கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 10,516 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டி நாட்டிற்குத் தலை நகரமாக மதுரை விளங்கிற்று. அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் சிலர் காலையில் நான்கு மணிக்கெல்லாம் வழக்கமாக எழுந்திருப்பார்;வேறு சிலர் சோம்பலுடன் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்க ஆசைப்படுவார்கள்; ஆனால் அவர்களை வேறு சில ஒலிகள் எப்படியேனும் எழுப்பி விடும். அந்த ஒலிகள் எவை? மாணவர்கள் பாடங்களைப் படிக்கும் ஒலி, புலவர்கள் நூல்களை ஆராயும் ஒலி, ஆகியவையே அவை. மதுரை நகரம் முழுவதும் காலை நேரத்தில் தமிழொலி நிறைந்திருக்கும். தமிழ்ச் சங்கங்கள் விளங்கிய இடம் அல்லவா அது!

ஒருநாள் காலை நேரம்; ஞாயிறு வானத்தை அடையவில்லை. அந்தக் காலத்தில் மதுரை மக்கள் மனக்கிளர்ச்சியுடன் இருக் கின்றார்கள்; எல்லோரும் காலையில் எழுந்ததும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து விட்டனர்; நீராடி இருக்கின்றனர்; நல்ல அணிகளை அணிந்து கொண்டனர்; அழுக்கில் லாது வெள்ளை வெளேரென இருக்கும் ஆடைகளை உடுத்துக்கொண்டனர். அவரவர்களின் தகுதிக்கும் செல்வ நிலைமைக்கும் பொருந்த வாகனங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். சிலர் குதிரைமேல் ஏறினர்; சிலர் தேர்மீது அமர்ந்தனர். சிலர் கொல்லாப்பண்டி என்ற ஒருவகை மூடுவண்டியில் ஏறிக்கொண்டனர்.

சங்க காலத்துக் கதைகள் எல்லோரும் மேற்குத் திக்கு நோக்கிச் சென்ற னர்; இவர்கள் உடையின் வெண்ணிறத்தால் இருள் ஒழிந்தது; அவர்கள் பேச்சாகிய ஒலி எங்கும் நிறைந்திருந்தது; ஆகவே ஞாயிறு தோன்றா திருந்தும் நகரம் முழுவதும் ஒளியும் ஒலியும் பரவி இருந்தன.

இந்த மக்கள் மேற்கு நோக்கிச் செல்லக் காரணம் என்ன? திருப்பரங்குன்றம் என்னும் அழகியமலை மதுரைக்கு மேற்கே ஐந்து கல் தொலைவில் இருக்கின்றது. அந்த மலையில் முருகக் கடவுள் கோயில் இருக்கின்றது. அந்தப் பெருமானுக்குத் திருவிழா நடக்கின்றது. அந்த விழாவைக் கண்டு களிப்பதற்காகவே மக் கள் செல்லுகின்றார்கள். இவர்கள் கடவுள் அன்பை என்ன என்று சொல்வது! வைகறையில் எழுந்தார்கள்; கடமைகளைச் செய்தார்கள்; தூய்மையான உள்ளத்தோடு இறைவன் திருக்கோவிலுக்குச் செல்கின்றனர். அன்பர்களே! நீங்களும் இவ்வாறு கடவுளன்பு உடையவர் தாமே!

இப்பொழுது எல்லோரும் திருப்பரங்குன்றத்தை அடைந்தனர். அவரவர்களும் ஏறி வந்த வாகனங்களாகிய தேர் குதிரை முதலிய வற்றைப் பாதையின் இருபுறத்திலும் விட்டனர். யானைகள் கூட்டம் கூட்டமாக விளங்கின; குதிரைகள் பந்தி பந்தியாகக் காணப்பட்டன; தேர்கள் அணி அணியாக நின்றன. இந்தக் காட்சியைக் கண்டோர் அரசன் பகை

முருகவேள் திருமணம் வர்மேல் போருக்குச் செல்வதற்குத் தன் சேனையை ஒழுங்கு செய்து வைக்கின்றானோ என்று நினைப்பார்கள். செல்வத்தால் பொலிந்த மதுரை மக்களின் பெருமைதான் என்ன!

மக்கள் மலைமேல் ஏறத் தொடங்கினர். மலைப் பக்கங்களில், பச்சை இலைகளுடன் ஆம்பல் மலர்ந்திருக்கின்றது. காந்தள் மலர் நல்ல மணத்துடன் குலை குலையாகப் பூத்திருக்கின்றது. எருவை என்னும் மலர் அருமையாகக் காணப்படுகின்றது. வேங்கைப் பூ சிவப்பாக விளங்குகின்றது. தோன்றிப் பூ அழகாகக் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கின்றது. நறவம், கோங்கு, இலவம், மற்ற மலர்கள் எல்லாம் சிறப்பாகப் பூத்துக் கமழ்கின்றன. பார்ப்போருக்கு இவை, தெளித்து வைத்தவற்றைப் போலவும், கட்டின மாலைகளைப் போலவும், தூக்கிக் கட்டப்பட்ட மாலைகளைப் போலவும் விளங்கிக்கொண்டிருக் கின்றன. இந்தக் காட்சி காலைப் பொழுதில் மலையின் மேல் பல நிறங்களையுடைய மேகக் கூட்டங்கள் தங்கியிருத்தலைப் போன்றிருந்தது. இதனைக் கண்ட மதுரை நகரத்தார். “இயற்கை அழகை எப்படிச் சொல்ல முடியும். கடவுளின் படைப்பு இந்த இயற்கையில் வெளியாவதைப் பாருங்கள்; எல்லாம் முருகன் செயல்,” என்று சொல்லி மகிழ்ந்தார்கள்.

எல்லோரும் கோயிலுள் சென்றார்கள். அங்குங் கோயிலின் முன்புறத்தில் யானை ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது. அந்த யானை முருகனின் ஊர்தி என்று உரைக்கப்படும். ஆதலின், அதன் மத்தகத்தில் குங்குமத்தை அப்பிப் பூக்களைச் சூடுகின்றனர்; அதன் செவியில் வெண் சாமரைகளை அணிகின்றனர்; குடையை அதன் மேல் பிடிக்கின்றனர்; கவளம் கவளமாக உணவைத் தருகின்றனர். இவ்வகையாக யானையை வழிபடுகின்றனர்.

மேளங்கள் அடிக்கப்படுகின்றன. முரசுகள் ஒலிக்கின்றன. சின்னம் ஊதப்படுகின்றது. ‘ஓ’ என்ற பேரிரைச்சல் உண்டாகின்றது. எல்லோர் கண்முன்னும் முருகன் வள்ளியம்மையுடன் காட்சி அளிக்கின்றான். அந்தக் கண்கொள்ளாக் காட்சியில் யாவரும் ஈடுபடுகின்றனர்; மனம் உருகுகின்றனர்; கைகள் தலைமேல் கூடுகின்றன! கண்ணீர் மலையருவிபோல் வழிந்தோடுகின்றது; உருக்கத்தால் உடல்கள் அசைகின்றன.

“முருகா! முருகா! எம் முயிரைக் கா. செவ்வேளே ! எங்கள் உள்ளத்து உறையும் ஒப்பற்ற ஒருவனே! தங்கள் உடையும் தாங்கள் சூடிக்கொண்டிருக்கும் மாலையும் செந்நிறத் தோடு விளங்குகின்றன. தங்கள் கையிலுள்ள வேலும் செம்மையாக ஒளிவிடுகின்றது. தங்கள் திருவுடல் செந்தணல் போன் றிருக்கின்றது; தங்கள் திருமுகம் கருணை பொழிகின்றது; அலர்ந்த செந்தாமரைபோல் சிறக்கின்றது. பெருமானே! அறிவில் இழிந்த நாங்களும் உய்ய வேண்டும் என்று நினைத்தீர்; இம்மலையில் இந்தக் கடப்ப மர நிழலில் எழுந்தருளி இருக்கின்றீர். அன்று ஒருநாள் விண்ணுலகத்தி லுள்ள தேவர்கள் தங்களிடம் வந்தார்கள். வணங்கினார்கள். எங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழித்தருள்வாய் என்று வேண்டினர். அவர்கள் விண்ணப்பத்திற்கு மனம் இரங்கினீர். அசுரனை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினீர். இன்றும் எங்களைத் துன்புறுத்தும் வீணாசை, பொய், சினம் முதலிய தீயகுணங்களை ஒழித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும். செந்தமிழ்ப் புலவரே! தங்களை முத்தமிழால் ஏசி னோர்க்கும் வரங்கொடுக்கும் தங்கள் உள்ளத்தை எவ்வாறு புகழ்வோம்! இறுதியாக எங்கள் வரத்திற்குச் செவிசாய்க்க வேண்டும். எங்களுக்குப் பொன்னும் பொருளும் போகமும் வேண்டா. எங்களுக்கு வேண்டுவன அருள், அன்பு, அறம் என்னும் மூன்றே. முருகா! அன்போடு இவற்றைத் தருக!” என்று நாத் தழுதழுக்க யாவரும் வேண்டுகின்றனர். இறைவனை வணங்கிய மக்கள் சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்தனர். அங்குள்ள பல காட்சிகளைக் காணத் தொடங்கினர்.

மலையில் பல மண்டபங்கள் இருக்கின்றன. ஓவிய மண்டபத்துள் சில கூட்டஞ் சென்றன. அங்குத் தீட்டப் பெற்றிருக்கும் ஓவியங்களை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக் கின்றனர். நாண்மீன்கள், ஞாயிறு, மதி முத லியன விண்ணில் எவ்வாறு அமைந்திருக் கின்றன என்பதை ஓர் ஓவியம் காட்டுகின்றது; காமன், அவன் மனைவி ஆகிய இருவருடைய எழில் நிறைந்த ஓவியம் சிலர் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றது. ‘ஓடுகின்ற அப்பூனை இந்திரன்; சினத்துடன் நிற்பவர் கௌதம முனிவர்; கல்லுருவம் அகலிகையினுடையது,’ என்று சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ‘இதனை விளக்கமாகக் கூற வேண்டும்,’ என்றொருவர் கேட்கின்றார்.

முன் கூறியவர், ‘தேவர்களின் தலைவன் இந்திரன். அவன் பிறர் மனைவியைக் கண்ணெடுத்துப் பார்த்தாலும் இழிவு என்பதை மறந்தான். கௌதமர் என்பவர் சிறந்த முனிவர்; அவர் ஐம்பொறிகளையும் வென்று தவம் செய்து கொண்டிருந்தனர்; அவருக்கு அகலிகை என்று ஒரு மனைவி இருந்தாள்; அவள் அழகில் மிகுந்திருந்தாள். அவளை இந்திரன் களவுத்தனமாகக் கூட வேண்டும் என்று எண் ணினான்.

‘ஒரு நாள் முனிவர் காலையில் நீராடச் சென்றிருந்தார். அக்காலத்தில் இந்திரன் முனிவரைப்போல் உருவம் கொண்டு அகலிகை யைக் கலந்தான். அப்பொழுது முனிவரும் வந்தனர், வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவம் கொண்டு ஓடினான். அவர், தம் மனைவி கல்லாகப் போகவேண்டும் என்று சபித்தார். அவள் உடனே கல்லாக மாறிவிட்டாள். இந் தக் கதையினைத் தான் இந்த ஓவியம் நமக்கு நினைவூட்டுகின்றது,’ என்றுரைத்தார். எல் லோரும் அவ்வோவியத்தை மேலும் கூர்மையாக நோக்கினார்கள்.

பத்தாண்டுகளும் நிரம்பாத இளம் பெண் ஒருத்தி பெற்றோர்களை விட்டுப்பிரிந்தாள்; மலைக்காட்சிகளைக் கண்டுகொண்டே சென்றாள். மீண்டும் திரும்பி வந்தாள் ஆனால் அவ ளுக்கு வழி தெரியவில்லை; ஆதலின் ‘ என்ன செய்வேன்’ என்று ஏங்கித் திகைத்தாள்.

‘அம்மா! அப்பா!’ என்று வாய்விட்டுக் கத்தி அழைத்தாள். மலையில் ஒருவர் ‘ஓ’ என்றால் அவ்வொலியே மீண்டும் கேட்கும். அன்பர் களே ! நீங்களும் இவ்வாறு கேட்டிருக்கின் றீர்களல்லவா? ஆகவே, அப்பெண்ணின் குரல் ஒலியே மீளவும் ‘ அம்மா அப்பா’ என் றது. அந்தச் சிறுமி அறியாமையால் தன் னைத் தன் பெற்றோரே அழைக்கின்றார்கள் என்று நினைத்து ஒலி வந்த வழியே ஓடினாள். அங்கு யார் இருப்பார்கள்? கல்லும் முள்ளும் கரடுமுரடான கற்களுமே காணப்பட்டன. இவ ளைப்போலவே பலரும் வழியறியாது திகைத் துக்கொண்டிருந்தனர். இவ்வாறு திகைப்பு ஒருபுறம்!

மலையின் மேல் குரங்குகள் பல வாழ்கின் றன. திருவிழாவிற்குச் சென்ற மக்கள் இந்தக் குரங்குகளுக்குப் பழங்களையும் தின்பண்டங்களை யும் தருகின்றனர். அவை சிறிது தொலைவி லிருந்து முதலில் தின்கின்றன. பிறகு கொடுப் போர் அருகே வந்ததும் அவர்கள் கைகளிலிருந் தும் தின்கின்றன. கிடைத்த உணவை அக் குரங்குகள் தின்பதையும், தம் தாடையில் அடக் கிக் கொண்டிருத்தலையும் கண்டு மகிழ்கிறார்கள். சிலர் யானைகளுக்குக் கரும்பைக் கொடுக்கின்ற னர். பிற விலங்குகள் உண்டு மகிழ்வதைக் கண்டு மகிழ்வோர் ஒரு புறம்!

சிலர் குழல், யாழ் முதலிய இசைக் கருவி களை மீட்டுகின்றனர். முருகன் புகழை அக்கருவிகளில் அமைத்துப் பாடுகின்றனர். மனம் உருகுகின்றனர். இனிய இசையுடன் கூடிய வீணையில் இசைந்து நிற்பவன் இறைவன் முருகன். ஆதலின், அவனும் அந்த இசை வெள் ளத்தில் ஆழ்ந்து மகிழ்கின்றான். இங்ஙனம் இறை இசையில் மகிழ்வோர் ஒரு புறம்!

சிறுமியர் சிலர் மலைச்சுனையை அடை கின்றனர். அச் சுனையின் அருகில் பல மரங் கள் நறுமலருடன் விளங்குகின்றன. மலர்க் கொம்புகள் சிலவற்றை அச்சிறுமியர் ஒடிக்கின் றனர்; சுனையில் எறிகின்றனர். கொம்புகளில் மலர் மொட்டுகள் இருக்கின்றன. அக் கிளை கள் தண்ணீ ரில் அமிழாது எடுத்த தலையுடன் மிதக்கின்றன. அவற்றைக் கண்ட அப்பெண்கள் “இது ஐந்து தலை நாகம் போலும்! அவை அதன் குட்டிகள் போலும்!” என்று கூறி அஞ்சினவர்களைப்போல் ஓடுகின்றனர். இதைப் போல் பொய்த்துன்பம் அடைவோர் ஒரு புறம்.

ஒருபுறத்தில் ஆண்டுகள் முதிர்ந்த கிழவி சிறு பையன் ஒருவனுடன் இருக்கின்றாள். பையன் கிழவியைப் பார்த்து, “இந்தத் திரு விழா யாருக்குப் பாட்டி?” என்று கேட்கின்றான்.

பாட்டி -“நம்மைக் காப்பாற்றும் முருகக் கடவுளுக்கு இந்தத் திருவிழா உரியது.”

பையன் -“என்ன திருவிழா பாட்டி?”

பாட்டி – “முருகனுக்குத் திருமண விழா!”

பையன் – “அஃது எப்பொழுது நடந்தது”

பாட்டி – “அது பழங்காலத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியை இப்பொழுதும் கொண்டாடுகின்றார்கள்.”

பையன் – “ஆமாம் பாட்டி! நீ சொல்வதெல்லாம் எனக்கும் தெரிகின்றது. ஆனால் முருகன் திருமணத்தை எப்படிச் செய்து கொண்டான். சொல்லு பாட்டி!”

பாட்டி – “நாம் இப்பொழுது எங்கே இருக்கின்றோம்? தெரியுமா?”

பையன் – “தெரியும் பாட்டி. திருப்பரங்குன்றம் என்னும் மலையின் மேல் இருக்கின்றோம்.”

பாட்டி – “இந்த மலைக்கு வடக்கே பல கல் தொலைவில் வள்ளி மலை என்று இன்றும் ஒரு மலை இருக்கின்றது. அதனை நம்பி என்ற வேடுவர் தலைவன் அரசாண்டான். அவனுக் குப் பிள்ளை இல்லாமலிருந்தது. நம் கடவு ளாகிய முருகனை வேண்டினான். வள்ளிக் கிழங்கு தோண்டி எடுக்கப்பட்ட குழியிலிருந்து ஒரு பெண்குழந்தை கிடைத்தது. அக்குழந் தையை நம்பி வள்ளி என்று பெயர் கொடுத்து வளர்த்து வந்தான்.

பையன் – “அந்த வள்ளியம்மையைத் தான் நம் முருகன் மணந்தானா?”

பாட்டி – “ஆம், அந்த நாளைக் கொண் டாடுவதுதான் இன்றைய திருவிழா”

இவ்வாறு முருகன் மணந்ததைப் பேசும் கூட்டம் ஒருபுறம்.

மக்கள் மணத்தில் மகிழ்ந்து, இறைவனை வணங்கித் தத்தம் வீட்டிற்குச் செல்கின்றனர்.

வாழ்த்து

ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீர் அடியா ரெல்லாம்

முருகன் திருவடி போற்றி

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *