செல்லக்கிளியின் தம்பி

13
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 18,508 
 

எறும்புகளின் வாழ்விடங்கள் யானைகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. யானைக்கு கால்தடம் என்று அறியப்படுவது எறும்புகளுக்கு பேரழிவாக இருக்கக் கூடும்.. தாம் நடந்தது எறும்புகளின் குடியிருப்பு என்பதைக் கூட அறியாமல் யானைகள் பாட்டுக்கு நடந்தபடிதான் இருக்கின்றன.

பஸ்ஸிலிருந்து இறங்கியதும் அந்த சாலையின் விசாலம்தான் என் கண்ணில் பட்டது. நான்கு வழிச் சாலை ஊருக்குள் வரப் போகிறது.. வருகிறது.. வந்து விட்டது.. என்பன மாதிரியான தகவல்கள் சென்னையில் இருந்த எனக்கு அவ்வப்போது வந்தபடிதான் இருந்தன. அச்சாலையினால் வீடுகளை இழந்து, போராடியும் ஒரு பலனும் இல்லாமல் கிடைத்த இடத்தில் ஒண்டி வாழ்ந்து தொலையும் மனிதர்களைப் பற்றிய செய்திகளும் எனக்கு வந்நதபடிதான் இருந்தன. தான் பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே, செல்வாக்கு என்று எதுவும் இல்லாவிடினும் மானத்துக்கு பங்கமில்லாமல் வாழ்ந்த மனிதர்கள் தற்போது வாழ்விடம் அற்று அலைவதை நான் துயரோடு கேட்டபடிதான் இருந்தேன்.

யானையின் வழித்தடத்தைப் போல அச்சாலை கம்பீரமாக ஊரை அறுத்துக் கடந்து கொண்டு இருந்தது. எறும்பு மனிதர்கள் கூடு சிதைந்து அலைந்து கொண்டு இருந்தார்கள்.

இந்த கிராமம் எனது சொந்த ஊர் அல்ல. எனது சொந்த ஊர் ஒரு மிடில் டவுன். எனது ஊருக்கு ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் இந்த தாசப்பட்டி எனது சொந்த ஊரைவிட மனதுக்கு நெருக்கம். சின்னஞ்சிறு கிராமம். வாழ்வில் ஒரு தோல்விகாலம் இருந்தது. அந்த தோல்வியின் வடு வலிக்காமல் இருக்க நான் குடியில் தஞ்சம் புகுந்தபோது இந்த தாசப்பட்டி நண்பர்கள்தான் என்னை தத்தெடுததுக் கொண்டார்கள். என்ன பிரியம், ஏன் பிரியம் என்று தெரியாது. பிரியம். அவ்வளவுதான். என்ன செய்தாலும் மன்னித்து, என்ன இம்சையைக் கொடுத்தாலும் தாங்கிக் கொண்டு, என் அம்மாவைப் போலதான் இந்த ஊர் என்னை ஒரு ஏழு வருடங்களுக்கு தாங்கிக் கொண்டது.

அநேகமாக இந்த தாசப்பட்டியின் அனைத்து மனிதர்களையும் எனக்குத் தெரியும். சாதியற்ற ஒரு உறவு முறை பெரும்பாலும் இந்தப் பக்க கிராமங்களில் உருவாகிவிடும். எனது சாதியைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லாத இந்த ஊரில் இன்றளவும் நான் பலருக்கு மைத்துனன், பலருக்கு மகன், பலருக்கு மாமன், பலருக்கு தம்பி, சின்னச் சின்ன பயல்கள் இப்போதெல்லாம் என்னை அப்பா என்றும் அழைக்கத் துவங்கி இருக்கிறார்கள். என் வேதனையை எனது வழியிலேயே தாங்கிக் கொண்டு என்னை மீட்டு என்னிடம் கொடுத்தது இந்த தாசப்பட்டிதான்..

இன்றும் நான் சென்னையில் வசிக்கும் இந்த நாட்களிலும் நான் வரவே மாட்டேனென்று தெரிந்தாலும் என் பெயரை வரவேற்பாளர் பட்டியலில் தாங்கிய திருமண, காது குத்து, சடங்கு பத்திரிகைகள் எனக்கு வந்தபடிதான் இருக்கின்றன. எல்லா மரணங்களும், ஒரு உறவினன் என்ற முறையில், எனக்கும் அறிவிக்கப்பட்டபடியே உள்ளன. என் நினைவில் நான் இந்த ஊரைத் தாங்கியும், இந்த ஊர் என்னைத் தாங்கியும்தான் பரஸ்பரம் வாழ்ந்து வருகிறோம்.

இடையில் நேரம் வாய்த்தபோது ஓரிரு திருமணங்களுக்கு வந்ததோடு சரி. வேறெந்த நிகழ்வுக்கும் வரவேயில்லை. வரும் போது எல்லாம் பல பல மாற்றங்கள். சிறுவனாக பார்த்தவன் எல்லாம் பெண்டாட்டியோடும் தோளில் அழும் குழந்தையோடும் வந்து நின்று என்னா மாமா.. என்கிறான்.. மூக்கொழுக நின்ற சிறுமி இப்போது நடு வயது பெண்மணியாகி என்னாப்பா.. எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனா என்ன.. என்கிறாள். (எங்கள் பக்கத்தில் சித்தப்பா, பெரியப்பா முறை உள்ளவர்களை அப்பா என்றே அழைப்போம்) ஒரு சிறுவனையோ சிறுமியையோ அழைத்து இதுதேண்டா உங்க தாத்தா என்று அறிமுகம் செய்தும் வைக்கிறாள். அந்த தருணங்களில்தான் உருண்டோடும் காலம் எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் இங்கே வருகிறேன்.. இந்த முறை என்ன மாதிரியான அதிர்ச்சி கிடைக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ரோட்டு பஸ் ஸ்டாப்பில் நான் வந்து இறங்கியதை கைபேசி மூலம் கண்ணனுக்கு சொல்லிவிட்டேன். “வண்ட்டீங்களா ஶ்ரீ..? அஞ்சே நிமிசம் நில்லுங்க. இங்க ஒரு பஞ்சாயத்து.. பேசி விட்டுட்டு வந்துர்றேன். நம்ம ஒச்சு கடையில ஒரு டீயப்போட்டுக்கிட்டு நில்லுங்க..” என்றான். அவனது ஐந்து நிமிடங்கள் பெரும்பாலும் முப்பது அல்லது நாற்பது நிமிடங்களைக் கொண்டவை என்பது எனக்குத் தெரியும். ஊரின் மேற்கு கோடியில் இருக்கும் அவனது வீட்டுக்கான தூரமான ஒரு கிலோமீட்டரை எட்டி நடையைப் போட்டு கடந்து விடலாம்தான். ஆனால் போகிற வழியெல்லாம் கண்ணில் படும் மனிதர்கள் ஒவ்வொருவராக நலம் விசாரித்து, நின்று பேசி என்று ஆரம்பித்து விட்டால் கண்ணனின் வீடு சேர அது ஆகிவிடும் ஒன்றரை மணி நேரம்.. பேச்சு தவிர ஒவ்வொருவராக வாங்கித் தரும் டீயையும் குடித்தாக வேண்டும்.. எதற்கு வம்பு. கண்ணன் வண்டியை எடுத்து வந்தால் அதிலேயே சர்ரென்று போய்விடலாம் என்று தாற்காலிக இளைப்பாறுதலுக்காக ஒச்சு கடையை நோக்கிப் போனேன்.

என்னைப் பார்த்ததும் ஒச்சுவுக்கு வாயெல்லாம் பல். “சிரீ.. வாங்க வாங்க.. எங்க கடைய எல்லாம் நாவுகம் வச்ருக்கீங்க போல.. வழக்கம் போல இனுப்பு கூடுதலா போட்டு டீ போட்றத்தானே..?” என்றவன் கொஞ்சம் தயங்கி “சீனி போடலாமா..?” என்று சந்தேகமாக கேட்டான்.

நான் அசட்டு சிரிப்புடன், “சீனி இல்லாம ஒரு டீ..” என்றதும் வெடித்துச் சிரித்து விட்டான். “அதான.. கொஞ்ச நஞ்சமா ஆட்டம் போட்டீக.. சக்கரச் சத்து வரத்தாஞ்செய்யும்..” என்று குதூகலமாக டீயை போடத் துவங்கினான். வியாதியை சத்து என்று புதுப் பெயரிட்டு அழைக்கும் அவர்களது சொல்லாளுமை என்னை எப்போதும் போலவே இப்போதும் புன்னகைக்கச் செய்தது.

புன்னகைத்தபடி கடைக்கு வெளியே சாலையோரம் வந்து நின்று நால்வழிச் சாலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவனை, “இந்தாப்பா இனுப்பு இல்லாம டீ..” என்ற குரல் திரும்ப வைத்தது. மீசையுடன் பதினெட்டு பத்தொன்பதில் ஒரு இளைஞன் டீயை நீட்டியபடி நின்றான். இவன் எதுக்குடா நம்மை அப்பா என்று அழைக்கிறான் என்ற குழப்பத்துடன் நான் டீயை வாங்க, டீப்பட்டரையில் நின்றபடி சிரித்துக கொண்டிருந்த ஒச்சு, “என்னா சிரீ.. அடையாளம் தெரியலையா..? என் மூத்த மவென் ஊமையந்தான்..” என்றதும் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். ஏழெட்டு வயதில் வீட்டில் இருந்த ஆயிரம் ரூபாயை (பத்து ரூபாய் கட்டு) திருடிக்கொண்டு மெட்ராஸ் ஓடிப் போய் அம்புட்டையும் செலவழித்து விட்டு எப்படியோ வீடு திரும்பி வந்துவிட்ட திருட்டு ரெளடியா இவன்..? என்று என்னால் நம்பவே முடியவில்லை..

“எலே.. கருவாப்பயலே.. என்னடா படிக்கிற..? படிக்கிறதானே..?” என்றேன்..

ரெளடிப்பயல் புன்னகையோடு, “படிக்காம..? பி.ஏ எக்கனாமிக்ஸ் படிக்கிறேம்ப்பா.. செகண்டு இயர்..” என்றான்.

ஒச்சு, “சித்தப்பன் வந்தா என்னாமோ கேக்கணும்ண்டு சொல்லிக்கிருந்தியே.. இப்பவே கேட்டுர்றா மவனே.. இன்னைக்கி விட்டா நீ மெட்றாஸ் போய்தேன் அப்பனைப் பாக்க வேண்டி இருக்கும்..” என்றான்.

நான் கருவாயனை கேள்வியாகப் பார்த்து, “என்னடா..?” என்றேன்.

ஒச்சு, “அவென் சினிமாவுல சேரணுமாம்.. அடுத்த வருசம் படிப்பை முடிச்சிட்டு மெட்றாஸ் வந்துறணும்ண்டு சொல்லிக்கிருக்யான்.. உங்ககிட்ட அஜிஸ்டண்டா வச்சுக்கிருவீங்களாம்..:” என்றான் பட்டறையில் நின்றபடி..

நான் கருவாயனைப் பார்த்தேன். படபடப்போடு லேசான வெட்கத்தை மறைத்தபடி நான் என்ன சொல்லப் போகிறேனோ என்ற பதட்டத்துடன் காத்திருந்தான். எனக்குத் தெரிந்து தேனி மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் 95 சதவீதம் இளைஞர்கள் சினிமாவில் சேரவேண்டும் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் சேரவேண்டும் என்பதில் இவர்கள் காட்டும் ஆர்வத்தில் பத்திலொரு பகுதி காட்டி தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தால் கூட சினிமா வாழ்ந்திருக்குமே என்ற எண்ணம் மனதில் தோன்றியது. கொஞ்சம் கடுமையை குரலில் வைத்து, “முதல்ல படிப்பை முடி.. அதுக்குள்ள நான் படம் பண்ணிக்கிறேன். அப்புறம் பாப்போம்.. அதுக்கு முன்னால சினிமா அது இதுன்னு படிப்பை கோட்டை விட்ட.. உன்னை கொண்டே புடுவேன்.. போ..” என்றேன். இவன் பதட்டத்தோடு அப்பனைப் பார்க்க, அவன் நான் அப்புறம் பேசிக்கிறேன் என்பது போல சைகை செய்ய அரைகுறை மனதுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றான் கருவாயன். நல்லதுதான். இன்னும் இந்த ஊர் நண்பர்கள் நம் கோபத்துக்கு பயப்படுவது எல்லா வகையிலும் நல்லதுதான் என்று எனக்கு தோன்றிது..

கடைக்கு வெளியில் வந்து நின்று கசப்பும் துவர்ப்புமான அந்த டீயை மெல்ல உறிஞ்சிக் குடிக்கத் துவங்கினேன்.

இறைச்சலுடன் வண்டிகள் வேகம் குறையாமல் கடந்தபடி இருந்தன. பள்ளத்தாக்கின் மென்குளிர் காற்று என்னடா செளக்கியமா என்பது போல என் முடி கலைத்தபடி இருந்தது. யாரோ என்னைப் பார்ப்பது போல இருக்கவே திரும்பினேன். அங்கே பஸ் நிறுத்தத்தின் வாவரக்காச்சி மர நிழலில் தாடி மீசை கடுமையாக வளர்ந்திருக்க, நரைத்த தலையுடனும், அழுக்கு உடையுடனும் மத்திம வயது மனிதன் ஒருவன் என்னைப் பார்த்து சிரித்தபடி நின்றிருந்தான் – அந்த தாடிக்குள் அவன் சிரித்திருக்கத்தான் வேண்டும் என நினைக்கிறேன்.

சட்டென அவனை எனக்குப் பிடிபடவில்லை. அந்த கண்கள் மட்டும் மின்மினிப் பூச்சியின் ஒளியைப் போல எனக்குப் பரிச்சயமான ஒரு செய்தியை எனக்கு அனுப்பியபடி இருந்தன.

எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது. ஆற்றங்கரையோர கோவில் ஆலமர நிழலும், கஞ்சாப் புகையும், கொஞ்சம் கண்ணீரும் அப்புறம் செல்லக் கிளியும், ஒரு பெருந்துயரமும்..

பளிச்சென அவன் என் நினைவில் விடிந்தான். அவன்தான் சென்றாயன். அநேகமாக அந்த ஊரில் அவனை பெயரிட்டு அழைப்பவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன். கிராமங்களில் பட்டப் பெயர்கள் சகஜம். அதை மனிதர்கள் ஏற்றுக் கொள்வதும் ரொம்ப சகஜம். இன்றளவும் கோழிவிரட்டியின் கடை கோழிவிரட்டி கடை என்றே அழைக்கப் படுகிறது. ஈத்தலு என்றழைக்கப்பட்டவருக்கு கடிதம் வந்தபோது ராமசாமி என்பது தனது பெயரென்பதை அவரே மறந்துபோயிருந்தார். சொங்யாம்பொட்டி, தமுக்கு, செவலை, எம்பது பாயிண்டு என்று வைக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டப் பெயர்கள் அநேகம்.

சென்றாயன் அவ்வூர் மக்களுக்கு மெண்டலு என்றே அறியப் பட்டவன். எந்நேரமும் கஞ்சா போதை அவனை நிறைத்திருக்கும். பொதுவாக யாரிடமும் பேசுவதில்லை. கேள்வியென்றாலும், வசை என்றாலும் பதிலுக்கு புன்னகைதான். சொல்லும் காரியங்களை தட்டாமல் செய்வான். கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வான். பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லைதான். ஒரு முறை நான் சென்னையில் இருந்து ஒரு திருமணத்தின் பொருட்டு தாசப்பட்டி வந்தேன். திருமணத்துக்காக சென்னையிலிருந்து சில பொருட்களை வாங்கிவரச் சொல்லி இருந்தார்கள். கனமான பையுடன் மெயின் ரோட்டில் இறங்கியவன் அந்தப் பையை மேற்கு கடைசி வரை எப்படி தூக்கிச் செல்வது என்று யோசித்து சென்றாயனை அழைத்து, “பைய தூக்கி வர்றியாப்பா..?” என்று கேட்டேன். சரிண்ணே.. என்றபடி தூக்கி வந்தான். வழக்கம் போல போகும் வழியெங்கும் வரவேற்புகள், விசாரணைகள் என்று தாமதம். நான் அந்த கனத்த பையைப் பற்றி மறந்தே போய்விட்டேன். போகும்போதே எதிரில் கண்ணனும், குபேந்திரனும் வந்துவிட அவர்களுடன் மறுபடி திரும்பி மெயின் ரோட்டுக்கே வந்து விட்டேன். ஒரு மணி நேரம் கிட்ட பேசியிருப்போம். திடீரென்று கண்ணன் கோபமாக, “நீ என்னத்துக்கடா பைய செமந்துக்கிட்டு இங்கணக்குள்ளயே நிக்கிற..?” என்று கேட்டதும்தான் கவனித்தேன், அத்தனை நேரமும் சென்றாயன் அந்த கனத்த பையை தன் தலையில் சுமந்தபடியே என்னை தொடர்ந்து வந்திருக்கிறான். ஏறத்தாழ இரண்டு மணி நேரம். கனத்த சுமை. என்னைப் பின் தொடர்ந்தபடி, நான் நிற்கிற இடத்திலெல்லாம் நின்று, நான் நடக்கிற போதெல்லாம் தொடர்ந்து என்று சிறு முனகலும் இன்றி என் பின்னாலேயே வந்திருக்கிறான்.. என்னாலேயே தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் சுமக்க முடியாத சுமை அது..

நான் திடுக்கிட்டுப் போனேன். குற்றவுணர்வில் பதறிப் போனேன். அவனை பையை இறக்க வைத்து பதறி சமாதானப்படுத்த முயன்றதில் நண்பர்கள் திகைததுப் போனார்கள்.. ‘விடுங்க சிரீ.. அவனுக்கு இதெல்லாம் சாதாரணம்..” என்று அவர்கள் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் மனசாட்சியின் குற்றவுணர்வை மறைப்பதற்காக சென்றாயனை தனியே அழைத்துச் சென்று ஐம்பது ரூபாய் கொடுத்து வச்சுக்க என்றேன்.. (நண்பர்களுக்குத் தெரிந்தால் அவனுக்கு ஐந்து ரூபாய்க்கு மேல் கொடுக்க விடமாட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று நீங்க வைங்க ஶ்ரீ அவனுக்கு நானே அப்புறமா குடுத்துக்குறேன். என்று சொல்லி பின்னால் கொடுக்காமலே விட்டுவிடுவார்கள்.)

ஐம்பது ரூபாயை புன்னகையோடு பார்த்த சென்றாயன், “இம்புட்டு காசு வேணாம்ண்ணே. பத்து ரூவா குடுங்க போதும்.” என்றான். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் பத்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டான். அதுவே அநியாயமாக வாங்குகிறோம் என்ற குற்றவுணர்வோடுதான் வாங்கிக் கொண்டான்.. அதில் அவனது பிழையேதும் இல்லை. காலகாலமாக அவனது வேலைக்கான தகுதி இவ்வளவுதான் என்று அவனுக்குள் விதைக்கப்பட்டிருந்தது. ஐந்து ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை திருட்டுப் பணம் போலதான் அவனே பார்த்தான். (இங்கு ஒரு ஸ்மைலி போடவேண்டும் போல இருக்கிறது.. ஃபேஸ் புக் என்னை ரொம்பத்தான் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறது.)

இவ்வளவு தூரம் அவனைப் பற்றி சொன்னதற்கு காரணம் அவனது இயல்பை உங்களுக்கு படம்பிடித்துக்காட்ட மட்டும்தான். யாரிடமும் பேசாத அவன் என்னிடம் மட்டும் பேசி இறக்கி வைத்த பெரும் சுமைப் பொழுதுதான் இங்கு முக்கியம். தண்ணென்ற காற்று தானும் மனம் கனத்துப் போய் எங்கள் அருகிருக்க, அந்த ஆலமரத்தடி அணிலும், தும்பைப் பூச் செடிகளும் பேதலித்துப் போய் உறைந்திருக்க, செல்லக்கிளியைச் சுமந்து சென்ற முல்லை நதி மட்டும் செவிடுபோல் கடந்தோடிக் கொண்டிருக்க அவன் புன்னகையுடனே சொன்ன அந்த சம்பவம் ஒரு தீச்சட்டியைப் போல என் மனதில் இன்றும் தழல் குறையாமல் இருக்கிறது.

ஒரு ஐந்தாறு வருடம் முன்பு எனக்கு விநோதமான ஒரு ஆசை வந்தது. ஒரே ஒரு தரம் கஞ்சா புகைத்துப் பார்த்தால் என்ன.. எங்கள் ஊரில் அதை யாரிடமும் சொல்ல முடியாது. வழக்கம் போல தாசப்பட்டி வந்து கண்ணனிடமும், குபேந்திரனிடமும் சொன்னதும் இருவரும் ஒரே குரலில் “உங்களுக்கு எதுக்கு ஶ்ரீ இந்த வேண்டாத வேலை..?” என்றுதான் சொன்னார்கள். நான் பிடிவாதமாக வேண்டுமே வேண்டும் என்றுவிட்டேன். இருவருமே அப்போதுதான் ஊரின் பெரிய தலைகளாக உருவாகிக் கொண்டு இருந்த நேரம் அது.. (இப்போது அவர்கள் இருவரும் நிஜமாகவே ஊரின் அசைக்க முடியாத பெருந்தலைகள்). எனது கோரிக்கை அவர்களை தர்ம சங்கடப் படுத்துவதாகவும் இருந்தது. அவர்களையும் கஞ்சாவையும் சேர்த்து வைத்து யாராவது பேசினாலே அவர்களது கௌரவம் சிதைந்து போகக் கூடிய அபாயமும் அவர்களுக்கு இருந்தது. இருந்தாலும் கேட்பது நானாயிற்றே..

வேறு வழியின்றி மெண்டலு சென்றாயனை அழைத்தார்கள்.

“அரவமில்லாம கூட்டிட்டுப் போயி பாளையம் ஆத்துப்பக்கம் எங்கிட்டாவது உக்கார வச்சு செவனைப் போட வச்சு கூட்டுட்டு வந்துரு. ஓவரா லோடைப் போட்டு அவரை கெறங்க வச்சிறாத.. முன்னபின்ன பழக்கமில்லாத மனுஷன். சும்மா ஆசைக்கு கேக்குறாறேண்டுதான் வாங்கித்தரச் சொல்றோம். கவனம்..” என்று பல முறை சென்றாயனை எச்சரித்து என்னை அவனோடு அனுப்பி வைத்தார்கள். அப்போதெல்லாம் சென்றாயன் இவ்வளவு அழுக்காக இல்லை. ஓரளவு துவைத்த துணிகளைப் போடுபவனாக இருந்தான். நெல்லடிப்பு, வெள்ளையடிப்பது போன்ற வேலைகளுக்கும் செல்பவனாக இருந்தான். அவனது கஞ்சாப் பழக்கம் மட்டுமே அப்போது அவனை மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்தும் காரணியாக இருந்தது.

சொன்னபடி என்னை பாளையம் ஆத்தங்கரை ஆலமரத்தடிக்கு அழைத்துச் சென்றான் சென்றாயன். ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.. சற்று தொலைவில் ஞானம்மன் கோவிலின் கல் சுவரும், பாதை தவிர்த்த இடங்களில் வளர்ந்திருந்த காட்டுச் செடிகளும் பறவைச் சத்தங்களும், அவ்வப்போது தொலைச் சாலையில் கடக்கும் மோட்டார் சத்தங்களும் நாங்களும், முதிர்ந்த அந்த ஆலமரமும், சில்லிட்ட படித்துறையும், மேகம் தீற்றிய நீலவானமும் தவிர வேறாரும் இல்லாத ஏகாந்தம்..

சிகரெட்டில் கஞ்சாவை ஏற்றத் துவங்கினான். நான் ஆர்வமாகி நானும் கொஞ்சம் ஏற்றுகிறேன் என்று வாங்கி ஏற்ற முயன்றபோதுதான் அது நான் நினைத்த மாதிரி எளிமையான விஷயம் இல்லை.. அதற்கும் ஒரு பயிற்சியும், அனுபவமும் தேவை என்று புரிந்தது.. ஏற்றுகிறேன் பேர்வழி என்று சிகரெட்டை நான் நாசமாக்கிவிடுவேன் என்று பயந்து, சென்றாயன், “சாமி.. எண்ட்டயே குடுங்க. ஒங்களுக்கு என்னாத்துக்கு செரமம்..” என்று வலுக்கட்டாயமாக வாங்கி தானே ஏற்றி கொடுத்தான். நான் பற்ற வைத்துக் கொண்டேன்.

ஏறுவதே தெரியாமல் அந்த போதை ஏறிற்று. ஆனால் நான் நினைப்பது மாதிரி அது எனக்கு உவப்பானதாக இல்லை. எனக்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகின. திடுமென்று தலையைத் திருப்புவது கூட பிரயத்தனம் எடுக்கும் செயலாக மாறிவிட்டது. மரத்தில் சாய்ந்து கால்நீட்டி உட்கார்ந்திருக்கும் நான் எழ வேண்டும் என்ற எளிய செயல் கூட பெரும் சிரமமான செயலாக மாறி விட்டது. ஒன்றும் முடியவில்லை. சென்றாயன் கரிசனத்துடன், “என்ன சாமி.”. என்று கேட்கவும், நான் என்னால் முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் துணிச்சலின்றி, “காத்து சூப்பரா அடிக்குது. ரொம்ப அமைதியான இடமா இருக்குது. கொஞ்சம் ஒரு அரைமணிநேரம், முக்கா மணி நேரம் உக்காந்துட்டுப் போவமா..?” என்றேன்.

சரி என்று அவனும் உட்கார்ந்தான். “பசிக்குது சென்றாயா.” என்றேன். அவன் திகைத்துப் போய் பார்ததான்.

“என்ன சாமி..?”

“பசிக்குது.. காசு தர்றேன் திங்கிறதுக்கு என்னமாவது ஊருக்குள்ள போயி வாங்கிட்டு வர்றியா..?” என்றேன்.

அவன் ஏன் அப்படி நெகிழ்ந்து பார்த்தான் என்று தெரியவில்லை. “சரி சாமி..” என்று நான் நீட்டிய பணத்தை பவ்யமாக இருகைகளில் ஏந்தி வாங்க எத்தனித்ததான். எனக்கு கோபம் வந்தது. “என்ன செய்யுற..?” என்று கோபமாகக் கேட்டேன்.

அவன் புரியாமல், “ஏஞ்சாமி..?” என்றான்.

“உன்னை கொல்லப் போறேன். முதல்ல என்னை சாமின்னு கூப்புடுறதை நிறுத்து. அண்ணேன்னு கூப்புடு. அப்புறம் இந்த மாதிரி ரெண்டு கையால ஏந்தி காசை வாங்கி என்னை கேவலப்படுத்தாத. சரியா..?” என்று கடிந்து கூறினேன்.

கொஞ்சம் திகைத்து என்னைப் பார்த்தவன், “சரிண்ணே.” என்று காசை வாங்கிக் கொண்டு நம்பமுடியாத நேரத்துக்குள் சென்று திரும்பி வந்தான். மிக்சர், பொரி உருண்டை, கடலை மிட்டாய், முறுக்கு, மாங்காய் என்று ஒரு சிறுதீனி சாம்ராஜ்யத்தையே கொண்டு வந்து கடை விரித்தான்.மாங்காயை மட்டும் வந்ததும் ஆற்றுக்குள் எறிந்து விட்டான். எனக்கு பெருமகிழ்ச்சி. “தேங்க்ஸ் சென்றாயா.. நீயும் சாப்புடு..” என்றபடி தின்ன ஆரம்பித்தேன். அவன் புன்னகையோடு எதையும் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

“ம்.. எடுத்துக்கடா.. ரெண்டு பேருக்கும்தானே இது..?” என்ற என்னை தயக்கத்தோடு பார்த்து, “நீங்க சாப்புடுறது.. நா எப்புடி என் கையால எடுக்குறது..? நீங்களே எடுத்து என் கையில குடுங்க..” என்றான். எனக்கு கோபமான கோபம். இவனை விட நான் உயர்வென்று இவன் ஏன் நினைத்தான். ஒரு வேளை மறைமுகமாக எனது செயல்கள் ஏதேனும் இவனை விட நான் உயர்வு என உணர்த்துமாறு இருந்தனவோ என்று நான் சிதையத் துவங்கினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, “இங்க வா..’ என்றேன். அவன் குழப்பமாக எழுந்து அருகில் வந்தான். நான் அப்படியே அவனை தழுவிக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்தேன். அவன் திகைத்துப் போனான்.

அவனை விடுவித்து விட்டு, “தெரியுதா.. பெரியவங்க சின்னவங்கன்னு யாரும் இல்ல.. நானும் நீயும் சமம்தான். இதுக்கு மேலயும் என்னமாவது செஞ்சு என்னை அழவச்சுறாதடா தம்பி சென்றாயா..” என்றபடி நிமிர்ந்து பார்க்க, அப்போதுதான் அவன் அழுதபடி இருந்ததை கவனித்தேன்.

பதறிப் போய், “என்னடா தம்பி..? என்னாச்சு..? ஏன் அழுகுற..?” என்று தோள் பற்றி கேட்டதும் நெகிழ்ந்து போய் உளறலாக அவன் சொன்னதன் சாராம்சம் இதுதான்: அவனை இது வரை யாரும் தொட்டுப் பேசியதில்லை. யாரும் பெயர் சொல்லி அழைத்ததில்லை. எல்லோருக்கும் அவன் மெண்டல்தான்.. இதை உடைத்து அண்ணே என்று அழைக்கச் செய்தது மட்டுமில்லை. தம்பி தம்பி என்று வேறு நான் அழைத்திருக்கிறேன். அவனை யாரும் தொட்டுக் கூட பேசாத ஒரு பொழுதில் தம்பியென அங்கீகரித்து அவனை அணைத்தும் பேசி இருக்கிறேன். தொடுகை நிராகரிக்கப்பட்ட ஒரு மனிதனின் வேதனையை அன்றுதான் நான் நேர்நின்று கண்டேன். அந்த கண்ணீர்த்துளி ஒவ்வொன்றிலும் ஆண்டாண்டு கால நிராகரிப்பின் வேதனையும் பெருகி வழிந்தது.

இந்த அளவு நிராகரிக்கப் படுவதற்கு அவன் தீண்டத்தகாத சாதியில் பிறந்தவனும் அல்ல. எனது நண்பன் கண்ணனின் சுயசாதியைச் சேர்ந்தவன்தான். ஆதிக்க சாதியினன். ஏவல் வேலைகளையும் கீழ்மட்ட வேலைகளையும் செய்கிறான் என்பதனாலேயே அவன் தாழ்த்தப்பட்டு இருந்திருக்கிறான் என்ற வேதனையான உண்மை எனக்கு அப்போதுதான் உறைத்தது. தீண்டாமை என்பது ஒரு மனநிலை என்பது மறுபடியும் நிரூபணமான கணம் அது. இவனது கண்ணீரே இவ்வளவு சுட்டால் தீண்டத்தகாத சாதியில் பிறந்தான் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஓர் இனத்தின் மொத்த கண்ணீர் இந்த நாட்டையே எரித்து விடாதா..? எரிக்கவில்லை என்பதால்தான் இன்னமும் தீண்டாமை வளர்ந்தபடி இருக்கிறது.

பெரு மூச்சுகளும் மௌனங்களும் கடந்து போன கணத்தில் அவன் திடுமென பேசத் துவங்கினான். என்ன ஆச்சரியம் என்றால், பதில் சொல்வதற்குத் தவிர தானாக வாயைத் திறக்காத மனிதன் அவன். ஏதோ ஒன்று அவனை உடைத்து, அவனது மனதைத் திறந்து விட்டது போலும். அது அனுமதி கேட்டு வந்த பேச்சில்லை. நான் சொல்லவா, நீ கேட்கிறாயா என்ற தொனியே அதில் இல்லை. நான் சொல்கிறேன். நீ கேட்க வேண்டும் என்ற அதிகாரமும் அதில் இல்லை. கருதறுப்பு நேரங்களில் வறண்ட வயல்களினூடே நீங்கள் நடந்து போகும் போது தொலைவில் இருந்து கேட்கும் எவளோ ஒருத்தி பாடும் கருதறுப்புப் பாடல் போல.. பிச்சி ஒருத்தி இரவு நேரங்களில் தன் உன்மத்தம் அதிகமாகி பிதற்றும் அல்லது அரற்றும் சொற்களைப் போல, இரு பறவைகளின் நடனத்தைப் போல அல்லது மழையைப் போல, அவனது சொற்கள் அவை பாட்டுக்கு வெளிப்படத் தொடங்கின. எனக்கு அந்த அநாதரவான கருதறுப்புப் பாடல் பிடிக்கும். பைத்தியக்காரியின் புலம்பல்கள் என் மனம் தொடும். பேசட்டும் என்று விட்டு விட்டேன்..

எனக்கு முன்னால் அவனை கடைசியாக தொட்டுப் பேசியவள் அவனது அக்கா செல்லக்கிளி. அக்கா என்றால் உடன் பிறந்தவள் இல்லை. பெரியப்பா மகள். பெரியப்பா யாரென்று உங்களுக்குத் தெரியுமில்லையா..? நாட்டாமை குடும்பம் என்று சொல்கிறார்கள் இல்லையா..? அந்த குடும்பத்தின் பெரிய தலைக்கட்டு. ரொம்ப அமைதியானவர் என்று பெயர். இருக்கும் வரை ஊர் மெச்ச வாழ்ந்தவர். அவரது ஒரு சொல் பவுனுப் பெறும் என்பார்கள். வசதி வாய்ப்போடு இருந்த குடும்பத்தின் மூத்த மகன் அவர். கூட பிறந்தது ஏழு தம்பிகள். அதில் இரண்டாவது தம்பிதான் சென்றாயனது அப்பா. இப்போது அவரும் இல்லை.

பெரியப்பாவுக்கு தேவதானப் பட்டியில் இருந்து பெண் எடுத்திருந்தார்கள். பெரியம்மா அத்தனை அழகு. வெள்ளையம்மா என்ற பெயருக்கு ஏற்றபடி வெள்ளை என்றால் அம்புட்டு வெள்ளை. அவளது வீட்டில் அவளை செல்லமாகவே வளர்த்து விட்டார்களாம். ஓரளவு சமைக்கத் தெரியும் என்பதைத் தாண்டி எந்த விவரமும் தெரியாதவள். காசு எண்ணி கணக்கு வைக்கத் தெரியாது. கடைக்குப் போய் நல்ல பருப்பாக பார்த்து வாங்கத் தெரியாது. எண்ணை வாங்கிவந்தால் எவ்வளவு பாக்கி என்று பார்த்து வாங்கி வரத் தெரியாது. எந்த விவரமும் இல்லாதவளாக இருந்தாள் அந்தப் பெரியம்மா.

பெரியப்பா அவளது பலவீனங்கள் தெரிந்து அவள் எந்த குறையும் இல்லாமல் இருக்கப் பார்த்துக் கொண்டார். பருப்பு, காய்கறி உட்பட எந்த பொருளானாலும் அவரே வாங்கிப் போட்டு விடுவார். பால் கணக்கு உட்பட எந்த கணக்காக இருந்தாலும் அவரே பார்த்துக் கொள்வார். பெரியம்மாவும் எந்த சிரமமும் இல்லாமல் இருந்து வந்தாள். அப்போதுதான் திடீரென்று அவர்கள் குடும்பத்தில் இடி விழுந்தது. ஒரு விளக்கு வைத்த புதன் கிழமை மாலையில் வீட்டுக்கு வந்தவர் “வேர்க்குது. அந்த காத்தாடியப் போட்டு விடும்மா..” என்றபடி உட்கார்ந்தவர் அப்படியே இறந்து போனார்.

அவர் இறக்கும்போது அவரது மகள் செல்லக்கிளிக்கு எட்டு வயது. அவனுக்கு ஐந்து வயது. ஊரே துக்கம் அனுஷ்டிப்பது மாதிரியான பெருஞ்சாவு பெரியப்பாவின் சாவு. சாவு நடந்தபின் சண்டைகளும் சச்சரவுகளும் வரிசையாக நடந்து முடிந்தன. சொத்து என்பது பாசத்தை விட கனமானதாக அந்த குடும்பத்தினுள் நின்றது. ஊருக்கே பஞ்சாயத்து பேசிய குடும்பத்துக்கு இப்போது ஊர்தான் பஞ்சாயத்து செய்து வைத்தது. நிலங்கள் பிரிக்கப்பட்டன. வீடு பங்கு போடப்பட்டது. கடன்கள் தலைக்கு இவ்வளவு என பிரித்துத் தரப்பட்டன. இறுதியில் பெரியப்பாவுக்கு ஆண் வாரிசு இல்லையாதலால் அவரது பங்கையும் ஏழு தம்பிமார் பிரித்துக் கொள்வது என்றும், பெரியம்மாவுக்கு இறுதிவரை வாழ்வதற்கான உதவிகளை செய்வது என்றும் செல்லக்கிளியின் திருமணத்தை ஏழு சித்தப்பாமாரும் பகிர்ந்து நடத்தி வைப்பதென்றும் பஞ்சாயத்தானது. அநியாயம்தான். அக்கிரமம்தான். ஆனால் செல்லக்கிளி சார்பில் தட்டிக் கேட்க அந்த குடும்பத்தில் ஒரு ஆம்பிளை கூட இல்லாமல் போச்சே..

ஆண்டு அனுபவித்த பெரிய வீட்டை விட்டு பெரியம்மா தெக்குத் தெருவில் இருந்த ஒரு சின்ன ஓரறை வீட்டுக்கு தள்ளப்பட்டாள். அவளுக்கான பண்ட பாத்திரங்கள் அவளுக்கு வழங்கப் பட்டன. பாத்திரங்களில் பெரும்பான்மை செல்லக்கிளியின் திருமணத்தின்போது திருப்பித் தரப்படும் என்ற வாய்மொழி உத்தரவாதத்தின் பேரில் தம்பிகள் எழுவரின் சம்சாரங்கள் பிரித்துக் கொண்டார்கள்.

பெருங்கொண்ட குடும்பத்தில் பிறந்தவள். பெருங்கொண்ட வாழ்வு வாழ்ந்தவள். அண்ட ஆளில்லாத நிலைமையில் ஒரு சிறு பொந்தில் தன் மகளோடு வாழத் துவங்கினாள்.

இங்குதான் செல்லக்கிளியைப் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. செல்லக்கிளியும் அழகு என்றால் அத்தனை அழகு. அவளது திருமணம் பற்றி பஞ்சாயத்தில் பேச்சு வரும் போதெல்லாம் சிததப்பாக்கள், அந்தப் புள்ளையோட அழகுக்கு மாப்புள்ளைக வரிசைல நிண்டு கட்டிக்கிட்டுப் போயிருவாங்ய.. என்று சொல்வதற்கு ஈடாக பேரழகியாக இருந்தாள். பருவம் வரும்போது அவளது அழகு என்ன ரூபமெடுக்கப் போகிறது என்பதே அனைவரின் கற்பனைக்கான சவாலாக இருந்தது. என்ன ஒன்று.. அழகில் மட்டுமல்ல, அறிவிலும் செல்லக்கிளி அவளது அம்மாவைக் கொண்டிருந்தாள். பத்து ரூபாய்க்கு சில்லறை வாங்கக் கூட தெரியாதவளாக இருந்தாள். எழுத்துக்களோ அவளது நினைவிலேயே நிற்காது. சொன்ன வேலையை செய்வாள். அதிலும் கூட நிறைய குறைகள் இருக்கும். சித்திகள் திட்டித் திட்டி சொல்லிக் கொடுத்தாலும் வேலைகள்கூட அவள் மண்டையில் ஏற மறுத்தன. குப்பையில் மலர்ந்திருக்கிறோம் என்ற பிரக்ஞையற்ற ஒரு காட்டுப் பூவைப் போலதான் தனது குறைகளைப் பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி அவள் பாட்டுக்கு சந்தோஷமாக வளைய வந்தபடி இருந்தாள் – குறைந்த பட்சம் அவளது அழகு பற்றிய பிரக்ஞைகூட அவளுக்கு இல்லாமலிருந்தது.

பங்கு பாகம் பிரிக்கப்பட்டு இருட்டறைக்குள் அவர்களது வாழ்வு தள்ளப்பட்ட பிறகு சித்ததப்பாக்கள் கொடுப்பதாகச் சொன்ன உதவித் தொகையும் சிறுத்துக் கொண்டே போக ஆரம்பித்தது. சாப்பிட வேண்டுமே. பசியெனும் பெருநோய் துரத்த அந்த நாட்டாமைக்காரரின் பொண்டாட்டி கருதறுப்பு, களையெடுப்பு, சித்தாள் வேலை என்று போகத் துவங்கினாள். ஆரம்பத்தில் லேசாக முனகிய சித்தப்பாக்கள் பிறகு அந்த முனகலையும்,, மாதா மாதம் கொடுத்து வந்த சிறு தொகையையும் கூட நிறுத்திக் கொண்டார்கள். இரண்டு வயிறு உண்ண வேண்டுமல்லவா.. அதனால் செல்லக்கிளியும் கூட அவளது அம்மாவுடன் அறுப்பு, நடவு என்று வேலைகளுக்குப் போகத் துவங்கினாள்.

மனித துயரங்களைப் பற்றி இயற்கைக்கு எந்த அக்கறையும் இல்லை.. வருடங்கள் ஏற ஏற செல்லக்கிளிக்கு வனப்பை அள்ளி அள்ளி கொடுக்கத் துவங்கியது இயற்கை. வயது வந்ததும் தோலில் ஏறிய மினுமினுப்பும், தானாய் செதுக்கிக் கொண்ட அவளது உடல் உறுப்புக்களின் செழுமையுமாக அவள் ஆட்டுக் கூட்டத்துக்குள் வாழச் சபிக்கப்பட்ட தேவதையைப் போல வளைய வரலானாள். இளவட்டங்கள், பெரியவர்கள் என்றில்லாமல் செல்லக்கிளி அனைவருக்குமான கனவு ராசாத்தியாகிப் போனாள்.

ஊரில் பெரிய மனுசர்கள் சிலபேர் அவளது சித்தப்பாக்களிடம் சீக்கிரம் அவளை யார் கையிலாவது பிடித்துக் குடுத்துருங்கப்பா. அந்தப் புள்ளைக்கும் வெவரமில்ல. அவ அம்மாக்காரிக்கும் விவரமில்ல.. என்று சொல்லிச் சென்றார்கள். சித்தப்பன்கள், அவன் பாத்துக்குவான், அவன் பாத்துக்குவான் என்று ஒருவர் மேல் ஒருவர் பொறுப்பை சுமத்திச் சுமத்தி கடந்து சென்றார்கள்.

இப்படியாக இருந்த ஒரு நாளில்தான், செல்லக்கிளியின் அம்மாவுக்கு திடீரென்று ஒரு நினைப்பு தட்டியது. கொஞ்ச நாளாகவே செல்லக்கிளி மாதாந்திர தொந்தரவுகளுக்கு துணி தேடவில்லையே என்று.. செல்லக்கிளியை அதட்டிக் கேட்டபிறகுதான் விபரம் தெரியவந்தது..

ஒரு சித்தியிடம் சொல்லவும் எல்லா சித்தி சித்தப்பாக்களும் வந்துவிட்டார்கள். வயிறு தெரியத் துவங்குமளவுக்கு செல்லக்கிளி கர்ப்பமாக இருந்தாள். அனைவர் தலையிலும் இடிதான் இறங்கியது. நாட்டாமை குடும்பமல்லவா..? சாதி மானம், குடும்ப மானம், கௌரவம் எல்லாம் என்னாவது..? வீடு முழுக்க அழுகையும் வன்முறையும்தான். ஆளாளுக்கு மாறி மாறி செல்லக்கிளியை அடித்துத் துவைத்தார்கள். இந்த சீரழிவுக்கு எவன் காரணமாக இருந்தாலும் எப்படியாவது அவனுக்கே செல்லக் கிளியை தட்டி விட்டுறலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. அடித்துக் கேட்டதில் செல்லக்கிளி இன்னொரு இடியைப் போட்டாள். மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு ஓய்வு பெறும் வயது அரசு ஊழியர் என நான்கு பேர் அவளை உண்டிருந்தார்கள். எது பற்றியும் விவரமில்லாத செல்லக்கிளிக்கு அது பற்றியும் எந்த விவரமும் இல்லை. ஒருவர் மற்றவருக்கு என்று அறிமுகம் செய்ய, நல்லாத்தானே இருக்கு என்று இவளும் உடன் பட்டிருக்கிறாள்.

அந்தக் குடும்பம் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. எவனாவது ஒருவன் என்றால் கட்டி வைக்கலாம். நான்கு பேர். அதிலும் மூன்று பேர் கல்யாணம் ஆனவர்கள். அதில் ஒருவர் பேரன் பேத்தி எடுத்தவர்.

அந்த ஊரில் வழக்கமாய் கருக்கலைக்கும் மாரி ரகசியமாக வரவழைக்கப் பட்டாள். அவள் செல்லக்கிளியின் வயிற்றைப் பார்த்துவிட்டு, “இது ஆகாது. ரொம்ப மாசமாயிப் போச்சு. கலைக்கிறதும் ஒண்ணுதான். கொல்லுறதும் ஒண்ணுதான். நான் மாட்டேன் சாமி..” என்று போய் விட்டாள்.

அந்த சிறு வீட்டின் சுவர்களுக்குள், துக்கமும், அவமானமும், அருவெறுப்பும் கரைபுரண்டோடியது. செய்வதறியாது திகைத்த அனைவரும் கடைசியாக ஒரு முடிவை எடுத்தார்கள். தொத்தனும், செவ்வாயியும் அழைக்கப் பட்டார்கள். அந்த ஊரின் இரு இருண்ட மனிதர்கள் அவர்கள். தொத்தன் தொழுநோய் வந்து விரல்கள் ஊனமானவன். பிழைப்புக்காக பொட்டலம் விற்று உயிர் வாழ்பவன். ஊரின் தீண்டத்தகாத மட்டுமல்ல.. பேசத்தகாத மனிதன் என்ற லிஸ்ட்டிலும் அவன் இருந்தான்.

செவ்வாயி முன்னாள் பாலியல் தொழிலாளி. தற்போது வயதாகிவிட்டதால், யாராவது கேரளாக்காரப் பிள்ளைகள் கம்பம், போடி என்று வந்து தங்கி தொழில் பார்ப்பார்கள். செவ்வாயிக்கு தகவல் சொல்வார்கள். (அப்போது செல்போன் அல்ல.. டெலிபோனே அபூர்வமாக இருந்த காலம்). செவ்வாயி இந்த தகவலை ஆர்வமுள்ள கஸ்டமர்களுக்கு சொல்வாள். அவர்களிடம் சிறு தொகை வாங்கிக் கொண்டு அந்த பெண்கள் தங்கி இருக்கும் இடத்தையும் தனக்கான கோட் வேர்டையும் சொல்லி அனுப்புவாள். (அந்த கோடு வேர்டு இல்லலாவிட்டால் அவர்களை அந்த பெண்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று சொல்லி அனுப்புவாள். உண்மையில் அந்த கோடு வேர்டின் மூலமாகவே அந்த கஸ்டமர்கள் செவ்வாயி மூலம் வந்தவர்கள் என்பதை அந்த பெண்கள் அறிவார்கள். கணக்கு வைத்துக் கொண்டு கஸ்டமருக்கு இவ்வளவு என்று இவளுக்கான தொகையை கொடுத்து விட்டு செல்வார்கள்.) செவ்வாயியும் தொத்தனின் லிஸ்ட்டுதான்..

பேச்சில் பேரங்களுக்குப் பிறகு முடிவு வந்தது. தொத்தனும், செவ்வாயியும் செல்லக்கிளியை ஆத்துக்குள் ஆழமான இடத்துக்கு அழைத்துச் சென்று தண்ணியில் மூழ்கடித்து கொன்றுவிட வேண்டியது. அதற்கான சம்பளமாக தொத்தனுக்கு 300 ரூபாயும் செவ்வாயிக்கு 200 ரூபாயும் (அங்கும் பெண்ணுக்கு குறைந்த கூலிதான்) தந்து விடுவதாக முடிவு செய்யப்பட்டு ஏக போகமாக இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப் பட்டது.

இவை அனைத்தும் செல்லக்கிளியின் முன்பாகவே நடந்து முடிந்தன. செல்லக்கிளி யாருக்கோ என்பது போலத்தான் பார்த்தபடி இருந்தாள். இருவரும் செல்லக் கிளியை அழைத்துச் செல்ல எத்தனித்தபோது பெரிய சித்திதான் ஒரு நிமிஷம் நில்லுங்க என்று சொல்லி விட்டு மற்றவர்களை தனியே அழைத்துச் சென்று ஆலோசனை செய்தாள். தொத்தனோ பொம்பளையே கிடைக்காதவன். செவ்வாயியை கேட்கவே வேண்டாம் பொம்பளை வியாபாரம்தான் அவளது தொழிலே. செல்லக் கிளியை அவர்கள் அழைத்துச் செல்லும்போது தொத்தன் அவளுடன் உறவு கொள்ள மாட்டான் என்பதற்கோ, செல்லாயி போகும் வழியில் சில கஸ்டமர்களிடம் செல்லக்கிளியை அனுப்ப மாட்டாள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் யாராவது உடன் செல்ல வேண்டும் என்று சித்தி சொல்ல அனைவரும் அது சரிதானே என்று யோசிக்கத் துவங்கினார்கள். இதற்கு மேலும் குடும்ப மானம் போகக் கூடாது என்பதில அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

நீ போ நீபோ.. என்று ஒருவர் மற்றவரை கை காட்ட, இருந்தவர்களிலேயே விவரமானவனாக அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சென்றாயன் இதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டான். அவனைப் பொறுத்த வரையில் அவன் அவர்கள் கூடவே போக வேண்டியது.. வழியில் செல்லக்கிளிக்கு எதுவும் மானபங்கம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது. அவர்கள் கொன்று விட்டது உறுதியாகத் தெரிந்த பிறகு வீடடுக்கு வந்துவிட வேண்டியது.. அவ்வளவுதான். மானம் எவ்வளவு முக்கியம் என்று அவனுக்கு அழுத்தமாக சொல்லி அனுப்பினார்கள்..

^^^^^

அவனது கண்கள் மினுக்கத் தொடங்கியதை நான் கவனித்தேன். ஆலமரத் தண் காற்று கூட ஒரு இலையையும் அசக்காமல் நின்று கவனிக்கத் துவங்கியது. சற்று தள்ளி ஊதாப் பூ பூத்து நின்றிருந்த எருக்கஞ்செடி கூட இந்தப் பக்கம் திரும்பியது மாதிரி இருந்தது. எனது உள் முழுக்க ஒரு நடுக்கம் பரவிக் கிடந்தது. இதற்கு மேல் சொல்லாதே என்று அவனிடம் கெஞ்சச் சொல்லி ஒரு மனது சொன்னது. இன்னொரு மனதோ நடுக்கத்துடன் மேலே சொல்லு மேலே சொல்லு என்று சத்தமின்றி அவனிடம் இறைஞ்சிக் கொண்டு இருந்தது. கதிர் வீச்சைப் போல துயரம் சுமந்த அவனது கண்கள் பெரு வெளியின் காலக் கோட்டைத் தாண்டி இருபது வருடத்துக்கு முந்தைய கணத்தை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதற்குள் முகம் புதைத்திருந்தன. என் கண் கலங்கியிருந்ததா எனத் தெரியாது. ஆனால் அடுத்து நடக்கப் போகும் சம்பவங்களுக்கு என் மனம் இறுகித் தயாராகி நின்றது நிஜம்..

*******

ஒப்பந்தப்படி தொத்தன் முன்னால் செல்லவேண்டியது. கொஞ்சம் இடைவெளி விட்டு செவ்வாயி செல்ல வேண்டியது. நல்ல இடைவெளி விட்டு சென்றாயன் செல்லக்கிளியை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டியது. நியமப்படி அந்த ஊர்வலம் தொடங்கியது.

மஞ்சளில் நீல நிறப் பூக்கள் நிறைந்த சீட்டிப் பாவாடையைத்தான் செல்லக் கிளி அணிந்திருந்தாள். ஊதா வண்ண லவிக்கையும், சாயம் போன ஆரஞ்சு வண்ண தாவணியும் அணிந்திருந்தாள். சிறு வயதில் செல்லக்கிளியும் சென்றாயனும்தான் விளையாட்டு சேக்காளிகள். நண்பர்களுக்குள் அடிதடி நடந்தாலும் இருவரும் சமாமாகவே சண்டை போட்டு சமமாகவே அடிகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

திடீரென செல்லக்கிளி அந்த விளையாட்டு நாட்களுக்குள் போன மாதிரி பேச ஆரம்பித்தாள்: “நீ ஓடு.. நான் நொண்டியடிச்சு துரத்தி வாறேன்.” என்றாள். இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மறுத்து விட்டான். ஆனாலும் உற்சாகம் குறையாத செல்லக்கிளி அவனை பாதையோரம் நிறைந்திருந்த உண்ணிச் செடிகளின் பழங்களைப் பறித்துத் தரச் சொன்னாள். இவன் இறுக்கமாகவே பறித்துக் கொடுத்தான். உண்ணிப்பழம் தின்று ஊதா வண்ணமாகிப் போன அவளது நாக்கை இவனிடம் அடிக்கடி காட்டியபடி நடந்தாள். உண்ணிப் பூ பறித்து வெத்தலை போட்டுக் கொண்டாள். திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வரப்புச் சரிவில் மண்டையாட்டிக் கொண்டிருந்த கரட்டானை நோக்கி விட்டெறிந்தாள். அது குறி தவறி நீரில்லாத கால்வாய்க்குள் சென்று மறைந்தது. “இந்த வயக்காட்ல கருதறுக்க வந்தப்பதேன் நம்ம காமாச்சியக்காவுக்கு பாம்பு கடிச்சிச்சு.. அந்தா இருக்குல்ல ராவுத்தரு வயக்காடு.. அங்க வெதைப்புக்கு வந்தப்பதேன் என்னோட பச்சைப் பாவாட கிளிஞ்சு போச்சு..” என்று எதை எதையோ பேசியபடி வந்தாள். சென்றாயனுக்குள் இனந்தெரியாத ஒரு இறுக்கம் பரவி நின்றது. பதினான்கு வயதில் உலக நியதிகள் புரியாமலில்லை. ஆயினும் ஏதோ ஒன்று அவனை ஊமை செய்து வைத்தது..

அவளது முகம் வழக்கத்தைக் காட்டிலும் மிக அழகாக மினுமினுத்ததாம். (தாய்மையின் மினுக்கம் என்று நான் கணிக்கிறேன்.) அன்றைக்கு அவள் அவ்வளவு அழகாக இருந்தாளாம்..

“ஏண்டா சென்றாயா.. (அப்போது அவன் கஞ்சா அடிக்கத் துவங்கவில்லையாதலால் மெண்டல் என்ற பெயர் அப்போது அவனுக்கு இல்லை. சென்றாயன் என்றே அழைக்கப் பட்டான்.) எப்புடிடா செத்துப் போவேன்..?”: என்று அவள் திடுமென கேட்டபோதுதான் அவனுக்கு நடக்கப் போவதன் உக்கிரம் உறைத்திருக்கிறது. பயத்தை மறைத்துக கொண்டு கோபமாக, “இப்ப நீ வாய மூடிக்கிட்டு வரமாட்ட..?” என்று கத்தி இருக்கிறான்..

செல்லக்கிளி சமாதானமாக, உற்சாகம் குறையாமல் “ஆத்துல தண்ணி கம்மியா வருதாமே.. என்னைய எப்புடி கொல்லுவாகளாம்..? சும்மா தெரிஞ்சுக்கிறதுக்குதான் கேட்டேன்..” என்று அவள் சொல்ல சென்றாயனுக்கு மெல்ல உடலில் நடுக்கம் தோன்றத் துவங்கி இருக்கிறது. “வேகமா நட..” என்று சொல்லி விட்டு அவன் முன்னால் நடக்க, நல்ல வேளை ஆறு வந்து விட்டது. தொத்தனும், செவ்வாயியும் வெயிலோடு எரிச்சலாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

“எம்புட்டு நேரமா நடந்து வருவீக..? வெயிலு வேற இம்புட்டு போடு போடுது.. சோலிய முடிச்சிட்டு திரும்பி நடக்க வேணாமா..?” என்று சலித்துக் கொண்டான் தொத்தன்.

ஆனால் செல்லக்கிளியின் பார்வை முழுக்க ஆற்றின் மறுகரையில் இருந்த மாந்தோப்பிலேயே இருந்தது. பரபரப்பாகி சென்றாயனிடம், “எலேய் எலேய்… தம்பி.. அதுல ஒரே ஒரு மாங்கா பறிச்சுத்தாடா.. ரொம்ப ஆசையா இருக்கு..” என்று கேட்கிறாள்.

தொத்தன், ”ப்ச். போற நேரத்துல என்னத்துக்கு மாங்கா தேங்கான்னுக்கிட்டு..?” என்று சொன்னதுதான் தாமதம். உரத்த குரலில் சென்றாயன், “ஏய் தொத்தா.. வாயத் தொறந்த.. கொண்டுருவேன். சாவத்தான போகுது..? வேணும்ன்றத திண்டுட்டுப் போகட்டும்..” என்றபடி ஆற்றுக்குள் இறங்கி அந்த தோப்பின் கரைப் பக்கம் ஆழம் இருந்ததால் நீந்திச் சென்று ஒரு மாங்காயை பறித்துக் கொண்டு வந்து செல்லக் கிளியிடம் கொடுக்கிறான்.

அவள் அதை ஒரு சின்னஞ்சிறுமியின் ஆவலுடன் தின்னத் துவங்குகிறாள். மெல்ல சென்றாயனுக்குள் ஏதோ ஒன்று நெகிழ்கிறது.

செவ்வாயி, “ஏம்மா முழு மாங்காயும் திங்கப் போறீங்களா..?” என்று கேட்டதும், இவள் அவசரஅவசரமாக கடைசி கடி கடித்தபடி பாக்கி மாங்காயை சென்றாயன் பக்கம் நீட்டி, “இந்தாடா.. கடிக்காத பக்கமா நீ தின்னுக்க.. நான் போயி சாகுறேன்..” என்றபடி அவன் கையில் மாங்காயைத் திணித்து விட்டு ஓட்டமாக செவ்வாயி, தொத்தனைப் பார்த்து ஓடுகிறாள்.

சென்றாயன் கையில் பிடித்த மாங்காயுடன் பார்த்தபடியே இருக்க. தொத்தனும் செவ்வாயியும் சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு இரு பக்கமாக அவளைப் பிடித்து ஆற்றுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

இடுப்பளவு ஆழத்துக்கு சென்றதும் தொத்தன் செல்லக்கிளியை தண்ணீருக்குள் படுக்கச் சொல்கிறான். அவள் குப்புறப் படுக்கப் போக, அவன் மல்லாக்கப் படுக்கச் சொல்கிறான். அவள் மல்லாக்க, நீந்துவது போல படுக்க, சரேலென்று அவளை நீருக்குள் அமுக்கி தொத்தன் அவள் கழுத்து மேல் நின்று ஊண்டி மிதிக்கிறான். செவ்வாயி அவளது கால்களின் மேல் ஊண்டி நின்று கொள்கிறாள்.

சென்றாயன் மெல்ல நடுங்கத் துவங்க, செல்லக்கிளியின் கடைசிக் காற்று தண்ணீருக்குள் இருந்து கொப்பளித்து கொப்பளித்து வெளியேறுகிறது. சென்றாயனுக்கு அலற வேண்டும் போல இருக்கிறது. கை கால்கள் நடுங்குகின்றன. குறைந்த பட்சம் அய்யோ என்று கத்தவாவது வேண்டும் போலிருக்கிறது. உள்ளுக்குள் நெகிழ்ந்த அது இப்போது தெறித்து உடைந்து விழ அப்படியே கேவி அழத் துவங்குகிறான். வைத்த கண்ணை எடுக்காமல் அங்கேயே பார்த்தபடி அப்படியே உட்கார்ந்து அழத் துவங்குகிறான்.

தொத்தனும், செவ்வாயியும் மரணம் உறுதியானபின் அவசர அவசரமாக கரைப்பக்கம் வருகிறார்கள். செவ்வாயி என்னமோ கொஞ்சம் தண்ணீரை எடுத்து தலையில் மட்டும் தெளித்துக் கொள்கிறாள். தொத்தன் வெளியில் வந்து நனைந்த கையை சட்டையின் நனையாத பகுதியில் துடைத்துக் கொண்டு, பாக்கெட்டில் இருந்து கஞ்சா சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைக்கிறான்..

நீல நிறப் பூக்கள் போட்ட மஞ்சள் பாவாடை மெல்ல மிதந்து வெளிவருகிறது. அப்புறம் ஒரு அடர் ஆரஞ்சு கொடி மாதிரி தாவணி வெளி வருகிறது. மெல்ல ஆற்றின் போக்கில் செல்லக்கிளி தன் பயணத்தைத் துவங்குகிறாள்..

கேவியழும் சென்றாயனின் கையில் இருந்து அந்த உண்ணப்படாத மாங்காயை பிடுங்கி ஆறறுக்குள்ளேயே வீசிவிட்டு கிட்டத்தட்ட அவனை இழுத்துப் போகத் துவங்குகிறாள் செவ்வாயி..

அதற்குப் பின் ஒரு போதும் நுழையாத வீட்டைப் பார்த்து அழைத்துச் செல்லப் படுகிறான் சென்றாயன்..

************

“ஒறங்க முடியலண்ணே.. கண்ண மூடுனா செல்லக்கிளி வந்து மாங்கா குடு, மாங்கா குடுன்னு கேக்குறாண்ணே.. (கையில் புகையும் கஞ்சா சிகரெட்டை காட்டி) இதப் போட்டாத்தேன் அவ வராம இருக்குறா.. அம்புட்டு பேரும் மெண்டலு மெண்டலுன்றாங்ய.. நம்ம தும்பம் யாருக்குண்ணே தெரியும்..? அவிங்யளுக்கு தெரியும்.. என்ன நடந்துச்சுண்டு நல்லா தெரியும்.. ஆனா எப்புடி நடந்துச்சுண்டு எனக்கும், இப்ப ஒனக்கும் மட்டுந்தாண்ணே தெரியும்..” என்றபடி நிமிர்ந்தவன் நான் அழுது கொண்டு இருப்பதைப் பார்த்ததும் சட்டென குற்றவுணர்வில் பார்வையைத் திருப்பிக் கொண்டு, “மன்னிச்சுக்கண்ணே.. போயிருவோமா..?” என்று கேட்க, நான் சரி என்று தலையை மட்டும் அசைத்தேன்..

*****

,இப்போது புன்னகைக்கும் சென்றாயனின் முகத்தில் குழந்தைமை கூடி இருந்தது. அந்தக் கண்ணில் சதா தெரியும் தயக்கம் போயிருந்தது. அவனது புன்னகை ஒரு அகல்விளக்கின் ஒளியைப் போல சுடர்ந்தது. எனது துக்கம் பெரிதாகி ஒரு புன்னகையாய் மாற, “சென்றாயா..” என்று என் அன்பைத் திரட்டி அவனை அழைத்தேன்..

“ஆத்துப் பக்கம் போயிறாதண்ணே.. ஆறெல்லாம் மஞ்சப்பாவாட மெதக்குது.. நீ போனா உன்னையும் உள்ள இழுத்துக்கிரும்.. போயிறாத.. என்ன..?” என்றான் அவன்..

எனது துயரம் தாங்கவொண்ணாததாக இருந்தது. அவனுக்கு என்னால் ஒரே ஒரு ஆறுதலை மட்டும் தர இயலும் என்று தோன்றியது. இரு கைகளையும் நீட்டி வா என அவனை அழைத்தேன்.

அதை ஏற்றாற் போல இல்லாமலும் மறுத்தாற் போல இல்லாமலும் அதே அகல் விளக்குப் புன்னகையுடன் அவன் அங்கேயே நின்றான். நான் கூச்சத்தை எல்லாம் உதறிவிட்டு, நேராக அவனருகில் சென்றேன்.

“என்னைய அடையாளம் தெரியுதா சென்றாயா..? வாடா.. ஒருக்கா உன்னை கட்டிப் புடிச்சிக்குறேன்..” என்று கைகளை நீட்டினேன். அவன் என் இரு கைகளையும் மாறி மாறிப் பார்த்தான். அவனை நான் அணைக்கப் போகும் கணத்துக்கு முந்தைய கணம் வண்டியோடு வந்து விட்ட கண்ணன் சட்டென என்னைப் பின்னுக்கு இழுத்தான்..

“என்ன ஶ்ரீ உங்களுக்கு பைத்தியமா..? அவென் இப்ப நெசமாவே மெண்டலாயிட்டான்.. நீங்க பாட்டுக்கு அவனை கட்டிப் புடிக்கப் போனா அவன் உங்கள கடிச்சு வச்சிட்டா என்ன செய்யுறது.. (திருமபி) எலேய் ஓடிப் போயிரு. இல்ல. அடிபெத்தே செத்துப் போவ..” என்றதும் அதே அகல்விளக்குப் புன்னகையுடன் சென்றாயன் மெல்ல நடந்து போய்விட்டான்.

உணவேதும் கிடைக்காமல் சமையலறையை விட்டு வெளியேறும் தளர்ந்த எலியைப் போலத்தான் அவன் நடந்து போனான்..

ஒரு முற்றுப் பெறாத அணைப்பை என் இரு கைகளிலும் தேக்கி நான் பெரும் துக்கவானாக, போகும் அவனையே பார்த்தபடி நின்றிருந்தேன்..

– காக்கை சிறகினிலேயில் 2014 மார்ச் இதழில் வெளியான சிறுகதை

Print Friendly, PDF & Email

13 thoughts on “செல்லக்கிளியின் தம்பி

  1. செல்லக்கிளியின் மூச்சுக்காற்று மனமெங்கும் குமிழ் குமிழாக…! செல்லக்கிளியைச் சிதைத்த அரக்கர்களும், கொன்றவர்களும் குறுகுறுப்பின்றி இருக்க மனசாட்சி உறுத்திய காரணத்தால் கஞ்சா குடித்து மெண்டலான சென்றாயனையும், செல்லக்கிளியையும் எப்படி மறக்க?

  2. மிகவும் அருமையானதொரு படைப்பு! சென்றாயன் பாத்திரம் கண் முன்னே நிற்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் திரியும் எத்தனையோ நபர்களுக்குள்ளும் இப்படி ஒரு கதை இருக்கலாம்! கண்கலங்க வைத்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  3. உம்மிடம் கேட்பதற்கான சில கேள்விகளின் விடைகள் உமது எழுத்தில் எனக்கு கிடைத்துவிடுகின்றன நண்பா

  4. கதை எழுதிய விதம் நன்றாக இருந்தது என்று பாரட்ட மனம் வரவில்லை. இவ்வளவு சோகத்தை நான் பார்க்க கேட்க படிக்க விரும்புவதில்லை.

  5. ஒருமுறைதான் படித்தேன். மறுமுறை படிக்க மனம் வரவில்லை.
    யானை மிதித்துச் செத்துப்போன எறும்புக்கூட்டம்.
    என்னைக்கேட்டால் அந்த ஊர் முழுவதையும் அழித்து அந்தச் சாலையை விரிவுசெய்யவேண்டும்.
    அனைவரும் கடந்துபோகவேண்டிய சாலை அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *