களவும் கற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,430 
 

பார்த்திபன் பதினோரு வயதிலிருந்தே திருட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தான். பள்ளிக்கு அருகில் இருக்கும் ஆயா கடையில் மிட்டாய் வாங்குவதற்காக வீட்டில் நாலணா, எட்டணா திருடி தன் தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட்ட போது பார்த்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்புறமாக பாய் கடையில் காரப்பொறி தின்பதற்கும், நாராயணா மெஸ் புரோட்டாவிற்காகவும் அப்பாவின் சட்டைப்பாக்கெட்டில் கைவிடுவதை தினசரி வழக்கமாக்கிக் கொண்டான். தன் தேவைகளுக்காக வீட்டிலேயே எடுத்துக் கொண்டிருந்தால் சந்தேகம் வந்துவிடக் கூடும் என்பதால் பள்ளியிலும் கை வைக்கத் துவங்கினான். உடன் படிப்பவர்களிடம் பென்சில், ரப்பர் போன்றவற்றை அபேஸ் செய்தவன் எட்டாம் வகுப்பு படிக்கும் போது சரஸ்வதி புக் ஸ்டோர்ஸில் புத்தம் புது கோனார் நோட்ஸைத் திருடி வெள்ளியங்கிரிக்கு பாதி விலைக்கு விற்ற பிறகுதான் அவனது திறமையை அவனே முழுவதுமாக புரிந்து கொண்டான். அதன் பிறகு பார்த்தி தொட்டதெல்லாம் துலங்கியது. பொன்னுச்சாமி வாத்தியார் பாத்ரூம் போவதற்கு முன்பாக கழட்டி வைத்துவிட்டுப்போயிருந்த சிட்டிஸன் வாட்ச்சைக் காணவில்லை என்று ஒரு வாரத்திற்கு புலம்பிக் கொண்டிருந்தார் என்பது ஒரு உதாரணம்.

பார்த்தி எதை விரும்பினாலும் அவனுக்கானதாக மாற்றிக் கொள்ள முடியும் அளவிற்கு களவில் தேர்ந்தவனாகியிருந்தான். பாட்டா ஷூவிலிருந்து உயர்தர சட்டை வரைக்கும் விதவிதமாக சேகரிக்கத் துவங்கினான். இவனது எந்த சேகரிப்பும் அவனது அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரியாதவாறு பக்காவாக பதுக்கியதில்தான் அவனது முழு வெற்றியும் இருந்தது.

திருட்டுப்பழக்கம் இருந்தாலும் பார்த்தி படிப்பில் எந்தச் சோடையும் போகவில்லை. முதல் மாணவனாக வரவில்லையென்றாலும் கூட முதல் ஐந்து இடங்களில் இருந்தான். சொந்தபந்தத்திற்குள் பார்த்திக்கு ‘ப்ரில்லியெண்ட்’ என்ற பெயர் இருந்தது. அவனது முகமும் பால் வடியும் பாலகன் என்ற அடையாளத்தை அவனுக்கு கொடுத்தது. இத்தகைய ப்ளஸ்களோடு திருட்டும் திறமையுமாகத் தொடர்ந்தவன் கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டான். கல்லூரியில் படிக்கும் போது கைலாஷின் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க்கை திருடும் போது சிக்கிக் கொண்டான். நான்கைந்து மாணவர்கள் சேர்ந்து பார்த்தியை அடிக்க வந்துவிட்டார்கள். வீட்டில் வறுமையென்றும் ஃபீஸ் கட்டுவதற்காகவே திருடியதாகவும் மற்றவர்களிடம் உதவி கேட்பதற்கு வெட்கமாக இருந்தது என்றெல்லாம் கதை சொல்லி மற்றவர்களை நம்பவைத்துவிட்டான். இதைத் தவிர வேறு எப்பொழுதுமே பார்த்தி திருடியதற்காக சிக்கிக் கொண்டதில்லை.

டிகிரி முடித்த பிறகும் திருட்டை விட முடியவில்லை. பர்ஸ் அடிப்பதுதான் பார்த்திக்கு பிடித்தமானது. பொருளாகத் திருடினால் அவற்றை பாதுகாப்பதற்கும் பணமாக மாற்றுவதற்கும் சிரமப்பட வேண்டியிருந்தது. பர்ஸில் அந்தக் கவலை இல்லை. பெரும்பாலும் பகல் நேரங்களில் திருடப்போவான். அவனது தோற்றத்திற்கு அதுதான் ஒத்து வருகிறது. படு டீசண்டாக இருப்பதனால் இவன் மீது சந்தேகம் வருவதில்லை. படித்திருந்தாலும் கூட பார்த்தி எந்த வேலைக்கும் போகவில்லை. ஆனால் ஏகப்பட்ட பணம் புழங்குதால் கம்பெனி ஒன்றில் வேலையில் இருப்பதாக வீட்டில் சொல்லிவைத்திருந்தான். இதை நம்பி அவர்களும் பெண் தேடி பிரவீணாவைக் கட்டியும் வைத்துவிட்டார்கள். பிரவீணாவுக்கு பெற்றோர்கள் இல்லை. சித்தப்பா வீட்டில்தான் வளர்ந்தாள். எவனாவது வந்தால் சரி என்று காத்திருந்தவர்கள் எந்த விசாரிப்பும் இல்லாமல் பார்த்திக்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகும் பார்த்தியால் திருட்டை விடமுடியாமல் இருந்தது. கிட்டத்தட்ட அது ஒரு நோய்மை நிலைமைதான். மனோவியல் நிபுணர் ஒருவரிடம் சிகிச்சை எடுக்கத் துவங்கியிருந்தான். இதே சமயத்தில்தான் பிரவீணாவும் கர்ப்பமாகியிருந்தாள். ஒரே ஒரு முறை திருடிவிட்டு இனிமேல் திருடப்போவதில்லை என கருவில் இருக்கும் தன் குழந்தையின் மீது சத்தியம் செய்துவிட முடிவு செய்தான். கடைசியாகத் திருடுவதால் பர்ஸ் அடிப்பதைவிடவும் ஏதேனும் வீட்டில் ஒரு பொருளைத் திருட விரும்பினான். வீடு புகுந்து திருடுவதில் ஒரு த்ரில் இருக்கிறது என்பது பார்த்தியின் சித்தாந்தம்.

அடுத்தநாள் காலை பத்து மணிவாக்கில் நேருநகரை நோட்டமிட்டான். நான்காவது வீதியில் இருக்கும் சேகர் வீடு பூட்டியிருந்தது. அப்பொழுதுதான் சேகரின் மனைவி ஊருக்கு கிளம்பியிருந்தாள். பார்த்தி எடுத்து வந்திருந்த கம்பியை வைத்து நெம்பியதில் பூட்டு திறந்து கொண்டது. உள்ளே நுழைந்தவன் அறைகளைத் தேடினான். மூன்றாவது அறையில் பீரோ இருந்தது. அதைத் திறக்கலாம் என உத்தேசித்து அதன் அருகில் போன போது வெளிக்கதவு தாழ்ப்பாளிடும் சத்தம் கேட்டது.

ஆமாம். கதவு வெளியே பூட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். தப்பிப்பதற்கு எந்த வழியும் இல்லாதது போலிருந்தது. பதட்டத்தில் விரல்கள் நடுங்கத் துவங்கின. வியர்வையில் நனையத்துவங்கினான். பேருந்து பிடிப்பதற்காகச் சென்ற சேகரின் மனைவி எதையோ மறந்துவிட்டுச் சென்றிருக்கிறாள். திரும்பி வந்தபோது கதவு திறந்திருந்ததை பார்த்து சுதாரித்தவள் வெளியே தாழிட்டு பூட்டிவிட்டாள். அவள் சத்தம் போட்டு கத்தியதில் பத்து பதினைந்து ஆட்கள் கைக்கு கிடைத்தனவற்றையெல்லாம் தூக்கிக் கொண்டு வந்து வீட்டிற்கு வெளியே நின்றார்கள். தப்பிக்க முயற்சித்தால் அடித்தே கொன்றுவிடுவோம் என்று பார்த்திபனை எச்சரித்தப்படியே ஒருவன் கதவைத் திறந்தான். பார்த்தி அமைதியாக நின்று கொண்டான்.

ஒருவன் பார்த்தியின் முகத்தில் ஓங்கி குத்துவிட்டு ஆரம்பித்து வைத்தான். ஆளாளுக்கு அடிக்க ஆரம்பித்தார்கள். முகம் உடம்பு என எந்த பாகுபாடும் இல்லாமல் அடி இறங்கிக் கொண்டிருந்தது. சதை அங்கங்கு பொத்துக் கொண்டது. பற்களும் ஓரிரண்டு கீழே விழுந்துவிட்டது. இழுத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டி வைத்தார்கள். இப்பொழுது யார் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளும்படியான பொதுச் சொத்தாக பார்த்தி மாறியிருந்தான். மிக வேகமாக பைக்கில் இருந்து இறங்கிய எவனோ ஒருவன் பார்த்தியின் வயிற்றில் நான்கைந்து மிதி வைத்தான். பார்த்தியால் கத்த முடியவில்லை. அடித்து முடித்தவன் பிறகுதான் விசாரித்தான் எதற்காக அவனைக் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று.

அடிவாங்குவதற்கு ஒருவன் கிடைக்கும் பட்சத்தில் காரணமே இல்லாமல் அடிப்பதற்கும் கூட ஒரு கூட்டம் இருக்கிறது. இரண்டு மணி நேரத்தில் ஏகப்பட்டவர்கள் அவனை அடித்து முடித்திருந்தார்கள். போலீஸ் வருவதற்கும் பார்த்தி முற்றிலுமாக சுய நினைவை இழப்பதற்கும் சரியாக இருந்தது. போலீஸ் வரும் போது அந்த இடத்தில் ஒருத்தரும் இருக்கவில்லை. சேகரின் மனைவியும் கூட வீட்டிற்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வழியில் வந்த ஏதோ ஒரு ஆட்டோவில் பார்த்தியைத் தூக்கிப்போட்டுக் கொண்டு ஜி.ஹெச் சென்றார்கள்.

அப்பொழுது செல்போன் வசதி வந்திருக்கவில்லை. பார்த்தியின் பர்ஸில் இருந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்துக் கொண்டு ஒரு கான்ஸ்டபிள் வீட்டிற்கு வந்தார். அந்த போட்டோவின் பின்புறமாக வீட்டு முகவரி சிறு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. பார்த்தியின் பெற்றோர் கோயிலுக்கு போய் இருந்தார்கள். பிரவீணாதான் இருந்தாள். பிரவீணாவிடம் போட்டோவைக் காட்டிய கான்ஸ்டபிள் இந்த போட்டோவில் இருப்பது யார் என்றார். என் வீட்டுக்காரர்தான் என்றாள். அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்று சொன்னபோது கான்ஸடபிளின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. பிரவீணாவுக்குதான் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. வயிற்றில் ஏதோ புரட்டத்துவங்கியது. அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். மேகம் கருக்கி கொண்டிருந்தது.

– ஜூலை 25, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *