ஞாபகம் வருதே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 110,819 
 

நடந்து சென்று கொண்டிருந்த என் மீது யாரோ புண்ணீயவான் காரை ஓட்டி வந்து, மோதி உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் ஆழ்ந்த மயக்க நிலை (கோமா) இருக்கிறேன்.

அப்பொழுது இரண்டு உருவங்கள் என்னை பிடித்து எங்கோ கொண்டு போகிறார்கள். நான் மெல்ல திமிற முயற்சிக்கலாம் என்று பார்க்கிறேன், ஆனால் அவர்கள் பிடி இரும்பு பிடி என்பார்களே அப்படி இருந்தது.

என்னை எங்கோ நிறுத்தி வைத்திருப்பது தெரிகிறது, எங்கு என்று தெரியவில்லை, எங்கும் புகை மண்டலமாக இருக்கிறது. ஆனால் ஆச்சர்யம் புகை கண்களை எரிக்காமல் குளுமையாக இருந்தது.எதிரில் யாரோ வந்து உட்காருவது தெரிகிறது. கணைக்கும் சத்தம் கேட்கிறது. ஆனால் கணைப்பு என்பது ஒரு யானையின் பிளிறல் போல் இருந்தது.

அங்கு வேறு யார் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. என் எதிரேயே இருவரும் பேசிக்கொள்வதும் எனக்கு கேட்கிறது. பின் ஒரு குரல் இவன் பெயர்? அது என் எதிரில் உட்கார்ந்திருக்கும் நபரின் குரல்தான். அப்படியே நடுங்கி போகிறேன். ஒரு சிங்கத்தின் குரல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் அது போலத்தான் இருந்தது.

இவனுக்கு காலம் முடிந்து விட்டதா? கேள்வி வேறு பக்கம் கேட்பதாக பட்டது.

இல்லை, யம தர்மராஜா. இவனுக்கு இதே வேலையாக போய் விட்டது. இவன் இப்படி வந்ததை கணக்கிட்டு, ஆயுள் காப்பீடு பத்து வருட்த்திற்கு ஒரு முறை பத்தாயிரம் கட்டியிருந்தாலும், ஐம்பதாயிரம் ஆயிருக்கும்.

புரியவில்லை, காலம் முடியாதவனை எதற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள்?

மன்னிக்க வேண்டும் யம தர்மராஜா, இது போல ஐந்து முறை வந்து போய் விட்டான்.

இவன் ஜாதகத்தில் உங்களை அடிக்கடி பார்த்து போக வேண்டும் என்று விதி எழுதி இருக்கிற்தோ என்னவோ?

சித்திரகுப்தா நம் மீது தவறை வைத்து விட்டு, இவன் ஜாதகத்தை குறை சொல்லக்கூடாதல்லவா? நாம் இவனை இங்கு அழைத்து வந்தது நம் தவறுதானே.. அது சரி ஐந்து முறை இங்கு வந்து போயுள்ளான் என்று சொன்னீர்களே, அது எப்படி?

மன்னா இவனது பத்து வயதில் ஒரு முறை ஆற்றில் விழுந்து விட்டான், அவனை இங்கு கொண்டு வந்தோம். இவனுக்கு இன்னும் ஆயுள் உள்ளது, அதுவரை பூமியில் படாத பாடு வேண்டும் என்ற விதி இருப்பதால் இவனை அனுப்பி விட்டோம். ஒரு படகோட்டி இவனை ஆற்றில் இருந்து காப்பாற்றி விட்டான்.

ஹா..ஹா..நல்ல வேடிக்கை, அடுத்தது எப்பொழுது இங்கு வந்தான்?

இவனது இருபதாவது வயதில் மாணவனாய் இருந்த போது அடங்காமல் மற்ற மாணவர்கள் கூட ரகளை செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

அப்படியா ! அந்த வயதில் இவனுக்கு என்ன ரகளை வேண்டிக்கிடக்கிறது.

யம ராஜா அவன் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தான்.

கல்லூரிக்கு செல்வது நம்மை மேம்படுத்திக்கொள்வதற்குத்தானே. அங்கு கல்வி மட்டும் தானே கற்பிப்பார்கள்.

நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் யம ராஜா ! இவர்கள் காலத்தில் ஐம்பது சத விகித மாணவர்கள் மட்டுமே கல்வியில் கவனம் செலுத்துகிறார்கள்.

மற்றவர்கள்?

அவர்கள் கவனத்தை கவர ஆயிரம் வழிகளை கண்டு பிடித்திருக்கிறார்கள்.எல்லாவற்றிலும் ஐந்து ஆறு சத விகித மாணவர்கள் ஈடு பட்டு வாழ்க்கையை பாழ்படுத்திக்கொள்கிறார்கள்.

சரி..அப்புறம் இவனை எப்படி அனுப்பினீர்கள்.

இவனுக்கு இன்னும் ஆயுள் இருக்கிறது என்பதால், அந்த மருத்துவ மனையில் நல்ல மருத்துவர் இவனுக்கு மருத்துவம் பார்த்து இவனை காப்பாற்றி விட்டார்.

நல்ல வேடிக்கைதான், அடுத்ததாக மீண்டும் எப்பொழுது இங்கு வந்தான்?

சரியாக முப்பதாவது வயதில் மீண்டும் இங்கு கொண்டு வந்தோம்.இவனுக்கு பெண் தேடி தேடி இவன் பெற்றோர் மனம் வெறுத்து நீ ஒழுங்காய் இருந்திருந்தால் உனக்கு பெண் கொடுத்திருப்பார்களே என்று சொல்லி விட்டதால் இவன் மனம் வெறுத்து அவர்களை சும்மாவாகிலும் மிரட்ட வெறும் தண்ணீரை விசம் என்று சொல்லி வாயில் ஊற்றி விட்டான்.

இவன் கெட்ட நேரம் என்னவோ இவன் ஊற்றி வைத்திருந்த பாட்டிலை மாற்றி விட்டு பூச்சி மருந்து பாட்டிலை அங்கு யாரோ வைத்திருந்திருக்கிறார்கள். இவன் தண்ணீர்தானே என்று ஊற்றி விட அது இவன் உயிருக்கு உலை வைத்து விட்டது.

சரி அப்புறமும் இவனை ஏன் விட்டு விட்டீர்கள்?

மன்னா இன்னும் ஆயுள் முடியாததால் அவனை.அனுப்பி விட்டோம்.

அவன் பூமியில் எப்படி பிழைத்தான்?

அதை ஏன் கேட்கிறீர்கள் யம ராஜா, இவன் பெரிய குடிகாரன், இந்த குடியே இவன் உடல் முழுக்க விசமாகி இருந்த்து. இதில் இந்த விசம் என்ன செய்யும்?. பொது மக்கள் சிலர் இவன் குடலை சுத்தம் செய்ய ஏதோ ஒரு நாற்றமெடுக்கும் பொருளை இவன் வாயில் ஊற்றி அதன்

நாற்றம் தாங்காமல் வாயின் வழியாக வாந்தி எடுத்து தப்பி பிழைத்துக்கொண்டான்.

இதுவும் வேடிக்கைதான், அடுத்து எப்பொழுது இங்கு வந்தான்?

மன்னா சரியாக நாற்பதாவது வயதில் இங்கு வந்தான். அப்பொழுது இவனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உருவாகி இருந்தார்கள்.

அடேடே பரவாயில்லை, பொறுப்பானவனாகி விட்டான்.

எங்கே யம ராஜா, அரசாங்கம் தலையாய் அடித்துக்கொள்கிறது, மருத்துவர்களும் சொல்கிறார்கள் தலைக்கவசம் போட்டு வாகனங்களை ஓட்டு என்று கேட்டால்தானே. அன்று தலைக்கவசம் அணியாமல் சென்றவன் எதன் மீதோ மோதி மண்டை உடைய மருதுவமனைக்கு கொண்டு போகப்பட்டான்.

அப்புறம் அவனை என்ன செய்தீர்கள். அவனுக்கு இன்னும் ஆயுள் முடியவில்லை என்று மீண்டும் ஒரு “தலை அறுவை நிபுணர்” இவன் தலையை அறுவை செய்ததின் மூலம் பிழைத்துக்கொண்டான்.

சரி இந்த முறை இவனை என்ன செய்வதாக உத்தேசம்? யம ராஜா கொஞ்சம் இவன் கால கணக்கை போட்டு பார்த்து விட்டு சொல்கிறேன்.

மன்னியுங்கள் யம ராஜா, இவனுக்கு ஆயுள் இன்னும் இருப்பது போல்தான் தெரிகிறது,எதற்கும் இவன் தொடர்ந்து இங்கு வந்து தொல்லை தருவதால், பூமிக்கு சென்று இவன் நிலைமையை பார்த்து முடிவு செய்வோம்.

நானும் வருகிறேன் சித்திர குப்தா !

சே மனுசன் பாவம் நல்ல மனுசன்..மூணு நாளா கண்ணை திறக்காம இருக்காரு.

மற்றொருவர் என்ன பொழச்சுக்குவாறா?

என் கிட்ட கேக்காதப்பா ?போய் டாக்டர் கிட்ட கேளு இல்லை பொழச்சுகிட்டா நல்லது.

மருத்துவமனையில் அவருக்காக நிறைய கூட்டம் நின்று கொண்டிருக்கிறது.

சித்திரகுப்தா “பார்த்தாயா ! இந்த மனிதனுக்காக எத்தனை பேர் பிரார்த்திக்கிறார்கள்.

யம ராஜா நன்றாக உற்று பாருங்கள், இதில் பாதி பேருக்கு மேல் இவனுக்கு கடன் கொடுத்துள்ளவர்கள். அவர்களுக்கு இவன் பிழைத்தால்தான் கொடுத்த பணம் வரும்.

சரி அது பூமியில் வாழும் மனிதர்களின் பாடு, இவனை பிழைக்க விட்டு விடுவாயா?

ஆம் யம ராஜா, அவனை மருத்துவர்களால் பிழைக்க வைத்து விடுவோம். இன்னும் கொஞ்ச நாள் இந்த பூமியில் கஷ்டங்களை அனுபவிக்கட்டும்.

சரி வா போவோம்.

மருத்துவ மனையில் சட்டென கண் விழித்த நான் கண்ணை திறந்து பார்த்தேன். நான் கடன் வாங்கியவர்கள் எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்த்தை கண்டவுடன் சட்டென்று கண்ணை மூடிக்கொண்டேன்.

அவரூக்கு ஞாபகம் வந்துடுச்சு, வந்துடுச்சு..சந்தோச குரலகளுடன் கடன் கொடுத்தவர்களும், உடன் மனைவி மக்களும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *