வருவாள், காதல் தேவதை…

2
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 11,651 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30

அத்தியாயம்-21 

விழிக்க மாட்டீர்கள் வியாபாரிகள் நீங்கள்! பணங்காய்த்தால் மட்டுமே நீங்கள் மரம் பார்ப்பீர்கள். வைரத்துண்டுகள் விழுந்தால் மட்டுமே நீங்கள் மழை பார்ப்பீர்கள். தங்கம் வழிகிறது என்று தகவல் வந்தாலொழிய நீங்கள் தளிர் பார்க்க மாட்டீர்கள். (சிகரங்களை நோக்கி-வைரமுத்து) 

பத்து நாளும் சம்பத் காலையில் வந்து இரவில் வீடு திரும்பினார். அம்மாவின் அடக்குமுறையால் சங்கீதாவாலும் அங்கு தங்க முடியவில்லை. சாரதா ஊர் வாய்க்கு பயந்து முதல் நாள் ஒரு அரை மணி வந்து இருந்ததோடு சரி. அன்றும் கூட அதிகம் பேசவில்லை. அவளோடும் யாரும் பேச முயற்சிக்கவுமில்லை. பத்தாவது நாள் காரியத்திற்குக் கூட அவள் வரவில்லை. சம்பத்தோடு சங்கீதாவும் ஆகாஷும் வந்து அன்று முழுக்க அங்கிருந்தார்கள். 

சாயங்காலத்திற்கு மேல் சங்கீதாவை அழைத்துக் கொண்டு ஆகாஷ் கிளம்பினான். 

”நாமளும் கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம் வா சரண்” மாமா அழைக்க சரண்யா உடனே கிளம்பினாள். சத்யா டயர்டாக இருக்கிறது என்று சொல்லி வீட்டிலேயே தங்கிவிட்டாள். 

“நீங்க வாக்கிங் போக கூப்ட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு மாமா எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமார்ந்துது.” 

“என்ன விஷயம்?” 

“அக்காவும் மாமாவும் அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப நல்லவங்கதான். இருந்தாலும் முழுக்க முழுக்க நா அங்கயே போய் இருக்கறது எந்த அளவுக்கு சரிப்படும்னு எனக்கு தெரியல. தூரத்து பச்சைதான் என்னிக்கும் குளுமை. கிட்டப் போணுமான்னு யோசிக்கறேன்.” 

“போகாம் … தனியாவா இருப்ப…?” 

“எங்கயாவது ஹாஸ்டல்ல என்னை சேர்த்து விட முடியாதா மாமா…?” 

“இந்த வார்த்தையை சத்யாகிட்டயும் அவ  புருஷன்கிட்டயும் சொன்னா அவங்க எவ்ளோ வருத்தப்படுவாங்கன்னு யோசிச்சயா சரண்?” 

“நிச்சயம் வருத்தப்படுவாங்கதான். ஆனா அதே நேரம் அவங்களுக்கு பாரமாய்டக் கூடாதுங்கற என் எண்ணத்தை புரிஞ்சுக்கிட்டா வருத்தத்துக்கு இடமேயில்லையே!” 

”நா எது சொன்னாலும் கேப்பயா சரண்?” 

“சொல்லுங்க மாமா” 

“நல்லவங்களை நமக்கு தெரியாம கூட காயப்படுத்தக் கூடாது சரண். என்னோட அபிப்ராயம். நீ சத்யாவோட போய் இருக்கறதுதான் எல்லா விதத்துலயும் உனக்கு நல்லது. நீ ஹாஸ்டல்ல போய் தங்கினா, ஊர், அவங்களைத்தான் தப்பா பேசும். அதுக்கு இடம் கொடுக்கலாமா. நீ? எதைப்பத்தியும் நீ இப்போ குழப்பிக்காம அவங்க வீட்ல போய் இரு சரண். 

உன்னால் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரப் போறதில்ல. நீ என்ன குழந்தையா பிரச்சனை கொடுக்க..? எங்க இருந்தாலும் அந்த சூழலுக்கு ஒத்துப்போய் நடந்துக்கற பக்குவம் உங்கிட்ட இருக்கும்போது என்ன பிரச்சனை வந்துடப் போறது? பணம் கூட ஒரு பிரச்சனையாகப் போறதில்ல. மாசா மாசம் உன் செலவுக்குன்ன தொகையை நா குடுத்துடறதா இருக்கேன். தவிர ஆக்ஸிடென்ட் கேஸ்ங்கறதால நஷ்ட ஈடா ஒரு தொகை வாங்கவும் ஆகாஷ் முயற்சி பண்ணிட்ருக்கான். அந்த பணம் உன்னோட மேல் படிப்புக்கு உதவியா இருக்கும். அதனால இப்போதைக்கு எந்த கவலையுமில்லாம, படிப்புல மட்டும் கவனம் செலுத்து. என்னல்லாம் கத்துக்கணும்னு நினைக்கறயோ கத்துக்க. எப்பொ எந்த உதவி வேணும்னாலும் எனக்கோ ஆகாஷ்க்கோ போன் பண்ணு. இதையெல்லாம் மீறி பிரச்சனைன்னு உனக்கு ஏதாவது அங்க ஏற்பட்டால்… எதுவும் ஏற்படாது.. அப்டி ஏற்பட்டால்… அப்பொ ஹாஸ்டலைப் பத்தி யோசிப்போம் சரியா?” 

மாமா சொல்வதும் சரிதான் என்று தோன்றியது. அதற்கு மேல் அதைப்பற்றி பேசவில்லை. “நீங்க சொல்றாப்பல சத்யா வீட்டுக்கே போயிடறேன் மாமா. அதான் சரி” என்றாள்.

“குட்… இப்பொ குழப்பம் எதுவுமில்லையே” 

“இல்ல” 

“வீட்டுக்குப் போலாமா? ரொம்ப தூரம் நடந்துட்டோம்.”

அவர்கள் திரும்பி நடந்தார்கள்.

அதற்கடுத்த வாரம், தேவையில்லாத சாமான்களையும் வந்த விலைக்கு கடையில் போட்டு விட்டு முக்கியமான வற்றை மட்டும் வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டை காலி செய்து கொண்டு கிளம்பினார்கள்

வீட்டைப் பூட்டும்போது அழுகை வந்தது. நினைவு தெரிந்த நாளாய் வளைய வந்த வீடு, அப்பாவோடு சிநேகமாய் உட்கார்ந்து எவ்வளவோ விஷயங்கள் பேசிய இடம்!

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்ற சங்கப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. நாடு, வீடு, தந்தை எல்லாவற்றையும் இழந்த ராஜகுமாரிகளின் சோகம்தான் இன்று அவளுக்குள்ளும் நிறைந்திருக்கிறது. அன்றொரு நாள் இதே வெண்ணிலவு நேரத்தில் அப்பா இருந்தார். அரண்மனை இருந்தது.அரசாள நாடிருந்தது. இன்று நிலவு மட்டும் இருக்கிறது. மற்ற எதுவும் இல்லை.. சோகத்தை இவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியுமா? சோகத்திலும் வியப்பேற்பட்டது அவளுக்கு. அப்பாவை இழந்து, வீட்டை காலி செய்து கொண்டு கிளம்ப வேண்டிய நிலை தனக்கேற்படும் என்று பதினைந்து நாளுக்கு முன் நினைத்திருப்போமா?’

“வா சரண்..!” பூட்டிய கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்ற தங்கையை அழைத்துக் கொண்டு வேனில் ஏறினாள் சத்யா. 

“என்ன ஆண்ட்டி தனியா சாப்பிடறீங்க” சற்று லேட்டாக வீடு திரும்பிய சுஜிதா தனியே சாப்பிட்டுக் கொண்டிருந்த சாரதாவின் அருகில் வந்து அமர்ந்தாள். 

“பத்து நாளா எம்புருஷனுக்கும் பிள்ளைக்கும் அங்கதானே சாப்பாடு! பத்து நாளாவே தனியாதான் சாப்ட்டுட்ருக்கேன். நீ காலேல போனா ராத்திரிதான் வர. வர வர இந்த வீட்ல என்னை யாரும் சட்டையே பண்றதில்ல சுஜி..” 

“என்னையும் சேர்த்துதான் சொல்றீங்களா?” 

”ச்சேச்சே நா உன்னைச் சொல்லலம்மா எம் பசங்களைச் சொன்னேன்.”

“ஹாய் சுஜி…இப்பதான் நீயும் வந்தயா?”ஆகாஷின் குரல் கேட்க சுஜி எழுந்தாள். 

“சாப்ட்டயா நீ?” 

“இப்பதான் வந்தேன். இனிமேதான், ஏன் ஆகாஷ் அம்மாவை யாருமே கவனிக்கறதில்லையாம். அத்தை எவ்ளோ வருத்தப்படறாங்க பாருங்க.” 

”யார் கவனிக்கல? எப்பவும் போலதானே நாங்க இருக்கோம்.” 

”ஒண்ணு சொன்னா வருத்தப்பட மாட்டீங்களே?” 

“என்ன?” 

”சொந்தக்காரங்க தேவைதான். அதுக்காக பத்து நாள் ராப்பகலா அங்கேயே கிடக்கறது நல்லாவா இருக்கு? அத்தை மனசை நோக விட்டுட்டு என்ன வேண்டியிருக்கு மத்த உறவு?” 

”ஒருத்தருக்கொருத்தர் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ள உதவிக்கறதுக்குதான் தெய்வம் உறவுகளை உருவாக்கி இருக்கு. நாளைக்கு நமக்கும் கஷ்டம் வரலாம். நாலு பேர் உதவி தேவைப்படலாம். எப்பவும் இப்டியே இருந்துட மாட்டோம்.” 

”சரி… அதுக்காக அம்மாவை அலட்சியப்படுத்தி பேசறது சரியா?” 

“யார் அப்டி பேசினாங்க இப்பொ?” 

“நீங்க பேசல, உங்கப்பாவும் தங்கையும் பேசறாங்க. அத்தையை அழ வெக்கறாங்க. அதெல்லாம் தப்புன்னு நீங்கதான் அவங்ககிட்ட சொல்லணும்.” 

“அப்டி என்ன இப்பொ இங்க பிரச்சனை? உப்புப் போறாத விஷயத்தையெல்லாம் பெரிசாக்கறதே உனக்கு வேலையாப் போச்சும்மா.” 

“நா சொல்லல சுஜி. அவங்க மூணு பேரு ஒரே கட்சிதான். அப்டி என்னதான் அந்த வீடு வசியம் போட்டுதோ.. இப்டி போய் எல்லாத்தையும் அங்க கொட்டிட்ருக்காங்க.” 

”எதுக்கும்மா நீ இப்பொ வார்த்தையைக் கொட்ற?”

“ஆமாண்டா நா வாயைத் திறந்தாலே உங்களுக்கெல்லாம் குத்தம்தான்.” 

“நீ எதுக்கு இப்படி கத்தறன்னே எனக்கு புரியல. நா மேல போறேன்.” 

ஆகாஷ் விறுவிறு என்று மாடிக்குப் போனான்.

”என் நிலைமையைப் பார்த்த இல்ல சுஜி. என்னைவிட அந்த பொண்ணு முக்கியமாப் போய்ட்டா இவங்களுக்கு! இவங்க கேக்கறப்ப எல்லாம் வாயப் பொத்திக்கிட்டு பணத்தை எண்ணிக் கொடுக்க மட்டும்தான் நான். இன்னும் கொஞ்ச நாள் இப்டியே போச்சுன்னா அவளை சட்டமா இந்த வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுவாங்க. என் இடுப்புலேர்ந்து சாவிக் கொத்தைப் பிடுங்கி அவ இடுப்புல சொருகினாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல. அப்பவும் நா ஏன்னு வாயைத் திறந்துடக் கூடாது.” 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது ஆண்ட்டி. நீங்க அனாவசியமா பயப்படறீங்க?” 

“இல்ல சுஜி.. இதான் நடக்கப் போவுது பார்” 

“அப்படியே நடந்தாலும் நாம என்ன செய்ய முடியும்?” 

“அவர் திட்டம் வேற சுஜி. அந்த திட்டத்தை முறியடிக்கணும்னா ஒரே வழி, உங்க கல்யாணம் சீக்கிரம் நடந்து, இந்த சாவிக் கொத்து உன் கைக்கு வரணும்.” 

“மை காட்.. என்கைல சாவிக் கொத்தா? ரொம்ப நல்லார்க்கு ஆண்ட்டி. எனக்கு வேணாம்ப்பா. நா ஜாலியார்க்கறது உங்களுக்கு பிடிக்கலையா?” 

”என்னிக்கிருந்தாலும் நீதானே பொறுப்பேத்துக்கணும்?” 

“நோ ஆண்ட்டி. அதுக்காக இப்ப திடுதிப்புனு கல்யாணம் பண்ணிக்குங்கன்னா எப்டி? என் ஸ்டடீஸ் முடியணும். எங்க வீட்டை நாகன்வின்ஸ் பண்ணணும். அப்பறம் தான் கல்யாணம். வேணும்னா ஒண்ணு செய்ங்க. உங்களுக்கு மாமாகிட்ட பேச பயமார்ந்தா ஜஸ்ட் ஒரு மாசத்துக்கு எங்கிட்ட சாவிக் கொத்தை கொடுத்துட்டேன்னு பொய் சொல்லுங்க. சாவிக் கொத்து எங்கிட்ட தர வேண்டாம். மாமாவோ, ஆகாஷோ, சங்கீதாவோ பணம் வேணும்னா எங்கிட்ட கேக்கட்டும். ஏன் எதுக்கு என்ன செலவுன்னு நா பக்குவமா கேக்கறேன். அவங்க சொல்றதை நா உங்ககிட்ட சொல்றேன். ஓகேன்னா நீங்க பணம் குடுங்க. இல்லாட்டி கிடையாதுன்னு சொல்லிடுங்க.” 

”நீ வேற..இதெல்லாம் சரிப்படாது சுஜி. அவங்க எங்கிட்ட பணம் கேக்கறதே அபூர்வம்தான். ரெண்டு பேரும் கிரெடிட் கார்டு வெச்சிருக்காங்க.” 

“கிரெடிட் கார்டை காணாமடிச்சுட்டீங்கன்னா?” 

”அப்டி செய்யலான்றயா?” 

“டெம்ப்ரவரியாத்தானே. எப்டியாவது ரெண்டு பேர் கிரெடிட் கார்டையும் எடுத்து ஒளிச்சு வெச்சுருங்க. ஒரு மாசம் அழ வைங்க. பணத்துக்கு உங்ககிட்ட தானே வந்தாகணும். நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணம் ஏன் நாலா பக்கமும் வழிஞ்சு ஓடணும் ஆண்ட்டி?” 

‘சாரதா யோசனையோடு தலையாட்டினாள்.

அதற்கடுத்து வந்த நாட்களில் சுஜிதா சொன்னது போல் இரண்டு பேரின் கிரெடிட் கார்டையும் எடுத்து தன் பீரோவில் பத்திரப்படுத்தினாள். 

முதல் இரண்டு நாளுக்கு கிரெடிட் கார்டு காணாமல் போனது கூட இருவருக்கும் தெரியவில்லை. செலவும் ஏற்படவில்லை. காரில் பெட்ரோல்ஃபுல்லாக இருந்ததால், போவதும் வருவதுமாக இருந்தார்கள்.

நாலாவது நாள்தான் சம்பத் தன் காருக்கு பெட்ரோல் போட வேண்டியிருந்தது. கிரெடிட் கார்டு இல்லை என்பது புரிய ஒரு வினாடி யோசித்தார். வீட்டிலேயே விட்டு விட்டோமோ என்று நினைத்தபடி பெட்ரோல் போடாமலேயே வீட்டுக்கு வந்தார்.

தன் அறை முழுக்க கார்டை தேடிவிட்டு சாரதாவிடம் கேட்டார்.

“எனக்கென்ன தெரியும்? நீங்க எங்க விட்டீங்களோ? நாலு நாளா எந்தெந்த வீட்டுக்கெல்லாம் போனிங்கன்னு யோசிச்சு பாருங்க.” 

சம்பத் அவளை முறைத்தார். “சரி ஒரு ஆயிரம் ரூபா பணம் கொடு அப்பறம் நிதானமா கார்டை தேடிக்கறேன்.” 

“சாரி எங்கிட்ட இல்ல. சாவிக்கொத்தை என் வருங்கால மருமககிட்ட கொடுத்து ரெண்டு மாசமாகுது. நானே செலவுக்கு அவகிட்ட தான் பணம் கேக்கறேன். நம்மளை விட அந்த பொண்ணு பொறுப்பா இருக்கா தெரியுமோ. செலவு கொஞ்சம் கட்டுப்படட்டும்னுதான் பொறுப்பை அவகிட்ட கொடுத்தேன். என்னிக்கிருந்தாலும் பொறுப்பேத்துக்க வேண்டியவ அவதானே. அவ கீழ வந்ததும் அவகிட்ட கேட்டுக்கங்க”. 

சம்பத் திகைப்போடு அவளைப் பார்த்தார். ஒரு வினாடிதான் தன் முக மாற்றத்தை மறைத்துக் கொண்டு அவளை உற்றுப் பார்த்தார்.

”ரொம்ப சந்தோஷம் யாரோ ஒரு பொண்ணுகிட்ட கையேந்தி நிக்க வேண்டிய அவசியம் எனக்கில்ல. ஆகாஷ் வரட்டும் அவன் கார்டுல பெட்ரோல் போட்டுக்கறேன்.” 

“உங்க இஷ்டம். நா செய்யற எந்த நல்ல காரியத்தை நீங்க பாராட்டியிருக்கீங்க?” 

”நல்ல காரியமார்ந்தா நிச்சயம் பாராட்டி இருப்பேன்.”

சம்பத் தன் அறைக்கு வந்தார். அவருடைய செல்போன் அடித்தது.

”ஹலோ…”

“அப்பா நாந்தான் பேசறேன். என் கிரெடிட் கார்டை வீட்லயே விட்டுட்டேன்னு நினைக்கறேன். ஸ்பென்சர் பிளாசாலேர்ந்து பேசறேன் என் பிரண்டுக்கு அனுப்பறதுக்காக கொஞ்சம் சாமான் எல்லாம் வாங்கினேன். கார்டைக் காணும். நீங்க உடனே உங்க கார்டோட வாங்க. இல்லாட்டி ஒரு ஐயாயிரம் கேஷ் கொண்டு வாங்க. ரொம்ப அர்ஜன்ட்.” 

அவர் பதில் சொல்வதற்குள் அவன் தொடர்பைத் துண்டித்துவிட சம்பத் அட ராமா என்பது போல் ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டார். திடீரென்று இருவரது பர்ஸிலும் ஒரே நேரத்தில் கிரெடிட் கார்டு இல்லாமல் போயிருப்பது சந்தேகத்தைக் கிளறிவிட்டது. இது திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்று தோன்றியது. இப்போது என்ன செய்வது. ஆகாஷ் அவசரத்தில் இருக்கும்போது முதலில் அந்த பிரச்சனையைத் தீர்க்காமல் சாரதாவிடம் சண்டை போடுவது சரியாக இருக்காது. அவர் எப்போதுமே கைவசம் நூறு இரு நூறுக்கு மேல்வைத்திருக்க மாட்டார். செலவு என்று பெரிதாக அவருக்கு இருக்காது. கிரெடிட் கார்டு உபயோகித்தே பழக்கமாகி விட்டது. வீட்டுச் செலவுகளை எல்லாம் சாரதா பார்த்துக் கொண்டு விடுவதால் தனிப்பட்ட செலவு என்று ஒன்றும் அவருக்கு ஏற்படுவதில்லை. வெளியில் எதுவும் வாங்கி சாப்பிடும் வழக்கமும் கிடையாது என்பதால் பணமாக அதிகம் வைத்துக் கொள்வதில்லை. சம்பத் யோசித்தார். வேறு வழியில்லை. உடனடியாக ஒரு ஐயாயிரமும் பெட்ரோலுக்கு பணமும் கேட்டுதான் ஆக வேண்டும்.

மறுபடியம் சாரதாவிடம் வந்தார்.

”உம் பிள்ளை போன் பண்ணினான். அவன் கிரெடிட் கார்டையும் காணுமாம். ஸ்பென்சர் பிளாசால ஐயாயிரத்துக்கு பர்ச்சேஸ் பண்ணிட்டு பணமில்லாம நிக்கறான். அவகிட்ட சொல்லி உடனே பணத்தைக் கொண்டு குடுக்க சொல்லு. நா சொல்றதைச் சொல்லிட்டேன். உன் இஷ்டம். இல்ல உம் பிள்ளை வந்து கணக்கு கேட்டுட்டு தான் பணம் குடுப்பன்னா அவன் செல் நம்பர்ல அவங்கிட்ட இந்த திடீர் உத்தரவைப் பத்தி சொல்லிடு.” 

பொறுப்பை அவள் அவள் தலையிலேயே கட்டிவிட்டு நகர்ந்தார்.

சற்று நேரம் திருதிருவென்று விழித்த சாரதா அவசரமாக சுஜியை கீழே அழைத்து விஷயத்தைச் சொன்னாள். 

“இப்ப என்ன செய்யலாம் ஆண்ட்டி?” 

“ஆகாஷ் கிட்ட இப்ப எதுவும் பிரச்சனை பண்ணிக்க வேண்டாம். நா பணம் தரேன். நீ போற வழில பெட்ரோல் போட்டுக்கிட்டு போய் பணத்தைக் குடுத்துட்டு வந்துடு. மத்ததெல்லாம் அப்பறம் பேசிப்போம்.” 

“சரி எடுத்து வைங்க. நா டிரெஸ் மாத்திக்கிட்டு வந்துடறேன்.” 

சுஜிதா மாடிக்கு போய் உடை மாற்றிக் கொண்டு சம்பத்தின் காரை தானே ஓட்டிக் கொண்டு கிளம்பினாள். போகும் வழியில் பத்து லிட்டர் பெட்ரோல் போட்டுக் கொண்டாள். 

”உன்னை அனுப்பிட்டாரா அப்பா?” ஆகாஷ் வியந்தான். பணத்தைக் கட்டிவிட்டு சாமான்களை காரில் ஏற்றியவன் சுஜியின் வண்டியருகில் வந்தான்.

“ஓ கே சுஜி நீ கிளம்பு. நா வந்துடறேன். உனக்கு சிரமம் குடுத்துட்டேன் இல்ல. சாரிமா..” 

”பரவால்ல” சுஜி வண்டியில் ஏறி கதவை சார்த்தும்போது நாலைந்து பேர் அவள் வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள் அவள். ஆகாஷ் பதறிப் போய் கிட்டே வந்தான். 

அத்தியாயம்-22 

பணம் என்பது ஆழங்காண முடியாத பெருங்கடல் அதில் பெருமை, மனசாட்சி, உண்மை எல்லாமே மூழ்கி விடும். -கோஸ்லே. 

அப்பாவையும் சித்தப்பாக்களையும் அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை சுஜிதா. ஒரு பக்கம் உடம்புக்குள் நடுக்கமேற்பட்டாலும் அதை மறைத்துக் கொண்டு, தான் மிகவும் தைரியசாலி என்பதைக் காட்டிக் கொள்ள அவர்களை நேருக்கு நேர் பார்த்தபடி காரை விட்டிறங்கினாள். 

“யார்… யார் சுஜி இவங்கள்ளாம்…?” பதறியபடி கிட்டே வந்த ஆகாஷை அவர்கள் அலட்சியமாகப் பார்த்தார்கள்.

“ஸோ… இந்த பிச்சைக்காரனைத்தான் நீ கட்டிக்கப் போற…!” 

“மிஸ்டர் என்ன பேசறீங்க… யாரைப் பார்த்து…”

“ஷட் அப்..! நீ பிச்சைக்காரன்தாண்டா எங்களை  பொறுத்தவரை. உன் வீட்ல ரெண்டு கார் இருந்துட்டா நீ பணக்காரனா. எங்களுக்கு ரெண்டு கப்பலே இருக்கு தெரியுமா உனக்கு..? இந்தியால விரல் விட்டு எண்ணிடற மல்ட்டி மில்லியன்கள்ள நானும் ஒருத்தன்னு எம் பொண்ணு உங்கிட்ட சொல்லலையா..? ? இல்ல அதெல்லாம் தெரிஞ்சுதான் அவளை வளைச்சுப் போட்டயா…? ஜஸ்ட்… இப்படி ஒரு சொடக்கு போட்டு, உங்க அத்தனை பேரையும் ஏதாவது கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டு என் பொண்ணை இழுத்துக்கிட்டு போக ரெண்டு நிமிஷம் ஆகாது எனக்கு. போனாப் போகட்டும் பிழைச்சுப்போன்னு விட்டுடறேன். அவளை எங்கூட அனுப்பி வை. உனக்கேத்த ஒரு பிச்சக்காரியா பார்த்து தாராளமா நீ கல்யாணம் பண்ணிக்க. ஒரு ரெண்டு லட்சமோ மூணு லட்சமோ நானும் மொய் எழுதிட்டு போறேன்” 

அவர் பேசப்பேச ஆகாஷின் முகம், ரத்தச் சிவப்பாய் மாறியது. காதும், தாடையும் துடித்தன. அவர்களை முறைத்துப் பார்த்தான்.

”உங்க பொண்ணு வந்தா தாராளமா கூட்டிட்டு போய்யா.. ஆனா அவளை இழுத்துட்டு போனா நீதான் உள்ள இருப்ப. சட்டம் உன் பாக்கெட்ல இல்ல. எனக்கும் சட்டம் தெரியும்னு எச்சரிக்கறேன் உன்னை.” 

அவர் சுஜிதாவைப் பார்த்தார்.

“இதோ பார் நா உன்னை இழுத்துட்டு போய் அசிங்கப்படத் தயாரால்ல. ஆனா உன்னைப் பெத்தவங்கற முறைல கேக்கறேன். உங்கம்மா சரியா சாப்பிட்டு ஒருமாசமானது.இப்ப அவளும் இங்கதான் இருக்கா, உடம்பு வேற சரியில்ல அவளுக்கு. ஒரு முறை அவளை வந்து பாரு. ஒரு மணி நேரம் உன்னோட நாங்க பேசினா போறும்.உன் மனசு மாறிடும்ங்கற நம்பிக்கை எங்களுக்கிருக்கு. ஒவ்வொரு நிமிஷமும் எங்களுக்கு லட்ச ரூபாய்னு உனக்கு நல்லா தெரியும். உனக்காக பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவால்லன்னு இங்க வந்திருக்கோம் பிஸினஸை எல்லாம் விட்டுட்டு. ஜஸ்ட் ஒரு மணி நேரம் எங்களோட வா. எங்களுக்கு உன் கூட மனசு விட்டு பேச ஒரு சந்தர்ப்பம் கொடு. அதுக்கப்பறமும்இவனைத் தான் கட்டிப்பேன்னு நீ சொன்னா நாங்க தடுக்க மாட்டோம். தாராளமா நீ இவனோடயே போலாம். உனக்கு இங்கயே தலை முழுகிட்டு நாங்க போயிடறோம். என்ன சொல்ற. உன் காதல்ல உனக்கு நம்பிக்கையிருந்தா தைரியமா எங்களோட வரலாமே? நா வேணா கியாரண்ட்டி தரேன். ஒரு மணி நேரத்துக்கு மேல நாங்க உன்னைப் பிடிச்சு வெச்சிருக்கோம்னு நினைச்சா இவன் தாராளமா போலீஸோட வரட்டும். இந்தா என் கார்டு.” 

அவர் தன் கார்டையும் தற்காலிகமாக தங்கியிருக்கும் ஹோட்டல் விலாசத்தையும் ஆகாஷிடம் நீட்டினார். சுஜிதா தர்ம சங்கடத்தோடு ஆகாஷைப் பார்த்தாள்.

“ஓகே… திஸ் இஸ் ஜென்டில்மென் அக்ரிமென்ட் சுஜி. அவர் சொல்றதும் நியாயம்தான். நீ தைரியமா இவங்களோட போ. ஒரு மணி நேரம் என்ன? ஒரு வாரம் கூட இரு. எனக்கு உன் மேல நம்பிக்கையிருக்கு. நீ மனசு மாறமாட்டன்னு உங்கம்மாவைப் பார்த்து பேசிட்டு வா. காரை நானே ஆள் வெச்சு எடுத்துட்டு போயிடறேன்.” 

சுஜிதா ஒரு வினாடி யோசித்தவள் பிறகு அப்பாவோடு கிளம்பினாள். ஆகாஷ்தன் பிரண்டு ஒருவனுக்கு போன் பண்ணி உடனே வரச் சொன்னான். அவன் மூலம் சுஜிதா வந்த காரை வீட்டுக்கு ஓட்டி வந்தான்.

“சுஜி எங்கடா…?” 

“அவங்கப்பா வந்திருக்காரு. ஸ்பென்சர்ல பாத்தோம். அவங்கம்மாக்கு உடம்பு சரியில்லையாம். இவளை அவசரமா அழைச்சுக்கிட்டு போயிருக்காரு.” 

“மும்பைக்கா..?” 

“இல்ல இங்கதான் இருக்காங்க.” 

“ஏண்டா அவங்களை வீட்டுக்கு வரச்சொல்லக் கூடாதா..? வழில கூட்டிட்டு போயிருக்காங்க.”

“அவங்க அவசரம் அவங்களுக்கு ரெண்டு நாள்ல வந்துருவா விடு. நீ போய் இவனுக்கு காபி கொண்டா.” 

“இல்லடா டைம் ஆய்டுச்சு. சாப்பிடற நேரம். நா கிளம்பறேன்.” 

“ரொம்ப தேங்க்ஸ்டா. நீ ஒரு ஆட்டோ பிடிச்சு போய்டு. இந்தா” அவன் பாக்கெட்டில் நூறு ரூபாயைத் திணித்து வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு உள்ளே வந்தான்.

“என் கிரெடிட் கார்டு பாத்தயாம்மா?” 

“எனக்குத் தெரியாது. எங்கயாவது விட்ருப்ப.”

“அதெப்டிடா ஆகாஷ் ரெண்டு பேரோட கிரெடிட் கார்டும் ஒண்ணா காணாம போகும்?” 

“அப்டின்னா உங்களதும் காணுமா?” 

”காணாமல்லாம் போகலடா. கடத்தி வெச்சிருக்காங்க யாரோ”. 

“நாந்தான் எடுத்து ஒளிச்சு வெச்சுட்டேன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே. இந்த வீட்ல என்னைத்தவிர வேற யார் இருக்கா பழி ஏத்துக்க?” சாரதா வெடித்தாள். 

”நா உன்னையா சொன்னேன். உனக்கு ஏன் பொத்துக்கிட்டு வருது?” 

”பின்ன..எப்பப்பாரு எங்கிட்ட சண்டை. தொட்டதுக் கெல்லாம் குத்தம்! இவருக்கு இந்த வீடு பிடிக்கலடா ஆகாஷ், என்னைப் பிடிக்கல, உன்னைப் பிடிக்கல, உன் காதல் பிடிக்கல, சுஜிதா வந்திருப்பது பிடிக்கல, மருமகளாகப் போறவதானேங்கற ஆசைல அவகிட்ட நா இந்த வீட்டுப் பொறுப்பைக் கொடுத்தது பிடிக்கல. சாவிக் கொத்தை எப்டி அவகிட்ட குடுக்கலாம்னு எங்கிட்ட ஒரே சண்டை! அப்டி என்ன பெரிய தப்பு நா பண்ணிட்டேன்? வரப்போற மருமககிட்ட ஆசையார்க்கறது தப்பா? நீயே சொல்லுடா ஆகாஷ்.நா சுஜிதாகிட்ட பிரியமார்க்கறது இவருக்கு பிடிக்கல. நீ இவளை லவ் பண்ணினதுக்கு பதிலா அந்த சரண்யாவை லவ் பண்ணியிருந்தன்னா இவர் ரொம்ப சந்தோஷப்பட்ருப்பார். இவளுக்கு பதிலா அவ வந்து இந்த வீட்ல இருந்திருந்தா சாவிக்கொத்தென்னடா… சகல சொத்தையும் அவ பேருக்கு மாத்தி எழுதி குடுத்திருந்தா கூட ஒண்ணும் சொல்லமாட்டார். உண்டா இல்லையான்னு அவரையே கேளு. சுஜியை இந்த வீட்டை விட்டு விரட்ட இவர் நடத்தற நாடகத்தோட முதல் காட்சிதான் இந்த கிரெடிட் கார்டு நாடகம். இதுக்கு மேல புரிஞ்சுக்கிட்டு நடக்கற சமர்த்து உன்னோடது!” 

அம்மாவின் குற்றச்சாட்டில் ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போனான் ஆகாஷ். அம்மா சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமலிருக்கவும் முடியவில்லை. அப்பா சுஜியிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை என்று சுஜிதாவே அவனிடம் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறாள். சரண்யா நல்ல பெண்தான். ஆனால் சுஜிதாவின் மீது அவன் மனம் சென்ற பிறகு, அவன் காதலை மதிப்பதுதான் தர்மம் என்பது அப்பாவுக்கு தெரியவில்லையா?

அவன் தர்ம சங்கடத்தோடு அப்பாவைப் பார்த்தான். அவர் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தார். சாரதாவின் சாதுர்யம் அவரை அசத்தியிருந்தது. என்ன அழகாக அப்பாவுக்கும் பிள்ளைக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தி அதன் மூலம் சுஜிதாவின் ஸ்தானத்தை பலப்படுத்தி சரண்யாவின் மீது அவனுக்கு வெறுப்பு வரும் வழியை உருவாக்கி..அடேயப்பா என்ன சாதுர்யம் என்று வியந்தார். அதே நேரம் ஆகாஷின் மௌனம் அவரை என்னவோ செய்தது. என்ன பேசற நீ அபத்தமா..? என்று அம்மாவை அவன் அடக்குவான் என்று நினைத்தவருக்கு அவன் மௌனம் ஏமாற்றத்தையளித்தது. அவன் மனசில் ஏதோ ஒரு கோப விதை விழுந்துவிட்டது புரிந்தது.

ஆகாஷ் மௌனமாக அங்கிருந்து நகர்ந்ததைக் கண்டதும் வேதனை இன்னும் கூடியது. 

சாரதாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவரும் மௌனமாகத் தன் அறைக்குச் சென்றார். 

”ஏண்டி உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா? நம்ம பரம்பரை என்ன, அந்தஸ்து என்ன, குலப்பெருமை என்ன, கௌரவம் என்ன… போயும் போயும் ஒரு லட்சாதிபதிதான்… அதுவும் ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி சுண்டல் வித்த குடும்பம்தான் உனக்கு காதலிக்கக் கிடைச்சுதாடி..?” 

கட்டிலில் அமர்ந்திருந்த அம்மா முகம் சிவக்க கத்திவிட்டு புஸ்ஸீ புஸ்ஸென்று மூச்சு வாங்கினாள். சுஜிதா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

”ஒரு நிமிஷம் யோசிச்சு பார் சுஜி. உன்னை எப்டியெல்லாம் வளர்த்தோம்! நாங்க உனக்கு பார்த்திருக்கற பையனோட பத்து நிமிஷம் பழகிப் பார்த்தன்னா சொல்லுவ. நீ எவ்ளோ அபத்தமான ஒரு ஆளை பிடிச்சிருக்கன்னு.லண்டன்ல பக்கிங்ஹாம் அரண்மனை மாதிரி ஒருமாளிகையே இருக்கு. அட்லாண்டிக் கடல்ல ஒரு குட்டித் தீவே சொந்தம். சொந்தமா ஹெலிகாப்டர், சொகுசுக்கப்பல், கிட்டத்தட்ட இங்கிலாந்துல வாழற ஒரு இந்திய பிரபு, பணக்கார சிநேகிதங்கள், பக்கா மேல் நாட்டு பழக்க வழக்கங்கள், எல்லாத்தையும் விட ரொம்ப நல்லவனா, கண்ணியவானா, கம்பீரமா இருக்கான். அவன் காதலுக்காக ஒரு கூட்டமே காத்துட்ருக்கு.. அப்பேர்ப்பட்டவன் நம்ம குடும்பத்தோட சம்பந்தம் வெச்சுக்க முன் வந்துருக்கறது நாம செஞ்ச பாக்யம்டி. இப்ப காதல் உன் கண்ணை மறைக்குது. அதை கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு நிஜத்தைப் பாரு. நிஜத்தை யோசி. உன் எதிர்காலத்துக்கு ஏத்த முடிவா எடு”. 

“ஆகாஷும் நல்ல டைப்தாம்மா. அவங்க வீட்லயும் எல்லாரும் நல்லவங்கதான். முக்கியமா அவங்கம்மா கொத்து சாவியவே எங்கிட்ட குடுக்க ரெடியார்க்காங்க.” 

“பைத்தியம், ஆகாசத்தைக் கட்டி ஆள்ற சந்தர்ப்பத்தை தரோம்னு சொல்றோம். ஒரு குட்டையைக் கட்டிட்டு அழறேன் போதும்னு சொல்றயே”

”இதோ பார் சுஜி.நீ இருபது வயசு பொண்ணு குழந்தையில்ல. உன்னை கட்டாயப்படுத்த சட்டத்துல இடமில்லை. அப்டி நாங்க செய்யறதாவும் இல்ல. உன் வாழ்க்கை உன் கைலதான். உனக்கு முன்னால ரெண்டு சாய்ஸ் இருக்கு எது பெட்டர் சாய்ஸ்னு நீயே முடிவு பண்ணிக்க. நாங்க சொல்ற ஆளை நீ தேர்ந்தெடுத்தா சந்தோஷமா உலகமே மூக்குல விரலை வெக்கற அளவுக்கு உனக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்போம். இல்ல இந்த ஆகாஷ் தான் உசத்தின்னு உனக்கு தோணிச்சுன்னா தாராளமா இப்பவே நீ புறப்பட்டுப் போகலாம். நாங்க யாரும் உன்னைத் தடுக்க மாட்டோம். ஆனா போற இடத்துல உனக்கு கஷ்டமோ, நஷ்டமோ சந்தோஷமோ, துக்கமோ எது ஏற்பட்டாலும் நீயேதான் அனுபவிச்சுக்கணும்.” 

“எதையும் நாங்க வந்து ஷேர் பண்ணிப்போம்னு எதிர்பார்க்கக் கூடாது. உனக்கு சீர் சினத்தி பண்ணுவோம். ஆனா நம்ம தகுதிக்கு ஏத்தாப்ல குடுக்க மாட்டோம். அவங்க தகுதிக்கு இது போதும்ங்கறா மாதிரி செய்வோம்.ஆயிரம் பவுன் நகை போடறதுக்குப் பதிலா அம்பது பவுன் குடுப்போம். ரெண்டு கிலோ வெள்ளி குடுத்துடறோம். உன் பேர்ல அஞ்சு லட்ச ரூபாய் டெபாஸிட் பண்ணித்தருவோம் அவ்ளோதான். உன் கல்யாணத்துக்கு நிச்சயம் நாங்க யாரும் வர மாட்டோம். அதுக்கப்புறமும் வரமாட்டோம். உனக்கு தோணிச்சுன்னா நீ எப்ப வேணா நம்ம வீட்டுக்கு வா. ஆனா நடு வீட்ல வெச்சு உன்னைக் கொண்டாட மாட்டோம். கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு விருந்தாளியா நாலஞ்சு நாள் தங்கிட்டு போலாம். அவ்ளோதான். நாங்க உன்னை மிரட்டறதா நினைச்சுக்க வேண்டாம். எங்களுக்கும் வேதனை இருக்கும் இல்ல? எங்க மனசை நீ மதிக்கலன்னு ஆனப்புறம் மரியாதையை எதிர்பார்க்காதேன்னு சொல்றோம். நா பேசி முடிச்சுட்டேன். இனி முடிவு உன் கைல. ஒரு நிமிஷத்துல எடுக்கறயோ ஒரு வாரம் ஆக்கறயோ உன் எதிர்காலம் உன் முடிவுலதான்.” 

அப்பா அவளைத்தனியே விட்டு விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு மற்றொரு அறைக்குச் சென்றார்.

சுஜி மிரண்டு போனாள். அப்பா பேசியதைக் கேட்டதும் கலக்கமாக இருந்தது. இருந்தாலும் இந்த அளவுக்கு சீர் சினத்தியாவது செய்கிறேன் என்று அவர் சொன்னது ஓரளவு ஆறுதலாக இருந்தது. இது போதும். இதை வைத்துக் கொண்டே அந்த வீட்டை கலக்கி விடலாம். அந்த வீட்டில் மெல்ல முக்கியத்துவம் பெற்று உரிமைகளை எடுத்துக் கொண்டு விட்டால் பிறகு தான் வைத்ததுதான் சட்டம். இவள் படிப்பு முடிந்து ஒரு நல்ல பேஸன் டிஸைனர் என்ற பேர் வாங்கி விட்டால் நிச்சயம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். திரைப்படங்களில் வாய்ப்பு பெற்று விட்டால் குறுகிய காலத்திற்குள் அப்பாவே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உயர்ந்து விடலாம். பணத்திற்கு பணம், புகழுக்கு புகழ். தவிர ஆகாஷும் நிறைய சம்பாதிப்பான். இது போதாதா..? அப்பாவின் பணம் யாருக்கு வேண்டும்? 

சுஜிதா வெகுநேர யோசனைக்குப் பின் மற்றவர்கள் இருந்த அறைக்கு வந்தாள். அவர்கள் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்ற ஆவலோடு அவளையே மௌனமாகப் பார்த்தார்கள்.

சுஜிதா அனைவரையும் தயக்கத்தோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு வாயைத் திறந்தாள்.

”சாரிப்பா.. என் சாய்ஸ் ஆகாஷ்தான். நாங்க பின்னால இன்னும் நல்லார்ப்போம்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு. என் படிப்பு முடிஞ்சதும்தான் எங்க கல்யாணம் நடக்கும். நா இப்டி ஒரு முடிவெடுத்துட்டேங்கறதுக்காக நீங்க இப்போலேர்ந்தே எனக்கு எதுவும் செய்ய மாட்டீங்களா? இல்ல படிப்பு முடியறவரை பணம் தருவீங்களா…?” 

அவர்கள் அவளை வெறித்துப் பார்த்தார்கள். 

“உன் இஷ்டம். இதான் உன் தலையெழுத்துன்னா யாரால் மாத்த முடியும். நீ பயப்பட வேண்டாம். உன் கழுத்துல தாலி ஏர்ற வரை நீ என் பொண்ணுதான் எப்படியும் ஒண்ணு ரெண்டு வருஷமாவது ஆகாதா உங்க கல்யாணம் நடக்க? அதுவரை பணம் வந்துக்கிட்டே இருக்கும். கவலைப்பட வேண்டாம். கல்யாணத்துக்கு முந்தி உன் மனசு எப்ப மாறினாலும் நீ தாராளமா எங்ககிட்ட ஓடி வரலாம். தப்புத்தண்டா மட்டும் எதுவும் பண்ணிடாம இருந்தா. ஆனா தாலின்னு உன் கழுத்துல ஏறிடுச்சுன்னா உயிரே போற நிலைன்னாலும் எங்கிட்ட வராதே. ஒரு உதவியும் உனக்கு கிடைக்காது. இப்பவே சொல்லிடறேன். ஓகே நீ கிளம்பு இனிமே உன்னைத் தேடி நாங்க வரமாட்டோம். முகூர்த்த தேதி வெச்சுட்டன்னா ஒரு தகவல் கொடு. நகையும், பணமும் யார் மூலமாவது அனுப்பி வெக்கிறோம்.”

அவர் அதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பது போல் எழுந்து ஜன்னலருகில் போய் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். மற்றவர்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை. எக்கேடும் கெட்டுப் போ என்ற பாவனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அம்மா மட்டும் முகத்தை மூடிக்கொண்டு கண் கலங்கினாள். 

சுஜிதா வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்தாள். சடாரென்று ஒரு முடிவெடுத்து அதை தைரியமாக சொல்லியும் விட்டாளே தவிர ஏதோ ஒரு பிடிப்பு நழுவி அந்தரத்திலிருந்து விழுவது போல் ஒரு உணர்வு அவளையும் மீறி ஏற்படத்தான் செய்தது.

அத்தியாயம்-23 

வாழ்க்கையில் எதையும இழக்காதவருக்கு சோதனை, வேதனை என்னவென்று தெரியாது தான் எவ்வளவு போலியானவர் என்பதும் கவர்களுக்குத் தெரியாது. -கோஷ் பில்லிங்ஸ். 

அன்றிரவே சுஜிதா திரும்பி வந்து விடுவாள் என்று ஆகாஷ் எதிர்பார்க்கவில்லை. ஆட்டோ வந்து நின்ற சப்தம் கேட்டதும் வேகமாய் வாசலுக்கு வந்தவன் அதிலிருந்து இறங்கிய சுஜிதாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான். 

“என்னாச்சு சுஜி… அங்க ஒண்ணும் பிரச்சனை இல்லையே. எப்டி உன்னை விட்டாங்க..?” 

சுஜிதா சிரித்தாள். ”எனக்கு முன்னாடி ரெண்டு சாய்ஸ் வெச்சாங்க ஆகாஷ். ஒண்ணு ராஜ வாழ்க்கை. அரண்மனை மாதிரி வீடு, ரெண்டு கப்பல், சொந்த ஹெலிகாப்டர், உலகம் முழுக்க சொத்துக்கள், இன்னொரு சாய்ஸ் ஒரு சின்ன பங்களாவும், ரெண்டு காரும், கொண்ட ஆகாஷ். இது ரெண்டுல எது வேணுமோ தாராளமா செலக்ட் பண்ணிக்க. நாங்க தடுக்க மாட்டோம். ஆனா முதலாவதை செலக்ட் பண்ணினா நீ எங்க பொண்ணு. கடசி வரை புகுந்த வீடு பிறந்த வீடு ரெண்டு இடத்துலயும் மகாராணி மாதிரி வாழலாம். மரியாதையும் மதிப்பும் ஏராளமா இருக்கும். இல்ல ஆகாஷ்தான் உன் சாய்ஸ்னா பெத்த கடனுக்கு உன் ஆகாஷோட தகுதிக்கேத்தா மாதிரி சீர் சினத்தி மட்டும் அனுப்பி வெக்கறோம். ஆனா கல்யாணத்துக்கு நாங்க வரமாட்டோம். எப்போ கல்யாணம்னு சொல்லு சீர் வரிசை வந்து சேரும். யோசிச்சு சொல்லுன்னாங்க. இதுல யோசிக்க என்ன இருக்கு? ஆகாஷ்தான் எனக்கு வேணும்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன். நா சொன்னது சரிதானே ஆகாஷ்?'” 

ஆகாஷ் ஒரு வினாடி நெகிழ்ந்து போனான். அவளையே வியப்போடு பார்த்தான்.அத்தனை பேரையும், அரண்மனை வாழ்வையும் உதறி விட்டு, நீ போதும் எனக்கு என்று அவனை நம்பி வந்திருக்கிறாள் அவள் என்கிற உண்மை ஒரு நிமிடம் அவனை புல்லரிக்கச் செய்தது. ஆணுக்கு இது மிகப்பெரிய கௌரவம். காதலிக்கப்படுவதை விட, காதலிக்கும் அந்த பெண் அவனுக்காக அனைத்தையும் துறப்பதுதான் அவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம். அப்படி ஒரு கௌரவத்தைதான் சுஜிதா அவனுக்கு அளித்திருக்கிறாள்.

“என்ன சார்… இப்டி நின்னுட்டீங்க..? நான் செஞ்சது தப்பா..?” 

”ச்சேச்சே… என் மேல உனக்கு இவ்ளோ அன்பான்னு உருகிப்போய் நிக்கறேன். சரி உள்ள வா”. 

“ஆமா நா எங்கன்னு உங்கம்மா கேட்டாங்களா..? என்ன சொன்னீங்க?” 

”உங்கம்மா வந்திருக்காங்க. உடம்பு சரியில்லாம இருக்காங்க, உங்கப்பா வழிலபார்த்து கூட்டிட்டு போயிருக்கார்னு சொன்னேன்.” 

“நான் இப்டி எல்லாத்தையும் உதறிட்டு வந்துட்டேன்னு தெரிஞ்சா அவங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும் ஆகாஷ்?” 

”அதைப்பத்தி இப்போ என்ன? நம்ம கல்யாணத்துக்கு இன்னும் மூணு வருஷமாவது ஆகாதா? அப்ப பார்த்துக்கலாம் விடு. அது வரை எதைப் பத்தியும் வருத்தப்படாம சந்தோஷமா இரு.” 

பேச்சு சத்தம் கேட்டு சாரதா தூக்கக் கலக்கத்தோடு தன் அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். 

“சுஜி வந்தாச்சா…? அம்மாக்கு உடம்பு சரியில்லன் னானே…?” 

”இப்போ பரவால்ல ஆண்ட்டி. சாதாரண ஜூரம்தான். நாளைக்கு காலேல ஊருக்கு போறாங்க…” 

“ஏன் சுஜி அவங்களை இங்க கூட்டிட்டு வரக் கூடாதா…”

“அவங்க வர மாட்டாங்க ஆண்ட்டி, விடுங்க” 

“வர மாட்டாங்கன்னா..? நம்ம வீடு அவங்களுக்கு ரொம்ப சாதாரணம்னா.. இல்ல நீ எம்பிள்ளையை விரும்பறது அவங்களுக்கு பிடிக்கலையா..?” 

“அதெல்லாம் இல்ல. அவங்க அர்ஜன்ட்டா கிளம்பறாங்க. இன்னொரு சமயம் வருவாங்கன்னு சொன்னேன். ” 

“சரிம்மா அவ படுக்கட்டும். காலேல பேசிக்கலாம்” ஆகாஷ் அவளை அனுப்பி விட்டு தன் அறைக்கு வந்தான். சற்று நேரத்தில் அம்மா அவனைத் தேடிக் கொண்டு வந்தாள். 

“என்ன விஷயம்மா..?” 

“இந்தா இதைக் குடுத்துட்டு போலாம்னுதான் வந்தேன்” அவனுடைய கிரெடிட் கார்டை நீட்டிய அம்மாவை வியப்போடு பார்த்தான் ஆகாஷ். 

“இதெப்டி கிடைச்சுது..?” 

“உண்மையைச் சொல்லணும்னா நாந்தாண்டா உங்க ரெண்டு பேரோட கார்டையுமே எடுத்து வெச்சேன்.”

“எதுக்கும்மா..?” 

”காரணத்தோடதான். தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்னு சொல்லுவாங்க. உங்கப்பாவோட சில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கல. நம்ம வீட்டு பணம் அந்த கோபாலன் வீட்டுக்கு அளவுக்கு மீறி வழிஞ்சு ஓடிட்ருக்குன்னு உனக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியாது. இவ்ளோ நாள் தெரியாட்டியும் இனிமேயாவது நீ தெரிஞ்சுக்கணும். அந்த பொண்ணு என்ன அனாதையா இல்ல ஊனமுற்றவளா? பரிதாபப்படவோ கொட்டிக் கொடுக்கவோ..? அப்பா செத்துட்டா என்ன? அக்கா இல்ல..? அல்லது படிப்பில்ல..? பிழைச்சுக்க வேண்டியதுதானே? இதுவரை உங்கப்பா எவ்ளவோ கொடுத்தாச்சு. நானும் பேசாம இருந்துட்டேன். ஆனா இனி மேலும் ஒரு கணக்கில்லாம இவர் அந்த பொண்ணுக்கு குடுக்கறதை நா அனுமதிக்க மாட்டேன். அதனாலதான் கிரெடிட் கார்டை எடுத்து வெச்சேன். உங்கார்டுல சாமான் வாங்கி அவங்களுக்கு கொடுப்பார். நீயும் பேசாம இருப்பன்னுதான், உங்கார்டையும் எடுத்து வெச்சேன். வேணும்னா அவளுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து பிழைச்சுக்கோன்னு சொல்லட்டும் வேணாங்கல. நாமளே முழுக்க முழுக்க தலைல சுமக்கணும்னா எப்டி..?” 

“அப்பா அப்டி என்ன குடுத்துட்டார்னு நீ…”

”உனக்கு தெரியாதுடா. உனக்கு எப்பவுமே அவர்பேர்ல ஒரு அன்பு. அதான் நம்ப மாட்டேன்ற. நானும் அவரை பொல்லாதவர்னு சொல்லல. அந்த பொண்ணைத் தாங்கறதை நிறுத்திட்டா நல்லவர்தான். ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்க. இப்பவே அவரை கட்டுப்படுத்தலன்னா, நாளைக்கு சுஜிதாவை வெளிய அனுப்பிட்டு சரண்யாவை உள்ள கூட்டிட்டு வரல… எம் பேரை நா மாத்தி வெச்சுக்கறேன். இது நடக்குதுன்னு எழுதி வேணா தரேன். அப்போ புரியும் உனக்கு.”

ஆகாஷ் திகைப்போடு அவளைப் பார்த்தான். “சரி அதுக்கு இப்போ நா என்ன செய்யணுங்கற!” 

”நா சொல்றபடி கேட்டா போதும்.” 

“என்ன?” 

”உங்கப்பா கார்டு எங்கிட்ட இருக்குன்னு அவருக்கு சொல்ல வேண்டாம். அவர் பணம் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. சுஜிதாகிட்ட கணக்கு வழக்கை எல்லாம் ஒப்படைச்சுட்டதா அவர்கிட்ட சொல்லிட்டேன். பணம் வேணும்னா அவர் அவகிட்டதான் கேக்கணும். அதுக்கு முன்னோடியா நீயே நாலஞ்சு தரம் சுஜிகிட்ட பணம் கேட்டு, அப்டி ஒரு பழக்கத்துக்கு இந்த வீட்டைக் கொண்டு வந்துடணும். உன்னால தான் முடியும் இது. உங்கப்பாவும் சங்கீதாவும் சுஜியை மதிக்கணும்னா இது ஒண்ணுதான் வழி.”

ஆகாஷ் யோசித்தான். அம்மா சொல்வதும் சரி என்றுதான் தோன்றியது. சரண்யா நல்ல பெண்தான். இருந்தாலும் அவள் கஷ்டத்தை எல்லாம் தலை மேல் ஏற்றுக் கொள்வது நடைமுறை வாழ்க்கைக்கு சரிப்படாதுதான். சத்யாவுக்கும் அவள் புருஷனுக்கும்தான் முழுப் பொறுப்பும். அவர்கள் இருக்கும் போது அப்பா ஏன் மேலே போய் விழ வேண்டும்..? அம்மா சொல்வது போல் சுஜிதாவை வெளியேற்றுவதுதான் அப்பாவின் நோக்கம் என்றால் நிச்சயம் அவன் அவரை எதிர்ப்பான்.

“என்னடா யோசிக்கற?” 

”அப்பா கேட்டா என் கார்டும் கிடைக்கலன்னே சொல்லிக்கறேன் போறுமா?” 

“அப்பாடா…இப்பவாவது புரிஞ்சுக்கிட்டயே” சாரதா ஒரு நிம்மதி பெருமூச்சோடு வெளியில் வந்தாள். 

மறுநாள் அப்பா டிபன் சாப்பிடும் போது கீழே வந்த ஆகாஷ் அவர் எதிரில் அம்மாவிடம் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டான். 

“எதுக்குடா ஆயிரம்..?” 

“குடுன்னா குடேன்!” 

“எங்கிட்ட கேக்காதே. சுஜிகிட்ட கேளு. அவதான் இப்போ நிதி மந்திரி. நா பொறுப்புலேர்ந்து விலகிட்டேன்.” 

”ஓஹோ… வருங்கால மருமகளுக்கு டிரெயினிங் குடுக்கறயாக்கும். சுஜி, டைம் ஆறது, ரூபா குடு.” 

“எதுக்கு ஆயிரம்? கணக்கு சொன்னாதான் தருவேன்.”

”சரிதான் அம்மாக்கு மேல இருக்க நீ!” 

”பின்ன… பணமா தண்ணியா..? ஆயிரத்துக்கு என்ன செலவுன்னு சொல்லுங்க தேவையான செலவார்ந்தா தரேன்.”

“கொஞ்சம் புக்ஸ் வாங்கணும் அஃபிஷியல் பர்ப்பஸ்க்கு.”

”ஓகே தரேன்” சுஜிதா எழுந்து உள்ளே போய் ஆயிரம் ரூபாயோடு திரும்பி வந்தாள். 

“தேங்க் யூ…” 

ஆகாஷ் அம்மாவை ஓரக்கண்ணால் போதுமா நடிப்பு என்பது போல் பார்த்தபடி வெளியேறினான். சம்பத் தன் திகைப்பையும் பொங்கலோடு சேர்த்து விழுங்க முயன்றார். ஏதோ ஒரு நாடகம் நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது அவருக்கு. சுஜிதா ராணியாக முடிசூட்டப்பட்டு விட்டாள் என்பதும் புரிந்தது. பார்ப்போம். எத்தனை நாள் இந்த நாடகம் நடக்கிறதென்று என்ன ஆனாலும் சுஜிதாவிடம் பணம் கேட்டு நிற்பதில்லை என்ற வைராக்கியம் உள்ளுக்குள் எழுந்தது. அதே நேரம் கூடிய வரை இந்த நாடகத்தைக் கண்டு கொள்ளாதது போலவே போய்விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

“பொங்கல் சூப்பர்…” படு கேஷிவலாக சொல்லி விட்டு எழுந்து சென்று கை கழுவி விட்டு கிளம்பினார். சாரதாவும் சுஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

“இருங்கப்பா. போற வழில என்னை டிராப் பண்ணிட்டு போய்டுங்க” சங்கீதாவும் கிளம்பினாள். 

“சாரி டியர், நா கார்ல போகல” 

“ஆட்டோவா…பரவால்லப்பா” 

“இல்ல. ஷெட்ல வேலைக்காரனுக்கு வாங்கிக் கொடுத்தோம் பார் சைக்கிள். அதுலதான் போகப் போறேன். பெட்ரோல் செலவு மிச்சம். நீ கூட உன்னோட சைக்கிளை துடைச்சு கிளீன் பண்ணி யூஸ் பண்ணிக்கப் பாரு.” 

அவர் வேகமாக வெளியேற, சாரதா அயர்ந்து போனாள். சங்கீதா அம்மாவை முறைத்துப் பார்த்து விட்டு சாவி ஸ்டாண்டிலிருந்து தன் சைக்கிளின் சாவியை எடுத்தாள். அப்பாவின் பின்னால் சென்று சைக்கிளை சுத்தம் செய்தாள். வண்டி நல்ல கண்டிஷனில்தான் இருந்தது. எப்பவாவது அவள் உபயோகிப்பது உண்டுதான் என்பதால் வித்யாசமாகத் தெரியவில்லை.

“போலாமாப்பா…?” 

”நா ரெடி..” சம்பத் சைக்கிளில் ஏறியமர்ந்து பெடல் செய்தார். 

“கஷ்ட்டமார்க்காப்பா..?” 

”சைக்கிளிங் நல்ல எக்ஸர்ஸைஸ்தானே. ஆல் ஃபார் குட். இதுல ஆரம்பிச்ச வாழ்க்கை தானே. அதனால் இதுவும் ஒரு சுகம்தான்.” 

அப்பாவும் பெண்ணும் சிரித்துப் பேசியபடி சைக்கிளில் சென்ற காட்சியை வெறித்துப் பார்த்தாள் சாரதா.

“பார்த்தயா சுஜி அவங்க திமிரை?” 

”எவ்ளோ நாள்னு பார்த்துடலாம். நீங்க வருத்தப்படாதீங்க ஆண்ட்டி. ஆபீஸ்ல நாலு பேர் கேவலமா சிரிச்சா ஆட்டமேடிக்கா பெட்ரோலுக்கு காசு கொடுன்னு வருவார் பாருங்க.” 

சுஜி அவளுடைய மனது மாறி விடாதபடி அவசரமாக சமாதானப்படுத்தினாள்.

சங்கீதா அப்பாவை திரும்பிப் பார்த்தாள். எத்தனையோ வருடம் கழித்து சைக்கிள் ஓட்டுவதால் வியர்த்து வழிந்திருந்தது.

“ஆபீஸ்ல எல்லாரும் ஏன்னு கேட்டா என்னப்பா சொல்வீங்க?” 

“இந்தியா பயங்கர பொருளாதார நெருக்கடில இருக்கு. அதனால் நாமளாவது சிக்கனத்தை கடை பிடிக்கலாம்னு, சைக்கிள்ள வந்தேன்னு சொல்லுவேன்.”

சங்கீதா சிரித்தாள். முகம் சிரித்ததே தவிர உள் மனது அப்பாவைப் பார்த்து இரக்கமும் கவலையும் அடைந்தது. அம்மாவின் போக்கு எதில் முடியும் என்று தெரியவில்லை. ஆகாஷ் கூட இப்படி அவள் பக்கம் சாய்ந்து விடுவான் என்று நினைக்கவில்லை. இதைத் தான் நேரம் என்பதா..?

அக்கா வீட்டிற்கு வந்து ஒரு மாதமாகி விட்டது. எல்லாரும் அவளிடம் நன்றாகத்தான் நடந்து கொண்டார்கள் என்றாலும் சரண்யாவுக்குள் தான் அந்த வீட்டிற்கு பாரமாகி விட்டோமோ என்ற குறுகுறுப்பு 

குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது. அதன் காரணமாகவே பகுதி நேர வேலை ஏதாவது கிடைக்குமா என்று முயற்சி செய்து கொண்டிருந்தாள்.” 

”உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை சரண்யா. இது உன் வீடு மாதிரி. நீ எனக்கு பாரமும் இல்ல. நிம்மதியா உன் படிப்பை முடி. மேற்கொண்டு படிக்கணும்னாலும் படி. நல்ல வேலை கிடைக்கும் போது போய்க்கலாம்” அக்கா புருஷன் சரவணன் பல முறை சொல்லியும் கூட அவள் வேலை தேடுவதை நிறுத்தவில்லை. பேப்பரில் வாண்டட் காலம் பார்ப்பது தினசரி வழக்கமாகி விட்டது.

திருவான்மியூரில் புதுசாய் ஆரம்பிக்கப் போகும் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோருக்கு ஆள் வேண்டும் என்று கேட்டிருந்தது. சரண்யா அதன் விலாசம் குறித்துக் கொண்டிருந்த போது சத்யா அவள் அருகில் வந்தமர்ந்தாள்.

“என்ன சத்யா?” 

சத்யா தன் உள்ளங்கை விரித்து நீட்டினாள். அவள் கையில் சாக்லேட் ஒன்று இருந்தது.

“காலங்கார்த்தால் சாக்லேட் நீட்டற. என்ன விஷயம்?”

”என்னவா இருக்கும்? நீயே சொல்லேன் பார்ப்போம்.”

”பர்த்டே..? வெட்டிங் டே..?” சரண்யா ஒவ்வொன்றாய்ச் சொல்ல சத்யா தலையாட்டி மறுத்தபடி சிரித்தாள். 

“நீயே சொல்லிடேன்”. 

”உனக்கு வேலை கிடைக்கப் போகுது” 

“எங்கே நிஜம்மாவா..?” 

”ம்.. ஆனா சம்பளமெல்லாம் கிடையாதாம்.” 

”என்ன சொல்ற? எந்த வேலையை சம்பளமில்லாம என்னைப் பார்க்கச் சொல்ற?” 

“சித்தி வேலை. இன்னிலேர்ந்து எட்டரை மாசத்துல உன்னை டிரில் வாங்க ஒரு ஆள் வந்துடும்.” 

சரண்யா குப்பென்று முகம் மலர அவளைப் பார்த்தாள். விழிகள் விரிந்தது.

“அப்பா. வரட்டும்க்கா. அவரைப் பார்த்துக்கறதை விட எனக்கு வேறென்ன வேலை?” கண்கள் பளபளத்தது.

“சாயங்காலம் நீ வந்ததும் நாம கொஞ்சம் டாக்டர் வீட்டு வரை போய்ட்டு வரணும் சரண் உங்கத்தானுக்கு வேற ஏதோ வேலை இருக்காம்.” 

“போய்ட்டா போச்சு” 

“எத்தனை மணிக்கு நா ரெடியார்க்கட்டும்?” 

”நாலுக்கெல்லாம் வந்துடறேன். வந்ததும் கிளம்பிடுவோம்”. 

சரண்யா குளித்து விட்டு கிளம்பினாள். பகுதி நேர வேலை விஷயமாக அந்த டிபார்ட்மென்ட்டல் ஸ்டோருக்கு சென்றவள், அவர்கள் சொன்ன சம்பளம் திருப்தியாக இல்லாததால் நேராக அங்கிருந்து கல்லூரிக்குச் செல்வதற்காக பஸ் ஸ்டாப் நோக்கி நடக்க ஆரம்பித்தவள், ஓரிடத்தில் திகைத்து நின்றாள். தான் காண்பது கனவா நிஜமா என்பது போல் கண்களை மூடித் திறந்து விசாலமாக்கி பார்த்தாள்.

அத்தியாயம்-24 

ஒரு பெண்ணால் வாழ்க்கை மகிழ்ச்சியாகும் என நினைப்பவன் இளைஞன். பெண்ணால் வாழ்க்கை துன்பமாகும் என நினைப்பவன் மத்திய வயதினன். பெண்ணால் தன் வாழ்வை ஒன்றும் செய்ய இயலாது என நினைப்பவன் வயதானவன். -பெர்னார்ட்ஷா. 

சாண்யாவைப் பார்த்ததும் நின்றார் சம்பத். அவரையும், அவரது சைக்கிளையும் மாறி மாறிப் பார்த்தாள் சரண்யா.. 

“என்ன அங்கிள் இது?” 

“சும்மாதான். ஆரம்பிச்ச இடத்துக்கே மனுஷன் திரும்பி வருவான்னு இயற்கையின் விதிகள் சொல்றது. நடை, பல்லக்கு, மாட்டு வண்டி, குதிரை வண்டி, சைக்கிள், ரிக்ஷா, டூ விலர், கார், ஏரோப்ளேன் காற்று கெட்டுப் போய்டுத்தேன்னு யாருக்காவது கவலை இருக்கா? எனக்கு இருக்கு. அதான் சைக்கிள் பயணம்.” 

“யார்ட்ட மாமா கதை விடறீங்க?” சரண்யா சிரித்தாள். 

பேசிக் கொண்டிருக்கும் போதே சங்கீதாவும் சைக்கிளில் வர சரண்யா அதிசயமாக வியந்தாள்.

“கார் என்ன ஆச்சு சங்கீதா?” 

“வீட்ல பத்திரமா இருக்கு?” 

”அப்புறம்? சைக்கிள்ள போணும்னு வேண்டுதலா?”

“எங்களுக்கில்ல எங்கம்மாவுக்குதான் வேண்டுதல். எங்களை சைக்கிள்ள போக வைக்கணும்னு.” 

“என்ன பிரச்சனை மாமா?” 

“ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல?” மாமா ராகத்தோடு பாடினார். 

“எங்க வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்து பேயிங் கெஸ்ட்டா உக்காந்திருக்கா சரண். அதான் பிரச்சனை?” 

“எந்த பொண்ணு?” 

“என் வருங்கால அண்ணின்னு ஆகாஷ் அண்ணா அறிமுகப்படுத்தி வெச்சான். அவளும் எங்கம்மாவும் சேர்ந்து செய்யற வேலைதான் இதெல்லாம்.” 

சரண்யா தன் முக வாட்டத்தை வினாடி நேரத்தில் மறைத்துக் கொண்டாள். 

“எங்களுக்கு இது ஜாலியான விஷயமாய்டுச்சு சரண்யா. பணக்காரங்க எளிமையார்ந்தா உலகம் பாராட்டும் தெரியுமோ? அம்மாதான் பாவம் இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்கா. அவ மானம் மரியாதையெல்லாம் சைக்கிள்ள சவாரி போறதேன்னு புலம்பறா.” 

”என்ன நடந்துதுன்னு எனக்கு புரியல சங்கீதா. எதுவார்ந்தாலும், மாமா இப்டி சைக்கிள்ள போறது நல்லால்ல. மனசுக்கு ரொம்ப கஷ்டமார்க்கு. ஆகாஷ் கூடவா இதெல்லாம் பார்த்துக்கிட்டு பேசாம இருக்கார்?” 

“கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும். அண்ணாவோட அறிவை காதல் மறைச்சிருக்குன்னும் சொல்லலாம். அவன் தலைக்கே ஆபத்து வரும்போது மயக்கம் தெளியுமோ என்னவோ?” 

“அப்டியெல்லாம் சொல்லாதே சங்கீதா. அந்த பொண்ணு நல்லவளாவே இருக்கலாம் இல்லையா? ஒரு சில விஷயங்களை மட்டும் வெச்சு ஒருத்தரைப் பத்தி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது.” 

“அப்டிங்களா…? அப்பொ இன்னும் ஒரு நாலஞ்சு விஷயம் நடக்கட்டும். அப்பறம் நிதானமா நாம ஒரு முடிவுக்கு வருவோம். ஆனா என்ன… அதுக்குள்ள நானும் அப்பாவும் தெருவுக்கே வந்தாலும் வந்துருவோம்.” 

“நம்ம கதையை ஸ்டாப் பண்ணேன் சங்கீத். நீ எப்டி இருக்க சொல்லு சரண். சத்யா வீடு உன்னை நல்லபடி நடத்துதா…? அங்க எல்லாரும் சௌக்யம்தானே? அடிக்கடி வரேன்னு சொன்னா மாதிரி வர முடியல. நிலமை அப்டி!” மாமா சைக்கிளை தடவிக் கொடுத்தபடி சொன்னார். 

”எல்லாரும் ரொம்ப நல்லார்க்காங்க மாமா. எனக்கு ஒரு குறையும் இல்ல. அப்பறம் இன்னொரு சந்தோஷச் செய்தி, சத்யா மறுபடியும் கன்சீவ் ஆயிருக்கா.” 

“இஸ் இட். ஜாக்கிரதயா இருக்கச் சொல்லு. இப்போதைக்கு ஹெவி ஒர்க் எதுவும் செய்ய விடாத அவளை. நா அப்பறம் வந்து பாக்கறேன்னு சொல்லு. உங்க மாமி மட்டும் நல்லவளார்ந்தா பெத்த தாயார் ஸ்தானத்துல இருந்து வாய்க்கு ருசியா அவளுக்கு ஏதாவது செய்து கொடுத்தனுப்பலாம். ஆனா எங்கே…?” மாமா பெருமூச்சு விட்டார். 

“சேர்த்து வெச்சுதான் நீங்க இருக்கீங்களே அப்பறம் என்ன குறை மாமா…?” 

”சரி சரண். டைம் ஆறது. நீ புறப்படு” மாமா சைக்கிளை மிதித்தார். 

சரண்யா இருவரும் செல்வதையே சற்று நேரம் வேதனையோடு பார்த்தாள். என்னாயிற்று இந்த மாமிக்கு? கம்பீரமாய் காரில் போய்க் கொண்டிருந்தவர் சைக்கிளில் போகும் அளவுக்கு அப்படி என்னதான் நடந்திருக்கும்? 

நிச்சயம் விஷயம் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்பது மட்டும் புரிந்தது.

அக்காவுக்காக அன்று மாலை சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டாள். சரியாக ஐந்து மணிக்கு டாக்டர் வீட்டுக்கு சென்றார்கள்.

டாக்டர் பரிசோதித்து விட்டு கர்ப்பத்தை உறுதி செய்தாள். ஒரு சில, விட்டமின் டானிக்குகள் எழுதிக் கொடுத்து விட்டு அடுத்த செக்கப்பிற்கு எப்பொழுது வர வேண்டும் என்றும் சொன்னாள்.

”கொஞ்ச நாளைக்கு நீ எந்த வேலையும் செய்ய வேண்டாங்க்கா. நா பாத்துக்கறேன். ஒரு நாலு மாசமாவது கேர்ஃபுல்லா இருந்தா நல்லது.” 

“இப்ப மட்டும் நா என்ன வேலை செஞ்சு கிழிக்கறேனாம்? பாதி எங்க மாமியார் செய்யறாங்க. மீதி நீ செஞ்சுடற?” 

“சும்மா..! நீதான் பாதி வேலை செய்யற.”

”அதை விடு நீ போன வேலை என்ன ஆச்சு?” 

”சம்பளம் சரிப்படல. வேலை அதிகம் கூலி ரொம்பகம்மி”.

”வேணாம் சரண். உன்னை யாரு இப்போ வேலை தேடச் சொன்னது? அப்டி ஒண்ணும் இப்பொ கஷ்டம் வந்துடல.” 

”கஷ்டத்துக்கா போறேன்றேன்? பாதி நாள் சும்மா தான் இருக்கேன்.” 

”சம்பத் மாமாகிட்டயோ ஆகாஷ்கிட்டயோ சொல்லி வெச்சா நல்ல சம்பளத்துல நல்ல வேலை வாங்கித் தருவாங்க இல்ல?” 

“எதுக்கெடுத்தாலும் அவங்களை சிரமப்படுத்த வேண்டாம்னு தான்… தவிர மாமா நம்மகிட்ட அன்பா இருக்கறதோ உதவி செய்யறதையோ மாமி சுத்தமா விரும்பல. அப்டியிருக்கும் போது நாமளும் அவங்களை அடிக்கடி தொந்தரவு செய்வானேன்…?” 

”அப்பாக்கு உன்னை ஆகாஷ்க்கு கட்டி வெக்கணும்னு ரொம்ப ஆசை. மாமாக்கும் அது தெரியும். அப்பா போய்ச் சேர்ந்துட்டார். அவர் ஆசையை மாமா நிறைவேத்தினா நல்லார்க்கும். இது பத்தி அவர்கிட்ட பேசணும்னு நினைக்கறேன். ஆனா எப்டி ஆரம்பிக்கறதுன்னு தெரியல”. 

”நீ எதுவும் ஆரம்பிக்க வேணாம். எனக்கு அப்டியெல்லாம் எந்த எண்ணமும் இல்ல. அசட்டு பிசட்டுன்னு எதுவும் கேட்டு கீட்டு வெச்சுடாதே” சரண்யா அவசரமாக சொன்னாள். 

“ஏண்டி… ஆகாஷ்க்கென்ன குறை?” 

”அவருக்கொண்ணுமில்ல. நமக்குதான் குறை. அக்கா ப்ளீஸ்… வேற ஏதாவது விஷயம் பேசேன்.” 

சத்யா அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி நடந்தாள். அதன் பிறகு வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. 

அப்பாவின் அறைக்கதவைத் தட்டி விட்டு உள்ளே போனான் ஆகாஷ். மெல்லிய இருட்டுக்குள் மென்மையான வீணையிசையைக் கேட்டபடி சாய்வு நாற்காலியில் கண்மூடி படுத்திருந்தார் சம்பத். ஆகாஷைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்.

“என்ன..?” 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ப்பா!” 

“பேசேன்” 

ஆகாஷ் அவர் அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

“இதெல்லாம் நல்லாவாப்பா இருக்கு?” 

“எதெல்லாம்?” 

“நீங்க இப்டி சைக்கிள்ள போறது வரது எல்லாம்.” 

“நாட்டுக்கும், இயற்கைக்கும் நல்லதுதானே?” 

”நல்லதுதான். இந்த எண்ணம் முதல்லேர்ந்தே உங்களுக்கிருந்தா பாராட்டியிருப்பேன். இயற்கை மேல இவ்ளோ நாள் இல்லாத அக்கறை இப்பொ என்ன புதுசா?” 

சம்பத் மௌனமாக அமர்ந்திருந்தார்.

“மனசு விட்டு பேசுங்கப்பா. உங்களுக்கு அப்டி என்ன கஷ்டம்?” 

”இல்லடா ஆகாஷ். என் பேச்சுக்கு இப்பொ எந்த பவரும் இல்லாத நிலைல நா எதுக்கு பேசணும்? நா சைக்கிள்ள போறது உனக்கு கஷ்டமார்ந்தா சொல்லு. நாளேலேர்ந்து நடந்து போகப் பார்க்கறேன்.” 

“புரியுதுப்பா. சுஜிதா இங்க இருக்கறது உங்களுக்குப் பிடிக்கல.அப்டித்தானே?” 

“அப்டியெல்லாம் எதுவுமில்ல. ஆனா அவகிட்ட காரணம் சொல்லிட்டுதான் செலவுக்கு பணம் வாங்கிட்டு போகணும்னா அது என்னால முடியாது. ரொம்ப இக்கட்டான நிலமை ஏற்பட்டாலும் என் தாத்தாவை மாதிரி மறுபடியும் பீச்சுல சுண்டல் விக்கப் போனாலும் போவேனே தவிர யார்கிட்டயும் கையேந்திக்கிட்டு நிக்க மாட்டேன்.” 

ஆகாஷ் அவரை வேதனையோடு பார்த்தான்.

”உங்களுக்கு என்னதாம்ப்பா வேணும்? சுஜிதாவை வெளிய அனுப்பிட்டா நீங்க சந்தோஷமாய்டுவீங்களா?” 

“எனக்காக யாரும் வெளில போக வேணாம். சங்கீதாவுக்கு ஒரு வரன் பார்த்து அவ கல்யாணத்தை முடிச்சதும் நா போயிடறேன். வெளில எனக்கு ஒரு வேளை சோறும், ரெண்டு செட் உடுப்பும் சம்பாதிக்கற அளவுக்கு எனக்கு தைரியமும் சக்தியும் இருக்கு.” 

“நீங்க இப்டி மாறிடுவீங்கன்னு நா நினைச்சுக் கூடப் பார்க்கலப்பா”. 

”நா பேச வேண்டிய டயலாக்கை நீ பேசறடா ஆகாஷ். வேடிக்கையார்க்கு” 

“ப்ளீஸ்ப்பா குத்திக்காட்டாதீங்க. காதல்ங்கறது யாரையும் கேட்டுட்டு வரதில்ல. மத்தவங்களுக்காக ஒருத்தரைக் காதலிக்கவும் முடியாது. தெரிஞ்சோ தெரியாமயோ நா சுஜிதாவை விரும்பிட்டேன். எனக்காக, தன் ராஜ போக வாழ்க்கையை எல்லாம் உதறித் தள்ளிட்டு என்னையே நம்பி வந்திருக்கறவளை என்னால வெளில போன்னு சொல்ல முடியாதுப்பா. மத்தபடி வீட்டுச்சாவியை நா அவகிட்ட குடுக்கல.அதெல்லாம் அம்மாவோட வேலை. கணக்கு கேக்கறது அவ்ளோ ஒண்ணும் தப்பா விஷயமில்லையேன்னு தான் எனக்கும் தோணிச்சு. நானும் வெட்கத்தை விட்டு அவகிட்ட பணம் கேட்டு வாங்கிட்டு போறேன். உங்களுக்கு அவகிட்ட கேக்க கஷ்டமாதான் இருக்கும். ஒத்துக்கறேன். அதுக்காக இந்த வயசுல சைக்கள்ள போய்ட்டு வரது நல்லாவா இருக்கு? எங்கிட்ட பணம் கேட்டா நா வாங்கித் தர மாட்டேனா…? என்ன பிடிவாதம்ப்பா இது?” 

“இப்பொ கூட இன்னொரு கிரெடிட் கார்டு வாங்கிட்டு ஜாலியா செலவழிக்க எனக்கு ரெண்டு நாள் ஆகாதுடா ஆகாஷ். ஆனாலும் வேணாம்னுதான் பேசாம இருக்கேன். எவ்ளோ நாள் இந்த நாடகமெல்லாம் நடக்குதுன்னு பார்த்துடலாம்னுதான் நானும் வேஷம் கட்ட ஆரம்பிச்சுட்டேன்.”

“ஸோ…நீங்க இப்டியேதான் இருக்கப் போறீங்க?” 

“இது கூட ஒரு விதத்துல நல்லாதான் இருக்கு. எனக்கு உன் மேல ஒரு கோவமும் இல்ல. என்னால சில விஷயங்களுக்கு இறங்கி வர முடியலையே தவிர, மத்தபடி நா உன் காதலை நிச்சயமா மதிக்கறேன். ஒரு சின்ன ரிக்வெஸ்ட் உங்க கல்யாணத்துக்கு முந்தி சங்கீதா கல்யாணம் நடந்துட்டா நல்லார்க்கும்.” 

”நிச்சயமா! என்னால உங்களைப் புரிஞ்சுக்க முடியலப்பா. மதில் மேல பூனை மாதிரி ஒரு நிலமைல எல்லாருமா சேர்ந்து என்னை நிறுத்தி வெச்சுட்டீங்க. யாரைக் குத்தம் சொல்றது, யாரை சமாதானப்படுத்தறதுன்னே எனக்கு புரியல. இது இவ்ளோ பெரிய பிரச்சனையாகும்னு தெரிஞ்சிருந்தா நிச்சயமா முதல் நாளே இதுக்கு முட்டுக்கட்டை போட்ருப்பேன். இவ்ளோ தூரம் ஆனப்பறம் நா சொல்லி அம்மா கேப்பாளான்னு தெரியல. இதெல்லாம் எதுல போய் முடியுன்னும் புரியல. எனக்காக நீங்க உங்க பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கிட்டா நல்லார்க்கும். உங்ககிட்ட கை கூப்பி வரம் கேக்கறேன்னு வெச்சுக்குங்களேன்.” 

ஆகாஷ் கண்கள் பளபளக்க அவரை நோக்கி கை கூப்ப, சம்பத் பதறிப் போனார். ”என்னடா இது… குழந்தை யாட்டம்…? இது பிடிவாதமில்லடா ஆகாஷ். ஒரு தவம்னு வெச்சுக்கயேன். உங்கம்மாவை என் வழிக்கு கொண்டு வர நா கடைபிடிக்கற விரதம்னு நினைச்சுக்க. புருஷனுக்காக பெண்டாட்டிதான் விரதம் இருக்கலாமா? பெண்டாட்டி மனசு மாற புருஷன் விரதமிருக்கக் கூடாதா என்ன? நீ இதுக்கெல்லாம் வருத்தப்படாதே. கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாய்டும். போ, போய் நிம்மதியா தூங்கு.” 

சம்பத் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார். 

அதற்கடுத்த வாரம் சங்கீதாவை அழைத்துக் கொண்டு அஷ்டலட்சுமி கோயிலுக்குச் சென்றார்.

“திடீர்னு எதுக்குப்பா இங்க கூட்டிட்டு வந்தீங்க?” 

”காரணமாதான். நம்ம வீட்டு நிலமை சரியில்லன்னு தெரிஞ்சப்பறம் உன் கல்யாணத்தை சீக்கிரமே முடிச்சுடறதுன்னு வெச்சுட்டேன். உனக்காக நா பாத்திருக்கற பையனை உனக்கு பிடிக்க வேண்டாமா..? அவனை இந்த கோயிலுக்கு வரச் சொல்லியிருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சா மேற்கொண்டு சம்பிரதாயப்படி பெண் பார்க்க வரச்சொன்னா போதும்னுதான் இந்த ஏற்பாடு அந்த பையனுக்கும் இந்த ஏற்பாடு பிடிச்சிருந்தது. நாலு பேர் பார்க்க பிடிக்கலன்னு சொல்றதை விட இப்டி தனியா பார்த்து பிடிச்சுதா பிடிக்கலையான்னு சொல்றது பெட்டர் இல்லையா? ஒரு விஷயம் நிச்சயம். உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தாதான் கல்யாணம். பிடிக்காட்டி தைரியமா சொல்லிடலாம். எனக்கு பயந்துக்கிட்டோ, இல்ல என்னை சந்தோஷப்படுத்தறதா நினைச்சுக்கிட்டோ பொய் சொல்ல வேணாம் சரியா?” 

”என்னப்பா இப்டி திடீர்னு… எனக்கு பயம்மார்க்கே. பாரு நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது.” 

சம்பத் சிரித்தார். “அதோ பார் அந்த பையன்தான் எம்.பி.ஏ, பி.ஹெச்.டி.ன்னு ஏதேதோ படிப்பு. சொந்தமா அட்வர்டைசிங் கம்பெனி வெச்சு நடத்திட்ருக்கான். நம்பர் ஒன் கம்பெனி. சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் எல்லா இடத்துலயும் பிராஞ்ச்சஸ் இருக்கு. கூடப் பிறந்தவங்க ரெண்டு அண்ணன். எல்லாரும் கல்யாணமாகி நல்லபடியா செட்டில்டு. அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். இவனோடதான் இருக்காங்க. நமக்கேத்த குடும்பம். முக்கியமா பையன் நல்ல மாதிரியா இருக்கான்.” 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் அவர்களை நெருங்கினான். நல்ல உயரம், மாநிறம், கறுப்புக் கண்ணாடி அணிந்து புன்னகை படர கிட்டே வந்தான். கண்ணாடியைக்கழட்டி விட்டு “ஹலோ” என்று அவர்களைப் பார்த்து சிரித்தான். கம்பீரமாயிருந்தது அவன் குரல், அவனைப் போலவே.

“இவதான் என் பொண்ணு சங்கீதா. ஹீ இஸ் பிரவீண் சங்கீதா. நீங்க பேசிட்ருங்க. நா கோயிலுக்குள்ள போய்ட்டு வந்திடறேன்.” 

சம்பத் மெல்லநகர, சங்கீதாவின் படபடப்பு நூறு மடங்காயிற்று. இதயத்தின் சப்தம் வெளியிலேயே கேட்கும் போலிருந்தது. அவனை பார்ப்பதற்காக தலையை நிமிர்த்தியவள், அது முடியாமல் விழிகளை சட்டென்று தாழ்த்திக் கொண்டாள். 

அவளது அவஸ்தையைப் பார்த்து அவன் சிரித்தான்.

”என்னைப் பிடிக்கலையா சங்கீதா?” 

எடுத்த எடுப்பில் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் திணறினாள்.

அத்தியாயம்-25 

தங்கம் வேண்டாம் என்று கூறிய ஒரே ஒரு பெண்ணைப் பற்றி நான் அறிவேன். அவள் தங்கம் வேண்டாம் வைரம் வேண்டுமென்றாள். -வால்போல் 

“என்னைப் பத்தி நீ முழுசும் தெரிஞ்சுக்கிட்டு அப்பறம் சொன்னா போதும் பிடிச்சிருக்கா இல்லையான்னு ” அவன் தொடர்ந்து சொல்ல சங்கீதா படபடப்பு சற்றும் குறையாமல் அமர்ந்திருந்தாள். 

“ரொம்ப…, ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் எங்களோடது. மாற்றுப்புடவை கூட இல்லாம, ஒரு புடவையையே துவைச்சு காய வெச்சு கட்டிப்பாங்க எங்கம்மா. எங்களை வளர்க்கறதுக்காக நாய் படாத பாடு பட்ருக்காங்க. கிடைக்கற வேலையெல்லாம் அஞ்சு பத்து வருமானத்துக்காக செய்வாங்க. நாங்க இன்னிக்கு இந்த நிலமைல் இருக்ககோம்னா இதுக்கு அஸ்திவாரம் அம்மாவோட உழைப்பும் நம்பிக்கையும், அவங்க எங்களுக்கு குடுத்த தைரியமும்தான். மத்தபடி என் பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள்னு சொல்லணும்னா, டென்ஷன் அதிகமானா, ரொம்ப அபூர்வமா ஒண்ணோ ரெண்டோசிகரெட் பிடிப்பேன், அதனாலேயே இப்பல்லாம் டென்ஷன் வராம பாத்துக்கறேன். ஸோ… சிகரெட் தொட்டு ஒரு வருஷமாச்சு. நோ டிரிங்க்ஸ். ஏன்னா எங்கப்பா செத்ததே குடியாலதான். அதனால அம்மாக்கு நாங்க எல்லாருமே சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கோம் டிரிங்க்ஸை மட்டும் தொடறதில்லன்னு. நிறைய புக்ஸ் படிப்பேன். பசிக்காக சாப்டுவேன். டேஸ்ட் பார்த்து வித விதமா சாப்படற ஆசையெல்லாம் கிடையாது. உப்பில்லாம சமைச்சிருந்தா கூட சொல்லத் தெரியாது. அதனால் நீ சமையலறைல கஷ்டப்படவே வேண்டாம்.” 

அவன் சிரித்தபடி நிறுத்த, சங்கீதாவின் முகம் சிவந்தது. 

”உங்க குடும்பத்தைப் பத்தி, உன்னைப் பத்தி எல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். சொல்லப் போனா நா உன்னை ஏற்கனவே பார்த்துட்டேன். நீ என்னைப் பார்க்கனுங்கறதுக் காகத்தான் இந்த ஏற்பாடு. உனக்கு பிடிச்சிருந்தா அம்மாட்ட சொல்லி பெண் பார்க்க கூட்டிட்டு வருவேன். இல்லாட்டா ஜஸ்ட் நண்பர்களா பிரிஞ்சு போய்டலாம். எதுவார்ந்தாலும் பளிச்சினு பேசறதுதான் எனக்கு பிடிக்கும்.” 

சங்கீதா முதல் முறையாக நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் பார்த்தாள். 

”உங்களுக்கு உங்கம்மா எப்டியோ அதே மாதிரி எனக்கு எங்கப்பா. அவர் எது சொன்னாலும் என் நன்மைக் காகத்தாங்கற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. ஒருத்தரை புரிஞ்சுக்க ஒரு நிமிஷம் போதும்னு சிலர் சொல்வாங்க. எனக்கு அவ்ளோ புத்திசாலித்தனம் எல்லாம் கிடையாது. இருந்தாலும் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. சொல்லிக்கும் படியா எங்கிட்ட எந்த சிறப்பம்சமும் கிடையாது.நா ஒரு சராசரி பொண்ணு.” 

“தேங்க்யூ..” 

”எதுக்கு?” 

“பிடிச்சிருக்குன்னு சொன்னயே.. அதுக்குதான். போலாமா? மிச்சத்தை கல்யாணத்துக்கப்பறம் பேசுவோம்.” 

அவன் எழுந்தான். இருவரும் சம்பத்தைத் தேடிப் போனார்கள். 

”என்னம்மா? என் செலக்ஷன். ஓகேயா?” கண் சிமிட்டி கேட்டார். 

“போங்கப்பா” 

“அடேயப்பா… எம்பொண்ணு வெட்கப்படறா..!” 

”ஓகே அங்கிள். நீங்க சாயங்காலம் வீட்டுக்கு வாங்க. நா நாளன்னிக்கு மும்பை போறேன். அதனால அநேகமா நாளைக்கே பெண் பார்க்க வந்தாலும் வந்துடுவோம்னு நினைக்கறேன்.” 

பிரவீண் விடைபெற்று கிளம்பினான். அவன் கார் கண்ணுக்கு மறையும் வரை சங்கீதாவின் பார்வை தொடர்ந்தது. 

“இப்பவே துரத்த ஆரம்பிச்சாச்சா?” அப்பா கிண்டலடித்தார். 

“ஏம்பா நீங்க பாட்டுக்கு வரன் பாக்கறீங்க… அம்மா இதுக்கெல்லாம் ஒத்துப்பாளா..?”

”உங்கம்மாக்கு பணம் இருந்தா போதும். ஒத்துக்காம என்ன? இல்லாவிட்டாலும் இருக்கவே இருக்கு இன்னோரு அஸ்திரம்!” 

“என்ன?” 

“நீ பிரவீணை லவ் பண்றதா எடுத்துவிடு. ஆகாஷ் லவ் பண்ணலாம். சங்கீதா லவ் பண்ணக் கூடாதா..? பிள்ளை காதலுக்கு பச்சைக் கொடி காட்டறவ, பொண்ணு காதலுக்கும் காட்டித்தானே ஆகணும்.” 

”என்னமோ போங்க. ஆசை காட்டி மோசம் பண்ணாம இருந்தா சரி” 

“இதப்பார்ரா..!” சம்பத் வாய் பிளந்தார். “அப்ப காதலிக்கவே ஆரம்பிச்சாச்சா..?” 

“சும்மார்ந்த சங்கை ஊதிக்கெடுத்துட்டு கேள்வியைப் பாரேன்” 

சம்பத் சிரித்தபடி அவள் தலையை வருடினார். “கவலைப்படாதே. இந்த கல்யாணத்தை நடத்திட்டுதான் மறுவேலை. போலாமா?” 

அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். 

சாரதா முறைத்தாள். “யாரைக் கேட்டுக்கிட்டு நீங்க அவளுக்கு வரன் பாக்கறீங்க? என்ன வயசாய்டுச்சு அவளுக்கு? படிப்பு முடியட்டும் அப்பறம் பாத்துக்கலாம்” 

“நா வரன் பார்க்கல. அவளா பார்த்துக்கிட்டா” 

“என்ன சொல்றீங்க?” 

“நா என்ன சொல்றது? எல்லாம் அண்ணன் காட்டிய வழி! நீ வேண்டாம்னு சொன்னா, ஆகாஷ் அந்த பெண்ணைக் கூட்டிட்டு வந்தா மாதிரி அவன் இவளைக் கூட்டிட்டு போய் வெச்சுக்குவான். பரவாயில்லயா..?” 

அவர் சொல்ல, சாரதாவின் முகம் அஷ்டகோணலாயிற்று. 

“அதனாலதான் நாமளே கெளரவமா கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்னு சொல்றேன். நாளைக்கு அவங்க பெண் பார்க்க வராங்க எல்லா ஏற்பாடும் பண்ணிடு. ஏடா கூடமா ஏதாவது பேசின… உனக்குதான் அவமானமாகும் சொல்லிட்டேன்.” 

அவர் மாடிக்குச் செல்ல, அவரையே வெறித்துப் பார்த்தாள் சாரதா. வேறு வழியில்லை. ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். நல்லகாலம் பையன் பணக்காரன் தான் என்கிறார். அந்த வரைக்கும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அன்றிரவு ஆகாஷ் வந்ததும் அவனிடமும் விஷயத்தை சொன்னாள். 

ஆகாஷ் ஆச்சர்யப் பட்டான். சங்கீதாவுக்கு காதலிக்கக் கூடத்தெரியுமா..? என்று வியந்த படி அம்மாவைப் பார்த்தான். 

“அவளுக்கு பிடிச்சிருக்குன்னா அப்பறம் பேச என்ன இருக்கும்மா. அப்பாவும் அவனைப் பார்த்து பேசிட்டுதானே வர சொல்லியிருப்பார். அப்பொ நல்ல இடத்து பையனாதான் இருப்பான். நீ ஏற்பாடு பண்ணு” அம்மாவுக்கு தைரியம் கொடுத்துவிட்டு தன் அறைக்குச் சென்றான். 

மறுநாள் காலை சுஜியிடமும் விஷயத்தை சொன்னாள் சாரதா. 

“அவங்க வரும்போது நா இருக்கட்டுமா வேண்டாமா?’

“நீ பாட்டுக்கு இரேன்” 

“என்னை யாருன்னு கேப்பாங்களே” 

“சொல்லிட்டு போறேன். அவங்க பையன் லவ் பண்ணும்போது என் பையன் பண்ணக் கூடாதா..?” 

“இந்த மாதிரி மாமியார் யாருக்கு கிடைப்பாங்க” 

“ஒரு ஆயிரம் ரூபா பணம் கொண்டு வா சுஜி. ஸவீட் காரம் எல்லாம் வாங்கணும்.” 

“ஆயிரம் எதுக்கு ஆண்ட்டி. அவ்ளோ ஸ்வீட்டா சாப்ட போறாங்க.” 

‘பூ,பழமெல்லாம் வேற வாங்கணும்மா”. 

“நீங்க கவலையை விடுங்க. நா வரும்போது எல்லாமே வாங்கிட்டு வரேன்” 

வாசல் வரை போன சுஜிதா திரும்பி வந்தாள்.”ஏன் ஆண்ட்டி, அங்கிளோட கார் சும்மாதானே இருக்கு. இன்னிக்கு ஒரு நாள் நா அதை எடுத்துக்கிட்டு போகவா?” 

அவள் அப்படிக் கேட்டதும் ஒரு வினாடி தயங்கினாள் சாரதா. 

“உங்களுக்கிஷ்டமில்லாட்டி வேணாம் ஆண்ட்டி. நா வழக்கம் போல ஆட்டோலயே போய்க்கறேன்.” 

“இரு சுஜி…இந்தா சாவி. நீ எடுத்துட்டு போ… சும்மாதானே இருக்கு”

“தேங்க்ஸ் ஆண்ட்டி. அப்பா எனக்கொரு ஃபாரின் கார் வாங்கி வெச்சிருக்காராம், நாப்பது லட்சத்துக்கு. படு சொகுசா இருக்குமாம். எப்பொ அனுப்பி வெக்கட்டும்னு கேட்டுக்கிட்டே இருக்கார். இங்க நிறுத்த இடமில்லை யேன்னுதான் இப்போதைக்கு வேணாம்னு சொல்லி வெச்சேன். கார் மட்டும் அனுப்பினா எப்டி, அதை நிறுத்தற அளவுக்கு அழகான ஒரு வீடும் வாங்கிக் கொடுத்துட்டு அப்பறம் காரை அனுப்புங்கன்னு சொல்லிட்டேன். நா சொன்னது சரிதானே ஆண்ட்டி? மும்பைல எங்க வீட்டுல தாராளமா முப்பது கார் நிறுத்தலாம். அந்த நினைப்புல அப்பா பாட்டுக்கு கார் வாங்கிட்டார் போல்ருக்கு” 

சுஜிதா கார் சாவியை சுழற்றியபடி செல்ல சாரதா பிரம்மிப்போடு அவளைப் பார்த்தாள். 

இது பிறந்த வீட்டுப் பெருமையா… அல்லது புகுந்த வீட்டை மட்டம் தட்டும் பேச்சா..? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. எதுவாயிருந்தாலும் அவளிடம் கடுமையாகப் பேசுவதென்பது இனி இயலாது. பிள்ளையின் காதலி என்பதைவிட அவள் ஒரு கோடீஸ்வரனின் பெண் என்பதுதான் இதற்கு காரணம். சுஜிதா காரில் சென்ற அரை மணிக்கெல்லாம் சம்பத் சைக்கிளில் ஏறிச்செல்ல அதைப் பார்த்துக் கொண்டிருந்த சாரதாவின் மனம் குறுகுறுத்தது. தான் செய்வதெல்லாம் சரியாதவறா என்ற கேள்வி உள்ளே குடைய ஆரம்பித்தது. புருஷன் சைக்கிளில் சென்ற காட்சி சித்ரவதை செய்தது. இவ்வளவு வைராக்கியம் அவருக்குள் இருக்குமென்று அவளே எதிர்பார்க்கவில்லை. எதையோ நினைத்து இழுத்துப் பிடிக்கப் போக, அது விபரீத வைராக்கியமாய்ப் போய் விட்டது நன்றாகப் புரிந்தாலும், அதிலிருந்து அவரை விடுவிக்க அவளாலேயே முடியவில்லை. 

இது எதில் போய் முடியுமோ என்று கவலையாக இருந்தது. நாலு நாள் முன்பு கிரெடிட் கார்டைக் கூட அவரிடம் எடுத்துக் கொடுத்து விட்டாள். சுத்தம் செய்யும் போது கிடைத்தது என்று பொய் சொன்னாள். ஆனால் சம்பத் அதைத் தொடக்கூட இல்லை. “நீயே வெச்சுக்க எனக்குன்னு நா எதுவும் வாங்கிக்கறதில்ல. என்னுடைய தேவைகளும் கம்மிதான். சைக்கிள்ள போய்ட்டு வரது ஒரு விதத்துல ஆரோக்கியம்தான். பழகியும் போச்சு. எல்லாத்தையும் பழகிக்கறது நல்லதுதானே” விட்டேற்றியாக பதில் சொல்லி விட்டுப் போய்விட்டார். சாரதாவுக்கு அன்று முழுக்க ஒரு மாதிரியாக இருந்தது. ச்சே கார்டை எடுத்தே வைத்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது. அவர் மறுபடியும் காரில் போக மாட்டாரா என்றிருந்தது. 

“என்னம்மா மாப்ள வரப்போறாரா..? இப்பவே சைலன்ட்டா உக்காந்துட்ட” ஆகாஷின் குரல் கேட்க திரும்பினாள். 

“என்னமோ உங்கப்பா சொல்றார். வந்தாதான் தெரியும் யார், என்ன எப்டிப்பட்டவங்கன்னு” 

“அதெல்லாம் கவலையே படாத. நல்ல இடமாதான் இருக்கும். நா சாயங்காலம் வந்துடறேன். வரும்போது ஏதாவது வாங்கிட்டு வரணுமா?” 

“சுஜி வாங்கிட்டு வந்துடறேன்னு சொன்னா” 

“ரைட். அப்பொ நா கிளம்பறேன்” 

ஆகாஷ் சென்ற பிறகு வேக்வம் கிளீனர் கொண்டு வீட்டை சுத்தம் பண்ணினாள். கர்ட்டன், சோபா கவர் அனைத்தையும் மாற்றினாள். ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டதும் மற்ற வேலைகளை கவனிக்கப் போனாள். 

சரியாய் ஆறு மணிக்கு, பிரவீண் அம்மாவோடு தன் காரில் வந்து இறங்கினான். ஆகாஷ் கைகுலுக்கி வரவேற்றான். சம்பத், சாரதாவை அறிமுகப்படுத்தினார். சுஜிதா பிரவீணை கிச்சனில் நின்றபடி கவனித்தாள். அந்த உயரமும், மிடுக்கும், கண்ணியமான பேச்சும் சிரிப்பும், சங்கீதாவின் மீது ஒரு வித பொறாமையை ஏற்படுத்தியது. ஆகாஷ் விடவே கூடுதல் அழகும் கம்பீரமும் அவனிடம் இருப்பதாய்த் தோன்ற, இவ்வளவு நல்ல மாப்பிள்ளையா உனக்கு என்று சங்கீதாவின் மீது எரிச்சல் ஏற்பட்டது. 

”அந்த பொண்ணு யாரு?’ பிரவீணின் அம்மா சுஜிதாவை சுட்டிக் காட்டி கேட்டாள். 

”எம் பையனுக்கு பார்த்து வெச்சிருக்கற பொண்ணு. மும்பைல அவங்கப்பா கோடீஸ்வரர். அவ இங்கதான் பேஷன் டிஸைன் படிச்சுட்ருக்கா. எதுக்கு ஹாஸ்டல்ல தங்கணும்னு சொல்லி இங்கயே இருக்க சொல்லிட்டேன். படிப்பு முடிஞ்சதும் அவங்க கல்யாணமும் பண்ணிடணும். பல கோடி ரூபாய் சொத்து இருந்தாலும் எங்க சுஜி ரொம்ப சிம்பிள். அலட்டிக்கவே மாட்டா” சாரதா பெருமை பொங்க சொன்னதை அந்த அம்மாள் ரசிக்கவில்லை என்பது அவள் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. 

“பொண்ணை வரச் சொல்லுங்களேன்” 

“சுஜி, சங்கீதாவை கூட்டிட்டு வாயேன்”சாரதா குரல் கொடுத்தாள். 

“வா சங்கீதா” சுஜி அவள் தோளைத் தொட்டு அழைத்துச் செல்ல முயல, சங்கீதா விலகினாள். “நானே போறேன். நீங்க வரணும்னு இல்ல” பட்டென்று சொல்லிவிட்டு தனியாகவே போனவளை சுஜிதா வெறித்துப் பார்த்தாள். தன்னை அவமானப்படுத்தி விட்டு அவள் போனதைத் தாங்க முடியாமல் முகம் சிவக்க உதட்டை கடித்தாள். வெக்கறேண்டி உனக்கு வேட்டு..! உள்ளுக்குள் கறுவினாள். 

“எம் பையனுக்கு பொண்ணை பிடிச்சப்பறம் எனக்கு சொல்ல எதுமில்ல. நாம மத்த விஷயங்கள் பேசுவோமே” 

“ஓ..பேசலாமே” 

‘உங்க பெண்ணுக்கு என்னல்லாம் செய்யறதா இருக்கீங்க”

“நீங்க என்னல்லாம் எதிர்பார்க்கறீங்கன்னு சொல்லுங்க. செஞ்சுடறோம்” 

“பெரிசா ஒண்ணும் வேணாம். உங்க கோடீஸ்வர மருமக உங்க வீட்டுக்கு என்னல்லாம் கொண்டு வரப்போறாளோ, அதே மாதிரி உங்க பொண்ணுக்கு நீங்க கொடுத்தனுப்பினா போதும்” 

பிரவீணின் அம்மா கத்தரித்தாற்போல் பேச, ஒரு வினாடி அங்கே மௌனம் பரவியது. பிரவீண் திகைப்போடு அம்மாவைப் பார்த்தான். ஆகாஷும் சம்பத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சாரதா திருதிருவென்று விழித்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது? 

”அது.. அவங்க கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷமாகும். நாங்க இன்னும் சீர் சினத்தி விவகாரமே பேசல”. 

”கல்யாணம் எப்போ ஆனா என்ன..? என்னல்லாம் செய்யப்போறாங்கன்னு கேட்டுட்டு அது மாதிரி செய்துடுங்க. ஏறக்குறைய இருக்கறதை அவங்க கல்யாணம் முடிஞ்சதும் செஞ்சுடுங்க.” 

சாரதா திகைப்போடு சம்பத்தைப் பார்த்தாள். 

”அவங்க சொல்றதும் நியாயம் தானே சாரதா. நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு கொண்டு வரதை, நம்ம பொண்ணுக்கு நாமளும் கொடுத்தனுப்பறதுதானே நியாயம்.” 

சம்பத் நியாயம் பேசுகிறாரா? அல்லது மாட்டிவிடுகிறாரா என்பது புரியாமல் சாரதா பரிதாபமாக ஆகாஷைப் பார்த்தாள். ஒரு நிமிஷம் என்றபடி அவனை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். 

“என்னடா இப்டி சொல்றாங்க?” 

“அவங்க கேக்கறது நியாயமே இல்லம்மா. எங்க கல்யாணத்தையும் இந்த கல்யாணத்தையும் ஏன் முடிச்சு போடணும்?” 

“நீ இப்டி சொல்ற. உங்கப்பாவைப் பாரு. ஸேம் ஸைடு கோல் போட்டுட்ருக்காரு.” 

”அதான் எனக்கு ஒண்ணும் புரியல. இதுக்கு பின்னாடி மனுஷன் ஏதாவது திட்டம் வெச்சிருக்காரா?” 

“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. சங்கீதாக்கு நிறை சீர் சினத்தி குடுத்தனுப்பணுங்கற ஆர்வத்துல பேசறார்.” 

“அவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போற?” 

“என்ன சொல்லட்டும்” 

”ஒரு வாரம் டைம் கேளு.சுஜிதா வீட்ல இது பத்தி பேசிட்டு அப்பறம் சொல்றோம்னு சொல்லு.” 

“அவங்கப்பா ஆயிரம் பவுன்போடுவார்டா. நம்பளால முடியுமா..?” 

”இப்போதைக்கு சொல்லேன். மத்ததை அப்பறம் யோசிப்போம்.” 

“எதுக்குடா குழையணும்? அதெல்லாம் முடியாது நாங்க செய்யறதைத்தான் செய்வோம்னு கண்டிஷனா சொல்லிட்டா?” 

”உம் பொண்ணு அவனைலவ் பண்றா. அதை மறந்துடாதே. அவ ஓடிப்போனா அது நமக்கு நல்லதா?” 

சாரதாவின் முகம் வெளிறியது. பிள்ளை சொல்லிக் கொடுத்தபடி வெளியில் வந்து அவர்களிடம் சொன்னாள். 

”அப்பொ சரி நாங்க புறப்படறோம்”. 

“எதுவும் சாப்டாம போறீங்களே” 

”நிச்சயம் ஆனப்பறம் கை நனைச்சா போச்சு” 

”வரோம்” பிரவீண் கை கூப்பி விடை பெற்றான். சம்பத்தும் ஆகாஷும் வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள். 

சுஜிதா சாரதாவிடம் வந்தாள். 

”எனக்கென்னமோ இந்த இடம் நல்ல இடமா தோணல. இப்பவே இவ்ளோ சட்டமா பேசறாங்க! நாளைக்கு பொண்ணைக் குடுத்தா படுத்தாம நல்லபடியா வெச்சுக்குவாங்களா…? இந்த இடம் வேணாம்மா. சங்கீதாகிட்ட பக்குவமா சொன்னா புரிஞ்சுக்குவா”

சாரதாவும் ஆமாம் என்பது போல் தலையாட்டினாள். 

– தொடரும்…

– வருவாள், காதல் தேவதை… (நாவல்), முதற் பதிப்பு: 2012, தேவி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “வருவாள், காதல் தேவதை…

  1. இந்தக் கதையின் 26-30 hyper link ஆக இல்லை. அத்தியாயம் 26-30 இல் க்ளிக் செய்ய முடியவில்லை. அத்தியாயம் 21-25 ல் இதற்கான hyper link ஐ சேர்க்கவும்

    1. அடுத்த அத்தியாயங்கள் ஓரிரு நாட்களில் வெளிவரும், எங்களுடைய சோசியல் மீடியா அக்கௌன்ட் வழியாக தொடர்பில் இருங்கள். மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *