கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,931 
 

அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று பலவகை பேனாக்கள் என்வசம் இருந்தன.அறைக்கதவை திறந்து உள்சென்று அமர்ந்தேன். அறைத்தோழன் நல்ல உறக்கத்திலிருந்தான். உறங்க மறுத்தன என் கண்கள். நினைவுகள் மெல்ல பின்னோக்கி நகர ஆரம்பித்தன.

பேனா கொண்டுவராமல் பள்ளிக்கு சென்றால் “பேனா(ய்) இல்லாமல் ஏன்னா(ய்) வந்தாய் போநா(ய்) வெளியே” என்று அழகாய்த் திட்டுவார் தமிழாசிரியர்.

அப்படி ஒரு நாள் பேனா இல்லாமல் சென்றதால் வகுப்பிற்கு வெளியே நிற்கவைத்திருந்தார். தொடர்ந்து அழுது கொண்டே நின்ற என்னிடம் வந்தவர் “வெளிய நிக்கிறதுக்காக இப்படி தொடர்ந்து அழுவலாமா? நாளைக்கு மறக்காம பேனா கொண்டுவந்துரனும் சரியா?” என்றவாறே என் தோளில்தட்டி வகுப்பிற்குள் சென்று அமர வைத்தார். வெளியே நின்றதற்காக அழுவதற்கு நான் என்ன மூக்கொழுகி குமாரா? இரண்டு வாரம் என் அப்பாவிடம் அடம்பிடித்து வாங்கிய “ஹீரோ” பேனா திருடுபோனதால் நான் அழுதேன் என்பது யாருக்கும் தெரியாது. உலகில் மிகச்சிறந்த பொருள் “ஹீரோ” பேனா தான் என்பது என்னுடைய எண்ணம்.

பன்னிரெண்டாம் வகுப்பு டியூசன் சென்டரில்தான் முத்துச்செல்வியை சந்தித்தேன்.எண்ணை தேய்த்து தலைசீவி இரட்டை ஜடைபின்னி பச்சைக்கலர் ரிபன்கட்டியிருப்பாள். எப்பொழுதாவது மரிக்கொழுந்தும் கனகாம்பரமும் அவள் கூந்தலை அழகாக்கும். என்னுடன் படித்தவர்கள் எல்லோரையும் விட முத்துச்செல்விக்கு என்னைத்தான் பிடித்திருந்தது. பெஞ்சிலிருந்து முன் பெஞ்சைக் கடந்துசென்று பிரம்பால் அடிவாங்கிவிட்டு திரும்பும்போதெல்லாம் அவள் கண்கள் கலங்கியிருக்கும். காரணம் டியூசன் சென்டரிலேயே நான் தான் அடிமுட்டாள். அடிக்கடி அடிவாங்கும் முட்டாள். எல்லோரும் நான் அடிவாங்குவதை ரசிக்கும்போது இவள் மட்டும் பரிதாபமாய் பார்த்ததால் எனக்கும் அவளை பிடித்துப்போனது. அவளை பிடித்ததற்கு மற்றும் ஒரு காரணம் அவளிடமிருந்த விலையுயர்ந்த “பார்க்கர்” பேனா. முதல் நாள் கணக்கு நோட்டும் இரண்டாம் நாள் பேனாவும் கடன் வாங்கினேன். கணக்கு நோட்டை மட்டும் திருப்பித்தந்துவிட்டு டியூசன் சென்டரை மாற்றிக்கொண்டேன். முத்துச்செல்வி இரண்டுநாள் உம்மென்று இருந்துவிட்டு பின் சகஜமாகிப்போனதாக கேள்விப்பட்டு பேனாவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

கஷ்டப்பட்டு பன்னிரெண்டாம் வகுப்பில் தேறி கல்லூரிக்குள் நுழைந்த முதல் நாளில் கண்ணில் பட்டவள்தான் ரஞ்சனி. அவளைப் பார்த்தவுடனே பிடித்துப்போனது. இவள்தான் என் மனைவி என்று உள்ளுக்குள் மணியடித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளிடம் பேச முயற்சித்து வெற்றி பெற்றேன் ஒரு மழைநாளில். குடையில்லாமல் நனைந்தபடி நடந்தவளுக்கு ஓடிச்சென்று குடைகொடுத்துதவி வள்ளல் ஆனேன். சில மாதங்களில் என் உற்றத்தோழியாக மாறியவள் என் பிறந்த நாள் பரிசாக ஃபாரீன் பேனா ஒன்றை பரிசளித்தாள். தங்க நிறத்தில் மினுமினுத்தது அந்தப்பேனா. அழகிய வேலைபாடுகளுடன்கூடிய மூடியில் சின்னதாய் ஒரு வெள்ளைக்கல் பதிக்கப்பட்டிருந்தது. பேனாவைக் கண்ட பரவசத்தில் ரஞ்சனியின் கைகளில் முத்தமிட்டுவிட்டேன். அன்று கோபித்துக்கொண்டு போனவள் அதன் பிறகு என்பக்கம் திரும்பவேயில்லை. மன்னிப்புக்கேட்டு நான்கு நாட்கள் அவள் பின்னால் அலைந்து சோர்ந்தபோது அவள் விட்டுச் சென்ற தங்கநிற பேனா மட்டுமே உடனிருந்தது.

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மும்பைக்கு வந்த ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தபோதுதான் வாழ்க்கை என்பதின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

இரண்டுமணி நேர மின்சார ரயில் பயணமும்,பெரும் மக்கள்கூட்டத்தினூடாக நடப்பதும் வாடிக்கையானபோது தளர்ந்திருந்த எனக்கு ரயிலில் என்னோடு பயணிக்கும் சேட்டுப்பெண் மீது இனம்புரியாத ஒன்று உருவானது.அவளின் தங்கநிற தேகமும்,பச்சை நிற கண்களும் மனசுக்குள் ஏதேதோ கற்பனைகளை உருவாக்கின. மெல்ல அவளுடன் பழக ஆரம்பித்தபோது அவளுக்கு பிடித்த புத்தகமொன்றை பரிசாக தந்தேன். உடனே முகம் மலர்ந்தவள் ரயில் நிலையமென்றும் பாராமல் என் புறங்கையில் முத்தமிட்டாள். ரஞ்சனியின் ஞாபகம் வந்து போனது. முத்தமிட்டதோடு நில்லாமல் பரிசாக தங்கப்பேனா ஒன்றை தந்துவிட்டு “வில் யூ மேரி மீ” என்றாள். என் ஆங்கில அறிவு அவளுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை. பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினேன். சிரித்துக்கொண்டே போய்விட்டாள். அவளுடன் ஊர்சுற்ற அடிக்கடி விடுப்பு எடுத்ததால் வேலை பறிபோனது.

திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்தவள் அவளது நிச்சயதார்த்த செய்தியை சொல்லி இருசொட்டு கண்ணீர்விட்டு பிரிந்துவிட்டாள். கையில் பணமில்லாமல் ரணப்பட்ட நெஞ்சுடன் மும்பை தெருக்களில் சுற்றி அலைந்தபோதுதான் பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டது. பிக்பாக்கெட் அடிப்பதும்,சிறுசிறு பொருட்களை மார்க்கெட்டில் திருடுவதும் அவனது தொழில். வேறு வழியின்றி அதைக்கற்றுக்கொண்டு வயிற்றைக் கழுவினேன். அப்போதுதான் பேனாவில் கத்தியும் உண்டு என்பது தெரிந்தது.மும்பை நகர போலீஸில் ஒரு நாள் சிக்கியதில் அவர்கள் அடித்த அடியில் வலது கால் நரம்பு அறுந்துவிட்டது.

சில நாட்களில் வெளியே வந்துபோது ஒரு கூலிப்படையின் அறிமுகம் கிடைத்தது.

நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது அறைக்கதவு திறக்கும் சப்தம். அந்த அதிகாலையில் இரண்டுபேர் வந்து என்னை அழைத்துச் சென்றார்கள். கருப்புத்துணியால் என் தலைமூடப்பட்டது. உயிர் பிரிகின்ற பொழுதிலும் பேனாவின் முனை உடைத்த நீதிபதியை திட்டிக்கொண்டேயிருந்தது மனம்.

– Thursday, August 7, 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *