கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 4,091 
 

சன்னலோரம் வழமையாக உட்காரும் அமர்வில் அமர்ந்து அன்று வந்திருந்த சஞ்சிகைகளைப் புரட்டினான் வாசன்.’தெறி’ எனும் சஞ்சிகையின் பதினெட்டாம் பாகத்தில் வந்திருந்த ஒருபக்கக் கதையொன்று கண்ணில் பட்டது.கதைகள் வாசிக்கும் மனநிலையில் இல்லையென்றாலும் சின்னக் கதைதானே என்று வாசிக்கப்போக அவன் மனதில் ஏதோ ஊர்வதைப் போலிருந்தது.

வெளியே விதம் விதமான பூக்களுடன் செடிகள்.வாசனின் மனைவிக்கு பூச்செடிகள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.வீட்டின் முன்புறமும்,பின் புறமும் இருக்கின்ற நிலப்பரப்பில் பூச்செடிகளுடன்,வீட்டுக்குத் தேவையான மரக்கறிகன்றுகளையும் நட்டிருந்தாள்.ஊரில் வாசனின் அம்மாவும் இப்படித்தான் ..மாதர்சங்கத்தில் சேர்ந்து அங்கு கிடைக்கும் மரக்கன்றுகளையும் வாங்கிவந்துவிடுவாள்.பெரிதாக நிலமும் இருந்தது.

இங்கு அப்படியில்லை.என்றாலும் தன்னால் முடிந்தளவிற்கு பராமரித்துவருகிறாள்.வாசனும் அவளின் ஆர்வத்தில் தலையிடுவதில்லை.

வாசனின் மனைவி ஓரளவு அழகுதான்.நெற்றியில் குங்குமம் போட்டுக்கொள்ள விரும்புவதில்லை.திருமணத்தின் போட்டது.எப்பவாவது போட்டுக்கொள்வாள்.வாசனுக்கும் சங்கடமாக இருந்தாலும் வற்புறுத்துவதில்லை.

வாசனும் பேரழகன் என்று சொல்லிவிடமுடியாவிட்டாலும் நல்ல உடல்வாகு கொண்டவன்.நல்ல நிறம்.அவளுக்கு பொருத்தமானவனாகவே இருப்பதாக திருமணத்தின் போது பேசிக்கொண்டார்கள்.ஏறு நெத்தி..திருமண நாளன்று யாரோ மாப்பிள்ளைக்கு மொட்டை என்று சொல்லியதால் கூடப்படித்த தோழிகள் மாலையில் உடைமாற்றி வரவேற்பு நிகழ்வில் கோட்டு சூட்டு போட்டு மாப்பிள்ளை வர மொட்டை தெரிந்துவிடும் என்று காத்திருந்தார்களாம்.அப்படி பெரிசா மொட்டையில்லை..என்று கிண்டலடித்ததையும் திருமணத்தின் போது சொல்லியிருந்தாள்.

வாசனின் மனைவி சமையலறையில் சமையலில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாள்.அவளைக் கூப்பிட்டு இந்தக் கதையை வாசித்துப்பார்.எங்களுக்காக அல்லது எங்கட கதையைப்போலிருக்கு என்று சொன்னாலும் அவள் ‘வள்’என்று பாய்ந்துவிடுவாள்.

தரகர் ‘பொடியன் எழுத்தாளன்.ஆனால் நல்ல வேலையில் இருக்கிறான்.எழுத்து காசு போடாட்டிலும் செய்யும் வேலை சம்பளம் போடும்’ என்று சொல்லித்தான் திருமணம் நடந்தது.ஆரம்பத்தில் கொஞ்சம் ஆதரவாகத்தன் இருந்தாள்.சினேகிதிகளிடம் சொல்லிப் பெருமைப்பட்டும் கொள்வாள். ஆனால் இப்போதெல்லாம் ஏனோ கரிச்சுக்கொட்டுகிறாள்.நச்சரித்து,நச்சரித்து காரியங்களைச் சாதித்துக்கொள்கிறாள்.’எழுத்து சோறு போடாது’ என்கிறாள்.ஆதலினால் எழுத்து பற்றி அவளிடம் பேசுவதில்லை.காரணமும் புரியவில்லை.மௌனமாகவே காலம் கடந்துபோகிறது.பிள்ளைகள் வளர,வளர அவர்களின் எதிர்காலத்திற்குள் கரைந்துபோகிறாளோ?

வாசனின் வாசிப்பு ரசனை வித்தியாசமானது.திருமணத்தின் பின் அவள் ரமணிச்சந்திரனின் வாசகியாகத்தான் வாசனுக்கு அறிமுகமாகிறாள்.அதற்காக அவளிடம் விமர்சிக்க முயல்வதில்லை.தனது வாசிப்பிலும் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளும்படி எதுவும் ஏற்படுத்திவிடவில்லை.காலம்தான் தன்னை நகர்த்திக்கொண்டிருந்தது.

அலுவலக நண்பர்கள் அழைத்தால் அவளும் கூடவருவதில்லை.

அந்தக் கதையை மீள மீள வாசித்தான் வாசன்.

வாசனுக்கு மூத்த மகள் இலக்கியா பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராகவோ,விஞ்ஞானியாகவோ வருவாள் என்கிற எமது எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டு ஆசிரியத் தொழிலுக்குப் போய்விட்டாள்.அவள் கூறிய காரணங்களும் என்னை அவளுடன் ஒத்துப்போகவைத்தது.’மருத்துவம் நல்லது.ஆனால் பெண்களின் வாழ்க்கை என்று வரும்போது நிறைய சங்கடங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.பெண் என்பதால் ஆண்களால் வரும் தொல்லைகளும் அதிகம்.ஆசிரியத்தொழிலில் கொஞ்சம் நிம்மதி இருக்கும்.பாதுகாப்பாகவும் உணர்கிறேன்’

பெண்கள் மீதான வன்முறைகள் எங்குதான் இல்லை?சாதாரண கடைகளிலுமுண்டுதானே.அதிகம் அவளிடம் வாதம் செய்யவில்லை.மகள் அல்லவா..என்னுடனேயே இருக்கிறாள்.நான் இருக்கும் வரை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இரண்டாமவள் பூர்ணிகா அவளுக்கு நேர்மாறானவள்.தான் தூர இடத்துப் பல்கலைக்கழகத்திலேயே படிப்பேன்..சுதந்திரமாக இருக்கவே பிடிக்கும்’ என்பாள்.சின்னப்பிள்ளைதானே சொல்கிறாள் என்று நினைத்தாலும் அவளின் அருகாமை இல்லாமல் போய்விடுமோ என்கிற பயம் வாசனுக்குண்டு..

‘ஏன் அப்பாவையும் பிடிக்காதோ..அப்பா பாவம் எல்லே..அக்கா வீட்டில இருந்தே படித்தாள்.இப்ப வேலைக்குப்போகிறாள்..அது மாதிரி.நீங்களும்..’

எதுவும் பேசமாட்டாள்.

‘தனக்கு தனிய இருக்கத்தான் விருப்பம்’ என்பாள்.ஆனால் மிருகங்களில் அதிகம் விருப்பம்.பூனையை அடிக்கடி தூக்கிக் கொஞ்சிக்கொள்வாள்.அவர்கள் தான் குட்டியாக அந்த பூனையைக் கொண்டுவந்திருந்தார்கள் அதுவும் வீட்டில் நமது செல்லமாக வளர்ந்துவிட்டிருந்தது.

அந்தக் கதை வாசனை நன்றாக உலுக்கிவிட்டிருந்தது.

ஆறுதலுக்காக மனைவி தன்னுடன் பேசினால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.அவள் தானும் தன் பாடும்.குழந்தைகளுடன் தன்னை ஐக்கியப்படுத்தியிருப்பாள்.அல்லது எனக்காக உழைக்கிறாள்.இதனால் பழைய சுதந்திரப்பறவையாக சினிமா,புத்தகம்,கோயில்,சின்னத்திரை,பாடல் கேட்டல் தன்னால் இப்போது முடியவில்லை என்கிற ஏக்கமாகவும் இருக்கலாம்.அவள் வேலைக்குப்போவதில்லை.ஆனாலும் எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் வாழ்வதாக வாசனுக்குப் புருந்தது.அவன் கேட்பதில்லை.அவள் கோபம் வந்தால் சன்னதம் ஆடுவாள்.பிள்ளைகளும் நாம் சண்டயிடுவதை விரும்புவதில்லை.கதை எழுதும் மனநிலையும் அற்றுப்போய் வருவதையும் வாசன் உணர்ந்தான்.எழுத்தாளுக்கு வெளியில் மட்டுமல்ல வீட்டிலும் நல்ல வாசகன் அமையவேண்டும்.அதுதான் அவனை வழிநடத்தும்.வாசனுக்கு சிலசமயம் வலிக்கும். மற்ற எழுத்தாளர்களுக்கும் இப்படியான நிலை இருக்குமோ?..அவர்கள் வெளியே சொல்வதில்லையோ?

கதை ஏதோ சொல்லிச் செல்கிறது.கதை எழுதிய எழுத்தாளரும் அனுபவித்திருப்பாரோ..கதையினை இன்னொரு தடவை வாசித்துவிட்டு யார் எழுதியிருக்கிறார் என கண்கள் ஊர்ந்தன.உஷா என்றிருந்தது.பரிச்சயமில்லாத பெயர்.நிறைய பெண் எழுத்தாளர் எழுதுகிறார்கள்.அவர்களுக்கும் நிறைய அனுபவங்கள் வாய்த்திருக்கும்.குடும்ப ஆதரவு இருக்கும் இல்லாமலிருக்கும்..பரந்துபட்ட வாசகர்களுக்காக எழுதுகிறார்கள்.ஆனால் நான்…

சமையலறையிலிருந்து குரல் வந்தது..

‘கொப்பரிட்டச் சொல்லு தேத்தண்னி போட்டுவைச்சிருக்கு..எடுத்துக் குடிக்கச்சொல்லு’பிள்ளைகளின் காதுகளில் விழுந்திருக்காது.தனக்குத்தான் சொல்லியிருக்கிறாள்.உரத்துச் சொல்வதன மூலம் தானும் ஒரு மனுசிதான்.கூட மாட வந்து உதவலாம் தானே..அவள் சுசிலாவின்ர புருசன் தான் சமைக்கிறான்…

தெறி இதழை குப்புறக் கிடத்திவிட்டு எழுந்துகொள்கிறான் வாசன்..’ஆறிப்போச்சு எண்டதுக்கும் சத்தம் போடும்’

நேற்றிரவும் மகளின் பல்கலைக்கழகம் பற்றிப் பேச்சு வந்ததும்,’அவளும் வயசு வந்த பிள்ளை..சுதந்திரமாக இருக்கட்டுமே..போகட்டும்’..என்றாள்.

‘எனக்கு மட்டும் விருப்பம் இல்லையே.பொம்பிளைப்பிள்ளை..அங்க பார்த்தனீர்தானே..பெட்டைகள் போத்தலோடயும்,சிகரட்டோடயும் நிண்டதை.பத்தாததிற்கு பொடியளோடா உரஞ்சிக்கொண்டு..ச்சீ சகிக்கேல்ல’.

மூத்தவள் ஒருதடவை சொல்லியிருந்தாள்..’அப்பா..யூனியில இது சகஜம்..நாங்கள் தான் கவனமாக இருக்கவேணும்.அங்க பார்ட்டி நடக்கும்.எட்டு ஒன்பது மணிக்குப் பிறகு குடிக்கிறவை நிப்பினம்..நான் வந்திடுவன்..அதோட யூனி மட்டுமில்லை..ஓ எல் ஏ எல் படிக்கிற போதே பிள்ளைகளில சிலது அப்பிடித்தான்..இதை பெரிசு படுத்தினா வாழேலாது..படிக்கேலாது..எல்லாத்துக்கும் மேல நீங்கள் இங்க வந்திருக்கக்கூடாது..ஊரில இருந்திருக்கலாம்’

சரி பிழை எதுவென புரியாமல் வாசன் தடுமாறுவான்.அங்கு எழுத்தாளன் அல்ல ..அப்பாவாய் நின்றான்.வாழப்பழகு..வாழ்க்கையில் ஒன்று வெல்லும்..இன்னொன்று தோற்கும்’

வயதிற்கு வந்தபின்பும் பிள்ளைகள் வாசனின் கைகளில் தலைவைத்துப் படுத்துக்கொள்வார்கள்.வாசனுக்கு மகள்களிருவரும் கண்மணிகள் போல…

சாப்பாட்டில் தலைமயிர் இருந்தாலும் கோபம் வந்துவிடும்.அம்மாவிடம் காட்டிய கோபத்தை மனைவியிடம் காட்டும் மனநிலையில் இல்லை.கோபித்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

‘நான் வேண்டுமென்றே போடுகிறேன்.காத்திலை பறந்து விழுந்திருக்கும்’

மௌனமாகி,எதுவும் பேசுவதில்லை.

தேநீர் நன்றாக ஆறிவிட்டிருந்தது.

கண்ணை விற்று ஓவியம் வாங்கவே நினைக்கிறோம்’

பிள்ளைகள் எங்களுடன் காலம் முழுவதும் இருந்துவிட நினைக்கிறோம்.பெண் பிள்ளைகள் எனச் செல்லம் கொடுத்து வளர்க்கிறோம்’அவர்களின் குறுகுறு விழிகளில் தெரியும் குறும்புகள்,கயமையற்ற வெகுளித்தனம்..ஆனந்தமயமான சூழல் அவர்களின்றி வாழ்வது மயான வாழ்க்கைதான்.மனைவியும் அப்படித்தான் வாழ்ந்திருப்பாளோ?..வாழவும் நினைத்திருப்பாளோ??

கதையை மீள படிக்க முனைகையில் இளைய மகள் வந்து காதில் சொன்னாள்.’அப்பா..வீட்டில் இருந்தே படிக்கிறேன்..வீட்டை விட்டுப் போய் அங்கு தனிய இருக்கவிருப்பமில்லை..உங்களிடம் இருந்து தூரமாகப் போவது கஷ்டமாக இருக்கும்..உங்களின்ர அன்பு எப்பவும் வேணும்.உங்களின்ர பாதுக்காப்பு இருந்தாலே நான் பிழைவிடமாட்டன் என்கிற தைரியம் இருக்கு..உங்கட பிள்ளை அப்பா’

அவளின் கண்களும் முதன்முறையாக பனித்திருந்தன. அவளை அப்படியே உயரத் தூக்கிச் சுற்றவேண்டும் போலிருந்தது. வாசனின் அம்மாவின் ஞாபகமாக அவள் இருப்பதால் கொஞ்சம் அதிகமாகவே விருப்பத்திற்குரியவளாகிறாள்.

பிள்ளைகளுக்கு நல்ல நம்பிக்கை தருகின்ற பெற்றவர்களாக வாய்க்கவேண்டும்.அதேசமயம் பிள்ளைகளும் பெற்றவர்களுக்கான நம்பிக்கைகளை விதைக்கும் பட்சத்தில் அதுவே ஆத்மார்த்தமான உணர்வுகலந்த நெருக்கம் ஏற்பட்டுவிடும்.காலா காலத்துக்கும் மாறாத பிணைப்புடன் காலங்கள் வாழ்த்த வாழமுடியும்.

நம் வாழ்வில் நடக்கும் சிறு சிறு விடயங்கள் கூட யாருக்கோ அனுபவமாகி எங்காவது ஒரு மூலையில் எழுத்தாக வந்துவிடவும் கூடும்.

தெறி இதழை மூடிவைத்துவிட்டு சன்னலூடே வெளிச்சம் பிரகாசமான ஒளிக்கீற்றை வாசன் நெடு நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *