கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 10,030 
 

பஞ்ச பூதங்கள் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது, அதிலும் தண்ணீர் மிக மிக முக்கியமானது. ஆழியார் அணையில் இருந்து வரும் நீர் ஆதாரம் தான், நாலு கம்மாவை (இலஞ்சி) நிறைத்து வருட முழுவதும் அதன் அருகில் உள்ள ஆனைமலை கிராமத்தை சுற்றி இருக்கும் வயல்களையும் தோப்புகளையும் செழிப்பாக்குகிறது. குடிக்கவும் அந்த தண்ணி தனி சுவைதான்.

ஊர் திருவிழாவில் உச்சி வெயிலில் அன்னதானம் சாப்பிட்டு விட்டு, கம்மா தண்ணீர் தாகத்திற்கு கிடைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா? அதுவும் மோர் கலந்து பருகினால், அதன் இனிமை தனிதான். கோவிலுக்கு அருகில், ரவியின் இலவச மோர் பந்தல் இருந்தது. அங்கு ரவி கொடுத்த மோரை பருக முடியவில்லை. உப்பு கரித்தது. யாருக்கும் தெரியாமல் உப்பை கலந்தது சுமதிதான். அவ்வாறு செய்தால் தான் சுமதியின் மோர் பந்தலுக்கு மக்களின் கூட்டம் வரும் என்று சுமதி செய்த வேலையை அறிந்த ரவி, சுமதியின் மோர் பந்தலை அடித்து நொறுக்க சண்டை முற்றியது. இது வெறும் பந்தல் சண்டை இல்லை. குடும்ப சண்டை. இதன் பின்னணி…,,

இருபது வருடங்களுக்கு முன்பு, காசி கவுண்டர் குடும்பமும், முத்துகவுண்டர் குடும்பமும் நட்பு ரீதியாக பல தலை முறையாக ஒன்றாய் வாழ்ந்தவர்கள். அப்படி வாழையடி வாழையடியாக வாழ்ந்த அவர்களது நட்பு பந்தம், உறவு பந்தமாக மாற்றுவதற்கு காசி கவுண்டருக்கும், முத்து கவுண்டரின் தங்கைக்கும் திருமண ஏற்பாடுகள் தட புடலாக அரங்கேறியது. மணநாளுக்கு முந்தைய நாள் இரவு வேறொரு பெண்ணிடம் காசி கவுண்டர் ரகசியமாக பேசிகொண்டிருப்பதை, கண்ட முத்து கவுண்டர் அப்பொழுது அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. காலையில் முகூர்த்த வேளையில் மணவறையில் அமர்ந்திருந்த காசி கவுண்டர், சிறிது நேரத்திலேயே, எழுந்து “மணப்பெண்ணை பிடிக்கவில்லை” என்று மண்டபத்தை விட்டு வெளியேற, திருமணம் நின்றது. காசி கவுண்டர் திருமணத்தை நிறுத்தியதற்கு, இரவு பார்த்த பெண்ணின் தொடர்பு தான் என்றும் நினைத்து கோபம் கொண்டு , தனது குடும்பத்தின் கவுரவத்தை மணமேடையில் வைத்து சீர்குலைத்து விட்டார் என்றும் முத்து கவுண்டர், காசி கவுண்டர் மீதும், அவர் குடும்பத்தின் மீதும் தீர பகை கொண்டார். உடனே அங்கு இருந்த தனது சிநேகிதனை தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்த முத்து அன்று முதல் காசியின் குடும்பம் மீது பழிவாங்கும் பழக்கம் அனைத்து விசயங்களிலும் வெளிப்படுத்தினார். இந்த காசியின் மகன்தான் ரவி முத்துவின் மகள்தான் சுமதி அதான் இந்த பந்தல் சண்டைக்கும் காரணம் ஆனால் இன்று இருவருக்கும் காதல் சண்டையாக மாறி காதலாய் மலர்ந்தது வீட்டிற்கு தெரிந்தால் இருவருக்கும் விஷம்தான்.

நீர் ஆதாரமாக இருக்கும் கம்மாவை மீன்பிடிக்காக ஏலம் நடைபெற்றது. முத்துவிற்கும் காசிக்கும் போட்டி பணம் ஆயிரம் லட்சமானது ஏல சத்தம் குறையவில்லை பல லட்சமானதும் மூன்று முறை மணி ஒலிக்க நான்கு கம்மாவையும் முத்து ஏலம் எடுத்தார், காசி கோபத்துடன் வெளியேறினார்.

முத்து ஏலத்தில் எடுத்த கம்மாவை பயன்படுத்தி காசியின் நிலங்களுக்கு செல்லும் நீரை தடுக்க, அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதன் மாற்று வழிக்காக, போர் போட்டு, நிலத்தடி நீர் நம்பி விவசாயம் செய்தனர்.

முத்து தன்னுடைய விவசாய நிலங்களுக்கு கம்மாய் நீரை அதிகமாய் திறக்க, அதன் சுற்றி உள்ள விவசாயிகளும் நீரை வீண் செய்தனர். இவ்வேளையில் தேர்தல் நெருங்கவே, ஆளுங்கட்சி சார்பில் முத்துவும், எதிர்கட்சி சார்பில் காசியும் நிறுத்தப்பட்டனர். இருவருக்கும் ஊர் மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் சம அளவு இருந்தது. மறுபுறம் கோடைகாலம் நெருங்க, ஆழியார் அணையிலிருந்து கம்மாவுக்கு வரும் நீர் நிறுத்தப்பட்டது. நிலத்தடி நீரும் வற்ற விவசாயம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் காசி கவுண்டரிடம் முறையிட, காசி தனது மகனை அழைத்து, பிரச்சனையை தீர்க்குமாறு கூறினார்.

ரவி ஊர் மக்களை ஒன்று திரட்டி மந்திரியிடம் மனு கொடுத்தான். ஆனால் தேர்தல் முடியும் வரை எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் கூற, அடுத்து என்ன செய்வது? ஏன் இந்த தண்ணீர் பற்றாகுறை? நம் கிராமத்தில் எங்கெல்லாம் தண்ணீரை வீண் செய்கிறோம்? சேமிக்க தவறினோம்? என்பதை ஆராய்ந்தான் ரவி. மக்களிடையை தண்ணீர் அதிகம் செலவில்லாமல் எப்படி விவசாயம் செய்யலாம். அதற்கு அரசாங்கத்திடமிருந்து எப்படி உதவி பெறுவது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.

இந்த ஊரை சுற்றி இருக்கும் கம்மாவை மக்களின் உதவியுடன் தூர்வார முடிவு செய்தான்.

“நாம் ஒவ்வொருவரும் விவசாயத்திற்கு அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியாது. இப்போ கம்மாலா தண்ணி இல்ல. இப்பவே அதை தூர் வாரின தான் வரபோற கோடை மழையை தண்ணீரா சேமிக்க முடியும். வருடா வருடம் நல்ல விவசாயம் பண்ணலாம். நீங்க எல்லாரும் அதற்கு உங்க உழைப்பை கொடுக்கணும்”

“ரவியின் பேச்சில நியாயம் இருக்கப்பா. நாமெல்லாம் ஒன்னு சேரனும். நமக்கு சோறு போடுற சாமி இந்த விவசாய பூமி. நம்ம பூமிய தாகத்தில தவிக்க விட கூடாது. கண்டிப்பா ரவி தம்பி சொன்னதையே கேட்போம். கம்மாயே தூர் வாருவோம்” என்று மக்கள் ரவிக்கு ஆதரவு தந்தனர்.

அதை தெரிந்த கொண்ட முத்து, இவன் தூர் வாரினால் மக்களிடம் நல்ல பெயர் வந்திடும். தேர்தல் காசிக்கு சாதகமாகும் என்று எண்ணி, ஊர் மக்களை திசை திருப்பவும், தான் ஏலம் எடுத்த கம்மாவை யாரும் அனுமதில்லாமல் தூர் வாரகூடாது என்றும் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கிவிட, தூர் வாறும் பணி முடங்கியது.

ரவி முகநூல், வாட்ஸ்அப் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், சமுக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று இணைத்து தூர் வார ஏற்பாடு செய்தான். அதற்கு சுமதியும் துணை நின்றாள். இது தெரிந்த முத்து மகளை கண்டிக்கிறார். இதனால் இருவரும் பார்க்க முடியாமல் தவித்தனர்.

மாணவர்களும் பொது மக்களும் இணைந்து தூர் வாறும் பணியில் ஈடுபடுகிறான் ரவி. உடனே முத்து அடியாட்களை வைத்து ரவியை கொல்ல அனுப்பிவைக்க. அங்கு பெரிய சண்டை நடக்க, ஒருத்தன் கத்தியை எடுத்து ரவியை பார்த்து வெட்ட வர, மறுபுறம் இதை தெரிந்த முத்துவின் தங்கை ஒரு உண்மையை சொல்லுகிறாள்

“அண்ணா என் கல்யாணத்தை நிறுத்தியது அவர் இல்ல. நான் தான். ஏன்னா நான் இவர விரும்பினேன். மணமேடையில் மாப்பிள்ளை எழுந்தால், வேற வழி இல்லாமல் இவரையே எனக்கு கட்டி வச்சிருவன்னு, நான் என் தோழியிடம் சொல்லி காசியை கல்யாணத்தை நிறுத்த சொன்னேன். என்ன மன்னிச்சிடு” என கேட்டவுடன், “நான் இத்தனை நாளா எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று வருத்தத்துடன் அடியாட்களுக்கு கைபேசியில் அழைக்க,

“இங்க எல்லாம் முடிஞ்சிருச்சி ஐயா” என்று அடியாட்கள் சொல்ல, ரவி இறந்து விட்டான் என்று நினைத்து, முத்து சம்பவ இடத்திற்கு விரைந்தார். இதை கேட்ட சுமதியும் அழுது கொண்டே பின்தொடர அங்கு தூர்வாரும் பணி முடிவை எட்டியது. அங்கு இருந்த அடியாட்களை பார்த்து

“என்னடா ரவி இறந்ததா சொன்ன”

“இல்ல ஐயா, அவரு எங்களை வெளுத்து தூர் வார வச்சிட்டாரு”

“அப்போ எல்லாம் முடிஞ்சிருச்சி சொன்னது”

“அய்யா சாமி… தூர் வாரி முடிஞ்சிச்சு ன்னு சொன்னேன். இனிமே யாரையும் அடிக்க மாட்டேன். திருப்பி அடிச்சா கூட பரவால. தூர் வார சொல்றாரு ஐயா”

முத்து ஓடி போய் காசியின் கைகளை பிடித்து “என்ன மன்னிச்சிரு. கல்யாணத்துல என் தங்கை செய்த தவறை, நீ செய்ததாக தப்பா புரிஞ்சிட்டு, உனக்கு தொந்தரவு கொடுத்துட்டேன். என் தங்கச்சி பண்ணினா தப்பிற்கு என் பொன்ன உன் பையனுக்கு கட்டி கொடுக்கிறேன்”

பெருதன்மையாக காசி மன்னிக்க, சுமதியும் ரவியும் புன்னகைத்தனர்.

“காசிய பழிவாங்குறேன்னு ஊர்மக்கள் எல்லாரையும், ரொம்ப தொந்தரவு செய்துட்டேன். எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்குறேன். நான் இந்த வருஷம் எம் எல் ஏ பதவிக்கு நிற்கல. காசி வெற்றி பெறட்டும்” என முத்து கூற,

பருவ மழை துளி தூறல் நீர், கம்மாவை தொட, ரவி சுமதியின் கையை பிடிக்கிறார். அதே நேரம் பூமியின் தாகத்தை தணிக்க, மழை மேகம் வானத்தில் காத்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *