமல் வெளியே வந்து நின்றதும், குமாரும் வந்து சேர்ந்தான்.

என்னடா மாமூ?… ஆச்சர்யமா இருக்கு நான் வரதுக்குள்ள நீ ரெடியாகி வந்து நிக்கிற. எப்போதும் நான் வந்ததுக்குப்புறமா நீ கிளம்புவ. பரிட்சை எழுதி சீக்கிரம் வரணுமா? என்று விசாரித்த படி உட்காருடா போகலாம் என பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். (பிரபு மிடில் கிளாஸ் பையன் பைக் இல்லாதவன், படித்துமுடித்துவிட்டு வேலைக்கு போய் சம்பாதித்து வாங்க வேண்டும் என்பது கட்டளை. குமார் கொஞ்சம் அப்பர் கிளாஸ் வீட்டில்… காலேஜ் சென்று வர பைக் வாங்கி தந்துள்ளனர்)

அதெல்லாம் ஒன்னுமில்லை மச்சி….

காலைல எங்க காலனியிலிருந்து ஒரு பொண்ணு வெளியே போச்சு மச்சி. யாருன்னு தெரியல, சூப்பரா இருந்தது, யாரு வீட்டுக்காவது வந்திட்டு போறாளா, இல்லை… நான் உன்கிட்ட சொல்லியிருந்தேனே ஒரு வீடு காலியாக இருக்குன்னு. அந்த வீட்டுக்கு புதுசா குடித்தனம் வந்திருக்காளான்னு தெரியல., .வெளியே போய் கொஞ்சம் நேரம் தான் ஆகுது, கண்ணுல வேற எங்காவது அவ… மாட்றாளான்னு! பார்க்க தான் . என்றான் பிரபு.

டேய் மாமூ….. இது ரொம்ப முக்கியமாடா ?- குமார் கேட்டான்

என்னடா மச்சி சாமியார் மாதிரி கேள்வி கேட்குற, நீ என்னமோ யாரையும் பார்க்காத மாதிரி. என் அவஸ்தை எனக்கு…. என்றவனிடம்

சரி… சரி…. இப்போ நாம எங்கே போறது? காலேஜூக்கா, இல்ல அந்த பொண்ண கண்டுபிடிக்கிறதுக்கா? – என்று கிண்டல் அடித்தவனிடம்

நாம போற வழியில அந்த பொண்ணு கண்ணுல மாட்டுதான்னு பார்ப்போம், உனக்கு அவளை காட்டறேன் அப்புறம்….

நாம நேரா மெஸ்ஸூக்கு போயி, டிபன் சாப்பிடலாம். என்றான் பிரபு.

ஏண்டா… வீட்ல சாப்பிடலையா ?

மச்சி….. வீட்ல இட்லின்னாங்க, இட்லின்னாலே எனக்கு அலர்ஜியா இருக்குது, அதான் வேண்டாம்னுட்டேன்.

அட போடா… எனக்கு இட்லின்னா ரொம்ப இஷ்டம் சூடாக இட்லி, மிளகாய்பொடியோ, தேங்காய்சட்னியோ வெச்சா countless எவ்வளவு உள்ள தள்ரோம்னே தெரியாது.. இருந்தாலும் எனக்கு இப்போ எதுவும் வேண்டாம்.. நான் சாப்பிட்டு தான் வந்தேன் . நீ சாப்பிடு என பேசிய படியே செல்கையில்

வழியில்…

காமராஜர் சாலை சந்திப்பு பஸ் நிறுத்தம் முழுக்க கல்லூரி பெண்கள் அரட்டை கச்சேரியுடன், சிரிப்பும், கும்மாளமாகவும், பஸ்ஸூக்காக காத்திருக்க, நம்ம நாயகன் பிரபு “மச்சி… வண்டியை அந்த டீக்கடையில் நிறுத்துடா. அந்த பொண்ணு எதிர்த்தாப்ல பஸ் ஸ்டாண்டில் இருக்குதான்னு பார்ப்போம் என்றான்.

வண்டிய நிறுத்திய குமார். “மாமூ…. என்னடா? … டைம் ஆகுது , பரிட்சை வேற இருக்கு, நீயும் சாப்பிடனும்ங்கிற லேட்டாயிட போகுது என்றான்

டேய் நல்லவன் மாதிரி பேசுறியேடா? என பஸ் நிறுத்ததை உற்று நோக்கியதில் இவன் எதிர்பார்த்த அதே பெண். இருப்பதை கண்டவுடன் முகமும், மனமும் ஆயிரம் வாட்ஸ் LED பல்பு போல் பிரகாசமாகியது.

“டேய் மச்சி! அங்கே பாருடா, அந்த பெண் தான் – என அவளை காட்ட

குமார் கண்டும், காணாதது போல், யாருடா, யார்? என விசாரித்திருக்கும் போதே, பஸ் வந்து நின்றது.

தூரத்தில் பைக்கோடு நின்றிருந்த இவர்களை அவளும் ஏதேச்சையாக பார்த்தாள்.. அவளது தோழியிடம் ஏதோ கிசுகிசுத்து புன்னகைக்க, இவனுக்கு தன்னை பார்த்து தான் சிரிக்கிறாள் என்ற மிதப்பில் “கண்ணுக்குள் நூறு நிலவா, இது என்ன கனவா? – என்னும் பாடல் மன background ல் ஒலித்ததுக்கொண்டிருந்த வேளையில், புன்னகைத்தபடியே இரு தோழிகளும் பஸ்ஸில் ஏற., . நிரம்பி வழிந்த கூட்டத்தில் குமாரிடம் மறுபடியும் அவளை அடையாளம் காட்டமுடியாமல் போனது பிரபுவுக்கு.

பஸ்ஸூம் புறப்பட்டு விட்டது.

வேறு வழியின்றி…. இவர்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்.

நேராக மெஸ்ஸில் வண்டியை நிறுத்திய குமாரிடம். மச்சி…. எனக்கு பசியில்லேடா,

ஏண்டா ?

தெரியல வா… நாம காலேஜுக்கே போயிடலாம் என்றான் பிரபு.

….. ம்….. இது குமார்.

நகர்ந்தார்கள்.

பரிட்சை முடித்து, கல்லூரி அருகே இருக்கும் டீக்கடையில் நண்பர்களுடன் புகைத்தபடி நடந்தையெல்லாம் பிரபு விவரிக்க… அவர்களும் இவன் சொன்னதையெல்லாம் கேட்டு இவனை உசுப்பேற்றி கொண்டிருந்த போது.குமார் மட்டும் இன்னும் இங்கு வரவேயில்லை.

மச்சான்…. இது செட்டாகும், அடுத்த வாட்டி பார்த்தீன்னா போய் பேசு, என கோரஸாக மற்ற நண்பர்கள் சொல்லும் போதே குமாரும் வந்து சேர்ந்தான்.

என்னடா நடக்குது இங்க?

என்ன பேசனும்? யார் பேசனும் என தெரியாததை கேட்டான் குமார்.

நண்பர்களில் ஒருத்தன், “ஒன்னுமில்லை மாமா”-நம்ம பிரபு ஏதோ பொண்ணு – ஐ கரெக்ட் பண்ணிக்கிட்டிருக்கான். அதுவு‌ம் இவனை பார்த்து சிரிக்குதான் சொன்னான்.

அட.. போங்கடா இதான் விஷயமா? அந்த பொண்ணையே இன்னிக்கு காலைல தான் பார்த்திருக்கான் அதுக்குள்ளேயே செட்டான மாதிரி சொல்லிட்டானா? – என கிண்டலாக குமார் கேட்க.

மச்சி….அந்த பொண்ணு என்னைய பார்த்து சிரிச்சவுடனே உனக்கு பொறாமை அதான். என்ற பிரபுவிடம்

டேய்… அந்த பொண்ண நீ காட்டவும் இல்லை, நான் பார்க்கவும் இல்லை, பார்க்கிறதுக்குள்ள பஸ் போயிடுச்சு என்றான்..

சரி… மச்சி, நாளைக்கும் அதே பஸ் ஸ்டாண்ட், அதே டைம் போவோம் காட்டறேன் பார்க்கலாம். என சபதமிட “ஹோ.. ஹோ”-என பெரும்சப்தத்துடன் நண்பர்கள் சபையும் கலைந்தது.

மாலை வீடு வந்து சேர்ந்ததும்… காலியாக இருந்த எதிர்வீட்டில் ஆள்நடமாட்டம் இருப்பதை அறிந்து அம்மாவிடம் பிரபு கேட்டான்

அம்மா….. எதிர்த்தாபல வீடு காலியாக இருந்ததே குடித்தனம் வந்திட்டாங்களா?

ஏண்டா…?

இல்லை… வீடு திறந்திருக்கு, ஆள் நடமாட்டம் தெரியுது அதான் கேட்டேன்.

அவங்க வந்து ஒருவாரம் ஆகுது…. இப்போ கேட்குற

ஒருவாரம் ஆச்சா?.. நான் பார்க்கவேயில்ல,

ஏண்டா பொழுதனிக்கும் வீட்லயா இருக்கே? காலைல காலேஜ் போற, சாயங்காலம் வர, அப்புறம் பிரண்ட்ஸோட வெளிய போற, படிக்குற, சாப்பிட்டு தூங்க போயிடுவ. உனக்கென்ன தெரியும்?

அந்த வீட்ல பசங்க யாராவது இருக்காங்களா ம்மா?

எதுக்கு கேக்குற?

இல்ல நம்ம காலனியில் என் வயசு பசங்களே இல்லையே. போரடிக்குது இருந்தால்… Friend ஆகிட்டா டைம் பாஸாகும் அதான் கேட்டேன் – என்றான் பிரபு.

அவங்க வீட்ல அப்பா, அம்மா, இரண்டு பொண்ணு,பெரிய பொண்ணு மீனாட்சி காலேஜ்லேயும், சின்ன பொண்ணு சிவசாமி கலாலயாவுல உன் தங்கச்சி மாதிரி பத்தாவது படிக்கிறாங்க. அப்பா BSNLல வேலை பார்க்குறார்.

எப்படிமா இவ்வளவு விஷயம் தெரிஞ்சுகிட்ட?

வீட்டு வேலை முடிஞ்சதும் என்ன வேலை, காலனி பொம்பளைங்கெல்லாம் சேர்ந்து பேசிட்டிருப்போம்.

நல்ல வேலை தான்… “மா “-என கிண்டலடிப்படி வெளியே வந்து நோட்டம் விட ஆரம்பித்தான். காலையில் பார்த்த அந்த பெண் இங்கு தான் இருப்பாளோ என்று.

ஆம்…. அவன் நினைத்தது, எதிர்பார்த்தது போல் ‘அவளே’ அந்த புதிய குடித்தனமாக அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.

இவளை பார்த்ததும்…. கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் 2 கிங்பிஷர் பீர் குடித்த திருப்தி இவனுக்கு

“புன்னகைத்தான்”..

நாகரிகம் கருதி அவளும் புன்னகைத்து வெளியே சாலையில் நடந்து எங்கோ சென்றாள்.

எங்கே போகிறாள்…? ஆயிரம் சிந்தனையோடு பின் தொடர்கிறான். இவன் பின்தொடர்வது இவளுக்கும் தெரிகிறது. ஆனால் என்ன நினைத்தானோ தெரியவில்லை சற்று தயக்கத்துடன்….. திரும்பி காலனி வாயிலில் வந்து நின்று அவள் வருவதை எதிர்நோக்குகிறான்.

நேரே மளிகை கடைக்கு சென்று ஏதோ வாங்கிவிட்டு திரும்புகிறாள்.

ஏதாவது பேசலாமா? என உள்மனம் தோன்றியது அவனுக்கு.

என்ன இவன்….? என் பின்னாடி வந்து, அப்புறம் இங்கு வந்து நிக்கிறான் site அடிக்கிறானோ.? என இவளும் பெருத்த சிந்தனையும் காலனிக்குள் நுழைகிறாள்.

இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர். புன்னகைத்தான், இவளும் பதிலுக்கு புன்னகைத்து பேசுவதை தவிர்க்க அவசரமாக நகர்கிறாள் அந்த இடத்தை விட்டு, வீட்டு வாசலை அடைந்து இவனை எட்டிப்பார்த்து கதவை சாத்தினாள்.

மணி 8.30 இரவு உணவுக்குப்பின் கொஞ்சம் நேரம் டீவியை ஆன் செய்ய “கே-டீவியில் அலைகள் ஓய்வதில்லை இரவு காட்சியாக ஒடிக்கொண்டிருந்தது பார்த்து கொண்டிருந்தவனிடம், காதல் காட்சியாக, கார்த்திக், ராதாவின் நெருக்கமான காட்சியை இவனும் எதிர்வீட்டு பெண்ணுமாக கற்பனை பண்ணிக்கொண்டு ரசித்து க்கொண்டிருந்தவன் தலையில் ஓங்கி ஒரு தட்டு தட்டி வயசு பொண்ணு இருக்கிற வீட்ல, இந்த படத்தை மும்முரமாக பார்த்திண்டிருக்க …! டீவியை ஆப் பண்ணுடா என கத்த வேறு வழியில்லாமல் படுக்கசென்றான். உறக்கத்திலும் எதிர்வீட்டு பெண்ணுடன் “ஆயிரம் தாமரை மொட்டுகளே”-என டூயட் பாடிய படி இரவும் முடிந்தது.

காலை யாரும் எழுப்பாமல் எழுந்து, ஜன்னலில் நோட்டமிட்டான். காலனியும் சலனமின்றி வெறிச்சோடிருந்தது. நேரே குளித்து, ரெடியாகி வந்தவனுக்கு அம்மா தயாராக இவனுக்கு பிடித்த மாதிரி பூரி கிழங்கை செய்து வைத்திருந்ததை உண்டு. வழக்கம் போல் கல்லூரிக்கு கிளம்பி இன்றும் குமாருக்கும் அந்த பெண் வெளியே வருவாளா எனவும் காத்திருக்க. அவள் வரவில்லை ஒரு வேளை காலேஜுக்கு கிளம்பி போயிருப்பாளோ ? யோசித்து கொண்டிருக்க ஒரு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தான் குமார்.

என்னடா மாமூ…. இன்னிக்கும் முன்னாடியே கிளம்பி, எனக்காக காத்திட்டிருக்க? என்றவனை

டேய் மச்சி…. நான் இரண்டு நாளா கரெக்ட் டைமுக்கு தான் கிளம்பி நிக்கிறேன். நீ தான்… லேட்டா வர.

சரி… சரி… Sorry மாமூ, ஒருத்தரை பார்த்திட்டு வரேன். அதான்… கோச்சுக்காதே வா… போகலாம். என்றான் குமார்.

வண்டியில் ஏறியவன், “மச்சி நேரே அந்த பஸ் ஸ்டாண்ட் எதிரே இருக்கிற டீக்கடையில வண்டிய நிறுத்துடா”-என பணிக்க, குமாரும் இவன் சொன்னது போல் அந்த டீக்கடையில் நிறுத்தினான். இரண்டு கோல்டு கிங் சிகரெட் வாங்கி ஒருவருக்கொருவர் பற்ற வைத்து, புகைத்தபடி பஸ் ஸ்டாண்டில் நோட்டமிட்டனர். வழக்கம் போல் பஸ் நிலையத்தில் கல்லூரி பெண்களின் ஆர்ப்பரிப்பும், அரட்டை கச்சேரியுமாக இருக்க. ஜொள்ளு விடவும், சைட் அடிக்கவும், பிரபுவை போல் அவரவர் காதலியாக பாவித்துக்கொண்டு, காதலியை கரெக்ட் செய்ய, பல காளை பசங்கள் அந்த டீக்கடையை மொய்த்திருக்க. பெரும் கல்லா (வருமானம்) கட்டிக்கொண்டிருந்தார் முதலாளி.

இதன் நடுவே…. பிரபு, குமாரிடம்,

மச்சி…. “அதோ” நிக்குறா பாருடா. நம்ம ஆளு.

நம்ம ஆளா….? – குமார்.

Sorry மச்சி என் ஆளு. பச்சை கலர் சுடிதார் போட்டுருக்காளே அவளே தான் என காட்டிக்கொண்டிருக்கும் போதே, அவளை மறைத்தபடி ஆட்டோ ஒன்று பஸ் ஸ்டாண்டில் ஒரம் கட்ட, பின்னாலேயே பஸ்ஸூம் வந்து விட்டது. ஒடிசென்று பஸ்ஸில் அவசரமாக அவள் ஏறிவிட்டதால், குமாருக்கு இன்றும் தான் நேசிக்கும் அந்த காதலியை காட்டமுடியவில்லை.

மச்சி…. உனக்கு luck கே இல்லை என்றான் பிரபு.

Luck ஆ… கொல்லென சிரித்தான் குமார்.

உன் ஆள் ன்னு சொல்ற, அப்புறம்… எனக்கு எதுக்கு luck மாமு,? நீ! கரெக்ட் பண்ணிட்டு ஜாலியா இரு. நான் பார்த்தா என்ன? பார்க்கலைன்னா என்ன? அவள் உன்னை விரும்புறாளான்னு கேட்டு தெரிஞ்சுக்க, சம்மதம் ன்னு சொன்னா, கொஞ்சம் நாள் கடலைய போட்டுட்டு, சுத்து, படிப்பை முடி, வேலைக்கு போ, அப்புறம் இரண்டு பேர் வீட்லேயும் சம்மந்தம் வாங்கி கல்யாணம் பண்ணிக்குங்க.அதுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். இப்போ…. நாம காலேஜுக்கு போகலாம் என கிளப்பினான் வண்டியை.

…..

குமார் சொல்வதும் சரியென தோன்றியது பிரபுவுக்கு. எப்படியும் கேட்டு விடவேண்டும் என யோசனை இருந்தும் கூட, அவள் கிட்ட இன்னும் பேசவே ஆரம்பிக்கல அதுக்குள்ள சம்மதம் எப்படி கேட்கிறது. என்கிற புத்தியும் கொஞ்சம் வேலை செய்தது.

தினம் காலையில் அவள் வருவதை எதிர்ப்பார்பதையும், மாலையில் நேருக்கு நேராக பார்த்து புன்னகைத்து கொள்வதையும் வழக்கமாகிபோனது, பேசும் வாய்ப்பு கிட்டவில்லை,இவனுக்கு.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில், தனது பிலிப்ஸ் ஆடியோ சிஸ்டமில் பெரும் ஓசையுடன் “கண்மனி நீ வர காத்திருந்தேன், ஜன்னலில் பார்த்திருந்தேன்”-என தென்றலே என்னை தொடு படத்தின் அந்த பாடலை ரீவைண்ட் செய்தபடி ஒலிக்க செய்ய, வீட்டில் உள்ளோர் என்ன? இந்த பையனுக்கு, பைத்தியம் ஏதாவது புடிச்சிடுச்சா ஒரே பாட்டை எத்தனை முறை போட்டுக்கிட்டே இருக்கான். டேய்….. அந்த டேப்ரிக்காடர ஆப் பண்ணுடா, தலைவலி மண்டையை பிளக்குது. ஒரே பாட்டை எத்தனை வாட்டி கேட்ப மடையா? என அம்மாவும், தங்கையுமாக கேட்பது. இவன் அந்த எதிர்வீட்டு பெண்ணுக்காக சமீக்ஞை செய்வது புரியாமல்.

அன்று மதியம் ஒரு ஆச்சரியம் ….இவன் எதிர்பாராத வகையில் அந்த பெண் இவன் வீட்டிற்கு வந்துவிட்டாள். ஒருபக்கம் இன்ப அதிர்ச்சி, மற்றொரு பக்கம் ஒருபீதி. எங்கே! நாம… பஸ் ஸ்டாண்டில் தினமும் சைட் அடிக்கிறதையும், தம் அடிப்பதையும் போட்டுகொடுத்திடுவாளோ? என்பதில், (அதனால் இவன் ரூமிலிருந்து வெளியே வரவில்லை) ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, அவன் அம்மாவிடம் ஏதோ வாங்கிவிட்டு சென்றுவிட்டாள். (அம்மா அன்று சொன்னது ஞாபகம் வந்தது இவள் அம்மாவிடம் , அம்மாவும் பேசி பழகி இருப்பதால் சமையலுக்கு ஏதாவது வாங்கி சென்றிருப்பாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

அன்று மாலை…. வழக்கம் போல் ஏதாவது காரணத்துக்காக வெளியே வருவாள் பேசலாம் என முடிவோடு காத்திருக்க, இவள்… தற்செயலாக வீட்டு வாசற்படியில் வந்து காலனி முகப்பை பார்க்க, இவன் தனக்காக தான் வெளியே காத்திருக்கிறான் என உணர்ந்தவள் குப்பை கொட்டும் சாக்கில் வெளியே வந்து அவனை ‘நேரிட்டு ‘என்ன ? ரொம்ப நேரம் wait பண்ணுவது போல் தெரியுது என்றாள். இதை சற்றும் எதிர்பாராத இவன்…. இல்ல, இல்ல, இப்போ தான் என நா தழுதழுக்க சொல்ல ஆரம்பமானது இவர்களின் முதல் பேச்சு. ஆமா….. நீங்க மோகன் ரசிகரா?

இல்லீயே… ஏன் கேட்கற ? – என்றான் பிரபு

இல்ல…. காலைல, மோகன் பாட்டை சவுண்டா வெச்சு கேட்டுட்டு இருந்தீங்க அதான் கேட்டேன் என்றாள்.

அடி பாவி… உனக்காக தான் அந்த பாட்டை போட்டேன் என உள்மனம் சொல்ல,

எனக்கு… இளையராஜா பாடல் என்றாலே உயிர், ஏனோ தெரியல, இந்த பாட்டு ரொம்ப, ரொம்ப, பிடித்த பாடல் அதான் போட்டேன் என்றான்.

ஆமா… உனக்கு எந்த நடிகரை பிடிக்கும் என கேள்வி முடிவதற்குள்

“கமல்”- என்றாள்

What? கமலா…. வாவ்… நானும் பயங்கர கமல் பைத்தியம். என இவன் பூரிப்பாய் சொல்ல, லேசான தூறல் விழ ஆரம்பித்தது

சரி வரேன்… குப்பை கொட்ட போனவள காணோம்னு தேடுவாங்க, என்றபடி நடையில் வேகம் எடுக்க..

திரும்ப எப்போ பேசலாம் ? என்றவனை புன்முறுவலுடன் அவள் பார்க்க.. தூறலும் இன்னும் வேகமெடுத்தது. அவளது நடையும் தான். “பிரபு.”-இவளிடம் பேசிய மகிழ்ச்சியில், தூறலும் நல்ல சகுனமாக கருதி, நனைந்த படி கற்பனை உலகுக்கு சென்றான்

“அந்தி மழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது”-என SPB பாட ஆரம்பித்தார்.

தொடர்ந்து… இரவு கனவில் , இளையராஜா இசையமைத்துSPB, ஜானகி, சித்ரா பாடியிருந்த கமல்ஹாசன் பட காதல் பாடல்களில் இவனும், அவளும் நடித்திருத்திருந்தனர்.

காலை…

வழக்கம் போல்…காலேஜ் செல்ல குமாரை எதிர்பார்த்திருக்க கொஞ்சம் தாமதமாகவே வந்த நின்றான் . இவன் ஒட்டி வந்திருந்த பைக்கில் புதியதாக முன்புறம் RK என்னும் எழுத்தில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததை கவனித்த பிரபு

என்னடா மச்சி… புதுசா ஸ்டிக்கர் ஒட்டியிருக்கே? அது என்னது RK? என கேட்க

நான் யாரு ரசிகன்? என எதிர்க்கேள்வி கேட்டான்.

“ரஜினி “

ரஜினி – ன்னா “R”, என் பேரு குமார். அதனால K, so RK என்றான்.

சரி… சரி…. நான் ஏதோ புதுசா setup பண்ணியிருக்கீயோ, அதனால பெயரை போட்ருக்கீயோன்னு பார்த்தேன்.சரி…. வா… ஏற்கனவே லேட்டாயிடுச்சு அவள் …. பஸ்ல கிளம்பிட்டாளான்னு தெரியல கிளம்பு பார்க்கலாம் என்றான் பிரபு.

வண்டி வழக்கம் போல்… அந்த டீக்கடையில் நின்றது. எதிர்புறம் பஸ் ஸ்டாண்டில் வயதான ஒன்றிரண்டு பேர் மட்டுமே நின்றிருந்தனர். கல்லூரி பெண்கள் யாரும் இல்லை. பெரும் ஏமாற்றம் அடைந்த பிரபுவை தேற்றுவதற்காக, மாமூ… வந்ததுக்காக தம் அடிப்போமென வாங்கி பற்ற வைத்து பிரபுவை ஆசுவாசப்படுத்த குமார் முயல., “பிரபு” பேச்சை ஆரம்பிக்கிறான்

மச்சி… ஒரு சந்தோஷமான விஷயம் ஒன்னு சொல்ல போறேன்.

என்னடா…?

நேத்து சாயங்காலம் அந்த பொண்ணு க்கிட்ட பேசினேன். – என்றதும் , “குமார்” பதட்டத்துடன் என்னடா சொல்ற ? நிஜமாகவா. என கேட்டான்

ஆமாண்டா…. நிஜம் தான்.

என்னடா பேசினே?

ஒன்னுமில்லை…. நீங்க மோகன் ரசிகரான்னு கேட்டாள், இல்லை நான் கமல் ரசிகன் னு சொன்னேன், அவளும் கமல் ரசிகையாண்டா. – என்றதும்

அட… ச்சி, இது தான் பேசுன லட்சனமா? நான் என்னென்னமோ நினைச்சுட்டேன். என்றான் குமார்.

என்னடா.. நெனச்சே?

நீ!… எடுத்த உடனேயே காதலை சொல்லி, அதற்கு அவள் என்ன சொல்லியிருப்பாளோன்னு நினைச்சேன்டா. அதற்குள் பிரபு குறுக்கிட்டு மச்சி… ஒரு தப்பு பண்ணிட்டேன்

என்னடா..?

இல்ல… அவள் பேரை என்னன்னு கேட்டு தெரிஞ்சுக்காம, அதுக்குள்ள யார் ரசிகர்ன்னு முட்டாள்தனமா, சினிமா கதையோடு முதல்ல பேசஆரம்பிச்சோம், ஆரம்பிச்சோம் இல்லை ஆரம்பித்தாள்.

என்னடா சொல்லுறே?

ஆமாண்டா… காலையிலே அவள் வெளியே வரணும்ங்கிறதுக்காகவே டேப் ரிக்கார்டர்ல “தென்றலே என்னை தொடு”படத்திலிருந்து கண்மணி நீ வர – அந்த பாட்டை சவுண்டா வச்சிருந்தேன் அதை கேட்டுட்டு தான் சாயங்காலம் அதை பத்தி பேச்சு கொடுத்தாள். நீங்க மோகன் ரசிகரான்னு, நான் மறுத்து அவளிடத்தில்… நீங்க யாரு ரசிகைன்னு? இப்படி தான் நடிகர்களை பத்தி பேசி முதல் முறையாக பேச்சும் ஆரம்பமாச்சு அப்போ பார்த்து மழை தூறல் வேகமாக விழ ஆரம்பிச்சதால அவசரமாக அவள் வீட்டுக்குள் போயிட்டாள் அதனால…. பேரை கேட்க முடியல. அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல, எங்க அம்மாக்கிட்ட… கேட்டாலே சொல்லிடுவாங்க, ஆனால் ஏன் கேட்கிறேன்னு சந்தேகம் வந்துரும் என்று முடித்தான் பிரபு.

பாரேன்…. நானும் உன் கிட்ட கேட்க மறந்துட்டேன் அவள் பேரை கேட்டியானு, சரி…. இன்னிக்கு பார்த்தீன்னா, எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க என்றான் குமார்.

அன்று மாலை..

காலையில் அவளை பார்க்க முடியாததால் மிகவும் வருத்ததிலிருந்தவன், மாலை எப்படியும் பார்த்திடலாம், என்ற நம்பிக்கையில் வெளியே காத்திருந்தவனுக்கு பலன் கிடைத்தது போல்! வந்தாள். தனது தங்கையுடன். ‘-இதை கண்டதும் ‘ஏரிச்சலாக இருந்தது இவனுக்கு. என்ன செய்வதென்று புரியாமல் மௌனித்து, அக்கா, தங்கை வெளியே செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இருந்தும்…. இவன் தனக்காக தான் நிற்கிறான் என்று உணர்ந்தவள் இவனை ஒரக்கண்களால் பார்த்த படியே கடக்க. இதை இவனும் கவனிக்க தவறவில்லை. தங்கையுடன் வந்து போகிறாள் என்று ஒருபக்கம் கடுப்பில் இருந்தாலும், தன்னை… விழியால் விழுங்கி தான் கடக்கிறாள் என்பதால் மனதில் டூயட் ஆரம்பமாகியது”இதழில் கதை எழுதும் நேரமிது”என இவனும், இவளுமாக லயித்திருக்கவும், முழு பாடல் முடிவதற்குள்ளும், .தனது தங்கையுடன் திரும்பி வருவது தெரிகிறது. வந்தவள்…. தனது தங்கையை காலனி முகப்பில் விட்டு நீ… , போ, நான் என் பிரண்டு வீட்டுக்கு போய் நோட்ஸ் வாங்கிட்டு அரைமணிநேரத்தில் வந்திடறேன். அம்மாக்கிட்ட சொல்லிடு என அனுப்பி விட்டு, வீட்டினுள் அவள் செல்வதை உறுதி ப்படுத்திக்கொண்டு, இவள் மட்டும் மீண்டும் எங்கோ செல்கிறாள். சந்தர்ப்பம் பார்த்து காத்துகிடந்தவனுக்கு லாட்டரியில் விழுந்த பரிசு போல் சந்தர்ப்பம் அமைந்தது.

பின் தொடர்கிறான்.. இவனுக்காகவே வந்தவளுக்கு

இவன் பின் வருவதையும் உணர்கிறாள், இருந்தும்… கண்டுக்காமல் நடக்கிறாள், இவனுக்கு எப்படி அழைப்பது? என்னன்னு பேசுறதுன்னு தெரியாமலே பிரபுவும் பின் தொடர , ஈஸ்வரன் கோயில் மாடவீதி வரை வந்தாகிவிட்டது. அரைமணி நேரத்தில் வீட்டுக்கு திரும்புவதாக தங்கையிடம் சொல்லிவிட்டு வந்தவள் கால்மணி நேரமாக நடக்கிறாள். எங்கே இவள் போகிறாள் என புலப்படாமல், இன்னும் கால்மணிநேரத்தில் வீட்டுக்கு போயிட்டா என்ன செய்வது? என்ற திகைப்பில்.

“ஹலோ…

“ஹலோ… என பிரபு அழைக்க, அவள் கண்டுக்கவேயில்லை

எஸ் க்யூஸ் மீ… என்றதும், இப்போ தான் இவனை பார்த்த மாதிரி

“ஹல்.. லோ” – வாங்க.. என்ன இந்த பக்கம்? என ஒன்றும் தெரியாதது போல் இவள் கேட்க

அப்பாடா.. இப்பவாவது பார்த்தீங்களே?

ஏன்…?

இல்ல… நானும், நம்ம காலனியில் இருந்து உன் கூட தான் பின்னாடி வந்திட்டிருக்கேன். நீ கண்டுக்காம போயிட்டே இருக்க. – என்ற பிரபுவிடம்.

Really…. எனக்கு தெரியல, ஆமா…. ஏன் என் பின்னாடியே வரீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?

உன் பேரை தெரிஞ்சுக்கலாம்னு….. என்று பிரபு இழுக்க

ஏங்க…. பேரை தெரிஞ்சுக்கிறதுக்கா இவ்வளவு தூரம் நடந்தீங்க. அதை நம்ம காலனியிலேயே கேட்டு இருக்கலாமே, பைத்தியமா நீங்க…?

ஆமா… உன் மேல பைத்தியமா இருக்கேன் என்றான் மெதுவாக. அவளுக்கு காதில் விழவில்லை.

ஆங்… என்ன இப்ப சொன்னீங்க?

இல்ல… பேரை தான் கேட்டேன். –

என் பேரு எதுக்கு உங்களுக்கு…. என்றாள்

நாம ஒரே காலனியில் இருக்கோம்.. அன்னிக்கு சினிமா நடிகரை பத்தி கூட பேசினோம். பேர் தெரிஞ்சுக்காம எப்படி? – என்றான் பிரபு.

அப்ப.சரி….என் பேர் ராஜேஸ்வரி., பிரண்ட்ஸ் எல்லாம் ராஜி – ன்னு கூப்பிடுவாங்க.

நான் உன்னை எப்படி கூப்பிடறது? – என கேள்வியை எழுப்பிய போதே கனவுலக டூயட் ஆரம்பமானது. “பேரை சொல்லவா, அது நியாயமாகுமா? ஸ்ரீ தேவியாக ராஜியும், கமலாக… பிரபு பாடுகிறார்கள்

…..

ஏன்.. ஏன்….அமைதியாயிட்டீங்க,?

“நிதானிக்கிறான்”

என்ன யோசனை,? என்னை ராஜேஸ்வரின்னு கூப்பிடுங்க, இல்லை… ராஜி – ன்னு கூப்பிடுங்க I don’t bother – என்றாள்.

ஆமா…. என் பேரு என்னன்னு உனக்கு தெரியுமா?

ஏன் தெரியாது?

தெரியுமா……? எப்படி என ஆச்சரியத்துடன் கேட்க

உங்க, அம்மாவும், அப்பாவும், டேய் பிரபு, டேய் பிரபு – ன்னு கத்தி கூப்பிடறது தினம் காதுல விழுதே.

அப்ப….. நீ…. தினம் என்னை watch பண்ணுறே அப்படி தானே?

நானா…? உங்கள வாட்ச் பண்றேனா? நான் எதுக்கு உங்கள வாட்ச் பண்ணனும், அதான்… உங்க வீட்ல, உங்கள கூப்பிடறது எங்களுக்கு கேட்கலையா என்ன? – சரி நான் கிளம்பறேன் வீட்ல தேடுவாங்க என்றவளை,

ஒரு நிமிடம்….. “ரா ஜி”

நான் தினமும் உன்னை வாட்ச் பண்றதையாவது தெரியுமா?

தெரியாது…. ஆனால் என்னை நீங்க சைட் அடிக்கிறீங்கன்னு மட்டும் தெரியும்.

சைட்டா….? சைட் இல்ல ராஜி, அதுக்கு பேரு லவ். B-COZ “ I LOVE YOU “நான் உன்னை காதலிக்கிறேன்.இதை சொல்றதுக்காக தான் இவ்வளவு நாள் காத்திட்டிருந்தேன் நீ… உன்னோட சம்மதத்தை சொல்லு – please என்றான் பிரபு.

What…. Love ஆ.. No.

ஏன் ராஜி…? நான் அழகாயில்லையா, படிப்பில்லையா, வசதி இல்லேங்கிறதுனாலயா, இல்லை தினம் தினம், பஸ் ஸ்டாண்டில் வந்து நிக்கிறது பிடிக்கலையா? என்ன காரணம்.? எடுத்து உடனே ஏன் வேண்டாங்கிற?

அதெல்லாம் ஒன்னுமில்லை….

அப்புறம் ஏன்.? என்னை ஏத்துக்க மாட்டேங்கிற. தினம், என்னை நீ பார்க்கிறதும், சமயத்தில் சிரிக்கிறது, மோகன் பிடிக்குமான்னு கேட்டதெல்லாம் ஏன்? ஏன் –நீ உன் சம்மதத்தை இப்போ சொல்லனும்ங்கிற அவசியம் இல்லை… மெதுவாக நாளைக்கு சொல்லு, இல்லை…. என்னிக்கு தோணுதோ அப்ப சொல்லு ஆனால் என்னை ஏத்துக்க என மன்றாடினான் பிரபு.

இப்படி எல்லாத்தையும் நீங்களே கற்பனை பண்ணிக்கிட்டு, இவ்வளவு கேள்வி கேட்டால் என்னத சொல்றது.? நான்…. உங்கள பார்த்தது, சிரிச்சது, பேசியது எல்லாம் நாம ஒரே காலனிக்குள் இருக்கோம். அப்படிங்கிற நினைப்புல தான்.

ஒருவித மரியாதைன்னு கூட வெச்சுக்குங்களே.. நீங்க தப்பா நெனச்சது க்கு நான் எப்படி காரணமாக முடியும்.? காலனி க்குள்ள இருந்தால் காதலிக்க வேண்டுமா என்ன…

ஏன்? . அண்ணன், தங்கையா பழக கூடாதா? நீங்க என் பின்னாடி சுத்துறீங்க, என்னை லவ் பண்றீங்கன்னு என்னால கொஞ்சம் யூகிக்க முடிந்தது. அதனால.. நான் உங்கள் காதலை ஏத்துக்க, முடியாதுன்னு சொல்றதுக்கு இன்னிக்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்குன்னு தான் உங்களுக்காக…, பிரெண்ட பார்க்க போறேன்னு பொய் சொல்லிட்டு வந்திருக்கேன்.

ஏன்னா நீங்க… என் பின்னாடி எப்படியும் வருவீங்க தெரியும். அப்ப சொல்லிக்கலாம்னு இருந்தேன். இப்போ….சொல்லிட்டேன்.

ஒருவிஷயமும், தகவலும் சொல்றேன் கேட்டுக்குங்க …

நான், நாங்க… இந்த காலனிக்கு குடித்தனம் வந்த காரணமே என் பிரண்டோட அண்ணன் சொல்லி தான் வந்தோம். பை த பை ….. அவரை தான் நான் விரும்புகிறேன்..

அவர் யாருன்னு சமயம் வரும் போது நீங்களே தெரிஞ்சுப்பீங்க, அதனால் காதல் அப்படிங்கற பேர்ல இனிமேல் என் பின்னாடி சுத்த வேண்டாம். உங்க life அ பார்த்துக்குங்க Bye என கிளம்பினாள்.

அருகில் இருந்த ஏதோ கடையில்… “கொட்டும் மழை காலம், உப்பு விக்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்”-என பாடல் ஒலித்துக் கொண்டிருக்க , இவனும் கிளம்பினான் வீட்டுக்கு.

வீட்டில்…

எங்கேடா போயிருந்த, இவ்வளவு நேரம்? , உன் பிரெண்டு குமார் வந்திருந்தான்.உன்னை கேட்டான். நாளைக்கு காலேஜ் வரலீயாம், எங்கேயோ வெளியே போறானாம், உன்னை மட்டும் கிளம்பி காலேஜ் போக சொல்லிட்டான்-. என அம்மா சொல்ல, சொல்ல, எதையோ பறிகொடுத்தவன் போல் அமைதியாக இருந்து, , காதில் பாதி விழுந்தும், மீதி பாதியை கேட்காமல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டான்.

சாப்பிட அழைத்தும்,. வேண்டாம் ….என மறுத்து படுத்து க்கிடந்தான்.தூக்கம் வராமல்.. புரண்டு, புரண்டு படுத்தும் எப்படியோ பொழுதும் விடிந்தாகி விட்டது.

காலை வழக்கம் போல.கிளம்பி.

குமாருக்காக காத்திருக்க இரவு அம்மா சொன்னது கொஞ்சம் ஞாபகம் வந்தது. பஸ் பிடிக்க நடந்தே வந்தான். பஸ் ஸ்டாண்டில் ராஜியை பார்த்தால். திரும்பவும் கேட்டு பார்க்கலாமா, மனசு மாறி சம்மதம் சொல்லுவாளா? என்ற நப்பாசையும் அவனுக்கு.

டீக்கடையில் ஒரு தம் வாங்கி பத்தவைத்து பஸ் ஸ்டாண்ட் நோக்கினான். ராஜியின் தோழிகள் மட்டும் நின்றிருந்தனர் அவள் இல்லை. இதுலயும் ஏமாற்றம். அதனால் காலேஜ் போக விருப்பமில்லாமல், வீட்டுக்கு போகலாம் என நினைத்தான். போனால் வீட்டில் திட்டுவார்கள். பொழுதை கழிக்க என்ன செய்வது என யோசித்தபடியே, மற்றொரு தம் வாங்கி பத்தவைத்து அரை கிலோ மீட்டர் தள்ளி வருகையில்

“குமரேசன்-பூங்கா “தென்பட்டது. அதன் வாயிலில் முன்பாக கண் பார்வையற்றோர் கலை இசை குழு என்னும் ஒரு வாகனமும், அதன் பின்புறமாக நிறுத்தப்பட்டிருந்தபல பைக்குக்களுகிடையே “RK”-என்று முன் பக்கம் எழுதியிருந்த அவன் நண்பனின் பைக்கும் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் வலுத்தது

பூங்காவில் நுழைந்து…. உள்ளே சென்று தேட, . பயங்கர அதிர்ச்சி.! அங்கே போடப்பட்டிருந்த கல்திட்டில், இவன் நண்பன் குமாரும், அந்த ராஜியும் இணைந்து அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். இவன் ஆத்திரம் தாங்காமல் நண்பனை தாக்குவதற்காக,எதுக்கோ அவர்களின் அருகாமைக்கு நகர்கிறான்.

இவன் வேகமாக இங்கு வருவதை ஏதேச்சையாக கவனித்து விட்ட ராஜி ‘திடுக்கிட்டு. ‘குமார்… உங்க பிரெண்டு நம்ம கிட்ட கோபமாக வருவது மாதிரி தெரியுது என்றவுடன் இருவருமே அந்த கல்திட்டிலிருந்து எழுந்து நிற்க, ராஜி மட்டும்,

வாங்க பிரபு….. என்றாள்,

குமார் செய்வதறியாது தலையை குனிந்துக்கொள்ள,

ராஜி தொடர்ந்தாள்.. இவர் தான், நான் காதலிக்கும் குமார்…… மௌனம்…. இவர் உங்க நண்பராக இருந்தாலும், என் காதலர்ங்கிற முறையில் நான் உங்களுக்கு, அறிமுகம் செஞ்சிருக்கேன், நீங்க கோபமா இருந்தால் எப்படி? என்றாள்.

இதைக் கேட்டவுடன் கோபம் இன்னும் அதிகமாகியது பிரபுவுக்கு., கட்டுப்படுத்தி மௌனித்திருந்தான். ராஜி தொடர்ந்தாள்…

அதுவும் இல்லாமல், இவரோடு தங்கை கலைவாணி சின்ன வயசுலயிருந்தே என் பிரெண்டு, கிளாஸ் மேட், அதனால… இவங்க வீட்டுக்கு போகும், வரும் போதெல்லாம், பேசி, பழகி, எங்களுக்குள் காதலாயிடுச்சு.

“பை த பை”… நான், எங்கள் குடும்பம் நம்ம காலனிக்கு வந்த காரணமே, இவர் சொல்லி தான். அங்கே வீடு காலியாக இருக்கு போய் பாருங்கன்னு சொன்னதனால தான் வந்து பார்த்து பிடித்து போய் குடித்தனம் வந்தோம் என்றதும்.

ஒவ்வொன்றாக நினைத்து பார்க்கிறான் – “பிரபு.”

காலனியில் வீடு காலியாக இருப்பதை குமாரிடம் சொன்னது, இவளை பத்தி சொல்லும் போது, மறுத்து அவன் பேசியது, காலேஜ் கிளம்பி நிற்க, இவளை பார்த்துவிட்டு பேசி தாமதமாக வந்ததும் யாரையோ பார்த்திட்டு வந்தது போல் சொன்னது. வண்டியில் இருந்து எழுத்து என்ன என்று கேட்டபோது நா… கூசாமல் R… For ரஜினி K. For குமார் , என்று சொன்னது, இப்போது விளங்கியது R.. For ராஜேஸ்வரி, என்பதும் K. For குமார் என்பதும்.

இயல்புக்கு வந்தவன். குமாரிடம்…

டேய்… எவ்வளவு மோசம் பண்ணியிருக்க! எவ்வளவு நம்பிக்கை துரோகம் பண்ணியிருக்க, உன்னை என் நண்பன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. துரோகி நீ…. நல்லா இருப்பியாடா? – என அவன் சட்டையை பிடிக்க.

சட்டையை பிடித்த கையை, வேகமாக இழுத்து உதறிவிட்டு குமார் தொடர்ந்தான்.

யாருடா துரோகி? உன்னை எந்த வகையில் நான் மோசம் பண்ணினேன்.? இவளை ரொம்ப வருஷமா தெரியும், சில வருஷமா இரண்டு பேரும் காதலிக்கிறோம். இது என் சொந்த விஷயம். நான் காதலிக்கிற விஷயமெல்லாம் எல்லோர்க்கிட்டேயும் சொல்லனும் – னு அவசியமில்லை. நண்பன் அவளை காதலிக்கிறேன்னு சொல்லும் போதே விட்டுக்கொடுக்க நான் ஒன்னும் சினிமா ஹீரோ கிடையாது. நான்… உன்கிட்ட அப்பவே சொன்னேன்… அவளோடு விருப்பத்தை கேளு ன்னுசொன்னதே! இதெல்லாம் நடந்திரகூடாதுன்னு தான்.

இன்னும் ஒன்னு தெரிஞ்சுக்க….நாமலா அடித்து, பிடித்து, போட்டிபோட்டு, ஒருத்தரை கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்வதுங்கிறது பேரு காதல் இல்லை, அப்படி… யாரையும் சொல்லவும் முடியாது. . காதல்ங்கிறது இருவர் கண்களோடும், மனசோடும் ஒத்து வருவது. அன்பையும், காதலையும் கேட்டு வாங்கக்கூடாது அது தானாக கிடைக்கனும், அப்போ தான் அது கடைசி வரைக்கும் நல்லாயிருக்கும். நாங்க அன்பையும், காதலையும் ஒருத்தொருக்கொருத்தர் புரிஞ்சுக்கிட்டதால, ஜெயிச்சுட்டோம். இதுல எங்க தப்பு எதுவும் இல்லை “குட் பை” – என்றபடி ராஜியின் கைகோர்த்து நடக்க தொடங்கிய குமாரை

பிரபு சத்தமாக …..”டேய்”….. (மௌனித்து தொடங்கினாள்), ஓகே…… But, ….ஒரு நிமிஷம், இதையும் கேளு, அவள விடு, அவள் நேத்திக்கு வந்தவள் ஆனால்…‘உயிருக்கு உயிரான நண்பர்களாயிருந்த நமது நட்பையும், நம்பிக்கையையும் ஏமாத்தி, துரோகம் பண்ணிய நீ ஜெயிச்சுட்டேன்னு சொல்லுற, ஆனால் உண்மையில் தோத்தது நீ…தான்.

போடா போ – நல்லாயிரு என சொல்ல, சொல்ல, “கிளம்பினார்கள், ராஜியும், குமாரும் “

பெரும் துயரத்திலும், கப்பல் கவிழ்ந்த நினைப்பிலும், வெறுத்து போய் அங்கிருந்த கல் திட்டில் அமர்ந்து சாய்ந்தான் பிரபு.

பூங்கா வாசலில் நின்றிருந்த பார்வையற்றோர் கலைக்குழு வாகனத்திலிருந்து கேட்டது. ஆத்தா உன் கோயிலிலிருந்து ஒரு அருமையான பாடல் என்று இசையோடு ஆரம்பமானது.

“ஒத்தையடிப் பாதையிலே! ஊரு சனம் தூங்கையில, ஒத்தையாக போகுதம்மா என்னோடு உசுரு”

– திண்ணை, 28/9/2022.

Print Friendly, PDF & Email

2 thoughts on “திருப்பம்…

  1. சிவா அண்ணா அருமையான கதை உண்மையில் ஒரு படம் பார்த்தது போல் இருந்தது.வாழ்த்துக்கள் அண்ணா🌺🌺

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *