பேஸ்புக் புகைப்படம் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 3,197 
 
 

‘கார்த்தி, ஒரு சின்னப் பிரச்சினை…’

பொதுவாக அம்மு அவளின் பிரச்சினைகளை என்னிடம் கொண்டு வர மாட்டாள், அவளுடைய பிரச்சினைகளை அவளே சரி செய்து கொள்ள முடியும் என்ற திமிரான எண்ணம் அவளுக்கு உண்டு. என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் “சொல்லு அம்மு” என்றேன். ‘இந்த ஜீவா, என்னுடைய போட்டோக்களை எல்லாம் ரிசேர் செய்றாரு, அதுக்கு தேவதை, அழகி அப்படி இப்படி, ஹார்ட் சிம்பல்களுடன் என வர்ணனைகளுடன் பண்றது எனக்குப் பிடிக்கல” அந்த ஜீவா, அம்முவோட போட்டோக்களை எல்லாம் மறுபகிர்வு செய்து, அதில் அவரின் நண்பர்கள் ஆபாசத்திற்கு சற்று குறைந்த அளவில் வார்த்தை விளையாட்டுகளுடன் உரையாடுவதைப் பார்த்து இருக்கின்றேன். அம்முவே அதை ஒன்றும் சொல்லுவதில்லை எனும்பொழுது, நான் என்ன சொல்லுவது என அமைதியாக இருந்துவிடுவதுண்டு. இது மாதிரியான விசயங்களில் பெண்களிடம் பிரச்சினை என்னவென்றால் ஏதாவது கேள்வி கேட்டால் சந்தேகம் என்பதாகவும், கேட்க வில்லை என்றால் அக்கறை இல்லை என்பதாகவும் புரிந்து கொள்வார்கள்.

“பிடிக்கவில்லை என்றால் ஜீவாவிடமே சொல்லிவிடு, இல்லை என்றால் டோட்டலா பிலாக் பண்ணிடு அம்மு”

“சொல்லிப் பார்த்துட்டேன் கார்த்தி, பிலாக் செய்ய மனசு வரல, பொதுவா நல்ல மனுஷன், நீ இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு ஐடியா கொடேன்”

“பொம்பளபுள்ளங்க பஞ்சாயத்துக்குப் போறது எரிச்சலான விசயம்னு சொல்லி இருக்கேன்ல, போட்டோ போட்டு கூடி கும்மி அடிக்கிறப்ப இப்படியான விஷயம் எல்லாம் வரத்தான் செய்யும் என்னால எதுவும் செய்ய முடியாது … நீயே பார்த்துக்கோ அம்மு”

தொலைப்பேசி அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டாள். இரண்டு மணி நேரம் கழித்து அழைத்தாள்.

“கார்த்தி, அந்த ஜீவா என்னோட எல்லா போட்டாக்களையும் எடுத்துட்டாரு, சாரி சொல்லி மெசேஜ் கூட அனுப்பிட்டாரு…., நீ ஏதாவது செஞ்சியா”

“அவரோட மனைவி புரபைலை கண்டுபிடிச்சி, எனக்கு விசிபிளாக தெரியுற அவங்களோட போட்டோவுல, நீங்கள் அழகு, உங்கள் கண்களில் சொக்கி விட்டேன். உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர், அவரின் மேல் எனக்கு பொறாமையாக இருக்கின்றது என்பதுடன் ஒரு ஹார்ட் சிம்பலுடன் கமெண்ட் போட்டு இருந்தேன்”

– வினையூக்கி சிறுகதைகள், மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *