துப்பறியும் கண்டக்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 1,063 
 
 

(கதாப்பாத்திரங்களின் பெயர்கள் இல்லாத கதை)

1990 களில், தமிழ்நாடெங்கும் தங்க ரதம் போல “திருவள்ளுவர் எக்ஸ்பிரஸ்” பஸ்கள் போக்குவரத்தில் கோலோச்சின. அனை த்து பஸ்களும் ஒரே மாதிரி இருப்பதால் பஸ் முன்னாலும் பின்னாலும் உள்ள அறிவிப்பு பலகையை சரியாக பார்த்துக்கொண்டு ஏறவேண்டும்.

ஒரு நாள் ஒரு திருவள்ளுவர் பஸ்ஸில் சூட்கேஸ் நிறைய நகைகள், பட்டுப்புடவைகள் மற்றும் வீட்டு மனை விற்ற பணத்துடன் ஒரு தம்பதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் பஸ்ஸில் ஏறியது.

பஸ்ஸில் இருக்கையில் தலைக்கு மேல் உள்ள லக்கேஜ் இருப்பிடத்தில் பெட்டியை வைத்தனர். அவர்கள் வீட்டு வேலைக்காரி மூலம் அறிந்த திருடன் ஒருவன் அதே பஸ்ஸில் ஏறி அந்த தம்பதிக்கு பின் சீட்டில் அமர்ந்து கொண்டான். தம்பதி எந்த ஊர் செல்கின்றனர் என்பது திருடனுக்குத்தெரியாது .

எனவே முதலில் திருடன் செங்கல்பட்டு வரை டிக்கட் எடுத்தான். செங்கல்பட்டில் தம்பதி இறங்கவில்லை. திண்டிவனம் வரை டிக்கட் எடுத்தான். தம்பதி இறங்கவில்லை. விழுப்புரம் வரை எடுத்தான். தம்பதி உறங்காமல் கண்ணும் கருத்துமாக தலைக்கு மேலே இருக்கும் தங்கள் பெட்டியை அவ்வப்போது பார்த்தபடி கண்காணித்துக்கொண்டே வந்தனர். விழுப்புரம் வந்தும் தம்பதி இறங்காததால், திருடன் பெரம்பலூர் வரை டிக்கட் எடுத்தான்.

இருட்டத்தொடங்கி, பஸ் பெரம்பலூர் வந்தபோது அயர்ச்சியில் தம்பதி தூங்கி விட்டனர்.அவர்கள் மீண்டும் கண் விழித்தபோது, பஸ் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னை கன்னியாகுமரி ரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கண் விழித்த தம்பதி, பெட்டியை காணாது, அலறி கூச்சலிட்டனர். பஸ் நிறுத்தப்பட்டது. சற்று நேர கூச்சல் குழப்பத்திற்கு பிறகு தம்பதியின் பின் சீட்டில் இருந்த நபரைக்காணவில்லை என்பதால் கண்டக்டர் டிரைவரிடம் அந்த நபர் ஒவ்வொரு ஊர் வந்தவுடன் மீண்டும் அடுத்த ஊர் வரை டிக்கட் எடுத்து பயணம் செய்ததை கூறினார்.

கண்டக்டரும் டிரைவரும் திருட்டு அநேகமாக பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டில் தான் நடந்திருக்கும் என நினைத்து ஒரு திட்டம் தீட்டினர். திருடன் பெட்டியுடன் அங்கிருந்து புறப்படும் முதல் பஸ்ஸில் ஏறி தப்பிப்பான் என நினைத்து தங்கள் பஸ்ஸின் அறிவிப்புப்பலகை “சென்னை டு கன்னியாகுமரி”என்பதை எடுத்து விட்டு, “கன்னியாகுமரி டு சென்னை” என்ற அறிவிப்பு பலகையை மாட்டி சென்னை செல்லும் பஸ் போல மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தனர்.

திருடன் சென்னை என்பதால் சென்னை செல்லும் பஸ்ஸை பார்த்தவுடன் கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு பஸ்ஸில் ஏறினான். கதவு சாத்தப்பட்டது. அவன் கையில் இருந்த பெட்டி பிடுங்கப்பட்டது. தர்ம அடிகள் விழுந்தன. அவன் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் பஸ் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது.

போலீஸ் விசாரணையில், கண்டக்டர் நடந்ததைக்கூறி, “சார்! திருட்டு பெரம்பலூரில் நடந்தது என்பதாலும் திருடன் சென்னையிலிருந்து ஒவ்வொரு ஊராக டிக்கட் எடுத்து வந்ததாலும், அநேகமாக சென்னை செல்லும் பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருப்பான் என நினைத்து, பஸ்ஸின் முகப்பில் உள்ள அறிவிப்பு பலகையை கன்னியாகுமரி டு சென்னை என்று மாற்றி, சென்னைக்கு செல்லும் பஸ் போல மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தோம். திருடனும் ஆசையுடன் ஏறி எங்களிடம் மாட்டிக்கொண்டான்” என்று சொல்லி முடித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *