என்னவென்று சொல்வதம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 4,025 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மறுதினம் வளைகுடா நாடுகள் சிலவற்றிற்கு பணிப்பெண்களை அனுப்புவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையாக முகவர் நிலைய வான் ஒன்று பட்டணத்தைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட பெண்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தது…

நானும் எனது குழந்தையுடன் தாயாரும் பின் ஆசனமொன்றில் அமர்ந்திருக்க பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே வண்டியில் ஏற்றப்பட்டிருந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற பயணம் ஒன்றினை நான் மேற்கொண்டிருந்தேன். உயர்தர வகுப்பு மாணவிகளாகிய நாம் பதின்மர் சங்கீத ஆசிரியர்களுடன் இணைந்து ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்காக நகரப் பாடசாலை ஒன்றிற்குச் சென்றிருந்த பயணம் தான் அது,

அலங்கரிக்கப்பட்ட வில்லின் மத்தியில்…….அந் நேரம் யாரும் நெருங்கமுடியாத அழகுடன் நான் கைகளில் கோல்களை ஏந்தி கம்பீரமாக வீற்றிருந்தேன். என்னைத் தலைவியாகக் கொண்ட குழு கம்பீரமாக நடாத்திய அக்கச்சேரியில் மண்டபம் நிறைந்த ஒரு சபையே லயித்து ஆழ்ந்து போயிருந்தது. எனது குரல் வளமும் இசைவெள்ளமும் மண்டபத்தையே நிறைத்தன. சினிமா இராகங்கள் மூலம் கதையை நகர்த்திச் சென்ற நான் இடைநடுவே திடீரென கர்நாடக இசையை கச்சிதமாக ஆலாபனை செய்தபோது சபையே ஆர்ப்பரித்து எழுந்தது!

என் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்ணை வழியனுப்ப அவளது கணவன் வந்திருந்தான். குழந்தைகள் இல்லைப்போலும். நான்தான் எப்படி முன்யோசனைகள் அற்றவளாக இருந்திருக்கின்றேன்!

எனது வாழ்க்கையை சீரழிக்கவென்றே பிறந்து வந்திருந்த அந்த இளைஞனை சந்திக்க நேர்ந்திருக்காவிட்டால் இன்று நான் எனது சக மாணவிகளுடன் ‘கம்பஸ்’ வாழ்க்கையின் கிறக்கத்தில் ழ்கியிருந்திருப்பேன்.

‘ரியூசன் வகுப்புகளுக்கு மாறி மாறிச் சென்று கொண்டிருந்த என்னை அக்காலத்தில் ஒரு நிழல் பின் தொடர்ந்ததை நான் உணரத் தொடங்கினேன். எனது கஷ்டகாலம்தான் என்னைத் தொடர்கிறது என்பதை அப்போது நான் உணரவில்லைதான்.

நான் வகுப்புகளைக் ‘கட்’ பண்ணினேன். பாதைகளை மாற்றி அமைத்தேன். கஷ்டகாலம் என்னுடன் இணைந்திருக்கும் போது எனது முயற்சிகளுக்கு இடமேது! தான் சேகரிக்கவேண்டிய பயணிகள் அனைவரையும் ஏற்றிக் கொண்டபின்னர் எமது வாகனம் நேர் பாதையில் ஓடத் தொடங்கியது.

முன் ஆசனமொன்றில் அமர்ந்திருந்த இளம் பெண்ணுக்கு அவளது கணவன் அடிக்கடி காதோரம் குனிந்து கதைகள் கூறவும் அவள் குப்பென முகம் சிவந்து நாணிச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

இப்படித்தான் எனக்கும் நேர்ந்தது…என்னைத் தொடர்ந்த நிழல் எனது காதுகளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் ஆயிரம் கதைகளைக் கூறியது.

‘நான் உன்னைக் காதலிக்கின்றேன்…

‘நான் உன்னைக் கைவிடேன்…

‘நான் தான் உனது ஜென்ம புருஷன்…!

இந்த வார்த்தை ஜாலங்களெல்லாம் என் விரல் தீண்டிய வீணையின் நாதம் போல என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன…

எனது குடும்ப ஏழ்மை…படிப்பைத் தொடர வேண்டிய எனது கட்டாயம்… போதாத வயது….அனைத்தையும் காரணம் காட்டிக் காலடியில் வீழ்ந்து அழுதேன்…கதறினேன். அவன் இணங்கவில்லை.

நானும் சபல உணர்வுடன் இழுபடும் பெண்தான் என்பதை அவன் நன்கு விளங்கிக் கொண்டிருந்தான் போலும்.

அவன் தனக்கு என்று ஒரு திட்டத்தை வகுத்திருந்தான். எனக்கு என்று ஒரு வலையை விரித்திருந்தான்.

நான் எனக்கு என்று ஒரு கற்பனையை உருவாக்கி அந்த மாய வலையில் வீழ்ந்து விட்டேன்!

விவாகப் பதிவு கூட நடந்தது…

பிரதம விருந்தினருக்கு இடப்பட்ட மாலையைப் போல…நான் ஒரு இரவுதான் அவனது வலையில் வீழ்ந்திருந்தேன்.

எனக்கு தேவையற்ற சுகம்…

என்னால் வேண்டப்படாத இன்பம்…

இவை எனது பிஞ்சு உடலுக்கு வலுக்கட்டாயமான விருந்துகளாக வழங்கப்பட்டன.

எனக்கு மறுபடியும் அப்படியொரு சந்தர்ப்பம் நேர்ந்திடவில்லை.

ஆனால் நான் தாய்மை அடைந்தேன்.

பதினெட்டு வயதுப் பெண்கள் எல்லோருமே புத்தகங்களைத்தான் சுமந்தார்கள். ஆனால் நான்…? நான்…? நான் ஒரு அறிவிலி! என்னைப் பெற்றவள் என்னைக் காட்டிலும் அறிவிலி! என்னை எனது கிராமிய சூழலில் பச்சைமட்டையால் அடித்துத் திருத்தவேண்டிய என் அன்னை ….. அப்படிச் செய்யாமலே விட்டு விட்டாள்!

பதிலுக்கு என்னை ‘ஒரு நாள்’ மணமகளாக ஆக்கிப் பார்த்தாள்.

வண்டியில் முகவரின் உதவியாள் ஏனைய பெண்களிடம் வினவியது போல என்னிடமும் பயண ஏற்பாடுகள் பற்றிப் பல வினாக்களைத் தொடுத்தான்.

வாகனத்தின் வேகத்தில் பலமான காற்று உள் நுழைந்து கொண்டிருந்ததால் பதில் சொல்லக் கஷ்டமாக இருந்தது. ‘சட்டரைப்’ போட்டுக் கொண்டேன்.

இப்படித்தான் எனது சக மாணவிகள் என்மீது கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். ‘யாரடி இவன்? ‘உனக்கு உறவினனா? ‘என்ன தொழில் புரிகின்றான்? ‘ஏழையா அல்லது நிரம்பிய வசதி படைத்தவனா?

என்றெல்லாம் என்னைக் கேட்டு துளைத்து எடுத்தார்கள். ஏற்கனவே என்னால் கேட்கப்பட்ட இதையொத்த கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதில்களைத் தந்து அவன் என்னிடம் மாட்டியிருந்தான். –

ஆனாலும், நான் செய்துவிட்ட தவறுகளை என்னைத் தவிர வேறுயார் தான் நியாயப்படுத்துவர்?

அவனை உச்சாணிக் கொப்பில் வைத்து எனது சக மாணவிகளுக்குப் புகழ்ந்தேன். ‘அவன் எனக்கு கிடைத்தது நான் முற்பிறப்புகளில் செய்த பெரும் பாக்கியங்களின் பேறாகும். நீங்களெல்லாம் படித்து பட்டம் பெற்றும் கிடைக்குமா என்று ஏங்கும் வரன் எனக்கு இப்போதே கிடைத்து விட்டது. என்றெல்லாம் பல கூறி என்னை நானே ஏமாற்றிக் கொண்டு உள்ளுர அழுதேன்.

ஊர் எல்லைக்கு அப்பால் எவர் கண்ணிலும் படாமல் என்னையும் எனது அம்மா மற்றும் தங்கைமார் இருவரையும் குடிசை ஒன்றில் குடியிருத்திவிட்டு குழந்தை பிறப்பதற்கு முன்பதாக தான் வெளிநாடு சென்று சம்பாதித்து வருவதாக அவன் கூறிச் சென்றபோது…

எங்கள் கைகள் வெறுமையாக இருந்தன…எங்கள் இதயங்கள் நம்பிக்கை இழந்திருந்தன…சில தினங்களிலேயே பட்டினி எம்மை வாட்டத் தொடங்கியிருந்தது…எதிர்காலம் இருள் சூழ்ந்திருந்தது.

நான் வடிக்காத கண்ணீரா? என் உதிரத்தை கண்ணீராக்கி ஆறாக ஓட விட்டேன்…..மீதி உதிரத்தில் எனது வயிற்றில் சிசு ஒன்று ஆரோக்கியமாக வளர்ந்தது.

எங்கோ ஒரு நாவலில் படித்தது போல ஒருவரும் அறியாமல் மறைந்து செய்த தப்பு அனைவரும் அறிய ஒரு நாள் அரங்கேறியது! பெண் குழந்தையாக எனது மடியில் வீழ்ந்தது. தந்தையர் போல தாய்க்குலத்தால் ஒரு குழந்தையை அநாதரவாக்க முடியுமா? – அணைத்துக் கொண்டேன்!

என் முகம் பார்த்து அந்த முத்து சிரிக்கும்போது எனக்கு அவனது முகமே நினைவுக்கு வந்தது…

சிலசமயம் எவராவது அவனிடம் இக்குழந்தை பற்றிக்கேட்டால் ‘எனக்கு எதுவுமே தெரியாதே’ என்று மறுதலிக்கும் தூரத்துக்கு அவன் போய்விட்டான்.

வாகனம் நிதானமாகவே ஓடிக்கொண்டிருந்தது. அம்மா குழந்தையை எனது மடியில் வளர்த்தினாள். அவளின் நோக்கம் எனக்குப் புரிந்தாலும் இப்போதெல்லாம் இந்தப் பால் மரம் சுரப்பதில்லை . சுடுநீர்போத்தலில் இருந்த மெல்லிய சாயத்திலான தேநீரை மூடியில் ஊற்றி ஊதி ஊதிப் பருக்கினேன்.

“அம்மா…நான் வேலையைப் பொறுப்பேற்றதும் கடன் பட்டாயினும் குழந்தையின் தேவைக்குப் பணம் அனுப்பி வைப்பேன். அதில் பிரச்சனை ஏதும் ஏற்பட்டாலும் என்பதற்காக நான் உன்னுடன் இறுதியாக பயணம் கூறச் சென்ற எனது உயிர்த்தோழியிடம் உனக்கு உதவி செய்யக் கேட்டிருக்கிறேன். அவளுக்கு கம்பஸில் கிடைக்கும் பேர்சரி தொகையை அவளது கைச்செலவுகளுக்காக அவளது பெற்றோர் விட்டு வைத்திருக்கின்றார்கள். நீ உதவி கோரினால் அவள் அப்பணத்திலிருந்து உதவி செய்வாள்.

அம்மா மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். அவளது கண்கள் கலங்கியிருக்க வேண்டும். அவளுக்கு தான் தனது கணவனுடன் வாழ்ந்த இனிமையான காலம் அப்படி ஒன்று இருப்பின் – நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.

அப்பா மட்டும் எனது இளம் வயதில் இறந்திருக்காவிட்டால் அவள் எனது வாழ்க்கையை வேறு வகையில் ஒப்பேற்றியிருக்கக் கூடும்).

எனது கணவன் என்ற தெய்வம்’ எனக்கு குழந்தை வரம் தந்து நீங்கிய பின்னர் நான் அனுபவித்த துன்பங்கள் கணக்கிலடங்காதன.

நஞ்சான வார்த்தைகளை நான் அமுதமாக உண்டதால் ஒரு வருடகாலம் அவனை நம்பி வாழ்ந்து வந்தேன். எனது குழந்தை பசியில் துடித்த காலம் எனது வயிறும் காய்ந்து நரம்புகள் வலுவிழந்தன…

அவன் மட்டும் திரும்பவே இல்லை!

எனது சாதகமான எதிர்காலத்திற்கு எங்களைச் சேர்ந்தோர் ஆலோசனைகளை மட்டும் முன்வைத்தார்கள். எனது உயிர்த்தோழியின் தந்தை பாசத்துடன் என்னைப் படிப்பைத் தொடரும்படி வற்புறுத்தினார்.

உயிர் வாழ்வதற்கான பண பலமே – எம்மிடம் இல்லாதபோது கிடைக்காத ‘கம்பஸ்’ கல்வியை நான் எப்படித் தொடர முடியும்?.

எனக்குரிய ஒரே தீர்வு … பணிப்பெண்ணாக தூரதேசம் போவது தான்! பல குழந்தைகளைப் பெற்றெடுத்த எனது உயிர்த்தாய் எனது குழந்தையையும் பொறுப்பேற்றுக் கொண்டாள்.

தலைநகருக்குக் கிட்டிய தொலைவில் இரவு ஆகாரத்துக்காக நான் சென்ற வாகனம் நிறுத்தப்பட்டது. எல்லோரும் இறங்கிச் சென்றார்கள். நானும் சென்று ‘பணிஸ்’ வாங்கி வந்தேன். எனது ஆத்ம நண்பி இறுதி நேரத்தில் எனது கையில் வைத்த பணம் எனக்குத் தென்பாக இருந்தது.

அனைவரும் இரவு உணவை முடித்து வாகனத்தில் ஏறவந்த போது முகவரின் உதவியாள் மேலும் சில விளக்கங்களை எங்களுக்கு கூறினான். அதன் பிரகாரம் பணிப்பெண்களாகப் பயணிக்கவுள்ள அனைவரும் அந்த இரவு ஒரு ‘ஹோட்டலில் தனியாகத் தங்கவைக்கப்டுவார்கள் என்றும் வழியனுப்ப வந்தவர்கள் வேறு இடத்தில் தங்கிக் கொள்வதற்கான ஏற்பாடும் தம்மாலேயே செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் மறுநாள் அதிகாலையில் ஒரே வாகனத்தில் விமான நிலையத்துக்கு புறப்பட முடியும் எனவும் நம்பிக்கை அளித்தான்.

வாகனம் உரிய இடத்தை அடைந்த போது அம்மாவையும், குழந்தையையும் பிரிய முடியாமல் நான் கலங்கினேன். இந்த உறவுகளையெல்லாம் விட்டுப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ்தல் கூடும் என மலைத்து நின்றேன்.

எமக்கு ஆகவேண்டிய கருமங்களை நல்லவகையில் ஒழுங்கு செய்தார்கள். ‘பாஸ்போட்’, ‘விசா’ பற்றிய விளக்கங்களைத் தந்தார்கள். தடுப்பூசிகளைப் பெற்றுத் தந்தார்கள். எமது தாய்நாட்டு விலாசங்களிடப்பட்ட விமானக் கடித ‘கவர்களை எமக்குத் தயார் செய்து தந்தார்கள். எமக்குப்புதிய இடம் பழக்கப்படும் வரை எமக்குத் தேவைப்படக்கூடிய வேறும் சில பொருட்களைத் தமது செலவிலேயே வழங்கினார்கள். அவை அனைத்தையும் விடப் பெறுமதியான ஆலோசனைகளை எம்மில் கரிசனை காட்டி வழங்கினார்கள். ஒரு பயணத்திற்கே இவ்வளவு முன்னேற்பாடுகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும் போது எனது வாழ்க்கைப் பயணத்திற்கு எனக்காகச் செய்யப்பட்ட முன்னேற்பாடு என்ன? எனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் என்ன? என்று எண்ணி மலைத்தேன்.

இதோ…சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துவிட்டோம்…விமானங்களின் பேரிரைச்சல்கள்…ஒலிபெருக்கிமூலம் அறிவித்தல்கள்…கருமபீட பதிவுகள்…பிரயாண பொதிகளின் ஒப்படைப்புக்கள்.

இன்பமயமான எனது பாடசாலை வாழ்க்கை என் கண்முன் விரிகின்றது….ஓடித் திரிந்த நாட்கள் பாடித்திரிந்த பொழுதுகள்..எத்தனை பேச்சுப்போட்டிகளில் சாதனை படைத்திருக்கின்றேன்! எத்தனை தமிழ்த்தினப் போட்டிகளில் தனியாகவும் குழுவாகவும் பரிசில்களைத் தட்டிக் கொண்டிருக்கின்றேன். எத்தனை ஆண்கள் கல்லூரி மாணவர்களின் ஏகோபித்த கை தட்டல்களைப் பெற்றிருக்கின்றேன்…..

ஆனால்.. என் வாழ்க்கைப் பயணம் மட்டும் எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தொடரப்பட்டதால் விபத்தில் சிக்கி சின்னா பின்னமாகி நிற்கின்றது.

இதோ…எனது பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையைத் தூக்கி முத்தமாரி பொழிகின்றேன்…அம்மாவைக் கட்டி அணைத்துக் கொள்கின்றேன். விடை பெறுகின்றேன்..புரியாத காரணத்துக்காக எனது குழந்தை விம்மி விம்மி அழுகின்றது.

என் தமிழ்த் தாய்க்குலமே உங்களால் இந்த சேய்க்கு என்ன மீட்சியைத் தரமுடியும்.

– தினக்குரல் 07.07.2002, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *