பஞ்சதந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 26,986 
 

“அஷோக் இப்ப நீ எங்க இருக்க”

“என்னோட ஸ்டேஷன்ல தான், ஏன் ஏதாவது அவசரமா?”

“ஆமா, இப்ப வந்தா உன்னை பாக்கமுடியுமா?”

“வாடா, என்ன இப்ப மணி பத்தாவுது ஒரு ஹாஃப் அன் அவர்ல வந்துடுவியா?”

“வறேன் அஷோக்”

மொபைலை கட் செய்த பிரஷாந்த் அருகிலிருந்த தன் நண்பரிடம் சொன்னான். “கவலைப்படாதீங்க மதி, ஏ.சி அஷோக் என்னோட ஃப்ரெண்ட்தான், கண்டிப்பா உங்க பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்”

“ அவர் என்ன சொல்றாருன்னு பாப்போம்”

இருவரும் ஒரு அறை மணி நேரத்தில் அஷோக்கின் முன் அமர்ந்திருந்தனர்.

“சொல்லு ப்ரஷாந்த், என்ன திடீர் விஜயம், யார் இவர் ”

“என்னோட ஃப்ரெண்ட் பேரு மதி, ‘உண்மை’ டி.வி பாத்திருக்கியா? அதோட எடிட்டர். “

“வணக்கம் சார். சாரி நான் ரொம்ப டிவியெல்லாம் பாக்குறதில்லை. சொல்லுங்க என்ன விஷயம்?” என்றான்.

சற்று தயங்கிய மதி, “எனக்குத் தெரியாம என் பேரில ஒருத்தன் க்ரெடிட் கார்ட் எடுத்து யூஸ் பண்ணிட்டிருக்கான், கார்டை ப்ளாக் பண்ணிட்டேன்., விசாரிச்சதுல ரெண்டு மூணு பேர் இதுமாதிரி பாதிக்கப்பட்டிருகாங்க, லோக்கல் போலிஸ் ஸ்டேஷன்ல சொன்னதுக்கு, உங்க பணம் திருடு போகலியே. நீங்க பணம் கட்டாதீங்க சம்மந்தபட்ட பாங்க் தானா வந்து கம்ளைன்ட் பண்ணும்ன்றாங்க”

“ஒ அந்த இஷ்யுவா, அவங்களே கரெக்டா தான் சொல்லிருக்காங்க ஃபோன்ல விஷயத்தை சொல்லிருந்தா நானே வரவேண்டாம்னு சொல்லிருப்பேன் பிரஷாந்த், சம்மந்தபட்ட ஆளு நம்ம ஏரியாதான், பேரு சிங்காரம், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு உள்ளவர்” என்று இழுத்தார் அஷோக்.

“என்ன அஷோக் இப்படி காலை வாரி விடறியே, நான் வேற உன்னைப்பத்தி நிறைய பில்டப் பண்ணி இவரை கூட்டிட்டு வந்திருக்கேன்,” அலுத்துக்கொண்டான் பிரஷாந்த்.

“அந்த ஸ்டேஷன்ல சொல்ற மாதிரி செய்யலாம் ஆனா சிபில் ரேட்டிங் போயிருச்சுன்னா அப்புறம் பேங்க் லோன் எதுவும் வாங்க முடியாது, அதுவுமில்லாம வேற யாருக்கும் இது மாதிரி நடந்துடக் கூடாது, அது தான் என் கவலை”

சிறிது நேரம் யோசித்த அஷோக் “நீங்க சொல்றதும் நியாயம் தான், நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நான் சொல்ற மாதிரி செஞ்சிங்கன்னா ஒரு கேம் விளையாடி பாக்கலாம்”

“சொல்லுங்க எது வேணா செய்றேன்” என்றார் மதி

“சொல்லு அஷோக் என்ன பண்ணனும்”

“இங்க வேணாம் பக்கத்தில ஒரு காஃபி ஷாப் இருக்கு அங்க போய்டலாம்.”

மூவரும் அருகிலிருந்த காஃபி ஷாப்புக்கு சென்றனர். மெலிதான இசை குளிரூட்டப்பட்ட சூழலில் ரம்மியமாக இருந்தது. காஃபி சாப்பிட்டுகொண்டே அஷோக் பேச ஆரம்பித்தார்.

“ரெண்டு பேரும் நான் சொல்றதை கவனமா கேளுங்க, பிரஷாந்த் முதல் காரியமா நீ என்ன பண்ற, நான் சொல்ற ரெண்டு நம்பர்க்கு வழக்கமா பாங்க்லேர்ந்து இ எம் ஐ கட்டலேன்னா அனுப்புவாங்களே அந்த மாதிரி எஸ் எம் எஸ் அனுப்பணும்.

“ஓகே, யாரோட நம்பர்”

“ஒண்ணு கமிஷனரோடது, இன்னொண்னு டி.ஜி.பியோடது.”

“என்னப்பா பிரச்சினையை தீர்த்துவைன்னா ஊதி பெரிசாக்கரே வம்புல மாட்டி விடறே,” பதறினான் ப்ரஷாந்த்

“இன்னமும் நான் ஆரம்பிக்கவேயில்ல அதுக்குள்ள இப்படி பதர்றே, பேசும்போது என்னமோ பொது நலம், சமூக அக்கறைன்ன, இப்ப பின் வாங்கறே”

“அதில்லை நாளை பின்ன ஏதும் பிரச்சினை வராதே?”

“பிரச்சினைன்னு வந்தா சமாளிக்கவேண்டியதுதான், முடியுமா? முடியாதா? சட்டுன்னு சொல்லு”

“சரி, தெரிஞ்ச பையனிருக்கான், இந்த மாதிரி தில்லாலங்கடி சமாச்சாரத்தில எக்ஸ்பர்ட், சொன்னா நம்ப மாட்டே, பையன் என்ன படிச்சிருப்பான் நினைக்கிறே?

“ஐ ஐ டி ட்ராப் அவுட்?”

“இல்ல எட்டாங்கிளாஸ் ஸ்கூல் ட்ராப் அவுட், கம்பியூட்டரை பிரிச்சு மேய்ஞ்சிருவான், செம ப்ரில்லியன்ட், சரி என் சைட் ஒகே, அவர்க்கு என்ன வச்சிருக்க?”

“நீங்க என்ன பண்றீங்க அந்த எஸ் எம் எஸ் அனுப்புன கொஞ்ச நேரத்தில உங்க டி வில நான் சொல்ற மாதிரி ஃப்ளாஷ் நியூஸ் போடணும்”

“என்னன்னு சொல்லுங்க, என்ன சொல்லப்போறிங்களோன்னு நெஞ்சு பக்கு பக்குன்னு அடிச்சுக்குது?”

“முதல்வர் அக்கவுன்டையும் ஹேக் செய்து காட்டுவேன் கிரெடிட் கார்ட் மோசடி மன்னன் பகிரங்க சவால்”னு உங்க டி வில ஃப்ளாஷ் நியூஸ் வரணும்.

“என்ன சார் இது அடுத்த அதிரடி, இதெல்லாம் சரியா வருமா?”

“என் மேல நம்பிக்கை இருந்தா செய்யுங்க, இல்லாட்டி விட்டுடுங்க, தட்ஸ் ஆல்… . கூல்”

“அது சரி, ஆதாரம் இல்லாம நாங்க எந்த நியூஸும் போட முடியாதே?”

“பிரஷாந்த், அந்த பையனை விட்டு அவங்க டி.விக்கு ஃபேக் ஐ டிலேர்ந்து இமெய்ல் அனுப்ப சொல்லு, நான் சொல்ற அட்ரஸ்க்கு பக்கதில இருக்குற நெட் சென்டர்லேர்ந்து ” என்று சிங்காரத்தின் விலாசத்தைக் கொடுத்தார்.

“குட் ஐடியா அனுப்பசொல்றேன், நாளைக்கு எதாவது பிரச்சினைன்னா நீ பார்த்துப்பேயில்ல?”

“அது அப்புறம் பாக்கலாம், சொன்ன வேலை எப்ப முடியும்?”

“இமெய்ல் கிடைச்ச கொஞ்ச நேரத்தில ந்யூஸ் போட்டுடலாம், அதுல ஒண்ணும் சிறமமில்லை”

“அப்ப எல்லாம் முடிஞ்சதும், சாயந்திரம் ரெண்டு பேரும் என்னை வந்து பாருங்க” என்று விடை கொடுத்தார் அஷோக்.

அஷோக் லன்ச் முடிந்து, ரவுண்ட்ஸ் முடிந்து மாலை நாங்கு மணிக்கு தன் சீட்டுக்கு வந்தார். அவர் சீட்டில் அமர்வதற்கும் கமிஷ்னரிடமிருந்து கால் வருவதற்கும் சரியாக இருந்தது. எடுத்து பேசினார்,

“எஸ் சார், அஷோக் தான் பேசரேன்”

“நியூஸ் பாத்திங்களா?”

“இல்லை சார், ரவுண்ட்ஸ்ல இருந்தேன், இப்ப தான் வைஃப் ஃபோன் பண்ணி சொன்னாங்க, ஃபேக் நியூஸாயிருக்கும் சார்”

“இல்ல அஷோக் எனக்கே எஸ் எம் எஸ் வந்துச்சு, இ எம் ஐ கட்டலைன்னு, சிம்பிளா எடுத்துக்க முடியாது”

“அய்யோ அப்ப அது நிஜமான நியூஸா? இப்ப என்ன சார் செய்றது?” போலியாய் அதிர்ச்சி காட்டினார் அஷோக்.

“வேற என்ன பாண்றது சிங்காரத்தை கஸ்டடில எடுக்கவேண்டியதுதான், உங்க ஏரியா தானே?”

“ஆமா சார் என் ஏரியா தான் , நாளைக்கு அவர் கட்சிலேர்ந்து எதாவது பிரச்சினைன்னா?”

“அதை அப்புறம் பாக்கலாம், நாளைக்கு அவன் சொன்னா மாதிரி செஞ்சிட்டா நிலைமை விபரீதமா போயிடும்”

“சரி சார் உடனடியா ஆக்ஷன் எடுக்கறேன்”

எதிர்பார்த்த உத்தரவு வந்ததால் அதிரடியாக களத்தில் இறங்கினார் அஷோக். ஒரு மணி நேரத்தில் சிங்காரம் லாக்கப்பில் இருந்தான். வழக்கமான போலிஸ் ட்ரீட் மென்ட் ஆரம்பித்தனர்.
செய்தியை தெரிந்துகொள்ள பிரஷாந்தும், மதிவும் மாலை வந்திருந்தனர். அஷோக் அவர்களிடம் ஆறுதல் சொன்னார்.

“கவலைப்படாதீங்க சார், ஆளை அமுக்கிட்டோம், ஆமா உங்களுக்கு மொத்தம் எவ்ளோ லாஸ்?”

“லாஸெல்லாம் இல்லை சார், இன்னொரு விஷயம் நாளைக்கு அவன் நான் எஸ் எம் எஸூம், இமெயிலும் அனுப்பலைன்னு சொல்லிட்டா”

“உங்க கவலை உங்களுக்கு, சரி கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணுங்க, வேடிக்கை பாருங்க” என்று டேபிளில் இருந்த ஃபைல்களில் கவனம் செலுத்தினார் அஷோக்
சிறிது நேரத்தில் உள்ளே வந்த ஏட்டு, “ சார் செஞ்ச எல்லாத்தையும் ஒத்துகிட்டான், ஆனா இமெயில், எஸ் எம் எஸ் எதுவும் அனுப்பலைன்னு சாதிக்கிறான்”

“என்ன சார் எவ்ளோ பேரை பாத்திருகோம், எந்த குற்றவாளி ஆரம்பத்திலேயே செஞ்ச எல்லா தப்பையும் ஒத்துகிட்டிருக்கான், பேருக்கும், புகழுக்கும் ஆசைபட்டு செஞ்சிருப்பான், அதையே ஸ்டேட்மென்டா எழுதிவாங்கிடுங்க, பெரிய எடத்து பிரச்சினை, தேவைப்பட்டா தேர்ட் டிகிரி கூட கொடுங்க பாத்துக்கலாம்”

“அதில்லை சார் அவன் வக்கீல் கிட்டே பேசணுமாம்”

“அதெல்லாம் முடியாதுன்னு சொல்லுங்க, மீடியா வரைக்கும் நியூஸ் போயிருச்சு, சட்டு பட்டுன்னு எழுதி வாங்குங்க” என்றவர் அவர் வேளியே சென்றவுடன்,

“ச்சே.. ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு” என்றார்

“ஏன் என்னாச்சு”

“அவன் வக்கீலை பத்தி முன்னமே யோசிச்சிருந்தா அவருக்கும் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி சேம் சைட் கோல் போட வச்சிருக்கலாம், அவசரத்தில ப்ளான் பண்ணா இப்படித்தான், சரி விடுங்க அதையும் சமாளிப்போம்”

“ரொம்ப தாங்க்ஸ்” என்றார் மதி

“ப்ரஷாந்துக்காக இது கூட செய்யலைன்னா எப்படி”

“வறேன் அஷோக்”

“போலிஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் வந்துட்டு, வறேன்னு சொல்லகூடாது, டைம் ஆயிருச்சு நானும் கிளம்ப வேண்டியதுதான்” என்று அவரும் அவர்களுடன் வீட்டிற்கு புறப்பட்டார், ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த போது, யார் வீட்டிலோ நியூஸ் ஒடிகொண்டிருந்தது. “ஸ்காட்லாண்ட் யார்டுக்கு நிகரான நமது காவல் துறை – செய்தி வெளிவந்த சில மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்ட காவல்துறைக்கு முதல்வர் பாராட்டு”

ஒருவரை ஒருவர் பார்த்து நக்கலாக சிரித்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *