மண்ணில் விழுந்த மாங்கனி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 1,849 
 
 

ஒர் இளைஞனைச்சந்தித்ததால் தனக்கு இவ்வளவு இடையூறுகளும், சிரமங்களும், குழப்பங்களும், மனப்போராட்டங்களும் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை கனிகா.

கனிகா ஒரு தனியார் பள்ளியில் தலைமைப்பொறுப்பிலிருக்கும் சிறந்த குணமுள்ள அழகான பெண். படிப்பில் சிறந்த அறிவாளியும் தான்.

என்னதான் புத்தகங்களைப்படித்து பல பட்டங்களை வாங்கினாலும் உடன் வாழும் மனிதர்களையும், உள்ளே இயங்கும் மனதையும் படிக்கவில்லையேல் பல வழிகளில் பிரச்சினைகளைச்சந்திக்க நேரும் என்பதை தற்போது புரிந்து கொண்டாள்.

வறுமை மிகுந்த வீட்டில் பிறந்தாலும் பெருமை மிகுந்த வாழ்வை படிப்பால் அடைந்து விட வேண்டும் என்று சுகபோக எண்ணங்களைத்துறந்து, காதல், நட்பு எதிலும் முழுமையாக மாட்டிக்கொள்ளாமல் சிறந்த மாணவியாக உயர்ந்து, மூன்று பட்டப்படிப்புகளை வசப்படுத்தி, வேலையில் சேர்ந்து தனது வருமானத்தால் குடும்ப நிலையை வறுமையிலிருந்து மீட்டு ‘பொண்ணுன்னா இப்படியொரு பொண்ணு நம்ம வயித்துல பிறக்கோணும்’ என பலர் பேசும் அளவிற்கு செயல்பாடுகளை செம்மைப்படுத்திக்கொண்டாள்.

அறிவாளியாக இருந்தாலும், அதிகம் படித்திருந்தாலும் இளம் வயதின் மன விருப்பங்கள் சில சமயம் தன்னையும் மீறி வெளிப்படும் போது ஏற்படும் சிறு, சிறு மகிழ்ச்சிக்கு, எதிர்பார்ப்புகளுக்கு அறிவால் மனதுக்கு தடை போட மாட்டாள். ஆனால் அந்த மகிழ்வை மனதுக்கு அதிக நேரம் கொடுக்காமல் உடனே சுதாரித்து அவ்வுலகத்திலிருந்து மனதை அறிவால் மீட்டு விடுவாள்.

காளையை மிகவும் குறுகலான கயிற்றால் கட்டிப்போட்டால்‌ அவிழ்த்து விடும் போது நமக்கு கட்டுப்படாமல் அணையில் தேக்கி வைத்த வெள்ளம் அணை உடைந்தால் காடுகளை மட்டுமின்றி ஊரையும் அழிப்பது போல செய்து விடும். கயிறை சிறிது விட்டுக்கட்டினால் அணை வெள்ளம் மதகில் சென்று அணை உடைவதைத்தவிர்ப்பது போல் இருக்குமென தனது அபிலாசைகளை மதகில் வெளியாகும் நீர் போல தன் மனதுக்குப்பிடித்தவர்களைப்பார்த்து சிறிதாக சிரித்து தான் மகிழ்ச்சிப்படுவதோடு, அவர்களையும் மகிழச்செய்வாள். 

அதுவும் தன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் மட்டும் தான் சிரித்துப்பேசுவாள். தவறு செய்வோரைக்கண்டால் கோபமாகக்கண்டிக்கவும் செய்வாள். அவளுக்கு நட்பென சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வேறு யாருமில்லை. எல்லாம் ரயில் பயணங்களைப்போலத்தான். பள்ளி, கல்லூரியில் உடன் படித்தவர்களில் பிடித்தவர்களை வீடு வரை இதுவரை அழைத்து வந்ததில்லை. அவர்கள் வீட்டிற்கும் சென்றதில்லை. 

வெளிப்பழக்கங்களில் மனம் சென்றால் வழி மாறி விடுவோமோ என பயந்து மொழி அறிவதிலேயே விழிகளைப்பயன்படுத்தியதால் இருபத்தைந்து வயதிலேயே நல்ல சம்பளத்தில் தலைமைப்பதவியைப்பெற்றிருந்தாள்.

பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை சிறப்பாகப்பயின்று முதல் மதிப்பெண் பெற்ற நிலையில் அக்குழந்தையின் பெற்றோரை பாராட்ட அழைத்த போது லேசான தாடி வைத்த ஓர் இளைஞன் குழந்தையுடன் தனது அறைக்குள் நுழைந்த போது அவனது முகம், செயல் பாடுகள் தன் மனதுக்குப்பிடித்துப்போக பதவியை மறந்து சக மனுசியாக, குடும்பத்தில் ஒருத்தியாக, நட்பாக நன்றாக அவனுடன் குழந்தையின் ஞாபகத்திறனைப்பற்றிப்பேசினாள். குழந்தையின் தாய் வேலைக்குச்சென்று விட்டதாலும், தந்தை வெளிநாட்டில் இருப்பதாலும் தாய் மாமாவாகிய தான் வந்ததாகவும், வங்கியில் பணி புரிவதாகவும், விடுமுறை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் கூறிய போது இது போன்ற மாமா சிறு வயதில் தனக்கு கிடைக்கவில்லையே? குடிப்பதற்க்காக தன் தாயிடம் தினமும் மிரட்டிப்பேசி பணம் வாங்க வரும் மாமாவைத்தானே பார்த்தோம். கூலி வேலை செய்த தன் தாய் தன் குடும்பத்தையும் காப்பாற்றி, ஊரைச்சுற்றித்திரிந்த சகோதரனையும் காப்பாற்றியதை நினைக்கும் போது தற்போதும் கண்கலங்குவாள். இப்போதும் கண்கலங்கினாள்.

“ஏங்க மேடம்? உங்க கண்ல கண்ணீர் வருது…. ஏதாவது பிரச்சினையா….?” எனக்கேட்ட போது ‘நமக்கு பிரச்சினைன்னா இவன் சரி பண்ணிடுவானா….?’ என மனம் யோசிக்க, “ஒன்னுமில்லை என்னோட ஸ்கூல்ல படிக்கிற குழந்தை சிறப்பான மதிப்பெண் பெற்றதுனால வந்த ஆனந்தக்கண்ணீர்….” என முதன்முதலாக, தைரியமாக ஒரு பொய்யைச்சொல்லி சமாளித்து சிரிப்பை உதிர்த்து அனுப்பி வைத்த போது மனம் இதுவரை பாரமாக இருந்த நிலை மாறி லேசானது. 

‘நம்ம என்ன பேசினாலும் மறுத்தோ, வெறுத்தோ பேசாம நமக்கு இணக்கமா பேசறதுக்கு நம்மோட ஒருத்தர் இருந்துட்டா இந்த உலகமே வசப்பட்ட மாதிரி இருக்கும்’என நினைத்தவளாய், அதை முதன் முதலாக தற்போது உணர்ந்து கொண்டவளாய் அவனது கேள்வியைத்திரும்பத்திரும்ப நினைத்து நினைத்து தன்னை மறந்தாள். ஒரு வகுப்பு ஆசிரியை வந்து ‘மேடம்’என்ற போது தான் தன்னிலைக்கு வந்தாள்.

‘தனக்கு வரக்கூடிய வரன் தன்னை விட அதிகம் படித்திருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும். வசதியாக இருக்க வேண்டும். அந்த வீட்டிற்கு ஒரே பையனாக இருந்தால் பிரச்சினையே இருக்காது’ என முன்பு யோசித்த அறிவு, தற்போது யாரெனத்தெரியாத ஒரு நபரிடம் ஒரு நொடியில் சரணாகதியடைந்து விட்டதை எண்ணி ‘அழகு, வயது, படிப்பு, பணம், வசதி, பதவி அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்று நம்மை கவலைகளை மறக்கச்செய்து, வாழ்க்கையை நேசிக்க வைக்கிறது. ஒவ்வொருவரும் நமக்கு ஆதரவாக, அனுசரணையாக, அன்பாக இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மேலாக, உச்சமாக நம்மை மறந்து தியான நிலைக்கு கொண்டு செல்லும் அன்பானது, அபூர்வமாக யாராவது ஒருவரிடம் தான் கிடைக்கும் எனும் ரகசியத்தை இன்று புரிந்து கொண்டாள்.

‘பேரானந்தம் தரும் அன்பிற்கு படிப்பு அவசியமில்லையெனும் போது அதற்காக தூக்கம் தொலைத்து, வருடங்களைத்தொலைத்து, பெற்றோரின் வாழ்வைத்தொலைத்தது ஏன்?’ எனும் கேள்வியும் அவளுக்குள் வந்து சென்றது.

‘அவனிடமுள்ள எது தன்னைக்கவர்ந்தது? அழகு, பேச்சு, தைரியம், சிரிப்பு…. நம் கண்ணீருக்கான காரணத்தைக்கேட்டது…. இதுவரை அம்மா கூட இவ்வாறு கேட்டதில்லை. எதற்க்கான அழுகையென விசாரிக்காமல், அனைத்துமே படிப்புக்கானது என நினைத்துக்கொண்டு கிணற்றுத்தவளையாய் ‘அழாமப்படிச்சு முன்னேறப்பாரு. சும்மா எப்பப்பார்த்தாலும் அழுதுட்டு’ எனக்கூறி பிடிக்கும், பிடிக்காது எனப்பிரித்து யோசிக்காமல் தனக்குப்பிடித்ததை, தன்னால் இயன்றதை அல்லது வீட்டில் இருப்பதை வைத்து செய்த உணவை தட்டிலில் போட்டு முன் வைத்து விட்டு வேலைக்கு அவசரமாக ஓடும் தாயை விட சற்று மேலாக‌ கேட்ட விதம் , எதிர்பாலின ஈர்ப்பு, வாலிப வயது எல்லாமுமாக இருக்கலாம்’ என படித்த அறிவு பல கோணத்தில் யோசிக்கச்செய்தது.

அன்று முதல் அந்தக்குழந்தையை தினமும் சென்று பார்க்கத்தோன்றியது. அந்தக்குழந்தையைப்பார்க்கும் போது கூட அன்று கிடைத்த நிம்மதி பாதி கிடைத்தது. இப்படி கூட மன விருப்பங்கள் இருப்பதையெண்ணி வியந்தாள். 

கூகுளில் சிறுகதைகள். காம் பகுதிக்குச்சென்று காதல் கதைகளை மட்டும் தேடித்தேடிப்படித்தாள். கதைகளில் வரும் சில பாத்திரங்கள் தன் நிலையோடு ஒத்துப்போவதையும், பல மனப்பிரச்சினைகளில் அவிழ்க்க முடியாத சில சிக்கல்களை எளிதாக அவிழ்த்து வெளி வரும் வழிகளை கதாசிரியர்கள் கையாண்டிருப்பதையும் கண்டு ஆச்சர்யப்பட்டாள்.

 ‘அந்தந்த வயதில் எது தேவையோ அதை மறுக்காமல் நம் மனதுக்கும், உடலுக்கும் கொடுத்து விட்டால் மனம் சீராக இயங்கும். மனம் சீராக இயங்கினால் உடல் தடையின்றி செயல்பட ஒத்துழைக்கும். இல்லையெனில் கம்ப்யூட்டரில் வைரஸ் நுழைந்த கதைதான்’ என ஒரு சிறுகதையில் படித்தது ஆழப்பதிந்திருந்தது.

‘ஆதி காலத்தில் மனித சமுதாயத்தைக்கட்டமைத்த நம் மூதாதையர்கள் மனதின் விருப்பங்களை முழுவதுமாக அறிந்திருக்கவில்லை போலும். அறிந்திருந்தால் முரண்பட்ட, முரண்பாடுகளைக்கொண்ட, அனைத்தும் கண் முன் இருந்தும் பயன்படுத்த முடியாமல் வாழ வேண்டிய கட்டாய நிலையை நாம் அடைந்து, மனம் உடைந்துபோக வேண்டியதிருந்திருக்காது’

என நினைத்துப்பார்த்துக்கொண்டாள் மிகச்சிறந்த அறிவாளியான கனிகா.

‘அன்று குழந்தையுடன் சந்தித்த நபரை மனம் விரும்புகிறது. உடனே அவரைத்தன்னுடன் இருந்து விடுங்கள் எனக்கூற இயலாத சமுதாயக்கட்டமைப்பு. அது பின் விளைவுகளை ஆராய்கிறது. சக மனிதர்களின் நிலையைப்பார்க்கிறது. எதிர்காலத்தைப்பற்றியும் யோசிக்கிறது. அது ஒரு வகையில் சரியெனத்தோன்றினாலும் இன்னொரு வகையில் தடையாக, இடையூராக, வில்லனைப்போல, பூதமாக முன்னே வந்து நிற்கிறது. அன்பால் ஈர்க்கப்படும் போது அறிவால் வெற்றிகொள்ள முடியவில்லை’

இவ்வாறான மன ஓட்டத்தில் பல விசயங்கள் தவறானதாகப்புரிந்த போதிலும் அதிலிருந்து தான் மட்டும் மாறினால் உடனிருக்கும் மனிதர்கள் ஏற்க மறுப்பர் எனக்கூறி மனமெனும் காளையை அறிவெனும் மூக்கணாங்கயிற்றால் கட்டுப்படுத்தி, சாந்தப்படுத்தினாள்.

தற்போதெல்லாம் இரவில் வெகு நேரம் வரை தூக்கம் வருவதில்லை. அந்த இளைஞனைப்பார்க்கத்துடிக்கிறது மனம். அறிவு தடுக்கிறது. மனசாட்சி கூட திட்டத்தொடங்கி விட்டது!

“கனிகா நல்லா யோசிச்சுப்பாரு. அம்பது வயசுல கிடைக்க வேண்டிய வேலை உன்னோட அறிவால இருபத்தைஞ்சு வயசுலயே கிடைச்சிருச்சு. குரு ஸ்தானத்துல இருக்கிற நீ காதல், கத்திரிக்காய்னு மனச அலைய விட்டீன்னா உன்னோட ஸ்கூல்ல படிக்கிற குழந்தைங்க உன்னோட பேச்சைக்கேட்பாங்களா? குரு எவ்வழியோ மாணவர்கள் அவ்வழி. தியானம் பண்ணி மனச கட்டுப்படுத்து. முறையா மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.தேடினா இவரை விட பெட்டரா மனசுக்குப்புடிச்ச மாப்பிள்ளை கண்டிப்பா கிடைப்பாரு. நிறைய தேடனம். அதை இந்த சமுதாயம் தடுக்காது. ஆதரிக்கும். பூத்தூவி வாழ்த்தும்” என அன்பாக தன் மனசாட்சி கண்டித்த போது மன நிலை சற்று மாறினாலும், ஒவ்வொரு நாளும் காலையில் அந்தக்குழந்தையை, குழந்தையின் தாய் கொண்டு வந்து விடுவதைப்பார்க்கும் போது ‘தாய் மாமன் வந்திருக்கலாமே…’ எனும் எதிர்பார்ப்பு மனதில் மேலோங்கியது.

‘அன்று போல் இன்னொரு முறை வரவழைத்து பேசலாமா?’ எனத்தோன்றிய போது ‘குழந்தையின் தாயார் வந்து விட்டால் என்ன செய்வது? மாமாவையே வரச்சொல்லுங்கள் எனக்கட்டளையிட முடியாது. அதை இங்கிருப்பவர்களோ குழந்தையின் தாயோ தவறாகப்புரிந்து கொண்டால் தனது பெயருக்கு கலங்கம் வந்து விடும்’ என எண்ணினாள்.

‘யாரென்றே தெரியாத போது நான்கு வார்த்தை பேசியதாலேயே தனக்கு அவனது நினைவாகவே இருக்கும்படியான மயக்கத்தைக்கொடுத்ததாலும், மாதக்கணக்கில் கற்பனையில் அவனுடன் இல்லறமே நடத்தியதாலும், அவனைப்பற்றிய எதிர்பார்ப்புகள் அளவுக்கு மீறி அணையின் கொள்ளளவைத்தாண்டிய நீராக இருக்கும் நிலையில், அணை உடைந்து விட்டால் ஒழுக்கமென இது வரை கட்டிக்காத்து வந்த பிம்பம் உடைந்து சுக்கு நூறாகி விடும்’

என அறிவுக்கும், மனதுக்கும் நடந்த போராட்டத்தால் மதிய உணவை மறந்து முடிவில் மனமே வெற்றி கொண்டு குழந்தையின் வகுப்பு ஆசிரியை மூலம் ‘காலையில் குழந்தையுடன் மாமாவையும் அழைத்து வரச்சொல்’ என அழைப்பு விடுக்க வைத்தது.

அன்று தனது அலுவலக அறையில் குளிர்சாதனப்பெட்டி இயங்கியும் உடல் கூடுதல் வெப்பம் காட்டியது. மனப்புழுக்கம் என்பார்களே அதை முதலாக உணர்ந்தாள்.

அறை திறக்கப்பட்டதும் அவன் முதலில் வந்தான். அன்றைய சந்திப்பின் போது இருந்ததை விட இன்று தாடி சற்று கூடுதலாக வளர்ந்திருந்தது. எகுறு தெரிய தென்னம்பாலை வெடித்தது போல் வெண்மை மிகுந்திருந்த பற்களை முழுவதுமாகக்காட்டி அவனை வரவேற்று மனம் மகிழச்சிரித்தாள். அவனும் கைகளைக் கூப்பி வணங்கி சிரித்தான். அவனது முதுகை உரசியவாறு அவன் பின்னே வந்த பெண் கனிகாவை வணங்கினாள். அவளுக்கு வயிறு சற்று பெரிதாக இருந்தது.

“இவ என்னோட மனைவி சரிகா. இப்ப ஏழு மாசமா முழுகாம இருக்கிறா. எங்களுக்கு பொறக்கப்போற குழந்தையைக்கூட இந்த ஸ்கூல்ல தான் சேர்த்தலான்னு இருக்கோம். அன்னைக்கு உங்களை முதலாகப்பார்த்த போதே முடிவு பண்ணிட்டேன். இன்னைக்கு கூட என்னை வரச்சொல்லி நீங்க சொன்னதால ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு வந்திட்டேன்.

உங்க கூட பேசுனாலே மனசோட இறுக்கம் ரொம்பவே எனக்கு கொறையுது. இந்த ஸ்கூல்ல படிக்கிற குழந்தைகளும், வேலை பார்க்கிறவங்களும் ரொம்பவே கொடுத்து வச்சவங்க. சொல்லப்போன அன்னைக்கு உங்களச்சந்திச்சிட்டு ஸ்கூல விட்டு வெளில போகவே எனக்கு மனசில்ல. நீங்க தப்பா நெனைக்கலேன்னா மனசு விட்டு சொல்லறேன். என்னோட பேங்க் வேலைய விட்டிட்டு உங்க காருக்கு டிரைவரா வந்திரலான்னு கூடத்தோணிருச்சு” என அவன் தன் மனைவியைப்பக்கத்தில் வைத்துக்கொண்டே வெள்ளந்தியாக மனதில் பட்டதைக்கூறியதோடு, தன்னையும் புகழ்ந்து கொண்டே இருக்க, கனிகாவின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றமாக மாறியதின் விளைவாக அவளது மன அணை இடி விழுந்தது போல் உடைந்து கண்களில் கண்ணீராகப்பெருக்கெடுக்க எத்தனித்த தருணம், தன்னைக்கட்டுப்படுத்தி குழந்தையை பக்கத்தில் அழைத்து பரிசைக்கொடுத்தவள், எதுவுமே பேசாதவளாய் அவர்களைப்பார்த்து கைகூப்பி போகலாம் என்பது போல் வணங்கியதும்

அவர்களனைவரும், வெளியே சென்றவுடன் அறையை உட்பக்கமாகத்தாழிட்டவள், வேதனை தாங்க முடியாமல் “ஓ…” எனக்கதறி அழுது, உடைந்த மன அணையின் வெள்ளத்தை கண்களில் கண்ணீராக வெளியேற்றிய பின்பே சாந்தமானாள். 

மன பாரத்தால், நிறைவேறாத ஆசைகளால் ஏற்படும் துக்கம் கூட கண்ணீரால் தான் கட்டுப்பட்டு அமைதியடைய உதவுகிறது என்பதையும் புரிய வைத்தது.

அதோடு தன் முன் டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த டைரியைத்திறந்து ‘மரத்தில் காய்த்துப்பழுக்கும் கனிகள் அனைத்துமே பசியைத்தீர்க்க உதவுவதில்லை. 

சில மண்ணில் விழுந்து வீணாக பயனின்றிப்போய் விடுகின்றன’ என தத்துவார்த்தமாக எழுதியவள் டைரியுடன் தன் மனதையும் மூடி வைத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *