கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 8,270 
 

“கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்” கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி.

“நல்லா இருக்கு” அமைதியாக ஒரு புன்னகை.

“ஏய்.. இவ எனக்கெல்லாம் செலக்ட் பண்ணித் தர மாட்டா.. அவ மட்டும் அழகா செலக்ட் பண்ணி ராணி மாதிரி டிரஸ் பண்ணிக்குவா” கோபித்துக் கொண்ட அமுதாவைச் சமாதானப் படுத்த முயன்றனர் மற்ற இருவரும்.

“கீர்த்தி என்னைக்குமா டிரஸ் செலக்ட் பண்ணினா? எல்லாம் அவளோட அம்மாதான். இவ நம்ம கூட கடைக்கு வந்ததே பெரிய விஷயம். பேசாம வாடி..கவுண்டர் ப்ரீயா இருக்கு, பார்” என அமுதாவின் கையைப் பிடித்து அழைத்துவந்தாள் நித்யா.

ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் வேளை திருநெல்வேலி டவுன் ரதவீதித் தெருக்களில் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. வண்ணாரப்பேட்டையில் ஆர்.எம்.கே.வி. தனக்கென ஒரு புதுக் கிளையைத் தொடங்கியவுடன் டவுனில் கூட்டம் சற்றுக் குறைந்து தான் போனது என்றாலும் ஓரளவுக்கு மக்கள் திரள் திரளாகவும் தனியாகவும் வந்து போய்க் கொண்டுதான் இருந்தனர்.

அமுதாவும் நித்யாவும் ஒரு ஸ்கூட்டியில் வர, வித்யா கீர்த்தியுடன் இணைந்து கொண்டாள். 23 வயது வாலிபம் வஞ்சகமில்லாமல் வழிந்து கொண்டிருந்தது நால்வரிடமும்.

“என்னடி.. ஒரே ட்ராபிக்! வீக்டேல வந்திருக்கலாமோ?” நித்யா லேசாகக் சலித்துக் கொண்டாள். காற்றிலே பறக்கவிடப்பட்ட ப்ரீ ஹேர் கூந்தல் முகத்தில் படர லாவகமாகப் பின்னே தள்ளிக் கொண்டாள்.

“புடவை அழகா அமைஞ்சிருச்சுல? அதுவரைக்கும் சந்தோசம்”
ஒரே சிரிப்பும் சிலுப்பலுமாய் நால்வரும் கீர்த்தியின் வீட்டுக்குள் நுழையும்போது மணி இரவு ஒன்பது. எதிர்கொண்ட கீர்த்தியின் அம்மா நால்வரையும் புன்னகையோடு வரவேற்றார்.

வந்தவுடன் வாங்கி வந்த கவரைப் பிரித்து உள்ளேயிருந்த புடவையை வெளியே எடுத்தாள் அமுதா. “நீங்களும் எங்க கூட வந்திருக்கலாம்மா. சரி, நல்லா இருக்கா சொல்லுங்க. பிரிட்ஜ்ல ஐஸ் வாட்டர் இருக்குல?” கேட்டுக்கொண்டே “எனக்கும்” “எனக்கும்” என்ற குரல்களுக்கிடையில் எழுந்து சென்றாள் அமுதா.

கீர்த்தியின் அம்மா புடவையைப் பிரித்துப் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். “அழகுக் கலர். ஸ்வரோவ்ஸ்கி கல்லா இது? புடவை விலை என்ன சொன்னேங்க? பதினாலயிரமா?”

“ஆமா ஆன்ட்டி.. அதிகமோ?” வித்யா.

“இல்ல இல்ல.. பார்த்தா வொர்தியாத் தான் தெரியுது”

“பட்டுப் புடவை வாங்க சொல்லித் தான் அமுதாவோட அம்மா சொன்னாங்க.. இவ தான் டிசைனர் சேரி வாங்கனும்னு ஒரே அடம்” இது நித்யா.

“நாங்கெல்லாம் இவ்வளவு விலை கொடுத்துப் ‘பட்டு’ வாங்கித் தான் பழக்கம். என்னவோ இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எல்லாத்துலயுமே புது ட்ரெண்ட் வேணும்.. மாடர்னா இருக்கணும்னு நினைக்கிறீங்க”

“டிசைனர் தான் இப்போ ஃபேஷன் ஆன்ட்டி. அதோட பட்டுப் புடவைய யாரு தர தரன்னு இழுத்துட்டு அலையறது? இது ரொம்ப லைட் வெயிட்டா பாக்குறதுக்கும் நல்ல கிராண்டா இருக்குல..” வித்யா கூறி முடித்தாள்.

“ஆமா மா. இதுக்கு மேட்சிங்கா ஃபேஷன் ஜுவல்லரி நகையும் போட்டுக் கிட்டா தேவதை மாதிரி வலம் வரலாம்” இது கீர்த்தியின் அம்மா.

“இருந்தாலும் கொஞ்சம் காஸ்ட்லி தான்” என நித்யா குறைபட்டுக் கொண்டு இருக்கையில் கையில் தண்ணீருடன் வந்தாள் அமுதா.

“ஏய்.. சும்மா இருடி. இது சும்மா கல்யாணத்துக்கு முந்தின நைட் கட்டிக்கிறதுக்குத் தான். இருந்தாலும் அம்மா வீட்டுல இருந்து இதுக்கு மேல எதுவும் வாங்க முடியாதுல? போகும் போதே வேணும்ங்கறத வாங்கிட்டுப் போக வேண்டியது தான். போற இடத்துல எப்படியோ?” என வருத்தத்துடன் பேசிய அமுதாவை இடை மறித்தது வித்யாவின் குரல்.

“ஏய்.. உன் வுட்பீ வேற உனக்கு ஒரு புடவை வாங்கித் தரப் போறதா சொன்ன? அதான் நீ காலால் இட்டத தலையால் செய்ய அவர் ரெடியா இருக்காரே. அப்புறமென்ன.. கொஞ்சம் உன் தங்கச்சிக்கும் விட்டு வெச்சிட்டுப் போடி…”

கேட்டுக் கொண்டிருந்த அமுதாவின் ஆப்பிள் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன.

நித்யா ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள். “ம்ம்ம்.. இது மாதிரி வரன் அமைய கொடுத்து வெச்சிருக்கணும்.. என் வுட்பீக்கு இதிலெல்லாம் இண்ட்ரெஸ்ட்டே இல்ல. ஒரு ப்ளாக்பெரி மொபைல் வாங்கித் தாங்கன்னு சொன்னா கால் பண்றதுக்கும் மெசேஜ் பண்றதுக்கும் நோக்கியா பேசிக் மாடல் மொபைல் போதாதான்னு கேக்குறார்..! இவரைத் திருத்தி என் வழிக்குக் கொண்டு வரதுக்குள்ளயே எனக்குப் போதும் போதும்னு ஆகிரும் போல. இப்பதான் கொஞ்சம் பரவாயில்ல. ஆக்சுவல்லி அவருக்கு இதுக்கெல்லாம் டைமே கிடையாது.. யு ஸீ” என அமுதாவைப் பார்த்துக் கூற கலகலவென்று நகைத்தனர் நால்வரும்.

“சரி.. எனக்கு இப்ப தான வரன் பார்த்துட்டு இருக்காங்க. நான் கொஞ்சம் அலர்ட்டாவே தேடுறேன்” எனச் சமர்த்துப் பிள்ளையாகச் சிரித்துக்கொண்டாள் வித்யா.

“பரவாயில்ல.. எல்லாரும் கவனமாத் தான் இருக்கீங்க” என்று கீர்த்தியின் அம்மா வித்யாவின் கையில் செல்லமாகத் தட்டினார்.

“ஆமா.. எங்க கீர்த்தியைக் காணோம்?” என அமுதா கேட்கவும் தான் மூவரின் கண்களும் அவளைத் தேடி அலைந்தன.

தொலைவில் தரையில் தனியாக அமர்ந்து கொண்டு பிய்ந்துபோன பிளாஸ்டிக் பொம்மையின் ஒரு காலை ஒட்டிச் சரி செய்வதில் மிக மிகக் கவனமாக வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள் கீர்த்தி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *