கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 10,667 
 

பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தது கரிசல் காட்டு வேப்பமரத்தில் தூக்கிட்டு இறந்து போன சுப்புராமின் மகள் கஸ்தூரியக்காவைப் போலவே தெரிந்தது.

மஞ்சள்க்கலர் சேலை,கட்டி அதற்கு மேட்சாய் ஜாக்கெட் அணிந்து தலைநிறைந்த மல்லிகைப் பூவுடனுமாய்த் தெரிந்தாள். வட்ட வட்டமா ய் சக்கரம் தாங்கியோ, உதிராமல் நின்ற பூக்கள் பூத்தோ இருந்தது சேலை. காலில் அணிந்திருந்த செருப்பிற்கு மேலாக தெரிந்த கொலுசு மணிகள் இடை விட்டுத் தொங்கியதாக/

கண்மாய்க்கரை இச்சி மரம் அதில் தங்கிப்பறந்த பறவைகள் மரத்தில் பூத்தும் காய்த்துமாய் நின்ற இச்சிப்பழங்கள், இளம்பிஞ்சுக்காய்கள், என உருக்காட்டிய இடத்தில் நீண்டுப் படர்ந்ததாய் காணப்பட்ட நெடுஞ்சாலையின் இடது ஓரமாய் எந்த பஸ்ஸிற்காக காத்திருக்கிறாள் இவள் எனத் தெரியவில்லை. அவள் நிற்பதைப் பார்த்தால் யாரோ ஒருவரின் வருகையை எதிர் நோக்கியதாய் இருந்தது.

இப்படியே பஸ்ஸேறி கிழக்கே போனால் மதுரை,மேற்கே போனால் சாத்தூர். அவள் எங்கு போக இங்கு நிற்கிறாள் எனத் தெரியவில்லை. மிகவும் பரபரப்பற்ற பேருந்து நிறுத்தம் அது. ரோட்டின் இடது பக்கமும் வலது பக்கமுமாய் மாறி மாறி காட்சிப் பட்ட டீக்கடைகள் சில கால் முளைத்தும் அது அன்றியுமாய் கால் முளைத்த கடைகள் பக்கா வாய் கிடுகு போட்டு வேயப்பட்டு டீ, வடை,  இட்லி, தோசை, மொச்சை எனகாட்சிப்பட்டது. தள்ளு வண்டியில் வைத்து ரோட்டோரமாய் நிறுத்தி டீயும் வடையும் மட்டும் விற்ற கடைகளை கால் முளைக்காத கடைகள் என அவ்வூரார்களும் அப்பக்கம் போவோரும் வருவோரும் அருஞ்சொற்ப்பொருள் எழுதி வைத்திருந்தார்கள்.

இவன் கூட நினைப்பதுண்டு.பேசாமல் இங்குஒரு சைக்கிள் ஸ்டாண் ட் இருந்தால் இங்கு கொண்டு வந்து சைக்கிளைப்போட்டுவிட்டு, அல்லது இரு சக்கர வாகனத்தில் வந்து நிறுத்திவிட்டு பஸ்ஸேறிப் போய்விடலாம் கூட்ட இடைஞ்சலில்லாமல் அய்யோமுக்கு ரோட்டில் காலை நேரபரபப்பில் பஸ் ஏற முடியவில்லை, காலேஜ் கூட்டமே பஸ்ஸின் வாசல் வரை அடைத்து கொண்டு வருவதனால் முக்கு ரோட்டில் பஸ்ஸேறுபவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும், ஒன்று பஸ்ஸேறவே முடியாது, அல்லது மிகவும் பரமப் பிரயத்தனப்பட்டு படிக்கட்டில் தொங்கி வரவேண்டும், பஸ் டாண்டிலிருந்தே காலேஜிற்கு மாணவர்கள் ஏறிவிடுவதால் முக்கு ரோட்டில் பஸ்ஸேறுபவர்களுக்கெல்லாம் உடனடி எதிரியாகவோ அல்லது திடீர் எதிரியாகவோ கல்லூரி மாணவர்களும் காலை வேளையில்ஒரு மணி நேரத்திற்கு முக்கு ரோட்டின்வழியாக வருகிற அந்தந்த பஸ்களின் டிரைவர் கண்டக்டரும் மாறிப் போவார்கள்.

இந்தத்தொந்தரவே வேண்டாம் நமக்கு என இவன் பலசமயங்களில் வேலைக்கு இருசக்கரவாகனத்தில் போய்வந்ததுண்டு. அப்படியாய் போகும் போது இவன் இருக்குமா இங்கு சைக்கிள் ஸ்டாண்ட் என இவன் யோசித்த இடத்தில் தான் கஸ்தூரியக்கா இப்பொழுது நின்று கொண்டிருந்தாள்.

அவள் நிற்கிற இடத்திலிருந்து ரோடு தாண்டி உள் வாங்கித்தெரிந்த ஊரின் நுழை வாயிலிலிருந்து அவளது பார்வை இன்னும் சற்று கூட பின் வாங்கியதாய் தெரியவில்லை இவனுள் கூட ஒரு சின்ன ஆசைதான். வண்டியை ஓரம் கட்டிவிட்டு நிறுத்திவைத்துவிட்டு அவளிடம் போய் கேட்டுவிடலாம் என பிறகுமாய் ஒரு சின்ன தயக்கம்.இவள்தான் அவள் என சரியாக உறுதிப் படாத வேளையில் படக்கென அப்படியாய் போய்க்கேட்பதும் உசிதமல்ல. இது போலான விஷயத்தில் இவன் நிறையவேமூக்குஉடைபட்டிருக்கிறான். பழைய நண்பர்கள்தான் என நன்றாகத்தெரியும்,பழகிய தோழர்கள்தான் இவர் கள் என மனது நன்கறியும்.அப்படியிருந்தும் அன்பும்,வாஞ்சையுமாக அருகில் போய் விசாரித்தால் தெரியாதது போல் முகம் திருப்பிக் கொள்வார்கள். இன்னும் சிலரானால் ரொம்பவும் மதிநுட்பமாக (?) பேசுவார்கள். ”சார் எனக்கு பழைய சம்பவங்கள் எதுவும் அவ்வளவா ஞாபகத்துலநிக்கிறதில்ல, சார் எனசட்டென நகன்று விடுவார்கள்.

கஸ்தூரியக்காவின் அருகேபோய்இரு சக்கரவாகனத்தைநிறுத்திக் கேட்கலாம் என நிதானித்த போது இச்சம்பவங்கள் நினைவுக்கு வர வேகமாய் முடுக்கி விட்டான் ஆக்ஸிலேட்டரை. இவன் அருகில் போய் கேட்டதும் யார் நீ எனக் கேட்டுவிட்டால் என்ன செய்வது, முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது?எனத்தெரியவில்லை. சொல்வாளா அவள் அப்படி,? இல்லை சொல்லிவிடமாட்டாள் அப்படியெல்லாம் பேசிவிட துணிபவளும் இல்லை அவள்.

அவரது அப்பா சுப்புராம் இறந்து போன கார்கால இரவின் இரு ளோடு அவரை தூக்கிவந்தநாளில்அவரது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி வாடகைக்குக் குடியிருந்த இவனது வீட்டில்தான் கொண்டு வந்து கிடத்தினார்கள்.

இடியும் மின்னலுமாய் வானம் அதிர்ந்து மழை பெய்து கொண்டிரு ந்த ஒரு கார்கால இரவொன்றில்தான் சுப்புராமின் மகள்ருதுவாகி விட்டாள் என ஊரில் பேசிகொண்டார்கள். இந்த சந்தோஷச் செய்தி யை ஊரறியச் சொல்லக்கூட மழைவிடவில்லை,அ டித்துப்பெய்து கொண்டிருந்தது, சாய்ங்காலமாய் பள்ளி விட்டு வந்தவள் வழக்கம் போல போகும் சரசு வீட்டிற்குக்கூட போகவில்லை.

சரசுகஸ்தூரியக்காவுடன் கூடப்படிப்பவள். பள்ளியில்பேசிய பேச்சுப் போகவும், பாடங்களில் கேட்டு முடித்துவிட்ட சந்தேகம் போகவும் மிச்சமிருப்பது போலவும் அவள் இல்லையென்றால் கஸ்தூரியக்காவின் படிப்பே இல்லை, எனது படிப்பிற்கு அவள்தான் மூலகாரணம் என்பது போல் நடந்து கொள்வாள் சமயத்தில்.

அந்த“சமயம்”காலநேரமில்லாமல் நீட்டித்துக்கொண்டுபோகும்.

அவளதுதம்பியும்அவள்கூடவேஒட்டிக்கொண்டுதிரிவான், அவனும் அதே பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறவன்தான். அவளது அம்மாகூட வைவாள், ”டேய் ஏண்டா எந்நேரமும் பொம்பளப் புள்ளைககூடசுத்திக்கிட்டு,ஓன் சோட்டு பையள்களோடபோய் விளையாடுவயா, அத விட்டுட்டு, இப்பிடி” என சரசுவின் வீடு மேலத்தெரு கடைசியில் இருந்தது. இவர்களது வீடு கீழத் தெருவில்இருந்தது. இப்படித் தான் ஒரு நாள் மாலை சரசுவின் வீட்டிற்குப் போனவள் இரவு மணி ஏழாகியும் காணவில்லை. அன்று அவளது தம்பி கூடப் போகவில்லை. பதைத்துப் போனாள் அவளது அம்மா. தம்பியை அனுப்பிப் பார்த்தபோது அவளை அங்கு தான் பாடம் எழுதிக்கொண்டிருந்திருக்கிறாள். அவன் போன பின்பாய் அரை மணிகழித்துத்தான்வந்தாள்.டீச்சர் நிறைய வீட்டுப் பாடம் கொடுத்து விட்டார்கள் எனச் சொன்னாள். மறுநாள் அவளது அப்பா சுப்புராம் பள்ளிக்கூடத்திற்குப் போய் டீச்சரை சப்தம் போட்டுவிட்டு வந்தார். ”இப்பிடியா,பொம்பளப் புள்ளைக்கு வீட்டுப் பாடம் தர்றது, நாளப்பின்ன இப்பிடிக்குடுத்தீங்கன்னா படிச்சது போதும்ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவேன்,ஆமாம்” என அவ்வளவு பிரியமாக இருப்பார் கஸ்தூரியக்காவின் மீது. அப்படி பிரியமாக இருந்தவர்தான் கஸ்தூரியக்கா ருதுவான அன்று பிண மாய் வீடு வந்தார்.

அடபாதகத்திமக்கா, இப்பிடிபொம்பளப்புள்ளகுத்தவச்சஅன்னிக்குப் போயி பொணமா வந்திருக்காரே வீட்டுக்கு,நான் இனி இதுகள வச்சிக்கிட்டு என்ன செய்ய, எப்பிடி கரையேத்த? என அழுது தீர்த்திருக்கிறாள் சுப்புராமின் மனைவி

கஸ்தூரியக்காவை அப்பொழுதான் குளிப்பாட்டி வீட்டின் வராண்டா வில் ஒரு தனியிடம் பார்த்து அமரவைத்துவிட்டு அவள் சாப்பிட ரெடி பண்ணிக் கொண்டிருந்த வேளையில்தான்,

ஊர் நிறைந்துபெய்தமழை ஓடைநிரம்பியும்அதன்இருகரைகளையும்தழுவி ஓடி வந்து கண்மாயை நிரப்பிக்கொண்டிருப்பதாய் பேசிக் கொண்டார்கள்.

ஊர்நனையப் பெய்கிற மழைகாடு நனைத்தும் பெய்யு ம் போதுஉழவுக்குப் பக்குவப் பட்டிருக்குமா காடு எனஓடைதாண்டி எட்டிப்பார்க்கப்போன ஒரு சிலர் சுப்புராமை பிணமாகத் தூக்கி வந்தார்கள்.

”பக்கத்துக்காடுஊர் தலையாரிதான் வந்து மனசு பதைச்சி சொன்னான், நாங்க நாலைஞ்சு பேரு அங்கன கண்மாக்கரையில நின்னப்ப, என்றார்கள்,

சுப்புராம் பிணமாய் வந்த நேரம் உள்ளூர் சொந்தங்கள் அனைவருமாய் கூடியிருக்கவில்லையானாலும் கூட அக்கம்பக்கம், வேண்டியவர்கள் கஸ்தூரியக்காவின் மனம் பிடித்தவர்கள் என சிலர் கூடி ஆளுக்கு ஒரு பேச்சாவும் ஆளுக்கு ஒரு ஆலோசனையாகவும் சொல்லிக் கொண்டிருந்த வேளை கஸ்தூரியக்காவின் அம்மா கையில் காசை வைத்துக் கொண்டு கஸ்தூரியக்காவின் தம்பியை மாறி மாறி கடைக்கு அனுப்பிக் கொண்டும், அடுப்படிக்கும் கஸ்தூரியக் காவை துணி மாற்றச்செய்து அமரவைத்திருந்த வராண்டாவுக் குமாய் நெச விட்டுக்கொண்டிருந்தாள்..”இந்த கூறு கெட்ட மனுசன் இந்த நேரம் பாத்து ஆளக்காணமே வழக்கம் போல,,,,,”என எண்ணிக்கொண்டிருந்த வேலையில் தான் சுப்புராமை தூக்கி வந்தார்கள்.

“பொண்ணு ருதுவான வீட்டுல எப்பிடிப் போயி செத்தவர வைக்கிறது”என கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ”எனது வீட்டில் அவரைக் கொண்டுவந்துவையுங்கள்,எனது உடன்பிறப்பு போலான அவரைக் கொண்டு வந்து வைக்க உதவாத வீடு எதற்கு?”என அன்று தைரியமாகச் சொன்ன இவனது அம்மாவின் முகதாட்சணயத்திற்காவதுஅப்படிசொல்ல மாட்டாள் கஸ்தூரியக்கா என நினைக்கிறான்.

நிறைய சர்ச்சைகளுக்கும், யோசனைகளுக்கும் அப்புறமாய் சுப்புராமின் உடலை கொண்டுவந்து வைத்த அன்று இரவிலிருது மறுநாள் அவரது உடலைத்தூக்கும் வரை அப்பாவின் கிடத்திய உடலுக்கருகிலிருந்து நகரவில்லை கஸ்தூரியக்கா, யார் யாரோ என்னென்னவோ சொல்லி ய போதும் கூட.

”ருதுவான பெண் இப்படி அமர்ந்திருப்பது உடலுக்குக்கேடு அதுவும், இறந்து போனது அப்பாவேயானாலும் கூட அது பிணம்தானே ? வேண்டாம், எழுந்து போய் விடு, உனது வீட்டில் போய் உனக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிற இடத்தினிலே அமர்ந்து கொள் இங்கெல்லாம் இருப்பது உனக்கு நல்லதல்ல”, எனச்சொன்ன இவனின் அம்மாவை ஏறிட்ட அவள் ”இப்ப ஒங்க வீடு அசிங்க மாயிரும் ன்னுதானே யோசிக்கிறீங்க, எங்க அப்பாவக் கொணாந்து எங்க வீட்டுல போட்டுருங்க” என்றவளை முகம் தாங்கி ”அடக்கிறுக்கி இது ஒங்க வீடு மாதிரி, எத்தன நாளுவேணாலும் இங்கயே இரு என உட்கார்ந்திருந்தவளை எழுந்திருக்கச் சொல்லி சாக்கு ஒன்றை நான்காக மடித்துப்போட்டாள். அன்று சாக்கு மடித்துப்போட்ட இவனது தாயின் முகமும், அவளது வாஞ்சைப்பேச்சும் இன்றளவும் அவள் மனம் தங்கியிருக்குமானால் கேட்க மாட்டாள் அவள் அப்படி.

ஒரு ஜோடி காளைமாடும் வண்டியும் ஐந்து குறுக்கம் கரிசல் காடும் பத்து குறுக்கத்திற்கும் மேலாய் சுப்புராமின் சொத்தாய் இருந்தது.

அதைத் தாண்டி மாமியார் தோட்டலிருந்த நல்ல தண்ணீர்க்கிணறுனான இரண்டு குறுக்கம் தோட்டமும் மானார் மாமியாருக்குப்பின்னால் இவருக்குத் தான் என முடிவாகி கிட்டத்தட்ட இவரது கைக்கு வந்து சேராத குறையாக இருக்கிற நாளொன்றின் கார்காலைஇரவில் தனது கரிசல் நிலத்திலேயே இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு இறந்து போகிறார்.

அவர் இறந்து போகும் நாள்வரை மாமியார் மாமனாருடன் எந்தப் பிணக்கும் இல்லை. மாமனார் இன்னும் கோவணம் கட்டிகொண்டு மண்வெட்டியுடன் வேலைக்குப் போய் வருகிறார். காட்டில் வேலை செய்கிற அவருக்கு வேகாத வெயிலில் இரண்டு கல்தொலைவு சாப்பாடும் வெற்றிலைபாக்கும் கொஞ்சம் சுண்ணாம்புமாய் சுமந்து செல்கிறவராய் மாமியார் இருக்கிறார்.

அவ்வளவு தெம்புடனும் தெளிவுடனுமாய் இருக்கிற அவர்களின் சொத்து பெண்வழி சொத்து பெற்றது நான்கும் பெண் பிள்ளைகள் ஆகிப்போனாலும் கூட அடுத்ததாய் ஒரு ஆண்பிள்ளைக்கு ஏங்காமல் போதும் இது, இந்த நான்கையும் பசி பட்டினி இல்லாமலும் நோய்க்குக் கொடுக்காமலும் வளர்த்து கட்டிக்கொடுத்தால்கடன் தீர்ந்தது என கண்ணை மூடிவிடலாம் என் புருசன் பொஞ்சாதி இருவருமாய் எடுத்த முடிவின் பலன் பிள்ளைகள் வளர்ந்து பருவத்திற்கு வந்த பூங்கொடியாய் நின்றவர்களை ஒருவர் பின் ஒருவராய் உள்ளூரிலேயே இரண்டுப் பெண்களையும், வெளியூரில் இரண்டு பெண்களையுமாய் கட்டிக்கொடுத்தார். அவர்களும் ஏதோ வஞ்சகமில்லாமல் வாழ்ந்து பிள்ளைபேற்றுடன் இவர்களின் கண்ணையும் மனதையும் நிறைக்கி றவர்களாய் ஆகிப்போனார்கள். அதில் ஒருவராய் சுப்புராமி ன் குடும்பமும்.

சுப்புராம் தூக்கிட்டு இறந்து போன அன்று சுப்புரா மின் மாமனாரும் மாமியாரும் சுப்புராமின் தாய் தந்தையிடம்டாத சண்டையில்லை, ”இப்ப என்ன கொறவு, மயிறுன்னு நாண்டுட்டுச் செத்துப் போனான். அவன் அப்பிடி என்னயா கொற வச்சா ஏங் பொண்ணு அவனுக்கு, கண்ணுக்கு லட்சணமா ஒரு பொண்ணு, அழகான ஆண் ஒண்ணு இது எல்லாத்துக்கும் மேல பஞ்சாரத்துக்கோழி போல அவன பொத்திப்பாதுகாக்க ஏங் மக, ஏதாவது கொறையின்னா ஓடி வந்து செய்ய நாங்க, ரொம்ப ஆத்தாமைன்னா சொல்லித்தீக்க நீங்களுமா இருக்கும் போது கழுதப்பய ஏன் இப்பிடிச்செய்யணும். நாலு பேருக்கும் நாலுபங்கா வீட்டுல இருக்குற சிலவர் டம்ளர் மொதக்கொண்டு சமமா பிரிச்சி வச்சிருக்கேன் ஏங் சொத்த போன வாரம் கூட வீட்டுப்பக்கம் வந்த அவரு சேதிய சொன்ன ஒடனே எதுக்கு இதெல்லாம் போயி, நான் என்ன அப்பிடியெல்லாம் எதிர்பாக்கக்கூடிய ஆளான்னு, அப்படி சொல்லீட்டு வந்த சொல்லோட ஈரம் காயிறதுக்கு முன்னாடி இப்பிடி, அதுவும் ஊரறிய சொந்தக்காட்டுல, செத்தும் கெடுத்த மாதிரி” என வேகாளத்தில் பேசிய மாமனாரின் பேச்சுக்கு முன்னால இவர்களிடம் சொல்லச்சொல்லற்றும், பேச பேச்சற்றுமாய் போனது சுப்புராமின் தாய் தந்தைக்கு.

“இப்ப என்னாய்யா செய்யணுன்னு சொல்ற எல்லாம் ஏங் கெரகசாரம்யா, இந்த வயசு வரைக்கும் ஒரு அவச்சொல் வாங்காம பொழச்சி வந்த எனக்கும், ஏம் பொஞ்சாதிக்கும் சாகப்போற இந்த வயசுல இந்த அவமானம் வேணுந்தான்யா, இந்தா வா மச்சி வீட்டுக்குள்ள அருவா கெடக்கு எடுத்துட்டுவந்து ஆசை தீர எங்க ரெண்டுபேரையும் வெட்டிப் போட்டுப்போ, இப்பிடி ஒரு கூறுகெட்ட புள்ளைய பெத்ததுக்கு நானும் அவளுமா விரும்பி ஏத்துக்குற தண்டனையா போயிட்டுப் போகட்டும் விடு” என்றார் மனம் பொறுக்க மாட்டாதா அழுகை யினூடாக.

“ஓங் புள்ள புத்தி கெட்டு செஞ்சதுக்கு நீ ஏன்யா அருவா வெட்டு வாங்கணும். வுடு ஏதோ வேகமெடுத்து பேசிட்டேன், மக பொழப்பு பாதியிலேயே இப்பிடி ஆயிப் போச்சேன்னு’ நம்ம கண்ணு இருக்குற வரைக்கும் பேரன் பேத்திகள் ஒண்ணாயிருந்து காப்பாத்துவோம், அதுக்கப்பறம் ஏங் மக பாத்துக்குவா, கூடாத கூத்தியா சகவாசம் ஓங் புள்ளையக் கொண்ணுருச்சி,” என அன்று சாவு வீட்டில் சம்பந்தகாரர்கள் இருவருமாய் பேசிக்கொண்டிருந்த கஸ்தூரியக்காவின் குடும்பத்தை விட்டுப் பிரிந்து பிழைப்பு நிமித்தமாய் அம்மண்ணைவிட்டு தொப்புள்கொடி உறவறுத்து வெளியேறிப் போய் எங்கோ ஈரமற்ற தூரத்து நகரத்தில் நிலைகொண்ட பின்னாய் இன்று தான் கஸ்தூரியக்காவைப் பார்க்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *