காதல் நோய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 6,867 
 
 

குணசீலத்துக் கதை 4

திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்’. என்ற நம்மாவாழ்வார் வாக்குப்படி குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள் மூலம், மனநல பாதிப்புகளையும், அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம்.


“கவுன்சலிங் சென்டர் வரவேற்பில் அமர்ந்திருந்த மயூரி அர்த்தமேயில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தாள்.

பொது இடங்கள்ல, அர்த்தமில்லாம தனக்குத்தானே சிரிக்கறது, சம்பந்தாசம்பந்தமில்லாமப் பேசுறது, பாட்டுப் பாடுறது; துணியைக் கிழிச்சிக்கிட்டுத் தெருவுல அலையுறது; குப்பையக் கிளறிக் கிளறிப் பொறுக்குறது; இளிச்சியிளிச்சிக்கிட்டு நட்டநடுத் தெருவுலக் குத்தாட்டம் போடுறது…;

இப்படியெல்லாம் ‘பிகேவ்’ பண்றவங்கதான் ‘மனநோயாளி’னு பல பேர் நினைக்கறாங்க; ஆனா, உண்மை நிலைமையே வேற;

பேண்ட்-சூட்’, ‘டை’, ‘கூலிங் க்ளாஸ்’ , பட்டுப்புடவை, மிடி, சல்வார்னு , அணிஞ்சி, பார்க்க, ‘எக்ஸிகியூடிவ்’ போல ‘கெத்’தா இருப்பாங்க., நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவாங்க. பொது அறிவு, அரசியல்னு துல்லியமா அலசுவாங்க; அதே சமயம் மன நோயாளியாவும் இருப்பாங்க;

உண்மையச் சொல்லணும்னா, மனநோயாளிகளோட எண்ணிக்கை “எலைட்’ க்ரூப்லதான் அதிகமா இருக்கு.

‘தனி மனிதப் பண்புச் சீர்குலைவு’ ங்கிற Personality Disorder க்கும், வெளித் தோற்றத்துக்கும் சம்பந்தமேக் கிடையாது.”

மனநல ஆலோசகர் வரதராஜன் அடிக்கடிக் கூறும் உளவியல் உண்மை இது.


‘டிப் டாப்’ பாக,  உடுத்திக்கொண்டு, அழகாய் அலங்கரித்துக் கொண்டு, அமைதியே உருவமான, பதின்ம வயதுப் பள்ளி மாணவி மயூரியை வெளியே ‘ரிசப்ஷனில்’ உட்கார வைத்தார்கள்.

அவள் தந்தையும் தாயும், சைக்காலஜிஸ்ட் வரதராஜனிடம் மகள் விஷயமாய்க் கலந்தாலோசிக்க உள்ளே வந்தார்கள்.

மனநலம் பாதித்தத் தங்கள் ஒரே மகளைப் பற்றிய கவலையில் உறைந்திருந்த, அவர்கள் முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

“சொல்லுங்க…!” என்றார் வரதராஜன்

சொன்ன விபரங்களை அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

பெரும்பாலானவர்களைப் போல, இந்தப் பெற்றோரும், மனநோயாளியின் பிரச்சனை சிக்கலானபிறகுதான் இங்கே கொண்டு வந்திருப்பதை உணர்ந்தார்.


“இன்னும் பதினைஞ்சி நாள்ல +2 பரீட்சை சார் என் ஒரே மகளுக்கு!”

புலம்பியபடியே, வரவேற்பிலமர்ந்து, இளித்துக் கொண்டிருந்த மயூரியை சிசி டிவி’த்  திரையில் காட்டினாள்.

“பொழுதே….ணி…க்கும்,  வெறிக்க வெறிக்க மோட்டுவளையப் பாத்துக்கிட்டும், சைத்தான் மாதிரி நட்டுக்கிட்டும், ‘கெக்கர புக்கர’னு தனக்குத்தானே இளிச்சிக்கிட்டுமிருக்கற… இவளப்பாக்கயில, பெத்த வயிறு பத்தி எறியுதே..”

பொதுவாக எல்லாத் தாய்மார்களையும் போல எமோஷனலாக இருந்தது இந்தத் தாயின் பேச்சும்.

மயூரியின் அப்பாவோ, சோகமே உருவாக அமர்ந்திருந்தார். முகத்தில் அப்பியிருந்தது கவலையும் பீதியும்.

மயூரியின் பிகேவியரைத் திரையில் பார்த்தவுடனே, ‘ஆளுமைச் சிதைவு  நோயோவென, அனுமானித்தார் அனுபவமிக்க கவுன்சிலர்.

குறிப்பாக, ‘மிகுமனப்பிளவு ஆளுமைக்கோளாறாக ( Schizotypal Personality Disorder) இருக்கலாம்’, என்றும் தீர்மானித்தார்


“லவ் மேட்டரா?”.

“ஆமாம் சார்…! அந்த வயத்தெரிச்சல ஏன் கேக்கறீங்க…!” கதறினாள் தாய்.

“………………”

“எல்லாம் முடிச்சிட்டுக் கசக்கித் தூக்கிப் போட்டுட்டான் சார். அவன் நாசமாப் போவ, குட்டிச் சுவராப் போவ…!”

மகளின் தற்போதைய நிலைக்குக் காரணமென்று நினைத்த, அவனைத் திட்டித் தீர்த்தாள்; சாபமிட்டாள்.


 “அய்யா அவளைப் பாருங்களேன்.!”

வரவேற்புப் பெண்ணிடம் மயூரி பேசிக்கொண்டிருப்பதைக் காட்டினாள்.

“………………”

“இப்படித்தானுங்க! மத்தவங்கக் கிட்டே பேசுது. பளகுது, நாங்க என்ன பாவம் செஞ்சமோ, எங்க ரெண்டு பேரு கிட்டே மட்டும் ஒரு வார்த்தை பேச்சுக் கிடையாது, ஊமைக்கோட்டான் மாதிரி நடந்துக்குது. சன்ம விரோதிமாதிரி முறைக்குது எங்களை.”

குற்றஞ்சாட்டினாள்; குமைந்தாள்; குமுறினாள்.

பெற்றோரைத் ‘தவிர்க்கும் ஆளுமைக்கோளாறு’ (Avoidant personality), சைக்காலஜிஸ்ட்டின் ஊகத்தை உறுதி செய்தது.

மயூரியை, குணப்படுத்திவிடலாம் என்றேத் தோன்றியது.

‘மயூரியைவிட, அவள் பெற்றோர்களுக்கே அதிகமான கவுன்சிலிங் தேவை’ எனத்தோன்றியது ஆலோசகர் வரதராஜனுக்கு. 


குழந்தை-பெற்றோர் உறவில்,  உரையாடல்களில், Parent-அப்ரோச், Adult-அப்ரோச், Child-அப்ரோச் என மூன்று வகைகளுண்டு

‘பேரண்ட்-அப்ரோச்’ என்பதை “கன்ஸர்வேடிவ்-பேரண்டிங்’ என்றும் கூறுவார்கள். இந்த வகைப் பெற்றோரை ‘Old Tape-recorder’ என்று வகைப்படுத்தியுள்ளார், கலிபோர்னியாவைச்சேர்ந்த ‘ஹாரிஸ்’ என்ற சமூகவியல் விஞ்ஞானி;

இந்தவகைப் பெற்றோர்
– பழமை வாதத்தில் மூழ்கிக்கிடப்பவர்கள்;
– கீறல் விழுந்த ‘டேப்-ரிகார்டர்’ போலப் பேசியதை திரும்பத்திரும்பபபேசி (Nagging) குழந்தைகளை வெறுப்பேற்றுபவர்கள்;
– சின்னச்சின்னப் பிரச்சனைகளையும் பன்மடங்கு அதிகப்படுத்திக் (Exaggeration) கூறிப்,  பயம் கூட்டிப், பரபரப்பாக்குபவர்கள்.
– தாங்கள்தான் எல்லாம்மறிந்தவர்போலும், குழந்தைகளை முட்டாள்களாயும் கருதுபவர்கள்.
– எப்போது பார்த்தாலும், அட்வைஸ்…! அட்வைஸ்…!! அட்வைஸ்…!!! என ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பவர்கள்.
-சமுதாயத்தில் (Socialization) பழகும்போது, குழந்தைகளே சில அனுபவங்களை நேரடியாகப் பெறும்போது, நிறையக் கற்றுக்கொள்வார்கள் என்பதிலெல்லாம் நம்பிக்கையற்ற பழைமைவாதிகள்;


அளவுக்கு மேல் போகும்போது அமுதமும் நஞ்சாகிவிடுவதைப் போல, அவளவுக்கு மீறி செய்யப்படும் அட்வைஸ், முதலில் வீரியத்தைக் இழக்கிறது (Loss of Intensity). விளைவாக, மதிப்பு மங்கிவிடுகிறது.

அதன் தொடர்ச்சியாக, பெற்றோர், எதைச்சொன்னாலும் காதில் வாங்காமல், அறவே அலட்சியப்படுத்தும் குணம் எழும்புகிறது.

இறுதிவிளைவு;

வீம்பும், எதிர்மறைச் செயல்பாடுகளும்தான்.

நல்லது செய்வதாக நினைத்துக், குழந்தைகள் பாதை மாறிவிடப் பெரும்பாலான ‘கேஸ்’களில் பெற்றோர்கள்தான் முதன்மைக் காரணமாகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

பெரும்பாலான ‘பெற்றோர்-குழந்தை’யுறவுகள் இப்படித்தான் சின்னா-பின்னாகிவிடுகின்றன.

“தவறு உங்கள்மேல்தானென்று…!” சுட்டிக்காட்டிவிட்டாலோ அவ்வளவுதான்;

பழமைவாதப் பெற்றோர், தன் தவறை ஒருபோதும் ஒத்துக் கொள்ளவேமாட்டார்கள்;

அதுமட்டுமில்லை, செய்வதை நியாயப்படுத்தவும் செய்வார்கள்.


பெற்றோர் சொன்ன விவரங்களை நன்கு உள்வாங்கினார் சைக்காலஜிஸ்ட்.

‘எப்படிச் சிக்கலை தீர்க்கவேண்டும்!’

மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டார்.

“உங்களைத்தான் மலையா நம்பி வந்திருக்கோம். நீங்கதானெங்க ஒரே மகளை எப்படியாவது குணப்படுத்தணும்!”

கைக்கூப்பி வணங்கினார்கள் பெற்றோர்கள்.


‘கேஸ் ஹிஸ்ட்ரி’ குறித்துக்கொண்டார்’ ஆலோசகர்

பெயர்: மயூரி
வயது: 16
– ஆறு மாதத்திற்கு முன் நடை பெற்றதாகச் சொன்ன சம்பவம்.
– இதைப் பெரிதுபடுத்தினால் என்னை உயிரோட பாக்க முடியாது” என்று மயூரி மிரட்டல் விடுத்ததால், பிரச்சனையை அமுக்கியது
– அதற்குப் பின் அவள் நடவடிக்கைள்.
– பள்ளிப் படிப்பில் பின்னடைவு.
– ஊர் வாய்க்கு பயந்து, கிராமத்து வீட்டைக் காலி செய்துகொண்டு, டவுனில், பள்ளிக்கு அருகாமையிலேயே வீடு பிடித்துக் குடியேறியது உட்பட அனைத்தையும் துருவித் துருவிக் கேட்டு (Probing Questions)  குறிப்பேட்டில் பதிந்து கொண்டார்.


“ராத்திரில பாப்பாத் தூக்குதா…?”

“தூங்கறதேயில்லே சார். ராப்பூரா ஆந்தை மாதிரி முளிச்சிக்கிட்டே உட்காந்துருக்கு. கம்ப்பல் பண்ணிப் படுக்கவெச்சாலும், புலம்பலும் உளறலுமா… நிம்மதியேக் கெட்டுப்போச்சு சார்.

“அட்டம்ட்” எதாவது உண்டா? சும்மா மிரட்டல்தானா?”

 “ஒருவாட்டி, ரயில்ல வுளுந்து சாவறேன்னு, அரசூர் தண்டவாளம் பக்கத்துல போய் நின்னுக்கிட்டு ஒரே ரகளை. கெஞ்சிக் கூத்தாடி அளைச்சி வர்றதுக்குள்ளே தாவறுந்து போச்சு..!”


“இவளோட ரோதனையெல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு என் சம்சாரம் ஆறுமாசம் பல்லக்கடிச்சிக்சிட்டு ஓட்டிட்டா..!.;

போவாத கோயிலுங்க இல்லே, கட்டாத முடி-கயறு இல்லே, தாயத்து இல்லே… எதுக்கும் அடங்கலே சார்..!;

+2 பரீட்சை நெருங்குது, ஒண்டியா சமாளிக்க முடியாதுனு சொன்னதும்தான், நான் என் பொளப்பை வுட்டுப்போட்டு, அபுதாபிலேந்து அவசரமா கிளம்பியாந்தேன். 

குணப்படுத்திராமில்ல சார்..!”

கண்கள் பணிக்கக்  கவலையுடன், வெள்ளந்தியாகப் கேட்டார் தந்தை.


 “ஆறு மாசத்துக்கு முன்னால, பிரச்சனை நடந்த சூட்டோடக் கொண்டு வந்திருந்தாப், பிரச்சனையை சுலபமா ‘சால்வ்’ பண்ணியிருக்கலாம்…!”

“இனிமேலுக்கு சரியாவாதுங்களா…?”

“முடிஞ்சவரை காம்ளிகேட் பண்ணிட்டீங்க…! பாப்பம்…!”

“எப்படியாவது சரியாக்கிடுங்க சார்.”

“(Somnambulism) ங்கற, தூக்கத்துல பிதற்றுகிற நிலை வரைக்கும் வளரவிட்டுட்டீங்க, கடைசியா இங்கே வரீங்களே…?’

கேட்கத்தான் நினைத்தார் ஆலோசகர்; கேட்கவில்லை;

‘நடந்தது நடந்தாகிவிட்டது. பேசிப் பயன்தானென்ன?’ என்று நினைத்தாரோ என்னவோ!

அடுத்து நடக்கவேண்டியதைப் பற்றி யோசித்தார்.


இந்தியாவில், மனரீதியானப் பிரச்சனைக்கு உடனடியாக ‘மனநல ஆலோசகரை’ அணுகவேண்டும்மென்கிற பூரண விழிப்புணர்வு இன்னும் வரவில்லை.

காத்து-கருப்பு  அடிச்சிருக்கும்;

பயந்த கோளாறா இருக்கும்;

திகைப்பூண்டு மிதிச்சிருக்கும்;

பித்ரு சாபமாயிருக்கும்;

ஏவல், பில்லி சூனியம் எதுனா இருக்கும்.;.

என்றெல்லாம், அவர்களாய் முடிவு கட்டிக் கொள்வார்கள்;

பூசாரி, பாதிரியார், சாமியார், மந்திரவாதி, ஜோசியக்காரர் எனத் தேடிப் போவார்கள்;

‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்..” என்று அலைபவர்களை வைத்து முடிந்தவரைச் சம்பாதிப்பார்கள் அவர்கள்.

வேப்பிலையடித்தல்; மந்திரித்து நீர் தெளித்தல் ; குறி சொல்லுதல்; பரிஹாரம் சொல்லுதல்; முடி கயிறு, தாயத்து எனக் கட்டிவிடுதல், மண் சோறு தின்னப் பரிந்துரைத்தல் எனத் தொடர்கதையாகிவிடும்.

பல நேரங்களில், பிரச்சனை தீருவதற்கு பதிலாக, மேலும் சிக்கலாகிவிடுவதும் உண்டு.

அதன்பிறகுதான், ‘சைக்காலஜிஸ்ட்’ என்று ஒருவர் இருப்பது அவர்கள் கண்ணில் படும் , ‘க்ளையண்ட்’டைக் கொண்டு வருவார்கள்.’

இதோ,  இந்தப் பெண் மயூரியையும், ஆறுமாதக் காலமாக இப்படியெல்லாம் அலைக்கழித்து பிரச்சனைகளை இடியாப்பச் சிக்கலாக்கி, கடைசி நேரத்தில் இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.


எந்த ஒரு கிளையண்டையும், அதன் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் மேற்பார்வையில் ‘கௌன்சிலிங்’ செய்வதுதான் கவுன்சிலருக்குப் பாதுகாப்பு;

குறிப்பாகப் பதின்ம வயதுப் பெண்ணை இந்த முறையில் ‘கவுன்சிலிங்’ செய்வதுதான் சாலச் சிறந்தது.

 கவுன்சிலிங் சைக்காலஜி பட்டமேற்படிப்புப் படிப்பவர்களுக்கு பால பாடமே இதுதான்.


“நார்மலாயிருவாளா டாக்டர்…?” பெற்றோர் கவலையுடன் கேட்டார்கள்.

‘க்ளயண்ட், நல்லவிதமா ‘கோ-ஆபரேட்’ பண்ணினா ஓரளவுக்கு சரிப் பண்ணிரலாம்.”

“ரொம்ப தாங்க்ஸ் சார்.”

“நீங்க ரெண்டுபேரும், அந்தக் கண்ணாடி ஸ்கிரீனுக்கு அப்பால உட்காருங்க;”

 “ஓ கே சார்.”

இங்கேந்து நாங்க உங்களைப் பாத்தாத் தெரியாது. ஆனா, நீங்க எங்களைக் க்ளியராப் பாக்கலாம்;

“சரிங்க சார்…”

“அவசரப்பட்டோ, உணர்ச்சி வசப்பட்டோ, நான் அழைக்காம வந்துடாதீங்க.”

பயபக்தியோடு “சரிங்க சார்…!” என்றார்கள் மீண்டும்.

“நான் மயூரிகிட்டே பேசும்போது, சமயத்துல அவ வாய்விட்டுக் கதறலாம். எழுந்து நின்னு கத்தலாம். கைநீட்டி என்னை அடிக்கக்கூட வரலாம்…;

என்னைப் பாதுகாத்துக்க எனக்கத் தெரியும். எதுவாயிருந்தாலும் சமாளிப்பேன்;

நான் சத்தமாக் வரச்சொல்லிக் உங்களைக் கூப்பிட்டா மட்டும் நீங்க வாங்க.”

இப்படியான, கண்டிஷனுடன் பெற்றோர் கண்ணாடித் தடுப்புக்குள் உட்கார்ந்தனர்.

உதவியாளர் மூலம் ‘க்ளையண்ட்’ மயூரி உள்ளே அழைத்துவரப்பட்டாள்.

முதல் சிட்டிங்கில், மயூரி’யை மெஸ்மரைஸ் செய்தார் கவுன்சிலர்.

ஆழ்மனதிலிருந்து செய்திகளை வாங்கினார் கவுன்சிலர் வரதராஜன்.


தேர்வு நெருங்கிவிட்டதால், வழக்கத்துக்கு மாறாக குறைந்த இடைவெளியிலேயே இரண்டு-மூன்று அமர்வுகள் வைத்து, மயூரியைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார்.

‘தன் உள்ளத்தை இவரிடம் ஒளிக்காமல் சொல்லலாம்..’ என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம், ப்ரொசிஜர்படி, பல்வேறு முறைகளில், இவளுக்கு எந்த முறை ஏற்றதாக இருக்குமென யோசித்து அந்த முறையில் கவுன்சிலிங் தொடர்ந்தார் வரதராஜன்.

“வீட்ல மயூரியோட எதுவும் தர்க்கம் செய்ய வேண்டாம். எதுவும் கேட்க வேண்டாம்!”

கவுன்சிலர் கண்டிப்பாகச் சொன்னதால், வீட்டில் மயூரியிடம் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை பெற்றோர்கள்;.

முழுக்க முழுக்க அவள் போக்கில்தான் அவள் இருந்தாள்.

அதே சமயம், இரண்டு மூன்று கவுன்சிலிங் அமர்வுகளுக்குப் பிறகு மயூரியிடம் கனிசமாக நேர்மறை மாற்றங்கள் இருப்பதைக்கண்டுப் பெற்றோர் மனநிம்மதியடைந்தனர்.


நாலாவது சிட்டிங் தொடங்கியது.

சிலப் பூர்வாங்க நடைமுறைகளுக்குப்பின், மயூரியிடம் கவுன்சிலிங் தொடங்கிய வரதராஜனுக்கு, இவளைப் பூரணமாகக் குணப்படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கை வந்தது;

 காரணம், அவள் எதிராளிமேல் மட்டும் குற்றத்தைச் சுமத்தவில்லை.

‘Self-Realization’ என்கிற தன்னையுணருங்குணம் அவளிடமிருந்தது.

“சார் நான் இடங்கொடுத்தவாசித்தானே அவன் வந்தான்…! வீட்டுக்குள்ள பூந்து என்னை ரேப் பண்ணலையே! நானே விரும்பித்தானே அவனோட கருப்பங் கொல்லைக்குப் போனேன். ‘ஹக்’ பண்ணிக்கிட்டோம், ‘லிப் லாக்’ பண்ணிக்கிட்டோம்” என்றாள்.

மயூரிக்குத் தான் செய்தது தவறு என்கிற எண்ணமோ, பயமோ, குற்றவுணர்வோ சிறிதுமில்லை. தான் செய்ததுச் சரியென்றேகூட வாதாடினாள்.

பதினாறு வயதுக்குறிய அத்தனை துடுக்குத்தனங்களும் அவளிடம் இருந்தன.

ஊசியை ஊசியால்தான் எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கவுன்சிலர்.


‘மந்திரவாதிகிட்டே மந்திரிச்சி தாயத்து கட்டியிருக்க போல…?’

மயூரியின் வாயைப் பிடுங்கினார் வரதராஜன்.

“மந்திரவாதிகிட்டே அழைச்சிட்டுப் போனாங்க சார் அம்மா;

வேண்டாம்மானு போராடிப் பாத்தேன் விடல்லை. அவங்க திருப்திக்காகப் போனேன்;

இதைப் பாருங்க…!;”

கையில் கட்டப்பட்டிருந்தப், பச்சை, சிகப்பு, மஞ்சள் என வண்ணவண்ணமானக் கயிறுகளையும், கழுத்தில் தொங்கிய தாயத்தையும் எடுத்துக் காட்டினாள் அவள்.

‘தெளிவாக இருக்கிறாள் மயூரி.’

இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்து கவுன்சிலிங்கை சரியான திசையில் தொடர்ந்தார் வரதராஜன்.


“சரி! உன் கோரிக்கைதான் என்ன மயூரி?”

“என் ‘பாய்ஃப்ரண்டை’ வரச்சொல்லுங்க. என் கழுத்துல தாலி கட்டிரச் சொல்லுங்க. அதுதான் என் ஒரேக் கோரிக்கை. நீங்க எனக்குச் செய்யவேண்டிய ஒரே உதவியும் இதுதான்…!”

“சைல்டு மேரேஜ் ஆக்ட்’ல என்னையும், உள்ளே தள்ளப் பாக்கறியா மயூரி…!”

சொல்லிவிட்டுச் சிரித்தார் வரதராஜன்.

மயூரிக்கும் அவளை அறியாமலே சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

நீண்ட நாட்களுக்குப் பின் மகளின் முகத்தில் சிரிப்பைக் கண்டதும், தங்கள் மனதில் பால் வார்த்தாற்போல் உணர்ந்தார்கள் பெற்றோர்கள்.

“சரி நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன். உனக்கு 18 வயசு முடியட்டும். பிறகு நானே அவனோட உன்னைச் சேத்து வைக்கறேன்..? சரியா?;

“ம்…!” என்றாள் சந்தோஷமாக.

 “இன்னும் ரெண்டு வருஷம், நீ பொறுத்துக்கக் கூடாதா மயூரி?”

இயல்பான குரலில் கேட்டார் வரதராஜன்.

“அவனுக்காக காலம் பூராவும் காத்திருப்பேன் சார்…!”

மயூரியின் ‘obsessional impulses’ (அதீதத் தூண்டல்),  கௌன்சிலருக்குத் துருப்புச் சீட்டானது.


“உன் லவர் பத்தி நான் தெரிஞ்சிக்கணுமே…!”

“சொல்றேன் சார்…!”

“நீயா எதுவும் எனக்குச் சொல்லவேண்டாம் மயூரி…!”

“அப்ப ‘அவனை’  ‘என்னோட ஆளை’ வந்துச் சொல்லச்சொல்றீங்களா சார்…?” சிரித்தபடியே கேட்டாள் மயூரி.

“ஹ…!ஹ…! “என்று வாய்விட்டுச் சிரித்தார் வரதராஜன்.

அவரேத் தொடர்ந்தார்

“நான் சில ‘டைப்ஸ் ஆஃப் லவ்’ பத்திச்  சொல்றேன்…!”

“ம்…!”

“அதுல எந்த வகை உன் ‘லவர்’னு சொன்னாப் போதும்…?”

சிரித்தபடியே கவுன்சிலர் சொல்ல…

“ஓ கே சார்…!”  என்றாள் மயூரி சந்தோஷமாக.


“ஜான் லீ…’ன்னு ஒரு உளவியல்விஞ்ஞானி.”

கதைக் கேட்பதிலார்வமானாள் மயூரி.

“காதல் பத்திப் பலவருடங்கள் ஆராய்ச்சிப் பண்ணி, ஒரு ‘தீசிஸ்’ கொடுத்திருக்கார் சமூகத்துக்கு.”

“அப்படியா சார்…? காதல் பத்தி என்னதான் சொல்றாரு அவுரு.. சீக்கிரம் சொல்லுங்க. …!”

“ஜான் லீ, காதலை, Eros, Ludus, Storge, Mania, Agape, Pragma… னு ஆறு வகையாப் பிரிக்கறாரு..”

“வெரி இன்டரஸ்டிங்கா இருக்கும்போலருக்கு சார்…!”

மகிழ்வின் உச்சத்தில் கூவினாள் மயூரி.


“Eros (ஈராஸ்)னு ஒரு வகை காதல்.

“ஓ?”

“பாலியல் நோக்கத்துல உண்டாகிற காதல் இது;

பணம் கறக்கற நோக்கத்துல பழகறது, விரும்புறது;

இச்சையைத் தீர்த்துக்கிட்டோ, பணம் கறந்துக்கிட்டோக்  கைவிட்ருவாங்க;

காதல் வகைனு சொல்றதைவிட, இதைக் ‘காதல் நோய்’னு சொல்லலாம்.”


இதைக் காதில் வாங்கிய, மயூரியின் எதிர்வினையைக் கவனித்தார்.

அவள் தலைக்குள் ஓடும் ரசவாதங்களை அவதானிக்க முடிந்தது கவுன்சிலரால்.

பணத்துக்காகவோ, பாலியலுக்காகவோ விரிக்கற வலை இது;

ஆண், பெண்ணை ஏமாத்தறதும், பெண், ஆணை ஏமாத்தறதுமான உத்தி இது;

கவர்ச்சிகரமாகப் பேசி, கவர்ச்சி காட்டி, கிளர்ச்சியூட்டி, ட்ரஸ், செண்ட், வளையல், சங்கிலி, பொட்டு பாக்கட், சேலை, சாப்பாட்டு ஐட்டம், நொறுக்குத் தீனி, இப்படியெல்லாம் வாங்கிக் கொடுப்பாங்க;

இன்னும் சொல்லப் போனா, திருமணமான தம்பதியர்க்கு நடுவுல இருக்கற கருத்து வேறுபாடுகளைச் சாதகமாப் பயன்படுத்திக்கிட்டு இப்படிக் கள்ளக்காதல் செய்யறதும் கிட்டத்தட்ட இந்த வகை காதல் நோய்தான்;

‘தாண்டிவா தப்பில்லே…!’ னு தவறா வழிநடத்துவாங்க;

புத்தியை மழுக்கி, மனத்தை மயக்கி சூழ்நிலையைச் சாதகமாப் பயன்படுத்துறதுதான் பிரதான நோக்கம்.

இதுபோலக், கள்ளக்காதலம்பலம், பணப்பறிப்புமோசடி, பாலியல் வன்முறை இதெல்லாம் பேப்பர்ல படிச்சிருக்கேதானே?”

“ம்..” என்றாள் மயூரி.

 உள்ளத்தில் உண்மை ஒளி புக, சற்றேத் தெளிவு தெரிந்தது மயூரியின் முகத்தில்.

தெளிவடைந்து கொண்டிருக்கும் மயூரியின் புத்தியை, மேலும் தீட்டிக் கூராக்கும் வகையில் ஆலோசகர் தொடர்ந்தார்.


“Ludus (லூடூஸ்)

இது இரண்டாவது காதல்வகை ;

விளையாட்டுத்தனமா செய்யற குறும்புப்காதல்;

செய்யறவங்களுக்கு இது விளையாட்டா இருந்தாலும், செய்யப்படறவருக்கு, வினையாகும் விபரீத விளையாட்டு இது;

காதலிக்கப்படறவங்க, உண்மைனு நெருங்கும்போது, “சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன்..”ன்னு கழட்டிவிட்டு, மனதை நோகச்செய்துடுவாங்க;

இப்படிப்பட்ட விளையாட்டால, தற்கொலை முயற்சி உட்பட பல விதமா மனசு பாதிக்கப்படும் ;

 பொதுவாப் பெண்ணினம், ஆண்கள்கிட்டேப் போடற விளையாட்டு இது.”

இந்தக் கணினி யுகத்துல, வக்ரகுணம்கொண்டஆண்களேக் கூடப், பெண்கள் பெயர்ல முகநூல் கணக்குத் தொடங்கி, சக-இளைஞர்களைப் பயித்தியம் பிடிக்கடிக்கற, இந்தக் காதல்-விளையாட்டு, பல ஆண்களின்  வாழ்கையை நாசம் செய்திருக்கு மயூரி;

“………………”  உண்மைச் சுட்ட அதிர்ச்சியோடு பார்த்தாள் அவள்.

விளையாட்டே வினையாகும்’னு சொல்றது இந்தவகைக் காதலுக்குத்தான் பொருந்தும்.”

“………………”

மயூரியின் மூளையில் பல ஜன்னல்கள் ‘பளிச் பளிச்’ சென திறந்துகொண்டதை உணர முடிந்தது கவுன்சிலரால்.


“Storge (ஸ்டோர்ஜ்) இது மெதுவா வளரும் காதல் வகை;

அதாவது ( Meterialistic love)

எடுத்தேன் கவுத்தேன்’னு இல்லாத காதல் இது.

Social status. economical status அதாவது,  சமூக, பொருளாதார நிலைகளையெல்லாம் துருவி ஆராய்ச்சிப் பண்ணி, அங்கே விசாரிச்சி, இங்கே கேட்டு, அனைத்து வகையிலும் பொருத்தமா இருந்தா; அதன்பிறகு பகிர்ந்துக்கற ஒரு வியாபார ஒப்பந்தக் காதல்முறை இது.

இது கிட்டத்தட்ட அரேஞ்ச்டு மேரேஜ் போலத்தான்…!”


” Mania (மேனியா)னு  சொல்ற காதல்  வெறித்தனமானது;

பொறாமைக் குணம், சந்தேக குணம் எல்லாம் நிறைஞ்ச காதல் நோய்;

ஷேக்ஸ்பியரோட ‘டார்க்-ட்ராஜடி’களிலொன்றான, ஒத்தெல்லோ’வின் காதல் கிட்டத்தட்ட இதுபோலத்தான்;

டெஸ்டிமோனாவை, வெறித்தனமாக் காதலிச்சுக், கல்யாணமும் செய்துக்கிட்டான் ஒத்தெல்லோ;

‘இயாகோ’ங்கற, வில்லன் சொல்கேட்டு, காதல் மனைவியை சந்தேகிக்கறான்;

‘Paranoid personality disorder’ னு சொல்ற ‘சந்தேக நோயோட’ உச்சத்துல, காதல் மனைவி டெஸ்டிமோனாவை படுக்கயறையிலே வெச்சி தலைகாணியால முகத்துல அழுத்திக் கொலையே செய்யறான் ஒத்தெல்லோ…!”

‘‘நான் ஒத்தெல்லோ ஸ்டடி பண்ணியிருக்கேன் சார்..!” என்று சொன்ன மயூரி,   

Yet she must die, else she’ll betray more men.

Put out the light, and then put out the light:

வசனத்தையே நாடக பாணியில் சொன்னாள்.

நாலு வகை சொல்லிட்டீங்க, மிச்சம் ரெண்டு வகை என்ன சார்…? ஆர்வத்தை அடக்க முடியவில்லை அவளால்.

 மயூரியின் கண்களுக்கு மறைவாகப், கண்ணாடித்தடுப்புக்குள் அமர்ந்திருந்த, பெற்றோர்களுக்கு, கவுன்சிலரோடு, மயூரியின் இயல்பான பேச்சையும், சிரிப்பையும், உரையாடலையும் பார்த்தபோது மகிழ்ச்சி, தாங்க முடியவில்லை.


சொல்றேன் மயூரி… அடுத்த க்ளாசிஃபிகேஷன் Agape (ஆகாஃப்)

இது கிட்டத்தட்ட ‘ஒருதலைக் காதல்’போலத்தான்;

தன் காதலைக் கடைசீவரைச் சொல்லாமலேயிருந்து, கடைசீல வேறொருத்தரோட கல்யாணம் முடிந்தபிறகுத், தன் காதலைத் தியாகம் செய்யறக் காதல் நோய் இது.

 “தாடி வளத்துக்கிட்டுச், சோகமா திரிவாங்க சார். ஒரு சினிமா கதாநாயகனைச் சொல்லிச் சிரித்தாள் மயூரி.

இயல்பு நிலைக்கு வந்துவிட்ட மயூரியிடம், கவுன்சிலரும் இயல்பாகக் கேட்டார்.

“உன்னோட நிலையை இப்போத் தெரிஞ்சிக்கிட்டியா?” என்று


“Eros (ஈராஸ்) தான் சார்; 

பாலியல் நோக்குல என்னை வளைச்சிட்டான் ;

மெச்சூரிடி இல்லாம நானும் வளைஞ்சிட்டேன்”

உள்ளத்தில் உண்மையொளி உண்டாகிவிட்ட மயூரியின் வாக்கில் உண்டானது ஒளி.

தவறான ஒருத்தனுக்காக தன் பொன்னானக் காலங்களை வீணாக்கிவிட்டோமே என்றக் கழிவிரக்கத்தில் கலங்கினாள் மயூரி.

கழிவிரக்கத்தைச் சுத்தமாகக் கழுவி வெளியேற்றியது அவளின் ஒரு சில கண்ணீர்த் துளிகள்.


கவுன்சிலர், கடைசியாகப்   ‘Pragma… ப்ராக்மா’ என்றக் காதல் வகையைச் சொன்னார்;

ஷேக்ஸ்பியர் எழுதினக் ‘காமடிகள்’ல வர்றமாதிரி, சரியான வயசுல, சரியான நேரத்துல இயல்பா வர்றக் காதல் ப்ராக்மா;

99 சதவீதம், இந்தமாதிரிக் காதல் பொய்க்கறதேயில்லை;

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம (Unconditional love), குறைகள் இருந்தாலும் ஏத்துக்கிட்டு, அன்பு செலுத்தற காதல் இது;

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கற காதல் இது;

இப்படிப்பட்டக்காதல் உனக்கு வரும்வரை காத்திரு மயூரி;

இப்போ படிப்புல கவனத்தைச் செலுத்து…!” என்றார் வரதராஜன்.

சரியான நேரத்தில், சரியான முறையில், சரியான விளக்கங்களைப் பெற்றதால், தெளிவடைந்தாள் மயூரி.


“இறுதியாக மயூரியைப் பெற்றோருடன் சேர்த்து வைத்து அமரச் செய்து குடும்ப கவுன்சிலிங் (Family Counselling) நடைபெற்றது.

“இப்போலேந்து நான் புது மயூரி சார்…!”

பெற்றோரருகில் அமர்ந்திருந்த மயூரி, சந்தோஷமாகப் பேசினாள்.

“இன்னும் பரிட்சைக்கு ஒரே ஒரு வாரம்தான் இருக்கு…”

மயூரியின் அம்மா வழக்கம்போலக் குறுக்கிட்டாள்.

“அம்மா இன்னும் ஒரு………வாரம் ஏ……..ழு நாட்கள் இருக்கும்மா தேர்வுக்கு…! அதோட, ஒரு பரீட்சைக்கும் மறு பரீட்சைக்கும் நடுவுல விடுமுறைவேற நிறைய இருக்கு…! இருக்கற நேரத்துல முழுக்க முழுக்க படிப்புல கவனம் செலுத்திப் படிச்சுடலாம்ப்பா;

எனக்கு எல்லாம் தெரியும், உன் வேலையப்பாரு, சரியான கழுத்தருப்பு, நசை,. என்றெல்லாம் பேசிக் கடுப்படிக்கும் மயூரி,  தணிவானக் குரலில் சமாதானமாகச் சொன்னதைக் கேட்ட பெற்றோர் மிகுந்த வியப்புடன் பார்த்தனர் அவளை..


“மயூரி தெளிவா இருக்கா, அவளை அவ போக்குக்கு விடுங்க! நல்ல மார்க் வாங்கி ப்ளஸ் டூ தேறுவா..!” என்றார் கவுன்சிலர்.

‘ஸ்டேட் ஃபர்ஸ்ட்’ வர முயற்சி செய்வேன் சார்…!”  என்றாள் மயூரி துள்ளலுடன்

“உன்னோட ஆளு, அதான் உன் அன்புக் காதலன் என்னாச்சு ?”. வாயைப்பிடுங்கினார் வரதராஜன்;

ஸ்போர்ட்டிவாகச் சிரித்தாள் மயூரி.

அறியாமை நீங்கியபின் வந்த ஆழ்ந்த ஞானச் சிரிப்பு அது.

– ஜூலை 2023

இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *