கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2023
பார்வையிட்டோர்: 3,424 
 

எழிலரசிக்கு அம்மா சிவன்ராத்திரிக்கு ஊருக்குப் போகிறோம் என்று சொன்னவுடன் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஊருக்கு எந்த டிரெஸ் போட்டுவிட்டுப் போகலாம் என இப்பொழுதே கனவுகாண ஆரம்பித்தாள். கோயிலுக்குப் போக இன்னும் பத்துநாள் இருந்தாலும் அங்கு போனவுடன் விடிய விடிய நடக்கும் நாடகமும் அம்மாவின் புளியோதரையும் அப்பா வாங்கித்தரும் ஐஸ்கிரீமும், யார் யாரையெல்லாம் சந்திக்கலாம் எனவும் மனதிற்குள் கற்பனைக் கோட்டையைக் கட்டலானாள்.

பெரியப்பா மகள்கள் எல்லாம் வருவார்கள். அவர்களோடு சேர்ந்து ஜாலியாக விளையாடலாம். அப்பா மகிழ்ச்சியில் கேட்டதெல்லாம் வாங்கித்தருவார். ஊருக்கு எந்த டிரெஸ் போடலாம் போன தீபாவளிக்கு வாங்கிய பாவாடை, சட்டையா அல்லது வேறு டிரெஸ் ஏதாவது போடலாமா? பாவாடை, சட்டையை விட்டால் வேறு எதுவும் உருப்படியாக இல்லையென்றாலும் அதில் எது தனக்கு அழகாக இருக்கும் என சிந்திக்கலானாள்.

எழிலரசி இந்த ஆண்டோடு ஐந்தாவது முடித்து ஆறாவது வகுப்பிற்குப் போகப்போகிறாள். அந்த வயதிலேயே மிக நீளமான கூந்தலுக்குச் சொந்தக்காரி. சித்தி பிள்ளைகளெல்லாம் அவளது கூந்தலைத் தொட்டுப் பார்த்து “எவ்வளவு முடி” என்று ரசிப்பதுண்டு. அப்போதெல்லாம் எழிலுக்குப் பெருமையாக இருக்கும். ஒரு சிலர் அவளது கூந்தலைப் பிடித்திழுத்து வம்பிழுப்பதும் உண்டு.

கிராமத்திலிருந்து வந்திருக்கும் அவளது முறைமாமா “என்னைக் கட்டிக்கிறியாடீ” என்று கேட்டவுடன், அவரது நிறத்தையும் முரட்டுத்தனமான முகத்தையும் பார்த்து அலறியடித்து ஓடுவாள். அவளது அப்பா “குழந்தையைப் பயமுறுத்தாதேடா” என்பார். விவரம்புரியாத வயதில் கேட்கப்பட்ட அந்தக்கேள்வி எழிலரசிக்கு இனம்புரியாத பயத்தைத்தரும். மாமா அப்பாவின் அக்கா மகன். கருப்பாக, கிராமத்துத்தனமாக இருக்கும் அவர் பெயர் அய்யனார். சாமியில் அய்யனார் சாமியைப் பார்த்தால் எவ்வளவு பயமோ அது போல அய்யனார் மாமாவைப் பார்த்தாலும் பயம். பேரில்கூட இந்தச் சாமிக்கும் அவருக்கும் எவ்வளவு ஒற்றுமை என்று நினைப்பாள்.

கோவிலுக்குப் போகும் நாளும் வந்தது. கோவிலுக்குச் சிவன்ராத்திரிக்கு முதல்நாளே சென்றுவிட்டோம். பெரியவர்கள் எல்லாம் குளித்து பொங்கல் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரியப்பா, அண்ணன்கள், தங்கச்சிகள் சகிதம் எல்லோரும் குளிக்கப் பம்புசெட்டிற்குச் சென்றோம். அங்குபோய் தண்ணீரில் ஆட்டம் போட்டுவிட்டுக் கோயிலுக்கு வந்தோம். புதுடிரெஸ் மாட்டி, அம்மா தந்த புளியோதரையை வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு, பொங்கல் வைப்பதை வேடிக்கை பார்க்கலானாள். ராட்டினம், காத்தாடி, பஞ்சுமிட்டாய் வேறுபல ஐட்டங்கள் என கலர்கலராக விற்கும் பொருள்களைப் பார்த்துத் தான் எண்ண வாங்கலாம் என்று எழிலரசி கணக்குப் போடலானாள்.

அன்றைய பொழுது மகிழ்ச்சியாய்க் கழிந்து மறுநாள் விடியும்போது எல்லோரும் கோவில் அருகிலுள்ள கண்மாயில் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து எழிலரசியும் எட்டிப்பார்த்தாள். கண்மாய்க்குள் இளைஞன் ஒருவன் ஜட்டியோடு கிடந்தான். நெஞ்சலிருந்து ரத்தம் வழிய, தண்ணீர் தண்ணீர் என அவன் முனகும் சத்தம் எல்லோர் காதிலும் விழுந்தது. அதைப் பார்த்து அதிர்ந்து போன எழில் பயந்து போய் கோவிலுக்குள் சென்று ஒண்டினாள். அவளையொத்த தங்கை சொன்னாள்.

“எழிலு போலீஸ் சுட்ட அந்த அண்ணன் ஒரு ரவுடியாம். கொலை பண்ணிருச்சாம். அதான் சுட்டுட்டாங்களாம். பாவம் அது தண்ணி, தண்ணின்னு கேக்குது. போலிஸ் குடுக்கக்கூடாதுன்னாட்டாங்களாம்.” என்றாள்.

”பாவம். தண்ணி குடுத்தா என்ன ஆயிரப் போவுது” என்றாள் எழில்.

“எலே உங்க வேலை என்னவோ அதப்பாருங்க. யாரும் அங்க போகக்கூடாது. போனீங்க தோலை உரிச்சுப்போடுவேன்” என்றார் அப்பா.

அப்பாவின் சொல்லை மீறிப் போகும் தைரியம் யாருக்கும் இல்லாததால் எல்லோரும் அமைதியானோம். கூட்டத்தோடு வேடிக்கை பார்க்கச் சென்ற அம்மாவும் அப்பாவின் வாய்க்கு பயந்து நைசாக நழுவி கோவிலுக்குள் நுழைந்தாள்.

அன்று முழுவதும் சுடப்பட்ட நிலையிலேயே கிடந்த அந்த ரவுடி யாரும் தண்ணீர் கொடுக்காத நிலையில் மறுநாள் காலையில் இறந்து போனான். எல்லோரும் போய் அவன் உடலைப் பார்த்தோம். ஈமொய்த்துக் கிடந்த அந்தச் சடலத்தின் நிலை கண்ணால் பார்க்கவொண்ணாததாக இருந்தது. அங்கிருந்த கண்மாய் எப்படிப் பாளம் பாளமாய் வறண்டு கிடந்ததோ, அது போல அங்கிருந்த மனித மனங்களும் ஈரமின்றிக் காய்ந்து கிடந்தன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *