பந்தமும் பாசமும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 4,663 
 
 

“சந்திரம்மா வந்துவிட்டாள் பார். அவளுக்கு காப்பி கொடு ” என்றாள் மாமியார்.

“ஆமாம்மா. உன் மாமியார் தனக்கு கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை. சந்திரம்மா வாசலில் வரும்போதே இங்கே சொல்லி விடுவாளே ” என்றார் மாமனார்.

அவ வாயை திறந்து கேட்க மாட்டாள். நாமாக கொடுத்தால்தான் உண்டு. இத்தனை வருஷமா எனக்கு அவளை பற்றி தெரியாதா ?

அது என்னமோ உண்மைதான். தனக்கு சம்பளம் கூட சந்திரம்மா கணக்காக வாங்கி கொள்வதில்லை. “எனக்கு என்ன செலவு இருக்கு தம்பி. காலையில காப்பி, டிபன், சாயங்காலம் காப்பி எல்லாம் இங்கேயேதான். சமயத்திலே மத்தியான சாப்பாடு எனக்கும் எங்க வீட்டுக்காரருக்கும் இங்கே இருந்தே எடுத்துக்கிட்டு போய் விடுகிறேன் .தீபாவளி பொங்கல் சமயத்தில் புடவை வாங்கி கொடுக்கிறீர்கள். உடம்பு முடியலன்னா வைத்தியரிடம் அழைத்து போறீங்க. மருந்து மாத்திரை வாங்கி தரீங்க. உங்க அவுட் ஹவுஸ்ல தான் தங்கி இருக்கோம். இந்த வீட்டில ஒருத்தி மாதிரி பார்த்துக்கொள்கிறீர்கள். அப்புறமென்ன ?”என்பாள் .

“என்னது ? வீட்டில ஒருத்தி மாதிரியா ? இனிமேல் இப்படி சொல்லாதீங்க. நீங்க இந்த வீட்டை சேர்ந்தவர்தான்” என்று அதட்டுவான் லதாவின் கணவன் ராகவன்.

லதா அந்த வீட்டிற்கு மருமகளாக வந்து இரண்டு மாதங்களாகிறது. அவளும் வந்த நாட்களில் இருந்து கவனித்துக்கொண்டுதானே இருக்கிறாள்.

அவுட் ஹவுஸ்-ல கணவருடன் தங்கியிருக்கும் சந்திரம்மா காலையில் சீக்கிரமாகவே கணவருக்கு வேண்டியதை செய்து வைத்துவிட்டு இங்கு வந்து விடுவாள். மிகவும் சுவாதீனமாக எல்லா வேலைகளையும் செய்வாள் . ராகவனும் லதாவும் அலுவலகம் கிளம்பிய பின்பு தன் இடத்திற்கு சென்று விடுவாள். இடையில் ஏதும் குரல் கொடுத்தால் ஓடி வருவதென்ன; மாலை நேரத்தில் மாமனார் மாமியார் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதென்ன ….. என்று மிகவும் சகஜமாக இருப்பார்கள்.

அம்மா …. நேத்திக்கு வாழைத்தண்டு வாங்கி வந்தேனே. கொடுங்க நான் நறுக்கி தரேன். தம்பிக்கு வாழைத்தண்டு மோர் கூட்டு என்றால் ரொம்ப பிடிக்கும் என்பாள் .

“தம்பி மிதமான சூட்டில் வெந்நீரிலே குளிப்பா. பச்சை தண்ணி வேணாம் ” என்பாள்.

ராகவன் குளித்து ரெடியாகி வருவதற்குள் அவனுக்கு டிபன் எடுத்து வைப்பாள். சாப்பிட்டு வருவதற்குள் ஷு-சாக்ஸ் துடைத்து எடுத்து வைப்பாள். சமயத்தில் வண்டியையும் துடைத்து வைப்பாள்.

லதாவிடமும் “நான் தலை பின்னி விடட்டுமா , டிபன் எடுத்து வைக்கட்டுமா ” என்பாள்.

மொத்தத்தில் ராகவன் ஆபீஸ் கிளம்பும் வரை அவர்களுக்கு தேவையானதை கேட்டு, கேட்டு செய்வதே அவளது வேலையாக இருக்கும். அதற்கு பிறகே அவளது கவனம் மற்ற வேலைகளின் பக்கம் போகும்.

லதாவிற்கு ஆச்சர்யம் என்னவென்றால் மாமனார், மாமியார், ராகவன் எல்லோருமே ஒரு சின்ன சிரிப்புடன் அவளது கேள்விகளையும், பேச்சுக்களையும் ஏற்றுக்கொள்வர். சந்திரம்மாவின் வார்த்தைகளுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் யாரிடமும் இருந்து வராது.

“ஏன் சந்திரம்மா உங்க தம்பி என்ன ஸ்கூல் போற சின்ன பையனா ? இப்படி பார்த்து,பார்த்து செய்றீங்க வேணும்னா தினம் ஆபீஸ்ல கொண்டு விட்டுட்டு வாங்களேன் ” என்று லதா கிண்டல் அடிப்பாள் .

ஒரு நாள் தனிமையில் கணவனிடம் “உங்க எல்லோருக்குமே சந்திரம்மா மேல ஒரு தனி பிரியம்தான் இல்லையா. அவங்களும் ரொம்ப உரிமையாக, சகஜமாக எல்லாம் செய்கிறார்களே ; உங்க விருப்பு வெறுப்பு எல்லாம் அவங்களுக்கு அத்துப்படி. ரொம்ப வருஷமா இங்கேதான் இருக்காங்க போல” என்றாள் லதா.

கொஞ்ச நேரம் அமைதிதான் ராகவனிடம்.

“நான் இப்போது உன்னிடம் ஒரு விஷயம் சொல்வேன். ஆனால் அதை நீ உடனே மறந்து விட வேண்டும். தெரிந்தது போல் யாரிடமும் காண்பித்துக்கொள்ள கூடாது” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான் ராகவன்.

“என்ன ரகசியம்….” என்று திகைத்தாள் லதா .

“இரண்டு பக்க பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறித்தான் அப்பா அம்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஊருக்கு வந்து குடித்தனம் ஆரம்பித்தபோது உறவுகள் என்று யாரும் இல்லாமல் இருந்தவர்களுக்கு, சந்திராம்மாவும் அவர் கணவரும்தான் உதவி செய்தார்களாம்.

என்னை கருவில் சுமந்த சமயம் அக்கறை காண்பிக்க அனுசரணையான உறவுகள் யாரும் இல்லாமல் இருந்த அம்மாவுக்கு கை கொடுத்து கவனித்துக்கொண்டவர் சந்திரம்மாதான். நான் பிறந்தவுடன் அம்மாவுக்கு உடம்பு ரொம்ப பலவீனமாகி விட்டது. தாய்ப்பாலும் சரியாக சுரக்கவில்லை; அப்போது சந்திரம்மாதான் தன் பெண்ணோடு சேர்த்து எனக்கும் பால் கொடுத்து வளர்த்தார்களாம்.

அப்பா, அம்மாவுக்கு அவர்கள் மேல் ஒரு நன்றி உணர்ச்சி. வசதிகள் பெருகி இங்கு வீடு கட்டி வாழ ஆரம்பித்தவுடன் அவர்கள் குடும்பத்தையும் அப்பா இங்கேயே தங்க சொல்லிவிட்டார். அப்பா அம்மாவின் பிடிவாதத்தினால்தான் அவர்கள் இங்கேயே தங்க சம்மதித்துள்ளனர். அப்பா அவர்களை ஒரு சகோதரியாகத்தான் நினைத்து வருகிறார். ஆனால் அவர்கள் வேலை செய்பவர்களாக ஒரு எல்லைக்கோட்டிற்குள் வாழ்ந்து வருகிறார்கள் . நம்மிடம் எந்த இடத்திலும் உரிமையோ, சலுகையோ எதிர்பார்க்கவில்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் எனக்கு பாலூட்டி வளர்த்ததை சொல்லியதில்லை. நினைவு கூரும் வகையில் பேசியது கூட இல்லை . ஆனால் அவர்களுக்கு என் மேல் ஒரு தனிப்பட்ட பாசம் உண்டு. எனக்காக எதுவும், எந்த விஷயமானாலும் பார்த்து, பார்த்து செய்வார்கள்.

சந்திரம்மாவின் கணவர் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தார். பெண்ணை வளர்த்து சொந்தத்தில் திருமணமும் செய்து விட்டனர். அவ்வப்போது போய் பார்த்து விட்டு சில நாட்கள் தங்கி விட்டு வருவார்கள்.

நான் காலேஜ் படிக்கும்போதுதான் அப்பா இந்த உண்மையை என்னிடம் சொன்னார். உண்மை தெரிந்தவனாக நான் நடந்து கொண்டால் அம்மாவுக்கு ஒரு குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை வந்து விடுமோ என்று அப்பாவிற்கு ஒரு பக்கம் கவலை ; எங்கே அம்மாவை விட்டு நான் விலகி விடுவேனோ என்று ஒரு பக்கம் பயம் . அதனால் அப்பா சொன்ன படி தெரியாத மாதிரியே நடந்து வருகிறேன். சந்திரம்மாவிடம் அன்புடனும், மரியாதையுடனும் நடக்கிறேன். அவர்களுக்கு தேவையானதை கூடிய வரையில் செய்கிறேன். கண்ணுக்கு தெரியாத ஒரு பாசம், பிரியம் ஆழ் மனதில் உள்ளது. அது என்றும் மாறாது, மறையாது.

“ஒரு அம்மா பத்து திங்கள் சுமந்து பாடுபட்டு என்னை பெற்றெடுத்தாள். சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்தாள். ஒரு அம்மா தன் உதிரத்தை பாலாக்கி என்னை ஊட்டி வளர்ந்தவள் இல்லையா ? ஒரு மகனாக இருவருக்கும் நான் எல்லாம் செய்வேன் ” என்று கண் கலங்கி, குரல் நடுங்க தழு தழுத்தான்.

“என் மனைவியான நீயும் அவர்களிடம் அலட்சியம் செய்யாமல் பிரியமாக நடக்க வேண்டும். அதே சமயம் உண்மை தெரியும் என்றும் யாரிடமும் காண்பித்துக்கொள்ள கூடாது. இயல்பாக இருக்க வேண்டும். செய்வாயா லதா ப்ளீஸ் ….. என்று கலங்கினான்.

அவனை பார்த்துக்கொண்டிருந்த லதாவிற்கும் கண்கள் கலங்கின. பெத்தவங்களையே முதியோர் இல்லத்தில் சேர்க்க காரணம் தேடிக்கொண்டு இருக்கும் இந்த தலைமுறையில், தன் கணவனின் பாசத்தையும், கடமை உணர்ச்சியையும் கண்டு பூரித்துபோனாள் .

அவனை சகஜமாக்கும் பொருட்டு “அடடா ….. ஏன் கண் கலங்குகிறீர்கள் …. தேவகி பெற்றெடுத்த கண்ணன் யசோதையிடம் வளரவில்லையா ?….. சரிதான் உங்களுக்கு கிருஷ்ணன், கண்ணன் என்று பெயர் வைத்திருக்க வேண்டும்” என்று சிரித்தாள். “கவலை படாதீர்கள். நானும் உங்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன்” என்று கைகளை பிடித்து ஆறுதல் கூறினாள்.

அன்று மாலை லதா அலுவலகத்திலிருந்து வரும் வரை காத்திருந்த சந்திரம்மா “உங்க மருமக வந்தாச்சு. நான் காலையிலே வரேன். கிளம்பறேன்மா…. என்று கிளம்பினாள் .

“ஏன் மருமகள் நான் வந்தவுடன் நீங்க கிளம்பவேண்டும். இன்னும் கொஞ்சம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருங்கள். நைட்டுக்கு சப்பாத்தி, குருமா பண்ணப்போகிறேன், தருகிறேன் எடுத்துக்கொண்டு போங்க. நீங்க வீட்டுக்கு போய் ஒன்றும் செய்ய வேண்டாம்” என்றாள் அக்கறையுடன்.

“ஏன்மா ….. உனக்கு சிரமம். நீயே ஆஃபீஸ்லே இருந்து களைப்பா வந்திருப்ப. எங்களுக்கும் சேர்த்து செய்கிறேன் என்று வேலையை இழுத்து விட்டுக்காதே. நான் பார்த்துக்கிறேன் “ என்றாள் சந்திரம்மா.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் செய்வதே காலை காபி, டிபன், நைட் டிபன் இதுதான். மற்ற எல்லா வேலைகளையும்தான் நீங்களும் அத்தையும் செய்து விடுகிறீர்களே. நீங்க செய்த, செய்கிற வேலை எல்லாம் பார்த்தால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை. உங்க செல்ல தம்பி வரும் வரைக்கும் சும்மா கொஞ்சம் உக்காருங்க” என்று உரிமையாக அதட்டினாள் லதா.

“சரிம்மா ….. சரிம்மா” என்று சிரித்தபடி ஒப்புக்கொண்டாள் சந்திரம்மா.

“பக்கத்து வீட்டிலேருந்து மருதாணி பறித்து அரைத்து வைத்திருக்கிறேன். ராத்திரி சாப்பிட்ட பின் மறக்காம இட்டுக்கம்மா. நீ பாத்திரம் எல்லாம் தேய்க்க வேண்டாம். நாளைக்கு லீவுதானே ; நான் வந்து தேய்த்து கொடுக்கிறேன் அப்புறம் சமையல் செய்யலாம்” என்றாள் சந்திரம்மா

ஏனோ லதாவிற்கு இப்போது சந்திரம்மாவின் பேச்சு அதிகப்படியாகவோ அதிகாரமாகவோ தோன்றவில்லை. அதில் உள்ள அவளது அன்பும், அக்கறையும் புரிந்தது.

“சரி…. சரி. நீங்க சொல்ற மெனுதான் நாளைக்கு. சந்திரம்மா சொல்வதே சட்டம் ; சாசனம்” என்று சிரித்தாள் லதா. மாமியாரும் சிரிப்பில் அவளுடன் இணைந்து கொண்டார்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “பந்தமும் பாசமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *