கதைக்குள் நான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 19,038 
 

வயதாகிக் கொண்டிருப்பதால் இரவு இரண்டு மணிக்கு மேல் விழிப்பு வந்துவிடுகிறது, இங்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகியிருக்குமா? தூங்குவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் தூக்கம் வரவில்லை. சட்டென்று மேசையின் மேல் வைத்திருந்த “டைரி” ஞாபகம் வந்தது. எழுந்து விளக்கை போட்டு அதை தேடினேன்.

மேசையின் மேல் வைத்த ஞாபகம் இருக்கிறது. இப்பொழுது காணவில்லை வரவர ஞாபகமறதியும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இங்கு தானே வைத்திருந்தோம்? சுற்று முற்றும் பார்த்தேன். என்னை போல் வயதான ஒற்றை கட்டிலின் வலது ஓரத்தில் கீழே விழும் நிலையில் இருந்தது. இது எப்படி அங்கு வந்தது. இரவு படுப்பதற்கு முன்பு எடுத்து புரட்டி பார்த்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு படுத்தோமா? இல்லையே !அப்படியிருந்தாலும் புரண்டு படுத்தபோது கையில் தட்டுபட்டிருக்குமே? சரி இந்நேரத்துக்கு இதை பற்றிய ஆராய்ச்சி எதுக்கு?

கட்டிலில், அழுக்கு தலைகாணியை வைத்து, என்னுடைய ஓய்ந்து போன உடலை சாய்த்து டைரியை பிரித்தேன்.

டக்..டக்..டக்..யாரோ நடந்து செல்லும் சத்தம், இப்பொழுது என்னுடைய அறை பக்கம் வந்துகொண்டிருப்பது கேட்டது. விலுக்கென நிமிர்ந்தேன். எழுந்து சென்று விளக்கை அணைத்தேன். சத்தம் என் அறைமுன் அப்படியே நின்றது. மூச்சை பிடித்து உட்கார்ந்தேன். விளக்கை அணைத்தது தவறோ? வெளியே நடப்பவரின் கவனத்தை ஈர்த்துவிட்டதோ? நெஞ்சில் திடும் என ஒரு அதிர்வு. அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். சத்தம் இப்பொழுது அறையை தாண்டி செல்வது கேட்டது. பதினைந்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன். சத்தம் சுத்தமாய் மறைந்துவிட்டது. மெல்ல எழுந்து விளக்கை போட்டவன் மீண்டும் டைரியை எடுத்து விரித்தேன்.

என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு, எந்த குற்றசெயல்களில் ஈடுபட்டாலும் அதை சாதித்த கதையை ஒரு “டைரியில்” எழுதி வைத்து விடுவேன். இது உண்மையில் நல்ல பழக்கம்தான் நல்லவர்களுக்கு மட்டும். என்னைப் போல் உள்ளவர்களுக்கு இது மிக்க சிக்கலை உண்டு பண்ணி விடும். தினம் ஒரு கொலை, கொள்ளை, இப்படி ஏதாவது ஒன்றை எங்கள் வாழ்க்கையில் சந்தித்து கொண்டே இருப்போம். அதை எழுதி வைத்திருக்கும் போது எதிராளிகளிடம் வசமாக சிக்கிக் கொண்டு எங்களை காட்டிக் கொடுத்துவிடும். இருந்தாலும் என்ன செய்வது? இப்படியே பழகிவிட்டது.

நான் இந்த காரியத்துக்கு ஒப்புக் கொண்டிருக்ககூடாது, அவசரப்பட்டு ஒப்புக்கொண்டுவிட்டேன். ஒப்புக்கொண்டுவிட்டு வேண்டாம் என்று சொன்னால் செய்ய சொன்ன குழு என்னை சும்மாவிடாது. இல்லை என்னால் முடியாது என்று சொல்லி நான் ஒதுங்குவது எனக்கு தொழிலிலும் சிக்கலை உண்டு பண்ணிவிடும். அடுத்து வருபவன் இந்த காரியத்தை செய்து காரியம் பழமாகிவிட்டால், அந்த குழுவுக்கு அவன் நம்பிக்கைக்குரியவன் ஆகிவிடுவான். அதனால் ஒப்புக் கொண்டாக வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.

மும்பை துறைமுகத்தில் ஒரு ஆள் மூலம் என் கையில் ஒருபெட்டி ஒப்படைக்கப்பட்டு அது சென்னைக்கு கொண்டு வரப்படவேண்டும். இது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. கேட்டவுடன் ஆஹா என்று ஒத்துக்கொண்டேன். ஆனால் அடுத்து அவர்கள் சொன்ன வார்த்தை என்னை நடுங்க வைத்துவிட்டது. பெட்டியை கொண்டுவர உனக்கு எப்படி லட்சகணக்கில் பணம் கொடுக்கிறோமோ அதே போல் அந்த பெட்டி பலகோடி ரூபாய்களை சம்பாத்தித்து கொடுக்கும். அதனால் வழியில் நீ எங்கு வேண்டுமானாலும் எதிரிகளால் கொல்லப்படலாம். இதுதான் அவர்கள் சொன்ன வார்த்தை. இதை கேட்டவுடன் என்னால் முடியாது என்று சொல்லிவிட நினைத்தேன், ஆனால் சொல்ல நாக்கு மறுத்துவிட்டது, காரணம் இதற்காக அவர்கள் கொடுக்கப் போவதாக சொன்ன தொகை என் கண்களை சுற்றியது.

சுமார் அறுநூற்று சதுரமைல் பரப்பளவுள்ள மும்பையில், இந்த துறைமுக ஏரியாவே கண்ணை கட்டுவது போல் இருந்தது. அங்கு வந்து நிற்கும் பிரமாண்ட கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்குவதும், பெரிய பெரிய கண்டெய்னர்களில் ஏற்றிக் கொண்டு செல்வதும், தொழிலாளர்களின் மராட்டி, ஹிந்தி, இன்னும் ஏதேதோ பலபல மொழிகளின் சலசலப்பு. திடீரென வேறுமொழி பேசும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருந்தால் என்ன செய்வது? என்ற தடுமாற்றம் வருமே அந்த மனநிலையில் நின்று கொண்டிருந்தேன். மனித தலைகளின் கடலோ என்று தோற்றம் அளித்துக் கொண்டிருந்த இடத்தில் நான் மட்டும் வேலை வெட்டி இல்லாமல் சும்மா நிற்பதாக எனக்கு பட்டது. வருவோரும் போவோரும் என்னை உரசி உரசியே சென்னையே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு வந்துவிட்டேன்.

பெட்டியை கொடுக்கப் போகும் ஆள் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் என்று அவர்கள் முதலிலேயே சொல்லி இருந்தார்கள், என்னை பற்றியும், தோற்றம் பற்றியும் முதலிலேயே தகவல் தரப்பட்டுவிட்டது. அதன்படி நான் அங்கு நின்று கொண்டிருந்தது நாகரிகமான கனவான் உடையில். சற்றுதள்ளி என் “இனோவாவை” நிறுத்தி வைத்திருந்தேன். இப்பொழுது அதற்கு உரிமையாளன் நான். ஆனால் அதற்கு உண்மையான உரிமையாளன் வண்டியை காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கலாம் எனக்கு தெரியாது. நான் நிறுத்தி வைத்திருந்த இனோவாவுக்கும், எனக்கும் இப்பொழுது எந்தவிதமான சம்பந்தமுமில்லை, காரணம் என்னுடைய பாதுகாப்பு கருதியே காரைவிட்டு கொஞ்சம் தொலைவு சென்று நின்று கொண்டேன், காருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல்.

சட்டென யாரோ இடித்து சென்றார்கள். கோபத்தில் சுந்தரதமிழில் இரண்டு கெட்டவார்த்தைகளை வீசினேன். இடித்து விட்டு கடந்தவன் சட்டென நின்று முறைத்தான். உடனே உஷாரானேன், அவன் சண்டைக்கு வர வாய்ப்புண்டு. இந்த நேரத்தில் இந்த சண்டை தேவையில்லாதது. எனக்கென்ன தெரியும்? இவன் தமிழ் தெரிந்தவன் என்று? மெல்ல அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். முறைத்தவன் அப்படியே சற்று பின்வாங்கி திரும்பி நடந்தான். அப்பாடி !

இப்பொழுது ஜில்லென்று யாரோ தோளைத் தொட உடலை குளுமையாக்கி திரும்பியவன் அப்படியே சில்லிட்டு போனேன். தொட்டது ஒரு இளங்குமரி !அவள் அணிந்திருந்த உடைகள் !

வேண்டாம் விட்டு விடுவோம். இந்தியில் மணி என்ன என்று கேட்டாள். சே இந்த இடத்தில் இப்படி வெட்டியாய் நின்று கொண்டிருந்தால் இப்படிப்பட்ட கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும், முதலில் அந்த பெண்ணின் மீது இருந்த கவனத்தை கஷ்டப்பட்டு பிரித்தேன். இந்த மாதிரி வேலைக்கு வந்து விட்டால் முதலில் கவனத்தை சிதற வைக்ககூடாது, அலட்சியமாய் பதினொன்று இந்தியில் விளாசிவிட்டு சற்று நகர்ந்து கொண்டேன். என்னைப் போல ஆட்களுக்கு பல பாஷைகள் முக்கியம்.

இப்பொழுது மும்பை வெயில் கசகசத்தது, கார்களும், வண்டிகளும், அதையும் தாண்டி ஆட்களின் கசகசப்பும், அவர்கள் சளசள வென்று பேசிக் கொண்டு செல்வதும், உற்று கவனித்தால் பாதி அளவு புலம்பல்களாகத்தான் இருக்கும்.

“ஹரே” குரல் சற்று வலிமையான கை ஒன்று தோளை தொட திரும்பியவனிடம் “ஹரேமதராசி” ஏர்போர்ட்டுக்கு எப்படி போவது? கேள்வி கேட்டதும், முகம் பிரகாசமாகி கையை நீட்டினேன். குலுக்கியவனுக்கு வயது நாற்பதுக்குள் இருக்கலாம், குலுக்கிய கையின் உறுதி அந்த ஆளின் பலத்தை பறை சாற்றியது. அவனுக்கு என் கைபச்சாவாக இருந்திருக்க வேண்டும், என்னை உறுத்து பார்த்தான், நாலரைஅடி உயரம், எலும்பும் தோளுமான உருவம் இவனிடம் இந்த காரியத்தை ஒப்படைத்திருக்கிறார்களே என்று எண்ணுகிறான் போலிருக்கிறது. அதற்கென்ன பண்ணுவது என்னுடைய உடல்வாகு அப்படி. ஆனால் என் உடலைவிட என் மண்டைக்குள் இருக்கும் “நூறுகிராம்” மீது அலாதி நம்பிக்கை உண்டு எனக்கு.

சட்டென பெட்டியை வாங்கியவன், அவனை விட்டு பிரிந்து வேகமாய் ஓடிவந்து நிறுத்தி வைத்திருந்த இனோவாவை தொட்டேன். “என்மண்டையில் இருந்த “நூறுகிராம்” எச்சரித்தது. பெட்டியை காரில் வைத்துவிட்டு சட்டென கார் கதவை திறந்து வண்டியை உசுப்பியவன் அந்த வாகன நெரிசலை தட்டுதடுமாறி கடந்து வெளியே வந்து “தாதர்” பாதையை பிடித்தேன்.

கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தவன் மணி பனிரெண்டு என்று காட்டியதும், இனோவாவை ஓரங்கட்டினேன். பெட்டியை எடுத்துக் கொண்டு காரின் அந்தப்புற கதவை திறந்து சிறு ஓட்டம் ஓடி, ஆறுவழி சாலையில், வாகனங்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்க சிரமப்பட்டு அந்தப்புறம் கடந்து அங்கிருந்த பிரமாண்டமான ஹோட்டலில் புகுந்தவன் முன்புறம் கண்ணாடி வழியாக என் இனோவை கண்கானித்தேன்.

வேகமாக வந்த கார் ஒன்று இனோவானின் பின்புறம் நிற்கவும் அதிலிருந்து இருவர் வேகமாக வந்து என் இனோவாவை தொட்டு முன்புறம் பின்புறம் பார்த்துவிட்டு வெளியே சுற்றுமுற்றும் பார்த்தனர். என் கண்களுக்கு அவர்கள் கையில் தோட்டா வைத்திருந்தது தெரிந்தது. கையில் வைத்திருந்த பெட்டியுடன் சட்டென என்னை மறைத்துக் கொண்டு, வேகமாய் அந்த ரிசப்ஷனில் உட்கார்ந்திருந்த அழகியின் மீது வலுக்கட்டாயமாய் பார்வையை திருப்பாமல் உள்புறம் கடந்தேன். எப்படியும் பத்து நிமிடத்துக்குள் இந்த ஹோட்டலுக்குள் மோப்பம் பிடித்து வந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டாம் தளத்தில் பதிவு செய்யப்பட்ட அறை எண் நூற்றி ஏழுக்குள் நுழையாமல் பாதாளத்திற்குள் இருந்த கிச்சன் பகுதிக்குள் நுழைந்தேன். அங்கிருந்து ஒருவன் என்னிடம் வந்து பெட்டியை கையில் வாங்கி மளிகை பொருட்கள் குடோனில் நுழைந்தான். நான் அதற்குள், என் உடைகளை ரூம்பாய் உடைகளாக மாற்றிக் கொண்டேன்.

இப்பொழுது தைரியமாய் இரண்டாம் தளத்தில் நான் பதிவு செய்திருந்த அறையை தாண்டி அங்கும் இங்கும் நடந்து சென்று கொண்டிருந்தேன். என்னை அடையாளம் கண்டிருக்க வாய்ப்பில்லை என்ற தைரியம்தான். சட்டென என்னை இடித்துக் கொண்டு இருவர் ரூம் எண் நூற்றிஏழிடம் சென்று கொண்டிருந்தனர். நான் அவர்களை கவனிக்காதவன் போல் பக்கத்து அறைகதவை தட்டி கதவை பாதி திறந்த நிலையில் வைத்துக் கொண்டு என்னை அழைத்தீர்களா? என்று அங்கிருந்த அழகிய பெண்ணிடம் கேட்டுக் கொண்டிருந்தாலும், வெளியே நடப்பவைகளை காதில் கூர்மையாக வாங்கிக் கொண்டிருந்தேன்.

பூட்டை உடைச்சுடுவமா? இந்தியில் ஒருவன் கேட்பதும், இவன் எதுக்கு? உள்ளே ஒண்ணுமே இருக்காது, அவன் இந்நேரம் தப்பிச்சு போயிருப்பான், வெறுப்புடன் இந்தியில் உறுமிவிட்டு சரிவா எங்க போயிடுவான் இந்த மும்பையை விட்டு ! பாத்துடுவோம். நம்ம ஆளுங்களை இரயில்வே ஸ்டேசன்லயும், ஏர்போர்ட்லயும் நிக்க வைச்சிருக்கயில்லை, அவன் இந்தியில் மற்றவனிடம் கேட்டுக் கொண்டே போவது என் காதில் விழுந்து தேய்ந்து போய்க் கொண்டிருந்தது.

அதற்குள் அந்த பெண் ஏதேதோ சொல்லி கொண்டிருந்தது எதுவும் என் காதில் விழாமல் அம்மா மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள், என்று தலைகுனிந்து சொல்லவும், அந்த பெண் என்ன ரூம்பாய் நீ ஒருமுறை சொன்னதை கூட ஞாபகம் வைத்து கொள்ளாமல், காச் மூச்சென்று கத்தினாள். அவளிடம் மீண்டும் ஒரு முறை மன்னிக்க வேண்டி தலை குனிந்தேன். அதற்குள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதுக்குள் திட்டத்தை வகுத்துக் கொண்டேன்.

தாதர் வரை போய்விட்டால் போதும் அங்கிருந்து கிளம்புவது கொஞ்சம் சுலபம், மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தேன். ஏதோ பெரிய பாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருந்தவன் என்னை பார்த்ததும் அருகில் வந்தான். நான் அவன் காதில் மெல்ல ஓதினேன்.

அவ்வளவு பெரிய காய்கறி சந்தைக்குள் நான் வெறும் லுங்கி பனியனுடன் மூச்சு திணறிக் கொண்டிருந்தேன். அவர்கள் ஹோட்டலுக்கு காய்கறிகளையும், தக்காளி பழங்களையும் ஏற்றுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வண்டிக்கு கிளீனராய் வந்திருந்தேன். மூட்டை ஏற்றுபவன் ஒரு மூட்டையை நழுவவிட சட்டென குனிந்து அதை கைகளில் தாங்கிக் கொண்டேன். அவன் இந்தியில் நன்றி சொன்னான். புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டவன், அவன் தோளில் நட்புடன் கைவைத்து “ஜீ ஒரு ஹெல்ப்” என்று ஆங்கிலமும் இந்தியும் கலந்து பேசினேன்.

அவன் சற்று நேரம் என் முகத்தை பார்த்து நின்றான். நான் ஒரு பெரிய நோட்டை அவன் கண் முன்னால் காட்டினேன். அவன் சட்டென அதை வாங்கி தன் டிராயர் பையில் போட்டுக் கொண்டவன், “பத்துநிமிசம்” எங்கோ சென்று மறைந்தான். பத்து நிமிடங்கள் ஓடியது. அதற்குள் வண்டிக்குள் காய்கறிகள் ஏற்றப்பட்டு கிளம்புவதற்கு தயாரானது. டிரைவர் என்னை கண்ணை காட்டினான், நான் சட்டென அவன் அருகில் வந்து ஐந்து நிமிடம் பொறு, என்று அவன் கையில் ஒருநோட்டை திணித்தேன்.

அதற்குள் மூட்டை தூக்குபவன் அருகில் வந்தான், வா என்று என் கையை பிடித்து இழுத்தான்.நான் வேகமாய் டிரைவரிடம் கைகாட்ட அவன் ஒரு பெரிய காய்மூட்டையை என்னிடம் கொடுத்தான். அதை வெளியில் பார்க்க காய்மூட்டை, உள்ளே அந்த பெட்டி சத்தமில்லாமல் உட்கார்ந்திருந்தது. அதை சுமப்பது கொஞ்சம் சிரம்மாக இருந்தது.

கூட்டிசென்றவன் ஒரு பிரமாண்டமான லாரி அருகில் சென்று டிரைவரிடம் ஏதோ சொல்லிவிட்டு, திரும்பி என்னிடம் இந்த லாரி ஹைதராபாத் வரை போகும் என்றான். டிரைவர் என்னை பார்த்தான்,கையில் பிடித்த மூட்டையை தலையில்சுமந்து (சுமைகூலியாய் நின்று கொண்டிருந்தேன்) “க்யா” என்று ஆரம்பித்தவன், ஐந்து விரல்களை விரித்து காண்பித்தான்,

வேண்டுமென்றே அங்கும் இங்கும் தேடி கொடுப்பதாக பாவலா செய்து அவனிடம் பணத்தை எண்ணி கொடுத்தேன். ஏதேதோ மூட்டைகளுடன் நானும் ஏறி ஒரு மூட்டையாய் உட்கார்ந்து கொண்டேன். என் அருகில் மூட்டைக்குள் அந்தபெட்டி பத்திரமாய் அமர்ந்திருந்தது. பிரமாண்டமான லாரி தன் உடலை அசைத்து கிளம்பிவிட்டது.

எதிரிகள் இந்த பெட்டி ஒரு சாதாரண மூட்டையாய் நகர்ந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டேன். அவர்களின் பார்வை முழுக்க இரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் இருக்கும், தரைவழியில் இப்படி கூலியாளாய் போய் கொண்டிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. பார்க்கலாம் அதிர்ஷ்டம் நம்மை எவ்வளவு தூரம் கொண்டு போகிறது என்பதை.

கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பகலும் இரவும் பயணம், உடல் அப்படியே அயர்ந்து விட்டது. டிரைவர் நிறுத்திய இடத்தில் காலை கடன்களை முடித்து, கிடைத்ததை உண்டு, எப்படியோ தெலுங்கானா எல்லைக்குள் வந்துவிட்டேன்.

இப்பொழுது நான் ஒரு கிராமத்தான் .ஹைதராபாத் எல்லைக்குள் தலையில் சுமையுடன் நின்றுகொண்டிருப்பவன் ஒரு பெரிய கடத்தல் வேலையை செய்து கொண்டிருப்பவன் என்றால் எவனும் நம்ப போவதில்லை. என்னை தாண்டி நடந்து செல்லும் போலீஸ்கூட என்உருவத்தை அசூயையாய் பார்த்துவிட்டு செல்வதை கண்டு மனதுக்குள் நகைத்து கொள்கிறேன். போலீஸ்காரர்களே என்னுடன் பயணிக்கும் இந்த மூட்டையில் எனக்கு மட்டுமே பல லட்சம் ரூபாய் வருமானம் தரக் கூடிய பொருள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

இப்பொழுது தைரியமாய் சித்தூர் செல்வதற்கு பஸ் எது என்று எனக்கு தெரிந்த தெலுங்கில் விசாரித்து கொண்டிருக்கிறேன். எந்தகாரணத்தை கொண்டும் இரயிலை உபயோகப்படுத்தகூடாது என்று நினைத்துக் கொண்டேன். அதுவும் மாறி மாறி செல்லவேண்டும் என்று முடிவுசெய்து கொண்டேன். என்னை யார் தொடர்ந்தாலும் அவனை குழப்ப இது ஒரு தந்திரம். பஸ்பயணம் இரண்டு நாட்களானாலும் பரவாயில்லை என்று நினைத்திருந்தேன்.

சித்தூரில் என்னை அடையாளம் கண்டு “அண்ணே” என்று சத்தம் போட்டு அழைத்த பாசக்காரபாண்டியை முறைத்தேன். முட்டாள் இப்படி சத்தம் போட்டு என்னை காட்டிக் கொடுத்துவிட்டாயே, அடிக்குரலில் மிரட்டினேன். சாரிண்ணே சாரிண்ணே, நீங்க சொல்லியிருந்தபடி இந்த இடத்துக்கு வந்து இரண்டு நாளாச்சு, சரி இனி வரமாட்டீங்க அப்படீன்னு மனசு வெறுத்து இன்னைக்கு இராத்திரி கிளம்பிடலாமுன்னு நினைக்கும் போது நீங்க வந்துட்டீங்க, அதனால் உணர்ச்சி வசப்பட்டு கத்திட்டேன், மன்னிப்பு கேட்கும் தோரணையில் சொல்ல நான் மணி இப்பவே பத்தாயிருக்கும், சரிவா என்று மூட்டையுடன் நடக்க ஆரம்பித்தேன். அவன் வேகமாய் என்னை பின் தொடர்ந்தவன் சிறிது நேரத்தில் என் முன்னால் வந்து ஒரு பழைய அம்பாசிடரை காட்டினான். இனி என் பிரயாணம் அம்பாசிடரிலா, எப்படியோ நாளை விடியறதுக்குள் சென்னை போய் சேர்ந்தால் சரி. கிளம்புவோம், டிக்கியை திறந்து என் மூட்டையை வைத்துவிட்டு முன்புறம் வண்டியில் வந்து ஏறிக்கொண்டேன்.

வண்டி மெல்ல மெல்ல ஆந்திர எல்லையை கடக்க ஆரம்பித்தது. சற்று நிம்மதியாய் கண்ணயர்ந்தேன். திடீரென்று வண்டி பிரேக்போட்டு நிற்க சட்டென்று சுதாரித்து என்னவென்று பார்த்தேன். ஒருவன் அடிபட்டு காயங்களுடன் துடித்துக் கொண்டிருக்க, அங்கு கூடியிருந்தவர்கள் ஏதாவது ஒருவண்டி கிடைக்குமா என்று ஒவ்வொரு வண்டியை கையை காண்பித்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாசக்காரபாண்டி என்னை பார்த்து கண்களால் என்ன செய்யலாம் என்று கேட்டான், நான் வண்டியை விடு என்று சொன்னேன், அதற்குள் காரியம் மிஞ்சிவிட்டது, வண்டியை நான்கைந்து பேர் சுற்றிக்கொண்டு அடிபட்டவனை பின்புற கதவை திறந்து உள்ளே திணித்துவிட்டார்கள். நான் எதிர்ப்பை காட்ட சத்தம் போட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அவன் ஐயோ, அம்மா என்று துடித்துக் கொண்டிருந்தான், உடன் அவன்கூட வந்த அவன் பொண்டாட்டியையும் காருக்குள் திணித்தனர். என் மண்டையில் இருக்கும் நூறுகிராம் மட்டும், “உஷார்” என் மனதை தட்டியது. நான் பாண்டியை முறைத்து உன்னால்தான், நீ ஏன் வண்டியை நிறுத்தினாய்? அவன் மன்னிச்சுங்குங்க அண்ணே என்று சொல்லி வண்டியை வேகமாய் அழுத்தினான்.

வண்டியின் வேகமும், எதிரில் முகத்தில் அடித்த காற்றும் பிரயாணத்தினால் வந்த அலுப்பும், என் மூளையின் அபாய அறிவிப்பை மீறி அப்படியே தூக்கத்துக்கு அழைத்து சென்றது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை. வண்டி சடாரென ஒரு இடத்தில் நின்றது. எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் சட்டென விழித்துக்கொள்ளும் பண்பு என்னிடம் உண்டு, அப்படி விழித்தவன் கேள்விக்குறியாய் பாண்டியை பார்க்க அவன் கையில் ஒருகத்தியை பார்த்தவுடன் திகைத்துவிட்டேன்.

பாண்டி மன்னிச்சுங்குங்க அண்ணே இங்கேயே இறங்கிக்கறீங்களா? அவனின் பேச்சுக்கு பின்புறமிருந்து ஒரு குரல் சொன்னது, கையில வச்சிருக்கறதுல குத்தி கீழேதள்ளிடு. அதிர்ச்சியுடன் பின்புறம் பார்க்க அன்று மும்பை துறைமுகத்தில் நான் கெட்டவார்த்தையால் அர்ச்சனை செய்தவன், அதுமட்டுமல்ல, என்னிடம் நேரம் என்ன என்று கேட்ட அந்த அழகு பெண் அவன் அருகில் உட்கார்ந்திருந்தாள். பாண்டி சற்று தயங்கினான், தப்பிக்க, அந்த சந்தர்ப்பம் போதுமானதாக இருந்தது எனக்கு. அப்படியே இறங்கி கண்மண் தெரியாமல் அந்த இருளில் ஒரே ஓட்டம் ஓட ஆரம்பித்துவிட்டேன். பின்னால் உட்கார்ந்திருந்தவன் கார் கதவைதிறந்து என்னை விரட்டி வருவதற்கு முயற்சி செய்தான். ஓட்டுநர் இருக்கையில் இருந்த பாண்டி கூப்பிட்டான்“ வேலு” அவன் போறான் விடு, அவன் கொண்டு வந்ததை விட்டுட்டு ஓடறான், நீ ஏறு நாம கொண்டு போய் பார்ட்டிகிட்ட கொடுத்துடலாம். வண்டி அந்த இடத்தை விட்டு சீறிக்கொண்டு கிளம்பியது.

நாக்கு மேலண்னத்தில் ஒட்டிக்கொள்ள ,ஓடிக்கொண்டிருந்த நான் சட்டென வண்டி செல்லும் சத்தம் கேட்டு அப்படியே நின்று திரும்பி பார்த்தேன். இரண்டு நாட்கள் லாரியில் பயணம், இரண்டு நாள் முழுக்க பஸ்ஸில் பயணம், அப்படி பயணம் செய்து கடைசியில் யாரோ கொண்டு போவதற்கா இத்தனை பாடுபட்டேன்.

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அப்படியே அந்த தரையில் படுத்தவன் ஆகாயத்தை பார்த்தேன், அந்த வானவெளியில் நட்சத்திரங்கள் என்னை கண்ணடித்து சிரிப்பது போல் இருந்தன. என்ன விந்தையான உலகம் இது ? பார்த்தாயா என்று கேட்பது போல் இருந்தது. இந்த மனிதர்கள் உன் உருவத்தை வைத்தே எடை போடுகிறார்கள். வெறும் நான்கரை அடியும், எலும்பை சுற்றி தோலால் போர்த்தப்பட்ட உன் உடம்பும் எப்பொழுதும் வலிமையற்றவனாக காட்டிக்கொண்டே இருக்கிறது. உன்னுடைய மண்டைக்குள் இருக்கும் நூறுகிராம் எடையுள்ள பொருள் மற்றவர்களுடையதை விட வேகமாக வேலை செய்யும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

வாய்விட்டு சிரிக்கிறேன், விழுந்து விழுந்து சிரிக்கிறேன், போதும் இப்படியே உறங்குவோம், காலையில் ஏதாவது வண்டியில் சென்னை போய்க் கொள்ளலாம். முடிவு செய்து முடிப்பதற்குள் தூக்கம் கண்ணை சுற்றி வளைத்துக் கொண்டது.

கலர் கலராய் கனவுகள் வந்தது ! என்னை தீர்த்து கட்ட மும்பையில் இரண்டு பேர் விரட்டியது,நான் என்மொழியில் திட்டிய போது இடித்தவன் முறைத்தது, மணிஎன்ன என்று கேட்ட இளம்பெண், மூட்டை தூக்குபவன், ஐந்து விரல்களை காண்பித்து பணம் கேட்ட லாரிடிரைவர், சித்தூருக்கு பஸ் தேடியது, கடைசியாக என்னை அண்டி தொழில் கற்றுக்கொண்ட பாண்டி, அடிபட்டு வேதனையில் இருப்பதாய் நடித்தவன், அவனோடு வந்த அந்த பெண் இவர்கள் வரிசையாய் கனவில் வந்தனர்.

என்னை வேட்டையாட எத்தனை வழிகள் வைத்திருந்தாலும் எனக்கென தனிவழி எப்படியும் உருவாக்கிக் கொள்ள முடியும். ஒரு பெட்டியை கொண்டு வர பலலட்சம் கொடுக்க தயாராக இருக்கும் குழுவுக்கு இந்த பெட்டி மூலம் எவ்வளவு தொகை கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும். என்றாலும் என் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் பறிக்கப்படும் என்று எச்சரித்து விட்ட பின்னால் போதிய ஏற்பாடுகள் என்னால் செய்யாமல் இருந்திருக்க முடியுமா?

மும்பை ஹோட்டலிலேயே அந்த பெட்டி பத்திரமாய் பார்சல் சர்வீசில் ஒப்படைக்கப்பட்டு குறிப்பிட்ட நபருக்கு சாதாரண பார்சலாக போய் சேர்ந்து விடும். என்றாலும், அவை அப்படி அனுப்ப வாய்ப்பே இல்லை, என்பதை காட்ட நான் இத்தனை தூரம் மெனக்கெட வேண்டியதாகி விட்டது.எதிரிகளின் சந்தேகம் நானும், என் கையில் இருக்கும் பெட்டி மட்டுமே, அதற்காக என்னை குறிவைத்து விரட்டுவார்களே தவிர சாதாரணமாய் அவர்களுக்கு போய் சேரும் அந்த பார்சலில் அல்ல.

எப்பொழுது என்னை புரிந்து கொள்ள போகிறது இந்தகூட்டம் ?, நான் தோற்றத்தில் வேண்டுமானால் உங்களை விட வலிமையற்றவனாக இருக்கலாம், ஆனால் என் மூளையின் செயல்பாடுகளை யாராலும் கணிக்கமுடியாது. பணம் என்பது எனக்கு முக்கியம் என்றாலும் இந்த மாதிரி ஆபத்தான விளையாட்டுக்கள் என் திறமையை பறைசாற்றிக் கொண்டே இருக்கும், இது கர்வமல்ல, தன்னம்பிக்கை. ஆனால்……

இதுபோல் நான் செய்த சாகச செயல்கள் எல்லாமே குற்றவாளிக் கூட்டங்களுக்கே பயன் தரும் வகையில் இருக்கும் போது ,நான் சமுதாயத்தில் இதுவரை ஒரு குற்றவாளியாகவே இருக்கிறேன்.எத்தனை நாள் இப்படி பலருக்கு வேலைசெய்து, உயிருக்கு உத்தரவாதமில்லாமல் பயந்து கொண்டிருக்க முடியும்.

யார் இருக்கிறார்கள் எனக்கு உறவு என்று? இனியும் இப்படி சம்பாதிப்பது எதற்கு? எனக்குள் அமைதி வேண்டும், எங்காவது ஓய்வாக உட்கார்ந்து விடவேண்டும். பதினைந்து வயதில் ஆரம்பித்த இந்த களவு வாழ்க்கை, முப்பது வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டது. போதும் இந்த வாழ்க்கைக்கு முடிவு கட்டி விடவேண்டும். மனதுக்குள் ஒரு தீர்மானம் வந்தது

“மைலார்ட்” கூண்டில் நிற்கும் இந்த குற்றவாளி தானாக சரண்டைந்து தனது குற்றங்களை ஒப்புக் கொண்டாலும் அவன் செய்த கொலைகளையும், கொள்ளைகளையும், இந்த சமுதாயம்“ குற்றம் இல்லை”என்று ஒப்புக்கொள்ள முடியாது, அதனால் குற்றங்கள் செய்தவன் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்ற அடிப்படையில் குற்றவாளிக்கு அதிக பட்சதண்டனை அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

குற்றவாளி தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்து விட்டாலும், அவன் செய்த தீய செயல்களுக்குரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டு அவனுக்கு“ஆயுள்தண்டனை” அளிக்கும்படி இந்தகோர்ட் உத்தரவிடுகிறது.

வழக்கம் போல இரவு இரண்டுமணிக்கு மேல் சட்டென தூக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிட்டது. விளக்கை போட்டுக் கொண்டு டைரியை விரித்து படிக்க ஆரம்பித்தேன் .நான் இதுவரை செய்திருந்த ஒவ்வொரு குற்றங்களையும் எப்படி அதை செய்து முடித்திருந்தேன் என்பதையும் தேதி வாரியாக….

டக்..டக்..டக்.. வழக்கமான சிறைக் காவலரின் பாராநடை என் அறை முன் வந்து கொண்டிருக்க, நான் சட்டென எழுந்து விளக்கை அணைத்து அப்படியே உட்கார்ந்திருக்கிறேன். சிறைக்காவலர் என் அறைமுன் நின்றுவிட்டு மெல்லிய முன்புறுவலுடன் வயதாகி விட்டதால் அவன் இளமை காலத்தில் எழுதி வைத்த டைரியை படித்து கொண்டிருக்கிறான்” சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *