கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 10,420 
 

கவி கண்களை அகல விரித்துப் படுத்துக் கிடந்தாள். மின்விசிறி ஸ்ரட் ஸ்ரட் ஸ்ரட் என சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. கண்களை மூடினால் கொஞ்ச நாட்களாக ஒரு அலறல் சத்தம் கேட்கிறது. இன்றும் கேட்குமா என்று பயந்தபடி கண்களை மூட எத்தனிப்பதும், மூடாமல் மறுப்பதுமாக கிடந்தாள். முதல் மாடியில் வீடு இருந்ததால், தெருவின் சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தது. தெளிவில்லாத பேச்சொலிகள். கேட்டுக்கொண்டே இருந்தவள், திடீரென எழுந்து கூர்மையாக கவனித்தாள். விருட்டென எழுந்து வாசலை நோக்கிச் சென்றாள். கட்டிலின் கீழே படுத்துக் கிடந்த ஸ்டெஃப்பி திடுக்கிட்டு எழுந்து பின்னாலேயே ஓடியது.

கவி கதவருகே போய் இடது காதை கதவிடம் சாய்த்தாள். ஸ்டெஃப்பி என்ன என்பது போல பார்த்துக்கொண்டிருந்தது. கவி சத்தமிடாமல் கதவைத் திறந்தாள். கவியின் கால்களை ஒட்டி வந்த நின்ற ஸ்டெஃப்பி, பலமாக குலைக்க ஆரம்பித்தது. திடுக்கிட்டுத் திரும்பிய கவி, கதவை அடைத்தாள். ஸ்டெஃப்பி இரண்டு வினாடிகள் சரியாக மௌனம் காத்தது. பின்பு உச்சக்குரலில் குலைக்க ஆரம்பித்தது.

கவி ஸ்டெஃப்பியை அதட்டாமல் அதைத் தாண்டி கிச்சனுக்குள் நுழையவும், அம்மா ‘ஸ்டெஃப்பி’ என்று குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது. கவி விடுவிடுவென நகர்ந்து, அம்மாவின் தோளைத் தொட்டாள். அம்மா திடுக்கிட்டு திரும்பினாள். கவியின் கண்களில் கண்ணீர். ‘என்னாச்சுமா?’, அம்மா பதறினாள். கவி எப்போது அழத்தொடங்குகிறாள், எப்போது சமாதானமடைகிறாள் – இன்னும் எதுவும் அம்மாவுக்கு புலப்படவில்லை. கவி ஒன்றும் சொல்லாமல் அம்மாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள்.

ஸ்டெஃப்பி இன்னும் குலைத்துக்கொண்டிருந்தது. கவி அம்மாவை இழுத்துக்கொண்டு கதவருகே வந்ததும், கையை மெதுவாக கைவிட்டாள். அவளின் செய்கைகளில் ஒரு மௌனத்தின் ஆழம் இருந்தது. ஸ்டெஃப்பி குலைப்பதை நிறுத்திவிட்டு கவனிக்க ஆரம்பித்தது. கவி கதவை கொஞ்சமாக திறந்தாள். அம்மா கவியின் தோள் மீது எட்டிப் பார்த்தாள். ஸ்டெஃப்பி இருவரின் கால்களுக்கிடையில் இப்படியும் அப்படியும் ஓடியது.

எதிர் வீட்டு ப்ளாட்டின் கதவு முழுதாக திறந்து கிடந்தது. ஹாலின் சோஃபா கொஞ்சம் கோணலாக முன்னகர்த்தப்பட்டிருந்தது. சேகர் அண்ணாவின் குரல் யாருக்கோ எதையோ நிதானமாக சொல்லிக்கொண்டிருந்தது. ஒரு கறுப்பு இளைஞன், கட்டிலின் கால்களை எடுத்துக்கொண்டு வெளியேறி, படிகளை நோக்கிச் சென்றான். சேகர் அண்ணாவின் குரல் பலம் பெற்று, ஹாலின் உள்ளிருந்து வாசல் நோக்கி வரத்தொடங்கியது. கவி சடாரென கதவை சாத்திக்கொண்டாள்.

ஸ்டெஃப்பி மீண்டும் குலைக்க ஆரம்பித்தது.

‘வீட்ட காலி பண்றாங்களா?‘ அம்மாவின் புருவங்கள் சுருங்கி நெளிந்திருந்தன. கவி அமைதியாக அம்மாவையே பார்த்தாள். கண்களிலிருந்து அவசரப்பட்டு நீர் கோடென இறங்க, வலது கையால் கன்னத்தை அழுந்த துடைத்துக்கொண்டு, டைனிங் டேபிள் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தாள். அம்மா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘உங்கப்பா வேற இல்லையேமா?’.

‘ஐயோ‘. அம்மாவிற்கு எதுவும் விளங்கவில்லை. ‘நான் போய் பேசிட்டு வரவா?’

கவி ம்ஹூம் என்று தலையசைத்து எழுந்தாள். அழுகையை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை. எழுந்து பெட் ரூம் நோக்கி சென்றாள். ஸ்டெஃப்பி அவள் பக்கம் திரும்பி குலைக்க ஆரம்பித்தது. கவி திரும்பி, ‘ச்சீ! வாய மூடு!’ என்று கத்தினாள். ஸ்டெஃப்பி அதிர்ந்து மௌனமானது.

‘அது என்னம்மா பண்ணிச்சு? ரெண்டு மாசமா உன் பின்னாலயே அலையுது. அத நீ சீண்டறது கூட இல்ல‘ – அம்மா அழத்தொடங்கினாள்.

கவி உள்ளே சென்றுவிட்டாள். அம்மா என்ன செய்வது என விழித்தாள். ஏதோ பெரிய பொருள் ஒன்று எதிர் ப்ளாட்டு வாசக்காலில் ‘டங்கென்று’ மோதியது. அம்மா தீர்மானமாக கண்களை துடைத்துக் கொண்டு கதவை நோக்கி சென்றாள். ஸ்டெஃப்பி வீறு கொண்டு ஆமோதிப்பது போல குலைக்க ஆரம்பித்தது.

‘அம்மா, ந்யூஸ்காரங்க யாராச்சும் இருக்கப் போறாங்கமா‘ – அழுகையின் உச்சத்தில் வெடித்து விடுவது போல இருக்கிறது கவியின் குரல். பெட் ரூம் வாசலின் திரைச்சீலையை கைகள் நடுங்க பற்றிக்கொள்கிறாள். அன்று போலீஸ் ஸ்டேஷன் வாசலில், அம்மா ஆட்டோவில் வேர்வையினூடே கண்ணீர் வழியக் காத்திருக்க, சுடிதார் துப்பட்டாவால முக்காடிட்டபடி வேக வேகமாக கவி வந்தமர்ந்த போது, அவளின் கைகள் இப்படி நடுங்க ஆரம்பித்தன. அடுத்த நாள் காலையில் ‘நாய் துரத்தி நான்காவது மாடியில் இருந்து தவறி விழ்ந்து ஆறு வயது சிறுவன் பலி‘ என்று தலைப்பிட்ட செய்தித்தாளை அம்மாவிடம் நீட்டுகையில் அவள் கைகள் இப்படியே நடுங்கிக்கொண்டிருந்தது. கவியின் கட்டை விரல் பேப்பரிலிருந்து விலக, அங்கே முக்காடிட்ட அவள் புகைப்படம். ‘நாயை வளர்த்து வந்தவர்’ என்று கட்டம் கட்டியிருந்தது.

‘அதெல்லாம் இருக்க மாட்டாங்கம்மா‘ ஆறுதலாய் அம்மாவின் குரல் குழைகிறது. ‘நான் போய் பாக்குறேன்’.

அம்மா கதவை நன்றாகத் திறந்தாள். பலமாக மூக்கை உறிஞ்சினாள், வெடித்து அது அழுகையாகிவிடும் போல இருந்தது. வெளியே யாருமில்லை. படிகட்டில் இரண்டு இளைஞர்கள் பீரோவுடன் இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

அம்மா அங்கேயே நின்றுக்கொண்டிருந்தாள். ஸ்டெஃப்பி பாய்ந்து வந்து பக்கத்தில் நின்றது. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சேகர் அண்ணா வெளியே வந்தார், தற்செயலாக.

சேகர் அண்ணாவிற்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. உள்ளே வர எத்தனித்த இளைஞனிடம் ஏதோ பேசுவது போல, தன்னை கொஞ்சம் திடமாக சேகரித்துக் கொண்டார். அவன் போனதும், அவரே அம்மாவிடம் வந்தார்.

அம்மா கையை வணக்கம் சொல்வது போல வைத்துக்கொண்டாள். சேகர் அண்ணாவுக்கு சங்கடமாக இருந்தது. ஸ்டெஃப்பி தலை நிமிர்த்தி பார்த்துக்கொண்டிருந்தது.

‘அம்மா, நானே கொஞ்ச நாள் கழிச்சு உங்கள வந்து பாக்குறேன்’ என்றார். சங்கடத்தில் தேய்ந்தது குரல். ‘பிள்ளையை பறிகொடுத்தவர்’ என்பது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அம்மா அவசர அவசரமாக ‘சரி, சரி‘யென தலையசைத்தாள். கைகள் இன்னும் விலகவில்லை. பித்து பிடித்த நிலையில் இருந்தது போலிருந்தாள். சேகர் என்ன சொன்னாலும் சரியென்று சொல்லுவாள் போலத் தென்பட்டாள். ‘ஆகட்டும் தம்பி‘ என்று உணர்ச்சி முட்டி மோத சொல்லி முடித்தாள். ‘மலர்?’ என்று சிரமப்பட்டுக் கேட்டாள்.

சேகர் அண்ணா உள்ளே பார்த்தார். ‘மலர் இன்னும் நார்மல் ஆகல‘ என்று சொல்லிக் கொண்டே திரும்பினார். ‘இப்போ வேண்டாமே?’ என்றார். அம்மா அதற்கும் வேக வேகமாக ஒப்புக்கொண்டாள். ‘வேண்டாம், வேண்டாம்’.

உள்ளிருந்து ஒருவன் மெத்தையை தூக்கிக் கொண்டு வந்து நின்றான். அம்மா ‘பின்னாலே‘ என்பது போல கை காட்டினாள். சேகர் திரும்பிப் பார்த்துவிட்டு ‘வரேன்’ என்று தலையசைத்து விட்டு நகர்ந்தார். அம்மா ஸ்டெஃப்பியை இழுத்துக் கொண்டு உள்ளே நகர்ந்தாள். ஸ்டெஃப்பி மீண்டும் குலைக்க ஆரம்பித்தது. அம்மா கதவை தாழிட்டாள்.

கவி பெட் ரூம் வாசலில் நின்றுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா அவளிடம் வந்து கன்னத்தை பிடித்துக்கொண்டாள். ‘போய் பார்த்து பேசிட்டு வந்துடும்மா. அப்புறம் அவங்க போனதும் அழக்கூடாது‘. கவி அம்மாவின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள். உதடுகள் துடித்தன.

அம்மா சமையறைக்குள் சென்று, அமைதியாக அழுதுகொண்டே சமைத்துக்கொண்டிருந்தாள். கவி ஹாலில் இப்படியும் அப்படியும் நடந்துக்கொண்டிருந்தாள். ஸ்டெஃப்பி கதவை பார்த்தபடி குலைத்துக்கொண்டே இருந்தது. விடுவிடுவென வினாடி முள் இவர்களை சுற்றி வந்தது.

‘ஏய், மெதுவா மெதுவா‘ என்று சப்தம் வெளியே கேட்டது. கவி கதவருகே சென்றாள். மனதைப் போட்டு பிசைந்தது. மலர் அண்ணியின் முகம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. என்னவென்று போய் பேச?

கவி டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து கொண்டாள். சேர், சுவருக்கு கதவுக்கும் இடையில் இடுங்கிக்கொண்டு கிடந்தது. இரு உள்ளங்கைகளாலும் கழுத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். ‘கடவுளே‘.

ஸ்டெஃப்பி அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. இரண்டு மாதங்களாக அவளை கண்டதும் துடித்தது. கவி அதனிடம் செல்லவேயில்லை. ‘ஏன், ஏன்’ என்பது போல தாவிக்கொண்டே இருந்தது.

கவி எழுந்து கதவை ஓசையில்லாமல் திறந்தாள். ஸ்டெஃப்பி கொஞ்சம் நிமிர்ந்தது.

கதவை கொஞ்சமாக திறந்தாள். ஸ்டெஃப்பிக்கு வழிவிடுவது போல நகர்ந்து நின்றுக்கொண்டாள். ஸ்டெஃப்பி கவியைப் பார்த்தது; கதவைப் பார்ததது. ‘போ‘ என்று சைகை செய்தாள். ஒரு வினாடி தாமத்தித்து, ஸ்டெஃப்பி வில்லென பாய்ந்தது.

கவி சேரில் அமர்ந்து கொண்டாள். கதவிடுக்கின் வழியே விழுந்த நிழல்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். காதுகள் அத்தனை இரைச்சல்களையும் இருபுறமும் நீக்கி, ஸ்டெஃப்பியின் குரலோ, மலரண்ணியின் குரலோ கேட்கிறதா என காத்துக்கொண்டிருந்தாள்.

திடீரென மலரண்ணியின் பெரும் கதறல் கேட்டது. கவி திடுக்கிட்டு அமர்ந்தாள். அம்மா கிச்சனிலிருந்து வெளியே மெதுவாக ஓடி வந்தாள். கதவிடுக்கின் வழியே அழுகை ஒரு கத்தியென செருகிக்கொண்டிருந்தது. கவி கதவை பெரும் சுமையென பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அம்மாவை நிமிர்ந்து அவள் பார்க்க, பார்வை மங்கலாகி கலைந்தது. கன்னங்களில் கண்ணீர்.

அண்ணியின் அழுகை மெதுவாக குறைந்து கொண்டு வந்தது. கடைசி முறையாக மேலுழும்பி கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது. கவி அழுது முடித்திருந்தாள்.

இப்போது ஸ்டெஃப்பியின் சின்னக் சின்னக் கேவல்கள் கேட்க ஆரம்பித்தன. சேகர் அண்ணாவின் குரல் மெலிதாக கேட்டது. பின்பு அவர் வெளியே வந்து படிகளில் இறங்கிப் போனார்.

கவிக்கு இதயம் துடிக்க ஆரம்பித்தது. அங்கே அண்ணியும் ஸ்டெஃப்பியும் தானிருக்கிறார்கள். ஸ்டெஃப்பி, என்ன செய்துகொண்டிருக்கிறாய்?ஏதாவது செய்!

கவி தரையையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, அவள் பார்த்துக்கொண்டிருந்த இடத்தில் ஸ்டெஃப்பி வந்து நின்றது. கவி உயிர் வந்தது போல நிமிர்ந்தாள்.

ஸ்டெஃப்பியின் கழுத்தில் பளிச்சென புதிதாக ஒரு பட்டை. பழுப்பு நிறம். கையில் போட்டுக்கொள்கிற பட்டையை கழுத்தில் போட்டிருந்தார்கள்.

ஸ்டெஃப்பி கவியின் கண்களையே பார்த்தது. கவி அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள். ஸ்டெஃப்பி மெதுவாக சென்று கவியின் கால்களை நக்கியது. கவி ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தாள். அம்மா விசும்பிய சத்தம் கேட்டு அவள் திரும்ப, அம்மா கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.

கவி ஸ்டெஃப்பியை நோக்கி கைகள் நீட்ட, ஸ்டெஃப்பி பரபரவென குதித்தது. கவி பாய்ந்து ஸ்டெஃப்பியைத் தூக்கிக்கொண்டு நெற்றியில் மாற்றி மாற்றி அழுதுகொண்டே முத்தமிடத் துவங்கினாள்.

– படித்த ஒரு செய்தியை வைத்து கற்பனை செய்து எழுதியது – ஏப்ரல் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *