சீனத்துச் சிங்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 1, 2024
பார்வையிட்டோர்: 1,731 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

ஜப்பானியர்கள் மஞ்சூரியாவைக் கைப்பற்றிய தினத்தை நான் என்றென்றும் மறக்க முடியாது. ஏனெனில் அன்றுதான் என் அருமைத் தன்பூச்சோவையும் காலதேவன் கைப்பற்றிக் கொண்டான்! 

    தன் பூச்சோ என்ற அந்தச் சீனத்துச் சிங்காரி என்பூச்சோவாக என் இதயத்தில் இடம் கொண்ட தினமும் அதுதான். மஞ்சூரியாவை ஜப்பான் கைப்பற்றியதும், அன்றையத் தினம் சீனமக்களின் இதயத்தில் ஒரு பெரிய கொந் தளிப்பு உண்டாயிற்று. மலாய் நாட்டிலும் அந்தக் கொந்தளிப்பு பெரிய ஆவேசமாக மாறி ஒரு பெரும் இயக்கமாகவே உருவெடுத்தது. மேற்படி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜப்பான் சாமான்களைப் பகிஷ்கரிப்பதென்று ஊர்வலமாகக் கிளம்பினார்கள். பள்ளி மாணவர்களும், மாணவிகளு ம் பள்ளிக்கூடங்களைப் பகிஷ் கரித்தார்கள். அப்பொழுது என்னுடன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சீனத்துச் சிங்காரி தன்பூச்சோவும், அந்த இயக்கத்தில் கலந்து கொண்டாள். அவளே அநேகம் சீனப் பெண்களைக் கூட்டிக் கொண்டு கடை கடையாக நுழைந்து, ஜப்பான் சாமான் களை வெளியில் எடுத்துப் போட்டுக் கொளுத் தினாள். போலீஸ் படை அதைத் தடுத்தனர். அவள் கேட்கவில்லை. மேலும் மேலும் தன் தோழிகளை ஏவி விட்டாள். அதனால் போலீஸார் கண்ணீர்ப் புகையை உபயோகித்தனர். உடனே தன் பூச்சோவும் அவளுடைய தோழீகளும் கோபம் கொண்டு கண்ணாடிச் சாமான் களைப் போலீஸார் மீது விட்டு எறிந்தனர். அதன் காரணமாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார். பிறகு போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் வலுத்தது. மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தில் தன்பூச்சோ படுகாயப் பட்டாள். அவளை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து போட்டார்கள். மூன்று நாள் கழித்துத் தான் கண் விழித்தாள். நான் அவள் அருகிலே இருந்தேன். என்னைப் பார்த்தவுடன் அவளுடைய முகம் மலர்ந்தது. எதோ பேச வாயெடுத்தாள். பாவம், இதற்குள் தன் பூச்சோவின் நாடிகள் அடங்கி விட்டன; அவள் அந்திய காலம் நெருங்கி விட்டது; பேச முடியாமல் திணறினாள்; என்னை உற்றுப் பார்த்து விட்டுக் கண்களை மூடிக் கொண்டாள்; மூடிய கண்களைப் பிறகு திறக்கவே இல்லை. ஜப்பானிய யமன் மஞ்சூரியாவை விழுங்கப் போக, கால தேவன் தன் பூச்சோவை விழுங்கி விட்டான். அந்தத் துயரச் சம்பத்திலிருந்து விடுபட்டு ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். 

    வீடு வரும் வரையிலும், நானும் பூச்சோவும் வாழ்ந்த பள்ளிக்கூட வாழ்க்கை என் கண்முன்னே தென்பட்டது. 

    லுக்கான்சன் என்னும் அழகிய நகரம், அற்புத சௌந்தர்யம் நிறைந்த மலாய் நாட்டின் மத்தியில் இருக்கிறது. அந்த ஊரில் எல்லா தேசத்து மக்களும் வந்து குடியேறியிருக்கிறார்கள். பொதுவாக மலாய் நாட்டில் சீனர்கள் தான் அதிகம். டெலுக்கான்சனிலும் சீனர்களே அதிகமாய் வசிக்கின்றனர். 

    என்னுடைய மாமாவுக்கும் அங்கே ஒரு வட்டிக் கடை இருக்கிறது. மேற்படி கடைக்கு என் மாமா சுமார் பதினான்கு வருஷத்திற்கு முன்பு மலாய் நாட்டுக்குப் போகும் போது என்னையும் கூட்டிக் கொண்டு போனார். ஆங்கிலோசைனீஸ் ஸ்கூலில் அங்கு சேர்க்கப்பட்டு படித்துக் கொண்டிருந்தேன். 

    ஆண்களும், பெண்களும் சேர்ந்து · படிக்கும் பள்ளிக்கூடம் அது. பல தேசத்துக் குழந்தை களும் படித்ததால், அந்தந்த தேசத்துக் குழந்தைகள் அவரவர்கள் தேசத்துக்குரிய உடையுடன் பள்ளிக்கூடம் வருவார்கள். அந்தக் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக இருக்கும். 

    என் வகுப்பில் ‘தன்காக்கி’ என்ற சீன இளைஞன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். 

    ஒரு நாள் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தன்காக்கி மெதுவாக என்னுடன் பேச்சுக் கொடுத்தான். தன்காக்கியைப் ‘பேசாதே’ என்று எச்சரித்தேன்; அவன் கேட்க வில்லை. ஆசிரியர் கவனித்துவிடப் போகிறாரே என்ற பயத்தில், மற்றொரு முறையும் எச்சரித்தேன்; ஆசிரியர் நான் பேசியதைக் கவனித்து விட்டார். 

    அவர் ஒரு பொல்லாத பாதிரியார். கருணை மிக்க ஏசுநாதரின் சிஷ்ய ரென்றாலும், அவரைப் போன்ற கடுமையான சுபாவ முடையவர்களைக் காணமுடியாது. 

    “இங்கே வா” என்று உறுமினார். நான் ‘கிடுகிடு’ என்று நடுங்கிப் போனேன். கை கால்கள் நடுங்க, அவர் முன் சென்று நின்றேன். வேறு எந்த விசாரணையும் செய்யாமல், பிரம்பினால் என்னைப் ‘பளீர் பளீர்’ என்று நன்றாக விசாரித்து விட்டு, வகுப்புக்கு வெளியில் நிற்கச் சொன்னார். நான் வலி தாங்க முடியாமல் அழுது கண்ணீர் விட்டவாறு வெளியில் சென்று விட் டேன். நான் செய்யாத குற்றத்திற்கு, விசாரணை இல்லாமல் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைத்து விட்டது! அந்த வகுப்பிலிருந்த அத்தனை மாணவர்களும் மாணவிகளும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஏனெனில் நான் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்பவன். 

    பாவம், அவர்களால் என்ன செய்ய முடியும்? தன்காக்கி குனிந்ததலை நிமிரவில்லை. எனக்கோ அவன் பேரில் அபாரக் கோபமாக இருந்தது. 

    பள்ளிக்கூடம் விட்ட பிறகு, அந்தப் பயலை நொறுக்கி விடுவது என்று று முடிவு செய்து கொண்டேன். 

    ஒரு வழியாக நான் அழுது ஓய்வதற்கும், பள்ளிக்கூடம் விடுவதற்கும் சரியாக இருந்தது. அந்தக் கடுவம் பூனைப்பாதிரியார் அப்பால் சென்றதும், நான் ‘விடு விடு’ வென்று வகுப்புக்குள் நுழைந்தேன். உடனே என்னை மாணவர்களும், மாணவிகளும் சூழ்ந்து கொண்டார்கள். நான் அவர்களைத் தள்ளிக் கொண்டு சென்று தன்காக்கியின் சட்டையைப் பிடித்து இழுத்து,”உன்னால் தானே எனக்கு அடி விழுந்தது?” என்று சண்டைபிடித்தேன். அவனால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இதற்குள் ஒரு சீனப் பெண் அங்கு ஓடி வந்தாள். வந்தவள் என் கையைத்தள்ளி விட்டு, “ஏன் என் அண்ணனோடு சண்டை போடுகிறாய்?” என்று கேட்டாள். உடனே பக்கத்திலிருந்தவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள்; அதைக் கேட்டு அவளும் ரொம்பவும் பரிதாபப்பட்டாள்; நான் அடிபட்ட இடங்களில் தடவிக்கொடுத்தாள்; அப்போதே என் கோபம் எல்லாம் பறந்து போய்விட்டது. 

    தன்காக்கியையும் மிகவும் சினந்து கொண்டாள். பின்னர் என் கையையும், தன்காக்கிக் கையையும் ஒன்றாகச் சேர்த்து வைத்தாள். உடனே அங்கு கூடி இருந்த மாணவ மாணவிகள் கரகோஷம் செய்ய, எங்களுடைய நட்பு மீண்டும் தொடங்கியது

    எல்லோரும் வகுப்பை விட்டு வெளியே வந்தோம். தன்காக்கியின் கார் வந்திருந்தது. அதில் ஏறிக்கொள்ளும்படி தன்காக்கியும், அவன் தங்கையும் கெஞ்சினார்கள். நானும் காரில் எறிக் கொண்டேன். காரில் செல்லும்போது தன் காக்கியின் தங்கையைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்று கேட்டேன். “ஏன் என்னை உனக்குப் பிடிக்கிறதா?” என்று பதில் கேள்வி போட்டாள் அவள். 

    “ஓ எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது; அதனால்தான் கேட்கிறேன்” என்றேன். “என் பெயர் தன்பூச்சோ” என்று கூறிவிட்டுச் சிரித்தாள். நானும் இரண்டு மூன்று தடவை தன் பூச்சோ” தன் பூச்சோ” என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன். 

    “நீ ரொம்பக் கெட்டிக்காரன்: என்னை மயக்கி விட்டாயே!” என்று அவள் என் கன்னத்தில் ஒரு தட்டுத் தட்டினாள். 

    உடனே தன்காக்கி அவளைப் பார்த்து, “பாவம் இப்போது தான் என்னால் நன்றாக அடிபட்டு வந்திருக்கிறான், நீவேறு கன்னத்தில் அடிக் கிறாயே, வலிக்காதா?” என்றான் சிரித்துக் கொண்டே. 

    உடனே தன்பூச்சோ ‘கல கல’ வென்று சிரித்துவிட்டு, “அதெல்லாம் அந்தக் கடுவம் பூனைப் பாதிரியார் அடித்தால்தான் வலிக்கும்; நான் அடித்தால் வலிக்கவே வலிக்காது” என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்து “வலிக்க வில்லையே?” என்று கேட்டாள். நான் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன். அதற்குள் கார் அவர்களுடைய வீட்டை அடைந்தது. 

    அவர்களுடைய தகப்பனார் ரொம்ப சரள சுபாவம் படைத்தவராக இருந்தார். தன்பூச்சோ ஓடிப்போய் தன் அப்பாவின் கழுத்தைக் கட்டிச் கொண்டு, அப்பா! என்னுடன் ஒரு ‘கிள்ளங்கிப் பையன்’ வந்திருக் கிறான், பார்த்தாயா?” என்றாள். 

    தமிழர்களைப் பொதுவாக மலாய் நாட்டிலுள்ள வர்கள் ‘கிள்ளங்கி’ என்றுதான் அழைப்பார்கள். ஒருகாலத்தில் கலிங்கன் என்ற தமிழ் அரசன் மலாய் நாட்டின்மீது படை எடுத்ததன் காரணமாகத் தமிழர்கள் எல்லோரையும் மலாய் நாட்டில்வசிப்பவர்கள் “கலிங்கி, கலிங்கி ” என்று அழைத்து, அது கடைசியாகக் ‘கிள்ளங்கி’ என்று மருவி விட்டது! என்று சொல்லுகிறார்கள். 

    “இந்தக் கிள்ளங்கிப் பையன் யார்?” என்று தன்பூச்சோவின் தகப்பனார் கேட்டார். 

    தன்பூச்சோ கொஞ்சிக் கொண்டே நடந்த விவரத்தைச் சொல்லி என்னைப்போலவே அழுதும் காட்டினாள். பிறகு என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினாள். அப்பப்பா, ரொம்பப் பொல்லாத பெண் அவள்! 

    பிறகு தன் பூச்சோவும், தன்காக்கியும் என்னை என் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென் றார்கள். அது முதல் அவர்களிருவரும் தினமும் பள்ளிக்கூடம் போகும்போது என் வீட்டுக்கு வந்து என்னையும் காரில் அழைத்துச் செல்வது வழக்கமாயிற்று. நானும் அவர்களுடன் சந்தோஷமாகப் போவேன். பள்ளிக்கூடத்திலும் நாங்கள் மூவரும் ஒன்றாகவே திரிவோம். பள்ளிக்கூடம் விட்ட பிறகும் ஒன்றாகவே விளையாடுவோம். 

    பள்ளிக்கூடத்தில் ஒரு நாடக சபை உண்டு.

    மேற்படி சபையில் மாதத்திற்கு ஒரு முறை காடகம் போடுவார்கள். ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் அதில் நடிப்பார்கள். மேற்படி நாடகங்களை நாங்கள் மூவரும் தவறாமல் பார்த்து விட்டு வருவோம். ஒரு நாள் நடந்த நாடகத்தில் கிழவர் வேஷம் போட்ட ஒருவர் சரியாக நடிக்கவில்லை. இதை நான் தன்பூச்சோவிடம் சொன்னேன். அவள் உடனே, “இதைவிட நீ நன்றாக நடித்து விடுவாயோ?” என்று என்னைக் கேலி செய்தாள். “சரி வீட்டுக்கு வா, நன்றாக நடித்துக் காண்பிக்கிறேன்” என்று சொன்னேன். வீட்டுக்குப் போனவுடன், தன்பூச்சோ “எங்கே, நடி பார்க்கலாம்” என்று என்னைத் தூண்டினாள். எனக்கோ ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே அவளுக்கும், தன்காக்கிக்கும் கிழவனாக நடித்துக் காண்பித்தேன். என்னை அறியாமல் என்னுடைய நடிப்பு நன்றாக அமைந்து விட்டது. தன் பூச்சோவும், தன்காக்கியும், ஒரே அதிசயத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்

    மறுநாள் வழக்கம் போல மூவரும் பள்ளிக்கூடம் சென்றோம். தன்பூச்சோ பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தவுடன், மான் குட்டி போலத் துள்ளிக் கொண்டு தன் தோழிகளிடம் ஓடினாள். அவர்கள் எல்லோரும் அவளை நோக்கி, “என்ன, அவரை விட்டு விட்டு ஓடி வந்து விட்டாயே, ஐயோ பாவம்! அதோ பார், நீ அருகில் இல்லாமல் தவிக்கிறார்” என்றெல்லாம் கேலி செய்தார்கள். பூச்சோ அதையெல்லாம் லட்சியம் செய்யாமல், அவர்களிடம் என் நடிப்பைப்பற்றிப் பிரமாதமாகக் கூற ஆரம்பித்து விட்டாள். அவ்வளவுதான்! மற்றப் பெண்கள் அனைவரும் என்னிடம் படை எடுத்து வந்துவிட்டார்கள். அவர்களில் ஸ்வீடிஷ் தேசத்துப் பெண்ணும் ஒருத்தி. ரொம்பவும் வாயாடி. அவளுக்கு யாரை யாவது பரிகாசம் பண்ணாமலிருந்தால் தலை வெடித்துப்போகும். எல்லோரையும் தள்ளிக் கொண்டு அவள்தான் முன்னே வந்தாள். 

    “ஐயா நடிக சிகாமணியே! தங்களுடைய புகழைத் தன்பூச்சோ சொல்லக் கேட்டோம்; எங்கள் மீதும் கொஞ்சம் கருணைவைத்து நடித்துக் காட்டக் கூடாதா?” என்று கொஞ்சுவது போல் பாவனை செய்து, என் முகவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டாள். உடனே எல்லா மாணவிகளும் கை தட்டி ஆரவாரம் செய் தார்கள். எனக்கோ வெட்கமாகப் போய் விட்டது. தன்காக்கியைப் பரிதாபமாகப் பார்த் தேன். அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு விட்டான். எல்லோருமாகச் சேர்ந்து தூண்டியதுடன், தன்பூச்சோவும் வேறு ஒரு வருக்கும் தெரியாமல் தன் கண்களைச் சிமிட்டி அவசியம் நடிக்க வேண்டுமென்று ஜாடை காட்டினாள். 

    தப்புவதற்கு வேறு வழியின்றி கிழவனாக நடித்துக்காண்பித்தேன். சொந்தக் கற்பனைகளைக் கொஞ்சம் சேர்த்து, முன் தினத்திற்கு அதிகப் படியாகவே நடித்தேன். சுற்றியிருந்த பெண்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆனந்த பரவசமடைந் தனர்

    ஒவ்வொருவரும் என்னைக் கையைப் பிடித்துக் குலுக்கி, அளவுக்கு மீறிப் புகழ்ந்தார்கள். அவர்கள் புகழும்போது என்னைவிடப் பூச்சோவிற்குத்தான் பிரமாத மகிழ்ச்சி ஏற்பட்டது. இதை அவள் முகம் எடுத்துக் காட்டியது; அவள் பூரித்துப் புளகாங்கிதமடைந்து போனாள். நான் இப்படிக் கீழே நடித்துக் கொண்டிருந்ததை மேல் மாடியிலிருந்த பிரின்ஸிபால் கவனித்து விட்டார் போலும்! 

    அந்த பள்ளிக்கூடத்தில் பிரின்ஸிபாலாக இருந்த வருடைய முகத்தில் நாங்கள் ஒரு நாளும் சிரிப்பைக் கண்டதே யில்லை ! நாங்கள் ஏதாவது குற்றம் செய்தால் எங்களை அடிப்பதற்காக மட்டுமே அந்தப் பிரின்ஸிபாலை நியமித்திருக்கிறார்கள் என்றுதான் மாணவர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஏனெனில், அடிபட வேண்டிய நேரம்தவிர, வேறு எந்த நேரத்திலும் அவரை நாங்கள் சந்திக்க முடியாது. ஆகையால் பிரின்ஸிபால் என்றால் எங்களுக்கெல்லாம் ‘அடிகொடுப்பவர்’ என்றுதான் நாங்கள் எண்ணிக்கொண்டிருந்தோம். 

    பள்ளிக்கூடத்துப் பணியாள் வந்து என்னைப் பிரின்ஸிபால் கூப்பிடுகிறார் என்று சொன்னதும், எனக்குச் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது

    “சரி, நாம் பள்ளிக்கூடத்தில் எல்லோருக்கும் மத்தியில் நடித்துக் கூத்தாடியதற்குத் தண்டனை கொடுக்கவே பிரின்ஸிபால் கூப்பிடுகிறார்” என்று பயந்து போனேன். முன்பு ஒரு சமயம் தன்காக்கியினால் நன்றாக அடிபட்டது என் ஞாபகத்திற்கு வந்தது. இப்பொழுது அவன் தங்கை யினால் நன்றாக அடிபடப் போகிறேன். 

    தன் பூச்சோவுக்கும் துக்கம் தாங்க முடியாமல் அழ ஆரம்பித்து விட்டாள். அதற்குள் சேவகன் என்னைப் பரபரவென்று பிரின்ஸிபாலிடம் இழுத்துக்கொண்டு போனான். அப்பொழுது தன் பூச்சோ ‘ஓ’ வென்று ஒரே சத்தமாகக் கூப் பாடு போட்டாள். அதைக் கேட்டு அவளுடைய தோழிகளும் மற்ற மாணவ, மாணவிகளும் அவளைச் சுற்றிக் கூடிவிட்டார்கள். 

    நான் பிரின்ஸிபால் அறையின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தேன். 

    “இது என்ன கூச்சல்?” என்று அதிகாரத் தொனியில் கேட்டார் பிரின்ஸிபால். 

    உடனே தன் பூச்சோ முன்னேவந்து, “நாங்கள் எல்லோரும்தான் அவரை நடிக்கச் சொன்னோம். ஆகையால் குற்றவாளி நாங்கள் தான். எங்களைத் தான் தண்டிக்க வேண்டும்” என்றாள். 

    பிரின்ஸிபால் தன் மூக்குக் கண்ணாடியைக் கை யால் தூக்கிவிட்டுக்கொண்டு, தன் பூச்சோவை வேடிக்கையாகப் பார்த்துவிட்டு, “எதற்காக உங்களைத் தண்டிக்க வேண்டும்?” என்றார். 

    “நாங்கள் கேட்டுக் கொண்டதால் தான் அவர் நடித்தார்; ஆகையால் எங்களைத்தானே தண்டிக்கவேண்டும்?” என்றாள் தன் பூச்சோ. 

    “நான் யாரையும் தண்டிக்க விரும்பவில்லையே!என்றார் பிரின்ஸிபால். 

    இதைக் கேட்டவுடன் அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகள் ஒருவரை யொருவர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டனர். 

    பின் ஏன் அவரை இங்கு இழுத்துவரச்சொன்னீர்கள்?” என்று தன் பூச்சோ கேட்டாள். 

    “நான் இழுத்து வரச் சொல்லவில்லை, அழைத்துக் கொண்டுதான் வரச் சொன்னேன்; அவன் மிகவும் நன்றாக நடிக்கிறான்; சிறந்த நடிகன் ஒருவன் நமது பள்ளிக்கூடத்தில் இருப் பதை இன்றுதான் அறிந்தேன்; அவனை நமது நாடகம் ஒன்றில் நடிக்கச் செய்யவேண்டு மென்பதற்காகவே கூட்டி வரச் சொன்னேன்” என்றார். இதைக் கேட்டு நானும், தன் பூச்சோவும் மற்றவர்களும் திகைத்துப் போனோம். 

    இது வரையில் பிரின்ஸிபாலின் அறைக்குச் சென்ற மாணவன் அடிபடாமல் திரும்பி வந்தது அந்தப் பள்ளிக்கூடத்துச் சரித்திரத்திலேயே அதுதான் முதல் தடவை. ஒரு நொடியில் அங்கு கூடியிருந் தவர்களின் முகங்களெல்லாம் மலர்ந்தன. “ஹிப் ஹிப் ஹுரே” என்று கோஷம் போட்டார்கள். தன்பூச்சோ ஓடி வந்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். 

    மறுநாள் பிரின்ஸிபால் ற்பாடு செய்த நாடகத்துக்கு ஒத்திகை ஆரம்பமாயிற்று. மேற்படி நாடகத்துக்கு பிரின்ஸிபால் எனக்குக் கதாநாயகன் வேஷம் கொடுத்து நடிக்கச் செய்தார். கதாநாயகியாகத் தன்பூச்சோ நடிக்கத் தான கவே முன் வந்தாள். அந்த வருஷம் மாணவர்களால் நடிக்கப்பட்ட நாடகத்துக்கு ஊர்ப்பிரமுகர்களும், மாணவர்களுடைய பெற்றோர்களும் விஜயம் செய்தார்கள். என்னுடைய நடிப்பையும், தன் பூச்சோவின் கானத்தையும் கேட்டுச் சபையோர் சொக்கிப் போனார்கள். 

    கடைசியில் நானும் தன் பூச்சோவும் காரில் வீட் டுக்குச் சென்றோம். அப்போது பூச்சோ சொன் னாள் “இன்று நாம் நடித்தது நாடகத்திற்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் என்றும் உனக்கு ‘நான்’தான் எனக்கு ‘நீ’தான் என்று சொல்லிச் சிரித்து என்னுடன் நெருங்கி உட்கார்ந்தாள். 

    இந்தச் சம்பவங்கள் யெல்லாம் மாறி மாறி என் மனதில் தோன்ற பித்துப் பிடித்தவன்போல வீடு வந்து, சேர்ந்தேன். 

    என் மாமா. “என்னடா ஒரு மாதிரியாக இருக்கிறாய்?” என்று கேட்டார். “ஒன்றுமில்லை மாமா, ஊர் ஞாபகம் வந்து விட்டது; நான் அடுத்த கப்பலுக்குப் புறப்படவேண்டும்என்று கூறினேன். 

    “இது என்னடா, அதிசயமாக இருக்கிறது! உன்னுடைய சீனத்துச் சிங்காரியை விட்டு விட்டுப் போக எப்படி மனந்துணிந்து விட்டாய்?” என் று கேட்டார். 

    “ஆம் மாமா, அவள் என்னைவிட்டுப் பிரிந்து போய் விட்டாள் இனி எனக்கு இங்கென்ன வேலை?” என்று நான், பதில் கூறியபோது என் குரல் தளதளத்தது. கண்களில் நீர் பொங்கி வந்தது. 

    – சீனத்துச் சிங்காரி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 1950, தமிழ்ப் பண்ணை லிமிடெட், சென்னை.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *