நல்ல குடும்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 2,267 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சனிக்கிழமை. அரைநாள் வேலை. வாரத்தின் இறுதி நாள். அடுத்த நாள் ஓய்வு. பரபரப்பான வேலையிலிருந்து ஒருநாள் அமைதி யாக இருக்கலாம். மனைவி மக்களோடு மகிழ்ச்சியோடு வெளியே சென்று வரலாம்; அல்லது வீட்டிலேயே சிறப்பாக உணவு தயாரித்து எல்லோரும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடலாம். கடந்த வாரம் நடைபெற்ற திருக்குறள் விழாவைப் பற்றிக் கலந்துரையிடலாம். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அறிவுப்பூர்வமான பேச்சைப் பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணியவண்ணம் வேலையிடத்திலிருந்து வெளியே வந்தேன்.

பேருந்தில் ஏறி நேரே வீட்டிற்குச் செல்ல பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர் பேருந்தின் பின்னால் காலியாக இருந்த ஒர் இருக்கை யில் அமர்ந்தேன். அப்போது பிற்பகல் ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. மக்கள் கூட்டம் பேருந்தில் நிரம்ப வழிந்தது. அந்நிலையில் எனக்கு அமர்வதற்கு ஓரிடம் கிடைத்ததைப் புண்ணியமாக நினைத்துக் கொண்டு கிடைத்த இடத்தில் அமர்ந்தேன். ஆனால் என் மகிழ்ச்சி ஐந்து நிமிடம் நீடிக்கவில்லை. அடுத்த பேருந்து நிலையத்தில் நிறைமாத கர்ப்பிணி எப்படியோ பேருந்தில் ஏறி நான் இருந்த இடம் வரை நகர்ந்து, நகர்ந்து வந்து சேர்ந்துவிட்டாள்.

அந்தப் பெண்ணுக்கு யாராவது எழுந்து இடம் கொடுப்பார்கள் என்று அவள் பேருந்தில் ஏறிய பொழுதே நினைத்தேன். ஆனால் என் நினைப்பு முற்றிலும் தவறாகிவிட்டது. அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் அந்தக் கர்ப்பிணியைக் காணாதவர் போல் வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். பேருந்து ஓடிக்கொண்டிருந்த நேரத்தை விட அது நின்ற போதும், புறப்பட்ட போதும் போட்ட ஆட்டத்தின் போதுதான் அவள் சிரமப்பட்டாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு நின்றாள். திடீ ரென்று குறுக்கே ஓடிய சிறுமியைக் காப்பாற்றக் கருதிய ஓட்டுநர் பேருந்தை அவசரமாக நிறுத்தினார். அப்போது அந்த நிறைமாதக் கர்ப்பிணி பிடித்துக் கொண்டிருந்த கம்பியில் அவளின் சப்பையான மூக்கை இடித்துக் கொண்டாள். அவள் சிவந்த மேனியை உடையவள். அந்த இடத்தில் நன்றாகச் சிவந்து இரத்தம் வருவது போல் இருந்தது. அப்போதும் அந்தப் பெண்ணுக்கு இடம் கொடுக்க யாரும் முன் வரவே இல்லை. ஒவ்வொருவரும் தங்களைக் கவனித்துக் கொள்வதிலேயே விழிப்பாக இருந்தனர்.

அதற்குள் அடுத்தப் பேருந்து நிற்கும் நிலையம் வந்துவிட்டது. அப்போது சிலர் இறங்கினர். நிற்கக்கூடிய இடம் காலியாக இருந்ததால் அவள் நகர்ந்து நான் இருந்த இடத்திற்கு வந்துவிட்டாள். என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை.உடனே எழுந்து இடம் கொடுத்தேன். அவள் நன்றி கூறிவிட்டு அமர்ந்தாள். நான் வைத்திருந்த ‘கோடரி எண்ணெயை’ எடுத்துக் கொடுத்து அடிபட்ட இடத்தில் தடவிக் கொள்ளுமாறு கூறினேன். அவளின் முகம் சிரித்தது. அவளின் சிறிய கண்கள் நன்றி கூறின. உதடுகள் பேச முடியாமல் அசைந்தன.

சிறிதுநேரத்தில் பேருந்து சிராங்கூன் சாலையை அடைந்தது. பலர் மணம் நிறைந்த அழகிய மாங்கனிகளை வாங்கிக் கொண்டு நிற்பதையும் சிலர் மாங்கனிகளுடன் பேருந்தில் ஏறுவதையும் பார்த்தவுடன் என்னையும் அறியாமல் பேருந்தைவிட்டு இறங்கி மாங்கனிகள் விற்ற இடத்தை நாடிச் சென்றேன். ஒரு மாங்கனி இரண்டு வெள்ளி என்றும் அவை இந்தியாவிலிருந்து வந்த மல்கோவா மாம்பழம் என்றும் கூறினர். ஐந்து மாம்பழங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.

வெளியே சென்ற இடங்களில் நல்ல உணவுப் பொருள் விற்றாலும். மனைவி மக்களுக்கு ஏற்ற நூல்கள் விற்றாலும், பிள்ளைகளுக்கு ஏற்ற உடைகள் விற்றாலும் குடும்பத்திற்கு வேண்டிய ஏனைய பொருட்கள் விற்றாலும் சற்றும் தாமதியாது வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அதனால் மாங்கனிகளைக் கண்டதும் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விட்டது. கனிகளை வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு இல் லம் நோக்கிச் சென்றேன்.

என் வீடு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் நான்காவது மாடியில் இருக்கிறது. மின் தூக்கி ஐந்தாவது மாடியில்தான் நிற்கும், ஐந்தாவது மாடியிலிருந்து இறங்கி நான்காவது மாடிக்கு வந்தபோது சத்தம் கேட் டது. சத்தம் வந்த திக்கை நோக்கினேன். சந்தேகமே இல்லை. அந்த இரைச்சல் என் வீட்டிலிருந்துதான் வந்தது. மனம் வேதனைப்பட்டது. அமைதியாகச் சென்று வீட்டின் கதவைத் தட்டினேன். மனைவி ஓடி வந்து கதவைத் திறந்தாள். நான் வீட்டினுள் கால் வைத்தேன். சத்தத்தின் வேகம் சற்று தணிந்தது. ஆயினும் இரைச்சல் நின்று விடவில்லை.

மாங்கனிகளை மனைவியிடத்தில் கொடுத்துவிட்டு என் அறைக்குச் சென்றேன். உடைகளை மாற்றிக் கொண்டிருந்த வேளையில் மனைவி துண்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கிக் கொண்டு குளிக்கச் சென்றேன். குழாயை நன்றாகத் திறந்து வீட்டுக் குளித்தேன். நீர் என் உடம்பைக் குளிரச் செய்தது. உடம்பில் இருந்த அழுக்கை நீக்கியது. அதே நேரத்தில் பிள்ளைகள் போட்ட சத்தம் உள்ளத்தில் சூட்டை ஏற்படுத்தியது. ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அடக்கிக் கொண்டு வெளியே வந்து ஏன் இப்படிச் சத்தம் போடுகிறீர்கள் ?’ என்று கேட்டேன்.

தொலைக்காட்சியில் கால் பந்தாட்டத்தைப் பற்றிய விளக்கப் படம் போடுகிறார்கள். பார்க்கலாம் என்று தொலைக்காட்சிப் பெட்டியை இயங்கச் செய்தேன். ஆனால் வானொலியின் பாட்டுச் சத்தத்தினால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வானொலியை நிறுத்தப் போனால் அக்காள் சண்டைக்கு வருகிறார் என்று சொக்கலிங்கம் சொல்லி முடித்தான்.

அப்பா, நல்ல நல்ல பாட்டுகளாக நேயர் விருப்பத்தில் போடுகிறார்கள். கேட்பதற்கு மிகவும் ஆசையாக இருக்கிறது. பாட்டைக் கேட்கும் போது வானொலிப் பெட்டியை நிறுத்தினால் எப்படியப்பா இருக்கும்? என்று மாதவி நியாயம் கேட்டாள்.

‘சுவிங் சிங்கப்பூர்’ என்ற ஆட்டம் பாட்டு நிகழ்ச்சியை மறு ஒலி, ஒளிபரப்பு செய்கிறார்கள். நம் சிங்கப்பூர் மக்கள் குறிப்பாக இளையர்கள், சிறப்பாகப் பள்ளி மாணவர்கள் பாடம், படிப்பு என்ற கவலையை மறந்து ஆடுகின்ற ஆட்டம் பார்ப்பதற்கு எவ்வளவு ஆனந்தமாக இருக் கிறது அதைப் பார்ப்பதற்கு விரும்புகிறேன். ஆனால் அண்ணன் காற்பந்தாட்டத்தைக் காண வேண்டுமென்று பிடிவாதம் செய்கிறார்; என்று கடைசிப் பையன் சோழன் ஏக்கத்தோடு சொல்லி நிறுத்தினான்.

பொறுத்துக் கொண்டிருந்த சினம் பொங்கி எழுந்தது. வானொலி, தொலைக் காட்சிகளை இயங்காமல் நிறுத்தினேன். சத்தம் போடாமல் அவரவர் இடத்திற்குச் சென்று அமைதியாகப் படியுங்கள். இல்லையேல் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது. ஒரு வேளை கொலைகாரனாக மாறினாலும் மாறி விடுவேன் என்று சிங்கம் கர்ஜிப்பதைப் போல் கத்திவிட்டு அமைதியாக என் படுக்கையில் சாய்ந்தேன் (என் மனம் சில ஆண்டுகள் பின் நோக்கிச் சென்றது).

இவர்கள் குழந்தைகளாக இருந்த போது எவ்வளவு குதூகலமாக இருந்தது? அடம்பிடித்தாலும் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி நடந்தார்கள். சொல்வதைக் கேட்டு நடந்தார்கள். ஆனால் இன்று எதற்கெடுத்தாலும் சண்டை, எதைத் தொட்டாலும் சிக்கல், என்ன சொன்னாலும் வருத்தம். ச்சே வளர்ந்து பெரியவர்களான இவர்கள் இப்படி நடந்து கொள்ளலாமா? ஒருவர் புத்தகத்தை ஒருவர் எடுத்துப் படிக்கக் கூடாதா? ஒருவர் பேனாவை மற்றொருவர் சிறிதுநேரம் எடுத்து எழுதக் கூடாதா? இதற்கெல்லாம் கத்தி சண்டை போட்டுக் கொள்ள வேண்டுமா? கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து நடக்கும் மனம் வேண்டாமா? என்ன உடன்பிறப்புக்கள் என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்த வேளையில் மனைவி வருவதை அறிந்தேன்.

அன்பே உருவான அவள் அருகில் வந்தாள். மணி மூன்றாகப் போகிறது. வந்து கொஞ்சம் சாப்பிடுங்கள் என்று கெஞ்சுவதைப் போல் சொல்லிக் கொண்டு நின்றாள். அவளின் சாந்தமான முகத்தையும் கனி வான பார்வையையும் பணிவான செய்கையையும் கண்டபோது என் கோபம் படிப்படியாகத் தணிந்தது.

இருவரும் அமர்ந்து உணவு உண்டோம். நான் கோபமாக இருந்த தால் அவள் பேசாது சாப்பிட்டாள். அதே வேளையில் எனக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து சிறிதுசிறிதாக வைத்துக் கொண்டேயிருந்தாள். ஆத்திரத்தோடு உணவுண்ண அமர்ந்த எனக்கு இல்லாளின் உபசரிப்பால் கோபம் குறைந்து வள்ளுவப் பெருந்தகை கூறிய,

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற
சொற்காத்துச் சோர்லாள் பெண்”

குறள் நினைவிற்கு வந்தது. அந்தப் பெருந்தகையை வாழ்த்திக் கொண்டே சாப்பிட்டேன். அவள் பேசத் தொடங்கினாள்.

சின்னப் பிள்ளைகளாக இருந்தபோது சிரமங்கள் இருந்தாலும் சொன்னதைக் கேட்டுக் கொண்டு சோம்பல் இன்றி வளர்ந்து வந்தனர். வளர்ந்து பெரியவர்களான இன்று சொன்னாலும் கேட்கிறார்களில்லை, சொந்தமாகவும் உணர்கிறார்களில்லை. சின்னச் சின்ன பிரச்சினைகளை எல்லாம் பெரிதாக்கிக் கொண்டு வாய்ச்சண்டை போடுகிறார்கள். ஏதோ கொலை நடந்துவிட்டதைப் போல் கத்துகிறார்கள். அவர்களின் செயல் வளர்ந்த பெரிய பிள்ளைகளைப் போலில்லை. என்ன செய்வது? நாம் தான் சற்றுப் பொறுத்துப் போக வேண்டும் என்று நான் கோபம் குறைந்திருப்பதைக் கண்டு கொண்டு பேசினாள். அவளின் அன்பு என் சினத்தைத் தணித்து சிந்தை செயல்பட அவள் சிந்தித்து நடந்துகொண்ட முறை மனத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அல்லி உன்னுடைய அன்பும் பாசமும் குறிப்பறிந்து நடந்து கொள்களும் குணமும் இல்லாமலிருந்தால் சில நேரங்களில் எனக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு நான் எப்படியோ போய் இருப்பேன். நான் பேச்சை முடிக்கவில்லை. பதறிப்போன அவள், ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? உங்களுக்கு ஏற்பட்ட அவ்வளவு பெரிய ஏமாற்றம் என்ன? என்று பதற்றத்துடன் கேட்டாள்.

அல்லி, நம் பிள்ளைகள் அன்பு நிறைந்தவர்களாகவும், பண்பும் பாசமும் உள்ளவர்களாகவும்; கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகவும்; ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நடக்கும் குலக்கொழுந்துகளாகவும்; எல்லாப் போட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆற்றலும் உள்ளவர்களாகத் திகழ வேண்டும் என்றும் எவ்வளவு ஆசைப்பட்டோம்; எப்படியெப்படி எல்லாம் கனவு கண்டோம்? ஆனால் நமது ஆசைகள் எல்லாம் கற்பனைக் கனவுகள் தானா?… நான் முடிப்பதற்குள் இல்லாள் இடைமறித்தாள்.

நம் பிள்ளைகள் அப்படி என்னங்க கெட்டுப் போனார்கள்? பள்ளிக்குச் செல்லாமல் ஏமாற்றுகிறார்களா? அல்லது படிப்பில்தான் மட்டமாக இருக்கிறார்களா? இல்லை பொய் பித்தலாட்டம் செய்கிறார்களா? ஊர் சுற்றித் திரிகிறார்களா? அல்லது சண்டை சச்சரவுக்குப் போகிறார்களா? இல்லை அடுத்தவரின் பொருளை அபகரிக்கிறார்களா? அல்லது… அவள் நிறுத்துவதற்குள் குறுக்கிட்டு.

என்ன சொன்னாய்? மற்றவர்களின் பொருள்களை அபகரிப்பதா? நம் பிள்ளைகளா? அன்பு காட்டி, அறம் கூறி பண்பை ஊட்டி வளர்த்தோமே எதற்காக? பிறர் பொருளைத் திருடுவதற்கா? என்ன கூறினாய் அல்லி? என்று பதற்றத்துடன் கேட்டான்.

ஒரு பேச்சுக்குத்தானே சொன்னேன். அதற்காக இப்படி உணர்ச்சிவசப்படுகிறீர்களே; என்று அவள் பொறுமையோடு சாந்தப்படுத்திய பின் அமைதியாகப் பேசத் தொடங்கினேன்.

எனது இளமைப் பருவத்தைப் பற்றிக் கூறினேனே அவை உனக்கு நினைவு இருக்கின்றனவா? அன்று சொல்லொணா துன்பங்களையும் தொல்லைகளையம் அனுபவித்தேன். ஒரு நாள் அல்ல பல நாட்கள் பட்டினியாக இருந்தேன். ஒருபோதும் ஒருவரிடமும் கை நீட்டிக் காசு கேட்டதில்லை. இருந்தால் சாப்பிடுவேன். இல்லாவிட்டால் அனுபவிப்பேன். இவ்வாறு எத்தனை இன்னல்கள் இடைமறித்த போதும் பண்பு தவறாமல் அன்பு குறையாமல் வாழ்ந்து வந்தேன். நான் கொண்ட நெறி யும், வாழ்ந்துவந்த முறையும் எனக்கு இப்போதும் மன நிறைவையும் மகிழ்வையும் கொடுக்கிறது.

நம்மைப் போல் நம் பிள்ளைகள் மாண்புடன் வாழ வேண்டும். ஆனால் நான் கடந்துவந்த அந்தப் பொல்லாத வறுமையை நம் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது. அதற்கு மாறாக நம்மைவிட பன்மடங்கு நம் பிள்ளைகள் கல்வியில் சிறந்தோங்க வேண்டும். மிருகக் குணத்திலிருப்பவனை மனிதப் பண்போடு வாழவைக்கும் ஆற்றல் கல்விக்குத்தான் இருக்கிறது. சாந்தனையும் கற்க வேண்டும் என்று வள்ளுவன் கூறிய அந்தக் கல்வியை நம் பிள்ளைகளுக்குக் குறைவின்றி கொடுக்க வேண் டும் என்பது நம் திட்டம். அதற்காக மது, மாது, சூது போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல் நல்ல தாய் தந்தையாக வாழ்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட நமக்குப் பிறந்த பிள்ளைகள் நீ சொல்லியபடி இருந்தால் அப்புறம் நம் பிள்ளைகளுக்கும் மற்றவர்களின் பிள்ளைகளுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்று நம் முன்னோர் சொன்னதின் பொருள் என்ன? தாத்தா, பாட்டி, தாய், தந்தை எப்படி வாழ்ந்தார் களோ; வாழ்கிறார்களோ அதை ஒட்டித் தானே பிள்ளைகளும் வளர் வார்கள். இக்கூற்றை அறிந்து தானே எவ்வித கூடாப் பழக்கங்களும் இல்லாத தூய வாழ்வு வாழ்ந்து வருகிறோம். பிள்ளைகள் என்னென்ன நல்ல பழக்க வழக்கங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகி றமோ அந்த நற்பழக்கங்களை எல்லாம் நாம் கடைபிடித்து வருகிறோம்.

நமது இல்லத்தில் சத்தம் போட்டுப் பேசிக் கொள்வது கூட இல்லையே. அன்போடும் பண்போடும் தானே வாழ்ந்து வருகிறோம். பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளில் எவற்றிலுமே குறைவைக்க வில்லையே. பிள்ளைகள் விரும்புகின்ற உணவு எதுவானாலும் அது உடலக்குக் கேடு செய்யாது என்றால் வாங்கிக் கொடுத்து வருகிறோம். நமது பண்புக்கும் பண்பாட்டுக்கும் இழிவு தராத உடைகளை வாங்கிப் பிள்ளைகளுக்கு அணிந்து பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.

விடுமுறை காலங்களில் வீட்டிற்குள்ளேயே இருந்தால் வெறுப்பாக இருக்கும் என்று வெளியே நடக்கும். நிகழ்ச்சிகளுக்கோ அல்லது விலங் கியல் தோட்டம், பறவைப் பூங்கா, செந்தோசாத் தீவு போன்ற உல்லாச இடங்களுக்குக் குடும்பத்துடனோ நண்பர்களின் குடும்பத்துடனோ சென்று வந்தோம். எதற்காக? பிள்ளைகளுக்கு எந்தவிதமான மனக்குறையும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தானே. ஏன் இவ்வளவு பண்போடு வளர்த்துவர விரும்பினோம்?

எனக்குத் தெரியாதா? நம் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும்; படித்துப் பட்டம் பெற வேண்டும்; பட்டம் பெற்று நல்ல வேலையில் ஈடுபட்டு கை நிறைய சம்பாதிக்க வேண்டும்; அவர்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்வதைக் கண்டு மகிழ வேண்டும்; என்றுதான் முயற்சி செய்கிறோம் என்று அகம் மகிழ்ந்து கூறினாள்.

நீ சொன்னது சரிதான் அல்லி. ஆனால் அது மட்டுமல்ல. அதற்கு மேலும் எனக்குச் சில ஆசைகளும் குறிக்கோள்களும் இருக்கின்றன. அந்த ஆசைகளும் எண்ணங்களும் நிறைவேற வேண்டும் என்று கனவு கண்டுவந்தேன். ஆனால்… நான் முடிக்கவில்லை.

இடையில் குறிக்கிடுவதற்கு மன்னியுங்கள். உங்களுடைய ஆசைகள் என்ன என்று தெரிந்துகொள்ளலாமா? என்று அன்போடு கேட்டாள். தெரிந்து கொள்ளலாம். தெரிந்து என்ன பயன்? என் எண்ணங்கள் ஈடேறுமா என்று ஐயுறுகிறேன்; ஏமாறுகிறேன்.

நம் பிள்ளைகள் ஒருக்காலும் ஏமாற்ற மாட்டார்கள். உங்கள் ஆசை என்ன என்று கூறுங்கள் நம் பிள்ளைகள் நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாகச் சொன்னாள்.

நம் பிள்ளைகள் அன்போடும் ஒற்றுமையோடும் வளர்ந்துவர வேண்டும் என்பது எனது முதல் ஆசை. நீ சொன்னதுபோல் படித்துப் பட்டம் பெற்று ஒரு தொழிலில் அமர்ந்து கொண்டு நாட்டிற்கும் சமூகத் திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்பது எனது அடுத்த ஆசையாகும்.

கல்வி இல்லாத பாமரர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் கல்வியின் அவசியத்தையும் நன்மையையும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்க வேண்டும். அந்தப் பாமரர்களின் பிள்ளைகளும் படித்துப் பட்டம் பெறப் பாடுபட வேண்டும் என்று விரும்பினேன். அது இயலாமல் போயிற்று. நம் பிள்ளைகளாவது கல்லாதவர்களும் கற்பதற்கு உதவுவார்கள் என்று கனவு கண்டேன். ஆனால் நம் பிள்ளைகளின் போக்கைப் பார்த்தால் சுயநலக்காரர்களாக இருப்பார்கள் போல் தெரிகிறது.

உங்களின் உயர்ந்த குணமும் பரந்த எண்ணமும் நம் பிள்ளைகளிடம் வேரூன்றி இருக்கின்றன. ஆகவே உங்கள் ஆசைப்படியே வாழ்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எனக்கு என்ன வியப்பாக இருக்கிறது என்றால் சிங்கப்பூரில் கூட கல்வியின் சிறப்பை உணராதவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். குப்பை மேட்டில் பிறந்தவர்கள் கூட படித்துப் பட்டம் பெற்று இன்று கோபுரத்தில் வாழ்கிறார்கள். சிங்கப்பூரில் படுக்கையைவிட்டு எழுந்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை படிப்பைப் பற்றிய செய்தியாகவே இருக்கிறது. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், மாத, வார இதழ் வாங்காத, இல்லாத வீடேயில்லை. அவற்றிலெல்லாம் படிப்பைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமுள்ளன என்றாள் அவள்.

அல்லி, நீ சொல்வது போல வானொலி, தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடே இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மைதான். ஆனால் இருக்கின்ற வானொலியும் தொலைக்காட்சிப் பெட்டியும் சினிமாப் பாட்டுக் கேட்கவும் தமிழ்த் திரைப்படம் பார்க்கவும்தான் பயன்படுகின்றன. அறிவுக்கு உணவு தரும் நிகழ்ச்சி வரும்போது அடைத்து விடுகிறார்கள். செய்தித் தாளையும் மாத, வார இதழ்களையும் எல்லோ ரும் வாங்குவதில்லை. சில குடும்பங்களில் வாங்கினாலும் இளையர்கள் சினிமாச் செய்திகளையும் விளையாட்டுச் செய்திகளையும் விளம்பரச் செய்திகளையும் தான் பார்த்துப் படிக்கிறார்கள். பொது அறிவையும் பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வளர்த்துக் கொள்ள படிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.

‘யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு”

என்ற குறளின் வழி சாகும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன் உண்மையை உணராத பாமரத் தமிழர்கள் படித்து முன்னேற விரும்பாமல் எத்தொழில் செய்தாலும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு எல்லோரும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்களே, அது போல நாமும் அனுப்புவோம் என்று பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள். பிள்ளை பள்ளிக்குச் சென்று எஸ். நோ. என்று நாலு வார்த்தை பேசினால் நம் பிள்ளை நன்றாகப் படிக்கிறான் என்று பூரித்துப் போகிறார்கள்.

மூன்றாவது வருட இறுதியில் பிள்ளை ஒரு மொழிக் கல்விக்கோ, நீட்டிக்கப்பட்ட கல்விக்கோ சென்றால்கூட பெற்றோர்களில் சிலர் பெரு மையோடு பேசுகிறார்கள். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள் எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும் என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

இவர்களில் பலர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரைப் பார்த்து அவரி டம் தம் பிள்ளையின் படிப்பு, நடத்தை பற்றிக் கேட்பதே இல்லை. பின்தங்கிய பாடத்தில் எங்கே கவனம் செலுத்தப் போகிறார்கள்? உற் றார் உறவினர்களில் கற்றவர் இருந்தால் அவர்களிடம் ஆலோசனைகூட கேட்க-மாட்டார்கள். அப்படிக் கேட்டால் மதிப்பு மரியாதை குறைந்துவி டுமாம். அதனால் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற நம்பிக் கையோடு வாழ்ந்தும், வளர்த்தும் வருகிறார்கள்.

‘நாம் இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவர்கள். நம்முடைய பிள்ளைகள் எப்படியாவது வாழட்டும் என்று நினைக்கலாமா? இப்படித் தான் வாழ வேண்டும் என்று திட்டமிட வேண்டாமா? கடமை, கண்ணி யம், கட்டுப்பாடு என்று தென்னாட்டுக் காந்தி அண்ணா சொன்னாரே! அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஆயிரம் ஆயிரம் கற்பனைக ளைச் சுமந்து கொண்டிருக்கின்ற என்னால் பிள்ளைகளின் அற்பத்தன மான சில செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே அல்லி என்று ஏக்கத்தோடு சொன்னேன். நீங்கள் சற்று பொறுமையோடு இருங்கள். என்ன செய்வது? இன்றைய சூழ்நிலை, சந்தர்ப்பம் அப்படி இருக்கி றது. எல்லாப் பிள்ளைகளும் அப்படி இருக்கும்போது நமது பிள்ளை களை அதிகக் கட்டுப்பாட்டோடு வளர்க்க முடியுமா? கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தான் பிடிக்க வேண்டும்.

நீ சொல்வதும் உண்மைதான். பள்ளியில் பலவித போக்குடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்கள் கலந்துரையாடும் போது நாம் சொல்லிக் கொடுக்காத பல விபரங்களைத் தெரிந்து கொண்டு அதில் ஈடுபட விரும்புவது இயல்புதான். எல்லாப் பெற்றோர்களும் பிள்ளைக ளின் வருங்காலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களோடு கூடு மானவரை அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். நல்லது கெட்டதைக் கலந்துரையாட வேண்டும். சிறுவயதிலேயே இவ்வாறு பழக்கி வந்தால் பிள்ளைகள் நிச்சயம் நல்வழியில் பொறுப்போடு வாழ முற்படுவார்கள். ஆனால் எத்தனை பெற்றோர்கள் நம் கருத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பார்கள்?

நான் பேச்சை முடிக்கவில்லை. யாரோ மணியடிக்கும் சத்தம் கேட் டது. அல்லி ஓடிச்சென்று கதவைத் திறந்து ‘வாங்க அப்பா; என்னப்பா திடீரென்று வந்துவிட்டீர்கள்? வருவதாக ஒரு வார்த்தை சொல்லவில் லையே! அது என்ன பெரிய பையாக இருக்கிறது? ஏன் அம்மாவையும் அழைத்து வரவில்லை?’ என்று கேள்வி மேல் கேள்விகளைப் போட்டாள். மாமனார் வந்திருப்பதை அறிந்த நானும் போய் வரவேற்றேன். அகமும் முகமும் மலர உள்ளே வந்தார்.

எங்கே பேரப் பிள்ளைகளைக் காணவில்லை? என்றதும் அல்லி நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னாள். ‘மாப்பிள்ளை நான் பல பிள்ளைகளைப் பெற்று வளர்த்தவன் எல்லாப் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து பேரப்பிள்ளைகளைக் கண்டவன். இன்னும் அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பிள்ளைகளையும் பார்த்து வருகிறேன். அந்தப் பிள்ளைகள் எல்லோரும் எப்படி வளர்ந்து வருகிறார்கள் என்று கண் கூடாகக் கண்டு வருகிறேன். எந்தப் பிள்ளைகளும் என் மாப்பிள்ளையின் பிள்ளைக களுக்கு ஈடாக மாட்டார்கள். ஏதோ விளையாட்டுத்தனமாக சத்தம் போட்டு பேசியிருப்பார்கள். அதற்காக இவ்வளவு வருத்தமா? மனக்குழப்பமா?

உங்களுடைய பிள்ளைகள் அதாவது என் பேரப்பிள்ளைகள் நிச்சயமாக நன்கு படித்து உங்களுடைய எண்ணம் போல் வாழ்ந்து காட்டுவார்கள். நானும் அந்தக் காட்சியைக் காணப் போகிறேன். இதற்காக நீங்கள் கவலைப்படாதீங்க மாப்பிள்ளை. அம்மா! அல்லி பேரப் பிள்ளைகளைக் கூப்பிடு என்று தாத்தா சொன்னவுடன் மூன்று பிள்ளைகளும் ஓடி வந்தார்கள்.

இந்தத் தாத்தா சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும். என் வாழ்நாளில் எத்தனையோ மனிதர்களைப் பார்த்துவிட்டேன். உங்கள் தாய் தந்தையரைப் போன்ற செயல்திறம் மிக்கவர்கள் ஒருசிலரே இருப் பார்கள். அவர்களில் இவர்கள் முதல்தரமானவர்கள். உங்கள் தந்தையை என் மாப்பிள்ளையாகவும் உங்கள் தாயை என் மகளாகவும் பெற நான் என்ன தவம் செய்தோனோ? என்று பலமுறை எண்ணி மகிழ்ந்திருக்கிறேன். இவர்கள் உங்கள் பெற்றோர்கள் மட்டிலுமல்ல, அன்பும் அறிவும் நிறைந்த சான்றோர்கள். திருவள்ளுவர்,

‘பெரியாரைப் பேணா(து) ஒழுகின்
பெரியாரால் பேரா இடும்பை தரும்’

வழி அறிவு நிறைந்த பெரியோர் போன்ற உங்கள் பெற்றோரை மதித்து, அவர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு வாழ்வீர்களே என்றால் வாழ்வாங்கு வாழ்வீர்கள். நல்ல பெற்றோர்களால்தான் அறிவும் ஆற்ற லும் நிறைந்த நன்மக்களை உருவாக்க முடியும்; அவர் முடிக்கவில்லை.

தாத்தா! அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததை அடுத்த அறையில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். எங்களுக்குள் நடந்த விளையாட்டுச் சண்டையைப் பார்த்த தந்தை மனம் நொந்து போய் விட்டார். அதனால் ஆத்திரப்பட்டுக் கத்தினார்; தந்தை கோபப் பட்டு நாங்கள் பார்த்ததே இல்லை. இன்றுதான் கண்டோம். தந்தைக்குக் கோபம் வந்ததும் நல்லதாகவே போய்விட்டது. ஏனெனில் உங்கள் மூலமாகவும் தாய் தந்தையரின் மூலமாகவும் பல உண்மைகளையும் நன்மைகளையும் தெரிந்துகொள்ள தந்தையின் கோபமே காரணமாக இருந்தது. பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவதோடு இனிமேல் பொறுப்போடும் நடந்துகொள்வோம்; என்று இளையமகன் சொன்ன போது செந்தமிழ்ப்பண் காதில் பாய்வது போல் இருந்தது.

‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார் வாய்ச்சொல்’

வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப பழுத்த அனுபவ முள்ள தாத்தாவின் அறிவுரையாலும், பெற்றோரின் சிறந்த ஒழுக்கக் குணத்தாலும் பிள்ளைகள் உண்மையை உணர்ந்தார்கள். பேரப் பிள்ளை களின் பேச்சில் இருந்த தெளிவை உணர்ந்த மாமனார்; மகளை அழைத்தார். தான் கொண்டுவந்த பையைக் கொண்டு வரச் சொன்னார். அதிலிருந்த பலாப் பழத்தையும் வாழைப் பழத்தையும் தட்டில் வைத்துச் சாப்பி டுமாறு இன்பம் பொங்கக் கூறினார். அல்லிக்குத் திடீரென்று நினைவு வந்து சமையல் அறைக்கு ஓடினாள். நான் வாங்கிவந்த மல்கோவா மாம்பழத்தை வெட்டி மேசையில் உள்ள தட்டில் வைத்து முக்கனிகளை யும் சாப்பிடுங்கள் என்றார். முக்கனிகளையும் சுவைத்துச் சாப்பிட்ட போது நாவிற்கு மட்டுமா இன்பமாக இருந்தது? என் அகத்திற்கும் இன்பமாக இருந்தது. அப்போது ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்ற சொற்றொடர் நெஞ்சில் பட்டது.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *