இளைமையில் வறுமை

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 21, 2013
பார்வையிட்டோர்: 17,997 
 

இன்றோடு கவிதாவின் பெங்களூரு வாசம் முடிந்து விடுகிறது. திருச்சியில் உள்ள அந்தப் பெரிய நிறுவனத்தில் நாளை அவள் வேலை
ஏற்க வேண்டும். அவள் இங்கேயே தொடர்ந்திருக்கலாம், ஆனால் வேண்டு-மென்றுதானே என்னை விட்டுப் போகிறாள்! அவள் மீது எந்தத் தப்பும் இல்லை; எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறாள். அவளைப் பார்க்க சதாசிவ நகரிலிருந்து மல்லேஸ்வரத்துக்கு வந்து போக, பஸ் டிக்கெட்டுக்குக் கூட பணம் கொடுத்திருக்கிறாள். பேசிக் கொண்டே நடந்து ஏதாவது தர்ஷிணிக்குள் நுழைந்து ‘ஒந்து காலி தோசா, எரடு காஃபி’ என்று கல்லாவில் சொல்லிக் கொண்டே, ஹேன்ட்பேக்குக்குள் கை விட்டு பணத்தை எடுக்கையில், நான் குற்ற உணர்வோடு கைகளை பேண்ட் பாக்கெட்டுகளில் விட்டபடி எங்கோ பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

ஒரு முறை, ஒரே ஒரு முறை என்றுதான் நினைக்கிறேன், வாசமில்லாத அந்த பெங்களூரு காட்டு மல்லியை அவளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அதற்கே அவள் மலைத்துப் போனாள்.

‘என்ன ப்ரீதம், திடீர்னு என்ன இதெல்லாம்?’ என்றவள் என்னையும் மல்லிகைப் பூவையும் மாறி மாறிப் பார்த்தாள்.

‘முத்துச் சிதறல்ல என் கதை பப்ளிஷ் ஆயிருக்கு. சன்மானமும் அனுப்பியிருக்காங்க..’

‘வாவ்1 Great News !! சன்மானம் எவ்வளவு?’

‘அதையெல்லாம் கேக்காதே..’

உண்மையிலேயே அவள் ஒரு நாளைய சம்பளத்தில் என் சன்மானம் ஆறில் ஒரு பங்குதான். அவ்வளவுதான் இருக்குமென்று அவளும் யூகித்-திருப்பாள். மெலிதாக சிரித்துக் கொண்டே பூச்சரத்தை தலையில் சூடிக் கொண்டாள். அந்தச் சிரிப்பில் ஏளனம் கலந்திருந்ததாக எனக்குத் தோன்றிற்று.

எழுத்தாளர்களைப் பற்றி அவளுக்கு ஏனோ நல்லெண்ணம் இருந்ததே இல்லை. ஆனால் எனக்கோ நான் கடவுள் என்ற சிருஷ்டிகர்த்தாவுக்கு அடுத்தபடி என்ற நினைப்பு. தப்பில்லைதானே? என் பாத்திரங்களை நான் சிருஷ்டிக்கிறேன்; சிரிக்கவும், அழவும் விடுகிறேன்; காதலிக்க வைக்கிறேன்; குழந்தை பெற்றுக் கொள்ள வைக்கிறேன்; தேவையான போது கொல்லவும் செய்கிறேன்.

‘எல்லாம் கற்பனை உலகத்துலத்தானே? நெஜ உலகத்துல எப்படி வாழப் போறே? பேசாம, அந்த ஸேல்ஸ்மேன் வேலையை ஒத்துக்க.’ என்று ஒரு முறை என் சிருஷ்டித்துவம் பற்றிச் சொன்னபோது, கவிதா சொன்னாள்.

‘வீடு வீடாப் போய் பினாயில் விக்கிறதெல்லாம் ஒரு வேலையா?’

‘ஏன்? அதையும் வேலையா எத்தனையோ பேர் செய்யறாங்க இல்லையா? சம்பாதிக்கறாங்க இல்லையா? ரெண்டு மாசத்துக்கொரு தரம் நூறு ரூபா சன்மானம் கிடைக்கிற வேலை என்ன, இதை விட ஓசத்தியா?’ என்று வாதிட்டாள்.

ச்சே, இவளுக்கு ஏன் ரசனையே இல்லை? எழுத்தாளன் எப்பேர்ப்பட்டவன்! படைப்பாளி எவ்வளவு உன்னதமானவன்! அவன் இந்த உலகத்தின் பின்னால் போகாதவன்; எல்லோர் கோணத்திலிருந்தும் அவன் மாறுபட்டுச் சிந்திக்கிறான். இதெல்லாம் இவளுக்கு ஏன் தெரிவதில்லை? பணம், பணம், பணம். சம்பாதி, சம்பாதி, சம்பாதி. தப்பில்லை, அவள் உலகத்தோடு ஒட்ட ஒழுகுகிறாள். ஆனால் என்னால், என்னுள் இருக்கிற எழுத்தாளனால் அது முடியவில்லையே !

‘ப்ரீதம், உனக்கு ஃபோன்’ என்று பக்கத்து அறை ராமலிங்கம் வெளிப் பக்கத்திலிருந்து குரல் கொடுத்தான்.

கவிதா எனக்கு செல்ஃபோன் வாங்கிக் கொடுக்கிறேன் என்று எத்தனையோ முறை சொன்ன போது நான் வெகுவாக அதை மறுத்திருக்கிறேன். அவளுக்கு எப்படி எழுத்தாளன் மீது மதிப்பு இல்லையோ, அதே போல் எனக்கு செல்ஃபோன் மீது ஆசை இல்லை.

தளர்ந்திருந்த லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டு, கதவைத் திறந்தேன். ராமலிங்கத்திடமிருந்து ஃபோனை வாங்கிப் பார்த்தேன். கவிதாதான் கூப்பிடுகிறாள். விடை கொடுக்க ஸ்டேஷனுக்கு வருவாய்தானே என்று கேட்கிறாள். போகாமல்?

பெங்களூருக்கே உரித்தான அந்த மெலிதான செண்பகப்பூ மணம், ஸ்டேஷனிலும் நிறைந்திருந்தது. ஆயிற்று, இன்னும் பதினைந்து நிமிடத்தில் டிரெய்ன் கிளம்பி விடும். அத்துடன் என் கவிதாவும். ஏன் நான் இன்னும் வரவில்லை என்று அவள் தவித்துக் கொண்டிருப்பாளோ? ஊஹூம், அப்படியெல்லாம் தவித்துப் போய்விடுபவள் அல்ல அவள்.

இதோ S-7 கோச். ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த கவிதா என்னைப் பார்த்ததும் சற்றேனும் குதூகலிப்பாள் என்று நினைத்தது தவறுதான். நிச்சலனமாக என்னைப் பார்த்தாள். இடது கையை இலேசாக வெளியே நீட்டினாள். அவள் விரல் முனையை மட்டும் பிடித்துக் கொண்டேன்.

‘கோவமா ப்ரீதம்?’

‘தெரியலை.’

‘ப்ரீதம், இங்கே பாரு, யதார்த்தமான உலகத்துக்கு வா. வேலை
தேடிக்க. பணம் சம்பாதிக்கப் பாரு. ரெண்டே மாசத்துக்குள்ள ஒரு நல்ல வேலைல நீ அமர்ந்தாகணும். அப்படி ஒரு நல்ல செய்தியோட் வா. அடுத்த ரெண்டே நாள்ள நம்ம கல்யாணம், சரியா?’

‘ம்..’

‘ரெண்டு பேரும் கை நிறைய சம்பாதிச்சாத்தான் இந்த உலகத்துல ஓரளவு கஷ்டமில்லாம வாழ முடியும்.’

‘ஓ?’

‘எனக்கு நம்பிக்கை இருக்கு.. ரெண்டு மாசத்துக்குள்ள வா. என் நம்பிக்கையை குலைச்சுடாதே ப்ரீதம்.

‘சரி.’

‘ப்ரீதம்..’

‘ம்?’

‘ஐ லவ் யூ.’

புன்னகைத்தேன். எப்போதும் அவளின் ‘ஐ லவ் யூ’வுக்கு என் பதில் இதுவாகத்தான் இருந்திருக்கிறது. அது பற்றி அவள் ஒரு போதும் கேட்டதுமில்லை, நானும் என் புன்னகையை மாற்றிக் கொண்டதுமில்லை.

‘ஒரு தடவை என்னை ‘கவி’ன்னு கூப்பிடேன்..’

‘கவி..’

அதுதான் நான் கடைசி முறையாக அவளைக் கூப்பிடுவது என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

வண்டியின் ஒரு கோடியிலிருந்து கார்டின் நீண்ட விசில் சத்தம். மறு கோடியில் என்ஜினின் நீண்ட ஹாரன். வண்டி மெதுவே நகர ஆரம்பிக்க,.
அவள் விரல் என் கையிலிருந்து மெதுவே நழுவியது. ஆனாலும் அவள் கையை நீட்டியபடியேதான் இருந்தாள். ஒவ்வொரு பெட்டியாக என்னைக் கடந்து, கடைசிப் பெட்டி சிவப்பு விளக்குடன் போய் புள்ளியாய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு திரும்பி சதாசிவ நகருக்கு நடந்தேன்.

நீட்டிய கையும், நழுவிய மெல்லிய அந்த விரலும் என் நினைவில் அவ்வப்போது வந்து போகும். அவளின் விருப்பத்துக்காக இரண்டு தடவை வேலையில் சேர்ந்தேன். முதல் இடத்தில், தலைக்கனம் பிடித்தவன் என்று எனக்கு பட்டம் கட்டி ஒரே வாரத்தில் வெளியே அனுப்பி விட்டார்கள். அடுத்த இடத்தில், என் ‘சவலைக் குழந்தை’ கதையின் கடைசி பத்தியை எழுதுவதில் கவனம் குவித்து, பின்னால் வந்து நின்று கூப்பிட்ட மேனேஜரின் குரலை அசட்டை செய்து விட்டபடியால் ‘வேலையில் கவனம் இல்லை, வீட்டில் இருபத்து நாலு மணி நேரமும் கதை எழுது’ என்று துரத்தி விட்டார்கள். நானும் அதைத் தானே விரும்பினேன்!

இரண்டையும் கடிதம் மூலம் கவிக்கு தெரிவித்தேன். மீண்டும் மீண்டும் முயற்சி செய் என்று எழுதினாள். இதெல்லாம் அவள் சொன்ன அந்த இரண்டு மாதங்களுக்குள். இரண்டு மாதத்துக்குப் பிறகு நான் எழுதிய கடிதங்களுக்-கெல்லாம் அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ராமலிங்கத்திடமும் அவ்வப் போது கவிதாவிடமிருந்து ஃபோன் வந்ததா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இனி வராது என்று தெரிந்ததும் அவளைப் பற்றிய நினைவை அறவே மறந்தேன்; நீட்டிய கையும், நழுவிய அந்த மெல்லிய விரலும் கூட மெது மெதுவே என்னிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டன.

சென்னை, வைகாசி மாதத்து வெய்யிலில் குளித்துக் கொண்டிருந்தது.
தேனாம்பேட்டையில் ஒரு சிறு சந்து. நடைபாதையில் குடும்பம் நடத்தும் உழைப்பாளி ஆண்கள் வேலைக்குப் போயிருக்க, அங்கிருந்த ஒன்றிரண்டு பெண்கள் வாசலை மறைத்திருந்த தட்டுமுட்டு சாமான்களை தள்ளி வைத்து எனக்கு உள்ளே போக வழி விட்டார்கள். குறுகிய அந்த மரப் படிகளில் ஏறி என் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். ஆங், இப்போது நான் ‘சாரல்’ வாரப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருக்கிறேன்.

என் மெகா தொடர்கதை, ‘ஏழ்மை இல்லை இனி’யின் இந்த வார அத்தியாயத்தை எழுதி முடிக்க வேண்டும். என் சிற்றறைக்குள் புகுந்து, மேசை முன் உட்கார்ந்து பேனா பிடித்து விட்டால், கீழிருந்து வரும் சாக்கடை நாற்றமும், சட்டையை நனைக்கும் வியர்வையும், சென்னையின் வாகனம், மற்றும் இன்ன பிற இரைச்சல்களும் எங்கோ மறைந்து விடும். என் எழுத்து, என் உலகம். அங்கே இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை. எதை வேண்டுமானாலும் அங்கே நான் படைப்பேன்.

அந்த வாரத்து அத்தியாயத்தை எழுதி முடித்து, தலைமை ஆசிரியரின் பார்வைக்கு வைத்து விட்டு, டீ குடிக்க மீண்டும் அந்த மரப்படிகளில் இறங்கினேன். மேலிருந்து இறங்குகையில் ஐந்தாவது படி உளுத்துப் போன மாதிரி தெரிகிறது. ஆசிரியரிடம் சொல்லி வைக்க வேண்டும்.

நடைபாதையிலிருந்து தெருவில் இறங்க இருக்கையில், உரசினாற்போல் கார் ஒன்று அருகில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியது என் ஆச்சரியக் குறி ! கவிதா ! ஆமாம், கவிதாவேதான். முன்னை விட சற்றே சதை போட்டிருந்தும், அந்த விரல்கள் இன்னும் அப்படியே மெலிதாகத்தான் இருந்தன. பெங்களூரையும், செண்பகப் பூவின் வருடும் மணத்தையும், விரல் நழுவலையும், வெகு நாட்களுக்குப் பிறகு இதோ இப்போது மீண்டும் உணர்கிறேன்.

‘ப்ரீதம்..’

‘சொல்லுங்க’

ஏன் இப்படி நான் அவளை மரியாதையுடன் ‘சொல்லுங்க’ என்கிறேன்? எனக்கே ஆச்சரியம். நொடிப் பொழுதில் இந்த மனம் அவள் என்னுடையவள் இல்லை என்று தீர்மானித்து விட்டதோ?

‘எப்படியிருக்கே ப்ரீதம்?’

ஏதோ இருக்கேன் என்று நான் என்றும் சொன்னவனில்லை.

‘ம்.. ரொம்ப நல்லாருக்கேன்..’

‘எனக்கு.. கல்யாணம் ஆயிடிச்சு..’

‘பரவாயில்லை’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் வெறும் ‘ஓ’வுடன் நிறுத்திக் கொண்டேன்.

‘அவர் என்னோட திருச்சியில எனக்கு மேலதிகாரியா இருந்தவர்.. மனைவியை இழந்தவர்.. சென்னைல நீலாங்கரைல ஒரு ‘ஹெல்த் ஸ்பா’ நடத்துறோம். ரெண்டு பேரும் வாலண்டரி ரிடையர்மெண்ட் வாங்கிகிட்டு வந்துட்டோம்.. திருவான்மியூர்ல ஒரு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை தொடங்கறதா இருக்கோம்’

‘ம்.’

‘நீ மாறவேயில்ல.. இன்னும் ஒத்தை எழுத்துலேயே பதில் சொல்றே.’

‘ம்.’

‘ஒரு மாத்தம் இருக்கு.. இன்னும் இளைச்சிருக்கே.. உன் லாங்குவேஜுலேயே சொல்லணும்னா – கொடியது கொடியது, இளமையில் வறுமை..’

சிரித்தேன். நீ இன்னும் மாறவேயில்லை என்று சொல்ல நினைத்தேன்.

‘சரி, நீ எங்கே இப்படி..?’

‘சாரல் பத்திரிகைல ஆசிரியர் குழுவுல இருக்கேன்..’

‘ஓ.. அப்படி ஒரு பத்திரிகை வருதா?’

உண்மையாகத் தான் கேட்கிறாளா? இல்லை ஏளனமா? உண்மையாகவும் இருக்கலாம், ஏனென்றால் இங்கே அனேகருக்கு ‘சாரல்’ பத்திரிகை தெரியாது.

‘சரி ப்ரீதம்.. நான் கிளம்பறேன்.. இது என் கார்டு..’

கார்டை வாங்கிக் கொண்டு, எதற்கு இது என்பது போல் அவளைப் பார்த்தேன்.

‘டைம் கிடைக்கும் போது வா.. அவரை அறிமுகப் படுத்தறேன். ஃபோன் பண்ணிட்டு வா. கோவப் படாதே ப்ரீதம்.. இப்படி என்னை மாதிரி வசதியா வாழணும்.. அதுக்கு வழி பண்ணிக்க.. பத்திரிகை தொழிலை தூக்கிப் போடு.. அவர் உனக்கு நல்ல வேலை போட்டுத் தருவார்.. கண்டிப்பா வா..’

காரில் ஏறி கவிதா போய் விட்டாள். ஆனால் அவள் விட்டுச் சென்ற வார்த்தைகள்? இதோ காற்றில் இன்னும் இருக்கிறது. ‘இளமையில் வறுமை கொடுமை’ ‘என்னை மாதிரி வசதியா வாழணும்’..’ அவர் நல்ல வேலை போட்டுத் தருவார்’

ஹூம், வசதி இருந்தும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று பறந்துகொண்டிருக்கிறாளே, உண்மையில் இவள் அல்லவா வறுமையில் உழன்று கொண்டிருக்கிறாள்? நான் எழுத்தாளன், படைப்பவன். எனக்கு வறுமை, முதுமை எதுவும் இல்லை. என்றும் எதிலும் திருப்தியுடன் இருக்கும் நான் பணக்காரன். நிச்சயம் நான் பணக்காரன்தான். ஒரு வேளை இதுதான் எனக்கு தலைக் கனத்தை கொடுத்திருக்கிறதோ என்னவோ. கையிலிருந்த் கார்டை கீழே விட்டேன். பெங்களூருவும், செண்பகப் பூ மணமும், மெல்ல நழுவும் கவிதாவின் விரல்களும் மீண்டும் என்னிடமிருந்து விடை பெறத் தொடங்கின.

Print Friendly, PDF & Email

2 thoughts on “இளைமையில் வறுமை

  1. எதிலுமே திருப்தி இல்லாத வாழ்க்கை வாழும் மனிதனே ஏழை..சிறு விஷயத்திலும் கூட திருப்தி அடைபவன்தான் பணக்காரன்…நல்ல கதை வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *