கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 15,799 
 

“அப்பா எனக்கு கொஞ்ச நாளாக வயிற்று வலி தாங்க முடியவில்லை. என்னால் வாழ முடியவில்லை. நான் சாகப் போகிறேன்” என தன் மகள் கவிதா பதட்டமாக போனில் பேச பதறி அடித்து ஓடினார் ஆசிரியர் கதிரவன்.

தன் மகள் எரிந்த நிலையில் பிணமாய் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துப் போனார். ஆசிரியர் கதிரவனுக்கு ஒரே மகள் கவிதா. 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் தன் மனைவி இறந்துவிட மகள் கவிதாவை msc வரை படிக்க வைத்தார் கதிரவன்.

பல இடங்களில் மகளுக்கு வரன் பார்த்து கடைசியில் கவிதா சம்மதத்துடன் ரவிக்கு மணமுடித்து வைத்தார். மாப்பிளை ரவி தனியார் நிறுவனத்தில் மானேஜர். ரவிக்கு தாய், தந்தை,ஒரு அண்ணன். தாயும், தந்தையும் அண்ணனுடன் இருக்க ரவி தன் மனைவி கவிதாவுடன் தனி குடித்தனம் இருந்தான்.

திருமணம் ஆகி கிட்டத்தட்ட 6 மாதம் ஆகிறது. மாதம் இரு முறை மகளை போய் பார்த்துவிட்டு வருவார் கதிரவன். கடைசியாக 10 நாட்களுக்கு முன்பு கூடப் பார்த்து விட்டுத்தான் வந்தார். அப்போது கூட மகளும் மருமகனும் சந்தோஷமாகதான் இருந்தனர். திருமணம் ஆகி 6 மாதம்தான் ஆகியுள்ளது என்பதாலும், தற்கொலை என்பதாலும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவலர்கள் வந்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் கவிதாவின் உடலை சிறிது நேரம் உற்று நோக்கிக் பார்த்து கொண்டு இருந்தார்.

பிறகு அக்கம்பக்கம் வீடுகளில் விசாரித்துவிட்டு ஆசிரியர் கதிரவனிடம், “இதற்கு முன் எப்போதாவது வயிற்று வலி என்று கவிதா சொல்லி இருக்கிறாரா?’’ என்று கேட்டார்.

“இல்லை சார்” என்று சொன்னார் கதிரவன். பிறகு மாப்பிளை ரவியிடம் விசாரித்துக் கொண்டு இருந்தபோது சட்டென்று ரவியின் சட்டையைப் பிடித்து கொலைகார நாயே வாடா என்று காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றார்.

காவல் நிலையத்தில் ஆசிரியர் கதிரவன், “இன்ஸ்பெக்டர் சார் மாப்பிளை ரவி நல்லவர். அவர் ஏதும் செய்திருக்கமாட்டார்” எனக் கூறினார். “சார் நீங்க 1 மணிநேரம் கழித்து வாங்க” என்று கதிரவனை அனுப்பிவிட்டு உள்ளே சென்று தன் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தார் இன்ஸ்பெக்டர் முருகன்.

சிறிது நேர விசாரணைக்குப் பிறகு ஆமாம் சார் நான்தான் கொலை செய்தேன் என்று பேச ஆரம்பித்தான் ரவி.

“சார் எனக்கும் என்கூட வேலை செய்யும் செல்விக்கும் பழக்கம். நான் செல்வியுடன் போனில் பேசிக் கொண்டு இருந்ததை கேட்டுவிட்டு கவிதா சத்தம் போட்டாள். அவள் அப்பாவிடம் சொல்லப் போகிறேன் என போனை எடுத்தாள். நான் அவளை அடித்து கழுத்தை நெருக்கினேன். அவள் இறந்துவிட்டாள். பின்பு நான் செல்விக்கு போன் செய்து வரவழைத்தேன். நாங்கள் இருவரும் கொலையை தற்கொலையாக்க திட்டம் போட்டோம். அதன்படி கவிதா போனில் இருந்து கவிதா அப்பாவிடம் கவிதா போலப் பேசினாள் செல்வி. கவிதா போன்ல இருந்து கால் வந்ததாலும், பதட்டமாய் பேசியதாலும் கதிரவன் போனில் பேசியது தன் மகள்தான் என நம்பிவிட்டார். நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள்” என்றான் ரவி.

பின்பு ரவி, செல்வி இருவரையும் சிறையில் அடைத்தார் முருகன். சிறிது காலத்திற்கு பிறகு இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. “இது தற்கொலை அல்ல. கொலைதான் என்று எப்படி சார் கண்டுபிடித்தீர்கள்?” என முருகனிடம் கேட்டார் சக காவலர்.

அதற்கு முருகன், “பொதுவாக எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்பவர்கள் தலையில் இருந்து தான் ஊற்றி கொள்வார்கள். அதனால் தீ மேலிருந்து கிழேப் பரவி உடல் முழுவதும் எரியும். ஆனால் கவிதா உடலில் கால்களில்தான் அதிக தீ காயம் இருந்தது. அதை வைத்துதான் விசாரித்தேன். உண்மை வெளிய வந்துவிட்டது” என்றார்.

தீர்ப்பு பற்றி ஆசிரியர் கதிரவனிடம் கூற இன்ஸ்பெக்டர் முருகன் பள்ளிக்கு சென்றார். வகுப்பறையில், “உண்மையை அதாள பாதாளத்தில் மறைத்தாலும் அது வெளியே வந்தே தீரும். ஏன்னென்றால் அதுதான் உண்மை” என்று பாடம் நடத்திக் கொண்டு இருந்தார் ஆசிரியர் கதிரவன்.

– ஜூன் 2021

Print Friendly, PDF & Email

1 thought on “உண்மை..!

  1. ஒரு சின்ன சஸ்பென்ஸ் உடன் கூடிய ஒரு க்ரைம் கதை. நன்றாக வந்துள்ளது. ராஜேஷ்குமார் போன்ற கிரைம் எழுத்தாளர்களின் கதைகளை ஊன்றிப் படித்தால், க்ரைம் கதைக்கு உரிய வார்த்தை ஜாலங்கள் அதன் சூட்சுமங்கள் புரியும். எழுத்தாளர் தமிழ் தரணி அவர்கள் சிறப்பான சிறுகதைகள் நிறைய நிறைய எழுத வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *